மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 7 டிசம்பர், 2016மனசு பேசுகிறது : அ...ம்...மா..!

'அ...ம்...மா...!'

இந்த வார்த்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து எழுதும் போதெல்லாம் நான் எழுதாத வார்த்தைதான்... அவரை அம்மா என்று சொல்வதையும் அவர் செல்லும் ஹெலிகாப்டரையும் காரையும் விழுந்து கும்பிடுவதையும் மிகவும் கடுமையாக எனது முகநூல் பக்கத்தில் விமர்சித்திருக்கிறேன். இன்று மதியம் ஜெயலலிதாவின் இறப்பு மிகுந்த வேதனையா இருக்கு என்று சொன்னபோது நண்பர் ஒருவர் என்ன முகநூலில் தேர்தலப்போ எல்லாம் கழுவிக் கழுவி ஊத்தினே இன்னைக்கு வேதனைப்படுறே என்றார். நமக்கு பிடிக்காதவரே என்றாலும் அவரின் ஆளுமை தமிழகத்துக்கு இனி கிடைக்கப் போவதில்லை என்பது உண்மைதானே. அந்த ஆளுமை எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது.

Image result for jayalalitha

ஒரு மனிதன் நமக்கு எதிரியாக இருந்தாலும் அவனின் மரணம் என்பது வேதனையான ஒரு நிகழ்வுதானே. அப்படியிருக்க அவர் குறித்து கேலியும் கிண்டலும் செய்வது என்பது மிகவும் மோசமான செயல். அந்த நேரத்தில் 'அடப்பாவமே..' என்ற ஒற்றை வார்த்தையை நாம் உச்சரிப்பதால் கெட்டுப் போவதில்லை. ஜெயலலிதா குறித்தான சிலரின் முகநூல் பகிர்வுகள் மிகவும் மோசமாக இருந்தன... வேதனைக்குரியதாகவும் இருந்தன... அவரை நமக்குப் பிடிக்கும் பிடிக்காது என்பது அவர் அவர் விருப்பம். பிடிக்கவில்லை என்றால் நாம் அவர் குறித்து எழுத வேண்டிய அவசியமில்லை என்பதை உணர்ந்திருந்தால் இப்படியான பதிவுகளை பகிர்ந்திருக்க மாட்டோம். இன்று அவருக்கு மரணம் என்றால் நாளை நமக்கு என்பதை ஏன் மறந்து போகிறோம்..?

அ...ம்..மா...!

ஆண்கள் நிறைந்த அரசியலில் ஒரு பெண்ணாய் சாதித்த உனக்குள் வாழ்க்கையில் உறவுகளோடு வாழக் கொடுத்து வைக்காத வலி நிறைந்திருந்திருக்கலாம்... இன்றைய நிகழ்வுகளை உனது ஆத்மா கண்டிருக்குமேயானால் மிகுந்த வேதனையை அடைந்திருக்கும் என்பதை உன் மீது பற்றுக் கொண்ட அனைவரும் அறிவர். எத்தனை பணமிருந்தும்... எத்தனை வசதியிருந்தும்... உறவுகளற்ற ஒரு மனுஷிக்கு அழக்கூட ஆளில்லாத நிலையை உனது மரணத்தில் கண்கூடாகக் கண்டோம்...  இன்று உன்னைச் சுற்றி நின்ற கூட்டம் அழக்கூட மனமின்றி ஏதோ சிந்தனையில்... என்ன மனிதர்கள் இவர்கள் என்றுதான் நினைக்கத் தோன்றியது. சினிமாக்காரன் உன் உடலுக்கு அருகில் வந்து அஞ்சலி செலுத்திச் செல்கிறான்.. ஆனால் உன் மீது பாசம் வைத்த மக்கள் கண்ணீர் கடலில் நீந்தி தவித்தாலும் உன் அருகில் வர அனுமதியில்லை... தூர நின்றே தரிசித்தார்கள் இறுதியாய் உன்னை...

உன் ஆளுமையில் அடைபட்டுக்கிடந்தவர்கள்  உன் இறப்புச் செய்தி கேட்டும்.. (அவர்களுக்கு முன்னே தெரிந்திருந்தாலும் உறுதியான அறிக்கையை உலகுக்கு தெரிவித்த போது) மெதுவாக கூட்டம் நடத்தி, ஆளுநர் மாளிகை சென்று, பதவி ஏற்று மெதுவாகத்தானே உன்னைக் காண வந்தார்கள். அன்று நீ சிறை சென்ற போது அழுது ஆர்ப்பாட்டம் செய்து பதவி ஏற்றவர்கள் ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தாது நீ மரணித்த சில மணித்துளிகளில் பதவி ஏற்றார்களே நீ அறிவாயா...? உன்னை பல அடைமொழிகள் வைத்து அழைக்கும் உனது ஜெயா தொலைக்காட்சி, அன்று நீ சிறையிருந்த போது ஓ.பி.எஸ் முதல்வரானதும் உன்னை மக்கள் முதல்வர் என்று சொல்லியதை நீயும் அறிவாய் நாங்களும் அறிவோம்... ஆனால் இன்று உன் பெயர் சொல்லி அழைத்ததே நீ அறிவாயா..? இதுதான் உலகம்... காசுக்கும் செல்வாக்குக்குமே இவர்கள் எல்லாம் அடங்கிக் கிடப்பதாகவும் அழுவதாகவும் நடிக்கிறார்கள் என்பதை நீ ஏன் கடைசி வரை உணரவில்லை. சாணக்கியனாக நீ இருந்திருந்தால் ஒருவேளை நீ சகுனிகளிடம் மாட்டியிருக்கமாட்டாய்... ஆனால் நீ ஆளுமையாக இருந்தும் அடைக்கலமடைந்த இடத்தில், அடிமைகளிடத்தில் தோற்றுவிட்டாயே..

உன் உறவுகள் எங்கோ இருக்க, உன் உடலைச் சுற்றி வளையமிட்டு நிற்கிறது ஒரு குடும்பம்... நீ படி ஏறக்கூடாது என்று விரட்டியவனெல்லாம் இன்று பக்கத்தில் நின்றான். உன்னைத் தொட்டுக் கும்பிட்டவனின் கரம் அடுத்த நிமிடம் கும்பிடுகிறது அருகில் நிற்பவரை... அவரைக் கும்பிடும்படி யார் சொன்னது.. நீ நடந்து போகும் போது உன் பின்னே மறைந்து வந்தவருக்கு உன் உடலருகே மரியாதை... நீ எதிலும் தோற்கமாட்டாய்... போராட்ட குணம் நிறைந்த இரும்புப் பெண் என்றெல்லாம் இன்று பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளுகிறார்கள்... எமன் கூட எழுபத்தைந்து நாளாக போராடித்தான் உன்னை அழைத்துச் செல்ல முடிந்தது என்று அழுகையினூடே எழுதியிருந்தார்கள்... அதெல்லாம் உண்மையாக இருக்கலாம்... ஆனாலும் நீ உன்னைச் சுற்றி இருந்தவர்களிடம் தோற்றுவிட்டாயே...

முதல்வராய் நீ எடுத்த முடிவுகள் எல்லாமே மிகச் சரியான... தீர்க்கமான முடிவுகள். முல்லைப் பெரியாறு, காவிரி என அவரின் தீர்க்கமான முடிவுகளால் ஆட்டம் கண்டன கேரளமும் கர்நாடகமும் என்பதை எல்லாரும் அறிவார்கள். இன்று மலையாளிகளுக்கும் கன்னடனுக்கும் மனசுக்குள் சந்தோஷம்... ஒரு எதிரி இல்லையென... எங்களுக்குத்தான் மனம் முழுக்க வேதனை இனி ஒரு ஆளுமை உன்னைப் போல் எங்கள் தமிழகத்துக்கு கிடப்பாரா என்று... உன் மரணம் விதியா சதியா என்று விவாதித்தால் அது இரண்டாவதுதான் வெற்றி பெறும்.  இன்று கண்ணீர் சிந்தாது நிற்பவர்கள் வேண்டுமானால் மறைக்கலாம் ஆனால் காலம் ஒருநாள் கண்டிப்பாக சொல்லியே தீரும்.

உறவுகளற்ற ஒரு வாழ்க்கை உன் இறுதியாத்திரையில் மிகக் கொடூரமாக அமைந்ததை உன் ஆன்மா பார்த்து கதறி அழுதிருக்கும்... உன்னையே நினைத்த தமிழக மக்களின் அழுகை உன் ஆன்மாவுக்கு ஆறுதல் சொல்லியிருக்கும். இறுதி நாட்களில் நீ பட்ட வேதனையை அப்போலோவும் அந்த சில மனிதர்களுமே அறிந்திருப்பார்கள், உன் கடைசி ஆசை என்னவாக இருந்திருக்கும்..? நீ அதை யாரிடமாவது சொன்னாயா..? இல்லை சொன்னால் நடக்காது என்பதால் உனக்குள் சுமந்து சென்றாயா...? நிறைவேறாத ஆசையுடன் எப்படி நிம்மதியாய் துயில் கொள்வாய்..?

கவர்னர் செல்வி ஜெயலலிதாவாகிய நான் என்று சொன்னதும் செல்வி ஜெ.ஜெயலலிதாவாகிய நான் என்று அழுத்தமாகச் சொல்லி ஒரு சிரிப்பு சிரிப்பாயே... 'மக்களால் நான் மக்களுக்காக நான்' என்று சிம்மக்குரலில் கர்ஜிப்பாயே அதெல்லாம் இனி கேட்கவே முடியாதல்லவா... இன்று உன்னைச் சுற்றி நின்றவர்கள் உன் பிறப்பு இறப்பு நாட்களில் பூக்கள் வைத்து வணங்குவார்கள்... உன் குரலும் நினைவும் வாழும் நாட்களில் எல்லாம் உன் உண்மை விசுவாசிகளின் நினைவுகளில் தாலாட்டிக் கொண்டே இருக்கும்.

இன்று முழுவதும் மனசெல்லாம் வேதனை... ஏனோ தெரியலை... நீ எல்லார் மனசுக்குள் இன்று இறைந்து கிடந்தாய்.... உன்னை விரும்பாதவனும் உனக்காய் அழுதான்... உன் மரணம் சொன்னது உன் வாழ்வின் அர்த்தத்தை...

மெரினா கடற்கரையோரம் உன் மன்னவனின் அருகே துயில் கொள்ளும் நீ இனிமேலாவது நிம்மதியாகத் தூங்கு....

ஆம்...

நிம்மதியாய் உறங்கு அ...ம்...மா...!
-'பரிவை' சே.குமார்.

7 கருத்துகள்:

 1. //ஜெயலலிதா குறித்தான சிலரின் முகநூல் பகிர்வுகள் மிகவும் மோசமாக இருந்தன... வேதனைக்குரியதாகவும் இருந்தன... அவரை நமக்குப் பிடிக்கும் பிடிக்காது என்பது அவர் அவர் விருப்பம். பிடிக்கவில்லை என்றால் நாம் அவர் குறித்து எழுத வேண்டிய அவசியமில்லை // உண்மை சகோ.

  மிகவும் வருத்தமாக இருக்கிறது...

  பதிலளிநீக்கு
 2. அழ்ந்தஇரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

  பதிலளிநீக்கு
 3. அடைக்கலமடைந்த இடத்தில் அடிமைகளிடம் தோற்று விட்டாய்// உண்மை

  ஏன் பிடிக்கும் என்பதையும் எழுதிய பின்னும் வந்து வழக்கு விசாரனை செய்பவர்களை மனிதம் செத்தவர்கள் லிஸ்டில் சேர்த்து விட வேண்டியது தான்.

  பதிலளிநீக்கு
 4. என்றும் அவர் பெயர் நிலைத்திருக்கும்..

  பதிலளிநீக்கு
 5. முகநூல் பகிர்வுகள் குறித்துச் சொல்லியிருப்பது உண்மைதான் குமார்! மிகவும் வேதனை..

  நாங்களும் எழுதியுள்ளோம். கிட்டத்தட்ட வரிகளின் அர்த்தம் இதுவே..

  .நமது அஞ்சலிகளும்!

  பதிலளிநீக்கு
 6. ஆழ்ந்த இரங்கல்கள். இனியேனும் அமைதி கொள்ளட்டும்....

  பதிலளிநீக்கு
 7. இறந்தும் பலரின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் அம்மா! ஆழ்ந்த இரங்கல்கள்!

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...