மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 17 டிசம்பர், 2016

மனசு பேசுகிறது ; பல்லவ பீடம்

வாசிப்பின் தொடர்ச்சியாய் கனவுப் பிரியன் அண்ணன் கொண்டு வந்து கொடுத்த 'ஐந்து முதலைகளின் கதை'யை வாசித்தேன். அது குறித்தான விமர்சனத்தை இங்கு வைக்க விரும்பவில்லை... ஆனாலும் ஒன்று முன்னுக்குப் பின்னாய்... பின் நவீனத்துவம் என்று சொல்லிக் கொண்டு எழுதினால் பிரபலங்கள் ஆஹா.. ஓஹோ என்று புகழ்வார்கள் என்பதை உணர்த்திய இரண்டாவது நாவலையும் வாசித்துக் கொண்டிருக்கிறேன்... என்னைப் போன்ற பாமரனுக்கு இதைப் போன்ற நாவல்களைப் புரிந்து படிப்பது ரொம்பச் சிரமமே... ஏன்னா எனக்கு பின் நவீனத்துவ எழுத்து அறிமுகமில்லை.... பாமர எழுத்து மட்டுமே பரிச்சயம்... பின் நவீனத் துவத்துக்குள் புகுந்து வர முடியாமல் இடையில்  அதை விடுத்து எப்பவும் போல் சாண்டில்யன் அவர்களின் வரலாற்றுப் புனைவு ஒன்றை வாசித்தேன். 234 பக்கங்களைக் கொண்ட சிறிய வரலாற்றுப் புனைவு... நிறையப் படங்களுடன் இருப்பதால் பக்கங்கள் விரைவாய் நகர்கின்றன. அதைப் பற்றித்தான் இங்கு பேசப் போகிறேன்.


பல்லவ பீடம்...

பல்லாரியில் (பல்லவபுரி) அரசாண்ட பல்லவ மன்னன் பப்பதேவனின் மகன் சிவஸ்கந்தவர்மன் தமிழகத்தில் தங்கள் ஆட்சியை நிலை நிறுத்த முயன்ற களபிரர்களை காஞ்சியில் வைத்து வெற்றி கொண்டதை கருவாக எடுத்து, காஞ்சி மாநகரை முதல் முதலில் ஆட்சி செய்தவன் இளந்திரையன் என்னும் மன்னன்.... அவன் ஆட்சி புரிந்த போது அமர்ந்திருந்த, பொன்னும் வைரமும் வைடூரியமும் மாணிக்கமும் பதிக்கப்பெற்ற பீடத்தை அதன் பின்னான அரசர்கள் சரிவர ஆட்சி செய்யாமல் பல்லவநாடு வலு குன்றியதால் தனது முதுமையில் பல்லவ பீடத்தை எங்கோ மறைத்து வைத்து விட்டு மறைந்து விட்டான் எனவும், அதைக் கண்டு பிடிப்பவனே இந்த நாட்டை ஆட்சி செய்வான் என்றும் அவனாலேயே பல்லவ சாம்ராஜ்யம் மலரும் என்று சொல்லி விட்டு மறைந்ததாகவும்  வதந்தி இருப்பதாக ஒரு கதாபாத்திரத்தின் மூலம் சொல்ல வைத்து பல்லவ பீடம், மாடுகள் திருட்டு, கள பிரர்களுடன் போர் என கதையை நகர்த்தியிருக்கிறார்... மிகச் சிறிய வரலாற்றுப் புனைவு இது என்றாலும் வாசிக்கும் போது வசீகரிக்கத்தான் செய்கிறது.

பப்பதேவனின் ஆணையை ஏற்று காஞ்சியில் நடக்கும் மாடு திருட்டு பற்றி அறிய வரும் பப்ப குமாரன் (சிவஸ்கந்தவர்மன்), நகருக்குள் நுழையும் முன்னரே மாடு திருட வந்த கொள்ளையரில் ஒருவனைக் கொன்ற பெண்ணைச் சந்திக்கிறான். அவள்தான் நாயகி தாமரைச் செல்வி... பின் என்ன கண்டதும் காதல்... அவளுக்கு ஒரு முறை மாப்பிள்ளை... குடிகாரன், அவனுடன் சேர்ந்து குடிக்கும் அவளின் அப்பா பெரிய மறவன் இருவரும் வர, மோதலுக்குப் பின்னர் காதலுடன் அவளிடம் இருந்து விடைபெற்று காஞ்சி செல்கிறான்.

மாடு கடத்தல் குறித்து விசாரிக்க வந்தவனுக்கு பப்பதேவன் ஆந்திராவில் இருப்பதால் காஞ்சியைப் பார்த்துக் கொள்ளும் படைத் தலைவன் அதை களப்பிரர்களுடன் சேர்ந்து கைப்பற்றத் திட்டமிடுவது தெரிய வர,  பல்லவ மன்னனுக்கு நெருக்கமான நீதிபதி நிரூபவர்மரிடம் வேலைக்குச் சேர்ந்து படைத்தளபதியுடன் மோதல், தாமரைச் செல்வியுடன் காதல் என்று இருக்கிறான். இதனிடையில் பெரிய மறவன்  மூலமாக குகைக்குள் இருக்கும் பல்லவ பீடத்தைப் போய் பார்த்து வருகிறான். அதை வெளியில் கொண்டு வர சரியான சந்தர்ப்பம் வரட்டும் என்று முடிவு செய்கிறான். பல்லவ பீடம் பற்றி பெரிய மறவனுக்கு தெரியக் காரணமே அதை அறிந்த இன்னொருவன்தான்...ஆனால் அந்த இன்னொருவன் யார் என்பது தெரியாது. குகைக்குள் இறங்கி பீடத்தைப் பார்த்து விட்டு வெளியே வரும்போது அந்த இன்னொருவனால் பிரச்சினை... அதைச் சமாளிக்கும் போது பெரிய மறவனுக்கு கத்திக் குத்து விழ, அந்த இன்னொருவனைக் கண்டு பிடிக்கவும் காஞ்சியைக் காக்கவும் பெரிய மறவன் இறந்ததாக நாடகம் ஆடுகிறான்.

பின்னர் களப்பிரருடன் போர் செய்து வெற்றி பெற்று காஞ்சியைக் காப்பாற்றுகிறான்... மாடு கடத்தல் எதற்காக நடக்கிறது...? பல்லவ பீடம் குறித்து அறிந்த அந்த மற்றொரு நபர் யார்...? படைத்தலைவன் என்ன ஆனான்...? நிரூபவர்மர் வகுக்கும் திட்டங்கள் வெற்றிக்கு உதவியதா..? தாமரைச் செல்வியை மணம் முடித்தானா,..? முறை மாப்பிள்ளை என்ன ஆனான்...? பெரிய மறவன் பிழைத்துக் கொண்டானா..? இப்படி பல கேள்விகளுக்கு விடை கண்டு முடிகிறது பல்லவ பீடம்.

சாண்டில்யனின் நாவல்களில் இரண்டு நாயகிகள் வைத்து வரிஞ்சி வரிஞ்சி வசீகரிக்கும் விதமாக வர்ணனைகளை அள்ளி வீசியிருப்பார்... இதில் நாயகி ஒருத்தியே... வர்ணனைகளும் குறைவுதான்... நான் பப்பதேவனின் ஒற்றன்.. மாடு திருட்டை கண்டுபிடிக்க வந்தவன் என்று சொல்லும் போதே இவந்தான் இளவசரன் என்று நமக்குத் தெரிந்து விடுகிறது. படைத் தலைவனுக்கும் இவனுக்கும் மோதல் ஏற்படுவதும் நீதிபதியின் செய்கைகளும் யார் வில்லன் என்பதையும் புலப்படுத்தி விடுகிறது. 

சின்ன ஒரு விதையை மட்டும் வரலாற்றில் இருந்து முழுக்க முழுக்க கற்பனை கலந்து எழுதியிருக்கிறார். கற்பனைக் கதைதான் என்றாலும் வாசிப்பவர்கள் பப்பதேவனின் குமாரன் சிவஸ்கந்தவர்மனின் குதிரையின் பின்னால் பயணிக்க வைத்து விடுகிறார்... 
-'பரிவை' சே.குமார்.

7 எண்ணங்கள்:

துரை செல்வராஜூ சொன்னது…

அழகாக சொல்லியிருக்கின்றீர்கள்..

Unknown சொன்னது…

குமார்... சமீப காலமாக நீங்கள் எழுதிவரும் நாவல்கள் மற்றும் அதன் மீதான உங்கள் கருத்துக்களை தொடர்ந்து படித்து வருகிறேன்... நானும் உங்களை மாதிரி தான்... பொன்னியின் செல்வனில் ஆரம்பித்து கல்கியின் சரித்திர நாவல்கள் எல்லாவற்றையும் முடித்து..அடுத்ததாக கடல்புறாவில் ஆரம்பித்து சாண்டில்யனின் ஒன்றிரண்டு சமூக நாவல்கள் தவிர அனைத்து சரித்திர நாவல்களையும் படித்துவிட்டேன்... நீங்கள் கடைசி பாராவில் சொல்லி இருப்பது போல்... எல்லாமே ஒரு template based நாவல் தான்... அது ஒரு 5-6 நாவல் படிக்கும் போதே புரிபட ஆரம்பித்து விடும்.. ஆனால் கண்டிப்பாக போர் அடிக்காது...கூடிய சீக்கிரம் நீங்க வேற ஏதாவது வித்தியாசமான சப்ஜெக்ட் படிக்கலாமான்னு தோணலாம்.. அப்ப இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் ட்ரை பண்ணி பாருங்க... சரித்திரம் ஒரு மாதிரி fantasy னா அது வேற மாதிரி fantasy... மாயம், மந்திரம்,கடவுள்,த்ரில்னு கலந்து கட்டி இருக்கும்... உங்களுக்கு ஒருவேளை பிடிக்கலாம்..

ஸ்ரீராம். சொன்னது…

பின் நவீனத்துவம் எனக்கும் புரிவதில்லை! பல்லவபீடம் வாசித்ததில்லை என்று நினைக்கிறேன். ரொம்பநாள் முன்னால் வாசித்திருந்தால் கொஞ்சம் படித்தால் நினைவுக்கு வரலாம். ஆனாலும் இது அவரின் பிரபலமான கதைகளில் ஒன்றில்லை என்று நினைக்கிறேன்!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

படித்த நினைவு வருகிறது
நன்றி நண்பரே
தம +1

Yarlpavanan சொன்னது…

அருமையான பதிவு

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசிக்க வைக்கும் கற்பனைத் திறன்...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

பின் நவீனத்துவம் புரிவதில்லைதான் குமார்! பல்லவபீடம் மீண்டும் வாசிக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்...வாசித்த நினைவில்லை..

கீதா