மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

பொன்னியின் செல்வன் ஆனந்தம்...

டந்த பத்து நாளாக பெரும்பாலான நேரத்தை பொன்னியின் செல்வனில் புதைக்க நேர்ந்தது. அலுவலகத்திலும் பணி இல்லாத சூழல் இதற்கு அதிக நேரத்தை ஒதுக்கிக் கொடுத்தது. வலைத்தளத்திலோ முகநூலிலோ அதிக நேரம் மூழ்க்கிக் கிடப்பதை ஒரு வாசிப்பனுபவம் தன்னுள்ளே ஈர்த்துக் கொண்டது. வாசிக்க வாசிக்க அந்தக் காதாபாத்திரங்களின் பின்னே பயணிக்க வைத்தது.

படிக்கும் காலத்தில் க்ரைம் நாவல், பாக்கெட் நாவல், குமுதம், ஆனந்த விகடன், ராணி என புத்தகங்களின் பின்னால அலைந்தவன் நான். இதில் ராணி மட்டுமே எங்கள் வீட்டில் வாங்குவதுண்டு... மற்ற புத்தகங்களை அள்ளி வர அடிக்கடி எங்க சின்னம்மா வீட்டுக்குச் செல்வதுண்டு. அங்கு எல்லாப் புத்தகமும் வாங்குவார்கள். பை நிறைய அள்ளி வந்து இடைவெளி விடாது வாசிப்பதுண்டு.

கல்லூரியில் படிக்கும் போது கதைகள், கவிதைகள் பத்திரிக்கைகளில் வர ஆரம்பித்த சமயம் உதயம், சுபமங்களா, தாமரை, செம்மலர், பாக்யா என வாசிக்க ஆரம்பித்திருந்தோம்... முதல் கவிதை தாமரையில் வெளிவந்து பொன்னீலன் ஐயாவின் தனிப்பட்ட கடிதத்தையும் அவரின் நேரடியான பெருமையும் உண்டு. அப்போதுதான் எங்கள் ஐயா. முனைவர் மு.பழனி இராகுலதாசன் அவர்கள் மார்க்ஸையும் எங்கெல்ஸையும் வாசிக்க வைத்தார். சுஜாதாவும் கி.ராஜநாரயணனும் கவிஞர் மீராவும் ஜெயகாந்தனும் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்க ஆரம்பித்த காலம் அது. ஐயா வீட்டில் நிறைந்து கிடக்கும் புத்தகங்களில் எதை வேண்டுமானாலும் எடுத்துப் படிக்கலாம். எந்தப் புத்தகத்தையும் தொடுவதற்கு தடை இல்லை... இன்றும் அப்படித்தான்... இன்னும் அந்த வீட்டில் மகனாய் தொடர்வதும் ஒரு சந்தோஷமே.

சென்னையில் இருக்கும் போது பத்திரிக்கைப் பணி என்பதால் வாசிப்பு கைகூடி இருந்தது... இங்கு வந்த பின்னர் வாசிப்பிற்கு பூட்டுப் போடும்படி ஆகிவிட்டது. பெரும்பாலான நேரத்தை இணையம் எடுத்துக் கொண்டது... ஊருக்குப் பேசிய நேரம் போக மற்ற நேரத்தில் எல்லாம் எழுத்தும் இணையமுமே என்னோடு இணைந்திருந்தது. நிறையக் கதைகள் எழுதும் வாய்ப்பும் அமைந்தது. தொடர்கதைகள் எழுதவும் முடிந்தது... கவிதைகளும் கிறுக்க முடிந்தது.... கல்லூரியில் படிக்கும் போது 2000க்கும் மேல் கிறுக்கிய ஹைக்கூக்களை இந்த எட்டு வருடத்தில் என்னால் அதிகம் எழுத முடியவில்லை... அது ஏனென்றே தெரியவில்லை... இங்கு வந்தபின் எழுதிய ஹைக்கூக்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். வாசிப்பு என்பதும் அடியோடு போச்சு. அதை நானும் மறந்தாச்சு.

அப்படியான சூழலில் குடந்தை சரவண அண்ணன் 'இளமை எழுதும் கவிதை நீ' என்ற அவரின் முதல் நாவலை எனக்கு அனுப்பித்தந்தார். அதுதான் நீண்ட நாளைக்குப் பிறகு எனது வாசிப்பாய்... அதன் பின்னர் கில்லர்ஜி அண்ணா கொடுத்த முத்துநிலவன் ஐயாவின் புத்தகங்கள், ஜியெம்பி ஐயாவின் புத்தகம், கோவை ஆவியின் கவிதை, திரு. இறையன்பு அவர்களின் கட்டுரைகள், அன்பின் கனவுப்பிரியன் அவர்கள் கொடுத்த அவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு,  அதன் பின்னர் அகல் சிறுகதைப் போட்டியில் பெற்ற பரிசுக்காக நண்பர் சத்யா அவர்கள் அனுப்பிய அ.முத்துலிங்கம் அவர்களின் நாவலும் சிறுகதையும் என கொஞ்சம் கொஞ்சம் வாசிக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது.

சில நாட்களுக்கு முன்னர் நண்பர் தமிழ்வாசி 'பொன்னியின் செல்வன்' வாசிப்பதைக் குறித்தும் அதற்கான இணைப்பையும் முகநூலில் பதிந்திருந்தார். பொன்னியின் செல்வன் வாசிக்க வேண்டும் என்பது நீண்டகால ஆவல்... ஆனால் அதற்கான நேரமும் காலமும் அமையவில்லை என்பதைவிட முயற்சி எதுவும் எடுக்கவில்லை என்பதே உண்மை. சரி முதல் பகுதியைத் தரவிறக்கம் செய்து வாசித்துப் பார்க்கலாம் என்று நினைத்து தரவிறக்கி செல்போனில் ஏற்றிக் கொண்டேன்.

வரலாறுகளைப் படிப்பதில் எப்பவும் கொஞ்சம் அதிகமான ஆர்வம் உண்டு... வரலாற்றுப் புதினம் என்றதும் மனசும் அதை ரசித்து வாசிக்க ஆவலாய் இருந்தது. வாசிக்க ஆரம்பித்த போது தொடர்ந்து வாசிப்போமா என்ற எண்ணமே எழுந்தது. வீரநாராயணன் ஏரிக்கரையில் வந்தியத்தேவன் குதிரையில் வரும் போது அவனின் பின்னே பயணிக்க ஆரம்பித்த மனசு, கொஞ்சம் கொஞ்சமாய் பொன்னியின் செல்வனுக்கு அடிமையாகிவிட்டது.

திரு.கல்கி அவர்கள் தனது பேனாவில் மை ஊற்றுவதற்குப் பதில் இலக்கியத்தை ஊற்றி எழுதியிருப்பாரோ என்று நினைக்கும் அளவுக்கு கதை நெடுகிலும் வர்ணனைகளில் திகட்டத் திகட்ட இலக்கிய ரசம்... வாசிக்க வாசிக்க மனசுக்குள் ஒரு பேரானந்தம்... தொடர்ந்து வாசித்து முடிக்கும் ஆவல் மனசுக்குள் ஆர்ப்பரித்தது. வந்தியத்தேவன் ஒவ்வொருவராய் சந்திக்கும் போதும் வரும் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளுமாய் பயணப்படும் கதை நம்மையும் அவர்களோடு இழுத்துச் செல்கிறது.

மிகச் சிறந்த வாசிப்பு அனுபவம்... நீண்டநாள் ஆசை நிறைவேறிய சந்தோஷம்... இனித் தொடர்ந்து ஏதேனும் ஒரு நாவலை தரவிறக்கம் செய்து வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்ததொரு வாசிப்பு... நேரம் கிடைக்கும் போதெல்லாம் செல்போனைத் தூக்கச் செய்தது ஆசிரியர் அமரர் கல்கியின் எழுத்து. இவ்வளவு பெரிய வரலாற்றுப் புதினத்தை (அவரின் முடிவுரையில் மூன்றரை வருடங்கள் தொடராய் வந்ததாய்ச் சொல்லியிருக்கிறார்) சற்றும் தொய்வில்லாமல்... கதாபாத்திரங்களை அதிகரிக்கவோ குறைக்கவோ செய்யாமல்... பொன்னி நதியோடும் காவிரியோடும் பயணிக்க வைத்து இன்னும் தொடராதா என ஏங்க வைக்க எப்படி முடிந்தது என்ற ஆச்சர்யம் என்னுள்ளே பரவிக்கிடக்கிறது. ஒரு சிறுகதையைக் கூட மிகச் சிறப்பாக எழுத முடியாத நம் முன்னே ஒரு சமுத்திரத்தையே மிக அழகாக கையாண்டிருக்கிறாரே என்ற சந்தோஷமும் கூடி நிற்கிறது... எழுத்து ஒரு வரம்... அது எல்லாருக்கும் வாய்ப்பதில்லை... அந்த வரம் திரு.கல்கி அவர்களுக்கு அதிகமாகவே கிடைத்திருக்கிறது... அதனாலேயே மிக அழகான எழுத்தை வாசிக்கும் சந்தர்ப்பம் நமக்கும் அமைந்திருக்கிறது.

பொன்னியின் செல்வனோ, இளைய பிராட்டி குந்தவை நாச்சியாரோ, வானதியோ, பூங்குழலியோ, ஆழ்வார்க்கடியானோ, கரிகாலனோ, நந்தினியோ, பழுவேட்டையர்களோ, மதுராந்தகனோ, சேந்தன் அமுதனோ, ரவிதாசனோ, பல்லவ பார்த்திபேந்திரனோ, கந்தமாறனோ, அநிருத்த பிரம்மராயரோ, சுந்தரச்சோழரோ, ஊமைராணியோ, செம்பியன் மாதேவியோ என் எண்ணத்தை ஆக்கிரமிக்கவில்லை... கதை முழுவதும் முரடனாய்... பொய் பேசுபவனாய்... அடுத்தவருக்கு உதவுபவனாய்... விளையாட்டுப் பிள்ளையாய் வரும் வந்தியத்தேவனே என்னுள்ளே குடி கொண்டிருந்தான்... அவன் பின்னேதான் கதை முழுவதும் நான் பயணித்துக் கொண்டிருந்தேன்... முழுக்க முழுக்க அந்த முரட்டு வீரனே நிரம்பியிருந்தான். ஆனால்...?

கதையின் இறுதிப் பகுதியில் பயணிக்கும் போது ரொம்ப அதிகம் பயணப்படாவிட்டாலும் கொஞ்ச நேரமே கதையில் பயணித்து சித்தம் கலங்கிப் போனவள் காணாமாலே போய்விட்டாளே ஒருவேளை ஆசிரியர் அவள் தேவையில்லை என்று விட்டு விட்டாரா என்ற சிந்தனையோடு கதையின் முடிவுக்கு வந்தபோது... மீண்டும் அவளைக் கொண்டு வந்து அவளோடு முடித்திருக்கிறார் ஆசிரியர்... முடிவு கஷ்டமாக இருந்தாலும் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று இருக்கும் போது அப்படித்தானே முடிக்க வேண்டும்... ஆம்...என்னுள்ளே வந்தியத்தேவனையும் பின்னுக்குத் தள்ளி முன்னே நின்றவள்.... சம்புவராயரின் செல்லப்புதல்வியும்... கந்தமாறனின் அன்புத் தங்கையுமான... வந்தியத்தேவனை மனதில் நிறைத்து வைத்திருந்த...  மணிமேகலை.

கதை வாசித்தவர்களில் பலருக்கு இவளைப் பிடித்திருக்கலாம்... இனி வாசிப்போரும் கதையை வாசித்து முடிக்கும் போது இவள் பிடித்துப் போகலாம். 

சொல்ல மறந்துட்டேனே... பொன்னியின் செல்வனை வாசிக்கும் போது இளையராஜாவின் கானங்களை கேட்டுக் கொண்டே வாசிப்பதில் கூட ஒரு ஏகாந்தம் இருக்கத்தான் செய்கிறது. எனக்கு ஒரு கெட்டபழக்கம்... படிக்கும் காலத்தில் இருந்தே இது உண்டு... படிக்கும் போதோ எழுதும் போதே ரேடியோவோ... டேப்ரெக்கார்டரோ... டிவியோ ஓடிக் கொண்டிருக்க வேண்டும்... அது இப்போது அப்படியே.. எழுதும் போதும்.... படிக்கும் போதும்... ஏன் அலுவலகத்தில் வேலை செய்யும் போதும் என் கணிப்பொறியில் சேமித்து வைத்திருக்கும் இளையராஜாவின் பாடல்களை கேட்டுக் கொண்டுத்தான் செய்வேன். இப்போது ஸ்ருதியும் அப்படியே... டிவி ஓடிக்கொண்டிருந்தால்தான் எழுதவும் படிக்கவும் செய்கிறார்.... :) 

பொன்னியின் செல்வன் வாசிப்பும் பாடல்கள் கேட்டபடியே.... ரொம்ப நிறைவாய் இருந்தது. புத்தகமாய் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒருமுறை வாசிக்க வேண்டும், ஒவ்வொரு காட்சியையும் மெல்ல மெல்ல உள்வாங்கிக் கொண்டு இன்னும் நிதானமாக... 
-'பரிவை' சே.குமார்.

13 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

#இராகுலதாசன் அவர்கள் மார்க்ஸையும் எங்கெல்ஸையும் வாசிக்க வைத்தார்.#
வால்கா முதல் கங்கை வரை நூலையும் கொடுத்து இருப்பாரே ?ரசிக்க முடிந்ததா :)

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

பொன்னியின் செல்வன் பலமுறை படித்துப் படித்து மகிழ்ந்த நூல்

Anuprem சொன்னது…

நான் பதினொன்னாம் வகுப்பு படிக்கும் போதே மாமாவிடம் ஓசி வாங்கி வாசித்த புத்தகம்...

அதன் பிறகு பல முறை வாசித்தும்...பெயரை படிக்கும் போதே ஒரு மகிழ்வை உண்டாக்கும் புத்தகம்..

ஸ்ரீராம். சொன்னது…

பாட்டு கேட்டபடியே புத்தகமா? எனக்கு மனசில் ஏறாது சாமி!

கோமதி அரசு சொன்னது…

லயித்து படித்த கதை. அம்மாவின் சேமிப்பு பொக்கிஷ தொகுப்பில் பொன்னியின்செல்வனை படித்தேன்.

கதை மாந்தர்கள் எல்லாம் மனதில் வந்து சென்றனர்.

UmayalGayathri சொன்னது…

சத்தம் கேட்டால் படிப்பதில் எனக்கு கவனம் போய்விடும்.....நல்ல நாவல்...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

பொன்னியின் செல்வன் கல்லூரிக் காலத்தில் வாசித்திருக்கிறேன்.....அதன் பின்னும் ஒரு முறை. மிகவும் ரசித்து வாசித்த புத்தகம். மணமான பின் வாசிப்பு குறைந்து இல்லவே இல்லாமல் போய்....இப்போதுதான் வலையுலகில் வாசிப்பு...

கீதா

”தளிர் சுரேஷ்” சொன்னது…

மூன்று முறை பொன்னியின் செல்வனை வாசித்து இருக்கிறேன்! என்னுள்ளும் பிரமிப்பை உண்டாக்கிய நாவல்! பகிர்வுக்கு நன்றி!

அருள்மொழிவர்மன் சொன்னது…

நல்ல பகிர்வு, வாழ்த்துகள்!!

தமிழ் நூல்களை வாசிக்கும்போதே இன்பம், அதுவும் அமரர் கல்கியின் சரித்திர நாவல் பொன்னியின் செல்வன் என்றால் இன்னும் அதீத இன்பம். இந்நாவலை பலமுறைப் படித்தாகிவிட்டது ஆனாலும் இன்னும் அதன் மேலிருக்கும் காதல் குறைந்த பாடில்லை. நீங்கள் கூறியது உண்மைதான், நாவலை வாசிக்கும்போது நானும் வந்தியத்தேவனுடன் செல்வது போன்ற எண்ணமே நின்றது. பூங்குழலியின் பாத்திரமும் நிச்சயம் மனதில் நிற்கும். அப்பொழுது எனக்கு 12-13 வயதிருக்குமென்று நினைக்கிறேன், ரவிதாஸனின் கொடூர முகத்தை கற்பனை செய்து வைத்திருந்தேன். இன்னும் அக்கொடூர முகம் நினைவிலிருந்து அகலவில்லை.

அருமையான நாவல், சரித்திர உண்மைகளைப் பிசகாமலும் அதே நேரத்தில் சுவை குன்றாமல் எப்படி அம்மாமனிதர் படைத்தாரென்பது அதிசயந்தான். வாழ்க அமரர் கல்கியின் படைப்பு!

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரரே

பொன்னியின் செல்வன் நல்ல கதை. சிறுவயதில் அம்மா படித்து கதை சொல்லியிருக்கிறார். பொதுவாக கதைகள் வாசிக்க எனக்குப் பிடிக்கும். அதிலும் சரித்திர நாவல்கள் என்றால் மிகவும் இஷ்டம். நேரந்தான் கிடைப்பது அரிதாக உள்ளது. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வாங்கி வைத்துள்ளேன்.முதல் பாகம் வாங்கியவுடன் தொடரலாமென்ற எண்ணம். விரைவில் கைக் கூட வேண்டும். தங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி.
என் தளம் வந்து வாழ்த்துரைத்தமைக்கும் நன்றி!
இன்று என் பதிவாக "வடிவம்'. முடிந்த சமயம் வந்து கருத்திட்டால் மகிழ்வடைவேன். நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

சாரதா சமையல் சொன்னது…

பொன்னியின் செல்வன் நான் பல முறை படித்து ரசித்த நாவல். அருமையான பதிவு குமார்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மீண்டும் படிக்கத் தூண்டியது உங்கள் பகிர்வு. என்னிடமும் பொன்னியின் செல்வன் இருக்கிறது. படிக்கத் துவங்க வேண்டும்......

துரை செல்வராஜூ சொன்னது…

ஒவ்வொரு தமிழனின் வீட்டிலும் இருக்க வேண்டிய மகத்தான காவியம் - பொன்னியின் செல்வன்..

கல்கி வார இதழில் - 1967 வாக்கில் தொடராகப் படித்திருக்கின்றேன்..

பிறகு, 1980 களில் நான்காண்டு காலம் நூலகத்தில் கழிந்த போது - முற்றாக வாசித்த மகிழ்ச்சி..

சில ஆண்டுகளுக்கு முன் மீண்டும் ஒருமுறை வசந்தம்..

பொன்னியின் செல்வனை முழுதாக - என் பிள்ளைகளுக்கு பரிசளித்துள்ளேன்...

பொன்னியின் செல்வனை நினைவு கூர்ந்தமைக்கு மகிழ்ச்சி..