மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 16 ஏப்ரல், 2016

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-13)

முந்தைய பகுதிகள்:

           பகுதி-1       பகுதி-2         பகுதி-3            பகுதி-4        பகுதி-5          பகுதி-6           


மூத்தவன் யாரு ரத்தம்?’ என்று பஞ்சநாதன் கேட்டதும் பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தார் வேலாயுதம். “என்னப்பா நாங்கேட்டதுக்கு பதிலைக் காணோம்...” நமுட்டுச் சிரிப்போடு கேட்டார் பஞ்சநாதன்.

“ம்... நீ எடக்கு மடக்கா ஏதாவது கேட்பே... அதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா?”

“இதுல எடக்கு மடக்கு என்ன இருக்கு... சின்னவன் உன்னோட ரத்தம்ன்னா... மூத்தவன் யாருன்னுதானே கேட்டேன்...”

“இதுல ரத்தத்தைப் பத்திப் பேசினா என்னைய நானே கேவலப் படுத்திக்கிற மாதிரி ஆயிரும்... மொத்தத்துல அவனைப் பெத்ததுக்காக ரொம்ப வருத்தப்படுறேன்... வேற எதாவது இருந்தாப் பேசு...”

“அப்ப கடைசி வரை அவனை நீ சேக்கமாட்டே... பேரம்பேத்திகள பாக்கணுமின்னு ஆசையுமில்ல உனக்கு அப்படித்தானே...”

“ம்... எதுக்கு அவனைச் சேக்கணும்... அப்புறம் சாதி சனத்துக்கிட்ட எனக்கு என்ன மரியாதை இருக்கும்... பேரம்பேத்தி.... ம் நாம பாத்துக் கட்டி வச்சிருந்தா பேரம்பேத்தியின்னு கெடக்கச் சொல்லியிருக்கும்... அதுதான் இல்லைன்னு போச்சே... அப்புறம் பேரம்பேத்தி எப்படி வரும்... செல்வியும் சரவணனும் பெத்து வச்சிருக்க செல்லக்குட்டிக இருக்குதுகளே... அது போதும்... செத்த அன்னைக்கு அதுக தீப்பந்தம் பிடிச்சாப் போதும்... பொட்டப்புள்ள சவுந்தரம் மாதிரி இருக்காம்... பய நம்மாளுக மாதிரி இல்லைன்னு சின்னவன் சொன்னான்...  இருந்து என்ன செய்ய... அது கலப்புப் பயிர்தானே... பேச்சை விடுப்பா... வேற இருந்தா பேசு....”

பஞ்சநாதன் ஏதோ சொல்ல வாயெடுக்கும் போது ரோட்டில் வண்டியில் போன வாத்தியார் வாசுதேவன், வண்டியை நிறுத்தி பஞ்சநாதனைப் பார்த்து “மச்சான்...  நம்ம மேலஊரணி கண்ணப்பன் மகனை ரோட்டுல வச்சி வெட்டிட்டு பொயிட்டானுங்க... பய ஸ்பாட் அவுட்... புள்ள ரொம்ப சீரியஸா இருக்காம்...” என்று கத்தினார்.

“என்ன சொல்றே வாசு..? இப்பத்தானே ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க...” பஞ்சநாதனும் சற்றே சப்தமாகக் கேட்டார்.

“அதுதான்... லவ் மேரேஜ்... அவன் உயிரைப் பறிச்சிருச்சு...” வெறுப்போடு சொன்ன வாத்தியாரிடம் “செஞ்சது சரிதானே... இதை எதுக்கு இங்க சொல்ல வந்தே...” கோபமாய்க் கேட்டார் வேலாயுதம்.

“என்னங்க... இந்தத் தோட்டை மாத்தித் தாங்கன்னு எத்தனை நாளாச் சொல்றேன்...” கணவனின் மார்பில் கோலம் போட்டபடிக் கேட்டாள் செல்வி.

“காசு தாறேன் போயி மாத்திக்கன்னு சொன்னா நானும் வரணுங்கிறே... கடையைப் போட்டுட்டு வரச் சொல்றே... உங்காத்தாவையோ வேற யாரையோ கூட்டிக்கிட்டு போகலாம்ல்ல... சரி... சரி... காலையில பணம் தர்றேன்... நாளைக்கு நீ பொயிட்டு வா...” என்றான் ராமநாதன்.

“போகத் தெரியாமயா உங்களைக் கூப்பிடுறேன்... நீங்க வந்து வாங்கிக் கொடுத்தா அதுல கிடைக்கிற சுகமே தனிங்க... அங்கனதானே இருக்கு சத்த கடையை போட்டுட்டு வந்தா வாங்கிட்டு வந்திடலாம்ல்ல... அதான் கடைப்பயல் இருக்கானுல்ல...”

“ம்... சரி... நாளைக்கு மத்தியானம் சாப்பிட வந்துட்டு போகும் போது கூட்டிக்கிட்டுப் போறேன்... சரியா?” என்று அவளை அணைத்தபோது செல்போன் அழைத்தது.

“யாரு இந்த நேரத்துல...?” என்று எடுத்தவன் “என்ன உன் தம்பி கூப்பிடுறான்... ஆச்சர்யமா இருக்கு...” என்றபடி ஆன் செய்து “சொல்லு மாப்ள... இங்கிட்டு காத்தடிக்குது... மழை வர்ற மாதிரியும் இல்லையே...” என்று சிரித்தார்.

“ஏந்த்தான் நான் உங்ககிட்ட பேசாமலா இருக்கேன்... வேலை அது இதுன்னு முடியாமப் போயிருது... அக்காவும்...” பேச்சை நிறுத்தினான்.

“அக்காவும்... என்ன மாப்ள சொல்ல வந்ததைச் சொல்லு...”

“ஒண்ணுமில்ல... அதை விடுங்க... எனக்கு எப்பவுமே எல்லாரு மேலயும் பாசம் இருக்குத்த்தான்... அதை தினமும் போன் பண்ணிக் காட்டினாத்தானா... நான் அம்மா அப்பாவுக்கே எப்பவாச்சும்தான் பேசுவேன்... எங்கம்மா கூட ஒரு போன் பண்ணினா என்னன்னு திட்டும்... சரி விடுங்க.... இப்ப கூப்பிட்டது அண்ணன் விசயமாப் பேச...” என்றான்.  

“அண்ணன் விசயமா?” ஆச்சர்யமாய்க் கேட்டான்.

“ஆமா... அவனைப் பார்த்து பேசினேன்... நம்மளை விட்டு விலகியிருக்கிற வலி அவனுக்கிட்ட இருக்கு... பிள்ளைங்க ரெண்டும் தங்க விக்கிரம் மாதிரி இருக்குதுக...”

“ம்... அதுக்கு நானென்ன செய்யணும்?”

“என்னத்தான் இப்படிக் கேக்குறீங்க...  வீட்ல பெரியவங்க நீங்க... அதுபோக நீங்களும் அக்காவும் அவனோட பேசுவீங்கன்னு எனக்குத் தெரியும்... நாமதான் அவனை சேர்த்து வைக்கணும்...”

“இங்க பாரு மாப்ள... பெரியவன் விசயத்துல நான் மாமாக்கிட்ட பேசினதாலதான் அவருக்கு இப்பவும் என் மேல கொஞ்சம் கோபம் இருக்கு... அதனாலதான் உன் கல்யாண விசயத்துல நான் எதுலயும் தலையிடல... நீங்கதான் பொண்ணைப் பாக்கணும்.... பேசணுமின்னு சொன்னப்போ போதும்... என்னை எதிலும் இழுக்காதீங்கன்னு ஒதுங்கிட்டேன்... உங்க அக்காவையும் உங்க வீட்டு விசயத்துல ஒதுங்கி இருக்கச் சொல்லியிருக்கேன்... மூத்தவன் எங்ககிட்ட பேசுவான்... ஆனா இங்க இதுவரைக்கும் வந்ததில்லை... நாங்களும் அங்கிட்டு போனதில்லை... போதும் மாப்ள... என்னை இதுல இழுக்காதீக... வீணாவுல இதுல இறங்கி உங்கப்பாரு நம்மளை எல்லாம் ஒதுக்கி வச்சாலும் வச்சிருவாரு... ஆளை விடுங்க...” என திட்டவட்டமாக மறுத்தார்.



“என்ன புரட்சியாளரே... என்னைப் பார்த்தும் பார்க்காத மாதிரி நிக்கிறீங்க?” என்றபடி கண்ணனுக்கு அருகில் வந்தாள் சுபஸ்ரீ.

“அப்படியில்லைங்க... இப்பத்தான் வந்தோம்... நீங்க பிரண்ட்ஸோட பேசிக்கிட்டு இருந்தீங்க.... அதான்... “ மெல்ல இழுத்தான்.

“ஓகே... நம்பிட்டோம்...” என்றவள் அம்பேத்காரைப் பார்த்து “நல்லாயிருக்கீங்களா?” என்றாள். அவன் தலையாட்டிச் சிரித்தான். பின்னர் அவர்களை தோழிகளிடம் அறிமுகம் செய்ய, கண்ணனைப் பற்றிச் சொன்னபோது தோழிகள் ‘ஓ... இதுதானா அவுரு...’ என கோரஸாய் கத்த, மற்றவர்கள் திரும்பிப் பார்த்தனர்.

“சும்மா இருங்கடி..." என்றவள் "சரி சாப்பிட்டீங்களா?” என்றாள் கண்ணனிடம்.

“இல்லங்க... போகணும்...”

“வாங்க போகலாம்...”

“அய்யோ உங்க கூடவா...? இவ்வளவு தூரம் வந்து பருப்புச் சாம்பார் சாப்பிடவா? நீங்க தனியாப் போங்க... நாங்க தனியாப் போறோம்... “ என்றான் அம்பேத்கார்.

“நான் உங்களை எங்கூட சாப்பிடச் சொன்னேனா... வாங்க போகலாம்... இவளுகளும் நான் வெஜ்தான்... நீங்கள்லாம் சேர்ந்து சாப்பிடுங்க...” என்றாள். பந்தி நடக்கும் மாடிக்குச் சென்றதும் எல்லாரும் நான் வெஜ் பக்கம் போக, “நான் மட்டும் தனியாச் சாப்பிடணுமா...? ஏய் யாராச்சும் வாங்கடி ப்ளீஸ்...” தோழிகளிடம் கெஞ்சினாள் சுபஸ்ரீ.

“போடி... ஆஸ்டல் சாப்பாடு சாப்பிட்டு நாக்கு செத்துப் போச்சு... இங்கயாச்சும் நல்ல சாப்பாடு சாப்பிட்டுக்கிறோம்” என தோழிகள் நகர, கண்ணன் “நான் வாறேன்... வாங்க...” என்றதும் அம்பேத்கார் அவனை முறைத்துப் பார்த்தான். உடனே  “நீ அவங்க கூடப் போய் சாப்பிடுடா...” என்று சொல்லிவிட்டு அவனின் பதிலுக்கு காத்திருக்காமல் நடந்தான்.

“நீங்க எதுக்காக... நான் சாப்பிட்டு வாறேன்... போங்க...” என்றவள் மனசுக்குள் ‘நீ என்னோட சாப்பிடணுங்கிறதுக்காகத்தானே கூப்பிட்டேன்’ என்று நினைத்துக் கொண்டாள்.

இருவரும் அருகருகே அமர்ந்து சாப்பிடும் போது “எனக்காகத்தானே வந்தீங்க... இல்லேன்னா நான் வெஜ் ஒரு பிடிபிடிச்சிருப்பீங்கதானே...” மெல்லக் கேட்டாள்.

“அது எப்படிங்க பிடிச்சவங்களை தனியாச் சாப்பிடட்டும்ன்னு விடுறது...”

“ஓஹோ... அப்ப என்னைய லவ் பண்றீங்களா?” அவளின் கேள்வியில் நிலைகுலைந்த கண்ணன் சாப்பிடுவதை விடுத்து அவளைப் பார்த்தான். அவள் எதுவும் நடக்காதது போல் அவன் இலையில் இருந்த அப்பளத்தை எடுத்துக் கடித்தாள்.

இணையத்தில் கிடைத்த ஓவியர் இளையராஜாவின் படத்துக்கு நன்றி.

 (அடுத்த சனிக்கிழமை தொடரும்...)
-‘பரிவை’ சே..குமார்.

வெள்ளி, 15 ஏப்ரல், 2016

மனசின் பக்கம் : ஆன்மீகம் முதல் பாஹே வரை

ன்மீகப் பகிர்வு நல்ல வரவேற்பு கிடைத்ததில் மகிழ்ச்சி என்றாலும் அது ஒரு மின்னிதழுக்காக எழுதியதுதான்... அதற்காக துரை.செல்வராஜூ ஐயா போல் ஆன்மீகத்தில் திளைத்திட வாழ்த்துக்கள் என்று அன்பு அண்ணன் கில்லர்ஜி சொல்லியிருந்தார். ஆத்தாடி... ஆன்மீகத்தில் ஐயா கடல்... அவர் ஒவ்வொன்றையும் விரிவாக எழுதும் திறன் என்னை வியப்பில் ஆழ்த்தும்... அதில் அவ்வளவு தேடல் இருக்கும்... நாமெல்லாம் ஆன்மீகத்தை ஊறுகாய் போல் எப்போதாவதுதான் தொட்டுப் பார்க்க முடியும். நமக்கு சும்மா கிறுக்குவதே சாலச் சிறந்தது. ஆன்மீகத் தேடல் என்பது ரொம்ப... ரொம்பக் கஷ்டம். அதேபோல் கில்லர்ஜி அண்ணா மேலும் சில விவரங்களை எழுதியிருக்கலாமே என்று சொல்லியிருந்தார். நாலு பக்கத்துக்குள் ஆன்மீகம் பதியும் நண்பர் எனக்கு எட்டுப் பக்கம் கொடுத்தார். அதுவே பெரிய விஷயம் அல்லவா..? ஒரு மின்னிதழில் நமக்காக கூடுதல் பக்கங்கள் கொடுப்பது என்பது நம் எழுத்தின் மீதான நம்பிக்கைதானே... எழுதுவோம் அண்ணா... இன்னும் விரிவாய் வரலாற்றை... குயிலி, உடையாள், நம்ம சங்கரப்பதி கோட்டை என விவரித்து அதற்கான நேரம் வரும்போது கண்டிப்பாய் எழுதலாம்... அனைவரின் ஊக்கத்துக்கும் நன்றி.

*****


ளையராஜா இசை என்பதால் 'ஓய்' அப்படின்னு ஒரு படம் பார்த்தேன்... கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு வந்த பெண் அக்கா கல்யாணத்துக்காக பரோலில் வெளியில் வருகிறாள். அவளைக் கொல்லத் துடிக்கும் வில்லன் கூட்டம் வீடு வரை வந்து மிரட்டுகிறது. அவளோ சின்னாளபட்டிக்கு போய் விடுகிறாள். அங்கு பண்ணையார் வீட்டில் வாழ்கிறாள். கடைசி வரைக்கும் அவள் எதற்காக கொலை செய்தாள்ன்னும் சொல்லலை... வீடு வரை வந்த வில்லன் எங்கே போனான்னும் காட்டலை... ஆரம்பித்த கதை வேறு... கதை பயணித்து முடிந்ததும் வேறு.... எழுதும் போது நம்மள மாதிரி அப்ப அப்ப எழுதிப் படமெடுத்தார் போல... ஜி.எம்.பி. ஐயாவோட கதை கதையாம் காரணமாம் கதையில் வேதாளத்தின் போக்கில் எழுத ஆரம்பித்து மிகச் சிறப்பாக முடித்திருப்பார். இவர்களோ... சரி விடுங்க...ஆரம்பித்த கதைக்கு எப்ப வருவாங்கன்னு காத்திருந்தே படம் முடிந்த போது இரவு 2 மணி. பின்னணி இசையில் ராஜா கலக்கல்... பாடல்களில் கோவில் பாடல் ராஜா ரகம்... மற்றதெல்லாம்... ம்க்கும்.... கிராமத்துப் பின்னணி என்பதால் சோர்வில்லாமல் போவது போல் தெரிந்தது.

*****


தெறி குறித்து பல தரப்பட்ட கருத்துக்கள் வருது... பூவிழி வாசலிலே, சத்ரியன், என்னை அறிந்தால், வேதாளம் என எல்லாப் படங்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு குலுக்கி... கலக்கி... அதைக் குடித்து ஒரு கதை ஆக்கியிருக்கிறார் அட்லீ என்றார் நண்பர் சிரிக்காமல்... விஜய் படங்களை பெரும்பாலும் விரும்புவதில்லை என்பதால் அது குறித்தான விமர்சனம் இல்லை இது... மீனாவோட பொண்ணு நல்லா நடிச்சிருக்காம்... ஒரு தடவை பார்க்கலாம் என பாஸிட்டிவ்வாகத்தான் சொல்கிறார்கள். இயக்குநர் அட்லீ சொந்தச் சரக்கை இறக்கி களம் கண்டால் நல்லாயிருக்கும். மௌனராகத்தை கலக்கி ராஜாராணி ஆக்கினார். இப்போ நாலு படக் கலவை... அடுத்து...? கொஞ்சம் சுயமாய் சிந்தியுங்கள். பதிவைத் திருடி என் பதிவெனப் போட்டு பரிசு வாங்குவதைப் போல் இதுவும் கேவலமான செயல்தான்... இதில் நான் வென்றேன் என்று சொல்வது கேலிக்கூத்துத்தானே... சொந்தச் சரக்கில் வெல்ல வேண்டும்... அதுதான் திறமை... உங்கள் திறமையை அடுத்த படத்திலாவது காட்டுங்கள். தெறி குறித்து இதற்கு மேல் பேசினால் அஜீத் பிடிக்கும் என்பதால் விஜய் குறித்து எதாவது எழுதாதே என்பார்கள்... சுறா போன்ற படங்களைக் கொடுத்த விஜய் இதில் நல்லா நடித்திருக்கிறார் என்றார்கள். இந்தப் படம் நன்றாக ஓடும் என்று நினைக்கிறேன்.
*****
கிராமத்து நினைவுகள், வெள்ளந்தி மனிதர்கள் என்ற சில வாழ்க்கைப் பதிவுகள் இன்னும் தொடரலாம் என்ற நிலையில்தான் தொக்கி நிற்கின்றன. வேலைப்பளூவின் காரணமாகவும் சோர்வின் காரணமாகவும் (அதெல்லாம் வரக்கூடாது என்று திட்டாதீர்கள்... வேலையின் காரணமான சோர்வு இது) பதிவெழுதுவதும் வாசிப்பதும் குறைந்துவிட்டது. இந்த நிலையில் ராஜூ முருகனின் வட்டியும் முதலும் போல் வாழ்ந்த வாழ்கின்ற மனிதர்கள் அன்றும் இன்றும் என இருக்கும் வாழ்க்கையை வைத்து ஒரு தொடர் ஆரம்பிக்கலாம் என்ற ஆசை இப்போ மனசுக்குள் துள்ளிக் குதிக்குது. தொடர்கதை வேறு... தொடர்வோமா... நிறுத்துவோமா... என பயணிக்கிறது... வேரும் விழுதுகளும் போல் விறுவிறுப்பாய் வாழ்க்கையைப் பேசி நகரவில்லை என்பதாய் நண்பர்களின் கருத்தும் வருகிறது... அது வேறு களம்... இது வேறு களம் என்றாலும் கொஞ்சம் விறுவிறுப்பை ஏற்றி எழுதலாமா... இல்லை அப்படியே நிறுத்திப் பயணிக்கலாமான்னு எண்ணங்கள் மாறி மாறி மனசுக்குள் சுத்துது.... ஆஹா... என்ன இது விஜயகாந்த் பேசுவது போல் கோர்வையாக இல்லாமல் இருக்கிறதே... சரி விடுங்க... புதிய தொடர் ஆரம்பிக்கும் எண்ணம் மனசுக்குள் மத்தாப்பாய்... விரைவில் ஆரம்பிக்கலாம்.
*****
தொடர்ந்து சில வாரங்களாக வெள்ளிக்கிழமை மழை பெய்கிறது. இன்றும் காலை எழும்போதே மழை பெய்து கொண்டிருந்தது. மதியம் வெயில் சற்றே கூடுதலாய் இருந்தது. இப்போது குளிர்கிறது. ஊரில் வெயில் வாட்டி எடுப்பதாகச் சொன்னார்கள். கால மாற்றம் இன்னும் இங்கு வரவில்லை.
*****

வெட்டி பிளாக்கர்ஸ் சிறுகதைப் போட்டி ஒன்றை அறிவித்திருக்கிறது. 2014-ல் அவர்கள் நடத்திய முதல் சிறுகதைப் போட்டியில் எனது சிறுகதையான 'நினைவின் ஆணி வேர்' முதல் பரிசான 5000 ரூபாய் பெற்றது.... ஆனால் இதுவரை பரிசுத் தொகை வரவில்லை என்பதும்... அனுப்பிட்டோம் என்ற அவர்களின் பதிலும்... சரி விடுங்க.... மிகச் சிறப்பாக நடத்துவார்கள்... நல்ல நடுவர்கள்... நம்ம குடந்தை சரவணன் அண்ணன் கூட நடுவர் குழுவில் இருக்கிறார். இந்த முறை பரிசுத் தொகை அதிகம்... தலைப்பு கூட அப்பா தொடர்பானதுதான்... எழுதுங்கள் மக்களே... பரிசை வெல்லுங்கள். போட்டி குறித்து அறிய கீழே இருக்கும் இணைப்பில் செல்லுங்கள்.


*****

(எழுத்தாளர். பாஹே)

ஸ்ரீராம் அண்ணாவின் எங்கள் பிளாக்கில் கேட்டு வாங்கிப் போடும் கதை பகுதியில் அவரின் அப்பா பாஹே (பாலசுப்ரமணியம் ஹேமலதா) அவர்களின் கதையான 'நிமிஷங்கள்... விநாடிகள்...' வாசித்தேன்... சத்தியமாய்ச் சொல்றேங்க... அந்த ராமசாமியின் பின்னால நானும் நடந்தேன்... ஓடினேன்... அவரின் நினைகளை நானும் நினைத்தேன்... என்ன ஒரு எழுத்து நடை... ஒரு மனிதனின் மனசும் அவனைச் சுற்றி நடக்கும் சாதரண நிகழ்வுகளும் கதையினை நமக்குள் இறுத்திச் செல்கிறது... எப்படியான எழுத்து... ஒவ்வொரு பாரா படித்த போது ஐயாவை மனசுக்குள் பாராட்டிக் கொண்டேன்... எனக்கும் இது போல் எழுதத்தான் ஆசை... பேச்சு வழக்கில் எழுதுவதைவிட இப்படி எழுதினால் சுவராஸ்யம் கூடும்... இன்னும் அந்தக் கதையின் பாதிப்பு இருக்குங்க... மீண்டும் மீண்டும் வாசிக்கச் சொல்லும் எழுத்து... ஐயாவை வாழ்த்தும் வயது நமக்கு இல்லை... அவரோட அந்த எழுத்துல கொஞ்சமாச்சும் நமக்குள்ளும் வரட்டும்ன்னு நம்மை ஆசீர்வதித்தால் போதும்... நீங்களும் வாசிங்க... ராமசாமியோடு பயணிப்பீர்கள்... அப்புறம் இங்கே ஐயாவின் படத்தை திட்டமாட்டார் என்ற நம்பிக்கையுடன் எங்கள் பிளாக் ஸ்ரீராம் அண்ணாவிடம் 'கேட்காமல்' போட்டிருக்கிறேன் 

நிமிஷங்கள்... வினாடிகள்...


-'பரிவை' சே.குமார்.

வியாழன், 14 ஏப்ரல், 2016

வாக்காளர் அலப்பறை...7

றைக்குள் நுழைந்தவன் "இன்னைக்கு கொஞ்சம் வெயில் ஆரம்பிச்சிருக்கு... காத்தடிச்சாலும் மேலெல்லாம் கசகசன்னு இருக்கு..." என்றபடி சட்டையைக் கழட்டினான். "சொல்ல மறந்துட்டேன்... எல்லாருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்... காலையில நான் எந்திருக்குமுன்னே எல்லாரும் ஓடிட்டீங்க... அதான் சொல்ல முடியலை... " என்றான் சிரித்தபடி.

"நீங்களாச்சும் இப்ப வந்து சொல்றீங்க... முகநூல்ல ஆங்கிலப் புத்தாண்டுக்கு மாஞ்சு மாஞ்சு சொல்றவனுங்களை எல்லாம் இன்னைக்குக் காணோம்... ஏதோ கொஞ்சப் பேர் மட்டும் போட்டிருந்தானுங்க... அதிலும் சிலர் பாத்தீங்கன்னா ஆங்கிலத்தில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லியிருக்கானுங்க..." என்றார் அவர்.

"எல்லாரும் இப்ப அரசியலுக்குள்ளயும் நடிகர்கள் கிரிக்கெட் பின்னாலயும் சுத்திக்கிட்டு இருக்கானுங்க... இங்கிலீஸோ தமிழோ வாழ்த்துச் சொன்னானுங்கதானே... அதுக்கு சந்தோஷப்பட்டுக்கலாம்... ஏன்னா நாமதான் சித்திரையா... தையான்னு குழம்பிப் போயிக் கிடக்கோமே...  ஆமா இப்ப யாரும் ஐ.பி.எல். பார்க்கிறதில்லையா?" என்றான் அவன்.


"மஞ்சச் சட்டை இல்லாம பாக்கப் பிடிக்கலை... ஐ.பி.,எல்லை விட அரசியல் கிரிக்கெட் ரொம்ப நல்லாயிருக்கு..." சிரித்தார் கனகசபை.

"மஞ்சத் துண்டுதான் கட்சிகளைப் பிரித்து அடிச்சி ஆடிக்கிட்டு இருக்கு போலவே... தொண்ணுறுக்கு மேல போயும் நாட் அவுட்டாமே..." சிரித்தபடி தண்ணீர் பாட்டிலை எடுத்தான்.

"ஆமா ஆரம்பிச்சிட்டாரு... அறைக்குள்ள அரசியல் வேணான்னு சொல்வாரு... அப்புறம் இவரே ஆரம்பிப்பாரு.... நாம எதாச்சும் சொன்னா அதுக்கு நையாண்டி பண்ணுவாரு..." என்றபடி அரசியல் விவாதம் பார்க்க ஆரம்பித்தார் அவர்.

"ஏங்க பேசுனா பம்முறது... அப்புறம்.. வேண்டாம் விடுங்க... நான் எதாவது சொல்லப்போக நீங்க எதாவது சொல்லி வருத்தம்தான் மிஞ்சும்... அம்மாவை எதிர்த்து குஷ்பு நிக்கிறேன்னு சொன்னுச்சு நிக்கலை போலவே... "

"ஆமா நின்னுட்டாலும்..." என்றார் கனகசபை.

"எதுக்கு இழுக்குறீங்க...? அதான் குஷ்புக்கு பதிலா கண்ணழகியை நிப்பாட்டியிருக்காரு போல... தலைவர் எப்படிப்பட்ட ஆளு..."

"யாரு மீனாவா... அதோட புள்ள தெறியில நடிச்சிருக்காம்... மீனா ரஜினி அங்கிள்ன்னு கூப்பிட்டுட்டு ஜோடியா நடிச்ச மாதிரி இதுவும் இன்னும் பதினைஞ்சு வருசத்துல விஜய்க்கு ஜோடியா நடிக்கும்ன்னு பேசுறானுங்க... இந்த நேரத்துல கண்ணழகிக்கு எதுக்குய்யா வேண்டாத வேலை" என்றான் நடராஜன்.

"ஏய்... இருப்பா....கண்ணழகின்னா மீனாதானா... உங்களை சினிமா ரொம்பக் கெடுத்து வச்சிருக்கப்பு... இது ஏதோ சிம்லா சோழ இளவரசியாம்... சும்மா குஷ்புவை விட சூப்பரா இருக்கு... கண்ணால கலக்கிடும்ன்னு நினைக்கிறேன்... வயசான அம்மாவுக்கு ஓட்டுப் போடுறதைவிட இந்த சோழச்சிக்குப் போடலாம்...ம்...." என்றார் சத்தியமூர்த்தி.

"ஏய் அது முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியன் மருமகப்பா... பாக்க நல்லாத்தான் இருக்கு... குஷ்புக்கு மாற்றுத்தான்... சரி... அது எதுக்கு... இந்தாளுக்கு இந்த வயசுல புத்தி எங்க போகுது பாரு..." என்றார் கனகசபை.

"குஷ்பு, விஜயதாரணியின்னு பேச்சு போகும் போல... இன்னைக்கு விஜயகாந்தைப் பற்றி ஒண்ணும் பேசலை... தமிழகத்தை தலை நிமிர வைக்க வந்த தலைவன்னு சொல்லுவாரே..." இடைபுகுந்தார் அவர்.


"நான் எதாச்சும் சொன்னேனா... உங்களுக்கு எங்கிட்டயிருந்து விஜயகாந்தைப் பற்றி பேச்சு வரணும்... அப்புறம் நான் அதைச் சொன்னேன்... இதைச் சொன்னேன்னு... பேசுவீங்க..." சிரித்தான் அவன்.

"எப்பவும் சப்போர்ட்தானே... அப்படி இப்படி சாஞ்சு நடந்தாக்கூட செய்தி ஆக்குவீங்களே... அதான் கேட்டேன்." அவரும் விடாமல் வம்புக்கு இழுத்தார்.

"ஆமாங்க... மக்கள் மீது அக்கறை கொண்டவர்தாங்க அவர்... இல்லைன்னு சொல்லமுடியுமா.. மாமண்டூர் கூட்டத்துல பேசும்போது அங்க வந்திருந்த கூட்டத்தைப் பார்த்து மணி ஆச்சி... போகும்போது ரோட்டுல பாத்துப் போகணும்... எந்தப் பிரச்சினையும் இல்லாம வீடு போய் சேருங்க... எனக்கு போன் பண்ணுங்கன்னு...  சொன்னாரா இல்லையா... எந்த அரசியல்வாதிங்க சொல்றான்... பிரியாணிக்கு கூட்டி வந்து செத்தாக்கூட கண்டுக்கமாட்டானுங்க... வெகுளி மனுசனுங்க அவரு.... அவருக்கு உடம்பு முடியலை... அதை காமெடி ஆக்குறீங்க... இந்தா இந்தம்மா போயி இறங்க நாப்பது ஏக்கரு விவசாய நிலத்தை நாஸ்தி பண்ணியிருக்கானுங்க... அன்னாடங்காச்சிகளைக் கொண்டாந்து வெயில்ல போட்டு சுட்டுப்புட்டானுங்க...எரநூறு ஓவாய்க்கு ஆசைப்பட்டு செத்துப் போயிருக்கானுங்க மானமுள்ள தமிழனுங்க... அந்தம்மா என்ன சொல்லுது... உடம்பு முடியாமத்தான் செத்தானுங்கன்னு சொல்லுது... உடம்பு முடியாதவனை ஏன்ய்யா கூட்டியாறீங்க... விஜயகாந்த் கூட்டத்துக்கு... அவருன்னு இல்லை.... மற்ற கட்சி கூட்டத்துக்கு போலீஸ் போறதே இல்லை... அம்மா கூட்டத்துல மக்களை அடைச்சி வச்சி பாதுகாப்பா நிக்குது... டாஸ்மாக்ல நின்னது மாதிரி... போலீஸை வைச்சி டாஸ்மாக் நடத்தி கோடியில லாபம் பார்த்துட்டு படிப்படியா குறைப்போம்ன்னு சொல்லுது... கேக்குறவன் கேணையனா இருந்தா கே.பி. சுந்தரம்பாள்தான் தெறி படத்து ஹீரோயின்னுன்னு சொல்லுவானுங்க...." சற்றே காட்டமாய் பேசினான் அவன்.

"நீங்க சொல்றதெல்லாம் சரிதான்... அதென்னா சுந்தராம்பாளுக்கு பொயிட்டீங்க... கேக்குறவன் கேனையனா இருந்தா கே.ஆர்.விஜயா கொண்டையில கேடிவி தெரியுதுன்னு சொல்லுவானுங்கன்னுதானே நான் கேள்விப்பட்டிருக்கேன்..." என்றார் கனகசபை.

"சும்மா தெறிக்க விடலாமேன்னுதான்...."

"ஆமா... பா,ம.கவுல அன்புமணிக்கு எந்தத் தொகுதின்னு சொல்லாம வச்சிருக்காங்களே.... எப்ப வருவேன் எப்படி வருவேன்னு தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்துல கண்டிப்பா வருவேன்னு கால் நூற்றாண்டுக்கு முன்னால தலைவர் சொன்ன மாதிரி.... இவரு நிப்பாரா... மாட்டாரா...?" கேட்டு விட்டுச் சிரித்தான் நடராசன்.

"ஏங்க அவருதான் முதல்வர் வேட்பாளர்... அப்புறம் நிக்காம... கண்டிப்பா நிப்பாருங்க... இறுதிப் பட்டியல் வரும்போது பாருங்க..."


"பாப்போம்... நியமன எம்பியானது மாதிரி  முதல்வராகலாம்ன்னு நினைச்சிராம இருந்தாச் சரி... எங்க பக்கமெல்லாம் மாவட்டச் செயலாளர்ன்னு சொல்லி தேர்தல்ல வேட்பாளரை நிறுத்தியிருக்காங்க... ஊர்ல கேட்டா அவன் எப்ப மாவட்டச் செயலாளர் ஆனான்னு தெரியலைன்னு சொல்றானுங்க..."

"வேற பேசுங்கங்க... எப்பப் பார்த்தாலும் அவங்கதான் உங்க டார்கெட்..." கடுப்பானார் அவர்.

"சரி விடுங்க... தந்திரக்குமார் கட்சிக்கு மூணு சீட்டாம்... தாலியை வித்து கட்சி வளர்த்து நடுத்தெருவுல நிக்கிறேன்... நான் எப்ப சம்பாரிக்கிறது... சம்பாதிக்கணுமின்னா ஐயா கால்ல விழுகணும்... அதுவும் இருபத்தி நாலு மணி நேரத்துல விழுகணும்ன்னு சொன்ன ஆளு.... கட்சி ஆரம்பிக்க எங்க இருந்துய்யா பணம் வந்துச்சு..." கேட்டார் சத்யமூர்த்தி.

"எல்லாம் ஜி வழியாத்தான்.... அரசியல்ல இருக்கவனெல்லாம் கோடிக்கு ஆசைப்பட்டு நம்மள தெருக்கோடியில விடுறானுங்க... இது தெரியாம கொடிப் பிடிச்சி  உயிரை விடுறோம்... இது சாக்கடைங்க... இந்த சாக்கடை தமிழகம் எங்கும் ஓடிக் கிடக்கு... இதை சுத்தம் செய்யணும்ன்னா இப்ப ஆகுற காரியமில்லைங்க... ஆனா இப்பவே ஆரம்பிச்சா இன்னும் பத்து வருசத்துல சுத்தமான தமிழகத்தை நம்மால கொண்டு வர முடியும்... அதுக்காகவாவது மாற்று அவசியம்... இல்லேன்னா மக்களுக்காக நான்... உங்கள் அம்மான்னு சொல்லிக்கிட்டு விளை நிலமெல்லாம் ஹெலிபேடா மாத்திருவாங்க... விஜயகாந்த் சொல்ற மாதிரி இதையெல்லாம் நியூஸ்ல படிக்கும் போது இவ்வளவு கேவலப்பட்டுப் போயிட்டோமேன்னு வருத்தமா இருக்குங்க..." என்றார் கனகசபாபதி.

"இந்த நடிகர்கள் கிரிக்கெட்....?" மெல்ல இழுத்தான் அவன்.

"அடுத்து அதுக்கா...?" ,முணங்கினார் அவர்.

"ஏங்க அரசியல் பேசினா திட்டுறீங்க... கிரிக்கெட் பேசினாலுமா...?"

"கோடீஸ்வர பிச்சைக்காரங்களைப் பற்றி எதுக்குங்க பேசுறீங்க... இதுல கமல் வேற ராமர்... அணில்ன்னு பேசிக்கிட்டு இருக்காரு... அஜீத் சொன்னது தப்புன்னு பேசுறானுங்க... இவனுக பின்னாடி கொடிப் பிடிக்க நம்மள சிலதுங்க இருக்குக... அறிவுகெட்ட மூதேவிங்க... மொத்தத்துல நாம திருந்தமாட்டோம்ங்க... எத்தனை வெள்ளம் வந்தாலும் நாம அவனுக காலை நக்குறதை விட்டுட்டு வெளிய வரமாட்டோம்... இன்னைக்கு பாத்தீங்கதானே... தெறி ஆட்டத்தை... அதான் அவனுக நம்மளை சரியா கணக்குப் பண்ணி வச்சிருக்கானுங்க.... விடுங்க..." என்றான் நடராஜன்.


"எல்லாத்துக்கும் மாற்று அவரு வரணுங்க..." என்றார் அவர். அவரின் அவர் யாரென்பதை எல்லாரும் அறிவார்கள் என்பதால் ஆளாளுக்கு முகத்தை திருப்பிக் கொண்டனர்.

கடுப்பான அவன் மட்டும் யாரு விஜயகாந்தா என்று கேட்டால் பிரச்சினை வரும் என்பதால் "யாரு அஜீத்தா?" என்றதும் எல்லாரும் சிரிக்க, சத்திய மூர்த்தி மட்டும் சிரிக்காம "விஜயகாந்தும் இல்ல... அன்புமணியும் இல்ல... குஷ்பு வந்தா எல்லாம் சரியாகும்... நீங்க வேணும்னா பாருங்களேன்... குஷ்புக்கு பிரதமர் ஆகிற தகுதியே இருக்கு... ஒரு நாள் அது நடக்கும்..." என்றார்.

"அதான் தமிழகம் இன்னும் அப்படியே இருக்கு... வெளங்கிடும்..." என்றபடி சோப்பை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றான் அவன்.

படங்களுக்கு நன்றி... இணையம்

-'பரிவை' சே.குமார்.

புதன், 13 ஏப்ரல், 2016

அகல் கட்டுரை : கொஞ்சம் ஆன்மீகம் கொஞ்சம் வீரத் தமிழர் வரலாறு (தொடர்ச்சி)

முதல் பகுதி வாசிக்காதவர்கள் கீழிருக்கும் சுட்டியைச் சொடுக்கி வாசியுங்கள்...


கட்டுரையை அகலில் வாசிக்க...    ஆன்மீகம்

***
(தெப்பக்குளம் பக்கமிருந்து எடுக்கப்பட்ட காளீஸ்வரர் கோவில் கோபுரம்)
கோவிலின் சொத்துக்கள் சுவர்ணகாளீஸ்வரர் பெயரில் இருப்பதாவும் திருவிழாக் காலங்களில் சோமேசுஸ்வரர் சந்நிதியில் இருக்கும் மூர்த்திகள் திருவீதி உலா வருவதாகவும் நெய்வேத்தியம் படையல் எல்லாம் சுந்தரேஸ்வரருக்கு செய்யப்படுவதாகவும் கோவில் குறித்தான செய்திகளில் காணமுடிகிறது. இங்கு பிறப்பதும் இறப்பதும் முக்தி என்று சொல்லப்படுகிறது. மேலும் காளீஸ்வரரை வணங்கினால் நம் முந்தைய வினைகள் எல்லாம் விலகும் என்றும் சொல்கிறார்கள். இங்கு சகஸ்ரலிங்கம் (ஒரே லிங்கத்தில் ஆயிரம் லிங்கம்) உள்ளது. இதன் காரணமாக இங்கு தரிசனம் செய்தால் ஆயிரம் சிவாலங்களை வழிபட்ட பலன் கிடைக்கும் என்கிறது வரலாறு. இந்தக் கோவிலில் தங்கத்தாலான பள்ளியறை இருக்கிறது. தேவாரம் பாடப்பெற்ற 274 சிவதலங்களில் இது 200வது தலமாகும். கோவிலின் உள்ளே முத்து வடுகநாத சேதுபதி மற்றும் மருது சகோதர்களுக்கு சிலைகள் இருக்கின்றன.

இந்தக் கோவிலின் இராஜகோபுரத்தில் ஏறிப் பார்த்தால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் தெரியும். இதன் காரணமாகவே 'மருதைக் கோபுரம் தெரியக் கட்டிய மருது வர்றதைப் பாருங்கடி..' என்ற நாட்டுப்பாடல் இருக்கிறது. இது சிவகங்கை சீமை என்ற படத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதேபோல் எங்கள் கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் இராஜகோபுரத்தில் ஏறிப்பார்த்தால் காளையார்கோவில் காளீஸ்வரரின் இராஜகோபுரம் தெரியும். இது அந்தக்கால கட்டிடக் கலைக்கு சான்றாகும். இப்போது தெரியுமா என்று கேட்டால் ஏறிப் பார்த்தால் தெரியலாம்... ஆனால் இப்போது எல்லாரையும் ஏற விடுவதில்லை. சிறுவயதில் கண்டதேவி கோவில் கோபுரத்தில் ஏறி இருக்கிறோம். கல்லூரியில் படிக்கும் போது என்.எஸ்.எஸ் பணிக்காக காளையார்கோவில் சென்றபோது பாதி வரை ஏறியதாகவும் அதற்குள் ஆசிரியர் சத்தமிட்டு இறங்கி வரச் சொன்னதாகவும் நண்பர்கள் சொன்னார்கள்.

இனிக் கொஞ்சம் கோவிலுடன் சம்பந்தப்பட்ட வீர வரலாற்றையும் பார்போமே... வெள்ளையரைப் பார்த்து 'யாரைக் கேட்கிறாய் வரி..' என கட்டப்பொம்மன் சொல்வதற்கு முன்னர் 'வரி என்று கேட்டால் வாய் கிழிக்கப்படும்...' என்று சொன்னவர்தான் சிவகங்கை சீமையின் மன்னர் முத்து வடுகநாத சேதுபதி, அவரின் மனைவிதான் ஜான்சிராணிக்கு முன்னரே வெள்ளையரை எதிர்த்து முதல் குரல் கொடுத்த வீரப்பெண்மணி ராணி வேலு நாச்சியார். இவர்களின் படைத் தளபதிகளாய் இருந்து முத்துவடுகருக்குப் பிறகு ராணி வேலுநாச்சியாரின் ஆட்சியில் அவருக்கு உறுதுணையாய் இருந்து வெள்ளையரை ஆட்டம் காண வைத்தவர்கள்தான் வீரம் செறிந்த மருது சகோதரர்கள்.

(மன்னர் முத்து வடுகநாத சேதுபதி மற்றும் ராணி கௌரி நாச்சியார் அடக்கம் செய்யப்பட்ட இடம்)
காளீஸ்வரர் கோவிலில் வழிபாடு செய்து கொண்டிருந்த போது முத்துவடுகரும் அவரது இரண்டாவது மனைவி கெளரி நாச்சியாரும் ஆங்கிலேயரால் சுற்றி வளைக்கப்படுகிறார்கள். அஞ்சி ஒளியாமல் ஆக்ரோஷமாய் வெள்ளையரை எதிர்த்துப் போரிட்ட முத்து வடுகரை வெள்ளையர் தளபதி பான்சோர் என்பவன் ஒளிந்திருந்து தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட. அதைப் பார்த்த ராணி கௌரி நாச்சியார் மன்னரைக் காக்கும் விதமாக குறுக்கே பாய குண்டு அவர் மீது பாய்ந்து மண்ணில் சாய்க்க, அடுத்த குண்டில் மன்னரையும் மண்ணில் சாய்த்து விடுகிறான். செம்மண் பூமியான சிவகங்கை சீமை அவர்கள் இருவரின் ரத்தத்தால் இன்னும் சிவப்பானது என்கிறது வரலாறு.

அதேபோல் வெள்ளையரின் சூழ்ச்சியில் சிக்குண்டு தாங்கள் உயிரோடு இருந்தால்தான் போராட்டத்தில் வெல்ல முடியும் என சிவகங்கை காடுகளில் (அப்போது மிகப்பெரிய அளவில் காடு பறந்து விரிந்து கிடந்திருக்கிறது) மருதிருவரும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் வெளியில் வராவிட்டால் காளையார்கோவில் கோபுரத்தை தகர்ப்போம் என ஆங்கிலேயர்கள் மிரட்டஎங்கள் உயிரை இழப்போமே ஒழிய, எங்கள் கோவிலை ஒருபோதும் இடிக்க விடமாட்டோம் என வெளியில் வந்து சரணடைந்தார்களாம். ஆங்கிலேயர்கள் 1801ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி மருதிருவரையும் தூக்கிலிட்டு இருக்கிறார்கள். பெரிய மருதுவை தூக்கிலிட்ட போது பலமுறை கயிறு அறுந்தாகச் சொல்கிறார்கள். வேகமும் விவேகமும் நிறைந்த சின்ன மருதுவோ 'என்னை தூக்கிலிட நீ யார்..? எனக்கு நானே இட்டுக் கொள்கிறேன்...' எனச் சொல்லி தனக்குத்தானே தூக்கிட்டுக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இறந்தபின் தங்களை காளீஸ்வரர் சன்னதிக்கு நேரே  புதைக்க வேண்டும் என்ற அவர்களின் இறுதி ஆசையின்படி தலையை மட்டும் வெட்டி எடுத்து வந்து சின்னக் கோபுரத்திற்கு நேர் எதிரே புதைத்த வெள்ளையர், உடம்பை திருப்பத்தூரில் புதைத்தார்களாம்.

காளையார் கோவிலுக்கு அருகில் இருக்கும் கொல்லங்குடி வெட்டுடைய காளி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அங்கு காளியாக வீற்றிருப்பவர் ராணி வேலு நாச்சியாரை ஆங்கிலப் படையிடமிருந்து காப்பாற்ற தன் உயிரைக் கொடுத்த உடையாள் என்ற வீரப்பெண்மணிதான்... தன்னைக் காக்க தன்னுயிரைக் கொடுத்த உடையாளின் பெயரில் பெண்கள் படையை அமைத்திருந்தார் வேலு நாச்சியார். ராணியைக் காப்பதற்காக இரு துண்டுகளாக வெட்டுப்பட்ட உடையாளை வெட்டு உடைய காளியாக அந்தப் பகுதி மக்கள் வணங்க ஆரம்பித்தனர். கோவில் இருக்கும் கொல்லங்குடி ஆயுதங்கள் செய்யும் இடமாக, கொல்லர்கள் குடியிருந்த இடமாக இருந்ததால் கொல்லர்குடி என்று அழைக்கப்பட்டு பின்னாளில் கொல்லங்குடி ஆகியிருக்கிறது.
(மருது சகோதரர்கள்)

மேலும் மறவர்படை தங்க வைக்கப்பட்டிருந்த இடம்தான் காளையார் கோவிலுக்கு அருகில் இருக்கும் மறவர் மங்களம் (இப்போது மறவமங்களம்) என்ற ஊர். வெள்ளையருக்கு எதிரான போரில் இந்த ஊரில் இருந்த வீரர்கள் நிறையப் பேர் உயிரிழந்திருக்கின்றனர். அவர்களின் நினைவாக இந்த ஊரில் ஒரு ஊரணி வெட்டப்பட்டிருக்கிறது. அந்த ஊரணிக்குப் பெயர் 'குழு மாண்ட ஊரணி' என்பதாகும். இன்றும் அந்த ஊரணி வரலாற்றின் சாட்சியாக மறவமங்களத்தில் இருக்கிறது.


இதேபோல் கொல்லங்குடிக்கு அருகில் இருக்கும் ஊர் குறுக்கத்திகாளையார் கோவிலுக்கு மருது சகோதரர்கள் புதிய தேர் செய்து தேரோட்டம் நடத்தியபோது தேர் ஓடவில்லையாம். எவ்வளவோ முயற்சித்தும் பலனில்லை என்றபோது என்ன பிரச்சினை இதை எப்படி சரி செய்வது என்று மருது சகோதரர்கள் ஆலோசனை செய்த நேரத்தில் கொல்லங்குடி காட்டுக்குள்ளே இருக்கும் குறுக்கத்தி கண்மாயில் வீரமுத்து ஆனந்தசாமி என்ற சித்தர் இருக்கிறார் என்றும் அவர் வந்தால் சரி செய்வார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. உடனே அவரை அழைத்து வந்திருக்கிறார்கள். அவர்கள் அழைத்து வந்த சித்தர் என்பவர் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் இருக்கும் மனிதர்தான்அந்தச் சித்தரும் தேர்ச் சக்கரத்தில் இருந்த பிரச்சினையை கண்டுபிடித்து நீக்கி, அங்கு ஒரு கவியும் பாடியிருக்கிறார். அதன் பின்னரே தேர் ஓடியிருக்கிறது. 

ஓடாமல் நின்ற தேர் ஓடிய மகிழ்ச்சியில் பெரியமருது என்ன வேண்டும் கேள் என்று சித்தரிடம் கேட்டதற்கு இப்போது நாங்கள் இருக்கும் குறுக்கத்தி கண்மாய்ப் பகுதியை எனக்கு எழுதித் தாருங்கள் என்று கேட்டிருக்கிறார். அப்படியே எழுதிக் கொடுக்க, குறுக்கத்தி கிராமம் உருவாகியிருக்கிறது. அதன் பின்னர் சில காலம் வாழ்ந்த அந்த சித்தர் தம் மக்களிடம் உருவ வழிபாடு செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டு ஜீவசமாதி அடைந்திருக்கிறார். அதனால் இன்று வரை அந்தக் கிராமத்தில் எந்தக் கோவிலும் இல்லை என்பதை அந்தக் கிராமத்தில்... அந்த சித்தரின் பரம்பரையில் பிறந்த... எனக்கு மிகவும் தெரிந்த அண்ணன் ஒருவர் சொன்ன போது நம் மாவட்டத்தில் இப்படி ஒரு கிராமமா என்று ஆச்சர்யமாக இருந்தது. அது என்ன குறுக்கத்தி என்றால் குறுக்கத்தி என்பது ஒருவகைப் பூவாம்... சங்க காலத்தில் இருந்திருக்கிறது... இந்தப் பூ குறித்து புறநானூற்றில் பாடல் இருப்பதாகவும் அவர் சொன்னார்.


இப்படி அரண்மனைச் சிறுவயல், தேவகோட்டையில் இருக்கும் சங்கரபதிக்கோட்டை என இன்னும் நிறைய ஊர்கள் இந்த வரலாற்றோடு தொடர்பில் இருந்திருக்கின்றன. மற்ற வரலாறுகள் பலவும் மக்களிடம் கொண்டு செல்லப்பட்ட அளவுக்கு இந்த வீரவரலாறு கொண்டு செல்லப்படாததன் காரணம் தெரியவில்லை. இப்போதுதான் பலர் வேலுநாச்சியார் குறித்தும் மருது சகோதரர்கள் குறித்தும் நிறைய எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். வரலாற்றைப் பேசினால் இன்னும் போய்க் கொண்டே இருக்கும் அப்புறம் இது ஆன்மீகப் பதிவாக அல்லாமல் வரலாற்றுப் பதிவாக மாறிவிடும்.

முத்து வடுகநாத சேதுபதியும் மருது சகோதரர்களுமே இந்தக் கோவிலை செப்பனிட்டுக் காத்தார்கள் என்றும் மருது சகோதரர்கள்தான் இரண்டு கோபுரங்களையும் கட்டியவர்கள் என்றும் ஆரியர்களின் வரவுக்குப் பின்னர் பல கோவில்களின் வரலாறுகள் மாற்றி எழுதப்பட்டன என்றும் அப்படித்தான் காளையார்கோவிலின் வரலாறும் மாற்றி மாற்றிச் சொல்லப்பட்டது என்றும் கொல்லங்குடி காளியின் வரலாறு கூட மாற்றித்தான் எழுதப்பட்டிருக்கிறது என்றும் மருதுபாண்டியர் குறித்த ஆய்வில் இருக்கும் குறுக்கத்தியைச் சேர்ந்த அண்ணன் கூடுதல் விவரங்களோடு சொன்னார்.

எது எப்படியோ வரலாறுகள் மாற்றி மாற்றிச் சொன்னாலும் சிவகங்கை மண்ணில் பிறந்த நாங்கள் அறிந்த வரலாற்றின்படி ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற வீரம் செறிந்த மறவர்கள் வாழ்ந்த பூமியில் விண்ணைத் தொடும் இராஜகோபுரத்துடன் மூன்று சிவன்களை தன்னுள்ளே வைத்து வேலுநாச்சியார், மருது சகோதரர்களின் வீரத்தை இன்றுவரை நமக்கெல்லாம் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது திருக்கானாப்பேர் என்னும் காளையார்கோவில். இக்கோவில் சைவ மதத்தின் அடையாளமாக மட்டுமில்லாமல் ஒரு வீரம் செறிந்த தமிழினத்தின் போராட்ட வரலாற்றைத் தாங்கி உயர்ந்து நிற்கிறது. இன்றைய தமிழர்களாகிய நாம் வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க தவறி வருகிறோம்... பல சின்னங்கள் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன... வீர வரலாறுகளை எல்லாம் பள்ளிக்கூட வரலாற்று பாடங்களில் மட்டுமே வாசித்துக் கொண்டிருக்கிறோம். இனி வரும் காலங்களிலாவது பண்டைய வரலாற்றுச் சின்னங்களை அழிவில் இருந்து காப்பாற்ற முயற்சிப்போம்.


கதை, கவிதை என்றால் என்னால் எப்படி வேண்டுமானாலும் கிறுக்க முடியும் ஆனால் ஆன்மீகம் என்னும் போது... அதுவும் இதுவே எனது முதல் ஆன்மீகக் கட்டுரை என்பதால் வரலாற்றுப் பிழைகளும் எழுத்துப் பிழைகளும் இருந்தால் மன்னியுங்கள். நான் அறிந்த செய்திகளுடன் இணையத்தில் வாசித்த செய்திகளை வைத்து ஆரம்பித்து மருதுபாண்டியர் குறித்த வரலாற்றை மிக விரிவாக எழுதும் பொருட்டு அதற்கான முயற்சியில் இருக்கும் அண்ணனிடம் போனில் நீண்ட நேரம் பேசி... பேசி என்பதைவிட அவரை தொந்தரவு செய்து பெற்ற செய்திகளைக் கொண்டு என்னால் முடிந்தளவுக்கு எழுதியிருக்கிறேன். இதுவும் நண்பர் சத்யாவின் வேண்டுகோளுக்காக எழுதியதுதான் இது. ஆனாலும் இதற்கான தேடல் எனக்கு நிறைய ஆச்சர்யங்களைக் கொடுத்தது. இன்னும் இதுபோன்ற கோவில்கள் குறித்து அறியும் ஆர்வத்தையும் கொடுத்ததிருக்கிறது என்பதே உண்மை. 


அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 12 ஏப்ரல், 2016

அகல் கட்டுரை : கொஞ்சம் ஆன்மீகம் கொஞ்சம் வீரத் தமிழர் வரலாறு

அகல் மின்னிதழ் நண்பர் சத்யா கேட்டதற்கு இணங்க எழுதிய முதல் ஆன்மீகக் கட்டுரை. அவர் கேட்டபோது தயக்கமாக இருந்தாலும் எங்கள் மாவட்டத்தில் வீர வரலாற்றைச் சுமந்து நிற்கும் கோவில் குறித்து என்றதும் முயற்சிக்கலாம் என்று எழுதியதுதான் இது. கொஞ்சமாய் ஆன்மீகமும் நிறைய வரலாறும் கலந்து எழுதிய கட்டுரை இது. இன்னும் நிறைய எழுத நினைத்து ஏழு பக்கத்துக்கு மேலாகிவிட்டதால் தேவையில்லாதவற்றை நீக்கி அவருக்கு அனுப்பினேன். ஏப்ரல் மாத அகல் தமிழ்ப் புத்தாண்டு இதழில் வெளிவந்திருக்கிறது. இதுவரை எட்டிப் பார்க்காத ஒரு களம்,.. தவறுகள், பிழைகள் இருக்கலாம்... இருந்தால் சொல்லுங்கள் என்னைத் திருத்திக் கொள்ள உதவும்...
************
அகலில் மின்னிதழை முழுவதும் வாசிக்க...


அகலில் என் கட்டுரையை தனியாக வாசிக்க...


நன்றி சத்யா...

-------------------------------------------

இனி பதிவுக்குள் செல்வோமா...


வீர வரலாற்றைச் சுமந்து நிற்கும் காளையார் கோவில்

செம்மண் பூமியான சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கோவில்களில் முதன்மையானது காளையார் கோவில். சிவகங்கை சமஸ்தானத்தை சசிவர்ணத்தேவர் ஆட்சி செய்தார். அவருக்குப் பிறகு இரண்டாவது மன்னராக அரியணை ஏறியவர் வெள்ளையரை எதிர்த்துக் குரல் கொடுத்த முத்துவடுகநாத சேதுபதியின் ஆட்சிக் காலத்தில் இந்த ஊர் மிகப்பெரிய சந்தையாக இருந்திருக்கிறது. இங்குதான் தொண்டி மார்க்கமாக கொண்டு வரப்படும் குதிரைகள் உள்பட ஏராளமான பொருட்கள் விற்கப்பட்டிருக்கின்றன. மிகப் பெரிய வீர வரலாற்றை தன்னுள்ளே வைத்திருக்கும் காளையார் கோவிலைச் சுற்றிலும் விவசாயத்தை நம்பி வாழும் கிராமங்கள் நிறைந்திருப்பதால் இந்த ஊர் இன்று வரை நகரத்தின் தன்மையை  இன்னும் முழுமையாக உள்வாங்காமல் நகரமும் கிராமமும் கலந்த கலவையாகத்தான் இருக்கிறது.
 
கோவில் நகரம் என்றால் அது கும்பகோணம்தான் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அந்தளவுக்கு பிரசித்தி பெற்ற கோவில்களைக் கொண்ட நகரம் அது என்றபோதிலும் நம் தமிழகத்தில் கோவில்கள் இல்லாத நகரம் இல்லவே இல்லை என்பதையும் நாம் அறிவோம். அதேபோல் உலகச் சிறப்புமிக்க, வரலாற்று சிறப்பு மிக்க பல கோவில்கள் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கின்றன என்பதை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவற்றில் குறிப்பாக உலக பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர், குன்றக்குடி முருகன், நாட்டரசன்கோட்டை கண்ணாத்தாள், தென் திருப்பதி என்றழைக்கப்படும் அரியக்குடி பெருமாள், கொல்லங்குடி காளி, கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர், திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப்பெருமாள், சிங்கப்புணரி சேவுகப்பெருமாள், தேவகோட்டை சங்கரப்பதி  முனீஸ்வரர் என நீளும் இந்தப் பட்டியலில் தேவகோட்டை, காரைக்குடி, சிவகங்கை, இளையாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் இன்னும் பல கோயில்களைச் சேர்க்கலாம். 

காளையார் கோவில்: சிவகங்கைக்கு கிழக்கே 16 கி.மீ தூரத்திலும் தேவகோட்டைக்கு மேற்கே 35 கி.மீ தூரத்திலும் மதுரைக்கு தென்கிழக்கே (மதுரை - தொண்டி சாலையில்) 66 கி.மீ தூரத்திலும் அமைந்திருக்கிறது. சென்னையில் இருந்து மானாமதுரை வழியாக இராமேஸ்வரம் செல்லும் இரயில் பாதையில் இருக்கும் நாட்டரசன்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து 6 ப்கிமீ தூரத்தில் அமைந்திருக்கிறது. தேவகோட்டை, காரைக்குடி, சிவகங்கை, தொண்டி, இளையாங்குடி, பரமக்குடி, மதுரை என எல்லா இடத்திலும் இருந்து பேருந்து வசதி இருக்கிறது.

சிவகங்கை சமஸ்தானத்தின் கீழ் இருக்கும் காளீஸ்வரர் கோவில், தேவகோட்டை ஜமீன்தார் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. அவர்களுடைய கட்டளையின் பேரில் தினமும் ஆறு காலப் பூஜைகள் நடைபெறுகின்றன. சிவகங்கை சமஸ்தானத்தில் மிகப்பெரிய கோபுரமாக இருக்க வேண்டும், அதிலிருந்து பார்த்தால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் தெரிய வேண்டுமென மருது சகோதரர்கள் பார்த்துப் பார்த்து கட்டிய இராஜகோபுரம் ஒன்பது நிலைகளுடன் 157 அடி உயரத்தில் பிரமாண்டமாய் நிற்கிறது. இதற்காகவே நிறைய இடங்களில் மண்ணெடுத்து சுட்டுப் பார்த்து எதுவும் சரியில்லாத நிலையில் மானாமதுரைக்கு அருகிலுள்ள கருமலையில் மண்ணெடுத்து செங்கல் சுட்டுப் பார்த்து, அது உறுதியானதாக இருக்கவே அதை வைத்துக் கட்டினார்கள் என்பது வரலாறு. இன்றும் எங்கள் சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை செங்கலுக்கு மதிப்பு கூடுதல். பெரிய கோபுரத்து அருகில் ஐந்து நிலை கொண்ட சிறிய கோபுரம் ஒன்றும் இருக்கிறது. சிறிய கோபுரத்தின் நேரேதான் மூலவர் காளீஸ்வரரின் சன்னதி அமைந்திருக்கிறது. இரண்டு கோபுரங்களும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கின்றன.

Worship Timings of Kalayarkoil Temple

சிறிய கோபுரத்தை முதலாம் சுந்தரபாண்டியன் கட்டினார் என்று சொன்னாலும் இரண்டு கோபுரங்களுமே மருது சகோதரர்களால் கட்டப்பட்டவையே என்றும் ஒரு சில வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏறத்தாழ நாலு ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து இருக்கும் இக்கோவிலின் உள்ளே உட்பிரகாரம், வெளிபிரகாரம் என இரண்டு பிரகாரங்கள் இருக்கின்றன. இங்கிருக்கும் மூன்று சந்நதிகளில் முறையே சொர்ணகாளீஸ்வரர் - சொர்ணவல்லித் தாயார், சோமேஸ்வரர் - சௌந்தரநாயகி, சுந்தரேஸ்வரர் - மீனாட்சி  ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். சிவன் மூன்று கோலத்தில் வீற்றிருப்பது உலகில் வேறு எந்தக் கோவிலிலும் காண முடியாத அற்புதம். மூன்று சந்நிதிகளில் நடுவே இருப்பவர் தேவாரப் பாடல் பாடப்பெற்ற மூலவர், சுயம்புவாய்த் தோன்றிய சொர்ணகாளீஸ்வரர். அவருக்கு வலது பக்க சன்னிதியில் சோமேஸ்வரரும் இடது பக்க சன்னிதியில் சுந்தரேஸ்வரரும் இருக்கிறார்கள். இந்த மூன்று சந்நிதிகளும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. அன்னை சொர்ணவல்லியின் சந்நிதி சுந்தரேஸ்வரருக்கு இடது புறமாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அன்னை சௌந்தரநாயகி மற்றும் அன்னை மீனாட்சி இருவரும் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார்கள். கொக்கு மந்தாரை மரம் இக்கோவிலின் தலவிருட்சமாகும்.

சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமிகள் சேரமானுடன் தலயாத்திரை செய்த போது திருச்சுழியில் வந்து தங்கியிருந்திருக்கிறார். அவர் எப்பவும் போல் இறைவனை வழிபட்டுவிட்டு படுக்க, கனவில் காளை உருவம் கொண்டு கையில் பொற்செண்டு தாங்கியும் திருமுடியில் சுழி அணிந்தும் காட்சி தந்த இறைவன் ‘யாம் இருப்பது திருக்கானப்பேர்’ எனக்கூறி மறைந்துவிட்டராம். திடுக்கிட்டு விழித்த சுந்தரர், சேரமானுடன் திருக்கானப்பேர் வந்து இறைவனைக் கண்டு பரவசப்பட்டு பதிகம் பாடினார் என்பது ஸ்தல வரலாறு. ஏழாம் திருமுறையில் இடம்பெற்றுள்ள இப்பதிகத்தில் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் 'கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே' எனப் பாடியிருக்கிறார்.

இங்குள்ள சிவகங்கை தீர்த்தம், காளி தனது வழிபாட்டிற்காக உருவாக்கியதாகும். சண்டாசுரனை வதம் செய்த பின்னர் காளி இங்கு வந்து இந்தத் தீர்த்தத்தை உருவாக்கி அதில் மூழ்கி சிவனை வழிபட்டு அதன் வாயிலாக அசுரனைக் கொன்ற பாவம் நீங்கப் பெற்று கரிய உருவம் கொண்டு காளீஸ்வரரை மணம் புரிந்து சொர்ணவல்லித் தாயாராக அருள்பாலிக்கிறார் என்பதும் வரலாறு.

இதேபோல் இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானை மகரிஷி ஒருவர் கொடுத்த பிரசாத மாலையைத் தரையில் வீசி எறிந்ததால் பெற்ற சாபத்தை நீக்குவதற்காக இங்கு வந்து இறைவனை வழிபட்டு தன் தந்தத்தால் பூமியைக் கீறி தீர்த்தம் உண்டாக்கி அதில் குளித்து தன் பாவத்தைப் போக்கிக் கொண்டது என்றும் அதுதான் ஆனைமடு தீர்த்தம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் ஆனைமடு தீர்த்தம் என்பது யானைகளைக் குளிப்பாட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட பள்ளமே என்று மருதுபாண்டியர்களின் வரலாற்றை விரிவாக தெரிந்து வைத்திருக்கும் பலர் சொல்லியிருக்கிறார்கள். கஜபுஷ்கரணி என்றும் அழைக்கப்படும் இந்த தீர்த்தக்குளம் எப்போதும் வற்றுவதில்லை எனவும் சொல்கிறார்கள்.  இந்தக் குளத்தின் நடுவே நீராழி மண்டபம் அமைந்துள்ளது. மேலும் இக்கோவிலில் விஷ்ணு தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், கௌரி தீர்த்தம், ருத்ர தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சுதர்சன தீர்த்தம் போன்ற தீர்த்தங்களும் இருக்கின்றன.

Maruthu Brothers Statue located inside the Kalayarkoil Temple


இந்த ஊருக்கு தக்ஷிணகாளிபுரம், சோதிவனம், மந்தாரவனம், மோக்ஷப்பிரதம், அகத்தியக்ஷேத்ரம், காந்தாரம், தவசித்திகரம், வேதாருவனம், பூலோககைலாயம், மகாகாளபுரம் என்ற பெயர்களும் உண்டு என்றாலும் இறைவன் சொன்ன திருக்கானப்பேரே வரலாற்றில் நிற்கிறது. சுந்தரர் காளைக்கு பதியம் பாடிய பின்னர் காளீஸ்வரர் கோவிலாகி அதுவே மருவி இன்று காளையார்கோவில் என்று அழைக்கப்படுகிறது. இறைவன் மூன்று சந்நிதிகளில் இருப்பதை வைத்து இப்பகுதியில் 'காளைதேட... சோமர் அழிக்க... சொக்கர் சுகிக்க...' என்ற பழமொழி வழக்கத்தில் இருக்கிறது.

படங்கள் இணையத்திலிருந்து இந்த பதிவிற்காக எடுத்துச் சேர்த்தது... நன்றி இணையம்.

தொடர்ச்சி நாளை பகிரப்படும்...
-'பரிவை' சே.குமார்.