மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 3 ஜனவரி, 2025

கேலக்ஸி விழா : அல் குத்ரா நட்புக்கள் ஒன்று கூடல்

கேலக்ஸி குழுமத்தின் 'Galaxy Art & Literature Club'-ன் இரண்டாம் ஆண்டு ஒன்று கூடம் சென்ற சனிக்கிழமை (28/12/2024) அன்று மாலை துபை அல் குத்ராவில் நடைபெற்றது.

நிகழ்வுக்கு வருவது குறித்தான திட்டமிடலில் எல்லாரும் 3.30 மணிக்கு அல் குத்ராவுக்குச் செல்லும் இடத்தில் இருக்கும் ஹோட்டல் அருகில் கூட வேண்டும் எனச் சொல்லியிருந்ததை மனதில் கொண்டு பெரும்பாலானோர் சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்திருந்தார்கள். சென்ற வருடம் சென்ற போது இருந்ததை விட இந்த முறை மரங்களை வெட்டி, மண்பாதை என்றாலும் சீர் பண்ணி, சுற்றிச் சுற்றிச் செல்வதைத் தவிர்த்து விரைவாக குத்ரா ஏரிப் பகுதியை அடையுமாறு பாதையை ஒழுங்கு படுத்தியிருந்தார்கள்.


அபுதாபியில் இருந்து நான், இராஜாராம், பால்கரசு, சதீஷ், பிர்தோஷ் பாஷா ஆகியோர் சதீஷின் காரில் சென்றோம். எல்லாரும் கூடுமிடத்தை நாங்கள்தான் முதலில் சென்றடைந்திருந்தோம். அதன் பிறகு ஒவ்வொருவராய் வர ஆரம்பித்தார். சற்று நேரம் கூடிப் பேசி மகிழ்ந்து குத்ரா ஏரிக் கரையின் ஓரத்தில் பலர் குழுக்களாகக் கூடியிருக்க, எங்களுக்கான ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து கார்களை நிறுத்தினோம். கார்களின் வரிசை தமிழ் சினிமாவில் நாயகனை விரட்டிச் செல்லும் வில்லனின் கார்கள் அணிவகுத்து நிற்பது போல் நின்றன.

இடத்தைப் பார்த்ததும் பெரும்பாலான நட்புக்கள் இணைந்து கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார்கள். எல்லாரும் வந்து சேர்ந்தது, வருவதாகச் சொல்லியிருந்த தெரிசை சிவா மற்றும் சிலர் வரமுடியாமல் போனாலும் இன்னும் புதிதாய் சிலர் வந்து சேர, சென்ற ஆண்டை விட இந்த வருடம் அறுபதுக்கும் மேற்பட்டோர் கூடியிருந்தது மகிழ்வாக இருந்தது.

நிகழ்வின் ஆரம்பமாக பிலால் அவர்கள் தானே தயாரித்துக் கொண்டு வந்திருந்த டீ, காபியுடன் ஆமவடையும் சேர்ந்து கொடுக்கப்பட, அதன் சுவை எல்லாரையும் ஈர்த்துக் கொண்டது. அதன்பின் பாலாஜி முருகேசன் அவர்கள் வாங்கி வந்திருந்த கேக்கை, வர இருந்த - அன்னக்கி வரலை, ஆனா இன்னக்கி வந்திருச்சு - புத்தாண்டை வரவேற்கும் விதமாக, எப்பவும் புத்தாண்டைக் கொண்டாடப் போடப்படும் 'இளமை இதோ இதோ…' பாடலுடன் மகிழ்வாய் வெட்டி மகிழ்ந்தோம். நண்பர் அபுல் பைஸ் அவர்களுக்குப் பிறந்தநாள் என்பதால் அவர் எல்லோருக்கும் இனிப்பு வழங்கினார். அவரின் பெற்றோர் வந்திருந்தது கூடுதல் மகிழ்ச்சி.

அதன்பின் பிலால் அவர்கள், கையில் ஸ்பீக்கரை வைத்துக் கொண்டு, பழ, காய்கறி, பழைய சாமான் வியாபாரிகள் போல பேச ஆரம்பித்தார். அவர்கள் தங்கள் அருகில் ஒருவரை உதவிக்கு வைத்துக் கொள்வதைப் போல, இராஜாராமை வைத்துக் கொண்டார். இதனிடையே பால்கரசு ஒரு பக்கம் அவரது யூடியுப் சேனலுக்காக வீடியோக்கள் எடுத்துக் கொண்டிருந்தார்.

பிலால் அவர்களின் அறிவிப்பின் படி மியூசிக்கல் பந்து போட்டி, ஸ்பூனில் எலுமிச்சைப் பழத்தை வைத்துக் கொண்டு இலக்கை அடையும் போட்டி குழந்தைகள், பெண்கள், ஆண்கள் எனத் தனித்தனியாக நடத்தப்பட்டன. போட்டிகளின் போது எல்லாரும் சிரித்து மகிழ, சிறப்பாகப் போட்டிகளை நடத்திய பிலால் எப்படியும் தன் மனைவியை வெற்றி பெற வைத்து விடலாம் என முயற்சித்தார் என்றாலும் முயற்சி வெற்றி பெறவில்லை.

அதன்பின் யாழ் குழுமத்தின் சிலம்பாட்டம் மற்றும் ஒயிலாட்டம் மிகச் சிறப்பாக அரங்கேறியது. ஒரு பொது இடத்தில் பலரின் முன்னிலையில் கணவன் மனைவி இருவரும் எதைப்பற்றியும் யோசிக்காமல் ஆடியது உண்மையில் சிறப்பான விஷயம். அந்தக் கட்டாந்தரையில் செருப்பில்லாமல் அவர்கள் ஆடினார்கள்… அது அத்தனை சுலபமல்ல. அதேபோல் அவர்களின் பிள்ளைகள் இருவரும் சிலம்பம் மிக அருமையாகச் சுற்றினார்கள். பால்கரசு சிறிது நேரம் கம்பு சுற்றினார். மறுநாள் அவரின் சேனலில் கம்பு சுற்றும் வகைகளைப் பற்றி விவரித்து ஒரு வீடியோ பகிர்ந்திருந்தார்.

யாழ் குழுமத்துக்கும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் கேலக்ஸி பதிப்பக வெளியீடான திருக்குறள் புத்தகம் அன்புப் பரிசாகக் கொடுக்கப்பட்டது.

சகோதரர் திலீப் அவர்கள் மட்டன் கோலா உருண்டை ஒரு பாத்திரம் நிறையக் கொண்டு வந்திருந்தார். கூடவே முந்திரியில் குளித்த பாயாசமும் கொண்டு வந்திருந்தார். இதை மிகச் சிறப்பாகச் செய்து கொண்டு வந்திருந்த திருமதி. திலீப்புக்கு வாழ்த்துகள்.

அதன் பிறகு பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக, நீண்ட நேரம் நடைபெற்றது.

சாப்பாடு… மிகச் சிறப்பு. அருமையாக இருந்தது.

கூடிக் களித்து, எல்லாரும் அன்பைப் பரிமாறி, மகிழ்வையும் மனநிறைவையு சுமந்து வீடு திரும்பினோம்.

நிகழ்வின் போட்டோக்களை பால்கரசு, தமிழ்ச்செல்வன் அண்ணன், கலைஞன் நாஷ் உள்ளிட்டோர் எடுத்திருந்தார்கள்.

இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் 'நான் ஒரு கதை பேசிக்கிறேன்' எனத் தனது யூடியுப் சேனலில் தொடர்ந்து கதை சொல்வரும் கடமையை பாலாஜி அண்ணன் ஆற்றிக் கொண்டார்.

-பரிவை சே.குமார்.

0 எண்ணங்கள்: