மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 25 செப்டம்பர், 2018

சினிமா விமர்சனம்: ஒரு குட்டநாடன் பிளாக் (மலையாளம்)

Related image

கிருஷ்ணபுரம்...

கேரளத்தில் இருக்கும் அழகிய கிராமம். அந்தக் கிராமத்து நிகழ்வுகளை 'குட்டநாடன்' அப்படிங்கிற வலைப்பூவில் எழுதி வருகிறார் அவ்வூரைச் சேர்ந்த சித்து. இந்த வலைப்பூ ஊரின் அன்றாட நிகழ்வுகளைப் பற்றி பேசுகிறது என்றாலும் குறிப்பாக ஹரியின் வாழ்க்கையைச் சுற்றிச் சுற்றியே வருகிறது.

ஹரியேட்டன் (மம்முட்டி) என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் ஹரி மனைவியை இழந்தவன்... பல வருடங்களாக வெளிநாட்டில் இருந்து விட்டு ஊருக்கு வருகிறான். அவனின் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கும் இளவட்டம் ஆராவார வரவேற்பைக் கொடுக்கிறது. அதன் பின் அவனைவிட வயது குறைந்த இளவட்டங்களுடன் சேர்ந்து கொண்டு டீக்கடை, குடி என ஆட்டம் போட்டுக் கொண்டு திரிகிறான். இடையிடையே அந்தப் பசங்களின் காதலையும் பெண்ணின் வீட்டாருக்கு வித்தியாசமான முறையில் தெரிய வைத்து சேர்த்து வைக்கிறான். 

ஹரியின் அப்பாவான நெடுமுடி வேணு சாதாரண கிராமத்து மனிதராக வாழ்ந்திருக்கிறார். பையன் சம்பாதித்த பணத்தை இரட்டிப்பாக்கும் விதமாக நகையைப் பிணையமாகப் பெற்று வட்டிக்கு கொடுத்து வருகிறார்.

ஊருக்குள்ள நாலு பேரு தலையில தூக்கி வச்சி ஆடுன்னான்னா மூணு பேருக்கு அது பிடிக்காது... இது கேரளத்தில் மட்டுமல்ல... தமிழகத்திலும்... உலகெங்கிலும்தானே... அப்படித்தான் பஞ்சாயத்துத் தலைவர் லாலு அலெக்ஸ்க்கும், அவர் சார்ந்த மனிதர்களுக்கும் வேண்டாதவரானாகிறான் ஹரி. அவனைப் பலி வாங்கச் சந்தர்ப்பம் கிட்டும் எனக் காத்திருக்கிறார்கள் எதிரிகள்.

ஹரி இல்லாதவருக்கு கொடுத்து உதவ நினைக்கும் குணம் கொண்டவன் என்பதால் அவனின் உதவியால் வாழ்கிறது அவனுக்கு மிகவும் விருப்பமான மாஸ்டரின் குடும்பமும் தன் மனைவியின் அனியத்தி (தங்கை) குடும்பமும். இந்த உதவிகளைக் கூட பெண்களுக்காகவே அவன் செய்கிறான் என்பதுதான் உள்ளூர் பேச்சாக இருக்கிறது... காரணம் உடல்நலமில்லாமல் படுத்த படுக்கையாக இருக்கும் மாஸ்டருக்கு இரண்டு பெண்கள், அனியத்தியோ கைம்பெண்.

இவனைப் பற்றியும் நாட்டார் அவனுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பற்றியும் அறிந்த சப் இன்ஸ்பெக்டரான நீனா (ஷாம்னா காசிம்) வலிய வந்து பேசி நட்பாகிறாள். அதே நேரத்தில் ஹரியின் பள்ளிக்கால தோழி ஸ்ரீஜெயா (ராய் லெட்சுமி) கணவரைப் பிரிந்து ஊருக்கு வருகிறாள். அவளைப் பார்த்ததும் ஹரியுடன் சுற்றும் இளவட்டங்கள் ஏத்திவிட, சின்ன வயதில் காதல் கடிதம் கொடுத்து ஏற்றுக் கொள்ளப்படாத காதலைப் புதுப்பித்து திருமணம் செய்து கொள்ள நினைக்கிறான். அதுவும் கைகூடி வருகிறது. நீனாவின் ஆசை கைவிட்டுப் போகிறது.

ஹரிக்கு பெண்களுடன் தொடர்பு உண்டு என்பதான அரசல்புரசலான பேச்சுக்களை உண்மையாக்கும் விதமாக அனியத்தி வீட்டிலிருந்து இரவில் வருதல், மாஸ்டர் வீட்டில் மழை நாளில் தங்குதல் போன்ற நிகழ்வுகள் அமைகின்றன. இதனால் அவனின் எதிரிகள் மட்டுமின்றி அவனுடன் சுற்றும் இளவட்டங்களும்... ஏன் சப் இன்ஸ்பெக்டர் நீனாவும் கூட அவனைப் பெண் பித்தன் என்ற வட்டத்துக்குள் நிறுத்துகிறார்கள்.

கதையின் திருப்பமாக மாஸ்டரின் மூத்த மகள் ஹேமா (அனு சித்தாரா) தற்கொலைக்கு முயற்சித்து காப்பாற்றப்படும் போது மருத்துவர் அவர் கர்ப்பமாக இருப்பதாகக் கூற, காரணம் யார் என்பது கேள்விக்குறியாய்... 

ஹரியாக இருந்தால் ஒரு வழி பண்ணி விடலாம் என்பதால் கர்ப்பத்துக்கு யார் காரணம் என அறியத் துடிக்கிறது கிருஷ்ணபுரம் பஞ்சாயத்து. 

அம்மாவின் மிரட்டலுக்குப் பயந்து ஹரிதான் என்று சொல்லி விடுகிறாள் ஹேமா... ஹரியை தன் மாப்பிள்ளை ஆக்கத் துடித்துக் கொண்டிருப்பவள்தான் ஹேமாவின் அம்மா என்பதை கர்ப்பத்துக்கு முன்னேயான சில காட்சிகள் சொல்லி விடுகின்றன.

பஞ்சாயத்துத் தலைவருக்கும் எதிரிகளுக்கும் எதிர்பார்த்திருந்த சந்தர்ப்பம் கிடைத்துவிட, இதுதான் சமயம் என ஹேமாவைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று நச்சரிக்க ஆரம்பிக்கிறார்கள். ஹரியுடன் சுற்றிய இளவட்டங்களும், அப்பாவும் கூட அதையே விரும்புகிறார்கள்.

தான் குற்றமற்றவன் என்று சொல்லி, ஹேமாவுடன் பேச முயற்சிக்கும் ஹரியைத் தடுத்து விடுவதுடன் ஹேமாவையும் ஊர் கடத்தி விடுகிறார் மாஸ்டரின் மாஸ்டர் பிளான் மனைவி.  

இதற்கிடையே நான் உன்னையறிவேன்... சந்தேகிக்கமாட்டேன் என்று சொல்லும் ஸ்ரீஜெயாவைத் திருமணம் செய்து கொள்ளலாமென  பதிவாளர் அலுவலகம் வரச்சொல்லி விட்டு அப்பாவுடன் அங்கு காத்திருக்கிறான் ஹரி. ஊரே அந்த திருமணத்தை எதிர்த்து நிற்க, நீனா காவலாக நிற்கிறாள். வருவாள் என எதிர்பார்த்த ஸ்ரீஜெயாவோ அடமானம் பிடித்து ஹரி வீட்டில் வைத்திருந்த நகைகளை லவட்டிக் கொண்டு பறந்து போய் விடுகிறாள்... ஒரு கடிதத்தை ஹரிக்காக பதிவாளர் அலுவலகம் அனுப்பிவிட்டு..

ஒரு பெண்ணைக் கெடுத்தவன் என்ற அவமானத்துடன் ஊராரின் நகைகளையும் இழந்தவனாகி ஊர் முன் இரட்டைக் குற்றவாளியாகிறான் ஹரி. 

அவன் மீது நம்பிக்கை கொண்ட நீனா மட்டும் அவ்வப்போது அவனுக்காக பேசி, அவனை ஏமாற்றியவர்களைக் கண்டுபிடிக்க கடைசி வரை களத்தில் நிற்கிறாள்.

கர்ப்பத்துக்கு ஹரிதான் காரணம் என்று சொன்ன ஹேமாவைச் சந்தித்தானா..?

நகைகளுடன் ஓடிய ஸ்ரீஜெயாவை கண்டுபிடித்து நகைகளை மீட்டானா..?

சப் இன்ஸ்பெக்டர் நீனாவுடன் காதல் ஏற்பட்டதா..?

ஊராரின் நகைகளைத் திருப்பிக் கொடுத்தானா..?

பஞ்சாயத்துத் தலைவர் ஹரியைப் பலி வாங்கினாரா..?

இப்படி நிறையக் கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்கும் போது படம் முடிவுக்கு வரத்தானே செய்யும்... அப்படித்தான் வந்தது 2.15 மணி நேரங்களுக்கு மேல் மென்று விழுங்கியபடி...

படத்தின் இடையிடையே சௌதியில் ஒரே அறையில் தங்கி இருக்கும் கிருஷ்ணபுரத்து சன்னி வெய்னும் அனன்யாவும் இந்த வலைப்பூவை வாசித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இவர்கள் எதற்காக இந்தக் கதையில் என்று ஆரம்பத்தில் தோன்றிய கேள்விக்கு இறுதிவரை பதிலில்லை... குட்டநாடன் வலைப்பூவை வெளிநாட்டிலும் வாசிக்கிறார்கள் என்று காட்டுவதற்காகவோ... அதற்கு எதற்கு சன்னியும் அனன்யாவும்... புரியலை.. கேரளத்தில் ஒருவர் கூட வலைப்பூவை வாசிப்பதாக காட்டப்படவில்லை.

இடைவேளை வரைக்கும் 'வீடு' படத்தை விட ரொம்ப மெதுவாக நகரும் திரைக்கதை... தொடர்ந்து பார்க்க வேண்டுமா என்று தோன்ற வைக்கலாம்...  வைக்கும்... வைத்தது.

இடைவேளைக்குப் பின்னர் கதையில் சின்னச் சின்னச் முடிச்சுக்கள் விழ ஆரம்பிக்க, வேகமெடுக்கும் திரைக்கதை இறுதிவரை அதே வேகத்தில் பயணிப்பது ஆறுதல்.

பாடல்கள் அருமை. இசை ஸ்ரீநாத். பிரதீப் நாயரின் ஒளிப்பதிவு அருமை.

ராய் லெட்சுமியை பிக்பாஸ் யாஷிகாவை சேலையால் அழகாக்கியது போல் சேலையில் அழகாக காட்டியிருக்கிறார்கள். சமீபகால மம்முட்டி படங்களில் அவருக்கு சரியான ஜோடி ராய் லெட்சுமிதான் என்பதை இதிலும் நிரூபித்திருக்கிறார்.

பல வெற்றிப் படங்களின் திரைக்கதை ஆசிரியரான சேது, தனது முதல் இயக்கத்தில் திரைக்கதையில் குறிப்பாக முதல் பகுதியில் ரொம்பவே சறுக்கிப் பார்ப்பவரை சலிப்படைய வைத்திருப்பது ஏனோ..?

அடுத்த படத்தில் இச்சறுக்கலைச் சரி செய்வார் என்று நம்பலாம்.

மம்முட்டி ரசிகர்கள் பலமுறை பார்க்கலாம். மற்றவர்கள் முதல்பாதி பார்க்கும் பொறுமை இருந்தால் ஒரு முறை பார்க்கலாம்.

இந்தப் பாடலைக் கேளுங்கள்... உங்களுக்கும் பிடிக்கும்..


-'பரிவை' சே.குமார்.

3 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இயக்குனர் ஒருவேளை வலைப்பூ வைத்திருப்பாரோ...?

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஹா... ஹா... அப்படியும் இருக்கலாம் அண்ணா...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அட வலைப்பூ மூலம் விஷயங்களா... நல்லா இருக்கே....

படம் பார்க்கும் பொறுமை இல்லை குமார்.

பாட்டு நன்றாக இருந்தது.

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.