மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 23 டிசம்பர், 2013

பாரதி நட்புக்காக : லியோனியின் சொல்லரங்கம் - 'பகுதி : ஆ'

பாரதி நட்புக்காக அமைப்பு தங்களது ஆண்டு விழாவினை அபுதாபி இண்டியன் பள்ளிக் கலையரங்கில் வெள்ளிக்கிழமை மாலை மிகச் சிறப்பாக நடத்தியது. விழாவின் முக்கிய நிகழ்வாக திண்டுக்கல் ஐ. லியோனி அவர்கள் தலைமையில் சுழலும் சொல்லரங்கம் நடைபெற்றது.

Photo: இன்று மாலை ( 20-12-2013) 5:30 மணிக்கு
அபுதாபி இந்தியன் ஸ்கூல் கலையரங்கில்
திண்டுக்கல் ஐ லியோனி மற்றும் அவர்தம் குழுவினரின் சிறப்பு  "சுழலும் சொல்லரங்கம்" நடைப்பெற உள்ளது.
அனைவரும் வருக...!!!               அனுமதி இலவசம்...!!!
(விழா அழைப்பிதழ்)

பாரதி நட்புக்காக சொல்லரங்கத்தின் முதல் பகுதியைப் படிக்க இங்கு சொடுக்குங்கள்...
-------------

சொல்லரங்கத்தின் நடுவர் நகைச்சுவைத் தென்றல் திரு.லியோனி இசையே என்ற தலைப்பில் பேச அழைத்ததும் மேடையேறிய திருமதி. அமுதா லியோனி செந்தமிழுக்கும் ரசிகர்களுக்கும் வணக்கம் சொல்லி தனது சொல்வீச்சை(!?) ஆரம்பித்தார். இசைதான் முக்கிய காரணம் என்று சொல்ல நடுவர் அவர்களே எந்த ஒன்றையும் இசையாய் சொன்னால்தான் அனைவரிடமும் போய் சேரும்.. இசையில்லாமல் சொன்னால் மக்களிடம் போய்ச் சேராது என்றவர் நமது நாட்டுப் பண்ணான 'நீராருங் கடலுடுத்த' பாடலை வசனமாகச் சொல்லச் சொன்னார். பின்னர் அதையே பாடலாகப் பாடச்சொன்னார்.  அதைப் பாடியதும் எனக்குப் பரிட்சை வைக்கிறாங்க போல... பள்ளிக்கூடத்துல படிச்சது சரியாப் பாடிட்டேன்... என்று நடுவர் சொன்னதும் அரங்கம் கைதட்டலில் அதிர்ந்தது. ஆமா எதுக்கு இப்ப பாடச் சொன்னீங்க? என்று லியோனி கேட்க, இசையாய் சொன்னால் எல்லோரும் ரசிக்கிறாங்க... அதையே நீங்க வசனமாகச் சொல்லும் போது அரங்கமே அமைதியாயிருந்தது என்றார்.

பின்னர் ஒரு கிறிஸ்தவப் பாடல், முருகன் பாடல், நாகூர் ஹனீபா பாடல் என ஒவ்வொன்றாகப் பாடச் சொன்னார். நடுவரும் பொறுமையாகப் பாடினார். இங்கே பொண்டாட்டி சொன்னாக் கேட்டுக்கணும்ன்னு ஒரு படம் வந்தது நமக்கு ஞாபகத்தில் வந்து சென்றது. பின்னர் டூயட்டிற்கு மாறினார்கள். 'ஒத்தையடிப் பாதையில ஒருத்தி மட்டும்....' பாடலின் பல்லவியை அம்மணி பாட சரணத்தை ஐயா பாடினார். அடுத்து முதல் மரியாதையில் இருந்து ஒரு காதல் பாடல் என இருவரும் தொடர்ந்து டூயட்டாகப் பாடி தலைப்பை மறந்து பயணித்தார்கள்.

இருபத்து ஐந்து நாட்கள் இந்தப் பாடல்களைப் பாடித்தான் தயாரானார்கள் போல... சின்ன வயதில் இருபத்து ஐந்து காசுக்கு பாட்டுப் புத்தகம் வாங்கி பத்து நிமிடத்தில் பாடலை மனப்பாடம் செய்துவிட்டு பாடிக்கொண்டு திரிந்தோம். இங்க இருபத்து ஐந்து நாள் தயாராகியும் ஒரு புதிய பாடலை ஆரம்பிக்கும் போது பாடலின் வரியை மறந்து 'சாரி' (அவங்க சாரின்னுதான் சொன்னாங்க... மன்னிக்கவும்ன்னு சொல்லலை) சொல்லிப் பாடினார். கடைசியாக இசைதான் சிறந்தது என தீர்ப்பை இப்போதே சொல்லிவிடுங்கள் நடுவரே என்றார். உடனே சுதாரித்த கணவர்... மன்னிக்கவும் நடுவர் 'அப்படியெல்லாம் சொல்ல முடியாது... இன்னும் மூணு பேர் பேச வேண்டியது இருக்கு... அப்புறம் எதுக்கு சொல்லரங்கம்' என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

Displaying ku0639.JPG
(திருமதி. அமுதா லியோனி)

ஒன்றுமே பேசாமல் பாடலைப்பாட இவருக்கு எதற்கு ஒரு மேடை... இருவரும் வீட்டிலேயே டூயட் பாடியிருக்கலாம். அரங்கம் நிறைந்த ரசிகர்கள் எல்லாம் இவர்களுக்கு எப்படித் தெரிந்தார்கள் என்று தெரியவில்லை. இதற்கு லியோனி வேறு ஒவராக பில்டப் செய்து அவருக்காக நானும் கஷ்டப்பட்டு தயாரானேன் என்று சொன்னார். உண்மைதான் டூயட் பாட்டில் இருவருக்குமே சரிசமமாகப் பாடும் நிலைதான் இருந்தது. எனவே இவரும் பாடலைப் பாடி தயாராகியிருப்பாருல்ல... மனைவி பாடியதை மேடையில் அமர்ந்து சிரித்துச் சிரித்து ரசித்தார். நாங்க டூயட் பாடினதை கேட்கும் வாய்ப்பு அபுதாபி தமிழ் மக்களுக்குத்தான் கிடைத்திருக்கிறது... இந்த வாய்ப்பு வேறு யாருக்கும் கிடைக்கவில்லை என்றார். இதற்கு முன்னர் இருவரும் துபாயில் பாடியதாக படித்திருக்கிறேன். 

பேசி முடித்து... மன்னிக்கவும் பாடி முடித்து இசையே முக்கியம் என்று முழங்கிவிட்டு அம்மணி அமர,  இசைதான் சிறந்தது என்பதற்காக அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை பாடல்களைப் பாடி என்னையும் பாட வைத்து... பாடம இருக்க முடியாதுல்ல அப்புறம் வீட்டுல எப்படி இருக்கமுடியும் எனச் சொல்லி அருமையான கருத்துக்களைச் சொன்னதற்காக அவரைப் பாராட்டினார். 

எதற்காக இந்த அம்மையாரை முதலில் பேச அழைத்தார் என்று தெரியவில்லை. சொல்லரங்கத்தின் சுவராஸ்யத்தைக் குறைத்தாரே ஒழிய... அதன் வேகத்தை அதிகரிக்கச் செய்யும் திறன் அவரிடம் இல்லை. சென்ற முறை பார்வையாளராக வந்தவர் இந்த முறை பேச்சாளராக வந்திருந்தார். ஐயா நாலை மூணாக்கி வீட்டுக்கு ரெண்டு பங்காக்கிட்டாரு போல... சரி அது நமக்கெதுக்கு... மொத்தத்தில் பார்க்கப் போனால் இசை கடைசியில் வந்திருக்கலாம் என்றே எல்லார் மனதிலும் தோன்றியது. ஒருவேளை இவர் இசைக்கவே வந்திருக்க வேண்டாம் என அமைப்பினருக்குத் தோன்றியிருக்கலாம். 

கதையே என்று பேச குமரி ஆதவனை அழைத்தார். இவர் கன்னியாகுமரியில் இருந்து வந்திருக்கிறார். மிகச் சிறந்த எழுத்தாளர்... இங்கு வந்தது முதல் நடந்தவைகளை எல்லாம் சேகரித்து வைத்திருக்கிறார். ஊருக்குப் போனதும் புத்தகமாகக் கொண்டு வந்துவிடுவார் என்றார். குமரி மாவட்டப் பேச்சே மிக அருமையாக இருக்கும்... அவரு பெரிய எழுத்தாளர் என்பது அவரது தலையைப் பார்த்தாலே தெரியும். போகஸ் லைட் அவரு தலையில மட்டும் மின்னுது பாருங்க என்றார். 'ஏலே இங்க வாலே.... சும்மா ஒரு சமட்டுச் சமட்டுலே...' என்று சொல்வார்கள். அவ்வளவு அழகாக இருக்கும் என்று சொன்னார்.

குமரி ஆதவன் குமரிக் கடலில் ஆர்ப்பரிக்கும் அலையென ஆர்ப்பாட்டமாக ஆரம்பித்தார். ஒரு படத்தோட வெற்றிக்கு முக்கியக் காரணம் கதையே என்பதை விளக்கங்களுடன் நகைச்சுவையாய் சொன்னார். எத்தனை பாடல் இருந்தாலும் இசை இருந்தாலும் கதை இல்லை என்றால் அந்தப் படம் தியேட்டரைவிட்டே ஓடிவிடும் என்றார். அக்கா அவர்கள் இசையால்தான் படம் வெற்றி அடைகிறது என்றார் எங்கே அறுபத்து ஐந்து பாட்டை மட்டும் வைத்து ஒரு படத்தை எடுத்துப் பாருங்கள்... இல்லை ஒரு அம்பது பாட்டை வைத்து எடுத்துப் பாருங்கள் படம் வெற்றி பெறுகிறதா என்று பார்ப்போம்.

இடையில் புகுந்த லியோனி நினைத்தாலே இனிக்கும் படத்தில் உள்ள பாடல்களைப் பற்றிச் சொல்லி ஒவ்வொரு பாடலையும் பாடி பாடல்களுக்காகவே வந்த இந்தப்படம் மிகச் சிறந்த இயக்குநரின் படம் ஆனால் வெற்றி பெற்றதா இல்லையே என்றார். நினைத்தாலே இனிக்கும் படம் பாடல்களுக்காகவே மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம்தானே... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

வரும்போது இங்கிலீஷ் விங்கிலீஷ்ன்னு ஒரு படம் பார்த்தேன். அமெரிக்கா போய் ஆங்கிலம் தெரியாமல் கஷ்டப்பட்டு நாலே வாரத்தில் ஆங்கிலம் கற்று சிறக்கும் ஒரு பெண்ணைப் பற்றிய கதை. அருமையான படம்... அதைப் பார்த்ததும் என் மனைவியை நினைத்துக் கொண்டேன். அவள் தமிழ்... நான் கணிதம்... அவளுக்கு ஆங்கிலமும் வராது... கணக்கும் வராது... உனக்கு ஒண்ணும் வராது என்று மட்டம் தட்டியே வைத்திருந்தேன். ஆனால் அந்தப் படம் பார்த்ததுக்குப் பிறகு அவளையும் ஆங்கிலம் படிக்க வைத்து அதில் புலமை அடைய வைக்க வேண்டும். ஊருக்குப் போனதும் இனிமேல் உன்னிடம் இப்படி நடக்க மாட்டேன் என்று சொல்லி அவளை படிக்க வைக்கணும் என்றார்.

Displaying ku 33.JPG
(திரு. குமரி ஆதவன்)

சோறு, குழம்பு என்று பேச லியோனி அவர்கள் ஏன்யா தலைப்பையே மாற்றிவிட்டாய்... இசையை சோறு, இயக்குநரை கூட்டு... என வரிசையாகச் சொல்லி இப்படித் தலைப்பை மாற்றி தீர்ப்புச் சொல்ல வைத்துவிடுவாய் போல என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது ஆதவன் அவர்கள் தண்ணீர் குடிக்க, என்னதான் சாப்பிட்டாலும் எது முக்கியம்ன்னு அவருக்குத் தெரிஞ்சிருக்கும் தீர்ப்பு தண்ணிதான்யா என்றதும் அரங்கம் சிரிப்பில் அதிர்ந்தது.

கதைக்காக ஓடிய படங்களில் சிலவற்றைச் சொல்லி படத்திற்கான கதை இருந்தால் நடிக்கும் நடிகனோ, இயக்குநரோ அல்லது இசையோ முக்கியத் தேவை கிடையாது என்று சொல்லி தன் பேச்சை முடித்தார்.

இவர் பேசியதற்கு கருத்துச் சொல்லும் விதமாக அந்தக் காலத்துல எல்லாப் படத்துலயும் பாட்டு பாட்டு பாட்டுத்தான்... எல்லாம் எட்டுக்கட்டையில்தான் இருக்கும். இசையை ரசிக்கலாம். வீட்ல அம்மாக்கிட்ட போயி 'அம்மா எனக்குக் கொஞ்சம் சோறு போடுங்கன்னு' பாட்டாப் பாடி கேட்க முடியுமா. அப்படிக் கேட்டா 'எம்மவன் அபுதாபிக்கு நல்லாத்தானே போனான்... இப்படி வந்திருக்கானேன்னு எங்கம்மா பயந்துரும் என்றார்.  ஆதவன் அவர்கள் மீண்டும் தண்ணீர் குடிக்க இப்பவும் தண்ணி குடிக்கிறார்... எனவே சாப்பாட்டுக்கு முக்கியம் தண்ணிங்கிறதை உணர்ந்திருப்பார் என்றவர் இயக்குநரே என்று பேச திரு. விஜயகுமார் அவர்களைப் பேச அழைத்தார்.

சொல்லரங்கத்தின் ஆரம்பத்தில் லியோனி பேசும்போது மேடையில் இருந்த விளக்கு தவிர அரங்கத்தின் உள் இருந்த மற்ற விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தது. கொஞ்ச நேரத்திற்குப் பிறகு விளக்குகள் அணைத்தும் உயிர்ப்பிக்கப்பட 'அப்பா இப்பத்தான் எனக்கு மூச்சு வந்திருக்கு... எம்புட்டு நேரந்தான் இருட்டைப் பார்த்து பேசுறது. சிரிக்கிறாங்களா இல்லையான்னு தெரியாம... இப்ப முகம் பார்த்து பேசும் போது நமக்கும் சந்தோஷமா இருக்கும்ல... என்றார்.

Displaying su 0628.JPG
(நடனமாடிய குழந்தைகள்)

பதிவின் நீளம் கருதி இத்துடன் 'பகுதி-ஆ' முடிகிறது.  திரு. விஜயகுமாரின் பேச்சு எப்படியிருந்தது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போமே... 

படங்கள் கொடுத்த எனது அண்ணன் திரு.சுபஹான் அவர்களுக்கு நன்றி.

-நாளை தொடரும்
-'பரிவை' சே.குமார்.

9 எண்ணங்கள்:

இராய செல்லப்பா சொன்னது…

லியோனியின் பேச்சு, சமயங்களில் நாகரிகத்தின் எல்லையிலிருந்து இறங்கித்தான் போய்விடுகிறது. வெளிநாடுகளில் பேசும்போதாவது நாகரிகமாக அவர் பேசவேண்டாமா?

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

லியோனியின் மனைவியின் பேச்சினை நான் கேட்டிருக்கிறேன். மனப்பாடம் செய்து ஒப்பிப்பதுபோல் இருக்கும். லியோனியை பொறுத்த வரை மனைவிக்க மரியாதை. கேட்பவர்களுக்குத்தான் தெரியும் உண்மை நிலை
த.ம.2

ஸ்ரீராம். சொன்னது…

ஜோக்ஸ் ஏதாவது இருந்தால் பகிருங்களேன்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சில சமயங்களில் லியோனியும் எல்லை மீறி விடுகிறார், ஆர்வக்கோளாரா இருக்குமோ ?

எஸ்.எம். பாரதி சங்கர் சொன்னது…

அன்புள்ள நண்பர் திரு குமார் அவர்களுக்கு வணக்கம்!
பாரதி நட்புக்காக அமைப்பு நடத்தும் அத்தனை நிகழ்ச்சிகளையும் நேரில் காண்பது போல் விமர்சனம் செய்யும் உங்கள் திறமைக்கும், நினைவாற்றலுக்கும் எனது தலை தாழ்ந்த வணக்கம்.
உங்கள் பதிவுகளில் சிறந்த நேர்மை தெரிகிறது. மொத்த நிகழ்வுகளையும் எப்படி நீங்கள் நினைவு வைத்து எழுதுகிறீர்கள் என்பதை நினைத்துப் பார்க்கும் போது எனக்கு “அளவற்கரிய வியப்பு” தோன்றுகிறது.
“உங்க புண்ணியத்துல நம்ம பிளாக்குல வந்து படிக்க வையுங்களேன்.... மொத்தமாக காபி பண்ணவும் என்னோட பிளாக் இருக்கதே தெரியாமப் போகப் போகுது....”

உங்களின் ஆதங்கம் நூற்றுக்கு நூறு உண்மை. உங்கள் முடிவை நான் வரவேற்கிறேன்.
உங்கள் விமர்சனம் படித்தேன், அது ஒரு படித் தேன்,
நட்புடன்
எஸ். எம். பாரதிசங்கர்


எஸ்.எம். பாரதி சங்கர் சொன்னது…

அன்புள்ள நண்பர் திரு குமார் அவர்களுக்கு வணக்கம்!
பாரதி நட்புக்காக அமைப்பு நடத்தும் அத்தனை நிகழ்ச்சிகளையும் நேரில் காண்பது போல் விமர்சனம் செய்யும் உங்கள் திறமைக்கும், நினைவாற்றலுக்கும் எனது தலை தாழ்ந்த வணக்கம்.
உங்கள் பதிவுகளில் சிறந்த நேர்மை தெரிகிறது. மொத்த நிகழ்வுகளையும் எப்படி நீங்கள் நினைவு வைத்து எழுதுகிறீர்கள் என்பதை நினைத்துப் பார்க்கும் போது எனக்கு “அளவற்கரிய வியப்பு” தோன்றுகிறது.
“உங்க புண்ணியத்துல நம்ம பிளாக்குல வந்து படிக்க வையுங்களேன்.... மொத்தமாக காபி பண்ணவும் என்னோட பிளாக் இருக்கதே தெரியாமப் போகப் போகுது....”

உங்களின் ஆதங்கம் நூற்றுக்கு நூறு உண்மை. உங்கள் முடிவை நான் வரவேற்கிறேன்.
பேச்சாளர்களை அழைக்கும் பொழுது என் திணறலுக்குக் காரணம் முதலில் ஒரு வரிசையில் அழைக்கச் சொன்னார்கள், மேடையில் ஏறும் முன்பு அந்த வரிசையை மாற்றச் சொன்னார்கள். மேடையில் ஏறிகொண்டிருக்கும் போது திருமதி லியோனியைத் தான் முதலில் அழைக்க வேண்டும் என்று மாற்றினார்கள். என் தடுமாற்றத்தை நான் நியாயப்படுத்தவில்லை. .
உங்கள் விமர்சனம் படித்தேன், அது ஒரு படித் தேன்,
நட்புடன்
எஸ். எம். பாரதிசங்கர்

Unknown சொன்னது…

சமயத்தில் லியோனி அவர்கள் இப்படி ஏதாவது ஏடா,கூடமாக செய்வது வழமைதான்.இப்போது,மனைவியையும் மேடையில் ஏற்றி கா........ பார்க்கிறார்!

sbr சொன்னது…

rombo neelamaana pathivu...konjam surukkama solla kathukkonga bossu

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல விமர்சனம்.

லியோனி பாட்டு மன்றம் பல சமயங்களில் கேட்கப் பிடிப்பதில்லை....