மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 3 செப்டம்பர், 2014

மனசு பேசுகிறது : வாழ்க்கை கற்றுக் கொடுத்த பாடம்

"உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசும் 
மனிதர் உறவு 
கலவாமை வேண்டும்.

- வள்ளலார்

சில நாட்களாகவே மன அமைதியைக் கெடுக்கும் நிகழ்வுகள்... தொடரும் பிரச்சினைகள்... என நகர்ந்து கொண்டிருக்கிறது என்னைச் சுற்றிய உலகம். இவன் யார்...? இவர் யார்...? என எல்லாவற்றையும் விளக்கி சுற்றியுள்ள மனிதர்களைப் பற்றி புரிய வைத்துக் கொண்டிருக்கிறது வாழ்க்கை. விரத்தியின் பிடியில் வினாடிகள் கரைந்து கொண்டிருக்கின்றன. விடை கானாத கேள்விகள் விளைந்து கொண்டேயிருக்கின்றன. தேற்றுவாரின்றி தவிக்கும் இதயங்கள் இங்கொன்றும்... அங்கொன்றுமாய்... தனித்தனியே பயணித்துக் கொண்டிருக்கின்றன.

நாங்கள் எங்கள் பாதையில் பயணிக்கிறோம்... எங்களை எங்கள் வழியில் விடுங்கள் என்றாலும் சில எருமைகள் சேற்றை நம் மீது வாரி இறைப்பதாக நினைத்துக் கொண்டு தங்கள் மீதே வாரி இறைத்துக் கொள்கின்றன. உறவுகளாய் நினைத்த எல்லாம் இன்று உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகின்றன. எத்தனை விதமான நாடகங்களை நடத்துகிறார்கள் இத்தனை நல்ல மனிதர்கள் என நினைக்கும் போது வருத்தப்படத்தான் முடிகிறது என்றாலும் வாழ்க்கையில் இப்படியும் சிலவற்றை சந்திக்க வேண்டியிருக்கும் என எங்கள் மனசுக்கு சொல்லிக் கொள்கிறோம்.

நமக்கு எல்லாரும் வேண்டுமென நினைத்தது எவ்வளவு தவறு என சில நாட்களாக நடக்கும் நிகழ்வுகளை வைத்து வாழ்க்கை கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. நமக்கு கெடுதல் செய்தவருக்கு நாம் நன்மை செய்வோம் என நினைத்து விலகிப் போனால் வீம்பாக வந்து மோதுகிறார்கள். இவர்களை என்ன செய்வது?

கூட இருந்து கொண்டு நல்லவன் போல் பேசி, சிரித்து கிடக்கிறவன் தள்ளிப் போய் குழி பறிக்கிறான். அவனை என்ன சொல்வது.? எப்படிப்பட்ட மனிதர்கள் இவர்கள்... இவர்களால் எப்படி இப்படியெல்லாம் நடிக்க முடிகிறது... நடந்து கொள்ள முடிகிறது என்று நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. என்ன மனிதர்கள் இவர்கள்...?

எல்லாருக்குமே எந்த விசயத்தையும் வெளியில் சொல்லாமல் நீங்க பண்ணியது சரியெனப் போயிருந்தால் சந்தோஷமாக இருப்பார்கள் என்பது இப்போது அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தில் புரிகிறது. நம்மிடம் பேசுவது ஒன்றாகவும் பிறரிடம் கூறுவது ஒன்றாகவும் இருக்கிறது. எதற்காக இவர்கள் இப்படியிருக்கிறார்கள் என்று புரியாமல் இருந்தது. இப்போது சில மனித மிருகங்கள் மூலமாக வாழ்க்கை எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிய வைக்கிறது.

எந்தளவுக்கு நம்பினோமே அந்தளவுக்கு அவர்களின் சுயரூபம் தெரிய வரும்போது இப்படிப்பட்ட மனிதர்களை உயர்ந்த இடத்தில் வைத்திருந்தோமே என நினைத்து வெட்கப்பட வேண்டியிருக்கிறது... வேதனைப்பட வேண்டியிருக்கிறது. இவர்கள் சேற்றில் இருந்து எழுந்து வந்து எதோ தாங்கள் சந்தனத்தில் குளித்ததாகவும் நாங்கள் சேற்றை வாரி இறைத்ததாகவும் சொல்வதுதான் வேடிக்கை நிறைந்த வேதனையாக இருக்கிறது.

எது எப்படியோ இப்படிப்பட்ட மனிதர்களின் சுயரூபத்தைக் காட்டிய எனது இறைவனுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். இனிமேலாவது இது போன்ற அற்பப் பதர்களிடம் இருந்து விலகி இருக்கலாம் அல்லவா.? வாழ்க்கை சில தினங்களாக கற்றுக் கொடுக்கும் பாடத்தில் அர்த்தம் நிறைந்து இருப்பதுடன் வாழவும் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

வலி நிறைந்த மனசுக்குள் எதுவும் தோன்றவில்லை என்பதால்தான் மனசு வலைத்தளத்தில் சில நாட்களாக எதுவும் எழுதுவதில்லை தொடர்கதையைத் தவிர... இன்று தொடர்கதையை எழுதி பதிவிடலாம் என்று நினைத்து அமர்ந்தபோது சுற்றம் செய்யும் துரோகங்கள் எல்லாம் வரிசையில் வந்து என்னை எழுதவிடாமல் செய்து விட்டன. என்ன செய்வது வாழ்க்கையில் எல்லாம் இருக்கும்... நாம்தான் கவனமுடன் கடந்து செல்ல வேண்டும்.

மனநிலையில் மாற்றம் வந்தால் தொடர்கதை நாளையோ அல்லது சனிக்கிழமையோ பதியப்படலாம்.

-மனசு தொடர்ந்து பேசும்.
-'பரிவை' சே.குமார்.

15 எண்ணங்கள்:

Angel சொன்னது…

என்னாச்சுங்க சகோ ..எதுவாக இருந்தாலும் மனதில் போட்டு குழம்பாதீங்க ..
//நாம் நன்மை செய்வோம் என நினைத்து விலகிப் போனால் வீம்பாக வந்து மோதுகிறார்கள். இவர்களை என்ன செய்வது?//
ஒன்றும் செய்ய வேண்டாம் இறைவன் பார்த்துப்பார் ..ஜஸ்ட் இக்னோர் .

ஸ்ரீராம். சொன்னது…

எல்லோரும் தத்தமது வாழ்வில் ஒருமுறையாவது கற்றுக் கொள்ளும் பாடம் இது! 'சிலரை' அறிந்துகொள்ள இறைவன் அளிக்கும் சந்தர்ப்பம். சரியாகி விடும்.

அப்புறம் ஒரு சிறு திருத்தம். 'உள்ளொன்று வைத்து புறமொன்று' வரிகளை எழுதியவர் பாரதி அல்ல. வள்ளலார். 'ஒருமையுடன் நினது திருமலரடி தொழுகின்ற' பாடலில் வரும்.

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அண்ணா.
ஏன் இந்த கவலை.மனிதனாக பிறந்தாள் வாழ்க்கையில் பல துன்பங்களை சுமக்க வேண்டி வரும்.. துரோகம் நினைக்கும் மனிதர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை...
எல்லாவற்றையும். படைத்தவன் மீது சொல்லுங்கள் நிவர்த்தியாகும்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கார்த்திக் சரவணன் சொன்னது…

இதெல்லாம் அவ்வப்போது வந்து செல்பவையே நண்பரே.... உற்சாகத்துடன் எழுதுங்கள்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பல சமயங்களில் இப்படித்தான் நம்மை அவர்களது கோரப் பற்கள் கொண்டும், நகங்கள் கொண்டும் காயப்படுத்துகிறது சுற்றமும், நட்பும்.....

சில நாட்களாக நானும் இப்படிப் பட்ட மன நிலையில் தான் இருக்கிறேன். நானே இப்பதிவை எழுதிய உணர்வு! :(

இதுவும் கடந்து போகும்..... கவலை விடுங்கள்.

துரை செல்வராஜூ சொன்னது…

//என்ன செய்வது வாழ்க்கையில் எல்லாம் இருக்கும்... நாம்தான் கவனமுடன் கடந்து செல்ல வேண்டும்!..//

நமக்கு - நமது இலக்கு ஒன்றே குறிக்கோள்!..

கவிதை வானம் சொன்னது…

உங்கள் வருத்தங்களை வார்த்தைகளால் எழுதிவையுங்கள் அண்ணேன்...அதுவே நல்ல ஆறுதல் மருந்து

Yoga.S. சொன்னது…

இது அவ்வப்போது....வருவது தான்......எங்கள் முன்னேற்றம் பிறர்(உறவினர்/நண்பர்கள்)கண்களை உறுத்தும் தான்.நாம்,நாமாகவே இருந்து விடுவது தான் நம்மால் இயலக்கூடியது.இறை வணக்கம் ஒன்றே எங்கள் உணர்வுகளுக்கும்,கவலைகளுக்கும் அரு மருந்தாகும்.உங்கள் குல சாமிய வணங்கி ஆறுதல் பெறுங்கள்.எல்லாம் சுபமே நடக்கும்.அவன் தாள் பணிக......மன சாந்தி கிட்டும்.

ராமலக்ஷ்மி சொன்னது…

கசப்பான அனுபவங்களைப் பாடங்களாக எடுத்துக் கொண்டு கவனத்தை எழுத்திலும் பணியிலும் திருப்பிடுங்கள்.

Unknown சொன்னது…

இதுவும் கடந்து போகும் என்று மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள் !
த ம +1

J.Jeyaseelan சொன்னது…

கசப்பான அனுபவங்கள் தான் நம்மை மேலும் சிந்திக்க வைக்கும் சார், டேக் இட் ஈஸி சார்.. நடப்பவை எல்லாம் நன்மைக்கே !!! அவர்களை தவிர்ட்து உங்கள் பாதையில் வெற்றி நடை போடுங்கள். எனக்கு தொடர்கதை பிடிக்காது. ஆனால் உங்கள் தொடர்கதையை இப்போது தான் 10 பகுதி படித்திருக்கிறேன், இனி நாளிதழ்களில் வரும் தொடர்கதைகளைக் கூட படிக்கும் எண்ணம் வந்துவிட்டது. உண்மையிலேயே அருமையான கதை சார், முழுவதும் படிக்க முயற்ச்க்கிறேன்....

இராஜராஜேஸ்வரி சொன்னது…

எது எப்படியோ இப்படிப்பட்ட மனிதர்களின் சுயரூபத்தைக் காட்டிய எனது இறைவனுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். இனிமேலாவது இது போன்ற அற்பப் பதர்களிடம் இருந்து விலகி இருக்கலாம் அல்லவா.? வாழ்க்கை சில தினங்களாக கற்றுக் கொடுக்கும் பாடத்தில் அர்த்தம் நிறைந்து இருப்பதுடன் வாழவும் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

வாழ்க்கைப்பாடமே வலிநிறைந்த அனுபவங்கள் தானே..

இராஜராஜேஸ்வரி சொன்னது…

எது எப்படியோ இப்படிப்பட்ட மனிதர்களின் சுயரூபத்தைக் காட்டிய எனது இறைவனுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். இனிமேலாவது இது போன்ற அற்பப் பதர்களிடம் இருந்து விலகி இருக்கலாம் அல்லவா.? வாழ்க்கை சில தினங்களாக கற்றுக் கொடுக்கும் பாடத்தில் அர்த்தம் நிறைந்து இருப்பதுடன் வாழவும் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

வலி நிறைந்த வாழ்க்கைப்பாடம்..

மகிழ்நிறை சொன்னது…

நான் சொல்ல நினைத்ததை தான் பகவான் பாஸ் சொல்லிருக்கார். அண்ணா வாங்க பாத்துக்கலாம். நல்லவங்களுக்கு நல்லது தான் நடக்கும் அண்ணா:)

Yarlpavanan சொன்னது…

அருமையான பகிர்வு
தொடருங்கள்