மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 24 மார்ச், 2011

மாமச்சீரு...




"இங்க பாருங்க நான் சொல்றத சொல்லிப்புட்டே... இதுக்கு மேலயும் அக்கா... நொக்கான்னா நல்லாருக்காது பாத்துக்கங்க..."

"ஏண்டி இப்புடி அத்தெரிஞ்சு பேசுறே... நம்ம குடும்பத்துல நடக்கிற நல்ல விசயம்... அக்காவுக்கு நம்மளை விட்டா யாரு இருக்கா..?"

"போதும் போதும் ஒக்காவுக்கு செஞ்சது... நாம கஷ்டப்படுறப்போ எவ வந்து பாத்தா... நல்லா ஒக்கா போட்டு ஆட்டுறாக..."

"இங்க பாரு... நமக்கு அவுக பாத்தாக பாக்கலை... அத இப்பவா பாக்குறது... முத முதல்ல புள்ளைக்கு கல்யாணம் வைக்கிது... தாய்மாமன் முறைக்கு நாம செய்யிற மொறைய செஞ்சுதானே ஆகணும்..."

"நா... புள்ளயளை வச்சிக்கிட்டு கஷ்டப்பட்டப்ப இந்தா வச்சுக்கண்ணு ஒரு பத்து ரூபா கொடுக்க நாதியில்ல... நாதியத்த பய குடும்பத்துல... இதுல மாமச்சீரூ ஏத்தணுமாம் மாமச்சீரு..."

"அப்ப அவங்க என்ன கோட்டையிலயா இருந்தாக... அவங்களும் கஷ்டப்பட்டுக்கிட்டுதான் இருந்தாக... ஏண்டி பழசையெல்லாம் பேசிக்கிட்டு... மாமச்சீரு செய்யத்தான் வேணும்... உன் பேச்சையெல்லாம் கேக்கமுடியாது..."

"ஆமா... எப்பவும் உங்க குடும்பந்தான் உங்களுக்கு பெருசு... எம் பேச்சை கேட்டிருந்தாத்தான் இன்னும் நல்லாயிருந்திருப்பமே..."

"ஏய்...தேவையில்லாம பேசாம உன் வேலை என்னவோ அதைப்பாரு... அதை விட்டுட்டு வாய்க்கு வந்தபடி பேசினே... மவளே செவுலு பிஞ்சு போயிரும்..."

"அத ஒண்ணுந்தான் இதுவரைக்கும் செய்யலே... அதையும் செஞ்சிருய்யா... உன்ன கட்டிக்கிட்டு நா... என்ன சொகத்தை கண்டேன்... எம் பேச்சுக்கு எப்பவும் மருவாதியில்ல... எங்கப்பனை சொல்லணும்.... நல்லவன்னு சொல்லி நாதியத்துப் போனவன் வீட்டுல கட்டி வச்சுட்டு அவரு பாட்டுக்கு மசுரு போச்சுன்னு போயி சேந்துட்டாரு... நானுல்ல அவதிப்படுறேன்..." என்று இருவது வருசத்துக்கு முன்னர் கல்யாணம் பண்ணி வைத்து வாழ்ந்து மறைந்த அப்பனையும் சேர்த்து திட்டினாள்.

"அம்மா... அம்மோவ்..."

"இருடா வெளங்காதவனுக்கு பொறந்தவனே..."

"அம்மா... இப்ப சாப்பாடு போட வாரியா... நாங் கெளம்பவா... எனக்கு காலேசுக்கு நேரமாச்சும்மா..."

"இரு... வாரேன்... என்ன எக்கேடு கெட்டாலும் அப்பனுக்கும் புள்ளைக்கும் வடிச்சுக் கொட்டத்தானே நா... இருக்கேன்."

"இப்ப என்னம்மா... அப்பா மேல உள்ள கோபத்தை எங்கிட்ட காட்டுறியா... ஒஞ்சோறும் வேணாம்... ஒண்ணும் வேணாம்... சும்மா கத்தாதே..." என்று பதிலுக்கு அவனும் கத்தியபடி சைக்கிளை எடுக்க...

"டேய் வெறுவாக்கெட்ட பயலே... அப்பேம் புத்திதானே உனக்கும் இருக்கும்... போ... போ... ராத்திரிக்கு வா... புளித்தடவி வைக்கிறேன்..." என்று அவள் கத்திக் கொண்டிருக்கும் போதே இதுக்கு மேல இங்க இருந்தா மறுபடிக்கும் வேதாளம் நம்ம மேல தாவும் என்ற நினைப்பில் டீக்கடைப் பக்கமாக நடக்க ஆரம்பித்தார்.

"அவுகதான் காலேசுக்குப் போறாக... நீங்க எங்க போறீக?" என்றவளின் கேள்விக்கு பதில் சொல்லாமல் நடையைக் கட்டினார்.



"வாண்ணே... எப்ப ஊர்ல இருந்து வந்தே..."

"நேத்து வந்தேம்ப்பா..."

"பொழப்புத் தழப்பெல்லாம் எப்புடி போகுதுண்ணே..."

"அதுக்கென்ன நல்லாப் போகுதுப்பா... ஒரு டீக் கொடு..." என்றபடி அன்றைய தினசரியை புரட்ட ஆரம்பித்தார்.

"அடடே... வா செல்லையா... எப்ப வந்தே..." என்றபடி அருகில் அமர்ந்தார் பால்கார சண்முகம்.

"நேத்து வந்தேன் மாமா... அத்தை பசங்களெல்லாம் நல்லாருக்காங்களா.. அப்பறமா வீட்டுப் பக்கம் வாரேன்.."

"சரிப்பா... என்ன திடீர்ன்னு வந்திருக்கே..."

"அக்கா பொண்ணுக்கு நிச்சயம் பண்ணுதுல்ல..."

"அட ஆமா... நாந்தான் மறந்துட்டேன்... உங்க குடும்பத்துல நடக்கிற மொத கல்யாணமுல்ல... மாப்பிள்ளை நல்லா படிச்சிட்டு லண்டன்ல இருக்கானாமே..."

"ஆமா...."

"நல்ல சம்பந்தமா புடிச்சிருக்கு... பரவாயில்லை... சீர் செனத்தி நிறைய செய்யிறாப்புல இருக்கும்... இல்லையா... ஆமா மாமக்காரன் நீ... முத முதலா மொறை செய்யப் போறே... உங்கப்பா இருந்திருந்தா கேக்கவே வேணாம்... அந்தளவுக்கு பண்ணி சபைய நிறைச்சிருப்பாரு... எந்தக் கொறையுமில்லாம நல்லா பண்ணிருப்பா..."

"அதெல்லாம் நல்லா பண்ணிருவேன் மாமா...அதுகளுக்கு என்னைய விட்டா யாரு மாமா இருக்கா..."

"உம் பய மூத்தவனா இருந்தா ரெண்டுக்கும் முடிச்சைப் போட்டிருக்கலாம்... சரி விடு சின்னவ மக படிக்கிதுல்ல... அதை புடிச்சி கட்டி வச்சிடலாம்..."

"அதெல்லாம் நம்ம காலத்துல மாமா... இப்பல்லாம் நாம யாரையும் கம்பல் பண்ண முடியாது.கடவுள் சித்தம் என்னவோ அதுபடித்தான் நடக்கும்."

"ஒம் பொண்டாட்டி மாமச்சீரெல்லாம் ஏத்த முடியாதுன்னு சொன்னதா உங்க அத்த சொல்லிக்கிட்டிருந்தா... அவளுக்கு இதுல சந்தோஷமில்லையா என்ன..." மெதுவான குரலில் கேட்டார்.

"அப்படியெல்லாம் இல்ல மாமா... எதாவது கோவத்துல சொல்லியிருப்பா... "

"அதானே... இருக்கதே ஒரு மாமன்... நீயும் ஒண்ணும் செய்யலைன்னா எப்படி சிறக்கும்ன்னேன்... அப்புறம் சபையில நாலு பேரு நாலு விதமா பேசினா நமக்குத்தானே அசிங்கம்... சரிப்பா... சாயங்காலம் வீட்டுப் பக்கம் வா... தோட்டத்துல நடவு நடக்குது... ஆளுக வந்தாச்சான்னு ஒரு எட்டு பாத்துட்டு ....தலையாரிக்கிட்ட ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கு... அவரு வீட்டுக்கும் பொயிட்டு வாரேன்..."

"சரி மாமா..."

"ஏண்ணே... பெரியக்கா பொண்ணுக்கா கல்யாணம்...."

"ஆமாப்பா... நாளைக்கு நிச்சயம் வச்சிருக்கு..." என்றபடி காசை கொடுக்க

சில்லறையை தேடியபடி, "சின்னப்புள்ளைங்களா நீங்க தோள்ல தூக்கிக்கிட்டே திரிவிய... அதுக்கு கல்யாணம்.... நாளும் பொழுதும் என்னமாப் போகுது..." என்றான்.

"காலத்தை நாம கட்டிப் போட முடியுமா என்ன... சரிப்பா... வாரேன்" என்றபடி மீண்டும் வீட்டுக்கு நடக்கலானார்.



"ஒங்கக்கா போன் பண்ணினாக... தம்பி வந்தாத்தான் போனெல்லாம் வரும்..."

"வந்தோடனே ஒம் பஞ்சாயத்தை ஆரம்பிக்காம என்ன சொன்னுச்சுன்னு சொல்லு..."

"என்னத்தை சொல்லப் போறாக... நாளைக்கு நிச்சயம் பண்றதுக்கு சாமானெல்லாம் வாங்கணுமாம்... வரச்சொன்னாக..."

"சரி... குளிச்சிட்டு வாரேன்... சாப்பாடு போடு..."

"எல்லா ரெடியாத்தான் இருக்கு... திங்கிறதுக்குத்தான் ஆளக்காணும்... சரி உங்கக்காவுக்கு போன் பண்ணி எனக்கு வேலையிருக்கு நீங்க பாத்து வாங்குங்கண்ணு சொல்லுங்க..."

"என்ன வேலையிருக்கு... நிச்சயத்துக்குதானே வந்தேன்... அதுவும் நம்ம வீட்டு விசேசந்தானே... நாமட்டுமில்ல நீயும் கிளம்பு போயிட்டு வந்திடுவோம்..."

"உங்களையே போக வேண்டாங்கிறேன்... என்னையும் கூப்பிடுறீக... எங்கக்கா வாறாளாம்... அவங்க வாறதால நீங்க அங்க போக வேண்டாம்..."

"இங்க பாரு உங்கக்காவை பாக்கிறதவிட எங்கக்கா வீட்டுக்கு போறதுதான் சரி... சும்மா வீம்பு பண்ணாதே.. நீ வேணா இரு... உங்கக்கா வந்தா இருக்கச் சொல்லு... நான் பொயிட்டு வந்திடுறேன்..."

"அதானே எங்க வீட்டு மனுசங்களைத்தான் உங்களுக்கு சுத்தமா புடிக்காதே... இன்னைக்கு நீங்க நல்லா இருக்கீங்கன்னா அதுக்கு எங்க வீட்டாளுங்கதான் காரணம் தெரிஞ்சுக்கங்க..."

"ஆத்தா... நல்லாயிருப்பே... நேத்து வந்ததுல இருந்து இந்தப் பாட்டத்தான் பாடுறே... நீ என்ன பாடுனாலும் நான் செய்யப் போற மாமச்சீருல்ல எந்தக் கொறையும் வைக்கப் போறதில்லை... நீ ஊரு பூராம் சொன்னாலும் சேரி... கல்யாணத்துக்கு வரலைன்னாலும் சேரி... நான் கல்யாணத்துல ஒரு தம்பியா எம்பங்கை செய்யத்தான் போறேன்... சும்மா கத்திக்கிட்டு இருக்காதே..."

"என்னைய மதிச்சிருந்தாத்தான்....." வாசலில் கார் வந்து நிற்கவும் பேச்சை நிறுத்திவிட்டு வாசலுக்கு வந்தாள்.

காரிலிருந்து இறங்கிய அக்காவையும், அத்தானையும் பார்த்ததும் நடந்த சண்டையை முகத்தில் மறைத்து அக்கா, அத்தான் என்றாள்.

"வாங்கண்ணே... வாங்கண்ணி..."

"என்ன தம்பி... எப்ப வந்தீங்க... நிச்சயத்துக்காக வந்திருக்கீங்களோ..."

"ஆமா... உள்ள வாங்க"

சில நிமிட பேச்சுக்களுக்குப் பிறகு, "இருங்கண்ணே... அக்கா வீட்டு வரைக்கும் பொயிட்டு வந்துடுறேன்... "

"ஆமாமா... நிச்சயக்கார வீடு... வேலையிருக்கும் நீங்க பொயிட்டு வாங்க... நாங்க கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போறோம்..."

"இருங்க... நான் வந்துடுறேன்... அப்புறம் போகலாம்" என்றபடி சாப்பாட்டை நினைக்காமல் வண்டி எடுத்தான்.

"என்ன வடிவு... மாமச்சீரு செலவு ஒண்ணு வருது... என்ன செய்யப் போறீங்க..."

"அட ஏங்க்கா... இது வரைக்கும் அதுக்காத்தான் சண்டை போட்டுக்கிட்டு இருந்தாரு..."

"எதுக்கு சண்டை போடுறீங்க... நல்லா செய்ய வேண்டியதுதானே... நம்ம வீட்டுக் கல்யாணம்..."

"என்னக்கா... அவங்களையெல்லாம் பத்தி உனக்கே தெரியும்... எங்கிட்டு கெடக்கே எடுபட்ட நாயேன்னு கூட திரும்பிப் பாக்காதவங்க... நாங்க கஷ்டப்பட்டப்போ நீங்கள்லாம்தான் தூக்கி விட்டீங்க... அவங்களுக்கு எதுக்கு செய்யணும்..."

"அடியே... அவங்க செஞ்சாங்களா... செய்யலையான்னு... பாக்கிற நேரமாடி இது.அவங்க கூட பொறந்த ஆம்பளைப்பிள்ளை உன்னோட வீட்டுக்காரர்தான்... நாளைக்கு சபை சிறக்க செஞ்சாத்தானே... மாமக்காரன் நல்லா செஞ்சாய்யான்னு ஊரு பேசும்..."

"உங்கக்கா சொல்றதுதான் சரி..." என்று இடையில் புகுந்த அத்தான் "வடிவு... இப்ப நாங்க எங்க போறோம் தெரியுமா... எங்கண்ணன் பொண்ணுக்கு நகை வாங்கத்தான் போறோம்..." என்றார்.

"நகையா..?"

"ஆமாடி... கல்யாணம் வைப்பாரு போல தெரியுது... இன்னைக்கு அவரவிட நாங்க நல்லாயிருக்கோம்... யாருக்கும் யாரும் உதவின்னு செஞ்சுக்கலைன்னாலும் பொறந்த பொறப்புக்குள்ள சண்டை சச்சரவு இல்லாம எல்லா நல்லது கெட்டதுலயும் எல்லாருமா நின்னு செஞ்சிருக்கோம்... புள்ளைங்களும் யாரையும் வித்தியாசமா பாக்காமா எல்லாரையும் அம்மா, அப்பான்னுதான் கூப்பிடுதுங்க... அதான் இவரு கூட கல்யாணத்தப்போ பணமா கொடுத்தா அண்ணனுக்கு செலவுக்கு ஆகுமின்னாரு... ஒரு அஞ்சு பவுனுல நகைய எடுத்துக் கொடுத்த அந்தப் புள்ளயும் சந்தோஷப்படும்... கல்யாணச் செலவுல முன்னப்பின்ன வந்தா அப்ப போட்டு சரி பண்ணிக்கலாமுன்னு சொல்லி கூட்டியாந்திருக்கேன்..."

"...."

"இங்க பாரு சீரு செய்யிறது நம்ம கடமை... அதுவும் மாமன்காரன் முறைய யாருக்காகவும் விட்டுக் கொடுக்கக்கூடாது. அந்தப்புள்ள யாரு நீங்க தூக்கி வளத்ததுதானே... அவங்க நமக்கு பாக்கலை அதனால எதுவும் செய்யக்கூடாதுன்னு சண்ட போடுறதுக்கு என்ன இருக்கு... அன்னைக்கு நிலமையில ஓ நாத்தனா கணவனை இழந்துட்டு நின்னப்போ நீ போயி உதவுனியா இல்லையே... ஏதோ சொத்து சொகம் இருந்ததுனால கஷ்டப்பட்டு பால் மாடு வச்சி புள்ளைங்களை படிக்க வச்சி இப்ப நல்ல நிலமையில இருக்கு... அப்ப எல்லாரும் கஷ்டப்பட்டிங்க... இப்ப எல்லாரும் நல்லாயிருக்கீங்க... அப்புறம் எதுக்கு வேண்டாத பேச்சு... நீங்க செய்யிற சீருல சபை சிறக்கணும்... ஆமா சொல்லிப்புட்டேன்... சும்மா அந்த மனுசனுக்கிட்ட கத்துறதை விட்டுட்டு ஓ... வீட்டு கல்யாணமாட்டம் சந்தோஷமா நின்னு செஞ்சு வையி... என்ன நான் சொல்றது..."

"சரிக்கா... நாந்தான் பழசையெல்லாம் மனசுல வச்சுக்கிட்டு அவருகிட்ட சண்டை போட்டுட்டேன்... சிறப்பா செய்யச் சொல்றேங்க்கா... ஓந்தங்கச்சியா பொறந்தும் ஓ... குணம் இல்லாம போச்சேக்கா... இனிமே இது மாதிரி இருக்க மாட்டேங்க".

"நீயும் நல்லவதாண்டி... கால நேரம் உன்னைய இப்படி சிந்திக்க வச்சிருக்கு... விடு... சரி ஓ... நாத்தனாருக்கு போன் பண்ணி நானும் வாரேன்னு சொல்லிட்டு கிளப்பு நாங்க அப்படியே விட்டுட்டுப் போறோம்... "
-'பரிவை' சே.குமார்.

26 எண்ணங்கள்:

சக்தி கல்வி மையம் சொன்னது…

அருமையான சிறுகதை...
பகிர்வுக்கு நன்றி..

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பரவால்லை.. அரசியல் பதிவுகளுக்கு நடுவே ஒரு இலக்கிய பதிவு

பாட்டு ரசிகன் சொன்னது…

ரொம்ப பெருமையா படுக்க வேண்டியதாக இருக்குங்க..

நீளத்தை இன்னும் கொஞ்சம் குறைத்திருந்தால் இன்னும் இனிமையாக இருக்கும்....

வாழ்த்துக்கள்...

vasu balaji சொன்னது…

good one:)

Chitra சொன்னது…

"சரிக்கா... நாந்தான் பழசையெல்லாம் மனசுல வச்சுக்கிட்டு அவருகிட்ட சண்டை போட்டுட்டேன்... சிறப்பா செய்யச் சொல்றேங்க்கா... ஓந்தங்கச்சியா பொறந்தும் ஓ... குணம் இல்லாம போச்சேக்கா... இனிமே இது மாதிரி இருக்க மாட்டேங்க".


......அருமையான கதைங்க... புரிதல் தேவை என்பதை, நல்லா சொல்லி இருக்கீங்க.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

அப்பா அப்படியே மதுரக்கார்ய்ங்க பேசிக்கிற மாதிரியே இருந்துச்சு நல்ல மெசேஜ்..!

Menaga Sathia சொன்னது…

good story!!

Menaga Sathia சொன்னது…

good story!!

செங்கோவி சொன்னது…

வசனங்களில் மண் மணக்கிறது குமார்..அருமை!

Thenammai Lakshmanan சொன்னது…

நீயும் நல்லவதாண்டி... கால நேரம் உன்னைய இப்படி சிந்திக்க வச்சிருக்கு... விடு// அருமை குமார்..:)

ம.தி.சுதா சொன்னது…

தங்களின் ஒவ்வொரு எழுத்திலும் கிராமத்து மணம் கமழுது சகோ....

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகில் சமூகபதிவாளனாக என்னை முத்திரை குத்திய முக்கிய சாதனை
இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...

நிலாமதி சொன்னது…

பகிர்வுக்கு நன்றி .உங்களே பேச்சு வழக்கில் வாசிக்க சற்றுநேரம் எடுத்து .
மாமன் சீர் வ்ரிசை iஎன்று புரிந்து கொண்டேன். அக்கா தங்கையாக் பிறந்தாலும் எடுத்துச்சொல்லும்போது தான் உண்மை ஜதார்த்தம் புரிகிறது.

எங்கே நம்மதளம் பக்கம் வருவதில்லை ?

ஹேமா சொன்னது…

அழகாக உங்கள் மொழிநடையில் கோர்த்தெடுக்கிறீர்கள் மனதின் எண்ணங்களை.யதார்த்தமாகவும் இருக்கிறது கதையோட்டம் !

பெயரில்லா சொன்னது…

அழகான மொழி நடை அர்த்தம் பொருந்திய கரு கொண்ட கதை..

Asiya Omar சொன்னது…

நல்ல கதை.
//அப்ப எல்லாரும் கஷ்டப்பட்டிங்க... இப்ப எல்லாரும் நல்லாயிருக்கீங்க... அப்புறம் எதுக்கு வேண்டாத பேச்சு... நீங்க செய்யிற சீருல சபை சிறக்கணும்... ஆமா சொல்லிப்புட்டேன்...//

அருமை.சகோ.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கருன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க செந்தில் அண்ணா...
அதிகம் கதைதான்... எப்பவாவது அரசியல்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பாட்டு ரசிகன் சார்...
என்னம்ப் தெரியலை... எழுதும் போது சிறியதாக இருந்தது... பதிவில் போட்டதும் நீளமாக தெரிந்தது... இனி குறைத்து எழுதலாம்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வானம்பாடிகள் சார்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சித்ராக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வசந்த்...
நம்ம பேச்சு வழக்குல எழுதுறதுல ஒரு சுகம் இருக்குல்ல...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க மேனகாக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க செங்கோவி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க தேனம்மை அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ம.தி.சுதா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க நிலா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வேலைப்பளூ கூடுதல்... இருந்தும் உங்கள் பக்கங்கள் எல்லாம் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்... வராமல் இருக்க மாட்டேன் சகோதரி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஹேமா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க தமிழரசி அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஆசியாக்கா...
எங்க அக்காவை காணோமுன்னு பார்த்தேன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கமலேஷ் சொன்னது…

அருமையான சிறுகதை..

யதார்த்தமாகவும் இருக்கிறது கதையோட்டம்.

அன்புடன் மலிக்கா சொன்னது…

அருமையான சிறுகதை.கிராமத்து வழக்குமொழி கலக்கிருக்கீங்க குமார். வாழ்த்துக்கள்..


”மாமஞ்சீரு” தானே

எனக்கு நிறைய கிடைத்துள்ளது

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

அழகான சிறுகதை... பேச்சு வழக்கும் ரசிக்கும்படி இருந்ததுங்க... நல்ல முடிவு கதையும் எப்பவும் மனசுல நிக்கும்... அந்த வகையில் இதுவும் ஒன்று... நன்றிங்க...