கல்லூரிக்கால நட்பில் இன்னும் சில தோழர்களும் தோழியரும் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் பின்னர் பார்க்கலாம்... இன்று எனது நட்பு வட்டத்தில் இன்றும் பாசத்துடன் எங்கள் இல்லத்தில் ஒருவனாய்... இருக்கும் எனது அன்பு நண்பன் டொமினிக் பிராங்ளினைப் பற்றிப் பார்க்கலாம்.
எனக்கு இவன் சிறுவயது நண்பனோ அல்லது கல்லூரிக் கால நண்பனோ கிடையாது. எம்.சி.ஏ. பண்ணும் போது எனக்கு நட்பானவன். தேவகோட்டையில் இருந்து புதுக்கோட்டை செல்லும் போது காரைக்குடியில் ஒரு குரூப் ஏறும். அதில் இவனும் ஒருவன். எங்கள் பேராசியையால் காரைக்குடி குரூப் என்று அன்போடு அழைக்கப்பட்டவர்கள் நாங்கள். ஆரம்பத்தில் சாதாரணமான நட்பாகத்தான் இருந்தது. பின்னர் பழகப்பழக எங்களுக்குள் ஒரு ஆத்மார்த்த நட்பு தொடர ஆரம்பித்தது.
மூக்கின் மீது கோபத்தைச் சுமந்து திரிபவன். எதற்கெடுத்தாலும் முன்கோபம் முந்திக் கொண்டு வந்துவிடும். கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும் என்பார்களே அதற்கு இவன் மிகப் பொருந்துவான். எல்லோருக்கும் உதவும் மனம் கொண்டவன். நான்கு தங்கைகளுக்கு அண்ணனாக இருந்ததால் குடும்பப் பொறுப்பும் பாசமும் இவனிடம் அதிகம் இருந்தது. நாங்கள் படிக்கும் காலத்தில் இவனுக்கு அம்மாவும் தங்கைகளும்தான் உலகம். எப்பவுமே அவர்களைப் பற்றிய பேச்சும் நினைப்பும்தான் இவனிடம் இருக்கும்.
பொது அறிவுத் திறன் இவனிடம் அதிகம். எந்த ஒரு நிகழ்வானாலும் அதைப் பற்றி மிகத் தெளிவான விளக்கத்தைக் கொடுப்பான். டொமினிக், லஷ்மிகுமார் (சாமி - இவரைப் பற்றி மற்றொரு பகிர்வில்), கண்ணன், ஜாகீர், பூபாலன், சிதம்பரம் என ஒரு பெரிய பட்டாளமே எங்கள் குழுவில் இருந்தாலும் நான், சாமி, டொமினிக் என்ற பந்தம் இன்னும் இருக்கமாய் இருந்தது... இன்றும் இருக்கிறது.
கடைசி செமஸ்டரில் புராஜெக்ட் சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் வரை நாங்கள் கல்லூரிப் பக்கம் போகவில்லை. கடைசி நாளன்று புதுக்கோட்டையில் சாமியின் நண்பரின் அச்சகத்தில் பிரிண்ட் எடுத்து பைண்டிங் பண்ணிக் ஐந்து மணிக்குள் கொடுக்க வேண்டும் என்ற கெடு இருக்கும் போது நான்கு மணிக்கு கல்லூரிக்குள் சென்றோம். அப்போது நாம எல்லாரும் ஒன்றாகச் சென்றால் மாலதி (பேராசிரியை) எதாவது சொல்லும். அதனால நான் முன்னால போறேன். நீங்க ரெண்டு பேரும் பின்னால வாங்கன்னு சொல்லிட்டு இவன் முன்னால் போய் கொடுக்க, மேடமோ என்ன சார் இப்பத்தான் நேரம் கிடைத்ததா? எங்க மத்தவங்களை எல்லாம் காணோம் என்று கேட்டு விட்டு காரைக்குடிக்கு குரூப் ஆட்டம் போட்டாலும் படிச்சிருவாங்க சார் என்று பக்கத்தில் இருந்த குற்றாலம் சாரிடம் சொல்லியிருக்கிறார்.
இவன் வந்து மேடம் நல்ல மூடுல இருக்கு நீங்க போங்க என்றதும் கொஞ்சம் நேரம் இடைவெளி விட்டு நானும் சாமியும் ஒன்றாகச் சென்றோம். எங்களைப் பார்த்ததும் 'வாங்க சார்....' என்றவர் என்ன சொல்லியிருப்பார்ன்னு நினைக்கிறீங்க... அதை சாமி பற்றி பார்க்கும் போது சொன்னால்தான் சிறப்பு. கொடுத்து விட்டு வந்ததும் மூவருமாகச் சிரித்துக் கொண்டோம். காரணம் புராஜெக்டை சிடியில் போட்டுக் கொடுக்கணும் என்று சொல்லியிருந்தார்கள். நாங்களும் கொடுத்தோம்... அப்போதுதான் கடையில் வாங்கி வந்த மொசர்பீர் சிடியை... அதற்காகத்தான் சிரித்தோம்.
பின்னர் வாழ்க்கைத் துரத்தலில் இருவரும் கொஞ்சக் காலம் சென்னையில் குப்பை கொட்டினோம். அப்படியே குடும்பம் குழந்தைகள் என்ற வட்டத்துக்குள் வர வாழ்க்கை நகர ஆரம்பித்தது எங்கள் நட்பின் சுவாசத்தை இன்னும் அதிகமாக்கியபடி... தற்போது அவன் நாகர்கோவிலில் குடும்பத்துடன் இருக்கிறான். எப்போது தேவகோட்டை வந்தாலும் எங்க வீட்டுக்கு வந்துதான் செல்லுவான்.
சென்ற முறை நாங்கள் நாகர்கோவில் சென்று இரண்டு நாள் தங்கினோம். அந்த இரண்டு நாளும் மழை பெய்து கொண்டிருந்தாலும் எங்களை எல்லா இடங்களுக்கும் அழைத்துச் சென்றனர். லேசான மழைச் சாரலில் எங்கள் குடும்பமும் அவர்கள் குடும்பமும் டூவீலரில் கன்னியாகுமரி சென்று வந்தது மறக்க முடியாத நிகழ்வு. ஊருக்குப் போகும் போதெல்லாம் எப்படியும் இருவரும் சந்தித்து விடுவோம்.
என்னை இதுவரை பேர் சொல்லி அழைத்ததே இல்லை. மின்னஞ்சலோ, போனோ அல்லது நேரில் வந்தாலும் அழைப்பது என்னவோ 'வாத்தியாரே' என்றுதான். நல்ல படிப்பாளி, திறமை மிக்கவன், குடும்பப் பாசமுள்ளவன் தனது முன்கோபத்தால் பார்க்கும் வேலை எல்லாம் விட்டுவிட்டு வந்து விடுகிறான். நானும் இங்கு முயற்சிக்கிறேன் இதுவரை எதுவுமே அமையவில்லை.
எங்களோடு எங்கள் இல்லத்தில் ஒருவனாகிப் போன நண்பன் டொமினிக் சிகரம் தொட... பிரச்சினைகள் சூழ்ந்த வாழ்வில் இருந்து மீண்டு நட்சத்திரமாய் ஜொலிக்க... காலம் வெல்ல வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
-நண்பேன்டா தொடரும்.
-'பரிவை' சே.குமார்.
14 எண்ணங்கள்:
மலரும் நினைவுகள் அருமை தங்களின் நண்பர் டொமினிக் க்கு நல்ல வாழ்க்கை அமைய இறைவன் துணை புரிவானாக...
எல்லையில்லா நட்பின் வாசம்
உங்கள் பதிவில்...
நண்பர் பெயரும் புகழுடனும் ..
நீண்ட ஆயுளுடனும் எல்லா வளமும் பெற்று
இன்புற்றிருக்க என் பிரார்த்தனைகள்...
தங்கள் நண்பருக்கு இனிய வாழ்க்கை அமையும் கலங்க வேண்டாம்
tha ma 3
நண்பனைப் பற்றிய நினைவுகள் அருமை.
இனிய மலரும் நினைவுகள். தொடரட்டும் நட்பு!
இன்று நட்பு குறித்து இரண்டாவது பதிவு. நல்ல நண்பர்கள் எப்போதும் நம் வளர்ச்சியில் நேரிடையாகவோ , மறைமுகமாகவோ துணையிருப்பர். வாழ்த்துக்கள்
நல்ல நண்பரின் இனிய அறிமுகம் மிகவும் அருமை சார்...
நண்பன் சிகரம் தொட... பிரச்சினைகள் சூழ்ந்த வாழ்வில் இருந்து மீண்டு நட்சத்திரமாய் ஜொலிக்க... காலம் வெல்ல வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
மனம் போல் அமைந்த மகிழ்ச்சியான நட்புக்கு வாழ்த்துகள்.
உங்கள் நண்பர் டொமினிக் சிகரம் தொட வாழ்த்துக்கள்.
இறைவன் அருள்புரிவார்.
நட்புவாழ்க!
இனிய நினைவலைகள்....தொடரட்டும்...வாழ்த்துகள்..
tha ma.5
நட்பு என்றென்றும் தொடரவும், நண்பருக்கு நல்ல எதிர்காலம் விரைவில் அமையவும் வாழ்த்துகள்!
நாங்களும் வேண்டுகிறோம் குமார் உற்ற நண்பனுக்கு நல்லவை நடக்க...................
கருத்துரையிடுக