இளையராஜா தொன்னூறுகளுக்குப் பிறகு எத்தனையோ பாடல்களைக் கொடுத்திருந்தாலும் அப்போது கொடுத்த பாடல்களுக்கு இணையாகாது. ரஜினி, கமல் தவிர்த்து ராஜாவுக்கென்றே சில நடிகர்கள் இருந்தார்கள். அவர்களுக்காக அவர் அமைத்த மெட்டுக்கள் காலம் காலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
ராஜாவின் இசை ராஜ்ஜியம் இந்த நடிகர்கள் மூலமாகத்தான் நடந்தது என சில குறிப்பிட்ட நடிகர்களைச் சொல்லலாம் அவர்களில் குறிப்பாக மோகன், முரளி மற்றும் ராமராஜனைச் சொல்லலாம். மோகனுக்கு ராஜா கொடுத்த அத்தனை பாடல்களும் காலத்தால் அழியாதவை. என்ன அருமையான பாடல்கள்... அதே போல் முரளி படங்களிலும் ராஜாவின் ராஜ்ஜியம் தொடர்ந்து கொண்டே இருந்தது.
மோகனுக்குப் பின் ராஜாவின் அரியாசனத்தில் அமர்ந்தவர் ராமராஜன். எத்தனை படங்கள்... எத்தனை பாடல்கள்... அத்தனையும் ராஜாவின் ராஜ்ஜியத்தில் பூத்த இசைப் பூக்கள்.. எப்பவும் ராஜாவுக்கு உய்யலாலா போட வைக்கும் பாடல்கள்.
(வானுயர்ந்த சோலையிலே...)
நான் விரும்பிக் கேட்கும் பாடல்களில் ராமராஜனும் மோகனும்தான் அதிகம் இருக்கிறார்கள். ஒவ்வொரு பாடலையும் எத்தனை முறை கேட்டாலும் தித்திப்புத்தான்... வயலினும் புல்லாங்குழலும் பெரும்பாலான பாடல்களில் உருகி வழிவதை இசையில் லயித்துக் கேட்கும் போது அறியமுடியும்.
ராஜா தொன்னூறுகளின் ராஜ்ஜியத்துக்குப் பிறகு நிறைய பாடல்கள் கொடுத்தார் ஆனால் ஒரு சில பாடல்களைத் தவிர மற்ற பாடல்கள் நினைவில் நிற்கவில்லை. அப்படிப்பட்ட சூழலில்தான் புத்தம் புதுக் காலையை மீண்டும் புதிதாக பருகக் கொடுத்திருக்கிறார்.
ஒரு மழைநாளில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து சூடான காபியை உதடுகள் உருஞ்சுவது தெரியாமல் பருகியபடி விண்ணில் இருந்து மண்ணோக்கி விரைந்து வரும் மழைத்துளியையும்... அந்த பெருமழையின் சங்கீதத் சத்தத்தையும் ரசித்தபடி நொடிகளைக் கடத்தும் வேளையில் ராசாவின் பாடல்களை மெல்லிசையாகக் கேட்டால் கிடைக்கும் சந்தோஷம் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப் பாடலைக் கேட்கும் போது கிடைத்தது.
(இந்தமான் உந்தன் சொந்தமான்...)
நண்பர்கள் கூடச் சொன்னார்கள்... பாடலைக் கேட்கும் போது இருக்கும் ஈர்ப்பு படத்தில் பார்க்கும் போது காட்சி அமைப்பில் இல்லை என்று... இதற்கு மேல் என்ன காட்சி அமைப்பு வேண்டும்... பாடலின் ஆரம்ப வரிகள் இன்னிசைக் குழுவினர் பாடுவது போல் ஆரம்பித்து அப்படியே நாயகன் நாயகியைச் சுற்றி வருகிறது. காட்சிப் படுத்திய விதத்தில் வேண்டுமானால் கொஞ்சம் சறுக்கியிருக்கலாம்... ஆனால் சான்ஸே இல்லை... சூப்பர்... எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.
நாயகி சிருஷ்டி... சத்தியமா இந்தப்புள்ளைக்கு திருஷ்டி சுற்றிப் போடணும்... தனது உணர்வுகளை மிக அழகாக அதே நேரம் மிகவும் மென்னையாக தனது முகத்தில் காட்டுகிறார். கன்னத்தில் விழும் குழி... அடா... அடா... அதுதான் அழகு... இனி பெரும்பாலான இளைஞர்கள் அந்தக் குழிக்குள் விழுவார்கள் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஸ்ரீதிவ்யா என்று அடித்துக் கொண்ட கோடம்பாக்கக் கூட்டம் சிருஷ்டியை சுற்றப் போவது நிச்சயம். நாயகன் அஸ்வினும் அலட்டலில்லாமல்... ஆர்ப்பாட்டமில்லாமல் அழகாக நடித்திருக்கிறார்.
என்ன இது... பட விமர்சனம் மாதிரி பாடல் விமர்சனமாயிரும் போலவே... ஆமா என்ன பேசினோம்... ஆங்..... சிருஷ்டி... சீச்சி... நாம ராஜா பற்றித்தானே பேசினோம்.. எத்தனை இசைராஜாக்கள் வந்தாலும் என்றுமே நான் ராஜாதான் என்று நிரூபித்திருக்கிறார்.
சமீப நாட்களில் இருந்த மனநிலையில் கொஞ்சம் மாறுதல் வந்திருக்கிறது. ஆனால் சிலரின் பேச்சுக்கள் மாற்றத்தையும் நீடிக்க விடாமல் செய்கின்றன என்பது வருத்தமே. இருப்பினும் ராஜாவின் ராகங்கள்தான் மனசுக்கு இப்போது இதமாய் இருக்கின்றன.
'புத்தம் புதுகாலை...' வீடியோதான் இப்போது நான் விரும்பி அடிக்கடி பார்க்கும் பாடலாக மாறிப் போய் இருக்கிறது. ஆஹா... என்ன இசை... அப்படியே நம்மைத் தாலாட்டுகிறது... நீங்களும் கேட்டுப் பாருங்கள்.. நேற்றும்... இன்றும்... நாளையும்.. ராஜா... ராஜாதான்.
என்னைக் கவர்ந்த ராஜாவின் புத்தம் புதுக்காலை உங்களையும் கவர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
மனசு தொடர்ந்து பேசும்.
-'பரிவை' சே.குமார்.
8 எண்ணங்கள்:
புத்தம் புது காலை
அருமையான பாடல
காலையில் கேட்டால்
அன்றைய பொழுது முழுவதுமே ஆனந்தம்தான்
நன்றி நண்பரே
tha ma 2
எல்லாப் பாடல்களுமே அருமை. இந்த 'புத்தம் புதுக் காலை' பாடல் எனக்கு அப்பவே பிடிக்கும்.
புத்தம் புது காலை -
அருமையான பாடல்..
இனிமையான பாடல்!..
நினைவில் என்றும் இனிக்கும் பாடல்!..
ஒரிஜினாலிட்டியை குலைக்காமல் எடுத்ததற்கே மிகப்பெரிய சலாம் போடலாம் சார், உண்மையிலேயே அருமையாக எடுத்திருக்கிறார்கள். எப்போதுமே ராஜா ராஜா தான். ரஜினி கமலை விட மற்றவர்களுக்கு நன்றாகவே பாட்டு போட்டிருக்கிறார் என எண்ணத் தோன்றும். ஆனாலும் தளபதி,நாயகன், வீரா பாட்டெல்லாம் செமயா இருக்கும்.
வணக்கம்,குமார்!நலம்.....சந்தோஷம்.///இந்தக் காவியத்தை(காவியம் என்றே சொல்ல வேண்டும்,குப்பைகளுக்கு நடுவே.)நேற்றே பார்த்து முடித்தேன்.///ராஜா....ம்..ம்!!!
உண்மை தான் மோகன், ராமராஜன், முரளி போன்ற நடிகர்களுக்காக அவர் இசையமைத்த பாடல்கள் ஒவ்வொன்றுமே அருமையாக இருக்கும்....
புத்தம் புது காலை பாடல் எனது All time favorite பாடல்களில் ஒன்று.
சிறந்த பகிர்வு
தொடருங்கள்
கருத்துரையிடுக