மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 1 செப்டம்பர், 2018

சினிமா : மேற்குத் தொடர்ச்சி மலை

Image result for மேற்குத் தொடர்ச்சி மலை விமர்சனம்

மேற்குத் தொடர்ச்சி மலை...

விஜய் சேதுபதியின் தயாரிப்பில்... இசைஞானியின் இசையில்... தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில்... லெனின் பாரதி இயக்கியிருக்கும் படம்.

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார மக்களின் வாழ்க்கையைச் சொல்லும் படம்... அதுவும் சினிமாத்தனமில்லாத எதார்த்தத்துடன்...

ஆசை நிராசையாவது இந்தப் படத்தின் நாயகனுக்கு மட்டுமல்ல... எல்லா ஏழைகளுக்கும் அப்படித்தான்...

'காணி நிலம் வேண்டும் ' என்று பராசக்தியிடம் கேட்டான் நம் பாரதி, அப்படித்தான் தனக்கென ஒரு சிறு நிலமாச்சும் வேண்டும் என்ற அப்பாவின் ஆசை அவர் காலத்தில் கைகூடாவிட்டாலும் தன் காலத்திலேனும் கை கூட வேண்டும் என்று நினைக்கிறான் ரெங்கசாமி.

அப்பாவின் ஆசை போல் அவனின் ஆசையும் நிராசையானதா அல்லது வெற்றி பெற்றானா என்பதே படத்தின் கதை.

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார மக்களின் வாழ்க்கையைப் பேசுகிறது படம். ஒரு நாளைக்கு நாலு முறை ஏலக்காய் மூட்டை சுமந்து மலைப்பாதையில் நடந்து கிடைக்கும் கூலியில் வாழ்க்கை நடத்தும் மக்களைக் கண் முன் நிறுத்தியிருக்கிறார்கள். அப்படியான வாழ்க்கையில் கிடைக்கும் பணத்தில்தான் உண்டு, உறங்கி, இடமும் வாங்கத் துடிக்கிறான் ரெங்கசாமி.

ரெங்கசாமி எல்லாருக்கும் பிடித்தவனாக... இரக்க குணமுள்ளவனாகக் காட்டப்பட்டிருக்கிறான் அவனின் ஆசையின் ஆணி வேரை ஆட்டிப் பார்ப்பதில் அவன் வணங்கும் இறைவனுக்கு அவ்வளவு ஆனந்தம். ஆம் கடவுள்கள் எப்போதும் ஏழைகளுடன்தானே அதிகமாக விளையாடுவார்கள்.

படத்தில் பிரபலங்கள் யாருமில்லை... எல்லாருமே அந்தப் பகுதி மக்கள்தான். பிரபலங்கள் இல்லாததால்தான் படம் பிரபலமாகியிருக்கிறது என்பதே உண்மை. தயாரிப்பாளர் விஜய் சேதுபதி தானே முதலில் நடிக்க நினைத்தார் என்று சிலர் சொல்லியிருக்கிறார்கள். அவர் அப்படி நினைத்திருக்க மாட்டார் என்றுதான் தோன்றுகிறது. ஒருவேளை அப்படி நினைத்திருந்து... அதன்படி நடித்திருந்தால்... மேற்குத் தொடர்ச்சி மலை விஜய் சேதுபதி படங்களில் ஒன்றாக மாறியிருக்கும்.

படத்தின் கதை என்பது நீட்டி முழங்கும் படியாகவெல்லாம் இல்லை. நிலம் வாங்கத் துடிக்கும் ஒருவன் அதை அடைந்தானா இல்லையா என்பதுதான்... அதை ரெண்டு மணி நேரத்துக்கு இழுத்தால் டாக்குமெண்டரி ஆகிவிடும் என்பதை உணர்ந்தே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார மக்களின் வாழ்க்கையை பேசியிருக்கிறார் இயக்குநர். 

அந்த மக்களே நடித்திருப்பதால் ஒவ்வொரு கதாபாத்திரமும் மிகச் சிறப்பாய் வந்திருக்கிறது. அவர்களின் பேச்சு மொழியும் உடல் மொழியும் நம்மை மேற்குத் தொடர்ச்சி மலையில் அவர்கள் பின்னே இழுத்துச் செல்கிறது.

ஓடி ஓடி உழைப்பவனுக்கு எப்பவுமே முதலாளியும் சுற்றியிருப்பவர்களும் ஏமாற்றுக்காரர்களாய்த்தான் இருப்பார்கள். ஆனால் இதில் முதலாளி, கணக்கப்பிள்ளை, கங்காணி, சாக்கோ, பாய் என எல்லாருமே நல்லவர்களாக, அவன் தன் கனவை எப்படியும் நனவாக்கிவிட வேண்டும் என நினைக்கிறார்கள்.

Image result for மேற்குத் தொடர்ச்சி மலை விமர்சனம்

பிழைக்க வந்தவன்... தன்னைத் தாங்கிய மக்களின் வயிற்றில் மெல்ல மெல்ல அடித்து விவசாய நிலங்களை எல்லாம் கார்ப்பரேட்டின் கைகளுக்கு லவட்டிக் கொடுக்கிறான்.  ஆரம்பத்தில் தக்காளிக் கூடையைத் தூக்கிக் கொண்டு வரும் அவன்தான் பின்னாளில் லோகு பில்டர், பினான்ஸ் என உயர்ந்து நிற்கிறான். ஏழைச் சனம் ஏழைச் சனமாகவே வாழ்கிறது.

தோட்டத் தொழிலாளர்களை சங்கத்தில் இணைத்து அவர்களுக்காகப் போராடும் கம்யூனிஸ்ட் சகாவுவான சாக்கோ, அந்த மக்கள் ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பதால் திருமணமே செய்யாமல் வாழ்கிறான். அவனும் ஒரு நாள் அரிவாள் தூக்க வேண்டிய நிலமைக்கு கொண்டு வருகிறது பணமும் அதிகாரமும் அதன் பின்னே வாலாட்டிச் செல்லும் அரசியலும்.

ரெங்கசாமியின் நிலம் வாங்கும் கனவுதான் கதையா என்றால் அதுதான் கதை என்று கடந்து விட முடியாது. அந்த மக்களின் வாழ்வியலைப் பேசும் கதையில் கழுதைகளை வைத்து மூட்டை சுமந்து செல்லும் பெரியவருக்கு ஒரு கதை இருக்கிறது. யானையைக் கொல்வேனென பைத்தியமாய் மலை முகட்டில் சுற்றும் கிழவிக்குள் ஒரு கதை இருக்கிறது. இருமலுடன் வீராப்பாய் மலையேறும் பெருசிடம் ஒரு கதை இருக்கிறது. மலை முகட்டில் பேத்தியுடன் கடை வைத்து வாழும் கிழவிக்குள் ஒரு கதை இருக்கிறது... கம்யூனிஸ்ட் சாக்கோவின் பின்னே ஒரு கதை இருக்கிறது... இப்படி ஒவ்வொருவருக்குள்ளும் கதைகள் இருக்கின்றன... அவை போகிற போக்கில் சொல்லப்பட்டு விடுகின்றன.

ஒரு கனமான வாழ்க்கையை கண் முன்னே காட்டும் படத்தில் 'இன்னும் எம்புட்டுத் தூரம் போகணும்' என்பவரிடம் 'இந்தா அந்த மலை ஏறி இறங்கினா வந்துரும்' என்று சொல்வது... கழுதை மீது பொதி ஏற்றி வருபவரிடம் கிழவர் 'உனக்கு ரத்தம் செத்துப் போச்சு ' என்றதும் 'உந்தங்கச்சிக்கிட்ட வந்து கேட்டுப்பார்' என பதிலடி அடிப்பது... 'சீனி போதுமா..?' என ரெங்கசாமியிடம் கேட்கும் மகளிடம் 'எல்லாம் சரியாத்தான் இருக்கு நீ உள்ள போ' என அப்பா சொல்வது... '300 ஏலக்காய் நூறு மல்லிகைப் பூ..' என்றதும் வடை, பணம் என கையிலிருப்பதை வீசி எறியும் கங்காணி... 'எங்கே ஒரு தடவ எம்பேரச் சொல்லு' என்றதும் 'எம்புருஷன் பேருதான் உம்பேரு... இந்தா கையில எழுதி வச்சிருக்கேன் பாரு' எனச் சொல்லும் கிழவி... என படம் முழுவதும் நகைச்சுவை நிரவிக்கிடக்கிறது.

கம்யூனிஸம் பேசுவதால் அரிவாள் சுத்தியல் கொடியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இது தமிழ் சினிமாவுக்குப் புதுசு... நாம் கட்சிச் சின்னங்களை சுவர்களில் காண்பிப்போம்... அரசியல் என்று வரும் போது சமகால அரசியல் மட்டுமின்றி... கடந்த கால அரசியலும் பேச மாட்டோம். மலையாளத்தில் சமகால அரசியலைப் பேசுவார்கள்... கட்சிக் கொடிகளைக் காட்டுவதுடன் அரசியலையும் கிழித்துத் தொங்கப் போடுவார்கள்.  அப்படி எல்லாம் தமிழ் சினிமாவில் காட்டினால்... கிழித்தால்... என்ன ஆகும் என்பதை நாம் அறிவோம். போராட்டங்களுக்குள் சிக்கி படம் காணாமல் போய்விடும்.

இந்தச் சிக்கலில் இருந்து தப்பிக்கவே இந்தப் படத்தில் கம்யூனிஸம் பேச தமிழகத் தோழரைப் பயன் படுத்தாமல் சேர நாட்டுச் சகாவுவைப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். விவசாய நிலத்தில் ரோடு வருதல்... அதனால் மக்களுக்கும் விவசாய நிலத்துக்கும் வரும் பாதிப்பு எனத் தைரியமாக நடப்பு அரசியல் பிரச்சினைகளைத் தொட்டுச் செல்லும் இயக்குநரைப் பாராட்டலாம்.

Image result for மேற்குத் தொடர்ச்சி மலை விமர்சனம்

படத்துக்கு இசைஞானியின் பின்னணி இசை மிகப்பெரிய பலம். 

மேற்குத் தொடர்ச்சி மலையும் நடித்திருக்கிறது. தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு மிகச் சிறப்பு. படத்தின் எடிட்டிங்கும் அருமை.

ஜூங்கா போன்ற படங்களை நட்புக்காக செய்கிறேன் என தன்னை அவ்வப்போது தொலைத்து விடும் விஜய் சேதுபதி, மேற்குத் தொடர்ச்சி மலை மூலம் உயரத்துக்குச் சென்றிருக்கிறார். புதுப்பேட்டையில் தனுசின் நண்பனாக வந்து... தென் மேற்குப் பருவக்காற்றில் 'யார்டா இவன்?' எனப் பேச வைத்து... தொடர்ச்சியாய் (அவ்வப்போது சறுக்கினாலும்) வெற்றிப் படங்கள் கொடுத்து... நடிகராய் மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் ஜெயித்து நிற்கும் விஜய் சேதுபதியின் தன்னம்பிக்கை பாராட்டுக்குறியது.

அந்தப் பகுதி மக்கள்தான் இதில் நடிகர்கள் எனத் தீர்மானித்து அதைச் செயல்படுத்தி, அவர்கள் பேச்சு மொழியிலேயே வசனத்தைப் பேச வைத்து, மிகச் சிறப்பான ஒரு படத்தைக் கொடுத்திருக்கும் இயக்குநர் லெனின் பாரதிக்கு வாழ்த்துக்கள்.

ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து.. கை தூக்கி விட்டு வாழும் அந்தக் கபடமில்லாத மக்களின் வாழ்க்கையை கண் முன் நிறுத்தியிருக்கிறார்கள் கதை மாந்தர்களான நிஜ மாந்தர்கள். முதல் முறை என்பதால் சிலருக்கு கேமராப் பயம் இருந்திருக்கிறது என்றாலும் அது ஒரு குறையாய் தெரியவில்லை அவர்களுடன் நாமும் சேர்ந்து நடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை ஒற்றையடிப் பாதைப் பயணத்தில்.

ரெங்கசாமியாக நடித்திருக்கும் ஆண்டனி சரியான தேர்வு... மனைவியாக வரும் காயத்ரி நிறைவு... இவர்களைப் போல் ஒவ்வொரு கதாபாத்திரமும் சிறப்பு...

மலையேறும் போது கடினம் தெரியாமல் இருக்க கல் எடுத்துச் சென்று மலை முகட்டில் இருக்கும் சிறு தெய்வத்திடம் சமர்ப்பிக்கும் காட்சி பார்க்கும் போது, பள்ளி நாட்களில் வயிறு வலி வந்ததும் கல்லெடுத்து பாக்கெட்டில் போட்டு வச்சிக்க... வலி நின்றுவிடும் என்று சொல்லி சரளைக் கல்லை இடுப்பில் செருகி வைத்து வலி குறைந்து விட்டதென நம்பிச் சிரித்த நாட்கள் ஞாபகத்தில் வந்து சென்றன.

இடம் வாங்க உதவும் பாய் கதாபாத்திரம் தென் தமிழக மக்கள் சாதிச் சண்டை போட்டுக் கொள்வார்களே தவிர மதம் என்னும் மதத்தை எப்பவுமே தூக்கிச் சுமப்பவர்கள் இல்லை... அவர்களுக்குள்ளான உறவு முறை இதுதான் என்பதைச் சொல்லியிருக்கிறது.

Image result for மேற்குத் தொடர்ச்சி மலை விமர்சனம்

தென் தமிழக கதைகளம் என்றால் 'எடுடா அருவாளை' என்று சொல்லும் இயக்குநர்கள் மத்தியில் ஒரு வாழ்க்கையை படம் பிடித்து இருக்கிறார் இயக்குநர்.  

மொத்தத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை உலக சினிமா இல்லை என்றாலும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய் உன்னத சினிமா.

-'பரிவை' சே.குமார்.

6 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

விகடனில் 60 மார்க் கொடுத்திருக்கிறார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு இளையராஜா இசை அமைத்திருக்கும் படம். மெதுவா பார்ப்போம்!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறப்பான திரைப்படம்...

Anuprem சொன்னது…

பார்க்க சொல்லும் விமர்சனம்..

UmayalGayathri சொன்னது…

படத்தை பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது உங்களின் விமர்சனம் சகோ.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல அறிமுகம். பார்க்க முடிந்தால் பார்க்கிறேன்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

அருமையான படத்தைப் பற்றிய அழகான விமர்சனம்.