மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 20 மார்ச், 2011

பேரு... பெத்த பேரு... (தொடர் பதிவு)

உனக்கு ஏன் இந்தப் பெயரை வைத்தார்கள் என்பதை உண்மையாக... சத்தியமாக... உள்ளதை உள்ளபடி பதிவுலகுக்கு தெரிவிக்க வேண்டும் என எனது அன்பு அக்கா சுசி அவர்கள் விடுத்த அன்புக் கட்டளைக்கு செவி சாய்த்து மீண்டும் ஒரு தொடர் பதிவு எழுத வேண்டிய கட்டாயம். அழைப்பு விடுத்த அக்காவுக்கு நன்றி.

இப்பதான் நண்பர் அக்பரின் அழைப்பை ஏற்று காதல் பதிவு ஒன்று எழுதினேன். அந்த சூடு குறைவதற்குள் அடுத்த தொடர் பதிவு... சரி... நம்ம பேரைச் சொல்ல என்னங்க கஷ்டம்... சொல்லிட்டா போச்சு...

நாம் பொறந்தப்போ எல்லாரும் கூடி விழா எடுத்தோ... இல்ல நியூமராலஜி பார்த்தோ நமக்கு பேர் வைக்கலை. ஏன்னா சாலை வசதி கூட சரியா இல்லாத (இப்ப வசதிகள் பரவாயில்லை) ஒரு சிறிய கிராமத்தில் வானம் பார்த்த பூமியை நம்பி வாழ்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன்.

நாங்க மொத்தம் ஏழு பேருங்க... அதுல ஆறாவதுதான் நான். எனக்கு மூன்று அக்கா, இரண்டு அண்ணன், ஒரு தம்பி. அஞ்சாவது பொம்பளப்புள்ளையா பொறந்தா பஞ்சுன்னும் பசங்க பொறக்காம பொம்பளப்புள்ளங்களா பொறந்தா போதும் பொண்ணுன்னும் வைக்கிறது மாதிரி ஆறாவது புள்ளைன்னா முருகன் பேரு வைப்பாங்க.

நாம ஆறாவதா பொறந்ததால எங்க ஐயா (அம்மாவோட அப்பா) முருகன் பேரு வைக்கணுமின்னு ஆறுமுகம் அது... இதுன்னு ஏதேதோ சொல்லி வைக்க, திருத்துறைப்பூண்டியில குமாரசாமி ராஜா வீட்ல கணக்குப்பிள்ளை (Accountant) வேலை பார்த்த அப்பா, அவங்க மொதலாளி மேல உள்ள பாசத்துல குமாரசாமின்னு வச்சிருக்காரு. இதுல அப்பா நினைச்சதும் நடந்தாச்சு... ஐயாவின் ஆசையும் நிறைவேறியாச்சு.

நம்ம ஜாதகத்துல எல்லாம் குமாரசாமிதான். அப்பா வெளியூர்ல வேலை பார்த்ததால் எங்களை எல்லாம் பள்ளிக்கூடத்துல சேர்க்கிற வேலை எங்கம்மாவுக்கே... அவங்க எல்லாருக்குமே வச்ச பேரை வச்சபடியே விட்டுட்டு வீட்டுல கூப்பிடுறபடி பள்ளிக்கூடத்துல சேர்த்துருவாங்க... (நல்ல அம்மா).

அந்த வகையில ராமசாமி ரவிச்சந்திரனாகவும் உமையாள் பிரேமாவாகவும் ஆக குமாரசாமியான நான் பள்ளியில் குமார் என்று சேர்க்கப்பட்டேன். அதன்பின் எல்லா இடத்திலும் குமார் ஆனேன். எங்க ஊரு பெருசுங்களுக்கு குமார் அப்படின்னு கூப்பிட வராது... அதனால எங்க ஆயா முதக் கொண்டு எல்லாருக்கும் கொமருதான்... எங்கள் மக்கள் வஞ்சனையில்லாமல் கொமரு எப்ப வந்தே என்று விசாரிப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும்.

அப்புறம் கல்லூரியில் நண்பர்கள் (எங்கய்யா பேரச் சொல்லி கூப்பிட்டாங்க...) எல்லாருக்கும் பங்காளி... ஒருத்தனுக்கு மட்டும் மாப்பிள்ளை... அப்பா பேரு சேதுராமன் என்பதால் சிலருக்கு எஸ்.கே. எங்க தமிழ் ஐயாவும் எனது கல்வித் தந்தையுமான திரு. பழனி ராகுலதாசனுக்கு எப்பவும் தம்பி, மற்ற நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடிக்கும் போது மட்டும் பரியன்வயலார். என் ஐயா வீட்டில் எனக்கு கிடைத்த நட்புக்களுக்கு பண்ணையார்... இப்படி நிறைய பெயர்கள் கல்லூரி வாழ்க்கையில்...

சில காலம் வாத்தியாராக இருந்ததால் என் நண்பர்கள் சிலர் இன்னும் "வாத்தியாரே" என்றுதான் அழைக்கிறார். எங்கள் ஊரில் ஒரு சிலர் இப்போது சின்ன வாத்தியார் என்று கூப்பிடுகிறார்கள். (எங்க சித்தப்பா தலைமையாசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் அதனால் அவர் பெரிய வாத்தியார் )

தமிழில் எழுதும் போது எனக்கு சே.குமார் என்று எழுதவே பிடிக்கும். எஸ்.குமார் என்று ஐயாவும் S.குமார் என்று சில நண்பர்களும் எழுதுவதுண்டு.

அப்புறம் பத்திரிக்கைகளில் கதை, கவிதை எழுதும் போது பரியன் வயல் சே.குமார் என்று போட்டதுண்டு... ஸ்ருதி என்று மகள் பெயரிலும் சில கதைகள் எழுதியதுண்டு.

அபுதாபிக்கு வந்த பின்னர் எனது அலுவலகத்தில் அரபிகள் கொமார் என்றுதான் ஆரம்பத்தில் அழைத்தார்கள்... இப்ப பரவாயில்லை குமார் என்று அழைக்கிறார்கள்.

பதிவுலகிற்கு வந்த போது சே.குமார் என்றுதான் வைத்திருந்தேன். பின்னர் ஊர் பெயரைச் சுருக்கி 'பரிவை' சே.குமார் ஆனேன். நான்கு வலைப்பூவையும் ஒன்றாக்கி மனசு என்ற வலையில் எழுத ஆரம்பித்தது முதல் பல நண்பர்களுக்கு 'மனசு' சே.குமார் என்றானேன்.

எனது திருமண அழைப்பிதழில் என் பெயரை குமாரசாமி என்றுதான் போட வேண்டும் என அப்பா சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அம்மாவும் நானும் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை... அதிலும் குமார்தான்.

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் ஆங்கிலத்தில் எழுதும்போது KUMAR என்று எழுதாமல் KUMAAR என்று எழுது... உன் வாழ்க்கை நல்லா இருக்கும் என்றார். எனக்கு அதில் நம்பிக்கையில்லாததால் KUMAR என்றே எழுதுகிறேன்.

இந்தப் பெயர் பணம் காசை சம்பாரித்துக் கொடுத்ததோ இல்லையோ நல்ல நண்பர்களைக் சம்பாதித்துக் கொடுத்துள்ளது. நல்ல மனைவி, அருமையான இரண்டு மக்கள் என வாழ்க்கையையும் நன்றாக்கியுள்ளது.

மற்றபடி சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்றோ... கூப்பிடப் பிடிக்கவில்லை என்றோ... வேறு பெயர் வைத்திருக்கலாம் என்றோ இதுவரை தோன்றவில்லை.

நான் எதாவது செய்தால் குமார் செஞ்சா சரியாத்தான் இருக்கும் என்றும் எதாவது ஒன்றை வெற்றிகரமாக முடித்து விட்டால் வெரிகுட் குமார் என்றும் முடியவில்லை என்றால் சரிடா குமார்... அடுத்துப் பார்த்துக்கலாம் என்றும் எனக்கு நானே சொல்லிக் கொள்வதுண்டு. ஏனென்றால் குமாரை நான் மிகவும் நேசிக்கிறேன்.

இதுவரை யார் யார் எழுதியிருக்கிறார்கள் என்பது தெரியாததால் இதை தொடர இதுவரை எழுதாத என் அன்பு நட்புக்களை அழைக்கிறேன்... எல்லாரும் தொடருங்க....

நட்புடன்,
-'பரிவை' சே.குமார்.

16 எண்ணங்கள்:

Asiya Omar சொன்னது…

//நான் எதாவது செய்தால் குமார் செஞ்சா சரியாத்தான் இருக்கும் என்றும் எதாவது ஒன்றை வெற்றிகரமாக முடித்து விட்டால் வெரிகுட் குமார் என்றும் முடியவில்லை என்றால் சரிடா குமார்... அடுத்துப் பார்த்துக்கலாம் என்றும் எனக்கு நானே சொல்லிக் கொள்வதுண்டு.//

--நல்லாயிருக்கு,கொமரனை கொமராக்கிட்டாங்களே!

Unknown சொன்னது…

எனக்கும் குமார் என்ற பெயர் பிடிக்கும். சிறுவயதில் என்னையும் சிலர் குமார் என்று அழைப்பார்கள் எங்க கடை பெயர் குமார் மளிகை என்பதால்...

பெயரில்லா சொன்னது…

குமார் நு நிறைய பேர் இருக்காங்க ..ஆனா உங்கப்பா சொன்னா மாதிரி குமாரசாமி நல்லாருக்குன்னு எனக்கு தோணுது..ஏன்னா எனக்கென்னவோ குமார் ஒரு முழுமையில்லாத பெயராக தோணுகிறது..குமார் நா என்ன அர்த்தம்..?மகன் என்பதுதானே.....ஆனா உங்க மனசுக்கு பிடிச்சிருக்கு....நம்ம ஆசைகள்,திருப்திதான் முக்கியம்

பெயரில்லா சொன்னது…

அருமையான எழுத்து நட..நல்ல பதிவு...

vanathy சொன்னது…

well written.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>
அப்புறம் பத்திரிக்கைகளில் கதை, கவிதை எழுதும் போது பரியன் வயல் சே.குமார் என்று போட்டதுண்டு... ஸ்ருதி என்று மகள் பெயரிலும் சில கதைகள் எழுதியதுண்டு.

நோட் பண்ரேன்

r.v.saravanan சொன்னது…

good name

நல்ல பதிவு குமார்

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஆசியாக்கா...
கொமாரு என்று அவர்கள் கூப்பிடுவது ஒரு அழகுதான் அக்கா.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கலாநேசன்...
அப்படியா... சந்தோஷம்... பள்ளியில் சில ஆசிரியர்கள் எங்க பெரிய அண்ணன் பெயரில்தான் எங்களை எல்லாம் அழைப்பார்கள்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சதீஷ் அண்ணா...
உண்மைதான்... நானும் சில காலங்களுக்கு முன்னர் மாற்றலாம் என்று நினைத்தேன். தற்போது அந்த நினைப்பு இல்லை... பார்க்கலாம்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வானதி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சி.பி. அண்ணா...
நீங்கள் உதயம், பாக்யா, தினபூமி-கதைபூமியில் சென்னிமலை சி.பி.செந்தில் குமார் என்று எழுதிய காலத்தில் சே.குமார், பரியன் வயல் என்று எழுதியவன் நான். பின்னர் சில காலம் விலகி மீண்டும் சென்னையில் இருந்த போது தினமணி, தினத்தந்தியில் எழுதினேன். இப்ப அபுதாபியில் இருப்பதால் பத்திரிக்கைகளுக்கு எழுதுவதை நிறுத்தியாச்சு.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சரவணன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

பேர் எடுத்த அனுபவம் நல்லாயிருக்கு.

இதையே சாக்கா வச்சு நானும் எழுதலாம்னு இருக்கேன் :)

தமிழ்க்காதலன் சொன்னது…

குமாரை நான் நேசிக்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

டும்டும்...டும்டும்...
'பரிவை'பெற்றது 'பரிவை' குமார்...