அவ...
என்னடா அவன்னு சொல்லி மூணு புள்ளி வச்சிருக்கானே எவன்னு யோசிக்காதீங்க... அவன்னா எனக்கு உயிர்... அதேபோல் நான் அவளுக்கு உயிர். எங்களோட உறவு பற்றி நான் உங்ககிட்ட பகிர்ந்துக்கப் போறதை படித்து முடிக்கும் போது உங்கள் பார்வையில் எங்க ரெண்டு பேருக்குமான உறவு காதலா, நட்பாங்கிற ஒரு முடிவுக்கு வருவீங்க... வரணும்... அதுதான் எனக்கு வேணும். சரி வாங்க... முடிவில்லா பயணத்தில் முடிவு காண பயணிப்போம்.
அவ... அதாங்க நான் சொன்னேனே அவதான்...
ஒரு மதியப் பொழுதில்தான் அவளை முதன்முதலில் பார்த்தேன்... அது கல்லூரியில் வசந்த காலம்... நண்பர்களுடன் அரட்டையில் இருந்த என்னை கடந்தவளின் கண்கள் என்னையே மேய்ந்து கொண்டு போனதை நான் அறியாமல் இல்லை... இருந்தும் அவளைத் தெரியும் என்றாலும் இவ எதுக்கு என்னைப் பார்க்கணும் என்ற எண்ணம் தோன்றியதே தவிர அதை ஆராயும் எண்ணம் தோன்றவில்லை.
அன்று மாலை நானும் நண்பன் பரமுவும் சைக்கிளை உருட்டியபடி பேசிக் கொண்டு நடக்கும் போது எங்களை கடந்து சென்ற அவள், 'என்ன பரமு... ஆளையே பார்க்க முடியலை... ரொம்ப பிஸியோ...' என்று சிரித்தாள். 'ஏய் அப்படியெல்லாம் இல்லை... உன்னைத்தான் பார்க்க முடியிறது இல்லை' என்றவன் சைக்கிள் பெடலை மிதித்து அவளுக்கு இணையாக பேசியபடி செல்ல, நானும் அவன் பின்னே மெதுவாகச் சென்றேன். மனசுக்குள் எல்லாத்தையும் நமக்கிட்ட சொல்ற இந்த நாதாரி இதை மட்டும் ஏன் சொல்லலைன்னு கடுப்புத் தீ எரிந்து கொண்டிருந்தது.
அவள் வீட்டிற்குச் செல்லும் கிளைச் சாலையில் திரும்பியதும் 'என்னடா... ஏன் மூஞ்சியை தூக்கி வச்சிருக்கே...' என்றபடி என் சைக்கிளுக்கு இணையாக வந்தான் பரமு. நான் பேசாமல் சைக்கிளை மிதிக்க, 'டேய் அவ பிஸிக்ஸ்ன்னு உனக்குத் தெரியும்.. அவ காலேசுக்கே தெரிஞ்ச பிகர்... நானும் அவளும் நிறைய பேச்சுப் போட்டிக்குப் போயிருக்கோம்... அப்ப பழக்கம்... அம்புட்டுத்தான்... ரொம்ப பிரியாப் பேசுவா... மனசுல எதையும் வச்சிக்கமாட்டா... பிரண்ட்லியா பழகினா அவளும் பிரண்டா இருப்பா... வேற மாதிரி நினைச்சா தூக்கிப் போட்டுட்டு போயிடுவா... இவ கிளாஸ்ல இளையராஜான்னு ஒருத்தன்... இவகூட திக் பிரண்டா இருந்தான்... கொஞ்ச நாளைக்கு முன்னாடி லவ் பண்றேன்னு லெட்டரை நீட்ட, பிடிச்சி வாங்கு வாங்குன்னு வாங்கி விட்டுட்டா... அது மட்டுமில்லாம அவன் பிரண்ட்ஷிப்பையும் கட் பண்ணிட்டா... இப்ப அவன் எங்கிட்ட வந்து அவளை என்னை மன்னிக்கச் சொல்லுன்னு கெஞ்சுறான்...' என்றான். அதுசரி... நமக்கு எதுக்கு வேண்டாத வேலையின்னு அவ பேச்சை அப்படியே விட்டுட்டு வந்துட்டேன். அதன்பின்னான நாளில் அவளைப் பார்த்தாலும் கண்டுகொள்வதில்லை..
'டேய் நாம ஆரம்பிக்கப் போற கையெழுத்துப் பிரதிக்கு ஏழு பேரை ஆசிரியர் குழுவாப் போடலாம்ன்னு நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிறே...' என்ற பரமுவிடம் 'யாரெல்லாம்..?' என்றபோது அவனின் வாயிலிருந்து முதலில் வந்தது அவதான்... 'எதுக்குடா அந்த திமிர் பிடிச்சவளை இதுல சேர்க்கிறே... லவ்வு கிவ்வு பண்ணுறியா...?' என்று கத்தினேன். 'சே... நல்ல பிரண்ட்... அருமையான பேச்சாளி... நல்லா எழுதுவா... நம்ம இதழுக்கும் லேடீசோட ரெஸ்பான்ஸ் வேணுமின்னா இவளை மாதிரி கல்லூரிப் பிகர் ஒண்ணு வேணுமின்னு அவகிட்ட கேட்டேன்... உனக்கு வேண்டான்னா எனக்கு வேண்டாம்' என்று என்னோட போரடி அவன் ஜெயித்தான்.
'இது என்னோட நண்பன்... நண்பன்கிறதைவிட உயிர்ன்னே சொல்லலாம்... இவந்தான் எல்லாம்...' என்று எங்கள் குழுவில் இருந்த நண்பர்களிடம் சொல்ல, மூவரை எனக்குத் தெரியும் என்பதால் அவர்கள் ஒன்று சொல்லவில்லை... இருவர் புதிது.. ஒருவன் பிரபாகரன்.... அவன் லேசாக புன்னகைத்தான். அப்புறம் அவள், 'ம்... கேள்விப்பட்டிருக்கிறேன்... உங்க கிளாஸ் பொண்ணுங்க நகுல சகாதேவன்னு சொல்வாங்க...' என்று சிரித்தாள்... எனக்கு எரிந்தது.
அதன் பிறகான நாட்கள் எப்பவும் போல் கழிந்தது... இதழ் வேலைகள் இருந்தால் கூடுவோம்... அப்போதெல்லாம் நான் எதுவும் பேசுவதில்லை. அப்படித்தான் ஒருநாள் மற்றவர்கள் வராமல் நாங்க மூவரும்... நாங்கன்னா நான், பரமு, அவ... புத்தகத்துக்கான வேலையில் இருந்தோம். 'என்ன பரமு உன்னோட பிரண்ட் ஊமையா...? எங்கிட்ட மட்டும் எதுவும் பேச மாட்டேங்கிறாரு...' என்று சீண்டினாள். 'ஏய் அவன் ரொம்ப கூச்ச சுபாவம் உள்ளவன்... கிளாஸ் பொண்ணுங்ககிட்டயே பேசமாட்டான்...' என்று சிரித்தான். 'ம்க்கும்... ' என்றபடி அடிப்பார்வை பார்த்துச் சிரித்தாள். கோபப்பார்வையை அவள் மீது வீசினேன். அவளோ செருமினாள் என்னைப் பார்த்தபடி.
'அலோ... உங்க பின்னாடியே எவ்வளவு தூரம் வர்றது... கிளாஸ் கட் அடிச்சிட்டு மாங்காய் பிடிங்கப் போறீங்க உங்க பின்னாடி நான் வந்து... இது இந்த மாசத்து இதழுக்கான ஆர்ட்டிக்கிள்ஸ்... லேடீஸ்கிட்ட கலெக்ட் பண்ணினது... பரமுக்கிட்ட கொடுக்கலாம்ன்னு பார்த்தா ஆள் வரலையாம்... உங்ககிட்ட கொடுக்கச் சொல்லி மல்லிகாகிட்ட சொன்னாராம். அவகிட்ட கொடுத்த நீயே கொடு அவன் பேசமாட்டான்னு சொல்லிட்டா... இந்தாங்க...' என்று நீட்டியவள் 'என்ன சாமியாரா?' என்றாள். 'ஏய்' என்று பல்லைக் கடித்தவன் 'சாரி... நன்றி' என்று சொல்லித் திரும்ப முதுகுக்குப் பின்னால் சிரித்தாள் என நண்பர்கள் சொன்னார்கள்.
அப்படியே போச்சு.... எம்புட்டு நாளைக்குப் போகும் சொல்லுங்க... ஒரு பொண்ணு... அதுவும் அழகான பொண்ணு... அவ பிரண்ட்ஷிப் கிடைக்குமான்னு அவனவன் ஏங்க... என்னைச் சீண்டும் ஒரு பொண்ணு... அதாங்க.... அதேதாங்க... இப்ப நாங்க பிரண்ட்ஸ்.... படிப்பில் இருந்து எல்லாம் பேசுவோம்... அவளுக்கு இலக்கியம் பேசினா ரொம்பப் பிடிக்கும்... முன்னெல்லாம் பரமுவும் அவளும் வண்டியில் பூட்டிய மாடுகள் போல் ஒரே நேர் கோட்டில் பயணிக்க, நான் வண்டி ஓட்டுபவன் போல் பின்னால் போவேன். இப்ப எல்லாம் தலைகீழ் நானும் அவளும் மாடுகளானோம்... பரமு வண்டி ஓட்டியானான். இப்போதெல்லாம் பரமும் நானும் நகுல சகாதேவன்களாக இல்லை என்பதை உணர ஆரம்பித்தேன்.
எங்கள் அறைக்கு முன்னர் இருக்கும் பித்தளைக் கேனில் தண்ணீர் குடிக்க வந்தவள் 'என்ன சார்... கிளாஸ் இல்லையா..?' என்று சிரித்தபடியே கேட்டாள். 'இல்லை' என்றதும் 'அப்ப கிரவுண்ட் பக்கம் போயி கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்கலாமா...?' என்றவள் நடக்க அவள் பின்னே போனேன். பேசினோம்... பேசினோம்... பேசிக்கொண்டே இருந்தோம். என்ன பேசினோம் என இருவருக்கும் தெரியாது.
'டேய்... நாளைக்கு எங்க போறே..?' பரமுதான் கேட்டான். என்னடா கேள்வி லீவு அன்னைக்கு எங்க போவாங்க... வீட்லதான்... இல்லேன்ன இங்க உங்க வீட்ல கிடப்பேன்... என்னமோ உனக்குத் தெரியாம எங்கயாவது போற மாதிரி கேட்கிறே' என்றேன் கோபமாய். 'ஆமா இப்பல்லாம் அப்படித்தானே நடக்குது... இன்னைக்கு முத்தமிழ் ஐயா என்ன நகுல சகாதேவர்கள் இருவருக்குள்ளும் ஒரு வரதேவதையால பிரச்சினையாமேன்னு கேட்கிறார்... மானம் போகுது...' என்றார். 'இங்க பாரு உனக்கு அவ எப்படி பிரண்டோ அப்படித்தான் எனக்கும்... நீதான் அவளைக் கூட்டியாந்து நம்ம குழுவுல இணைச்சே.... எழுத்துங்கிற அலைவரிசை ஒத்துப்போனதால பிரண்ட் ஆயிட்டா... என்ன நான் யார்கிட்டயும் பேசமாட்டேன்... அவ இலக்கியம் பேசினா... எனக்கு இனித்தது.... இது தப்பா... சரி விடு எதுக்கு எங்க போறேன்னு கேட்டே....' என்று சிரிக்க, 'அவ வீட்டுக்கு நம்மளை வரச்சொல்லியிருக்கா...' என்றான். 'என்னது அவ வீட்டுக்கா... டேய் அவனுங்க ரொம்ப ஆச்சாரமா இருப்பானுங்க... அது இருக்கட்டும் இதை ஏன் அவ எங்கிட்ட சொல்லலை...' சற்றே வார்த்தையில் சூடு வந்தது. 'எப்பா ஆச்சாரமோ அனுக்கிரகமோ அவ அக்கா பொண்ணுக்கு பர்த்டேயாம்... சாயந்தம் தேடி வந்தா நீதான் எங்கிட்ட தலைவலியின்னு சொல்லிட்டு மத்தியானமே ஆதிகூட படத்துக்குப் பொயிட்டியே... அதான் எங்கிட்ட சொல்லி உன்னையும் கண்டிப்பா கூட்டிக்கிட்டு வரச்சொன்னா...' என்றதும் பொய் சொன்னாலும் எவனாச்சும் போட்டுக் கொடுத்துடுறானுங்க.. என்று நினைத்தபடி 'ம்' என்று சொல்லி வைத்தேன்.
அவள் வீட்டில் எங்களை தவிர மற்றவர்கள் எல்லாம் அவளின் சொந்தங்களே.... எங்களை விழுந்து விழுந்து கவனித்தாள்... பால் கொண்டு வந்து கொடுத்து விட்டு எனக்கருகே அமர்ந்து 'சுகர் போதுமான்னு பாரு' என்றாள். ]இன்னைக்காச்சும் ஸ்மார்ட்டா டிரஸ் பண்ணி வரக்கூடாதா... இந்த டீசர்ட் நல்லாவேயில்லை' என்று வருந்தினாள். 'அவனைப் பாரு... ரவுண்ட் நெக் பனியன்ல கலக்குறான்... நீ ஏன் இப்படி இருக்கே...' அவனைப் பார்த்து பொறாமைப்பட்டவள் என்னைப் பார்த்து பொங்கினாள். போட்டாவுக்கு போஸ் கொடுக்கும் போது என்னருகே வந்து நின்று கொண்டாள். போட்டோ பிரிண்ட் போட்டு வந்ததும் கொண்டு வந்து காட்டி ' உன்னைவிட ஒரு இஞ்ச்தான் நான் கம்மி' என்று சொல்லிச் சிரித்தாள்.
'என்னடா லவ்வு கிவ்வுன்னு எதாச்சும் சொன்னாளா... இப்ப காலேஸ் எல்லாம் உங்க படம்தான் ஓடுது... அவகிட்ட எல்லாரும் ஒரு மாதிரி பேசுறானுங்கன்னு சொல்றேன்... பேசட்டும்... அதுக்கு என்னன்னு சொல்லிட்டு சிரிச்சிக்கிட்டே போறா... என்னடா நடக்குது...' என்றான் பரமு. 'ஒண்ணும் நடக்கலை... நாங்க நல்ல பிரண்ட்ஸ்... எங்க மனசு சுத்தமா இருக்கும்போது மற்றவங்க என்ன பேசினா எங்களுக்கு என்ன... போடா அங்கிட்டு...' என்று அவனை ஒதுக்க, 'ஏய் நாளைக்கு நாம சிவன் கோவில் போலாமா..' என வந்து ஒட்டிக்கொண்டாள் அவ.
கூட்டம் அதிகமில்லாத சிவன் கோவிலில் அவளுக்காய் காத்திருந்தேன்... பட்டுச் சேலையில் கலக்கலாய் வந்து இறங்கினாள். சைக்கிளை நிறுத்திவிட்டு 'வா போகலாம்' என்றவள் 'ஏன் இப்படியிருக்கே... கோவிலுக்கு வரும்போது கண்றாவியா டிரஸ் பண்ணிக்கிட்டு....வேஷ்டியில வந்திருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்... நான் சேலை... நீ வேஷ்டி அழகா இருக்கும்... பாரு நேத்துப் போட்டா பேண்டு... அதுக்கு மேட்ச் இல்லாத சட்டை... போப்பா... உன்னோட வர்றதுக்கு நானே உனக்கு டிரஸ் செலக்ட் பண்ணிக் கொடுக்கணும் போல' என்று கோபப்பட்டாள். 'உனக்கென்ன குருக்கள் பொண்ணு... அம்மனுக்கு வர்ற பட்டுல உங்கப்பா மகளுக்குன்னு ஒண்ணு எடுத்துக்கிட்டு வந்திருவாரு... நாங்க விவசாயிங்கதானே... எங்க வீட்ல அப்பாவும் அண்ணனும் கட்டுற வேட்டிதான் இருக்கு... நமக்கு அது கட்டவும் வராது...' என்றதும் சிரித்துவிட்டு, 'கட்ட வராத வேஷ்டியை கட்டிக்கிட்டு வந்திருந்தா அந்த அழகை நானும் ரசிச்சிருப்பேன்ல... ஊமையான்னு கேட்டது எம்புட்டு தப்புன்னு இன்னைக்குத்தான் தெரியுது... வாயு ஓயாது போல' என்றாள்.
சாமி தரிசனம் எங்களின் பேச்சு என நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. எங்களைச் சுற்றி பல கண்கள் அகலாமாகவும் ஆழமாகவும் ஆராய்வதை உணர்ந்தாலும் இரு போகலாம் என்ற அவளின் வாக்குக்கு அடிபணிய அவல் கிடைத்த சந்தோஷத்தில் கண்கள் வெளியேறிக் கொண்டிருந்தன. அவள் அருகில் என்ற சந்தோஷத்தில் என் கண்கள் அவளையே சுற்றிக் கொண்டிருந்தன.
ஒரு மாலை வேளை... சூரியன் செங்கதிர்களை வீச, நாங்கள் பேசியபடி நடந்தோம்... 'இங்க பாரு மத்தவங்களும் நீயும் எனக்கு ஒண்ணு இல்லை சரியா... நீ வேற அவங்க வேற... இப்ப பாரு பரமுதான் எனக்கு முதல்ல பிரண்ட்... இப்ப அவனோட பேசுறதே குறைஞ்சி போச்சு... உனக்கு கூட பரமுவை விட நாந்தானே முக்கியமாயிட்டேன்.... இல்லையா...?' என்று சிரித்தாள். 'அதெல்லாம் இல்லை அவன் எப்பவும் எனக்கு பெஸ்ட்தான்... அவனில்லைன்னா நான் இல்லை...' என்றேன். 'ம்.. அடேயப்பா நண்பனைவிட நான் பெஸ்ட்ன்னு சொன்னதும் கோபத்தை பாரு மூக்கு மேல... சரி அப்ப நான்...' என்று கொக்கி போட்டாள். 'நீயுந்தான்...' என்றதும் 'நானுந்தான்னா எப்படி..?' என்று முகம் பார்த்தாள். 'ஒரு நாணயத்தின் இரண்டு பக்கம் போல, ஒரு தராசின் இரண்டு தட்டு போல... ஒரு...' கையைக் காட்டி இடைமறித்தவள் 'உன்னை என்ன லெக்சர் அடிக்கச் சொன்னாங்களா... உனக்கு நான் எப்படியோ... எனக்கு நீதான் பர்ஸ்ட்... அப்புறம்தான் மற்றவங்க...' என்றாள். நாம எதாவது சொல்லப்போக இளையராஜா நிலமை நமக்கு ஆயிட்டா என்று யோசித்தடி 'பர்ஸ்ட்ன்னா...' என்றேன். 'பர்ஸ்ட்ன்னா பர்ஸ்ட்த்தான்... எல்லாத்துலயும் நீதான் என் பெஸ்ட்...' சிரித்தவள் 'சரி நான் உனக்கு பரமுக்கு அப்புறம்தான்.... பரவாயில்லை... நீ என்னை பற்றி என்ன நினைக்கிறே..?' என்றாள்.
கொஞ்ச நேரம் யோசித்து 'ராட்சஸி' என்றதும் கோபம் கொள்ளாமல் 'ஏய்...?' என்று அதட்டி அடிக்க கை ஓங்கினாள். 'அட அழகான ராட்சஸின்னு சொல்ல வந்தேன்' என்றதும் 'அது' என்று ஒங்கிய கையை என் கன்னத்தில் தட்டிச் சிரித்தாள். ' நல்ல தோழி... என் இலக்கியத்துக்கும் இலட்சியத்துக்கும் என்னோடு துணையாய் பயணிக்கும் நல்ல தோழி' என்று சிரித்ததும் அவளும் சிரித்தபடி 'படுவா... இப்பல்லாம் நீ ரொம்பப் பேசுறே... நீயும்தான் எனக்கு...' என்று நிறுத்தி 'பைடா... நாளை பேசுவோம்ன்னு..' சொல்லிச் சிரித்தபடி விடைபெற 'தோழியா... காதலியாங்கிற பாட்டு டீக்கடையில் இருந்து வந்து என் காதுகளில் நுழைய, நானும் சிரித்தபடியே சைக்கிளை மிதித்தேன்.
இப்பச் சொல்லுங்க எங்க உறவு நட்புங்கிற வட்டத்துக்குள்ள இருக்கா இல்லை காதல்ங்கிற கண்ணாம்பூச்சி ஆட்டத்துல நுழைஞ்சிருச்சான்னு... அவகிட்ட நேரடியாக் கேட்க எனக்குப் பயம்.. அதே மாதிரி பரமுக்கிட்ட கேட்டா என்னை பந்தாடிடுவான்... ப்ளீஸ் கொஞ்சம் எனக்குச் சொல்லுங்களேன்... அவளுக்கு அடுத்த வாரம் பர்த்டே வருது... அதுக்குள்ள தெரிஞ்சாத்தான் அவளுக்கான கிப்டை நான் செலக்ட் பண்ண முடியும்.... ப்ளீஸ்... ப்ளீஸ்.... என்ன அவ பேரா... ஆமால்ல அவ... அவன்னுதானே சொன்னேன்.... அவ பேரு சுபத்ரா... நான் மட்டும் அவ செல்லப்பேரான பட்டுன்னுதான் கூப்பிடுவேன். அதைத்தான் அவளும் விரும்புவா... சுபத்ரான்னா ஏன்னே கேட்கமாட்டா.... நட்போ காதலோ அவ எனக்கு வேணும்... இருந்தாலும் உங்க கருத்தையும் சொன்னீங்கன்னா நான் சந்தோசப்படுவேன்.
-'பரிவை' சே.குமார்.
14 எண்ணங்கள்:
வணக்கம்
அண்ணா
தொடக்கிய விதமும் முடித்த விதமும் சிறப்பு.. வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.த.ம1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்று, இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள்.
ஆகா...! ரசித்தேன்...
ரசிக்க வைத்தது! நட்பா காதலான்னு வாசகரை ஊகம் பண்ண விட்ட விதம் சிறப்பு!
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!
இப்பல்லாம் ஆண் பெண் நட்பு, பெஸ்ட் நட்புன்றதும் இப்படித்தான் இருப்பதால்..அதாவது பேச்சுகள் எல்லாம்..நட்பின் எல்லையைக் கொஞ்சம் தாண்டினால் காதல் என்று சொல்லும் அளவிற்கான விளிம்பு நிலை என்றுகொள்ளலாம்.
எங்களையே பரிந்துரைக்கச் சொன்னது அழகு!! பர்த்டே கிஃப்ட் கொடுத்து ஐ லவ் யு அவன் சொன்னான்னு வையுங்க தெரிஞ்சுடப் போகுது இளையராஜாவா இல்லையானு...
எனக்கும் சந்தோஷம்...ங்க!
ம்ம்ம்! நல்லா அனுபவித்து எழுதி இருக்கிங்க போல தம்பியாரே!ஆரம்ப மோதல் அப்புறம் காதல். நிஜங்களை அப்படியே கண் முன் காட்சிகளாய் கொண்டு வரும் எழுத்து வேகம்.. ! குமார் சூப்பரோ சூப்பர் குமார்.
காதலுக்குள் நட்பு வரலாம் குமார். ஆனால் நட்பில் காதல்..... கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். ஆனாலும் நட்பு தான் உயர்ந்தது என்பதால் நட்பாக தொடருங்கள். காதல் கொஞ்ச நாளில் சாதலில் கொண்டு விட்டாலும் விடும். ஆனால் நட்பூ!?
ஒட்டு போட்டாச்சு. சுவிஸ் வாட்ச் வாங்க வங்கியில் பணம்போடணும். கறுப்பு மணி வேண்டாம், வெள்ளை மணி போதும்.
நல்லா இருக்கு ...
வாழ்த்துகள்
நிகில் குறித்து சில செய்திகள்
தம +
நல்ல ரசனையோடு சென்றது நட்புக் காதல் ஹி ஹி ஹி
தமிழ் மணம் 8
கதை நகர்வு நன்று
படிக்க தூண்டும் பதிவு
தொடருங்கள்
யப்பா காதலா? நட்பானு எங்களைக் கேட்டு நல்லா கதை விடுறிங்க . தனியா சந்திப்பாங்களாம் சம்பந்தமே இல்லாம பேசுவாங்கலாம். அவனை விட நீ தான் பெஸ்ட்டுனு சொல்வாளாம் அவ. இவரும் ஒன்னும் தெரியாத மாதிரி அதையே திரும்பு திரும்பி கேட்ப்பாராம்.
//இங்க பாரு மத்தவங்களும் நீயும் எனக்கு ஒண்ணு இல்லை சரியா... நீ வேற அவங்க வேற... இப்ப பாரு பரமுதான் எனக்கு முதல்ல பிரண்ட்... இப்ப அவனோட பேசுறதே குறைஞ்சி போச்சு... உனக்கு கூட பரமுவை விட நாந்தானே முக்கியமாயிட்டேன்.... இல்லையா...?' என்று சிரித்தாள். 'அதெல்லாம் இல்லை அவன் எப்பவும் எனக்கு பெஸ்ட்தான்... அவனில்லைன்னா நான் இல்லை...' என்றேன். 'ம்.. அடேயப்பா நண்பனைவிட நான் பெஸ்ட்ன்னு சொன்னதும் கோபத்தை பாரு மூக்கு மேல... சரி அப்ப நான்...' என்று கொக்கி போட்டாள். 'நீயுந்தான்...' என்றதும் 'நானுந்தான்னா எப்படி..?' என்று முகம் பார்த்தாள். 'ஒரு நாணயத்தின் இரண்டு பக்கம் போல, ஒரு தராசின் இரண்டு தட்டு போல... ஒரு...' கையைக் காட்டி இடைமறித்தவள் 'உன்னை என்ன லெக்சர் அடிக்கச் சொன்னாங்களா... உனக்கு நான் எப்படியோ... எனக்கு நீதான் பர்ஸ்ட்... அப்புறம்தான் மற்றவங்க...' என்றாள். நாம எதாவது சொல்லப்போக இளையராஜா நிலமை நமக்கு ஆயிட்டா என்று யோசித்தடி 'பர்ஸ்ட்ன்னா...' என்றேன். 'பர்ஸ்ட்ன்னா பர்ஸ்ட்த்தான்... எல்லாத்துலயும் நீதான் என் பெஸ்ட்...' சிரித்தவள் 'சரி நான் உனக்கு பரமுக்கு அப்புறம்தான்.... பரவாயில்லை... நீ என்னை பற்றி என்ன நினைக்கிறே..?' என்றாள். //
இவ்ளோ பேசிட்டு எங்ககிட்ட கேட்பாராம் நட்பா? காதலானு?
நட்புனு சொல்றேன் என்ன செய்விங்க...
கருத்துரையிடுக