மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 12 அக்டோபர், 2016

திரைக்கதை வடிவில் 'ஜீவநதி' (எழுத்து : ஆர்.வி.சரவணன்)

சென்ற தீபாவளிக்கு எழுதிய 'ஜீவநதி' சிறுகதையை அன்பின் அண்ணன் குடந்தை சரவணன் அவர்கள் திரைக்கதை வடிவில் எழுதியிருக்கிறார்கள். இது அவரின் படைப்பு... கதை எனது என்றாலும் இது முழுக்க முழுக்க அவரின் கற்பனைதான்.. அவர் தளத்தில்தான் பகிர வேண்டும்... ஆனால் அவர் என்னைப் பகிரச் சொன்னார். அவர் எழுதியதை அப்படியே பகிர்ந்திருக்கிறேன். எனது கதையை திரைக்கதை வடிவில் பார்ப்பதில் மகிழ்ச்சி... அதைச் செய்து கொடுத்த அண்ணனுக்கு நன்றி.

சரவணன் அண்ணனின் தளம் குடந்தையூர்.

சிறுகதையை வாசிக்க 'ஜீவநதி' 

----------------
கதை                                  :  சே.குமார்.

திரைக்கதை வசனம்  :  ஆர்.வி.சரவணன்.

(ஜீவநதி சிறுகதைக்கு போட்ட படம்)
காட்சி -1

ருட்டிய வானத்தில் வெளிச்ச புள்ளி ஒன்று உதயமாகிறது. அது வெளிச்ச பூக்களாய் மாறி  வானத்தையே வெளிச்சமாக்குகிறது.

அந்த ஒளி வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும்  சிறுவர் சிறுமியரின் மேல் விழுகிறது . அதில் ஒரு சிறுவனான சுந்தரம் முகம் நோக்கி நகர்கிறது கேமரா.

க்ளோஸ் அப்பில் இப்போது அவன் முகம். 

அவன் முகமெங்கும் சந்தோஷம் அப்பி கொண்டது போல் நிற்கிறான். சுந்தரம் திரும்பி வீட்டினுள் பார்த்து தங்கை பெயரை சொல்லி கத்துகிறான்  

சுந்தரம் ராதா  இங்க வா 

காட்சி - 2

வீட்டின் வாசல் 

'என்ன' என்றவாறு ஓடி வரும் ராதா அவன் மீதே மோதி கொள்கிறாள் 

சுந்தரம் : ஏய் எம்மாம் பெரிய மத்தாப்பு  பாரு 

ராதா    : எங்க ?

சுந்தரம் : அங்க பார் 

அவன் காட்டிய  திசையில் அவளும் பார்க்கிறாள். 

ஒரு மத்தாப்பு கிளம்பி வானில் வெடித்து சிதறுகிறது. 

இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கிறார்கள். இருவரின் முகத்திலும் ஆச்சரியம் பிளஸ் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார்கள்.

காட்சி- 3

தெருவெங்கும் ஆங்காங்கே வெடியும் மத்தாப்பும் வெடித்து கொண்டிருக்கிறது. வீட்டு வாசலில் நின்ற படி ஏக்கமாய் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

சுந்தரத்தின் பள்ளிக்கூட நண்பன் வந்து கொண்டிருக்கிறான். கூடவே  அவன் பெற்றோரும்.

"டேய் நாங்க துணி பட்டாசு எல்லாம் வாங்கிட்டோம்டா " சந்தோசமாய் கூவுகிறான்.
தன் தந்தை தாயுடன்  கை  கோர்த்து  தீபாவளி பர்ச்சேஸ் முடித்து செல்கிறான் என்பது அவர்கள் கையிலிருந்த பைகள் சொல்கிறது.  அவன் பட்டாசை மட்டுமல்ல சந்தோஷத்தையும் பைக்குள் சுமந்து கொண்டு செல்வது போல் தோன்றுகிறது.  அண்ணன்  தங்கையை பார்க்க  அவளும்   ஏக்கமாக அண்ணனை பார்க்கிறாள்.  

ராதா  : டேய் எல்லாரும் ட்ரெஸ் வாங்கிட்டாங்க பட்டாசு வாங்கிட்டாங்க. நம்ம வீட்ல எப்படா  வாங்குவாங்க ? (அந்த சின்ன பெண்ணின்  குரலில் மட்டுமல்ல குரலிலும் ஏக்கம்.)

சுந்தரம் : தெரியல.  எப்ப கேட்டாலும் அம்மாஅப்பா வரட்டும் னே சொல்றாங்க (அவன் குரலிலும் முகத்திலும் சலிப்பு )

காட்சி -4

வீட்டின் உள்ளே ஹால் 

காய்கறி அரிந்து  கொண்டிருக்கும் காவேரியிடம் பக்கத்து வீட்டு பெண்ணான அவளது தோழி  "தீபாவளி வந்துடுச்சு போலிருக்கே"  என்ற படி நுழைகிறாள் 

காவேரி : ம்  புன்னகைக்கிறாள் 

தோழி : முறுக்குக்கு மாவு பிசைஞ்சு வச்சுட்டேன்.  உன் கிட்டே இருக்கிற முறுக்கு அச்சு கொஞ்சம் கொடேன். நான் பிழிஞ்சிட்டு கொடுத்துடறேன் 

காவேரி எழுந்து சென்று எடுத்து வந்து கொடுக்கிறாள்.

தோழி  : ஆமா. நீ எப்ப பலகாரங்கள் பண்ண போறே  ?

காவேரி ஒன்றும் சொல்லாமல் மையமாக சிரித்து வைக்கிறாள்

தோழி : என்ன நீ இப்படி மசமச னு இருக்கே.  இன்னும் புது துணி கூட வாங்கல போல தெரியுது 

காவேரி : அவர் வரட்டும்னு இருக்கேன் 

தோழி : ஆடி வர வரைக்கும் அம்மாவாசை காத்திருக்குமா என்ன. சரி நாம காத்திருக்கலாம் புள்ளைங்க காத்திருக்குமா. அதுங்களுக்காகவாவது வாங்கணுமில்ல 

காவேரி : எங்கக்கா அவர்  திருப்பூர் ல வேலைல இருக்கார். முதலாளி முன்னாடியே லீவு தர  மாட்டேங்கிறாராம். தீபாவளிக்கு முதல் நாள் தான் விடுவேன்னு சொல்றாராம். 

தோழி : அவர் வர படி வரட்டும் காவேரி. நீ எங்கியாவது கடனை உடனை வாங்கி டிரஸ் எடுத்துடு. அவர்  வந்தவுடன் கொடுத்திடலாம் .நாம என்ன ஏமாத்தவா போறோம். 

காவேரி : நாம ஏமாத்த மாட்டோம்கிறது கடன் கொடுக்கிறவங்களுக்கும் தெரியணுமில்ல. போன முறை வட்டிக்கு வாங்கிட்டு கொடுக்கிறதுக்குள்ள தாவு தீர்ந்துடுச்சு. கொடுக்கிறதுக்கு ரெண்டு நாள் தான் லேட்டாச்சு. அதுக்கே மூஞ்சை காண்பிச்சிட்டான். இதெல்லாம் பார்க்கிறப்ப காசு இருந்தா கொண்டாடுவோம். இல்லன்ன வேடிக்கை பார்ப்போம் என்ற முடிவுக்கு வந்துட்டேன். 
அந்த நேரம் குழந்தைகள் ஓடி வந்து காவேரியை கட்டி கொள்கின்றன 

தோழி: புள்ளைங்க இருக்காங்களே னு சொல்லணும் னு  நினைச்சேன். அதுங்களே  கேட்டுட்டு வந்துடுச்சுங்க பாரு 

ராதா  : எப்பம்மா துணி வாங்கலாம் 

சுந்தரம் :  எப்பம்மா பட்டாசு வாங்கலாம் 

காவேரி : ம் நல்ல வேலை. இன்னொன்னு பெத்துக்கல. பெத்திருந்தா அது பலகாரம் எப்ப செய்ய போறேன்னு கேட்டிருக்கும் (என்கிறாள் வேதனையுடன்) 

தோழி: உன் அண்ணன் கிட்டே கேட்டு பாரேன் 
காவேரி : அவரை எவ்வளவு தடவை தான் தொந்தரவு செய்றது 

தோழி :சொந்தங்கள் எதுக்கு இருக்கு ஒரு கஷ்டம்னா  உதவி செய்றதுக்கு  தானே

காவேரி : அண்ணனா இருந்தாலும் கல்யாணம் ஆகிற வரைக்கும் தானே  நாம உரிமையா கேட்க முடியும். அண்ணின்னு வந்த பின்னாடி உதவி னு போய் நிக்க கஷ்டமா இருக்கு.

தோழி: உங்க அண்ணி நல்ல மாதிரி தானே 

காவேரி : ம் நல்ல மாதிரி தான். இருந்தாலும்  தொடர்ந்து உதவிக்குனு போனா  அவங்களுக்கும் சலிப்பு வந்துடும். அதனாலே  இந்த வருடம் கண்டிப்பா கேட்க கூடாதுனு உறுதியா இருக்கேன். அண்ணனும் இந்த வருஷம் விவசாயம் பண்ண முடியல பணம் இல்லேனு சொல்லிட்டிருந்துச்சு 

தோழி: உன் பக்கத்துல இருக்கேன். உன் கஷ்டத்தை பார்த்துகிட்டிருக்கேன். என்னாலயும் உனக்கு உதவி பண்ண முடியல பாரு

காவேரி : அட  உங்களுக்கே போதும் போதாமே இருக்கு. இதுல  நீங்க எப்படி உதவ முடியும் ?

தோழி: பாழாய் போன குடியில விழுந்து தானும் சீரழிஞ்சு குடும்பத்தையும் கொண்டு வந்து நடு தெருவில நிறுத்திட்டார் உன் புருஷன் 

காவேரி : (அந்த வார்த்தைகள்  அவளை வேதனையாக்குகிறது) நடு தெருன்னு சொல்ல முடியாது. ஏன்னா  நாலு பக்கம் சுவர் சேர்ந்து ஒரு வீடு மாதிரி இருக்கே என்கிறாள் வெற்று சிரிப்புடன் 

தோழி: இப்பயாவது ஒழுங்கா இருக்காரா

காவேரி : இருக்கார். நாம என்ன அவர் கூடவா இருக்கும். என்று அவள் சொல்லி கொண்டிருக்கையில் செல் போன் மலையப்பன் காலிங்  என்று வருகிறது. 

'ம் அவர் தான்' என்ற படி போனை எடுத்து ஆன் செய்கிறாள்.


பிள்ளைகள் செல் போனை பிடுங்கி கொள்கின்றன.

(தொடரும்)

எழுத்தும் கற்பனையும் : ஆர்.வி.சரவணன்.
-'பரிவை' சே.குமார்.

5 எண்ணங்கள்:

KILLERGEE Devakottai சொன்னது…

நல்ல ரசனையோடு செல்கிறது நண்பரே வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கதை படித்திருக்கிறேன். திரைக்கதை ஆக படிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள்...

ஸ்ரீராம். சொன்னது…

தொடர்கிறேன்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

கதை படித்துள்ளேன். இப்போது நாடக வடிவில். தொடர்ந்து பார்ப்பேன் நாடகத்தை.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அட! நம்ம நண்பர் குடந்தையின் கையில் உங்கள் கதை திரைக்கதை வடிவில்!! நன்றாகச் செல்கிறது...தொடர்கிறோம்...