மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 22 டிசம்பர், 2024

புத்தக விமர்சனம் : கொலைஞானம் (நாவல்)

கொலைஞானம்-

மருத்துவர் சூ.மா.இளஞ்செழியன் அவர்கள் எழுதி, கேலக்ஸி பதிப்பக வெளியீடாக, ஷார்ஜா பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியில் வெளியான நாவல் இது. கதைகள், கட்டுரைகள் நிறைய எழுதியிருந்தாலும் எழுத்தாளருக்கு இது முதல் நாவல். தான் பிறந்த நாகர்கோவில் பகுதியைக் கதையின் களமாக எடுத்துக் கொண்டிருப்பதால் எதையும் அவர் வலிந்து திணிக்காமல் வாசிப்பவரை ஈர்த்துக் கொள்ளும்  எழுத்தில் கதை இயல்பாகப் பயணிப்பது சிறப்பு.

ஆசிரியர் உரையில், ’60 லட்சம் வருடங்களுக்கு முன்பு பரிணாமத்தின் படிகளில் மனிதன் ஏறி வந்தான் என்ற போதிலும் ‘மாடர்ன் மேன்’ எனப்படும் ஹோமோ சேப்பியன்ஸ், இந்த பூமியில் நடமாடிக் கொண்டிருப்பது என்னவோ இரண்டு லட்சம் வருடங்களாகத்தான். இந்த நீண்ட காலகட்டத்தில் வெறும் 5000 வருடங்களுக்கான வரலாறு மட்டுமே இதுவரை பதியப்பட்டுள்ளது’ என்று ஆசிரியர் சொல்லியிருப்பதில் இந்த நாவல் பேசக்கூடிய களம் நமக்குப் புரிந்து விடுகிறது.


மதிப்புரை எழுதியிருக்கும் மருத்துவர் சென்பாலன், ‘நிலத்தின் வரலாற்றைக் கதையாகச் சொல்வதற்கு அந்த நிலத்தில் இருந்து வந்த ஒருவரால்தான் முடியும். சோழ வரலாற்றை பலநாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து கண்டறிந்தனர். ஆனால் அவற்றை வைத்து புதினம் புனைய, நெடுங்கதைகள் எழுத தமிழர்களால் மட்டுமே முடியும். அப்படிச் செய்ய வேண்டியது ஒரு வகையில் கடமையுமாகிறது.’ என்று எழுதியிருக்கிறார். அது உண்மைதான், நம் மண்ணின் கதையை, வரலாறை நம்மளைத்தவிர வேறு யாரால் சிறப்பாக எழுதிவிட முடியும்.

இந்த நாவலில் கடந்தகால வரலாற்றுடன் நிகழ்காலத்தில் நடக்கும் கதையையும் இணைத்து விறுவிறுப்பான புனைவாக, மருத்துவர் எழுதிய முதல் நாவல். வரலாற்றுப் புதினங்கள் எப்போதும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துபவையாக இருக்கும், அதிலும் விறுவிறுப்பான கதைக்களமாக இருந்தால் இன்னும் அதிகமான எதிர்பார்ப்போடு நம்மைக் கவரும். அப்படித்தான் இருக்கிறது இந்த நாவல்.

மாலிக்கபூர் தென்பகுதியைப் பிடிக்கும் விதமாகச் சிதம்பரம் கோவிலைத் துவம்சம் செய்து மதுரை நோக்கித் தனது பெரும் படையுடன் வருவதை அறிந்து அவரை எதிர்ப்பதற்குத் தயாராகி, அவரிடம் தோற்று மதுரையை விட்டு ஓடிய பாண்டியர்கள் தென்காசி, கேரளம் எனத் தனித்தனியாகப் பிரிந்து வாழ ஆரம்பிக்கிறார்கள். காலங்கள் கடந்து செல்லும் போது அவர்கள் என்ன ஆனார்கள்..? அவர்களின் வாரிசுகள் எங்கே போனார்கள்…? என்பதை எல்லாம் சமகால மாந்தர்களுடன் இணைத்துக் கதை சொல்லியிருக்கும் விதம் சிறப்பு. வரலாற்று நாயகர்களைக் கொண்டு வந்து இப்போதைய மாந்தருடன் இணைத்திருப்பது கதையோட்டத்தில் உறுத்தலில்லாமம் அத்தனை அழகாகப் பொருந்திப் போகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஒருவர் பெயரைச் சொல்லி, ஒரு கோவிலை ஆரம்பித்து அதன் மூலம் கோடிகளில் சம்பாதிப்பதை இப்போது பல குழுக்கள் செய்து வருகின்றன. அப்படித்தான் வரலாற்றில் எதிரிகளால் கொல்லப்பட்ட ஒருவரை வைத்து, அதுவும் குதிரையில் வரும் கருப்பரைப் போல் வெள்ளைக் குதிரையில் அமர்ந்து இருக்கும் அறிவாசான் எனச் சொல்லி, அந்தக் கோவிலை தமிழகமெங்கும் கிளை பரப்ப வைத்துச் சம்பாரித்து வரும் ஒரு அமைப்புக்கும் கதைக்குமான தொடர்பைச் சொல்லி, வரலாற்று நாயகன், அவனின் வழித்தோன்றல்கள், அவனை வைத்து பணம் பார்க்கும் மனிதர்கள் என மூன்று புள்ளியை மிக அழகான கோலமாக மாற்றியிருக்கிறார் எழுத்தாளர். இதில் அந்தக் கோவில் பற்றி நாவலின் பல இடங்களில் வரும்போது உண்மையிலேயே இப்படி ஒரு கோவில் இருக்கும் போல அதைத்தான் இவர் தோலுரித்துக் காட்டுகிறாரோ எனத் தோன்றுவதைத் தடுக்க முடியவில்லை.

நாவலில் வரலாற்றுத் தகவல்கள், அறிவியல் தகவல்கள், மருத்துவத் தகவல்கள், இடங்கள், கடைகள், ரோடுகள், கல் மண்டபங்கள், அரண்மனைகளாய் இருந்து இப்போது சுற்றுலாத் தலங்களாக இருக்கும் இடங்கள், உணவுகள் என எல்லாவற்றையும் மிக விரிவாகப் பேசியிருந்தாலும் கதைக்குத் தேவையான இடத்தில் தேவைக்கு அதிகமாய் சேர்க்காமல் சேர்த்திருப்பதால் வரலாற்றை நான் சொல்கிறேன் பார் என்றும் நான் எழுதுவதே வரலாறு என்றும் எதையும் அள்ளித் திணித்து மூச்சுத் திணற வைக்கும் வேலையை இளஞ்செழியன் செய்யவில்லை. போதும் போதுமெனத் தகவல்களைத் தள்ளாமல் போதுமான தகவல்களுடன் கதையை நகர்த்தியிருக்கிறார்.

குலசேகர பாண்டியன், வரகுண பாண்டியன் குறித்த செய்திகளுடன் ஆரம்பிக்கும் கதை நிகழ்காலம், கடந்தகாலம் என மாறி மாறிப் பயணித்து ஒரு புள்ளியில் இணைந்து இன்னும் வேகமாக முடிவை நோக்கிப் பயணிக்கிறது. கதையின் ஆரம்பத்தில் இரவு நேரத்தில் அடித்துப் பெய்யும் மழையில் தனது நண்பரான அகமதுவின் அழைப்பின் பேரில் ஒரு தோள்பட்டையில் அடிபட்டு வந்தவனைப் பார்க்கப் போகும் மருத்துவர் சித்து, ரோடெங்கும் மழை நீர் நிரம்பி இருக்க, பாதை சரியாகத் தெரியாத காரணத்தால் சற்றே ஒதுங்கலாம் என நினைத்து ரோட்டோரத்தில் காரை நிறுத்துகிறார். அவர் நிறுத்தும் இடத்தில் இருக்கும் பாழடைந்த கல் மண்டபத்தில் ஒதுங்க நினைப்பவர் தனது தொல்லியல் ஆராய்ச்சிப் புத்தியில் – ‘தொல் உலகின் தோழர்கள்’ என்ற அமைப்பையும் ‘Comrades of Zomies’ என்ற ஆன்லைன் பத்திரிக்கையும் நண்பர்களுடன் சேர்ந்து நடத்துவதால் ஆராயும் மனப்பாங்கு வரத்தானே செய்யும் – அதனுள் போகிறார். அவர் பின்னே கதை நம்மையும் இழுத்துச் செல்கிறது.

அவரைக் காணவில்லை எனத் தன் அண்ணனான நாகர்கோவில் எஸ்.பி. அருள் ஜெயராஜ்க்கு சிந்து போனில் சொல்ல, அவரைத் தேடும் படலம் ஆரம்பமாகி, கல் மண்டபம் வந்து, அதற்குள் இருக்கும் பாதாள அறைக்குள் விழுந்து கிடக்கும் சித்துவுடன் ஒரு மனிதனையும் மிருகத்தையும் ஒன்றாக வைத்திருக்கும் சவப்பெட்டி ஒன்றும் மீட்கப்பட கதை சூடுபிடிக்கிறது.

சித்தார்த், சிந்து, எஸ்.பி அருள் ஜெயராஜ், மருத்துவர் ரிச்சர்ட், மருத்துவர் அகமது, மருத்துவர் அலெக்ஸ், ஹேடஸ் என்ற இராஜசிம்ம நரசிங்கன், தேஜிந்தர், இன்ஸ்பெக்டர் குமரகுரு, குலோத்துங்கன், நீலகண்டன், வெங்கட சுப்பிரமணியன், குமரேசன் மற்றும் சிலருடன் பயணிக்கும் கதை விறுவிறுப்பாக நகர்வதற்கு நாகர்கோவில், லண்டன், வெள்ளறடை என்ற செம்பொன்சிறை, கேய்மன் தீவுகள், திட்டுவிளை, ஆரல்வாய்மொழி என்ற இடங்களும் காரணிகளாய் அமைகின்றன.

கதையின் போக்கில் இவர் குற்றவாளியா..? அவர் குற்றவாளியா…? என்ற யோசனை நமக்குள் எழுந்து கொண்டே இருந்தாலும் இவரல்ல… அவரும் அல்ல… அது வேற ஆள் என நகர்த்தி இறுதியில் எல்லாருமே இங்கிருந்து வந்தவர்கள்தான் என்பதாய் முடித்திருக்கிறார் கதையின் ஆசிரியர்.

இது அவரின் முதல் நாவல் என்று சொன்னால் யாருமே நம்பமாட்டார்கள். அத்தனை சிறப்பான  எழுத்து… எவ்வளவு விபரங்கள்… விபரணைகள்.

கதையாசிரியர் ‘evaluation the greatest show on earth’, ‘plunder of faith’ போன்ற புத்தகங்களைப் பற்றிப் பேசியிருக்கிறார். அதிலும் குறிப்பாக ‘plunder of faith’ கதையோடு தொடர்பு கொண்டு வருவதால் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை கதையுடன் பயணிக்கிறது. காவல்துறைக்கு அதிகம் வேலை இல்லை என்பதால், மச்சினான நாகர்கோவில் எஸ்.பி. அருள் ஜெயராஜை கூத்தங்குளம் திருவிழா பாதுகாப்புக்கு என எழுத்தாளர் ஆரம்பத்திலேயே அனுப்பினாலும் ‘மலையேறிப் போனாலும் மச்சினன் உதவி தேவை’ங்கிற மாதிரி அவ்வப்போது வந்து ‘நான் கூத்தங்குளம் போறேன்’ என்பதை ‘நானும் ரவுடிதான்’ என்பதைப் போல சொல்லிச் செல்ல வைத்திருக்கிறார்.

கதையாசிரியருக்கு சினிமா ரொம்பப் பிடிக்கும் போல எடுத்துக்காட்டுகள் எல்லாமே சினிமா, சினிமா நடிகர்களை வைத்தே எழுதப்பட்டிருக்கிறது.

ஆரம்பத்தில் கதைக்குள் போவதற்கு முன் முன்கதைச் சுருக்கத்தில் மாலிக்கபூர் படையெடுப்பு, பாண்டியர் பற்றிய செய்திகள் எனக் கொஞ்சம் வரலாற்றுக் கதையை நமக்குத் தந்து விடுகிறார். அதேபோல் நாவல் முடிந்ததும் பின்கதைச் சுருக்கமாக சித்து, ஹேடஸ் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் சொல்லி இருக்கிறார்.

விறுவிறுப்பாக நகரும் நாவலின் முடிவு விரைந்து முடிக்கப்பட்டது போல் தெரிகிறது. சாமி பேரைச் சொல்லிக் கொள்ளை அடிக்கும் கும்பல் உடனே எல்லாம் மனம் மாறிவிடாது. இங்கே தன் அதிகாரத்தைக் காட்டும் சுப்பிரமணியன், ஹேடஸை எதிர்கொள்ளும் முதல் சந்திப்பிலேயே விழுந்து விடுவது தமிழ் சினிமாபோல் இருந்தது. ஒரு சவப்பெட்டியும் அது கதை சொல்லும் காலமும் காவல்துறைக்குப் பெரும் சவாலாக இருந்தாலும் கதையின் ஆரம்பத்தில் வந்து மொத்தத்தையும் மருத்துவர்களிடமும் ஆராய்ச்சியாளர்களிடமும் விட்டு விட்டு ஹாயாகப் போய்விட்டு இறுதியில் அப்ப நாங்க கேசை முடிச்சிக்கலாமான்னு வரும் காவல்துறையில் குமரகுரு ரொம்பக் கறாரானவர் என்று சொல்வதைப் பூர்த்தி செய்யும் விதமாக குமரகுரு எதையும் செய்யாமல் பெயராய் மட்டுமே – ஆரம்பத்தில் பேசுவது தவிர- இருப்பதைப் பார்த்து இவருக்கு எதுக்கு இத்தனை பில்டப்பு கங்குவா மாதிரின்னு தோணியதைத் தடுக்க முடியவில்லை. இவருக்குப் பதில் நானும் கதையில் இருக்கேன் என அடிக்கடி தலைகாட்டும் எஸ்.பி கூடங்குளம் போகாமல் விசாரித்திருக்கலாம்.

நிறைய விசயங்கள் பேசப்படும் நாவலில் இன்னும் கொஞ்சம் பொறுமையாக பிழை திருத்தம் செய்திருக்கலாம் என்று தோன்றியது என்றாலும் கதையோட்டத்தில அது பெருங்குறையாகத் தெரியவில்லை. அடுத்த பதிப்பு வரும்போது இக்குறை நீக்கப்படும் என்று நம்புகிறேன்.

மற்றபடி மருத்துவர் அடித்து ஆடியிருக்கிறார். 221 பக்கங்களையும் ஒரே மூச்சில் படித்து முடித்து விடலாம்… ஆம் கையில் எடுத்தால் கீழே வைக்க விடாத எழுத்து… சிறப்பு… எழுத்தாளரான மருத்துவருக்கு வாழ்த்துகள்.

--------------------------------------------
கொலைஞானம் (நாவல்)
சூ.மா.இளஞ்செழியன்
கேலக்ஸி பதிப்பகம்
பக்கம் – 221
விலை – ரூ. 250
--------------------------------------------

நன்றி : Bookday.in (பாரதி புத்தகாலயம்)

Book day.in இணைய இதழில் 17/12/2024 அன்று வெளிவந்தது

-பரிவை சே.குமார்

புதன், 18 டிசம்பர், 2024

புத்தக விமர்சனம் : கதலி (நாவல்)

 


தலி-

எழுத்தாளர், கவிஞர் சிவமணி அவர்களின் முதல் நாவல் 'கதலி'. இதுவரை இவர் கவிதை மற்றும் சிறுகதை நூல்களை வெளியிட்டிருக்கிறார். கதலி மூலம் கவிஞர், சிறுகதை எழுத்தாளரில் இருந்து நாவலாசிரியராய் மலர்ந்திருக்கிறார்.

ஒரு கதாபாத்திரத்தின் மனசு பேசுவதை வைத்து ஒரு நாவல் எழுதுதல் என்பது மிகப்பெரிய விசயம், அதை மிக அருமையான நாவலாக மாற்றியிருக்கிறார் எழுத்தாளர் சிவமணி அவர்கள்.

சில மரணங்கள் ரசித்து, ருசித்து, வாழ்ந்து நிகழ்ந்திருக்கும். சில மரணங்கள் வாழாமலே வாழ்ந்து மரணப் படுக்கையில் வீழ்ந்திருக்கும். ஒருவேளை மரணத்துக்குப் பிறகோ இல்லை மரணம் அடைவதற்கு முன்பு இருக்கும் மனநிலையைப் பதிவு செய்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையையும் பதிவு செய்து இருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார் இந்நாவலின் ஆசிரியர், அப்படித்தான் கதைக்களம் இருக்கிறது.

உடம்புக்கு முடியாமல் ஒரு பக்கம் கை கால் இழுத்துக் கொள்ள, வாயும் கோணி பேச முடியாத நிலையில் மருத்துமனைக்குக் கொண்டு செல்லப்படும் படும் சுந்தரத்தின் மனசுக்குள் நிகழும்  எண்ண ஓட்டங்களே 153 பக்க நாவலாய் விரிந்திருக்கிறது. குழந்தைப் பருவத்தில் அம்மாவை இழந்து, அப்பா வேறு கல்யாணம் செய்ததால், அந்தக் குடும்பத்தின் வேண்டுகோளின்படி பெரியம்மாக்களிடம் வளர்ந்து, அதன்பின் அப்பாவின் இறப்புக்குப் பின் அவரின் இரண்டாந்தாரமான செல்லம்மாவை அம்மாவை ஏற்று அவளிடம் ஒட்டிக் கொள்ள, சின்னய்யா தன்னோடு இருவரையும் அழைத்துச் சென்ற, தன் மகனாய் வளர்க்கும் சுந்தரத்தின் மனசுதான் நமக்கு நாவல் முழுவதும் கதை சொல்கிறது.

சின்னய்யாவை, சின்னம்மாவை, தன்னை வளர்த்த இருளாயி, ராமாயி, மனைவி பார்வதி, வேலைக்காரன் முத்தைய்யா என ஒவ்வொருவருடனும் தனக்கான வாழ்வியல் தொடர்பையும், அவர்களை, அவர்கள் உயிருடன் இருக்கும் காலத்தில் தான் நன்றாக கவனித்துக் கொள்ளவில்லை, அவர்கள் மனம் மகிழும்படி நடந்து கொள்ளவில்லை என்ற எண்ணத்தையும், அவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற அவாவையும் ஒரு சேர நம்மிடம் கடத்தி விடுகிறார் சுந்தரம்.

அவரின் மகன் அறிவுமதி, மகள் வேதவள்ளி ஆகியோர் அவரை மருத்துவமனையில் வைத்துப் பார்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் கதை நகர்த்தலுக்கு உதவவில்லை என்றாலும் அவர் அவர்களிடம் சொல்ல நினைப்பதை மனசுக்குள் பேசிப் புழுங்க வைத்திருக்கிறார் எழுத்தாளர். அறிவு ஆரம்பத்தில் மருத்துவமனையில் சத்தம் போடுகிறான். அதன் பின் அவன் பணத்துக்காக கஷ்டப்படுவானே என சுந்தரம்தான் வருந்துகிறார். 

தன் நினைவுகளில் பலவற்றைக் கொண்டு வரும் சுந்தரம் மனிதர்களைத் தவிர்த்து திருவிழா, விவசாயம் போன்றவற்றைப் பற்றியும் பேசுகிறார். கதலி வித்தியாசமாய் பயணிக்க சுந்தரமே காரணமாகிறார்.

நாவலின் நூறாவது பக்கத்துக்குப் பின் சுந்தரம் வேறொரு உலகத்துக்குள் பயணிக்க ஆரம்பிக்கிறார். அதுவரை சுந்தரத்தின் நினைவுகளாய் பயணிக்கும் கதையை, கதையாசிரியர் தான் சொல்ல ஆரம்பிக்கிறார். அந்த உலகத்தில் தான் யார் யாரிடம் அன்பு செலுத்தத் தவறினேன் என்று நினைத்துப் புலம்பினாரோ அவர்களையெல்லாம் சந்திக்கிறார். அவர்கள் அங்கும் அதே அன்புடன் இருக்கிறார்கள். அவர்களிடம் தான் செய்யத் தவறியதைச் சொல்லிப் புலம்புகிறார்.  

இறுதியில் சுந்தரத்துக்கு என்ன ஆனது..? நினைவு தப்பியதா..? இல்லை தன் நோயில் இருந்து மீண்டு வந்தாரா..? அல்லது வேறு உலகத்துப் பயணத்தில் தன்னை அங்கேயே இருத்திக் கொண்டாரா...? என்பதை நாவல் பேசுகிறது.

எழுத்தாளர் சிவமணி இந்தப் புத்தகத்தை சென்ற ஆண்டு ஷார்ஜா பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியில் கொடுத்தார். கொஞ்சம் வாசித்து, அதன்பின் மாறிமாறி அடித்த நிகழ்வுகளால் வாசிக்காமலேயே இருந்தது. என்னைப் பொறுத்தவரை யார் புத்தகம் என்றில்லை; வாங்கி வந்தால் அதை வாசித்து விடுவது வழக்கம். அதைக் குறித்து எழுதுவது எழுதாதது எல்லாம் விருப்பத்தின் பேரில் அமையும். குறிப்பாக நண்பர்களின் புத்தகங்களுக்கு எழுதுவது கூடாது என்ற முடிவெடுத்தபின் வாசித்தாலும் எழுதுவதில்லை.

இந்தப் புத்தகத்தைக் கொடுத்த எழுத்தாளர், வாசித்து எதாவது சொல்லியிருக்கலாமே என நினைத்திருக்கலாம். என் புத்தகங்களை வாங்கியவர்களில் பலர் அது எப்படியிருக்குன்னு சொல்லாமல் இருக்கும் போது எனக்கும் தோன்றும் எண்ணம் இவருக்கும் தோன்றாமலா இருந்திருக்கும். இருந்தாலும் கொடுத்ததற்கு மரியாதை கொடுக்கும் விதமாக வாசித்து முடித்து நம் கருத்தைச் சொல்வதே சிறப்பு என்பதால் இரண்டு நாட்களில் வாசித்து முடித்தேன்.

நிறைவான நாவல்... நண்பர்களின் புத்தகங்களில் இதைச் செய்திருக்கலாமே என்று சொல்லப் போனால் இவன் யாரு இதைச் சொல்ல என்ற பேச்சுக்கள் வருவதாலேயே குறைகள் இருந்தாலும் சொல்வதில்லை என்பதைவிட ரொம்ப நாளைக்குப் பிறகு எழுத்தாளர் சிவமணி - இவர் கூட நண்பர்தான் - அவர்களின் புத்தகத்துக்கு எழுதியிருக்கிறேன். எனக்கு கதையோட்டத்தில் சுந்தரம் பேசிக் கொண்டே வரும்போது ஒரிரு பாராக்கள் மட்டும் ஆசிரியர் பார்வையில் அவ்வப்போது நகர்ந்தது கதையோட்டத்தை தடுப்பதாய் தெரிந்தது, இது என் வாசிப்பின் போதுதான்... நீங்கள் வாசிக்கும் போது உங்களுக்கு இது பிடித்துப் போகலாம், வேறு எதாவது தோன்றலாம். அது அது அவரவர் வாசிப்பின் போது நிகழ்வதாகத்தான் இருக்கும்.

வட்டார வழக்கு நாவல் முழுவதும் நிரவிக் கிடக்கு.

கதலி வாசிங்க... வித்தியாசமான நாவல்.

------------------------------------------------------
கதலி (நாவல்)
எழுத்தாளர் : சிவமணி
வெளியீடு : டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
பக்கம் : 153
விலை : 180
------------------------------------------------------

பரிவை சே.குமார்.

புத்தக விமர்சனம் : மயக்கம் என்ன

யக்கம் என்ன-

மலையாள எழுத்தாளர் கீதா மோகன் எழுதிய ‘மத்து’ என்னும் சிறுகதைத் தொகுப்பை எழுத்தாளர் ஜெஸிலா பானு அவர்கள் ‘மயக்கம் என்ன’ என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறார். இந்த நூலை கேலக்ஸி பதிப்பகம் ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் வெளியிட்டது.