2015-ல் வெள்ளந்தி மனிதர்கள் என்ற தலைப்பில் தொடர்ந்து என் வாழ்வில் மறக்க முடியாத மதிப்புமிக்க பலரைப் பற்றி எழுதியிருக்கிறேன். அதைத் தொடர வேண்டும் என முடிவெடுக்க வைத்தவர் சகோதரர் பாலாஜி பாஸ்கரன்.
இவருடனான முதல் சந்திப்பு கனவுப் பிரியன் அண்ணனின் 'சுமையா' விமர்சனக் கூட்டத்தில்...
ஆளாளுக்கு சுமையா குறித்துப் பேசிக் கொண்டிருக்க, பிரியாணியை பாத்திரத்தில் இருந்து தட்டில் எடுத்து வைத்துக் கொடுப்பதில் ரொம்பத் தீவிரமாய் இருந்தார். என்னருகில்தான் இருந்தார் என்றாலும் ஒரு சிறு சிரிப்பு மட்டுமே எங்கள் நட்பின் தொடக்கமாய்... நான் பெரும்பாலும் யாருடனும் உடனே பேசி விடமாட்டேன். அப்படியே வளர்த்துட்டாங்கன்னு சொல்லமுடியாது.. வளர்ந்துட்டேன்... இனியா மாறப் போகுது.
பாத்திரத்தில் இருந்த பிரியாணி தட்டுக்கு மாறிய போது பேச்சு பேச்சாக இருந்தாலும் தட்டுக்கள் காலியாகிக் கொண்டே இருந்தன... சுண்டலும் அப்படியே... 'என்னய்யா இது கடைசியில நமக்கு பிரியாணி இல்லாமப் போச்சு... எங்கேய்யா வச்ச பிரியாணியெல்லாம்...' அப்படின்னு மனுசன் புலம்ப ஆரம்பிக்க, கோவில்ல பிரசாதம் கொடுக்கப் போறவனுங்க கடைசியில் பிரசாத வாளியே மிஞ்சும் என்பதால் தனியாக எடுத்து வைத்துக் கொள்வதைப் போல் மனிதருக்கு சூதனமாப் பொழைக்கத் தெரியலையே என்று நினைத்தபடி 'இனி கூவி என்னத்துக்கு... விடுங்க' என்றேன். எனக்கும் பிரியாணி கிடைக்காத வெறுமையில்.
நம்ம ஊர் பக்கம்... அட அவரும் நம்ம பக்கந்தேன்... சூது வாது இல்லாதவம்ப்பா அவன்... வெகுளி... மனசுல எதையும் வச்சிக்கமாட்டான் அப்படின்னு சிலரை வைத்திருப்பார்கள்... அப்படிப்பட்ட மனிதர் இவர். மைண்ட் வாய்ஸ்ன்னு நெனச்செல்லாம் பேசுவதில்லை... எதாயிருந்தாலும் பட்டுன்னு போட்டு உடைச்சிடுவாரு என்பதை இவரின் அடுத்தடுத்த சந்திப்புக்களும் எங்கள் வாட்சப் குழும கருத்துக்களும் சொல்லாமல் சொல்லின.
ஓரிதழ்ப்பூ விமர்சனக் கூட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர் விக்கெட்டை இழக்காமல், ராகுல் திராவிட்டின் டெஸ்ட் போட்டி பேட்டிங் போல் அடித்து ஆடாமல் ஆடிக் கொண்டிருக்க, 'என்னய்யா இன்னும் விக்கெட் விழ மாட்டேங்குது...' எனக் காதைக் கடித்தார்... அது அடுத்திருந்த பால்கரசையும் சிரிக்க வைத்தது. மனிதரோ 'ஏய்யா சிரிக்கிறீங்க...பேசுறதைக் கேளுங்கய்யா...' என்றார் சிரிக்காமல்.
அந்தக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான போட்டியில் திடீரென முன்னரே இறக்கி விடப்பட்டு அடித்து ஆடிய பாண்ட்யா மாதிரி, திடீர்ன்னு களமிறங்கிச் செம ஆட்டம்... நானே பேச்சாளன்... எனக்குப் பாரதியைத் தெரியும்...ஷெல்லியைத் தெரியும்... இலக்கியம்ன்னா இதுதான்யா... நீ எழுதுறதெல்லாம் எளக்கியமய்யா... என்றெல்லாம் பேசாமல் மனதில் பட்டதை மடை திறந்த வெள்ளமென நகைச்சுவையாய்... அதுவும் முழுமையாக நகைச்சுவையாய் அரங்கம் சிரிப்பில் அதிர அள்ளிக் கொட்டினார். தொடக்க ஆட்டக்காரர் போராடிப் பெற்ற சதத்தை இவர் அதிரடியாய்ப் பெற்று பலத்த கைதட்டல்களுடன் சிறந்த ஆட்டக்காரராகவும் ஜொலித்தார்
சென்ற வார வெள்ளியன்று அபுதாபி வருகிறேன் என்று வாட்சப்பில் ஒரு தற்காலிக குழுவை உருவாக்கிச் சொன்ன போது நான் சந்திக்கச் செல்லும் எண்ணத்தில் இல்லை. நெருடாவும் அழைத்திருந்தாலும் போகும் எண்ணமின்றியே இருந்தேன். அதற்குக் காரணம் அவர் மீது கோபமோ வெறுப்போ இல்லை... கடந்த சில மாதங்களாக அடித்து ஆடும் வாழ்க்கைக் கிரிக்கெட்டில்... இங்கிலாந்தில் துவைத்து எடுக்கப்பட்ட இந்திய அணி போலான நிலை. அதனால் எதன் மீதும் பற்றற்றுப் பயணித்துக் கொண்டிருப்பதே நலமென நினைத்திருந்தேன்.
பத்துக்குப் பத்து அறையும்... கட்டிலும்... கணிப்பொறியும் தவிர்த்து கொஞ்ச நேரம் சிரித்து வரலாமே என்ற நினைப்போடு பேருந்தில் வருகிறேன் என்று சொன்ன நெருடாவுக்காக கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் காத்திருந்து , அவர் வரவில்லை என்பதால் மீண்டும் அறைக்கே பஸ் ஏறிவிடலாம்... உடம்பில் இருக்கும் நீரெல்லாம் வியர்வையால் காலியாகிவிடும் போலவே என நினைக்கும் போது பாலாஜியின் அழைப்பு வந்தது.
அந்த அழைப்பில்தான் நெருடாவெல்லாம் ஒரு மணி நேரம் முன்னரே வந்து பாலாஜியின் நகைச்சுவையை... கவனிக்க பெரும் எழுத்தாளர்கள் கூடியிருந்த இடத்தில் பேச்சு இலக்கியமாகத்தான் இருக்கும் என்றாலும் இங்கு அந்த இலக்கியத்தை விடுத்து நகைச்சுவையை என்றே சொல்லியிருக்கிறேன்... ஆம் பாலாஜியின் நகைச்சுவையை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து கனவுப் பிரியன் அண்ணன் அறை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
நம்ம ஊர்ல வெயில்லு சுட்டெரிக்குதுன்னு சொல்லுவோமுல்ல... இங்க வெயில் சுட்டெல்லாம் எரிக்கவில்லை... நேரா எரிக்க மட்டுமே செய்தது... இதுலதான் வாழ்க்கையை ஓட்டுறோம் என்றாலும் பேருந்து நிலையத்தில் இருந்து கனவுப் பிரியன் அண்ணன் அறைக்குச் செல்வதற்குள் குளித்து... குளித்து... குளித்து முடித்திருந்தேன்... இனி வியர்க்க உடம்பில் ரத்தம் மட்டுமே இருக்கு என்ற நிலையில். வேர்க்க விறுவிறுக்க அங்கு செல்லும் போது பெட்ரோல் போட்ட கதை, பாவனா கதை எல்லாம் முடிந்திருந்தது.
அதன் பின் பாலாஜியின் ஆட்டம்தான்... மனிதர் எந்த ஒரு விஷயத்தையும்... அது மகிழ்வோ சோகமோ சிரிக்கச் சிரிக்கப் பேசிக் கொண்டே இருந்தார். நாங்கள்லாம் சிரித்தபடியே ரசித்துக் கொண்டிருந்தோம். ரொம்ப நாளைக்கு அப்புறம் சிரித்துச் சிரித்து கண்ணீரே வந்திருச்சு என்றார் நண்பரொருவர். அப்படித்தான் எல்லாருக்குமே.
மதிய உணவுக்குப் பின்னும் யாரையும் படுக்க விடவில்லை... சுபான் பாய் படுத்தபடி சிரித்துப் பார்த்து எழுந்து உட்கார்ந்து விட்டார். எத்தனையோ கதைகள்... கவிஞர்கள், இலக்கியவாதிகள், ஆர்வக்கோளாறுகள் பற்றியெல்லாம் அடித்து ஆடிக் கொண்டிருந்தார்.
எல்லாருக்கும் சிரித்தபடியே இருக்க, கனவுப் பிரியன் அண்ணன் அறை நண்பர்கள் என்ன இவனுக இப்படிச் சிரிக்கிறானுங்க என்று மனசுக்குள் நினைத்து... திட்டியிருந்தாலும் வெளியில் எங்களின் சப்தத்தை கேட்டு வருத்தப்படவில்லை என்பதாய் காட்டிக் கொண்டிருந்தார்கள். அண்ணன் சொன்னபோது கூட ஏய் அதெல்லாம் இல்லை... என்று அகம் காட்டினார்கள். அகம் நல்லதாய் இருந்தது... புறம் எப்படியோ தெரியவில்லை.
அன்றைய பேச்சில் தஞ்சைப் பெரிய கோவில் 'நந்த' வனம்தான் அதிகம் பேசப்பட்டது என்றாலும் அந்த 'படுக்கை அறை' விவகாரம் மட்டும் திரும்பத் திரும்ப சிரிக்க வைத்தது. இலக்கியத்தை 'அங்க'தாய்யா வச்சிருக்கானுங்க என்ற வரி யோசிக்கத்தான் வைத்தது. நமக்கு இலக்கிய இலக்கணமெல்லாம் தெரியாது என்பதால் யோசனையை அறைக்குள்ளேயே விட்டு வந்தாச்சு. வச்சிருக்கவங்க 'அங்க'யே வச்சிக்கட்டும்.
அது எப்படிய்யா இந்த மனுசன் மட்டும் இப்படிச் சிரிக்க சிரிக்க பேசி... சுற்றியிருப்பவர்களை எல்லாம் சிரிக்க வைக்கிறார் என்பது மட்டும் ஆச்சர்யமாகவே இருந்தது.
அழகர் ஆற்றில் இறங்குவதைப் பற்றி பேசும் போது அழகு மலையானைக் காணச் சென்ற நாட்கள் நினைவில் ஆடிச் சென்றன. ஊரில் இருந்து திரும்பி வரும் முன்னர் ஏர் இந்தியாக்காரனால் பாதிக்கப்பட்டதைக் கூட நகைச்சுவையாய்ச் சொல்லிச் சிரிக்க வைத்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
நகைச்சுவையாய் பேசுவதெல்லாம் ஒரு வரம்... அதுவும் மற்றவர்களைச் சிரிக்க வைத்துப் பார்த்தல் என்பது மிகப் பெரிய கலையும் கூட. அது எல்லாருக்கும் வாய்த்து விடுவதில்லை... சிரிக்க வைக்கிறேன் என லியோனி, சூரி போன்றவர்கள் நம் வதையை வாங்குவதைப் பார்த்திருக்கிறோம். அப்படியில்லாமல் உண்மையிலேயே ரசித்துச் சிரிக்க வைக்கிறார்.
இந்த மதுரை மண்ணோட தன்மையே தனித்தன்மைதான். அரிவாளும் எடுக்கும் அன்பும் செய்யும்... பாசக்காரங்கன்னா அம்புட்டுப் பாசக்காரனுகளா இருப்பானுங்க... பேருந்தில் இடமில்லாமல் நின்று வந்தவனுக்கு குரல் கொடுத்த கதைகள் பல பேசப்பட்டன. தேவர் ஜெயந்தி, குருபூஜைகள் என சாதிகளை தூக்கி தோளில் போட்டுக் கொள்ளும் இந்த மண்தான் சல்லிக்கட்டு பிரச்சினை போல் வேண்டிய நேரத்தில் எல்லாச் சாதிக்காரனையும் தோளில் கைபோட்டு ஒண்ணா நிக்க வைக்கும். திருவிழாக்கள், முளைப்பாரி, மந்தை என நகைச்சுவைக்குள்ளும் சில மண் சார்ந்த விஷயங்களைப் பேசினார்.
கல்லூரியில் சுடிதார் கதை சொல்லி, நீங்க படிச்ச போது இருந்த காலேசு இல்ல தம்பி இப்பன்னு டீக்கடைக்காரர் சொன்னதாய்ச் சொன்னபோது எங்கள் கல்லூரியும் மனதிற்குள் வந்து போனது. அதுவும் இப்ப பால்வாடி மாதிரித்தான் இருக்குன்னு கல்லூரி பியூன் ஒருமுறை என்னிடம் சொன்னார். அந்தப் பால்வாடியில்தான் என் நண்பர்கள் பேராசிரியர்களாய் இருக்கிறார்கள். புங்கை மரமெல்லாம் ஒடிபடாத கிளைகளுடன் நிற்பது வியப்பாய் இருக்கிறது.
அவர் மட்டுமே பேச, நாங்கள் எல்லாம் ரசித்துச் சிரிக்க... கனவுப் பிரியன் அண்ணன் அறையிலிருந்து சிரிப்பொலியை லிப்டில் இறக்கி, கல்கத்தா டீக்கடையில் அமர வைத்து... பூங்காவில் மரங்களுக்கு இடையே மகிழ வைத்து... மெல்ல அல் வத்பா மண் பாறைகளில் அமர்த்தி... மிகச் சிறப்பான நாளாக... மகிழ்வான நாளாக அனுபவித்தோம். ரசனையான பேச்சுக்கு முன்னே ரசிகனாய் நான்.
அமீரக தமிழ் வாசிப்பாளர் குழுமத்தில் இவர் போடும் 'அடி ஆத்தி' என்ற கருத்துக்களும் சில சமயங்களில் பதியும் குரல் ஆடியோக்களும் நம்மை ரசிக்க வைக்கும்.
மண்ணின் மனத்தோடு பேசும் இவரால் எல்லோரையும் மகிழ்வாய் வைத்திருக்க முடியும் என்பதை இவருடன் பழகிய, சந்தித்த மனிதர்கள் அறிவார்கள். அவர்களில் நானும் ஒருவனாய் இருப்பது மகிழ்வே...
பாலாஜி... சூதுவாதில்லா... நெஞ்சில் வஞ்சமில்லா... மதுரை மண்ணின் வெள்ளந்தி மைந்தர் என்பது மிகை அல்ல... உணமை..
-'பரிவை' சே.குமார்.
8 எண்ணங்கள்:
நாங்கல்லாம் பந்தி பரிமாற பொறுப்பெடுத்தால் நமக்குன்னு கொஞ்சமா அந்தபக்கம் எடுத்து ஒளிச்சு வைச்சிட்டு தான் பந்தி பரிமாற ஆரம்பிப்போமாக்கும். இனி பந்திக்கு முன் இதை கண்டினியூ பண்ண சொல்லுங்க. வெள்ளந்தி மனிதர்கள் அருமை தான். அதிலும் குமார் மனசிலிருந்து வருவது இன்னும் அழகு. நன்றிப்பா.
கட்டுரை முழுவதுமே பல இடங்களில் அடித்து ஆகியிருக்கும் உங்கள் வார்த்தைகளை ரசித்தேன். நல்ல அறிமுகம்.
பதிவின் வரிகளும் மண்ணின் மண(ன)த்தோடு இருக்கிறது...!
வாழ்த்துகள் அருமை �� னா
உங்களால் ஒரு நல்ல நண்பர் அறிமுகம். நன்றி.
வாழ்க்கை எப்படி இருந்தாலும், இந்த மாதிரி நண்பர்களால் சிறப்பாக ஆகிறது. நண்பருக்கு வாழ்த்துகள்.
ஆகா அருமை தோழர் .நடந்ததை நேரில் கண்டதைப் போல இருந்தது தங்களின் எழுத்து நடை .வாழ்த்துகள் உங்களுக்கும் தோழர் பாலாஜிக்கும்
நல்ல நட்பின் அறிமுகம் நன்று,
நட்பு பரந்து படர வாழ்த்துக்கள்,,,/
கருத்துரையிடுக