மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 12 ஏப்ரல், 2016

அகல் கட்டுரை : கொஞ்சம் ஆன்மீகம் கொஞ்சம் வீரத் தமிழர் வரலாறு

அகல் மின்னிதழ் நண்பர் சத்யா கேட்டதற்கு இணங்க எழுதிய முதல் ஆன்மீகக் கட்டுரை. அவர் கேட்டபோது தயக்கமாக இருந்தாலும் எங்கள் மாவட்டத்தில் வீர வரலாற்றைச் சுமந்து நிற்கும் கோவில் குறித்து என்றதும் முயற்சிக்கலாம் என்று எழுதியதுதான் இது. கொஞ்சமாய் ஆன்மீகமும் நிறைய வரலாறும் கலந்து எழுதிய கட்டுரை இது. இன்னும் நிறைய எழுத நினைத்து ஏழு பக்கத்துக்கு மேலாகிவிட்டதால் தேவையில்லாதவற்றை நீக்கி அவருக்கு அனுப்பினேன். ஏப்ரல் மாத அகல் தமிழ்ப் புத்தாண்டு இதழில் வெளிவந்திருக்கிறது. இதுவரை எட்டிப் பார்க்காத ஒரு களம்,.. தவறுகள், பிழைகள் இருக்கலாம்... இருந்தால் சொல்லுங்கள் என்னைத் திருத்திக் கொள்ள உதவும்...
************
அகலில் மின்னிதழை முழுவதும் வாசிக்க...


அகலில் என் கட்டுரையை தனியாக வாசிக்க...


நன்றி சத்யா...

-------------------------------------------

இனி பதிவுக்குள் செல்வோமா...


வீர வரலாற்றைச் சுமந்து நிற்கும் காளையார் கோவில்

செம்மண் பூமியான சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கோவில்களில் முதன்மையானது காளையார் கோவில். சிவகங்கை சமஸ்தானத்தை சசிவர்ணத்தேவர் ஆட்சி செய்தார். அவருக்குப் பிறகு இரண்டாவது மன்னராக அரியணை ஏறியவர் வெள்ளையரை எதிர்த்துக் குரல் கொடுத்த முத்துவடுகநாத சேதுபதியின் ஆட்சிக் காலத்தில் இந்த ஊர் மிகப்பெரிய சந்தையாக இருந்திருக்கிறது. இங்குதான் தொண்டி மார்க்கமாக கொண்டு வரப்படும் குதிரைகள் உள்பட ஏராளமான பொருட்கள் விற்கப்பட்டிருக்கின்றன. மிகப் பெரிய வீர வரலாற்றை தன்னுள்ளே வைத்திருக்கும் காளையார் கோவிலைச் சுற்றிலும் விவசாயத்தை நம்பி வாழும் கிராமங்கள் நிறைந்திருப்பதால் இந்த ஊர் இன்று வரை நகரத்தின் தன்மையை  இன்னும் முழுமையாக உள்வாங்காமல் நகரமும் கிராமமும் கலந்த கலவையாகத்தான் இருக்கிறது.
 
கோவில் நகரம் என்றால் அது கும்பகோணம்தான் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அந்தளவுக்கு பிரசித்தி பெற்ற கோவில்களைக் கொண்ட நகரம் அது என்றபோதிலும் நம் தமிழகத்தில் கோவில்கள் இல்லாத நகரம் இல்லவே இல்லை என்பதையும் நாம் அறிவோம். அதேபோல் உலகச் சிறப்புமிக்க, வரலாற்று சிறப்பு மிக்க பல கோவில்கள் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கின்றன என்பதை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவற்றில் குறிப்பாக உலக பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர், குன்றக்குடி முருகன், நாட்டரசன்கோட்டை கண்ணாத்தாள், தென் திருப்பதி என்றழைக்கப்படும் அரியக்குடி பெருமாள், கொல்லங்குடி காளி, கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர், திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப்பெருமாள், சிங்கப்புணரி சேவுகப்பெருமாள், தேவகோட்டை சங்கரப்பதி  முனீஸ்வரர் என நீளும் இந்தப் பட்டியலில் தேவகோட்டை, காரைக்குடி, சிவகங்கை, இளையாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் இன்னும் பல கோயில்களைச் சேர்க்கலாம். 

காளையார் கோவில்: சிவகங்கைக்கு கிழக்கே 16 கி.மீ தூரத்திலும் தேவகோட்டைக்கு மேற்கே 35 கி.மீ தூரத்திலும் மதுரைக்கு தென்கிழக்கே (மதுரை - தொண்டி சாலையில்) 66 கி.மீ தூரத்திலும் அமைந்திருக்கிறது. சென்னையில் இருந்து மானாமதுரை வழியாக இராமேஸ்வரம் செல்லும் இரயில் பாதையில் இருக்கும் நாட்டரசன்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து 6 ப்கிமீ தூரத்தில் அமைந்திருக்கிறது. தேவகோட்டை, காரைக்குடி, சிவகங்கை, தொண்டி, இளையாங்குடி, பரமக்குடி, மதுரை என எல்லா இடத்திலும் இருந்து பேருந்து வசதி இருக்கிறது.

சிவகங்கை சமஸ்தானத்தின் கீழ் இருக்கும் காளீஸ்வரர் கோவில், தேவகோட்டை ஜமீன்தார் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. அவர்களுடைய கட்டளையின் பேரில் தினமும் ஆறு காலப் பூஜைகள் நடைபெறுகின்றன. சிவகங்கை சமஸ்தானத்தில் மிகப்பெரிய கோபுரமாக இருக்க வேண்டும், அதிலிருந்து பார்த்தால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் தெரிய வேண்டுமென மருது சகோதரர்கள் பார்த்துப் பார்த்து கட்டிய இராஜகோபுரம் ஒன்பது நிலைகளுடன் 157 அடி உயரத்தில் பிரமாண்டமாய் நிற்கிறது. இதற்காகவே நிறைய இடங்களில் மண்ணெடுத்து சுட்டுப் பார்த்து எதுவும் சரியில்லாத நிலையில் மானாமதுரைக்கு அருகிலுள்ள கருமலையில் மண்ணெடுத்து செங்கல் சுட்டுப் பார்த்து, அது உறுதியானதாக இருக்கவே அதை வைத்துக் கட்டினார்கள் என்பது வரலாறு. இன்றும் எங்கள் சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை செங்கலுக்கு மதிப்பு கூடுதல். பெரிய கோபுரத்து அருகில் ஐந்து நிலை கொண்ட சிறிய கோபுரம் ஒன்றும் இருக்கிறது. சிறிய கோபுரத்தின் நேரேதான் மூலவர் காளீஸ்வரரின் சன்னதி அமைந்திருக்கிறது. இரண்டு கோபுரங்களும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கின்றன.

Worship Timings of Kalayarkoil Temple

சிறிய கோபுரத்தை முதலாம் சுந்தரபாண்டியன் கட்டினார் என்று சொன்னாலும் இரண்டு கோபுரங்களுமே மருது சகோதரர்களால் கட்டப்பட்டவையே என்றும் ஒரு சில வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏறத்தாழ நாலு ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து இருக்கும் இக்கோவிலின் உள்ளே உட்பிரகாரம், வெளிபிரகாரம் என இரண்டு பிரகாரங்கள் இருக்கின்றன. இங்கிருக்கும் மூன்று சந்நதிகளில் முறையே சொர்ணகாளீஸ்வரர் - சொர்ணவல்லித் தாயார், சோமேஸ்வரர் - சௌந்தரநாயகி, சுந்தரேஸ்வரர் - மீனாட்சி  ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். சிவன் மூன்று கோலத்தில் வீற்றிருப்பது உலகில் வேறு எந்தக் கோவிலிலும் காண முடியாத அற்புதம். மூன்று சந்நிதிகளில் நடுவே இருப்பவர் தேவாரப் பாடல் பாடப்பெற்ற மூலவர், சுயம்புவாய்த் தோன்றிய சொர்ணகாளீஸ்வரர். அவருக்கு வலது பக்க சன்னிதியில் சோமேஸ்வரரும் இடது பக்க சன்னிதியில் சுந்தரேஸ்வரரும் இருக்கிறார்கள். இந்த மூன்று சந்நிதிகளும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. அன்னை சொர்ணவல்லியின் சந்நிதி சுந்தரேஸ்வரருக்கு இடது புறமாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அன்னை சௌந்தரநாயகி மற்றும் அன்னை மீனாட்சி இருவரும் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார்கள். கொக்கு மந்தாரை மரம் இக்கோவிலின் தலவிருட்சமாகும்.

சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமிகள் சேரமானுடன் தலயாத்திரை செய்த போது திருச்சுழியில் வந்து தங்கியிருந்திருக்கிறார். அவர் எப்பவும் போல் இறைவனை வழிபட்டுவிட்டு படுக்க, கனவில் காளை உருவம் கொண்டு கையில் பொற்செண்டு தாங்கியும் திருமுடியில் சுழி அணிந்தும் காட்சி தந்த இறைவன் ‘யாம் இருப்பது திருக்கானப்பேர்’ எனக்கூறி மறைந்துவிட்டராம். திடுக்கிட்டு விழித்த சுந்தரர், சேரமானுடன் திருக்கானப்பேர் வந்து இறைவனைக் கண்டு பரவசப்பட்டு பதிகம் பாடினார் என்பது ஸ்தல வரலாறு. ஏழாம் திருமுறையில் இடம்பெற்றுள்ள இப்பதிகத்தில் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் 'கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே' எனப் பாடியிருக்கிறார்.

இங்குள்ள சிவகங்கை தீர்த்தம், காளி தனது வழிபாட்டிற்காக உருவாக்கியதாகும். சண்டாசுரனை வதம் செய்த பின்னர் காளி இங்கு வந்து இந்தத் தீர்த்தத்தை உருவாக்கி அதில் மூழ்கி சிவனை வழிபட்டு அதன் வாயிலாக அசுரனைக் கொன்ற பாவம் நீங்கப் பெற்று கரிய உருவம் கொண்டு காளீஸ்வரரை மணம் புரிந்து சொர்ணவல்லித் தாயாராக அருள்பாலிக்கிறார் என்பதும் வரலாறு.

இதேபோல் இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானை மகரிஷி ஒருவர் கொடுத்த பிரசாத மாலையைத் தரையில் வீசி எறிந்ததால் பெற்ற சாபத்தை நீக்குவதற்காக இங்கு வந்து இறைவனை வழிபட்டு தன் தந்தத்தால் பூமியைக் கீறி தீர்த்தம் உண்டாக்கி அதில் குளித்து தன் பாவத்தைப் போக்கிக் கொண்டது என்றும் அதுதான் ஆனைமடு தீர்த்தம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் ஆனைமடு தீர்த்தம் என்பது யானைகளைக் குளிப்பாட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட பள்ளமே என்று மருதுபாண்டியர்களின் வரலாற்றை விரிவாக தெரிந்து வைத்திருக்கும் பலர் சொல்லியிருக்கிறார்கள். கஜபுஷ்கரணி என்றும் அழைக்கப்படும் இந்த தீர்த்தக்குளம் எப்போதும் வற்றுவதில்லை எனவும் சொல்கிறார்கள்.  இந்தக் குளத்தின் நடுவே நீராழி மண்டபம் அமைந்துள்ளது. மேலும் இக்கோவிலில் விஷ்ணு தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், கௌரி தீர்த்தம், ருத்ர தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சுதர்சன தீர்த்தம் போன்ற தீர்த்தங்களும் இருக்கின்றன.

Maruthu Brothers Statue located inside the Kalayarkoil Temple


இந்த ஊருக்கு தக்ஷிணகாளிபுரம், சோதிவனம், மந்தாரவனம், மோக்ஷப்பிரதம், அகத்தியக்ஷேத்ரம், காந்தாரம், தவசித்திகரம், வேதாருவனம், பூலோககைலாயம், மகாகாளபுரம் என்ற பெயர்களும் உண்டு என்றாலும் இறைவன் சொன்ன திருக்கானப்பேரே வரலாற்றில் நிற்கிறது. சுந்தரர் காளைக்கு பதியம் பாடிய பின்னர் காளீஸ்வரர் கோவிலாகி அதுவே மருவி இன்று காளையார்கோவில் என்று அழைக்கப்படுகிறது. இறைவன் மூன்று சந்நிதிகளில் இருப்பதை வைத்து இப்பகுதியில் 'காளைதேட... சோமர் அழிக்க... சொக்கர் சுகிக்க...' என்ற பழமொழி வழக்கத்தில் இருக்கிறது.

படங்கள் இணையத்திலிருந்து இந்த பதிவிற்காக எடுத்துச் சேர்த்தது... நன்றி இணையம்.

தொடர்ச்சி நாளை பகிரப்படும்...
-'பரிவை' சே.குமார்.

11 எண்ணங்கள்:

KILLERGEE Devakottai சொன்னது…

ஆஹா நம்மூர் வரலாற்று விடயங்கள் அருமை நண்பரே வாழ்த்துகள்
அன்பின்ஜி திரு. துரை செல்வராஜூ அவர்களைப் போல ஆன்மீகத்தில் திளைத்திட வாழ்த்துகள் தொடர்கிறேன்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

இக்கோயிலுக்கு இரு முறை சென்றுள்ளேன். கம்பீரமாக நெடிதுயர்ந்து நிற்கும் ராஜகோபுரம் தொடங்கி மிக சிறப்பான அமைப்பினைக் கொண்ட கோயில். உங்களால் இன்று மறுபடியும் தரிசனம். நன்றி.

துரை செல்வராஜூ சொன்னது…

மகிழ்ச்சியாக இருக்கின்றது - தங்களின் கைவண்ணத்தைக் கண்டு..

கோயில் நகரம் கும்பகோணம் (மட்டுமே!?..)என்பதில் எனக்கும் உடன்பாடில்லை..

அந்த விஷயத்தை விளக்க வேண்டுமென்றால் தனியாக பதிவு வேண்டும்..

இப்படியே சொல்லிச் சொல்லி காத்திருக்கும் பதிவுகளின் பட்டியல் நீளுகின்றது..

மேலும் பல அரிய தகவல்கள் வெளிவரவேண்டும்..

வாழ்க நலம்!..

Yarlpavanan சொன்னது…

இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

சித்திரையாள் வருகை
இத்தரையில் எல்லோரும்
எல்லாமும் பெற்று வாழ
எல்லோருக்கும் வழிகிட்டுமென
புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிரும்
இத்தால் உங்கள் யாழ்பாவாணன்

மு. கோபி சரபோஜி சொன்னது…

மருது சகோதரர்கள் குறித்து ஒரு கட்டுரை எழுத வேண்டி இருந்த சமயத்தில் அங்கு சென்றிருக்கிறேன். கோயில் குறித்து இத்தனை தகவல்கள் இருப்பதை உங்கள் கட்டுரை மூலமாகத் தான் தெரிந்து கொண்டேன். இனி அங்கு செல்லும் போது இந்தக் கட்டுரையும் நினைவில் வந்து போகும்.கட்டுரை நன்றாக வந்திருக்கிறது குமார். வாழ்த்துகள்

ஸ்ரீராம். சொன்னது…

வாழ்த்துகள் குமார். தொடர்ந்து கலக்குங்கள்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மிக மிக அருமையான அறிந்திராத தகவல்கள் மட்டுமல்ல வரலாற்றுச் சிறப்புகளும், தகவல்களும் அறிந்தோம். மீனாட்சி அம்மன் கோயில் கோபுரம் தெரிய வேண்டும் என்றால் காளையார் கோயிலின் கோபுரம் எவ்வளவு உயரமாக இருக்க வேண்டும்!!! இப்போதும் ஜமீன் பரம்பரைக் கட்டுப்பாட்டில் இருப்பது ஆச்சரியம்தான். ஏனென்றால் சிறப்பு வாய்ந்தக் கோயில்கள் எல்லாம் தமிழ்நாட்டு தேவஸ்தானத்தின் கீழ் சேர்க்கப்பட்டுவிடுவதால் இந்த ஆச்சரியம். இப்போதும் ஜமீன் எல்லாம் இருக்கிறார்களா? படத்தில் வருவது போல்தான் இருப்பார்களா? வீடு வாழ்க்கை முறை எல்லாம்?

தேவகோட்டை பற்றிச் சொல்லியிருப்பதால் மீசைக்காரர் தேவகோட்டைச் சின்ன ஜமீன் நாந்தான் என்று மீசையை முறுக்கிக் கொண்டு வந்துவிடுவார் என்று நினைத்தால் ஆள் அடக்கிவாசித்திருக்கிறார் போலும்...ஹஹஹஹ

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமையாக எழுதியுள்ளீர்கள். தொடருங்கள்! வாழ்த்துகள். பாராட்டுகள் குமார்!

கோமதி அரசு சொன்னது…

அழகான காளையார் கோவில்பற்றியும் அதன் சிறப்புகளைப் பற்றியும் அழகாய் எழுதி இருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

ஜமின் இருக்கிறார்கள் கொஞ்சம் காரைக்குடிக்கும் தேவகாகோட்டைக்கும் சென்று வாங்க

Unknown சொன்னது…

ஜமீன் இருக்கிறார்கள் கொஞ்சம் காரைக்குடிக்கும் தேவகாகோட்டைக்கும் சென்று வாங்க