மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 27 டிசம்பர், 2015

குறுந்தொடர்: பகுதி - 15. கொலையாளி யார்?

முன்கதை


தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையைத் தொடங்கும் இன்ஸ்பெக்டர் சுகுமாரன், வேலைக்காரி முதல் மதுரையில் அவரது வாரிசுகள் வரை விசாரித்து இவளா... இவனா... அவனா... என மாற்றி மாற்றி சந்தேகித்து கொலையாளி டாக்டர் சிவராமந்தான் என முடிவுக்கு வந்து கேசை முடிக்கும் விதமாக சிவராமனிடம் எதற்காக கொலை செய்தீர்கள் என நேரிடையாக விசாரணையை ஆரம்பிக்க அவரும் உண்மையைச் சொல்வதாய் சொல்கிறார்.

இனி...

சிவராமன் சொல்கிறேன் என்று சொன்னதும் அவர் என்ன சொல்லப்போறார்... எதுக்காக கொலை செய்தார் என அறியும் ஆவலுடன் மூவரும் அவர் முகம் நோக்க, கண்ணீரைத் துடைத்துக் கொண்டவர் டீப்பாயின் மேலிருந்த தண்ணீரை எடுத்துக் குடித்துவிட்டு ஒரு செருமலுடன் ஆரம்பித்தார்.

“நானும் தணிகாசலமும் நெருங்கிய நண்பர்கள் என்பது உங்களுக்குத் தெரியும்... எனக்குத் தெரியாம அவனோ... அவனுக்குத் தெரியாம நானோ எந்த ஒரு காரியமும் செய்ததில்லை... ரெண்டு பேருக்கும் இடையில எந்த சீக்ரெட்டும் இல்லை. அவனுக்கு ஒர்க் டென்சன் அதிகம்... அதைவிட வருண், தர்ஷிகா குறித்த கவலை ரொம்ப அதிகம்... அவங்களை நல்லபடியா வளர்க்கணும்... அம்மா இல்லாம வளர்ற பசங்க... நாளைக்கு அப்பனோட வளர்ப்பு இப்படித்தான் இருக்கும்ன்னு யாரும் சொல்லிடக்கூடாதுன்னு எங்கிட்ட பேசுறப்போ எல்லாம் புலம்புவான்... வருணோட அம்மா நம்பிப் போனவனோட சரியான வாழ்க்கை அமையாம எங்கிட்ட வந்து என்னை அவரைச் சேத்துக்கச் சொல்லுங்கண்ணே... நான் வேலைக்காரியாவாச்சும் அந்த வீட்ல இருக்கேன்னு அழுதுச்சு.... நான் அவனுக்கிட்ட வந்து பேசினப்போ அவன் ஒத்துக்கலை... முடியவே முடியாது... அவ திரும்பி வந்தா பிள்ளைகளோட எதிர்காலம் பாழாப்போயிரும்ன்னு சொல்லிட்டான்... இவன் சொன்னதுலயும் நியாயம் இருந்துச்சு... ஏன்னா மன்னிச்சு ஏத்துக்கிறேன்னு சொன்னவனை வேண்டான்னு சொன்னவ... இப்ப வாறேன்னு சொன்னா.... அவன் பிடிவாதக்காரன்... முடியாதுன்னு முடிவாச் சொல்லிட்டான்... நானும் அவகிட்ட சொல்லிட்டேன். அவ இன்னமும் தானா ஏத்துக்கிட்ட வாழ்க்கையை கஷ்டத்தோடதான் வாழ்ந்துக்கிட்டு இருக்கா...” பேச்சை நிறுத்தினார்.

“எதுக்காக கொலை பண்ணினீங்கன்னு கேட்டா தேவையில்லாத கதை எல்லாம் எதுக்கு சார்... அதான் வருணோட அம்மா தன்னோட தலையில மண்ணள்ளிப் போட்டுக்கிட்டாங்கன்னுதான் நாங்க விசாரிச்சதுலயே தெரிஞ்சிக்கிட்டோமே அப்புறம் எதுக்கு அந்தக் கதை... நம்ம கதைக்கு வாங்க...” என்றார் சுகுமாரன்.

சிவராமன் லேசாக புன்னகைத்தபடி “எல்லாம் சொன்னாத்தான் எதுக்காக இந்தக் கொலையின்னு உங்களுக்குத் தெரியும். குறிப்பா நான் எப்படி.. அவன் எப்படின்னு தெரியும்... அதனால முழுசா என்னைச் சொல்ல விடுங்க... ப்ளீஸ.” என்றார்.

“சரி... சொல்லுங்க...”

“அவன் ஏத்துக்க மாட்டேன்னு சொன்னதுல அவளுக்கு இவன் மேல கோபம்... அதைத் தீத்துக்க வருணுக்கிட்ட அவனைப் பற்றி தப்பாச் சொன்னா...” வருண் சிரிக்கவும் பேச்சை நிறுத்தி அவனைப் பார்த்தார்.

“என்ன அங்கிள் சிரிக்கிறான்னு பார்க்கிறீங்களா..? அவங்க சொன்ன அதையேதானே நீங்களும் சொன்னீங்க...” என்றான் வருண்.

“ம்... சொன்னேன்... காரணம் உங்கப்பன் எனக்குச் செய்த நம்பிக்கை துரோகத்துக்கு உங்களை அவனுக்கிட்ட இருந்து பிரிச்சி அந்த வேதனையை அனுபவிக்க வைக்கணுமின்னு நினைச்சேன்... ஆனா உங்கிட்ட சொன்னதுக்கு அப்புறம் வேற மாதிரி முடிவு வந்திருச்சு.... என்ன செய்யிறது...”

“சரி அதை விடுங்க... அது இப்ப முக்கியமில்லை... கொலைக்கான காரணத்தைச் சொல்லுங்க...”

“ஒவ்வொன்னாச் சொல்லி வாறேன்... அப்பத்தானே உங்களுக்கு விவரம் புரியும்... வருணோட அம்மாவுக்கும் பிள்ளை மனசுல நஞ்சை விதைச்சு அவனை விட்டுப் பிரிச்சி தவிக்க விடணுங்கிறதுங்கிற என்னோட அதே எண்ணம்தான்... ஆனா அது நடக்கலை... அவளோட கணவன் இவனை மிரட்டி பணம் பார்க்க முயற்சித்தான்... ஆனா அதையும் முறியடித்து அவனைக் காத்தவன் நான்... அவனுக்கு இந்த வீட்டை வாங்கிக் கொடுத்தவன் நான்... அவனோட வேலை டென்சன் குறையட்டுமேன்னு இங்க மாசாமாசம் வந்து தங்கச் சொன்னவன் நான்... இப்படி அவனுக்காக எல்லாம் செஞ்ச நான் அவனுக்கிட்ட எதையும் மறைக்கலை... ஆனா அவன்...”

“என்ன சார்.... என்னமோ நடிகருக்கு இயக்குநர் கதை சொல்ற மாதிரி ரொம்ப பொறுமையா சொல்றீங்க... உங்ககிட்ட கொலைக்கான காரணத்தைத்தான் நாங்க கேக்குறோம்... சும்மா வளவளன்னு பேசுறீங்க... பட்டுன்னு சொன்னாத்தானே சார்... கொலை ஒரு சுவராஸ்யமா இருக்கும்... அதைவிட்டுட்டு... சரி... சரி... எதுக்காக குத்துனீங்க... எப்படி குத்துனீங்க... எப்படிச் செத்தார்ன்னு பட்டுன்னு போட்டு உடைங்க...” பொன்னம்பலம் கோபமாய் பேசினார்.

“ம்... அவன் இங்க வர்றது ரெஸ்ட் எடுக்க மட்டுமில்லை... என் மனைவியோட கூத்தடிக்கவும்தான் என்பதை நான் அறியலை.... ரெண்டு பேருக்கும் இடையில சாதாரண இருந்த நட்பு வேற மாதிரி உறவில போயி முடிஞ்சிருச்சு... அவனுக்கு பொண்டாட்டி இல்லை... இவ அவன்கிட்ட சிரிச்சிப் பேசினதுல மயங்கிட்டான்... அவனோட பணமும் பகட்டும் இவளை அவனோட ஆசைக்கு அடிமையா மாத்திருச்சு...”

“என்ன சார் கதை விடுறீங்க... நீங்க பெரிய டாக்டர்.... நல்ல சொத்துப் பத்து... ஊட்டியில அரைகிரவுண்டுல சும்மா அழகான பங்களா கட்டி வச்சிருக்கிங்க... ஒண்ணுக்கு மூணு கார் வச்சிருக்கீங்க... கூப்பிட்டா ஓடி வந்து வேலை பார்க்க வேலையாட்கள்... அப்புறம் எப்படி அவங்க.... இதை நம்பச் சொல்றீங்களா..?”

“உண்மை சார்... இதுதான் உண்மை... என் மனைவியைப் பற்றி நான் எதுக்கு இப்படிச் சொல்லணும்... எங்கிட்ட எல்லாம் இருக்கு சார்... எல்லா வசதியும் இருக்கு... ஆனா எங்களுக்கு குழந்தை இல்லை சார்... குறிப்பா அவளைச் சந்தோஷப்படுத்துற சக்தி எனக்கு இல்லை சார்... ஒரு ஆக்சிடெண்டுல எதை இழக்க்கூடாதோ அதை இழந்துட்டேன்... இது எங்க மேரேஜ் முடிஞ்சி அஞ்சாறு வருசத்துல நடந்த விபத்து.... அதுக்கப்புறம் நாங்க கணவன் மனைவிதான்... கணவன் மனைவிக்குள்ள இருக்க வேண்டிய அந்த சந்தோஷம் எங்களுக்குள் இல்லை... இவன் இங்க வர... பேச... அவளுக்கு நகைகள் பரிசாக் கொடுக்க... எனக்குத் தெரியாம அவ சந்தோஷத்தை தேடிக்கிட்டா... இவ்வளவுக்கும் அவளும் ஒரு டாக்டர்... அதுவும் அரசாங்க டாக்டர்... இவன் இங்க வரும்போதெல்லாம் பகல்ல ஹாஸ்பிடல் போகமல் இவன் கூட சுத்தியிருக்கா...  மாசாமாசம் அவன் இங்க வர்றபோது இவ லீவு போட்டுட்டு அவன் கூட இருந்திருக்கா... இதெல்லாம் எனக்குத் தெரியாம நடந்திருக்கு.... அவன் இவளுக்காகத்தான் இங்க அடிக்கடி வந்திருக்கான்... அது எனக்குத் தெரியக்கூடாதுன்னுதான் இரவுல என்னை இங்க வரவச்சி பாரின் சரக்கால குளிப்பாட்டியிருக்கான்.... நான் அவனை ரொம்ப நம்பினேன்... ஆனா அவன் எனக்குத் தெரியாம... எங்கிட்ட நல்லவனா இருந்துக்கிட்டே நம்பிக்கைத் துரோகம் பண்ணிட்டான்...” அதற்கு மேல் பேசாமல் சிவராமன் வாய்விட்டு அழுதார். 

வருண் அப்பாவா இப்படின்னு நினைத்து குழப்பத்தில் அமர்ந்திருக்க, கொலை செய்தது இவர்தான் என முடிவாகிவிட்டது என்ற நினைப்பில்  அவர் அடுத்து என்ன சொல்லப் போறார் என கேட்கும் ஆவலில் சுகுமாரனும் பொன்னம்பலமும் சிவராமனை நோக்கினர். 

(பதிவின் நீளம் கருதி கிளைமேக்ஸ் நாளை பதியப்படும்... ஹி...ஹி... திட்டாதீங்க... சஸ்பென்ஸை நீட்டிக்கணுமில்ல)

-'பரிவை' சே.குமார்.

12 எண்ணங்கள்:

நிஷா சொன்னது…

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் மீண்டும் திருப்பமா? திடுக் திடுக் திருப்பம் தான் குமார்.

கதையின் போக்கு நல்லா இருக்கு ஆனால் சவ்வூ மாதிரி இருத்தால் போரடிச்சிரும்பா.. சீக்கிரம் முடிவை சொல்லுங்க.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
உண்மைதான்...
தம்பியைப் பற்றித்தான் தெரியுமே அக்கா...
அப்ப அப்ப எழுதுவதால் பதிவின் நீளம் கருதி அடுத்த பகுதிக்கு போக வேண்டியதாகிவிடுகிறது. அது போக கொலைக்கான காரணத்தை முழுவதுமாய் சொல்லி முடிக்கும் போதுதான் கதை கொஞ்சம் நல்லா இருக்கும். இல்லேன்னா அவர் இதுதான் என்று சொல்லியதாக எழுதினால் சரியாக வராது... இது வரை நடந்தவைகள் எல்லாவற்றிற்கும் முடிவில் காரணம் என்ன என்பதை சொல்ல விளைந்ததின் பலனே 2 பகுதி கூடுதலானது. இன்று கண்டிப்பாக முடியும்.

வேலைப் பளுவின் காரணமாக இரவும் 11 மணிக்குத்தான் இதை டைப் செய்தேன். அதுதான் முகநூலில் தாங்கள் இருந்தும் ஒரு ஹாய் கூட சொல்லலை... ஏன்னா நாளை என்று சொல்லியிருந்தேன். அதற்காக பதிவு போடணுமில்லன்னு சின்சியரா எழுதினேன். அதுபோக அலுவலகத்தில் இருந்து வரும் போது என்னை வந்து சந்திச்சுச் சென்ற கில்லர்ஜி அண்ணாவிடம் பேசும்போது இன்னைக்கு ரொம்ப டயர்டா இருக்கு என்னத்தை எழுதப் போறேன் என்றதும் அப்ப இன்னைக்கும் முடிவு இலலையான்னு கேட்டார். எல்லாம் யோசித்து எழுத ஆரம்பித்தால் பக்கம் பக்கமாப் போகுது. அதனால்தான் பிரிக்க வேண்டிய நிலை.
இன்று இரவு சிவராமனை பிடிச்சி தூக்கிப் போட்டுடலாம்... நல்லாப் பாருங்க தூக்கிப் போட்டுடலாம்ன்னு சொன்னேன்... தூக்கில் அல்ல...

நிஷா சொன்னது…

சரிப்பா@ வேலையும் உடல் நலனும் தான் முக்கியம்.கதையை முடியும் போது எழுதுங்கள்.

கடைசியில் ஒரு கொசுறு வைத்தீர்களே. அதைப்படித்ததும் சிரித்து விட்டேன். தூக்கினாலும் சரி... தூக்குல போட்டாலும் சரி.. யார் கொலை செய்தான்னு மட்டும் சொல்லிருங்க..!

KILLERGEE Devakottai சொன்னது…

நல்லவேளை நான் போலீஸை எங்க பக்கம் திருப்பி விட்ருவீங்களோனு பயந்து கிட்டு இருந்தேன்..
தமிழ் மணம் 2

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அது சரி இப்ப அந்த டாக்டரும் கொலையாளி இல்லாத மாதிரி தோணுதே..//கொலை செய்தது இவர்தான் என முடிவாகிவிட்டது என்ற நினைப்பில் //

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

கொலையை செய்தவர் யார்னு சீக்கிரம் சொல்லுங்க... 'த்தூ'னு துப்பணும் அவ-ர்-ன்-ள் மேலே!

S.P.SENTHIL KUMAR சொன்னது…

இன்னும் ஒரு நாள் காத்திருக்கணுமா..!
த ம 3

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா..
உங்க பக்கம் திருப்பினால் உங்க மீசை பார்த்து பயந்துருவானுங்கன்னு எனக்கு சந்தேகம் .... அதான் திருப்பலை...
நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார்...
இறுதிவரை சஸ்பென்சாகக் கொண்டு போக எண்ணம்... அதான்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நிஜாம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஹா... ஹா... நான் பதில் போடுமுன்னே நீங்க துப்பியிருப்பீங்க...
ஆனா அதுக்கு அவர்தான் இருந்திருக்கமாட்டார்....

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
தங்கள் கருத்துக்களே கதைக்கு ஊக்கம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.