மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 18 மார்ச், 2016

மனசின் பக்கம் : மழையும் மடோனாவும்

ரண்டு நாட்களாக மழை வருவது போலவே இருந்தது. காற்றும் இல்லை... மழையும் இல்லை... எங்கே சுனாமி கினாமி வந்து தாக்கிருமோன்னு ஒரு பயம் இருக்கத்தான் செய்தது. இன்றைய வெயில் நினைப்பை காயப்போட்டு விடுமோ என்று நினைத்தால் மாலையில் குளிர்... வித்தியாசமான கிளைமேட்டாக இந்த வருடம் இருக்கிறது... இனி கொஞ்சம் கொஞ்சமாக சூரியனார் சுட்டெரிக்க ஆரம்பிப்பார் என்று நினைக்கிறேன். வியர்வையில் கழியும் நாட்கள் இந்த முறை கொன்னு எடுத்துவிடும் என்றுதான் தோன்றுகிறது..


ச்சா எண்ணைய் வரலாறு காணாத விலை இறக்கத்தின் காரணமாக வளைகுடா நாடுகளில் இறுக்கமான சூழல் நிலவுகிறது. (நம்ம ஊர்ல மட்டும்தான்யா பெட்ரோல் விலை ஏறிக்கிட்டே போகுது) பெரும்பாலான கம்பெனிகள் ஆட்களை ஊருக்கு அனுப்பி வருகிறார்கள். என் அறை நண்பர் ஒருவருக்கு அடுத்த மாதத்திற்கு அப்புறம் வேலை வரவில்லை என்றால் ஊருக்குப் போகணும் என்று சொல்லியிருக்கிறார்கள். எங்களின் இரண்டு அரசாங்க வேலைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது பார்க்கும் பணியும் இறுதிக் கட்டத்தில்... அதனால் இன்னுமொரு சிறிய வேலை ஒன்று இப்போது பார்க்கும் வேலையுடன் சேர்ந்ததுதான்... அவர்களின் கிளை அலுவலகமான TRANSCO-வில் சென்று எங்கள் பணிக்கான டேட்டாக்களை ஸ்கேன் செய்து எடுத்து வரவேண்டும். என்னுடன் பணி புரியும் மலையாளியை அதற்கான மீட்டிங்கிற்கு கூட்டிச் சென்றான் எங்க எகிப்துக்காரன். அங்கு இருந்த உள்ளூர் அரபியுடன் மீட்டிங்கின் போது அவனிடம் எங்கு எனக்கான இடம்... எங்கு அமர்ந்து பணி எடுக்க வேண்டும் என்று கேட்டபோது அந்த அறையில் ஒரு ஓரத்தில் இருந்த பிளாட்டரைக் காட்டி (Printer) அதன் மீது லாப்டேப்பை வைத்துக் கொள் என்றானாம். நான் எங்கு அமர்வது என்று கேட்டதற்கு தரையில் அமர்ந்து கொள் என்று சொல்லியிருக்கிறான். 

இவன் என்ன சொன்னான்னு தெரியலை ஆனால் எகிப்துக்காரன் 'அவன் இன்சினியராக்கும்... எது வேணும் வேண்டாம்ன்னு தெரிஞ்சு ஸ்கேன் பண்ணனுங்கிறதுக்காக அவனைக் கூட்டியாந்தேன். அவன் ஆபீஸ் பாய் இல்லைன்னு சத்தம் போட்டிருக்கான். அவனோ எது வேண்டுமென்றாலும் உங்க ஆபீசில் இருந்து கொண்டு வாங்க... இங்க அதெல்லாம் தரமுடியாதுன்னு சொன்னானாம்... அது போக டீ, காபி, தண்ணி கூட தரமாட்டேன் என்று சொல்லி ஆபீஸ் பாயிடமும் கூப்பிட்டுச் சொல்லிட்டானாம். இவர்கள் வந்து எங்களிடம் புலம்ப, நம்ம வாய்தான் சும்மா இருக்காதே... நீ எதுக்குடா ஒத்துக்கிறே... என்ன ஒட்டகம் மேய்க்கவா வந்திருக்கேன்னு சத்தம் போட, மலையாளி எல்லாம் அரேஞ்ச் பண்ணினாத்தான் அங்கு போவேன்னு சொன்னதும் எங்க எகிப்தியன் பொறுமையாய் கேட்டுட்டு 'அங்க நீ எல்லாத்துக்கும் எஸ் சார் போட்டே... இங்க வந்ததும் குமார் உன்னைய சத்தம் போடவும் மறுக்கிறே' என்று சொன்னான். 'டேய் நான் எதுக்கு ஒத்துக்கிட்டேன்னுதான் கேட்டேன்.  அங்க போகாதேன்னு எல்லாம் சொல்லலை'ன்னு சொன்னாலும் 'இவங்க எல்லாருமே நீ சொல்றதைத்தான் கேப்பாங்கன்னு தெரியும்ன்னு சொல்லிட்டான். 

எனக்குத் தெரியும் மலையாளிகள் எல்லாத்துக்கும் ஒத்துப்பாநுங்கன்னு... இருந்தாலும் இன்னைக்கு இவன் இதுக்கு ஒத்துக்கிட்டா நாளைக்கு நம்மளையும் செய்யச் சொல்லுவானுங்க... அப்ப நாம முடியாதுன்னு சொன்னா உடனே அவன் செஞ்சானுல்லன்னு சொல்லுவானுங்க. மலையாளிக்கும் எகிப்துக்காரனுக்கும் காரசாரமான மோதல்.. மலையாளி கண்ணுல தண்ணி... என்னால போக முடியாதுன்னு சொல்லிட்டான். அப்புறம் எகிப்துக்காரன் என்னிடம் 'இப்ப நமக்கு வேலை இல்லை... இங்க அப்படி ஒண்ணும் அர்ஜெண்ட் வேலை கிடையாது... நீ இங்க இருந்தா எல்லாம் பாத்துப்பே... அவனை இங்கு விட்டாலும் ஒண்ணும் பாக்கமாட்டான். அவன் போகலைன்னு சொன்னா ஆபீஸ்ல வேற யாரையாச்சும் அனுப்புவாங்க. வேலை இல்லை ஊருக்குப் போன்னு இவனை போகச் சொல்லிருவானுங்க... அவனுக்கிட்ட சொல்லு... நான் எல்லாம் அரேஞ்ச் பண்ணுறேன்' என்றான். 'நான் எதுக்குடா அவனுக்கிட்ட பேசணும்... சும்மா கேட்டதுக்கே நாந்தான் அவனைக் கெடுக்கிறேன்னு சொன்னே' என மறுக்க, 'ப்ளீஸ்... சொல்லு' என்றதும் அவனிடம் பேசி லாப்டாப்பை எடுத்துக் கொண்டு போக வைத்தேன். 

இரவு 11.30 மணிக்கு சாட்டில் வந்து 'சாரி குமார்... அவன் அங்க ஒத்துக்கிட்டான்... இங்க வந்து உங்ககிட்ட பேசினதும் நான் அங்க சொன்னேன்னு சொல்றான்... ஒண்ணுமே சொல்லலை... அவன் சொன்னது எஸ் சார் மட்டும்தான்' என்றான் எகிப்துக்காரன். 'எனக்குத் தெரியும்டா... அவன் இப்படிச் சொன்னான்னு சொன்னதாலதான் எதுக்கு ஒத்துக்கிட்டேன் கேட்டேன்.' என்றதும் ' சரி விடு... அவனுக எதுவும் பேச மாட்டானுங்க... ஆனா பேசினது மாதிரி நடிப்பானுங்க எனக்குத் தெரியும்' என்றான்.  நம்மளை ரவுண்ட் கட்டித்தான் வச்சிருக்கானுங்க... நமக்கு நாக்குல சனி போல... இனிமே எவனுக்காகவும் பேசக்கூடாதுன்னு நேற்றே முடிவு பண்ணிட்டேன்.


விஜய் சேதுபதி - மடோனா செபாஸ்டின் நடிப்பில் வந்திருக்கும் 'காதலும் கடந்து போகும்' நேற்றிரவு பார்த்தேன். எதோ ஒரு கொரிய மொழிப் படத்தின் தழுவல் என்று சொல்லியிருந்தார்கள். ரொம்ப மெதுவாக நகரும் கதை... விஜய் சேதுபதி கோழைத்தனமான ரவுடி... அடிக்கவே தெரியாது... ஆனாலும் அவர் ரவுடி... மடோனா கம்ப்யூட்டர் துறையில் வேலை தேடும் பெண்... இருவரும் ஒரே கட்டிடத்தில் எதிர் எதிரே குடியிருக்கிறார்கள். அவர்களுக்குள் ஏற்படும் நட்பு... விஜய் சேதுபதியின் ரவுடியிசம் என பயணிக்கும் கதை... படத்தின் வெற்றியே ஷார்ப்பான வசனங்கள்தான்... 'ரவுடியின்னா எப்பவும் அடிச்சிக்கிட்டே இருப்பாங்க... அப்ப அப்ப அடி வாங்கணும்' என்று விஜய் சேதுபதி சொல்ல, 'நீங்க கொஞ்சம் அதிகமா அடி வாங்குவீங்களோ' என்று மடோனா கேட்பார். இதேபோல் இன்னும் நிறைய ரசிக்க வைக்கும் வசனங்கள். பிரேமம் படத்தில் மலர் டீச்சர் போல் கலக்கியவர்தான் இந்த மடோனா... இதிலும் பக்கத்து வீட்டுப் பெண் போல நம் மனசுக்குள் வந்து ஒட்டிக் கொள்கிறார்... தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கும் இன்னொரு நஸ்ரியான்னும் சொல்லலாம்... காதலும் கடந்து போகும் -  ரசிக்க வைக்கும் வசனத்துக்காகவே மீண்டும் பார்க்க வேண்டும் என்று தோன்றும் நல்லபடம்.

-'பரிவை' சே.குமார்.


வியாழன், 17 மார்ச், 2016

வாக்காளர் அலப்பறை...3

வெள்ளிக்கிழமை மதியம் பிரியாணி செய்து சாப்பிடும் போது அவன்தான் ஆரம்பித்தான்.

"விஜயகாந்த் அவ்வளவு ஒர்த்தா என்ன... தனியா நிக்கிறேன்னு சொன்னா விடவேண்டியதுதானே... எதுக்கு கட்டுமரமும் நடைவண்டியும் மாறி மாறி கூப்பிடுதுங்க..." சிரிக்காமல் கேட்டான்.

'ஆஹா... இவன் எப்பவும் விஜயகாந்துக்கு சப்போர்ட் பண்ணுறவனுல்ல... என்ன இன்னைக்கு பிளேட்டை மாத்திப் போடுறான்... கஷ்டப்பட்டு செஞ்ச பிரியாணியை சாப்பிட விடுவானுங்களா... இல்ல ஏதாவது கலவரத்தை ஆரம்பிச்சிடுவானுங்களா... இருக்கவனுங்க கூட வந்தவனுங்களும் பாட்டிலை எல்லாம் கழுவிக் கவித்துட்டுல்ல உக்காந்திருக்கானுங்க... இவன் எதுக்கு இப்ப ஆரம்பிக்கிறான்னு தெரியலையே...' மனசுக்குள் யோசித்தபடியே தான் சமைத்த பிரியாணியையும் அவனையும் மாறி மாறிப் பார்த்தான் அந்த அறையின் பிரதான சமையல்.


சமையலைப் பார்த்து கண்ணடித்து விட்டு "இந்த விஜயகாந்துக்கு அறிவே இல்லைங்க... அரசியல்வாதிகளுக்கு வாக்கு சுத்தம் இல்லைங்கிறது மக்களுக்கு நல்லாவே தெரியும்... ஆனா இந்தாளுக்கு வார்த்தை சுத்தம் இல்லையே..." சத்தமாகச் சொன்னான் அவன்.

"என்ன இன்னைக்கு விஜயகாந்தைப் பற்றி பேசுறீங்க... நாங்க எதாச்சும் சொன்னாலும் எதுப்பீங்க..." சிக்கன் லெக்பீசைக் கடித்தபடியே கேட்டார் அவர்.

"அப்படியில்லைங்க... நானெல்லாம் ஒரு கட்சி சார்ந்தவன் இல்லைங்க... எல்லாரையும்தான் பேசுவேன்.." சிரித்தான் அவன்.

'இந்தாளு லெக்பீசைக் கடிச்சமா... போயி தூங்குனோமான்னு இல்லாம... தேவையில்லாம வாயை விடுறாரு... இன்னைக்கு வச்சிச் செய்யப்போறான் இவன்' என்று நினைத்தபடி தயிர் பச்சடியில் வெங்காயத்தை கிளறியபடி சிரித்தான் சமையல்.

"ஏன் சிலிக்கிழீங்க...? காலசாழ்மா  பேசினாத்டானே போழ்ட சலக்குக்கு ஊழுகாய் சாழ்ப்ட மாதிலி இழுக்கும்..." வந்திருந்தவர்களில் சுருட்டைமுடி  வாய்க்குள் சோற்றோடு சரக்கின் மகிமையால் குழறிப் பேசினார்.

"அது சரி... ஏறிடுச்சுல்ல... இனி என்ன... காவடி எடுத்துட வேண்டியதுதான்..." என்றான் சமையல்.

"இந்த விஜயகாந்த் அன்னைக்கு கூட்டணி இல்லைன்னாரு... இன்னைக்கு கூட்டணி வைப்போங்கிறாரு... அவரு நம்ம மச்சான் மாதிரி சரக்கடிச்சிட்டு உழறுவாரு போல..."


"யாழ் ஒழல்லா... நாங்கழ்லாம் எப்பயும் சடி மாப்ளே... ஆக்சுவலி ஐ... ஆம்... "

"சாமி பிரியாணியைச் சாப்பிடு..."

"அன்னைக்கு எல்லாரும் கூப்பிடும் போதாச்சும் இந்தாளுக்கு எதோ மதிப்பு இருந்துச்சு... இன்னைக்கு எல்லாரும் கதவடைச்சிட்டானுங்க... இனி இவரு ஜீரோதான்..." அவர் பேச ஆரம்பித்தார்.

'ஆடு சிக்கிருச்சு...' என்று நினைத்தவன் நமுட்டுச் சிரிப்பு சிரித்தான்.

"ஆமாங்க... விவரமில்லாத ஆளு..."

"யாருக்குங்க விபரம் இல்லை... அவனுக்கா... அவன் அம்மாக்கிட்ட மொத்தமா பொட்டி வாங்கிட்டான்... இப்ப கட்சிக்காரனுங்கதான் பாவம்.." அவருக்கு விஜயகாந்தைப் பேசுவதென்றால் அல்வா சாப்பிட்டது போல.

"பொண்டாட்டி, மச்சினன்னு குடும்ப அரசியல்ங்க... அவனெல்லாம் மக்களைக் காக்க வந்த தலைவனாம்... மக்கள் தலைவன்னா அது எங்க தலைவர் கலைஞர்தாங்க... தொண்ணுறு வயசுலயும் மக்களுக்கு உழைக்க நினைக்கும் உத்தமனுங்க..." வந்தவர்களில் போலீஸ் தொந்தி பிரியாணியின் காரத்தை நெற்றியில் வியர்வையாய் சுமந்து பேசியது.

"எங்க எல்லா அரசியல் கட்சியும் குடும்ப அரசியல்தானுங்க... ஏன் கலைஞர், ராமதாஸ் இப்படி எல்லாமே குடும்ப அரசியல்தானேங்க... ஏன் ஜெயலலிதா கூட குடும்ப அரசியல்தாங்க...வைகோ மகனை சிகரெட் விக்க விட்டுட்டாரு.. திருமாவுக்கு கல்யாணம் ஆகலை... கம்யூனிஸ்ட்டுங்க குடும்பத்தை இழுக்கலை... அதனால மக்கள் நலக்கூட்டணி வேணுமின்னா குடும்ப அரசியலுக்கு அப்பாற்பட்டு நிக்கலாம்..." என்றான் அவன்.


"அட என்னங்க நீங்க... அரசியல் தெரியாம அரசியல் பேசுறீங்க... ஜெயலலிதாவுக்கு குடும்பமே இல்லை... ஷோபன் பாபு, எம்.ஜி.ஆரெல்லாம் இந்த அம்மாவுக்கு குடும்பம் எங்கங்க அமைச்சுக் கொடுத்தாங்க... அதான் அநாதையின்னு வாட்ஸ்அப்ல அழுது புலம்புச்சே... மக்கள் நலக் கூட்டணி குடும்ப அரசியல் இல்லைங்க... குழப்ப அரசியல்..." கலைஞரின் விசுவாசி தொந்தி சொல்லிவிட்டு கையிலிருந்த டம்ளரில் ஒரு உறிஞ்சு உறிஞ்சிவிட்டு சிக்கனைக் கடித்தது.

"நல்லாக் கேளுங்க... நான் கேட்டாத்தான் சண்டைக்கு வருவாரு... இப்படித்தான் சம்பந்த சம்பந்தமில்லாம சண்டைக்கு வருவாரு..." என்றார் அவர்.

"என்ன சண்டைக்கு வந்துட்டேன்... ஜெயலலிதாவுக்கு குடும்பம் இல்லையா... அப்ப சசிகலா யாரு... தோழியின்னு சொல்லிக்கிட்டு இன்னைங்க அந்த அம்மா குடும்பம்தானே ஆளுது... அந்த அம்மா தங்கச்சி, தம்பியின்னு மன்னார்குடியே ஜெயலலிதாவை வச்சி வாழலையா... விஜயகாந்தை மட்டும் பேசுறீங்க..."

"அழுசலி மாப்ள... நீழ்ங்க... பாலிண்டப் பிழிச்சிட்டிய... ஆக்சுவலி நா சொழ்ல நிலைச்சேன்..." என்றார் சுருட்டை முடி.

"சரிங்க... தனியா நிக்கிறேன்னு இன்னைக்கு கட்சி ஆபீசில தனியா நிக்கிறானாமே... இது எவ்வளவு பெரிய கேவலம்.." சிரித்தார் அவர்.

"மக்கழேயை விட்டுட்டீங்க... இது எவ்வளவு பெரிய கேவலம் மக்கழே... அப்படின்னு சொல்லணும்... அதுலதான் கிக்கு" சிரித்த போலீஸ் தொந்திக்கு உள்ளே போன சரக்கு வேலை செய்தது.

"இதுல என்னங்க கேவலம் இருக்கு... பாமக, நாம் தமிழர் எல்லாம் தனியா நிக்கும் போது தேமுதிக தனியா நின்னா என்ன..."

"தனியா நிக்க தில் வேணும்... தள்ளாடுற ஆளெல்லாம் தனியா நிக்கவே முடியாது..." சொல்லிச் சிரித்தார்.


"என்ன நக்கலா...? மாற்றம் முன்னேற்றம்ன்னு சொல்லி வாயில மைக்கை வச்சிக்கிட்டு அந்நியன் மாதிரி பேசினா மட்டும் போதுமா...? அந்த கட்சிக்காரங்க யாரும் குடிக்கலையா என்ன...? விஜயகாந்த் தண்ணி போட்டதை நீங்க பாத்தீங்களா...?" சற்றே குரலை உயர்த்தினான் அவன்.

"ஏப்பா... சாப்பிடுங்கப்பா... அரசியல் எல்லாம் நமக்கு வேண்டாம்... பிரியாணி அரிசி நல்லா வெந்திருக்கான்னு பாருங்க..." என்றான் சமையல்.

"ஏங்க நாங்க மாற்றத்தை கொண்டு வரமாட்டோமா... ஒரு தடவை எங்களுக்கு ஓட்டுப் போட்டுத்தான் பாருங்களேன்... சும்மா எப்பப்பாரு எங்களை சாதிக்கட்சியின்னு கட்டம் கட்டுறீங்க..." எடுத்த சிக்கனை கடிக்காமல் கையில் வைத்துக் கொண்டு காரமாகப் பேசினார் அவர்.

"ஆமாமா... அதான் ஆணவக் கொலை குறித்து கேட்டதுக்கு ஆணவமாச் சிரிச்சிட்டுப் போனாரு... அட போங்கங்க... சாதிக்கட்சிகள் எல்லாம் சாதிங்கிற குறுகிய வட்டத்துக்குள்ளதான் இருக்கும்... அதைத் தாண்டி வரவும் செய்யாது... அந்த சாதிக்காரனுகளை வளரவும் விடாது... பேசாம சாப்பிட்டுப் போயி படுங்க... இல்லேன்னா கலைஞர் மாதிரி மானாட மயிலாட பாருங்க... உங்களுக்கெல்லாம் அரசியல் சரிவராது..." என்றான் அவன்.

"இப்ப என்னங்க... பெத்தவனுக்குத்தாங்க தெரியும் தன்னோட பிள்ளை ஓடிப்போன வலி... அது அவனை அருவா எடுக்க வைக்கிது.. நீ வேற சாதியில கல்யாணம் பண்ணிக்கிட்டு வா... நம்ம அமைப்பு உனக்கு எல்லாம் செய்யும்ன்னு ஏங்க ஏத்திவிடுறீங்க... படிச்சு நல்ல வேலையில இருக்கணும்... உன்னை காடு, கழனியில வேலை பாத்து... ஆடு மாடு மேய்ச்சு படிக்க வைச்ச ஆத்தா அப்பனுக்கு நல்ல பிள்ளையா இருக்கணும்ன்னு ஏன் சொல்லிக் கொடுக்க மறுக்குது இந்த சாதி... சும்மா அவரு சிரிச்சாரு... இவரு சிரிச்சாருன்னு... வலியை சுமந்த இதயங்களுத்தாங்க தெரியும்... அரசியல் பண்றதுக்காக கேள்வி கேக்கக் கூடாது... ஏன் இதை ஜெயலலிதாகிட்ட கேக்க வேண்டியதுதானே..."


"அது சரி... உங்க வாதம் நல்லாயிருக்கு... ஆஊன்னா அம்மாவை கேளுன்னு சொல்லிடுவீங்க... இந்த விஜயகாந்த்..." அவனை பேசவிடாமல் இடைமறித்த சமையல், "ஏய் ஆளாளுக்கு தண்ணி போட்டிருக்கானுங்க... பேச்சு வேற மாதிரி போகுது... பேசாம சாப்பிட்டு இழுத்துப் போர்த்திக்கிட்டு படு.." என்று அவனிடம் சொல்லிவிட்டு அவரைப் பார்த்து "அண்ணே அவன் எதாவது பேசுவான்... நீங்க பேசாம சாப்பிடுங்க" என்றபடி சிக்கன் பிரியாணியை தட்டில் வைத்து தயிர் பச்சடி எடுத்தான்.

சுருட்டை முடி 'உவ்வே' என்றான். அவனது தட்டில் இருந்த பிரியாணிக்குள் கலவைச் சாதம் சிரித்தது. "போங்கடா... நீங்களும் உங்க அரசியலும்... கஷ்டப்பட்டு சமைச்சவன் நானு... சந்தோஷமா சாப்பிட விட்டிங்களா...? வாராவாரம் இதே பொழப்பாப் போச்சு... ஓவராகுதுன்னு சொன்னா கேக்கமாட்டானுங்க..." எனக் கத்தியபடி தட்டை எடுத்துக் கொண்டு கை கழுவப் போனான்.

(நன்றி : படங்கள் இணையத்திலிருந்து)
-'பரிவை' சே.குமார்.

புதன், 16 மார்ச், 2016

மழையுமில்ல... வெளச்சலுமில்ல...

"ன்டாம்பி அங்க என்னடா கூட்டம்... ரெக்காட் டான்ஸ்காரனுங்க வந்திருக்கானுங்களா...?" கேட்டார் ராமசாமி

"இல்லப்பு... ஏதோ டிவிக்காரனுங்களாம்... நம்மளை எல்லாம் பேட்டி எடுத்துக்கிட்டு போயி போட வந்திருக்கானுங்களாம்..." சொன்னது கேசவன்.

"சன் டிவிக்காரனுங்களா...? நமக்கிட்ட என்ன இருக்கு பேட்டி எடுக்க..."

"சன் டிவியா... அவங்க எங்க இங்க வர்றாங்க... அவங்களுக்கு நாடகம் மட்டுந்தான் போடத் தெரியும்... இது ஏதோ  புதிய பரம்பரையின்னு ஒரு டிவியாம்... தேர்தல் வருதுல்ல... அதான்..."

"அது செரி... ஆமா அது என்னடாம்பி புதிய பரம்பரை... பேரு வித்தியாசமா இருக்கேடாம்பி..."

"ஆமா...  வித்தியாசமானவனுங்கதான்... பரம்பரை, பாரம்பரியம் பத்தியெல்லாம் நிகழ்ச்சி போடுவானுங்களாம்... நாடகம் போடமாட்டானுங்களாம்...சரி வாங்கப்பு நாமளும் போவோம்..."

"செரி வா... நம்ம மொவரக்கட்டையையும் டிவியில காட்டலாம்... இவனுக வர்றது தெரிஞ்சிருந்தா சவரம் பண்ணித் தொலைச்சிருப்பேன்... வெள்ளமுடி முள்ளு முள்ளா நிக்கிது பாரு..."

"க்க்கும்... சேவிங்க் பண்ணிட்டா மட்டும் அப்படியே அஜீத் மாதிரி இருப்பீங்களாக்கும்... சும்மா வாங்கப்பு... "

அவர்கள் இருவரும் புதிய பரம்பரை டிவிக்காரர்கள் இருந்த இடத்தை அடைந்தார்கள்.நண்டு சிண்டு என நாற்பது அம்பது பேர் கூடி நின்றார்கள். வடக்கி வீட்டு சவுந்தரம் தலையில் சாணிக் கூடையோடு நின்றாள். 'ஏய் ஓடிப்போயி கொட்டிட்டு வா... சாணிக்கூடையோட நிக்கிறது டிவியில தெரியும்ல்ல...' அப்போதுதான் முகம் கழுவி பவுடர் அடித்து வந்திருந்த சிகப்பி சொன்னாள். 'முதல்ல நீ முகத்தை துடை, புட்டாமாவு பூத்துப்போயி பொங்கலுக்கு சுண்ணாம்பு அடிச்ச மண் சொவரு மாதிரி இருக்கு ' என்றபடி நகர்ந்தாள் சவுந்தரம்.

"உங்க பேர் என்னங்க...?" மைக் வைத்திருந்தவன் எதிரே நின்ற கட்டையனிடம் கேட்டான்.

"பரமசிவம்..." சிரிப்போடு சொன்னான்.

"ஏன்டாம்பி... அதென்ன பரமசெவம்... பல்லாக்கு பரமசெவம்ன்னு சொல்லு..." பின்னால் இருந்து கத்தினார் ராமசாமி.

"அட ஏஞ்சித்தப்பு... பல்லாக்கைச் சொல்லிக்கிட்டு...." வெட்கப்பட்டான் பரமசிவம்.

"பல்லாக்கு பரமசிவம்..? அதென்னங்க பேருக்கு முன்னால பல்லாக்கு..." 

"ஏங்க... கலைஞர் கருணாநிதி... கேப்டன் விஜயகாந்த்... செல்வி ஜெயலலிதா,.. செந்தமிழன் சீமான் மாதிரி... பல்லாக்கு... ஏன் அவங்க மட்டும்தான் அடைமொழி வைக்கணுமா... நாங்களுந்தான் வைப்போம்..." கோபமாய்க் கேட்டான் கேசவன்.

"பல்லாக்குன்னா என்னன்னுதானேங்க  கேட்டேன்... அதுக்கு ஏன் இப்படி கோபப்படுறீங்க..."

"அது வேற ஒண்ணுமில்லங்க... இந்த சுத்துப்பட்டு ஊருல யாரு செத்தாலும் இவந்தான் பூப்பல்லக்கு கட்டுவான்... அதனால பல்லாக்கு பரமசெவம் ஆயிட்டான்..." என்றார் ராமசாமி.

"ஆமாங்க... ஆனா இந்தப் பயலுக்குத்தான் பல்லாக்கு எவன் கட்டப் போறான்னு தெரியலை..." சிரித்தாள் முத்துப்பிள்ளை.

"அப்பத்தாவுக்கு கொழுப்பைப் பாரேன்... உனக்கு இவந்தான் அப்பத்தோவ்..."  கூட்டத்தில் ஒருவன் கத்தினான்.

"இவனுக்கு மட்டுமில்லீங்க... அந்தா நிக்கிறான் பாருங்க அவன் கொட்டகை குணா... இந்த சுருட்டை முடி பால்கார பரமசெவம்... இந்த பய இருக்கானே இவன் கேசு கேசவன்... அந்தா அவன் மீசை முத்தையா... இது மரமேறி மாணிக்கம்... அந்த பச்சச்சட்டை மருந்து மகாலிங்கம்...."

"அட பேரெல்லாம் சுவராஸ்யமா இருக்கே பெரியவரே... விளக்கத்தைச் சொன்னீங்கன்னா நல்லாயிருக்கும்..."

"பந்தல் போடுறதால அவனுக்குப் பேரு கொட்டகை குணா... இதே குணசேகரன்னு இன்னொருத்தன் இருக்கான்... அவனுக்குப் பேரு காக்கா முள்ளு குணா... காலை காக்கா முள்ளாட்டம் விரிச்சி வச்சி நடப்பான்... ரெண்டு மூணு பேருக்கு ஒரே பேரு இருந்தா சொலபமா தெரிஞ்சிக்கத்தான் இப்படி அடமொழியோட கூப்புடுறது... அதே மாதிரி ஏழெட்டு பரமசெவம் இருக்கானுங்க... இவன் பால் ஊத்துறதால பால்கார பரமசெவம்... அவன் பல்லாக்கு பரமசெவம்... இவன் எதாச்சும் அடிதடிக்கு போயி அடிக்கடி போலீசுக்குப் போறதால கேசு கேசவன்... அவன் முறுக்கு மீசை வச்சிருக்கதால மீசை முத்தையா... எந்த மரமா இருந்தாலும் சர்வ சாதாரணமா ஏறுவான்... மேல கவட்டையில படுத்து தூங்கவும் செய்வான்... அதனால மரமேறி மாணிக்கம் ஆயிட்டான்... நாட்டு மருந்து கொடுக்கிறதால மருந்து மகாலிங்கம்... இன்னும் நிறைய இருக்கு ஒட்டக்குண்டி ஓம்பிரகாசு... தொத்த முருகன்... விருட்டி மகாலிங்கம்.. இப்படி நிறைய..."

"அது சரி... பேருக்கு முன்னால அடைமொழியோட நல்லாயிருக்கே... இதை வச்சி ஒரு தொடர் பண்ணலாம் போலவே..." கேமராமேன் சிரித்தான்.

"இவ்வளவு பேசுறாரே இவரு பேர் என்னன்னு தெரியுமா...?" அவர் பெயரைச் சொல்லும் ஆவலில் கேட்டான் பரமசிவம்.

"சொன்னாத்தானேங்க தெரியும்...?"

"ராக்கோழி ராமசாமி..."

"அதென்னங்க ராக்கோழி..?"

"மனுசன் ராத்திரியில பகல் மாதிரி தூங்கமா எதாவது நோண்டிக்கிட்டே இருப்பாரு... அதுவும் விவசாய சமயத்துல வயல்லேதான் கிடப்பாரு... தண்ணி பாச்சுறது... நிலா வெளிச்சம் இருந்தா கருதுகூட ராத்திரியில ஒரு வயல அறுத்து முடிச்சிருவாரு... அதான் ராக்கோழி..".

ராமசாமி ரொம்ப வெக்கப்பட்டார். "எங்களுக்கு மட்டுமில்லம்பி... வூடுகளுக்கும் பேரு இருக்கு..."

"வீடுகளுக்குமா...? அதையும் சொல்லுங்க கேப்போம்..." என்றார் மைக் பிடித்திருந்தவன்.

"டேய் வந்த வேலையை விட்டுட்டு..." கேமராமேன் கத்தினான்.

"அட இரு மாப்ள... சுவராஸ்யமா இருக்கு..."

"முதல்ல ஊருக்குள்ள கந்தசாமிப்பய தாத்தா ஓட்டு வூடு கட்டுனதால அந்த வூட்டுக்குப் பேரு ஓட்டு வூடு... அப்புறம் மேல வூடு... கீழ வூடு... சுண்ணாம்புக்கார வூடு... மெத்த வூடு... மூத்தவரு வூடு... இளையரு வூடு... புதுப்பணக்கார வூடு... இப்படி நிறைய தம்பி..."

"அது சரி... ஆமா பொம்பளைங்களுக்கு அடைமொழி இல்லையா...?" மைக் வேகமாகக் கேட்டான்.

"உன்னைய தூக்கிப் போட்டு மிதிக்கப் போறானுங்கடி..." காதுக்குள் சொன்னான் கேமரா.

"ஏன் இல்லாம... ரெண்டு மூணு செவப்பி இருக்குதுக... சுண்டமுத்தி செவப்பி...  நாச்சாங்குளம் செவப்பி... மங்கலம் செவப்பி... அப்புறம் முப்பையூர் மீனா... வெங்களூர் வெஜயா... மேலமடை வெஜயா... இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்ப்பூ..." என்றார் ராமசாமி.

"அதென்ன பெண்களுக்கு மட்டும் ஊருப் பேர் முன்னால... அவங்க உங்க ஊர் இல்லையா...?"

"எங்கூருதாங்க... வாக்கப்பட்டு வந்தாலும் அவங்க பொறந்த ஊர் பேரை வச்சி சொன்னாத்தான் வெரசா யாருன்னு புரிஞ்சிக்க முடியும்... ராமாயின்னு சொன்னா... யாரு முத்தூரணி ராமாயியா... பூசலாகுடி ராமாயியான்னு கேக்கணும்... அதுக்கு பூசலாகுடி ராமாயின்னு சொல்லிட்டா போச்சுல்ல... ஆரம்பத்துல ஊர்ப் பேரு... அப்புறம் வயசாக வயசாக வீட்டுப் பேரைச் சொல்லி... மேலவீட்டு செல்வி... கீழ வீட்டு அழகுன்னு கூப்பிட ஆரம்பிச்சிருவோம்..." விளக்கினான் கேசவன்.

"அது சரிங்க... ரொம்ப சுவராஸ்யங்க..."

"நகரத்துல இப்படியெல்லாம் பாக்க முடியாது தம்பி... இங்கதான் மனுசங்களுக்கு.... வூட்டுக்கு... வயலுக்கு... ஏ... ஆடு மாடு கோழியின்னு எல்லாத்துக்கும் பேரு இருக்குங்க... "

"சரிங்க... இதை வச்சி ஒரு தொடர் போடலாமான்னு எங்க மேனேஜர்க்கிட்ட கேட்டுட்டு வர்றோம்... இப்ப வந்த வேலையைப் பார்க்கிறோம்... யாருக்கு ஓட்டுப் போடுவீங்க... எதுக்காக அவங்களுக்குப் போடுவீங்க.. ஒவ்வொருத்தரா சொல்லுங்க பார்ப்போம்..."

"அட ஏந்தம்பி... யாருக்கு ஓட்டுப் போட்டு என்னங்க பண்ண... பாத்தியளா பட்டப்பகல்ல நடுரோட்டுல எல்லாரும் பாத்துக்கிட்டு நிக்கிறப்பவே பொறுமையா வண்டியை நிறுத்தி நின்னு நிதானமாக கூறுபோட்டுட்டு எதுவும் நடக்காத மாதிரி மெதுவா வண்டி ஏறிப் போறானுக... இந்த சாதிதானேங்க இன்னைக்கு எல்லாத்துலயும் நிக்கிது... சாதிக்கட்சி எல்லாம் நாங்க வந்தா மாத்தம் வரும்ன்னு சொல்றாக... என்னங்க மாத்தம் வரும்... இன்னைக்கு நடக்குறது இன்னும் அதிகமா நடக்கும்... எந்த சாதிக்காரன் ஆட்சிக்கு வாரானோ அவஞ் சாதிக்காரனுங்க ஆடுவானுக... யாரு வந்தாலும் ஊரு திருந்தாது... திருந்த விடமாட்டானுக... இனி ஆளாளுக்கு பயமில்லாம கத்தி எடுப்பானுக தம்பி... அரசு என்ன பண்ணும்..? ஒண்ணுமே பண்ணாது... என்னா அவனுங்க அரசியல் பண்ண சாதியும் மதமும் வேணும்... அப்ப அப்ப இந்த மாதிரி கொலைகளும் வேணும்... பணமிருக்கவன் கோடியில கடன் வாங்கிட்டு கம்பி நீட்ட அரசாங்கமே உதவி பண்ணும்... ஆனா நாங்க விவசாயத்துக்கு வாங்கிட்டு ஆயிரம் ரூபாய் கட்டளையின்னா போலீசை வச்சி அடிப்பானுங்க... இதுதான் இன்னைக்கு நிலமை..." ராமசாமி பேச்சை நிறுத்தி மைக்கைப் பார்த்தார்.

"உண்மைதான் பெரியவரே..." என்றான் மைக்.

மற்றவர்கள் பேசாமல் நிற்க மீண்டும் அவரே தொடர்ந்தார்... "சரி விடுங்க... யாரு வந்தாலும் எங்க வாழ்க்கை எல்லாம் இப்படித்தான்.... காய்ஞ்சு போன வயலாட்டம்... வானம் பாத்த பூமியான எங்க வயலாச்சும் மழை பெஞ்சா வெளையும்... ஆனா எங்க வாழ்க்கையில மழையுமில்ல... வெளச்சலுமில்ல தம்பி... எங்களுக்கு ஒரு மாத்தமும் வராது தம்பி... ஒவ்வொரு தடவையும் சொல்லுவானுக... ஆனா இதுவரைக்கும் ஒரு மாத்தமும் இல்லை... இருபது வருசத்துக்கு முன்னால போட்ட ரோடு... போன வருசம் அதுமேல பேருக்கு கல் பரப்பி தாரை ஊத்தித்துப் போனானுங்க... பெஞ்ச மழையில எல்லாப் பக்கமும் அரிச்சிக்கிட்டு ஓடியிருக்கு... வரும்போது பாத்திருப்பியே... இனி என்ன மாத்தம் வரப்போகுது சொல்லுங்க... எங்க எம்.எல்.ஏ. அஞ்சு வருசமா இருக்கமா செத்தமான்னே வந்து பாக்கலை... அவருக்கு போடமாட்டோம் மாத்தித்தான் போடுவோம்ன்னு சொல்லி... அந்தாளே திரும்ப ஜெயிச்சிட்டா டிவியில மட்டும் அவனுக்குப் போடுவோம்ன்னு சொன்னே... இப்ப எங்கிட்டதானே வந்து நிக்கிறேன்னு எதாவது நல்லது கெட்டதுக்கு போயி நின்னா விதண்டாவாதம் பண்ணுவான்.. எதுக்குங்க... எப்படியும் எல்லாக்கட்சிக்காரனும் பணம் கொடுப்பானுக... எல்லார்கிட்டயும் பணத்தை வாங்கிக்கிட்டு அங்க என்ன தோணுதோ அதுல குத்திட்டு வரப்போறோம்... இதையெல்லாம் டிவியில போடாதீங்க... உங்களுக்கு புண்ணியமாப் போகும்..." என ராமசாமி பொரிந்து தள்ள , மற்றவர்கள் ஆமோதிப்பது போல் பேசாமல் நின்றனர் .

-'பரிவை' சே.குமார்.

சனி, 12 மார்ச், 2016

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-8)

முந்தைய பகுதிகளை வாசிக்காதவர்கள் வாசிக்க...


பகுதி-1             பகுதி-2            பகுதி-3            பகுதி-4           பகுதி-5       பகுதி-6          பகுதி-7

ண்ணனின் பேஸ்புக் ஐடியை சுபஸ்ரீ கேட்டதும் “அண்ணன் யாருக்கும் கொடுக்க மாட்டாங்க... உனக்கெதுக்கு அவங்க ஐடி... உங்காளு ஐடி இருக்குல்ல... அது போதும்...” என்றாள் அபி.

“ஏன்டி... உங்க கண்ண அண்ணனோட சொத்தையா எழுதிக் கேக்கிறோம்... கொடுக்க மாட்டேன்னு சொல்றதுக்கு... ஐடிதானே... என்ன சொன்னே உங்க அண்ணன் ஐடி இருக்கா... ஏதாவது உருப்படாத ஜோக்கை எவனாச்சும் ஷேர் பண்ணியிருந்தா இவாளும் ஷேர் பண்ணிவிடுவா... அதுல ஹா...ஹா...ன்னு வேற போட்டுவிடுவா... அது ஹா...ஹாவே இல்ல... கழுத்தறுப்பா இருக்கும்...”

“சரி விடு... கட்டிக்கப் போறவ அப்படியெல்லாம் பேசக்கூடாது... ஓகே”

“அதை விடு... இப்பத் தருவியா... மாட்டியா..?”

“இரு ஒரு நிமிஷம்...” என்றவள் “கண்ணண்ணா....” எனக் கூப்பிட, முன்னாள் சென்று கொண்டிருந்த கண்ணன் திரும்பி, “என்ன அபி..?” என்றான்.

“எங்க அம்முக்கு உங்க பேஸ்புக் ஐடி வேணுமாம்... கொடுக்கட்டுமா...?”

“அட அது எதுக்குங்க... நான் அதில் அதிகம் இருக்கிறதில்லை.... சும்மா யாராச்சும் எழுதினதை ஷேர் பண்ணுவேன்... எனக்கு அதுல உக்காந்து பொழுதைப் போக்க பிடிக்காதுங்க... அது ஒரு நேரம் கொல்லி... நம்மளை அடிமையாக்குறதுல ஆல்கஹாலைவிட கொடுமையானது... வாரத்துல ஒரு நாள் பார்ப்பேன்... அவ்வளவுதான்... நீங்கள்லாம் பிரண்டாயிட்டு தினம் ஏதாவது பதிவீங்க... வந்து லைக் போடலை, கமெண்ட் போடலைன்னு வருத்தப்படுவீங்க... அதெல்லாம் எனக்கு சரி வராதுங்க... என்னோட பிரண்ட்ஸ் கூட எனக்கு பிரண்ட் இல்லை... அபி ஒரு தடவை ரொம்ப நச்சரிச்சா... அதான் கொடுத்தேன்... சாரதி கூட என்னோட பிரண்ட் லிஸ்ட்ல இல்லை தெரியுமா...?” என்றான்.

“சரி விடுங்க... இவளுக்கு எதுக்கு கொடுக்கணுமின்னு நினைக்கிறேள்... அதுக்காக கதை விடுறேள்... எனக்கு எத்தனையோ பிரண்ட்ஸ் இருக்கா... நல்லா எழுதுவீங்கன்னு அபி சொன்னாளேன்னு கேட்டேன்... ஒகே... “ என்றவள் அதன் பின் அது குறித்து பேசவில்லை.

இரவு சாப்பாடு முடிந்து எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பும் போது,  சுபஸ்ரீயிடமும்  “வர்றேங்க... வாய்ப்பிருந்தால் மீண்டும் சந்திப்போம்” என்ற கண்ணன், “என்னோட முகநூல் ஐடி ராமக்கண்ணன், இங்கிலீஸ்ல... ரெண்டு ‘K’ போடணுங்க...” என்றான்.

“அதை நான் கேக்கலைங்களே... எனக்கு எதுக்குங்க உங்க ஐடி... இந்தா இன்னைக்கு எங்க அத்தை வீட்டுக்கு வந்தேள்... பேசிண்டிருந்தோம்... அவ்வளவுதான்... இனி மறுபடியும் பார்ப்போமா தெரியாது... ஒருவேளை எங்க மேரேஜ்க்கு ஊரில் இருந்தா வருவேள்... இல்லேன்னா அதுவுமில்லை... பின்ன எதுக்கு உங்க ஐடி எனக்கு...” என்று படக்கென்று சொன்னாள்.

அவள் அப்படிச் சொன்னதும் கண்ணன் அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை, அவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள். “வயசுப் பொம்மனாட்டிகளுக்கு வேற ஆம்பளைங்க கூட வீதியில நின்னு என்னடி பேச்சு வேண்டிக்கிடக்கு” என பாட்டி திண்ணையில் இருந்து கத்த, “பாட்டி... சித்த சும்மா இரு...” என கடுப்பாய்ச் சொல்லி கண்ணன் மீது உள்ள கோபத்தை பாட்டி மீது இறக்கினாள். 

“உனக்கு ரொம்ப செல்லங் கொடுத்து கொடுக்கிறாங்கடி... இது எதுல போயி முடியப் போறதோ... பகவானுக்குத்தான் வெளிச்சம்...” பாட்டி பதிலுக்குச் சொல்ல, “நோக்கு நான் எவாளையாச்சும் கூட்டிண்டு ஓடிடுவேன்னு எண்ணமோ... அதுக்குத்தான் எனக்கு ஆம்படையான் பார்த்து வச்சிருக்காளே... அவாளோட ஓடிணாத்தான் உண்டு... பயப்படாதேள்... பசங்க கூட ரோட்டுல நின்னு பேசுறது ஒண்ணும் தெய்வக் குத்தமில்லே... இது அந்தக்காலம் மாதிரி இல்லை... புரிஞ்சுக்கோ...” என்று அவளருகில் சென்று கத்திவிட்டு வேகமாக தன் வீட்டை நோக்கி நடந்தாள்.


வாத்தியார் வாசுதேவன் தன்னை முறைத்துவிட்டுச் சென்றதும் அவரின் பேச்சுக்கு கட்டுப்பட்டு வந்த பையன்கள் கிளம்பவும் வேலாயுதத்துக்கு கோபம் தலைக்கேறியது. “முத்து... நம்ம கொடிக்கம்பு, போர்டைச் சுற்றி முள்ளு வெட்டிப் போடச் சொல்லு... என்னோட சொந்தச் செலவுல சுத்தி ஒத்தக்கல்லு வச்சி கட்டித்தாறேன்... அவனுக இன்னைக்குப் போனாலும் இன்னொரு நாளைக்கு வேணுமின்னே பக்கத்துல போர்டு வைப்பானுங்க... நல்லா சிலாங்கமா எடம் போட்டு முள்ளடைச்சு வையுங்க... என்ன...”

“சரிய்யா... இந்தா இப்பவே செஞ்சுபுடுறோம்... கொக்காலி... இனி நாமளா அவனுங்களான்னு ஒரு கை பார்த்துடுவோம்...”

“ஏய் முத்து... அவனுங்கதான் வாத்தியார் பேச்சுக்கு மறுபேச்சு பேசாம கிளம்பிட்டானுங்களே... இனி எதுக்கு பிரச்சினைக்கு வரப்போறானுங்க... சுத்தி அடச்சி, கல்லு வைச்சிக்கட்டி நாமளே ஊருக்குள்ள பிரச்சினை பண்ணனுமா என்ன... அதான் தலைவர் வந்தாரு... கொடி ஏத்தியாச்சு... போர்டு வச்சாச்சு... பின்ன என்ன... போங்கப்பா போயி வேலையைப் பாருங்க...” என்றார் பஞ்சநாதன்.

“ஏப்பா... எப்பப் பார்த்தாலும் நீ இப்படித்தான் பேசுறே... நமக்கு நம்ம ஜாதி மேல பற்று இருக்கணும்... சும்மா எதாவது சொல்லி அவனுங்க மனசை மாத்தப் பாக்காதே... உன்னோட வேலையைப் பாரு... உனக்கும் அந்த வாத்திக்கும் ஊருக்கு உபதேசம் பண்றதே பொழப்பாப் போச்சு...” என்று கத்திய வேலாயுதம், பிரசிடெண்டைப் பார்த்து “நீங்க வாங்க.... வீட்டுல போயி காபி சாப்பிட்டுட்டு போகலாம்” என கூட்டிக் கொண்டு போனார்.

“ஏத்தா செல்வி... உங்காத்தா இன்னும் நெல்லவிக்கலையா...?” என்றபடி வீட்டிற்குள் கிடந்த சேரை எடுத்துப் போட்டு, பேனைத் தட்டிவிட்டு பிரசிடெண்ட்டையும் அவரு கூட வந்த ரெண்டு மூணு பேரையும் உட்காரச் சொன்னார்.

“இப்ப ரெண்டாவது அண்டா போட்டுக்கிட்டு இருக்கு... இன்னொரு அண்டா போடணுமின்னு சொன்னுச்சு....”

“சரி... ஐயாவுக்கு காபி போடு... நல்லா பாலு ஊத்தி நறுக்குன்னு போட்டுக் கொடு... ஆமா... மூணு அண்டா காயப்போட பக்கத்துல களம் இருக்கா...?”

“ம்... அம்புலாருவிட்டு களத்துல கேட்டிருக்கு... போடுற வெயிலுக்கு அரமணி நேரத்துல சுருளக் காஞ்சிருமில்ல...”

“ம்... மாப்ள சாப்புட வருவாரா...?”

“வரமாட்டாரு.... வேலை இருக்காம்... எங்களை வரச் சொல்லிட்டுப் போனாரு...”

“சாயந்தரம் நாங் கொண்டு போயி விடுறேன்...” என்றவர், அவர்கள் காபி குடித்துக் கிளம்பும் வரை பேசிக் கொண்டிருந்தார். அவர்கள் கிளம்பியதும், “சரித்தா... நா போயி உங்காத்தா நெல்லவிக்கிறதை ஒரு எட்டு பாத்துட்டு வாறேன்... நம்ம பந்தடிமனை முக்குல ஒரு பொம்பளை மீன் விப்பா... நல்ல மீனா வச்சிருப்பா... போயி வாங்கிட்டு வாறேன்... குழம்பு வச்சி சாப்பிட்டு மாப்பிள்ளைக்கும் எடுத்துக்கிட்டு போகலாம்... அவருக்கு மீனுன்னா உசிருல்ல...” என்றபடி துண்டை உதறி தோளில் போட்டார்.

அப்போது வீட்டுக்குள் இருந்த போன் அடித்தது.

(அடுத்த சனிக்கிழமை தொடரும்...)


************

பிரதிலிபி போட்டியில் இருக்கும் 'நேசம் சுமந்த வானம்பாடி' குறித்து அவரின் நினைவுகளுடன் தனிப்பகிர்வாக, அவர் அந்தக் கதைக்கு எழுதிய கருத்துடன் பகிர்ந்திருக்கிறார் அன்பின் ஐயா. துரை. செல்வராஜூ அவர்கள். ஐயாவுக்கு என் நன்றி.

அவரின் பகிர்வு பார்க்க 'இங்கு' சொடுக்குங்கள்.
-‘பரிவை’ சே..குமார்.

வெள்ளி, 11 மார்ச், 2016

வாக்காளர் அலப்பறை...2

வன் அறைக்குள் நுழையும் போது காரசாரமான அரசியல் அரட்டை அரங்கேறிக் கொண்டிருந்தது. அவனைப் பார்த்ததும் அவர் ஹெட்செட்டை எடுத்து மாட்டப்போனார். புதியவர் ஒருவர் காலியான கட்டிலில் அமர்ந்திருந்தார். அறை நிர்வாகி, இவருதான் நம்ம அறைக்கு புதிதாக வந்திருக்கிறார் என்று அவனுக்கு புதியவனை அறிமுகம் செய்து வைத்தார். சம்பிரதாய 'ஹாய்'க்குப் பிறகு அவன் உடை மாற்றி, பாத்ரூம் போய் கைகால் முகம் கழுவி வந்து தனது கட்டிலில் அமர்ந்தான்.

"இப்ப பாத்தீங்கன்னா.. இந்த விஜயகாந்த் பேரம் படியிறதுக்கு முன்னாலயே அம்மாக்கிட்ட பெட்டியை வாங்கிக்கிட்டு தனியா நிக்கிறேன்னு சொல்லிட்டான்..." என்று அவர் புதியவனிடம் சொன்னார்.

"இருக்காதுங்க... அவர் பெட்டி வாங்குற ஆள் மாதிரி தெரியலைங்க... சும்மா அவரு இப்படிப்போனா அப்படின்னும் அப்படிப்போனா இப்படின்னும் கிளப்பிவிடுறாங்க... என்ன இருந்தாலும் அந்தாளுக்கு பின்னால இருந்து அவரை சரியாச் செயல்பட வைக்க யாரோ ஒரு ஆள் இருக்கான்..." புதியவன், பெரிய அரசியல் விரும்பி போல, இனி தேர்தல் வரைக்கும் இவனுங்க தந்தி, புதிய தலைமுறை, சத்தியம் தொலைக்காட்சிகள் மாதிரி விவாதம் நடத்தியே கொல்லப் போறானுங்களே என்று நினைத்தபடி நீட்டி நிமிர்ந்து படுத்தான் அவன்.

"என்னத்தங்க செயல்பட்டான்...  எல்லாம் பொண்டாட்டியும் மச்சினனும்தான்... பேசி முடிச்ச்சிட்டானுங்க....ஐநூறு கோடி தர்றேன்னு கலைஞர் சொன்னாரம்... அதுவும் ஒரே பேமெண்ட்டா... அதுக்குள்ள பிரேமலதா அம்மாக்கிட்ட அதுக்கும் மேல பேசி முடிச்சிட்டாளாம்... எல்லாப் பயலும் களவாணிப் பயலுகதான்...." என்றார் அவர்.

'இந்தாளு அடங்கமாட்டான் போலவே...' என்று நினைத்து 'ஏதோ பேச வாயெடுத்தவன், வேணான்டா வீணாவுல பிரச்சினையை இழுக்காதே'ன்னு பக்கத்தில் கிடந்த புத்தகத்தை பிரித்து படிக்கலானான்.

"எல்லாரும் ஒரு முடிவுக்கு வந்துட்டானுங்க.. இந்த விஜயகாந்த் காசை வாங்கிக்கிட்டு தனியின்னு தொண்டர்களை ஏமாத்துறான்... இவனெல்லாம் ஒரு அரசியல்வாதி... கேவலமான அரசியல்வாதிங்க... எனக்கு முன்ன இவனை ரொம்ப பிடிக்கும்... இப்பல்லாம் சீமான்தான்..." என்றார் அறை நிர்வாகி.

"விஜயகாந்த் ஒரு கிறுக்கனுங்க... திமுக போனான்னா... அப்புறம் வைகோ நிலமைதான்... ஒண்ணுமில்லாமப் போக வேண்டியதுதான்... இப்ப தனியன்னு வேற சொல்லிட்டான்... ஆள் காணமப் போகப்போறான்... இவனுக்கு பேசவும் தெரியலை... கட்சி நடத்தவும் தெரியலை... இவனெல்லாம் ஒரு தலைவர்..." என்றார் அவர் அறை நிர்வாகி கொடுத்த லீடைப் பிடித்துக் கொண்டு சந்தோஷமாய்.

"அவனுக்கு கட்சி நடத்தத் தெரியலைன்னா விவரமாப் பேசுற நீங்க ஒரு கட்சி ஆரம்பிக்கலாமே?" புத்தகத்தை வைத்துவிட்டு எழுந்து அமர்ந்தான் அவன்.

"இவரு ஒருத்தரு சும்மா ஏதாவது சொல்லிக்கிட்டு... அரசியல் தெரிஞ்சாப் பேசணும்..." சூடானார் அவர்.

"அது சரி... அப்ப நீங்க அரசியலைக் கரைச்சிக் குடிச்சிருக்கீங்க... சரி... சரி... பொலிட்டிக்கல் சயின்ஸ் படிச்சிட்டுத்தான்... ஆபீஸ்ல கம்ப்யூட்டரையும் பிரிண்டரையும் கட்டிக்கிட்டு கெடக்கீங்களாக்கும்... பேசுங்க... நமக்கு அரசியல்ல அரிச்சுவடு தெரியாது.. நீங்க தெரிஞ்சவங்க பேசுங்க..." கடுப்பாகச் சொல்லி விட்டு மீண்டும் படுத்து புத்தகம் வாசித்தான்.

"ஏம்ப்பா... எப்பவும் அவரு கூட மோதிக்கிட்டு... நம்ம ரூமுக்குள்ள நாமெல்லாம் பேசிக்கிட்டு இருக்கதே அரிது. ஏதோ அரசியல் பேசுறதால எல்லாரும் பேசிக்கிறோம்... இல்லேன்னா ஊருக்குப் பேசவும்... கம்ப்யூட்டர்ல படம் பாக்கவுமாத்தானே நாங்க பொழுதை ஓட்டுவோம். நீ ஏதாவது புக்குப் படிச்சே ஓட்டிருவே... சத்த நேரம் சும்மா இருவே..." என்றார் அறை நிர்வாகி.

"சரிங்க... நீங்க பேசுங்க... நான் ஒண்ணும் பேசலைங்க.." என்றான் அவன்.

"இந்த விஜயகாந்த் திராவிடக் கட்சிகள் மேல மாறி மாறி சவாரி செஞ்சு வைகோ மாதிரி காணமப் போகப்போறான்னு பார்த்தேன்... ஆனா தனியா நிக்கிறேன்னு தனக்குத்தானே மண் அள்ளிப் போட்டுக்கிறான்" தனக்கு ஆதரவாக அறை நிர்வாகி பேசிய சந்தோஷத்தில் மீண்டும் விஜயகாந்தை இழுத்தார் அவர்.

"என்னங்க சொல்றீங்க... திராவிடக் கட்சிகள் மேல சவாரி செஞ்சி வைகோ மட்டும்தான் காணாமப் போனாரா?" புதியவன் கேட்டான்.

"இல்லைங்களா பின்னே... ரெண்டு பேருக்கும் இவர்தான் மாற்றுன்னு நினைக்கும் போது பெட்டிக்கு ஆசைப்பட்டு இங்கிட்டும் அங்கிட்டுமா மாறி மாறி சுத்தமா அழிஞ்சிட்டாரா இல்லையா?"

"என்னங்க சொல்றீங்க... வைகோ மட்டும்தான் மாறி மாறி அழிஞ்சாரா..? வேற யாருமே மாறி மாறி சவாரி பண்ணலையா..?" இது அறை நிர்வாகி.

"வேற யாருங்க... வைகோ மட்டுந்தான் பெட்டிக்கு மயங்கினாரு... இப்ப விஜயகாந்த்..."

"ஏங்க அப்ப பாமக, விசிக, காங்கிரஸ், பிஜேபி, கம்யூனிஸ்ட் அப்புறம் லொட்டு லொசுக்கு கட்சிங்க... என எல்லாருமே திராவிடக் கட்சிகள் மேல சவாரி பண்ணி சாஞ்சி போயித்தானே கிடக்காக... வைகோவும் விஜயகாந்தும் மட்டுமா சவாரி பண்ணினாங்க..."

"காங்கிரஸ், பிஜேபியை விடுங்க... மத்தவங்க சவாரி பண்ணினாலும் தனக்குன்னு ஓட்டு வங்கி வச்சிருக்காங்க... கட்சியை வளர்த்திருக்காங்க... ஆனா வைகோ... இப்ப ஒன் மேன் ஆர்மி மாதிரி ஆயிட்டாரு..."

புதியவன் சிரித்தான்... 

"எதுக்கு சிரிக்கிறீங்க.. உண்மையைத்தானே சொல்றேன்..."

"பின்னே என்னங்க... யாருக்குங்க ஓட்டு வங்கி இருக்கு... ஒன்றை சதவீதமெல்லாம் ஒரு ஓட்டு வங்கியா...? அட ஏங்க ஜோக் அடிச்சிக்கிட்டு... உங்களுக்கு பிடிச்ச கட்சிங்க மாறி மாறி சவாரி பண்ணினாலும் தகுதியோட இருக்காங்கன்னு சொல்றீங்க... மத்தவங்க மாறி மாறி சவாரி பண்ணி தகுதியை இழந்துட்டாங்கன்னு சொல்றீங்க... நல்லாயிருக்கு உங்க நியாயம்..?"

"அதானே... என்னங்க நீங்க.. சீமான் அடுத்த முதல்வர் நாந்தான்... இதை இதை இப்படி இப்படி பண்றோம்... சிங்கள மீனவனைப் பிடிச்சி சிறையில போடுறோம்... அப்புறம் அவன் வந்து எங்கிட்ட எங்காளுங்களை விடுங்கன்னு கைகட்டி நிப்பானுல்லன்னு ஒரு பேட்டியியல் சொல்லிட்டு, திமுக - அதிமுகவை யாராலும் ஜெயிக்க முடியாது. நான் மக்கள் நலக் கூட்டணியை விட அதிக ஓட்டு வாங்குறேன்னு தந்தி டிவி விவாதத்துல சொன்னாரே அது மாதிரி பேசுறீங்க..." என்றார் அறை நிர்வாகி.
"உண்மைதானேங்க... இன்னைக்கு மாற்றம் முன்னேற்றமுன்னு சில பேர் கிளம்பியிருக்காங்கதானே... ஏன் ஒரு தடவை ஆட்சியைக் கொடுத்துப் பார்க்கக் கூடாது... வித்தியாசமானவங்க வரட்டுமே..." என்றார் அவர்

"யாருங்க வித்தியாசம்...? எல்லாருமே ஒரே குட்டையில ஊறின மட்டைதான்... சரி மாற்றம் முன்னேற்றம்... நாங்கதான் முதல்ல சொன்னோம்ன்னு சொல்றாங்க... அதை ஓபாமாதானே முதல்ல போட்டாரு... நாம காப்பிதானே பண்ணினோம்..." என்றான் புதியவன்.

புத்தகம் படிப்பது போல் மூவரின் விவாதத்தை கேட்டுக் கொண்டிருந்தான் அவன். மனசுக்குள் '[லூசுப் பயலுக, இந்த ரங்கராஜ் பாண்டே இவனுகளை வச்சி ஒரு விவாதம் நடத்தலாம்... என்னமாப் பேசுறானுங்க... சீமான் மாதிரி...' என்று நினைத்து சிரித்துக் கொண்டான்.

"நீங்க வேற நம்ம சரத்குமார் 'மாற்றத்தை நோக்கி' அப்படின்னு போட்டதைப் பார்த்துத்தான் ஓபாமாவே போட்டாராம்... ஒரு பேட்டியில ஓபாமாவுக்கே நாந்தான் முன்னோடியின்னு சொன்னாரு..." என்றார் அறை நிர்வாகி.

"சரத்குமார், கார்த்திக் எல்லாம் கட்சி நடத்துறது நடிப்பு மாதிரியின்னு நினைச்சிட்டானுங்க... அப்ப அப்ப எதாவது பேசி சிரிக்க வைக்கிறதே வேலையாப் போச்சு... இப்ப இதுல வைகோவும் விஜயகாந்தும் சேர்ந்தாச்சு.." என்றார் அவர். அவரின் டார்க்கெட் விஜயகாந்தும் வைகோவும்தான் என்பது அவரின் பேச்சில் தெரிந்தது.

"உங்க எண்ணத்துல இருக்கிற கட்சி தவிர மத்தவங்க எல்லாமே சரியில்லைன்னு சொல்றீங்க.."

"பின்னே என்னங்க... உண்மையைத்தானே சொல்றேன்... மநகூ கூட அதிமுக பி அணிதான்... நீங்க வேணுன்னா பாருங்க... தேர்தலுக்குள்ள கூட்டணியைக் கழச்சிட்டு அம்மாக்கிட்ட போறாங்களா இல்லையான்னு... விஜயகாந்துக்கு பொட்டி போயாச்சு... அவன் தனியா நின்னு சரக்கடிச்சு சாவான்... இல்லாட்டி பொண்டாட்டியும் மச்சினனும் தூக்கிப் போட்டு மிதிச்சிக் கொல்லுவாங்க... சீமான் சும்மா தமிழன் தமிழன்னு கூவிட்டு குப்புறப்படுத்துருவான்... இன்னைக்கு திராவிடத்துக்கு மாற்று ஒரே கட்சிதாங்க... இந்த தேர்தல்ல இல்லாட்டியும் 2021 அவங்க ஆட்சிதாங்க.. அதுல மாற்றம் இல்லை... நீங்க எழுதி வச்சிக்கங்க...." வேகமாய்ப் பேசினார் அவர். புதியவன் இதற்கு மேல் இவரிடம் பேச முடியாது என துண்டை எடுத்துக் கொண்டு குளிக்கக் கிளம்பினான். 

"அட ஏங்க நீங்க வேற... சுத்தி சுத்தி அங்கதான் வாறீங்க..." என அறை நிர்வாகி அலுத்துக் கொண்டார்.

புத்தகத்தை வைத்து விட்டு எழுந்த அவன் "சோ சாகக் கிடக்கிறாராம்... அரசியல் சாணக்கியன் இடம் காலியா இருக்காம்... இவ்வளவு விவரம் தெரிஞ்ச நீங்க, சும்மா இங்க ஒரு அறைக்குள்ள கிடந்து ஒண்ணுமில்லாம காலம் தள்ளக்கூடாது. போங்க... அங்க போயி சோ இடத்தைப் பிடிங்க... தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் சக்தியாக மாறலாம்... " என அவரிடம் சொல்லிவிட்டு, "என்னங்க அறையில இருக்கணுமா... இல்ல அறை மாறணுமா... என்னால முடியலை... மாற்றம்... முன்னேற்றம் எல்லாம் தமிழகத்துல வரட்டும்... இங்க இப்ப கண்டிஷன் ரொம்ப இறக்கத்துல இருக்காம்... நமக்கு ஏற்றம் வருதான்னு பார்ப்போம்... சும்மா அரசியல் பேசுறேன்னு வெறுப்பேத்தாதீங்க... அவனவன் சைட்டுல வெயில்ல கிடந்து செத்துப் போயி வர்றான்..." என அறை நிர்வாகியிடம் சொன்னான்.

நிர்வாகி சிரித்துக் கொண்டே "இருங்க சுலைமானி போட்டுக்கிட்டு வாறேன்..." எனக் கிளம்ப, அவரோ வாய்க்குள் முணுமுணுத்தபடி 'சூப்பர் சிங்கர்' பார்க்க ஆரம்பித்தார். 

"நான் யாரு...? நான் யாரு...? கொய்யால நான் யாரு....? நான் ராஜா... " என அவனின் மொபைல் அடிக்க, எடுத்து "என்ன மாப்ள..." என்றான். எதிர்முனை ஏதோ சொல்ல, "ஏலே... அங்கயும் இதானா... சைட்ல முசிறிகூட மல்லுக்கட்டிட்டு வந்தா... அரசியல் பேசியே கொல்றானுங்கடா... இவனுக ஒரு பய ஓட்டுப் போட போகமாட்டான்... பேச்சு மட்டும் சீமானைவிட வெறியாப் பேசுறானுங்கடா... முடியல... இவனுககிட்ட இருக்கதுக்கு பெங்காலி கூட இருக்கலாம்... கிரிக்கெட்டப்போ மட்டும்தான் நம்மளை எதிரியாப் பாப்பானுங்க..." என்றபடி அவரைப் பார்த்தான். அவர் 'நேத்து ராத்திரி... யம்ம்மா...' பாடும் ஆறு வயசுக் குழந்தையின் குரலில் லயித்து சிரித்துக் கொண்டிருந்தார். இனி இடியே விழுந்தாலும் எழ மாட்டார் என்பது தெரியும் என்பதால் புத்தகத்தை எடுக்க, அறை நிர்வாகி சுலைமானியோடு வந்தார்.

-'பரிவை' சே.குமார்.

மனசின் பக்கம் : வசந்தங்களும் வருத்தங்களும்

மார்ச் மாத அகல் மின்னிதழில் எனது 'வெளிநாட்டு வாழ்க்கை' கட்டுரையின் இரண்டாம் பகுதி வெளி வந்திருக்கிறது. அகல் மின்னிதழுக்கு என தனி இணைய தளம் தொடங்கியிருக்கிறார்கள். என்னிடம் கட்டுரை வாங்கி வெளியிட்ட அகல் மின்னிதழ் நிர்வாகி சத்யா ஜி அவர்களுக்கு நன்றி.



சென்ற வார பாக்யாவில் எனது நொடிக்கதை வெளியாகியிருக்கிறது. அவர்கள் கொடுக்கும் ஒரு கருவுக்கு எழுதவேண்டும். இது இரண்டாம் முயற்சி. முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. கதையை தேர்வு செய்த பாக்யராஜ் சாருக்கும், பூங்கதிர் சாருக்கும் நன்றி.
விஞர் மிகச் சிறந்த எழுத்தாளர், இளமதி அக்கா அவர்களின் கணவர் மறைவு செய்தி கில்லர்ஜி அண்ணாவின் தளத்தில் பார்த்து வருந்தினேன். பல வருடங்களாக கோமாவில் இருந்த கணவரை குழந்தையைப் போல் பார்த்து வந்த, குடும்ப கஷ்டங்களை எல்லாம் தன் தோளில் அல்ல... தலையில் சுமந்த இளமதி அக்கா குறித்து அவருடனான முகநூல் உரையாடல்களில் அறிந்திருக்கிறேன். கோமாவில் இருந்தாலும் தனக்கு துணையாக இருந்த கணவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது... அவருக்கு நம்மால் ஆறுதல் மட்டுமே கூற முடியும்... இதிலிருந்து வெளிவரும் மன உறுதியை இறைவன் கொடுக்கட்டும். அவரின் கணவரின் ஆத்மா சாந்தியடையவும் இனி வரும் காலங்களில் அக்கா, மறக்கமுடியாத இந்நிகழ்வை மறந்து எழுத்துலகில் சாதிக்கவும் இறைவன் அருள் புரியட்டும்.

Image result for rest in peace

டுத்ததாக என்னை ரொம்பப் பாதித்த மரணம் கலாபவன் மணி அவர்களுடையது... மனோ அண்ணா முகநூலில் பகிர்ந்ததைப் பார்த்து நம்பிக்கையின்றி செய்திகளில் வந்திருக்கிறதா என்று தேடிக் கிடைக்காமல் இது தவறான செய்தியாக இருக்குமோ என்று நினைக்கையில் கேரள ஆங்கில இணைய இதழில் தற்போதைய செய்தியாக வெளியாகியிருந்தது. எப்படிப்பட்ட கலைஞன்... என் வாழ்க்கை இதுதான்... இதைக் கடந்துதான் வந்தேன் என்பதைச் சொல்ல யோசிப்போர் நிறைந்த உலகில் நான் எட்டாவது, ஒன்பதாவது படிக்கும் போதே ஆட்டோ ஓட்டினேன் என்றும் குடும்ப வறுமை குறித்து சொல்லியும் நான் இப்படித்தான் வாழ்ந்தேன்... இந்தப் பாதையில்தான் வந்தேன் என்பதை மேடைக்கு மேடை சொல்லும் கலைஞன்... பந்தா இல்லாத மனிதன்... கஷ்டப்படுறவனுக்கு தன்னாலான உதவியை அப்போதே செய்யும் கலைஞன்.. கொலையா.... தற்கொலையா... என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்தாலும் ஒரு நல்ல மனிதனை இன்னும் சில காலம் வாழ விடாமல் அழைத்துக் கொண்டு விட்டானே என்ற வருத்தம் வாட்டுகிறது. நல்ல மனசுக்காரனான அந்த மனிதனின் ஆத்மா சாந்தியடையட்டும்.


னது புத்தக வெளியீட்டிற்காக ஊருக்குச் சென்றிருந்த கனவுப் பிரியன் அண்ணா, விழாவுக்கு முதல்நாள் இரவு பைக்கில் இருந்து விழுந்து கை கால்களில் சிராய்ப்புக்களுடந்தான் விழாவில் கலந்து கொண்டிருக்கிறார். சென்ற வாரமே இங்கு வரவேண்டியவர் காயங்களால் வரவில்லை. இப்போது உடல்நலம் பரவாயில்லை என திரு.ரெத்தினவேல் ஐயா பகிர்ந்திருந்தார். அண்ணாச்சி விரைவில் நலமடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.


பிரதிலிபி போட்டியில் இருக்கும் எனது 'நேசம் சுமந்த வானம்பாடி' சிறுகதை இதுவரை பதினோரு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறது. இன்னும் மதிப்பெண் அளிக்காத நட்புக்கள் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால் மதிப்பெண் கொடுங்கள்... வாக்களிக்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கிறது. முகநூல் கணக்கின் மூலம் வாக்களிக்கலாம்.

நேசம் சுமந்த வானம்பாடி

புதாபியில் புதன் அன்று பெய்த காற்றுடன் கூடிய மழை, நிறைய மரங்களை வேரோடு சாய்த்திருக்கிறது, இந்த காற்றும் மழையும் இன்னுமொரு அரை மணி நேரம் நீடித்திருந்தால் மிகப்பெரிய இழப்பைச் சந்தித்திருக்கும் போல, காரணம் வெயில் மட்டுமே அடிக்கும் என்று நினைப்பில் மழை நீர் வடிவதற்கான முறையான வசதி இல்லாமல் ரோடெல்லாம் வெள்ளக்காடாக மாறி, மரங்கள் விழுந்து, கட்டிடங்களில் இருக்கும் கண்ணாடி சன்னல்கள் விழுந்து உடைந்து கால் மணி நேர மழை கண்டபடி நாறடிச்சிட்டுப் போயிருச்சு. நேற்றும் மழை வரும் என பள்ளிகளுக்கு எல்லாம் விடுமுறை விட்டுட்டாங்க... வெயில் பின்னி எடுத்துருச்சு... இங்கயும் ஒரு ரமணன் இருக்கார் போல...


றாது சினம் பார்க்கும் போது ஆரம்பத்தில் எதுவும் தோன்றவில்லை, ஆனால் கல்லூரிப் பெண்கள் பலி வாங்கும் படலத்தை ஆரம்பிக்கும் போது இதே கதையில் வேற ஒரு படம் பார்த்திருக்கிறோமே அப்படின்னு ரொம்ப நேர யோசனைக்குப் பிறகு மலையாளத்தில் பிரித்விராஜ் நடித்த மெமோரிஸ் படத்தின் கதைதான் என்பது நினைவில் வந்தது. பின்னர்தான் அந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்திருக்கிறார்கள் என்பதை அறிந்தேன். அருமையாக செய்திருந்தார்கள். உதயநிதிக்கு அருள்நிதி நல்லா நடிக்கிறார். பெங்களூர் டேஸ் மாதிரி காலை வாராமல் ஆறாது சினம் விறுவிறுப்பா நகர்கிறது. போலி சான்றிதழ்களை மையமாக வைத்து அதர்வா நடிப்பில் வெளிவந்த கணிதனும் நல்லாயிருந்தது.

நேற்று ஸ்கைப்பில் பேசும்போது விஷால் அவன் அம்மாவுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தான். 'இவனைப் பெத்ததுக்கு சும்மா இருந்திருக்கலாம்' என்று மனைவி என்னிடம் சொல்லவும் அவன் ஏதோ பதிலடி கொடுத்தான். என்ன பேச்சு பேசுது பாருங்க... 'பேசாம ஆஸ்பத்ரியில யாருக்காச்சும் கொடுத்திருக்கலாம்' என்றார். உடனே அவன் 'ஏன் ஆஸ்ரமத்துல கொடுத்திருக்கலாமே நான் பாட்டுக்கு நிம்மதியா இருந்திருப்பேன்' என்றான். 'வாயைப் பாரு... இரு யாருக்கிட்டயாச்சும் கொடுத்துடுறோம்' என்று சொல்ல இருவருக்கும் வாக்கு வாதம் தொடர்ந்தது. நான் ரசித்துக் கொண்டிருந்தேன்... கடைசியாக அவன்  'சோறு வெள்ளையா இருந்தாத்தான் மோரு வெள்ளையா இருக்கும்'ன்னு சொல்லிட்டுப் படுத்துட்டான். எதுக்கு அதைச் சொன்னான்... இதை யாரு அவனுக்குச் சொல்லிக் கொடுத்தான்னு தெரியலை. ஆனா அதை நினைச்சி நினைச்சி நேற்று முழுவதும் சிரித்தேன்.
-'பரிவை' சே.குமார்.