மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 18 டிசம்பர், 2024

புத்தக விமர்சனம் : கதலி (நாவல்)

 


தலி-

எழுத்தாளர், கவிஞர் சிவமணி அவர்களின் முதல் நாவல் 'கதலி'. இதுவரை இவர் கவிதை மற்றும் சிறுகதை நூல்களை வெளியிட்டிருக்கிறார். கதலி மூலம் கவிஞர், சிறுகதை எழுத்தாளரில் இருந்து நாவலாசிரியராய் மலர்ந்திருக்கிறார்.

ஒரு கதாபாத்திரத்தின் மனசு பேசுவதை வைத்து ஒரு நாவல் எழுதுதல் என்பது மிகப்பெரிய விசயம், அதை மிக அருமையான நாவலாக மாற்றியிருக்கிறார் எழுத்தாளர் சிவமணி அவர்கள்.

சில மரணங்கள் ரசித்து, ருசித்து, வாழ்ந்து நிகழ்ந்திருக்கும். சில மரணங்கள் வாழாமலே வாழ்ந்து மரணப் படுக்கையில் வீழ்ந்திருக்கும். ஒருவேளை மரணத்துக்குப் பிறகோ இல்லை மரணம் அடைவதற்கு முன்பு இருக்கும் மனநிலையைப் பதிவு செய்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையையும் பதிவு செய்து இருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார் இந்நாவலின் ஆசிரியர், அப்படித்தான் கதைக்களம் இருக்கிறது.

உடம்புக்கு முடியாமல் ஒரு பக்கம் கை கால் இழுத்துக் கொள்ள, வாயும் கோணி பேச முடியாத நிலையில் மருத்துமனைக்குக் கொண்டு செல்லப்படும் படும் சுந்தரத்தின் மனசுக்குள் நிகழும்  எண்ண ஓட்டங்களே 153 பக்க நாவலாய் விரிந்திருக்கிறது. குழந்தைப் பருவத்தில் அம்மாவை இழந்து, அப்பா வேறு கல்யாணம் செய்ததால், அந்தக் குடும்பத்தின் வேண்டுகோளின்படி பெரியம்மாக்களிடம் வளர்ந்து, அதன்பின் அப்பாவின் இறப்புக்குப் பின் அவரின் இரண்டாந்தாரமான செல்லம்மாவை அம்மாவை ஏற்று அவளிடம் ஒட்டிக் கொள்ள, சின்னய்யா தன்னோடு இருவரையும் அழைத்துச் சென்ற, தன் மகனாய் வளர்க்கும் சுந்தரத்தின் மனசுதான் நமக்கு நாவல் முழுவதும் கதை சொல்கிறது.

சின்னய்யாவை, சின்னம்மாவை, தன்னை வளர்த்த இருளாயி, ராமாயி, மனைவி பார்வதி, வேலைக்காரன் முத்தைய்யா என ஒவ்வொருவருடனும் தனக்கான வாழ்வியல் தொடர்பையும், அவர்களை, அவர்கள் உயிருடன் இருக்கும் காலத்தில் தான் நன்றாக கவனித்துக் கொள்ளவில்லை, அவர்கள் மனம் மகிழும்படி நடந்து கொள்ளவில்லை என்ற எண்ணத்தையும், அவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற அவாவையும் ஒரு சேர நம்மிடம் கடத்தி விடுகிறார் சுந்தரம்.

அவரின் மகன் அறிவுமதி, மகள் வேதவள்ளி ஆகியோர் அவரை மருத்துவமனையில் வைத்துப் பார்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் கதை நகர்த்தலுக்கு உதவவில்லை என்றாலும் அவர் அவர்களிடம் சொல்ல நினைப்பதை மனசுக்குள் பேசிப் புழுங்க வைத்திருக்கிறார் எழுத்தாளர். அறிவு ஆரம்பத்தில் மருத்துவமனையில் சத்தம் போடுகிறான். அதன் பின் அவன் பணத்துக்காக கஷ்டப்படுவானே என சுந்தரம்தான் வருந்துகிறார். 

தன் நினைவுகளில் பலவற்றைக் கொண்டு வரும் சுந்தரம் மனிதர்களைத் தவிர்த்து திருவிழா, விவசாயம் போன்றவற்றைப் பற்றியும் பேசுகிறார். கதலி வித்தியாசமாய் பயணிக்க சுந்தரமே காரணமாகிறார்.

நாவலின் நூறாவது பக்கத்துக்குப் பின் சுந்தரம் வேறொரு உலகத்துக்குள் பயணிக்க ஆரம்பிக்கிறார். அதுவரை சுந்தரத்தின் நினைவுகளாய் பயணிக்கும் கதையை, கதையாசிரியர் தான் சொல்ல ஆரம்பிக்கிறார். அந்த உலகத்தில் தான் யார் யாரிடம் அன்பு செலுத்தத் தவறினேன் என்று நினைத்துப் புலம்பினாரோ அவர்களையெல்லாம் சந்திக்கிறார். அவர்கள் அங்கும் அதே அன்புடன் இருக்கிறார்கள். அவர்களிடம் தான் செய்யத் தவறியதைச் சொல்லிப் புலம்புகிறார்.  

இறுதியில் சுந்தரத்துக்கு என்ன ஆனது..? நினைவு தப்பியதா..? இல்லை தன் நோயில் இருந்து மீண்டு வந்தாரா..? அல்லது வேறு உலகத்துப் பயணத்தில் தன்னை அங்கேயே இருத்திக் கொண்டாரா...? என்பதை நாவல் பேசுகிறது.

எழுத்தாளர் சிவமணி இந்தப் புத்தகத்தை சென்ற ஆண்டு ஷார்ஜா பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியில் கொடுத்தார். கொஞ்சம் வாசித்து, அதன்பின் மாறிமாறி அடித்த நிகழ்வுகளால் வாசிக்காமலேயே இருந்தது. என்னைப் பொறுத்தவரை யார் புத்தகம் என்றில்லை; வாங்கி வந்தால் அதை வாசித்து விடுவது வழக்கம். அதைக் குறித்து எழுதுவது எழுதாதது எல்லாம் விருப்பத்தின் பேரில் அமையும். குறிப்பாக நண்பர்களின் புத்தகங்களுக்கு எழுதுவது கூடாது என்ற முடிவெடுத்தபின் வாசித்தாலும் எழுதுவதில்லை.

இந்தப் புத்தகத்தைக் கொடுத்த எழுத்தாளர், வாசித்து எதாவது சொல்லியிருக்கலாமே என நினைத்திருக்கலாம். என் புத்தகங்களை வாங்கியவர்களில் பலர் அது எப்படியிருக்குன்னு சொல்லாமல் இருக்கும் போது எனக்கும் தோன்றும் எண்ணம் இவருக்கும் தோன்றாமலா இருந்திருக்கும். இருந்தாலும் கொடுத்ததற்கு மரியாதை கொடுக்கும் விதமாக வாசித்து முடித்து நம் கருத்தைச் சொல்வதே சிறப்பு என்பதால் இரண்டு நாட்களில் வாசித்து முடித்தேன்.

நிறைவான நாவல்... நண்பர்களின் புத்தகங்களில் இதைச் செய்திருக்கலாமே என்று சொல்லப் போனால் இவன் யாரு இதைச் சொல்ல என்ற பேச்சுக்கள் வருவதாலேயே குறைகள் இருந்தாலும் சொல்வதில்லை என்பதைவிட ரொம்ப நாளைக்குப் பிறகு எழுத்தாளர் சிவமணி - இவர் கூட நண்பர்தான் - அவர்களின் புத்தகத்துக்கு எழுதியிருக்கிறேன். எனக்கு கதையோட்டத்தில் சுந்தரம் பேசிக் கொண்டே வரும்போது ஒரிரு பாராக்கள் மட்டும் ஆசிரியர் பார்வையில் அவ்வப்போது நகர்ந்தது கதையோட்டத்தை தடுப்பதாய் தெரிந்தது, இது என் வாசிப்பின் போதுதான்... நீங்கள் வாசிக்கும் போது உங்களுக்கு இது பிடித்துப் போகலாம், வேறு எதாவது தோன்றலாம். அது அது அவரவர் வாசிப்பின் போது நிகழ்வதாகத்தான் இருக்கும்.

வட்டார வழக்கு நாவல் முழுவதும் நிரவிக் கிடக்கு.

கதலி வாசிங்க... வித்தியாசமான நாவல்.

------------------------------------------------------
கதலி (நாவல்)
எழுத்தாளர் : சிவமணி
வெளியீடு : டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
பக்கம் : 153
விலை : 180
------------------------------------------------------

பரிவை சே.குமார்.

0 எண்ணங்கள்: