மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

கொள்ளையர் பிடியில் பழனியாண்டவர்....


ழனியில் அடாவடியாக பணம் பறித்ததாக ஒரு சகோதரி முகநூலில் சொல்லியிருந்ததை கே.ஆர்.பி.செந்தில் அண்ணன் பகிர்ந்திருந்தார். பழனியில் மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார்கள் என்பது உண்மையே...  ஆனால் இவர்கள் எதிர்க்காமல் எதற்காக கிட்டத்தட்ட 4000 ரூபாயைக் கொடுத்துவிட்டு வந்தார்கள் என்று தெரியவில்லை. இறைவனைத் தரிசிக்கச் சென்று விட்டு ரவுடிகளின் பிடியில் சிக்கி இருக்கும் காசை இழந்து விட்டு வருபவர்கள் அந்தச் சகோதரி போல் நிறையப் பேர் உண்டு. நாங்கள் பழனிக்கு நடந்து செல்லும் போது கீழே மாலை வாங்கி மேலே சென்றால் மலையில் ஏறியவுடன் கடைசிப் படியில் நிற்கும் ஐயர் மாலையை வாங்கிக் கொள்வார். அந்த மாலை மீண்டும் கடைக்கு வந்துவிடும் இது கண்கூடாகப் பார்த்த காட்சி. இப்படி ஏமாற்றிப் பிழைப்பவர்களின் கூடாரமாக ஆகிவிட்டது அழகன் முருகனின் திருத்தலம் என்பது எல்லாரும் அறிந்ததே.

ஒரு முறை என் மனைவியின் மாமா குடும்பத்துடன் பழனி சென்றார். பேருந்தில் போய் இறங்கியதும் குதிரை வண்டியில் போக ஆசைப்பட்டு ஒரு வண்டியில் ஏறியிருக்கிறார். வாடகை பார்த்துக் கொடுங்க... கூடவா கேட்கப் போறேன் என்று அந்த வயதான மனிதர் சொல்லியிருக்கிறார். இவரும் நம்பி அவருடன் போக நன்றாக பேசியபடி வந்திருக்கிறார். அப்போது அவர் நீங்க எதாவது ஒரு கடையில அர்ச்சனைச் சாமான் வாங்கப் போனீங்கன்னா ஏமாத்திருவானுங்க... அதனால நமக்குத் தெரிந்த கடையில சொல்லி விடுறேன்னு சொல்லியிருக்காரு. இவரும் சரின்னு சொல்லிட்டாரு.

அந்தக் கடை வாசல்ல வண்டியை நிறுத்தி இவர்களை இறக்கி விட்டிருக்கிறார். எவ்வளவு பணம் என்றதும் இது நமக்குத் தெரிந்த கடைதான் அங்க கொடுத்துடுங்க அப்புறம் வாங்கிக்கிறேன்னு சொல்லியிருக்கிறார். இவருக்கு அப்பவே இது உள்ளடி வேலையா இருக்குமோன்னு சந்தேகம் வந்திருக்கு. கடையில் சோகவும் அந்தச் சகோதரி சொன்னதும் மாதிரி 'சார் செருப்பெல்லாம் இங்க விடுங்க... லக்கேஜை எல்லாம் அப்படி வையுங்க' அப்படின்னு ஒரே உபச்சாரமா இருந்ததாம்.

அப்புறம் அர்ச்சனைச் சாமான், அபிஷேகப் பால் என எல்லாம் வைத்து மாலை பக்கத்துக் கடையில் இருந்து அவர்களே வாங்கி வந்து வைத்து 'இந்தாங்க சார்... போய் நல்லா சாமி தரிசனம் பண்ணிட்டு வாங்க'ன்னு சொல்லியிருக்காங்க. இவரும் அங்கயும் எவ்வளவு பணம்? என்று கேட்டிருக்கிறார். என்ன சார் இப்படி கேட்டுட்டிங்க... பணத்தைக் கொண்டுக்கிட்டு ஓடவா போறீங்க... மலை ஏறி சாமி கும்பிட்டு வாங்க... என்று சொல்ல இவருக்கு சந்தேகம் அதிகமாயிருக்கு. 'அலோ எவ்வளவு பணம்ன்னு சொல்லுங்க?' என்று இவர் உரக்கச் கேட்டிருக்கிறார். உடனே நாலைந்து பேர் என்ன... என்ன.. அப்படின்னு வந்திருக்காங்க.. இவருக்கு சரி இவனுக பணத்துக்கு அடிப்போடுறானுங்கன்னு நினைச்சு 'எம்புட்டுன்னு சொல்லுங்கங்க...' என்று குரலை உயர்த்தியிருக்கிறார். 

இவர் ஆள் வாட்டசாட்டமாக போலீஸ் போல் இருப்பார். அவரது உடல்வாகும் உயர்த்திய குரலும் அவர்களுக்கு சற்று பயத்தைக் கொடுத்திருக்கிறது. எதாவது அரசாங்க உத்தியோகத்துல இருப்பார் போல என்று நினைத்து எல்லாத்துக்கும் சேர்த்து 1500 ரூபாய் கொடுங்க சார் என்று சொல்லியிருக்கிறார்கள். இவர் எதுக்கு 1500, ஒவ்வொன்னுக்கும் என்ன விலை என்று விலாவாரியாகக் கேட்க, சார் பைனல் 1500தான் கொடுத்துட்டுப் போங்க அப்படிங்கவும் எனக்கு எதுவும் வேண்டாம் வா போலீஸ் ஸ்டேசன் போவமா? என்று ஒருவனை கேட்கவும் அவர்கள் சார் குதிரை வண்டிக்கும் அர்ச்சனைக்கும் 300 ரூபாயைக் கொடுங்க என்றதும் அவரது மனைவி கொடுத்துட்டு வாங்க என்று சொல்லியிருக்கிறார். 300 ரூபாயோட போச்சு என்று மலையேறி முருகனைத் தரிசித்து விட்டு திரும்பியிருக்கிறார்.

இன்னுமொரு நிகழ்வு என்னுடன் பணி செய்யும் கேரளா நண்பன் பழனிக்கு நண்பர்களுடன் வந்திருக்கிறான். காரை நிப்பாட்டியதும் உங்களுக்கு கோயில் மேலே கூட்டிப் போய் தரிசனம் முடிக்கிற வரைக்கும் நான் உதவி செய்கிறேன் என்று சொல்லி ஒருவர் வர, இவர்களும் சரி என்று அவரைக் கூட்டிச் சென்றிருக்கிறார்கள். சாமி கும்பிட்டு வந்ததும் காருக்கு அருகில் வர, இவர்களுடன் வந்த நபருடன் நான்கைந்து பேர் கூட, இவர்கள் அந்த நபரிடம் பேசிய இருநூறு ரூபாயை எடுத்துக் கொடுக்க, எனக்கு 500, கார் பார்க் பண்ணினதுக்கு 300, காரில் முருகர் படம் வரைந்ததற்கு 500, உங்களுக்கு உதவிய இவங்களுக்கு 300 மொத்தம் 1600 வருது. 1500 கொடுங்க என்று சொல்லியிருக்கிறார்.

என்னங்க அநியாயமா இருக்கு, உங்ககிட்ட பேசினது 200தானே என்று சொல்ல, இப்ப கொடுக்குறியா இல்லையா என்று ரவுடித்தனத்துக்கு மாறியிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் இளைஞர்களாக இருந்ததால் அந்த ஆளின் கையில் 500 ரூபாயைக் கொடுத்துவிட்டு இருவர் பேச, ஒருவர் வண்டியை எடுக்க அவர்களும் பேசியபடி காரில் ஏறியிருக்கிறார்கள். அங்கிருந்து தப்பி வந்தது பெரிதல்ல...  அப்படியே மதுரை போயிருக்கிறார்கள்... அவர்கள் பேசுவதை வைத்து ஒரு அர்ச்சனை 250 ரூபாய் என மிளகாய் அரைத்திருக்கிறார்கள்.

அவன்  இங்கு வந்ததும் தமிழ்நாட்டுல பழனி அம்பலத்துக்குப் போகவே கூடாது... என்ன ஒரு கள்ளத்தனம் பண்ணுறாங்க... எல்லாத்துலயும் கள்ளத்தனம்... எங்க நாட்டுல அம்பலத்துல கொள்ளை அடிக்க மாட்டாங்க... மீனாஷி அம்பலத்துல ஒரு அர்ச்சனை அதுவும் அர்ச்சனைத் தட்டு இல்லாமல் 250 ரூபாய் வாங்கிட்டாங்கன்னு அவன் இங்க வந்து சொன்ன போது நமக்குத்தான் வெட்கமாக இருந்தது.

பழனியில் நடக்கும் இத்தகைய அயோக்கியத்தனத்துக்கு அறங்காவல் குழு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது. இல்லை அறங்காவல் குழுவுக்கும் இவர்களுடன் தொடர்பு இருக்குமா? தமிழகத்தின் மிக முக்கியமான கோவிலான பழனியில் நடக்கும் இத்தகைய பகற்கொள்ளையை அரசு தடுக்குமா... இல்லை இந்தக் கொள்ளை தொடருமா?


பெரும்பாலான தமிழக கோயில்களில் இது போன்ற பகல் கொள்ளை நடந்தாலும் பிள்ளையார்பட்டியில் மட்டும் இப்படிப்பட்ட பகல் கொள்ளைகள் இல்லாமல்தான் இருக்கிறது. சாமியை அருகில் பார்க்க 50,100 கொடு என்று சொல்லும் தமிழக கோயில்களில் இருந்து இன்னும் பிள்ளையார்பட்டி விலகியே இருக்கிறது என்பது பெருமையான விஷயம்.

-'பரிவை' சே.குமார்.

20 எண்ணங்கள்:

செங்கோவி சொன்னது…

முருகனின் சந்நிதானத்தில் இப்படி நடப்பதைப் பார்க்க கஷ்டமாக உள்ளது. நானும் நண்பரும் சென்றபோதும், இப்படித்தான் ரேட்டைச் சொல்லாமலேயே போய்ட்டு வாங்க என்று சொன்னார்கள். நாங்கள் ஆணியே புடுங்க வேண்டாம், வச்சிக்கோ என்று வெளியே வந்துவிட்டோம். பின்னர் கோயிலுக்கு பக்கத்தில் உள்ள கடையில் முதலிலேயே காசை கொடுத்துவிட்டு உள்ளே சென்றோம்.

செங்கோவி சொன்னது…

பிள்ளையார்பட்டி அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லை என்றே ஞாபகம். அதனால் தானோ என்னவோ..

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க செங்கோவி...
பிள்ளையார்பட்டி நகரத்தார் (செட்டியார்கள்) வசம் இருக்கிறது.
ஆனால் பழனியில் நடக்கும் இந்தப் பகல்கொள்ளை அரசுக்கோ அறங்காவல் குழுவுக்கோ தெரியாமலா இருக்கும்?

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Unknown சொன்னது…

கோவிலிலேயே இப்படி என்றால்,அப்பப்பா இனி ஆன்மீக சுற்றுலா என்று தமிழ் நாட்டுக்கே வர முடியாது போலிருக்கிறதே?தமிழக அரசுக்கு இது தெரிந்திருக்கும்.ஓ.........அப்படியா?பார்க்கிறோம் என்பார்கள்!

நம்பள்கி சொன்னது…

உண்மை! நூற்றுக்கு நூறு உண்மை. ஒரு முறை எங்கள் சொந்த்ங்ககுள் எல்லாம் வைதீஸ்வரன் கோவில் சென்றோம்; ஆறு தட்டு அர்ச்சனை! தட்டுகள் திரும்பி வரும் போது ஒரு தேங்காய் மூடி தான் தட்டுடன் திருப்பி வரும். மற்றொன்றை ஐயர் எடுத்துக்கொள்வார். எனக்கு பார்க்கும் பொது ஏதோ சந்தேகம். அதில் உள்ள மூடிகளை ஓட்டிப் பார்க்கும் போது இரண்டு அர்ச்சனை தட்டில் வந்த இரு தேங்காய் மூடிகளும் ஒரு தேங்காயுடையது. அப்ப எல்லா தங்கையும் உடைப்பது இல்லை என்று தானே அர்த்தம்?

என் அம்மாவிடம் (இல்லை எந்த ஆத்திகர்கள் கிட்டே கேட்டாலும்) யாரோ ஒன்று இரண்டு பேர் தப்பு செய்தா எல்லோரும் அப்படியா என்ற ஒரே டெம்ப்ளேட் பதில்)

நம்பள்கி சொன்னது…

+1
இதை ஒரு பதிவாகவே நான் போட்டுளேன்;
இதுல தாமாஷ்! ஒரு வாசகர்...என்னைத் திட்டினார். கோவிலுக்கு போனா சாமி கும்பிடமா தேங்காய் மூடி ஆராய்ச்சி பண்ணுகிறார் என்று. வைதீஸ்வரன் கோவில் ஐயர்களில் அவர்கள் சொந்தங்கள் இருக்கோ என்னவோ?

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

சென்ற ஆடியில் தமிழகம் வந்தேன், எங்கள் உறவுகள் இலங்கையிலிருந்து வந்திருந்தார்கள். மொத்தம் 20 கோவில்
சென்றோம். பிள்ளையார் பட்டி தவிர எங்குமே காசுபறிப்பில் குறியாக இருந்தார்கள். பிள்ளையார் பட்டி அர்ச்சகர் எங்களுடன் வந்த வயது முதிர்ந்தோரை உள்ளே வந்து தரிசனம் செய்யும் படி கேட்டபோதும், ஏனைய கோவில்களில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் தவிர்த்து விட்டோம்.
அத்தனை கோவிலிலும் எங்களை "மலேசியாப் பாட்டி" வருது என அடையாளப்படுத்திக் காசு கறப்பதிலே
கண்ணாக இருந்தார்கள். எங்கள் குழுவில் 5 முதியோர் 5 குழந்தைகள்
அதுபற்றிய எந்த அனுதாபமும் இல்லை, காசு,காசு,காசு.
திருச்செந்தூரில் கோவில் கடையில் அர்சனைத் தட்டு நானே வாங்கினேன். ஒவ்வொரு தட்டுக்கும் பற்றுச் சீட்டு பெற வேண்டுமென்ற போது அவற்றையும் பெற்று , இத்துடன் ஏதாவது நாம் கொடுக்க வேண்டுமா? எனக் கேட்டபோது , கட்டாயமில்லை. விரும்பினால் உங்கள் விருப்பம் போல் பூசகருக்குக் கொடுக்கலாம், என்றார்கள்.
அர்சனை செய்யத் தட்டுகளைக் கொடுத்ததுமே 5 தட்டுக்கும் 500 என்றார்கள். நான் மறுத்த போது 250 என்றார்கள். கட்டாயம் உங்களுக்கு கொடுக்கத் தேவையில்லை எனக் கூறினார்களே என்ற போது, காசு இல்லாவிட்டால் அர்ச்சனை இல்லை. என்றார்கள். பின் நாம் திரும்பி வரும் போது ஒரு அர்ச்சகர் என்ன? என விசாரித்து தான் செய்து தருவதாக தருவதைத் தாருங்கள் என்றார்.தட்டுகளைக் கொண்டு சென்று விட்டு அடுப்படியில் தான் தேங்காயை உடைத்தாரோ தெரியாது.
காசு கேட்டார். இப்போ நாங்களும் மிக வெறுத்து விட்டோம். 50 ரூபா கொடுத்தோம். அது போதாது எனச் சத்தமிட்டார்.
நாம் வந்து விட்டோம்.
இனிமேல் தமிழ்நாட்டில்கோவில் என்றாலே பயப்படுமளவுக்கு ஆக்கிவிட்டார்கள்.
தமிழகத்துக்கு கோவிகளுக்குப் போனால் கோவணத்துடன் போவதே மேல்.
அந்த அளவு எத்தர்களின் கூடாரமாகிவிட்டது. அற்புதமான தமிழரின் பண்பாட்டு அடையாளங்களை பார்த்து அனுபவிக்க விடுவாரில்லை.
தமிழகம் எங்கும் எங்கள் பேச்சின் மூலம் நாம் வெளிநாட்டவர் என்பதை உணர்ந்து காசுபறிப்பதிலும் ஏமாற்றுவதிலும் கண்ணாகவே இருந்தது.எனக்கு மிக ஏமாற்றத்தைத் தந்தது.
விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலர் நாயமாக நடந்தார்கள்.
அரசு கோவில்களில் ஒழுங்கீனங்களை அனுமதிக்கக் கூடாது.

ஸ்ரீராம். சொன்னது…

முன்பெல்லாம் வெளிநாட்டுக்காரங்களைத்தான் ஏமாத்திகிட்டு இருப்பாங்க... இப்ப உள்நாட்டுக்காரங்களையே ஏமாத்தறாங்களா... கெடுவான் கேடு நினைப்பான்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இந்தியா முழுவதுமே இப்பிரச்சனை உண்டு குமார்.

எந்த புனிதத் தலமாக இருந்தாலும் இப்படி ஏமாற்றுவதற்கென்றே ஒரு கும்பல் இருக்கிறது.

துரை செல்வராஜூ சொன்னது…

மிகவும் வருத்தமான தகவல் தான்!.. இவர்கள் திருந்த மாட்டார்கள். இவர்களை பழனி முருகன் அன்றி யாராலும் திருத்தவும் முடியாது.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நாளைக்கு நாள் அநியாங்கள் அதிகமாகிக் கொண்டு தான் வருகிறது...

முருகா...!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப் போட்டி... விளக்கம் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Pongal-Special-Article-Contest.html

Menaga Sathia சொன்னது…

பிள்ளையார் பட்டி கோயிலை நினைக்கும்போது பெருமையா இருக்கு..பழனி முருகன் தான் இந்த கொள்ளையை தடுத்து நிறுத்தனும்..

Unknown சொன்னது…

எப்படி எல்லாம் திருடுறானுங்க என்னத் சொல்றது போங்க

Unknown சொன்னது…

பழனிக்கு போனா மொட்டை போடுவார்கள் என்பது சரியாகத்தான் இருக்கிறது !
த ம +1

தனிமரம் சொன்னது…

பல இடங்களில் இப்படித்தான் ஐயா ! ஆன்மீகம் என்றாலே அதிகம் செலவாகும் நிலையை தமிழகத்தில் தொடர்ந்து அவதானித்து வருகின்றேன் என்று திருந்துவார்களோ?

ஜீவன் சுப்பு சொன்னது…

பிள்ளையார்பட்டி எங்கள் குலதெய்வம் என்பதில் பெருமை . மதியம் இலவசமாக அறக்கட்டளையிலிருந்து அன்னதானம் கொடுக்கிறார்கள் . திருப்பதியைப்போல தமிழ்நாட்டின் பணக்காரச்சாமிகளில் பிள்ளையார்பட்டியும் ஒன்று .But அங்கேயும் சிற்சில தொந்தரவுகள் இருக்கிறது .


எந்தக் கோவிலுக்குப் போனாலும் நான் தனியாக போகும்போது அர்ச்சனை செய்வதும் கிடையாது , அர்ச்சனை வாங்குவதும் கிடையாது :)

என்னளவில் கோவிலுக்குப் போவது என்பது அனுபவம் ... !


டவுட் - உண்டியல் இருந்தா அது அரசாங்கத்திற்கு சொந்தமான கோவிலென்று கேள்வி ... உண்மையா ?

நம்பள்கி சொன்னது…

[[[ஜீவன் சுப்பு said...
டவுட் - உண்டியல் இருந்தா அது அரசாங்கத்திற்கு சொந்தமான கோவிலென்று கேள்வி ... உண்மையா]]

உண்மை! உண்மை! திருநெல்வேலி சென்ற போது, அங்குள்ள ஒரு கோவிலில் (பெயர் மறந்து விட்டது; நவ திருப்தியில் ஒன்றா என்ற நினைவும் இல்லை))

இங்கு தட்சணை, உண்டியல் கிடையாது; யாரும் யாருக்கும் பணம் தட்சணையாக கொடுக்கக் கூடாது என்ற போர்டு வேற! தட்சணை பணம் கொடுத்தாலும் ஐயர்கள் வாங்க மாட்டார்கள்! அவ்வளவு நெறி!

கேட்டால், அந்த கோவிலுக்கு நூற்றுக் கணக்கில் நஞ்சை புஞ்சை நிலங்கள் உள்ளதாம். அதான் அவ்வளவு நெறி!


பத்து பைசா உண்டியல் பணத்திற்கு ஆசைபட்டால், நிலமும் போய்விடும் என்ற உயர்ந்த கொள்கை!

Yazhini சொன்னது…

படிக்கவே வேதனையாக உள்ளது. பணம் பிடுங்கி கும்பலிடம் உஷாராக இருக்க வேண்டும் என்ற படிப்பினையை எடுத்துச் சொல்கிற இந்த பதிவை எழுதியமைக்கு நன்றிகள்.

நாம் அனைவரும் இத்தகைய அட்டூழியங்களை எதிர்க்க வேண்டும். அப்போது தான் இம்மாதிரியான கேடு கெட்ட பிழைப்பை நடத்துபவர்கள் திருந்துவார்கள்.

தெம்மாங்குப் பாட்டு....!! சொன்னது…

Happening every temple.. we have to be careful..!!

But shameless people not changing,..Sad