மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 25 செப்டம்பர், 2024

கேலக்ஸி விழா : கதைப்போமா

கேலக்ஸி கலை இலக்கிய குழுமத்தின் மாதாந்திரக் கூட்டம் சென்ற சனிக்கிழமை (21/09/2024) அன்று மாலை துபை ப்ரோ ஆக்டிவ் எக்செல் கன்சல்டன்சி அலுவலகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த மாதக் கூட்டத்தில் வாசித்ததைப் பகிர்ந்து கொள்ளும் 'கதைப்போமா' உடன் இலங்கை எழுத்தாளர் ஐயா காப்பியக்கோ அவர்களின் ஒரு காப்பிய நூல்களின் வெளியீடும் இருந்ததால் நிகழ்வு மிகச் சிறப்பானதாக மாறிப் போனது.

நிறைவான மனிதர்கள் நிறைந்திருந்த அரங்கில் ஐயாவின் புத்தக வெளியீட்டுக்குப் பின் 'கதைப்போமா' இலக்கியக் கலைந்துரையாடல் ஆரம்பமானது. நாங்களும் இருந்து அவர்கள் சொல்லும் கதைகளையும் கேட்டு விட்டுச் செல்கிறோம் என்பதாய் ஐயா அவர்களின் குடும்பமும் அமர்ந்திருக்க, ஆரம்பத்தில் இருந்த அதே கூட்டம் அப்படியே தொடர்ந்தது.

சகோதரர் கலைஞன் நாஷ் அவர்கள் நிகழ்வைத் தொடர்ந்து நடத்தினார். 

முதலில் பேசிய நண்பர் ஹரீஸ் அவர்கள், எழுத்தாளர் டாக்டர் சென்பாலன் அவர்களின் 'ஆரச்சாலை' நாவலைக் குறித்துப் பேசினார். இது கேலக்ஸி இணைய தளத்தில் தொடராய் வந்து, நூலாகி பெரும் வரவேற்றைப் பெற்றது என்பது எல்லாரும் அறிந்ததே. எனக்கு காதல் மீது மிகுந்த பிரியம் உண்டு. எழுத்து 'இ' க்கும் எனது வாழ்க்கைக்கும் மிகப்பெரும் தொடர்பு உண்டு. என் அம்மாவின் பெயர் 'இ'யில் தான் ஆரம்பிக்கும், அடுத்து எனக்குப் பிடித்த இசை... இளையராஜா... என் காதல் மனைவி இலக்கியா என என்னுடன் மிகுந்த நெருக்கமானது 'இ'.  குற்றப் புலனாய்வு குறித்த எழுத்து மிகக் குறைவாகத்தான் இருக்கிறது என்பது என் எண்ணம், அதை இந்த நாவலில் மிகச் சிறப்பாக கையாண்டிருக்கிறார். குற்றப் புலனாய்வு குறித்து முழு உழைப்புடன், அதிக ஈர்ப்புடன் எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்தைத் கீழே வைக்காமல் தொடர்ந்து வாசித்தேன். இந்தக் கதையில ஒரே இடத்தில் பதிமூனு விபத்து நடக்க, அதைக் கண்டறியும் புலனாய்வு அதிகாரியாக கார்த்திக் ஆல்டோ வருகிறார். இந்த ஒரு வரிதான் கதை என்றாலும் இதில் அரசியல், வரலாறு என எல்லாவற்றையும் கலந்து சிறப்பாக எழுதியிருக்கிறார். இந்த விபத்தை வைத்துக் கல்லாக் கட்டும் சாமியார், வணிக வளாகம் கட்டும் பெரிய மனிதர் எனக் கதை நகர்கிறது. 

பல்லாவரம் என்பதை பல்லவபுரம் என்று சொல்கிறார். அங்கிருக்கும் தர்கா இதற்கு முன்பு கோவிலாக இருந்தது என்றும் அது குறித்து மூஸா அவர்களிடம் கேட்கும் போது உங்க அப்பா யார் எனக் கேட்க, வாத்தியார் என்றதும் அப்ப உங்க வீட்டை வாத்தியார் வீடுன்னு சொல்லியிருப்பாங்க, இப்ப எப்படிக் கூப்பிடுறாங்க என்று அவர் திரும்பவும் கேட்க, போலீஸ்காரன் வீடுன்னு சொல்றாங்க எனச் சொன்னதும் அவ்வளவுதான் வீடு அதேதான் மக்களும் அதேதான்... காலம் மாறும் போது மக்கள் எப்படிக் கூப்பிடுறாங்களோ அப்படித்தான் மாறும் என்று எழுதியிருப்பார், இந்தப் புரிதல் எல்லாரிடமும் இருந்தால் சண்டை சச்சரவுக்கே வாய்ப்பு இல்லை என்று அவர் சொல்வார் என்றும் இந்தக் கதையில் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் மட்டுமே பயன்படுத்தப்படும் புதிய எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களைப் பற்றியெல்லாம் விரிவாகப் பேசியிருப்பது மகிழ்வாக இருந்தது என்றும் இன்னும் பல விசயங்களையும் விரிவாகப் பேசினார். சிறப்பான பேச்சு.

அடுத்துப் பேசியவர் குட்டி அலியார் - பிலால் அலியாரின் மகன் - அயாஸ் பிலால் அவர்கள் எழுத்தாளர் ஜெசிலா பானு அவர்களின் மூஸா குறித்துப் பேசினார். அவரை அறிமுகப்படுத்தும் போது இந்தப் புத்தகத்தைப் பற்றி ஒவ்வொரு நிகழ்விலும் பேசுகிறார்கள் ஆனால் நான் இன்னும் படிக்கவில்லை, விரைவில் படித்துவிட்டுப் பேசுவேன் என்று நாஷ் சொன்னார்.


அயாஸ் தன் பேச்சை மிக மெல்ல ஆரம்பித்தார்... நான் இன்னைக்கு ஜெசிலா ஆன்ட்டியோட மூஸா நபி வரலாற்றுப் புத்தகத்தை பற்றிப் பேசப் போறேன். எகிப்துல ஃபிர்அவ்ன் என்ற அரசன் இருந்தான். எப்படியெல்லாம் இருக்கக் கூடாதோ அப்படியெல்லாம் இருந்தான்... அதாவது கொடுங்கோலன். உன்னைக் கொல்ல ஒருவன் வருவான் எனச் ஜோசியக்காரன் சொல்ல, அங்கு பிறக்கும் ஆண் குழந்தைகளை எல்லாம் கொன்று விடுகிறான். அப்போ ஒரு அம்மாவுக்குப் பிறக்கும் ஆண் குழந்தையை நைல் நதியில் போடும்படி அல்லா சொல்ல, அவனை அதில் போட்டதும் அதை ஃபிர்அவ்னின் மனைவி எடுத்து வளர்க்க, அவன் வளர்ந்து பெரியவன் ஆகிறான் என முழுக் கதையையும் மிக மெல்லிய குரலில், மிகத் தெளிவாகச் சொன்னான். 

அயாஸ் பேசும் போது சில இடங்களில் அவருக்கு கண்ணீர் வந்தாலும் அதை அடக்கிப் பேசி முடித்தார். எங்கே உடைந்து அழுது விடுவாரோ... பாதியில் நிறுத்தி விடுவாரோ... என்று யோசிக்கும் போதே அதையெல்லாம் அடக்கி, மிகச் சிறப்பாக கதை சொல்லி முடித்தார். நல்லாத்தான் பேசினார் எப்ப அவங்க அத்தாவைப் பார்க்கிறாரோ அப்போதெல்லாம் குரல் அடைத்து அழுகை வருவதைப் போல் ஆனது, நான் கூட பிலாலிடம் நீங்க அவனைப் பார்க்காதீங்க, நீங்க பார்க்கும் போதுதான் அழுவதைப் போல் பேசுகிறான்... மிரட்டியிருக்கீங்க எனச் சொல்லிச் சிரித்தேன். ஒருவேளை திராவிடப் போர்வாள் முகநூலில் களம் ஆடுவதைப் போல் அயாஸிடம் ஆடியிருப்பாரோ என்னவோ. முதல் மேடை... பயமில்லாப் பேச்சு... சிறப்பு.

நானும் பேசுகிறேன் என களத்தில் இறங்கியதே சிறப்பான விஷயம், அவர்களின் அந்த ஆர்வத்துக்காகவே கேலக்ஸி பொன்னாடை போர்த்தி மகிழ்ந்தது. ஜெசிலா அவர்கள் சிறு பரிசு ஒன்றைக் கொடுத்தார்கள். ஐயா காப்பியக்கோவும் அவரது மனைவியாரும் அருகழைத்து அணைத்து, முத்தமிட்டு தங்கள் வாழ்த்தைப் பகிர்ந்து கொண்டார்கள். உலகம் வியக்கும் யாப்புக் கவிதைகளில் காப்பியம் படைக்கும் எழுத்து இமையத்தின் வாழ்த்து என்பது எல்லாருக்கும் கிடைத்து விடாது அல்லவா..? அயாஸ் அதைப் பெற்றான்... பெரும் பேறு. சிறப்பு.

அடுத்துப் பேச வந்தவர் பிலால் அலியார் அவர்களின் மகள் அதீஃபா பிலால், இவர் ரொம்ப விபரம், அண்ணனைப் போல் அத்தாவைப் பார்த்து குரல் உடைந்து அழுகையை அடக்கியெல்லாம் பேசாமல் மேலே பார்த்துக் கொண்டு கணீர்க்குரலில் மிகச் சிறப்பாகப் பேசினார்.  இவர் ஆர்.ஷாஜகான் அவர்கள் எழுதிய 'ஒருநாள்' என்னும் புத்தகத்தைப் பற்றிப் பேசினார்.

அவர் பேசும் போது 'நான் இந்த ஒருநாள் புத்தகத்தைப் படித்தேன். ஜெகதீஸ் ஜோஷி அவர்கள் இந்தியில் எழுதிய இந்தப் புத்தகத்தை ஆர்.ஷாஜகான் அவர்கள் தமிழில் மொழிமாற்றம் செய்திருக்கிறார். ஒரு காட்டுல மணி என்னும் சிறுவனும் அவனின் அம்மாவும் வாழ்ந்து வந்தார்கள். அவனுடன் விளையாட நண்பர்கள் என யாரும் இல்லை என்றாலும் அப்பு என்ற ஒரு நண்பன் இருந்தான். அவனுடன் காட்டில் சுற்றும் போது மான், புலி என எல்லாத்தையும் பார்த்து மகிழ்ந்து இருக்கும் போது அவர்களுக்குப் பசிக்க ஆரம்பிக்க, ஒரு தென்னந்தோப்பை பார்க்கிறார்கள். அங்கிருக்கும் வாழை மரத்தில் இருந்து வாழைப்பழத்தைப் பறித்துச் சாப்பிட்டுவிட்டு கிளம்புகிறார்கள். அவர்கள் போகும் போது புலி உறுமும் சத்தம் கேட்கிறது. அதைக் கேட்டதும் அப்பு பயப்படுகிறது ஆனால் மணி அதை விரட்டிவிட்டு அப்புவைக் கூட்டிக்கிட்டுப் போகிறான். இந்தக் கதையில் அப்பு என்பது ஒரு யானை என அழகாகத் தன் மழலைக் குரலில் கதையைச் சொல்லி முடித்தார். இவருக்கும் கேலக்ஸியின் பொன்னாடை, ஜெசிலா மேடத்தின் சிறு பரிசு, ஐயா குடும்பத்தின் ஆசிர்வாதம் என எல்லாம் கிடைத்தது. சிறப்பு.

இருவருக்கும் முதல் மேடை என்றாலும் பயமில்லாத பேச்சு, அடுத்தடுத்த மேடைகளில் இன்னும் சிறப்பாக பேச வைக்கும். நானெல்லாம் மேடை ஏறவே யோசிப்பேன். இப்போதுதான் கேலக்ஸி மேடைகளில் பாலாஜி அண்ணனின் வற்புறுத்தலால் தத்தித் தவழ்ந்து கொண்டிருக்கிறேன். இருவரும் நிறைவாகப் பேசினார்கள்... வரும் காலங்களில் இன்னும் நிறையப் பேசுவார்கள். இருவருக்கும் வாழ்த்துகள்.

அடுத்து ஆகாத தீதார் பற்றிப் பேசினார் எழுத்தாளர் திப்பு ரஹீம் அவர்கள், அவர் பேசும் போது காப்பியக்கோ அய்யா அவர்கள் நலமுடன் இருக்க இறைவனைப் பிராத்திக்கிறேன் என்று சொல்லி, ஆகாத தீதார் பற்றி நிறையப் பேசி விட்டார்கள்... இன்னும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். இங்க நான் இதிலிருந்து புதிதாக எதையும் பேசி விடப்போவதில்லை, நான் என்னுடைய வாழ்க்கையோடு இந்தப் புத்தகம் எப்படி பொருந்திப் போனது என்பதையும் எனக்கு இந்தப் புத்தகம் என்ன படிப்பினையைத் தந்தது என்பதையும் பற்றிப் பேசலாம் என்று நினைக்கிறேன். நான் ஒரு புத்தகத்தை எடுத்தால் விரைந்து முடித்துவிடுவேன் என்றாலும் இந்தப் புத்தகத்தை அப்படி முடிக்கவில்லை. ஒரு கதையை வாசித்தவுடன் அடுத்த கதையை வாசிக்க ஒரு சில நாள் எடுத்துக் கொள்வேன் என் என்றால் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாக் கதாபாத்திரங்களும் நான் சந்தித்த, என்  உறவுக்கார, எங்க பகுதியில் இருந்த மக்கள்தான் என்றார்.

மேலும் நான் கிராமத்துக்காரன்... விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். இழுத்து இழுத்துப் பேசும் வட்டார வழக்கு எங்கள் பக்கம் இருக்கும். கிராமத்தில்தான் கெட்ட வார்த்தைகளை அன்பாகப் பயன்படுத்துவார்கள். அதேபோல் சாபங்களைக் கூட வாழ்த்துக்குப் பயன்படுத்துவார்கள். ஒருமுறை நாங்கள் ஒரு ஊருக்குப் போகும்போது பாதை மாறிப் போய்விட்டோம். அப்ப ஒரு பாட்டியிடம் எப்படிப் போக வேண்டும் எனக் கேட்டதும், ஐயோ பாவம்... வெயில்ல இவ்வளவு  தூரம் வந்துட்டீங்களே... தண்ணி குடிச்சிட்டுப் போங்க என்றார்கள். இதுதான் கிராமம், அடுத்தவங்களோட சிரமத்தைக் கண்டு வருந்தக் கூடியவர்கள் கிராமத்து மனிதர்கள், அதனால்தான் எனக்கு கிராமத்தைப் பிடிக்கும். கிராமத்தில் மட்டும்தான் அநாதைகளைக் கூட அநாதையாய் பார்க்க மாட்டார்கள், அவர்களுக்கு அங்கு உறவுகள் இருக்கும். நகரத்தில் கூட்டம் கூட்டமாய் இருப்பார்கள் ஆனால் பேசிக் கொள்ளமாட்டார்கள். கூட்டமாய் இருந்தாலும் இங்கே அநாதைகளாய்த்தான் வாழ்கிறார்கள் என்று சொன்னார். இருட்சிறை என்னும் கதையின் நாயகியான பஷீரா பற்றியும் அந்தக் கதை குறித்தும் மிக விரிவாகப் பேசினார். அழகான எதார்த்தப் பேச்சு.

என்னோட மாமி பேரும் பஷீராதான்... வட்டார வழக்கில் இருப்பதால்தான் எழுத்தாளர் ஆமீனா அவர்களுக்கு கேலக்ஸியின் பாண்டியன் பொற்கிழி விருது கிடைத்தது என்று சொன்னார் தொகுப்பாளர் நாஷ்.

அடுத்துப் பேச வந்த நண்பர் அபுல் பைஸ் அவர்கள் கலீல் ஜிப்ரானின் 'த ப்ராபெட்' என்னும் நூல் குறித்துப் பேசினார்.  ஜிப்ரான் அவர்கள் அமெரிக்கக் கவிஞர், இந்தப் புத்தகம் இன்னைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்  அதாவது 1923-ல் வெளியிடப்பட்டது.  உலகில் அதிக அளவில் மொழியாக்கம் - 112 மொழிகள் - செய்யப்பட்ட புத்தகங்களில் இதுவும் ஒன்று. இந்தப் புத்தகத்தில் இருக்கும் முக்கியமான வரிகள் எல்லாம் உலகின் பல புத்தகங்களில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கின்றன. இந்தப் புத்தகத்தைப் பற்றி நிறைய ஆராய்ச்சி செய்யப்பட்டிருக்கிறது. நான் டிப்ளமோ படிக்கும் போதுதான் அறிமுகமானது. இதில் 26 தலைப்புகளில் சின்னச் சின்ன கட்டுரைகள் இருக்கு, மொத்தம் 120 பக்கம்தான் புத்தகமே. தமிழில் இந்தப் புத்தகம் தீர்க்கதரிசி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.  

அல் முஸ்தபா என்னும் தீர்க்கதரிசி, பனிரெண்டு வருசத்துக்குப் பின் தன் சொந்த ஊருக்கு கிளம்பும் போது, அதுவரை வாழ்ந்த ஊர் மக்கள் அவரிடம் எங்களுக்கு எதாவது சொல்லிவிட்டுப் போங்கள் எனச் சொன்னதும் அவர் நிறைய விசயங்களைச் சொல்லி வருகிறார் அப்போது குழந்தைகளைப் பற்றிச் சொல்லும் போது உங்கள் குழந்தைகள் உங்களின் குழந்தைகள் அல்ல, அவர்கள் உங்கள் மூலமாக வந்திருக்கிறார்கள். உங்களுடைய சிந்தாந்தத்தை அவர்களிடம் திணிக்காதீர்கள். அவர்களுக்குப் பாசத்தைக் கொடுங்கள். நீங்க அவங்க உடலைத்தான் கொடுத்திருக்கிறீர்கள்... உள்ளத்தை அல்ல, அவர்கள் நாளையை நோக்கிப் பயணிக்கிறார்கள் என்றும், கல்யாணத்தைப் பற்றிச் சொல்லும் போது நீங்கள் இருவரும் கடைசி வரை ஒன்றாக இருங்கள். சாவுத் தேவதையின் இறகுகள் உங்கள் மீது படும்வரை ஒன்றாகவே இருங்கள். ஆனால் கொஞ்சம் விலகியே இருங்கள். அதாவது சொர்க்கத்தின் வசந்தம் உங்களுக்கு இடையே போய் வரும் அளவுக்கு இடைவெளி விட்டு இருங்கள். அதாவது வீணையின் தந்திக் கம்பிகள் தனித்தனியாகத்தான் இருக்கும் என்றாலும் ஒரே இசைதான் வரும். அதேபோல் ஒரு மண்டபத்தின் தூண்கள் தனித்தனியே இருக்கும் என்றாலும் அவை சேர்ந்துதான் அந்த மண்டபத்தை தாங்கி நிற்கின்றன. ஒரு ஓக் மரமும் ஒரு சைப்ரஸ் மரமும் ஒன்றின் நிழலில் மற்றொன்று வளராது. தனித்தனியாக இருந்தால் இரண்டும் நன்றாக வளரும் என்றெல்லாம் அந்த தீர்க்கதரிசி விளக்கம் கொடுப்பதாக ஜிப்ரான் எழுதியிருப்பதாகப் பேசினார். அருமையான பேச்சு.

அடுத்துப் பேச வந்தவர் சகோதரர் சதீஷ் அவர்கள். இவர் பேசியது எனது முதல் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்று பலரால் பேசப்பட்ட 'தீபாவளிக் கனவு' என்னும் சிறுகதை குறித்து என்பதால் எனக்கு இவரின் பேச்சு மிக முக்கியமானதாக இருந்தது. இவரைப் பொறுத்தவரை எல்லாக் கதைகளையும் உள்வாங்கி, மிக ஆழமான கருத்துக்களை நம் முன் வைப்பார். அப்படித்தான் இந்த சிறுகதை குறித்தும் திறனாய்வு ஒன்றையே தன் பேச்சில் நிகழ்த்தினார்.

அவர் பேசும் போது நான் தஞ்சாவூர் மாவட்டக்காரன், விவசாயப் பின்னணியைச் சேர்ந்தவன். எங்க ஊரில் எல்லா வீட்டிலும் திண்ணைகள் இருக்கும். நாங்கள் திண்ணையில் விளையாடுவதை மிகவே விரும்புவோம். காரணம் என்னன்னா எங்க ஊர் பெரியவர்கள் எதாவது கதைகள் பேசுவார்கள், அதைக் கேட்பதில் எனக்கு எப்போதும் ஆர்வம். அது போக என் ஆர்வத்துக்கு எங்கள் தமிழாரியரும் ஒரு காரணம். ஒரு சிறுகதையை வாசிக்கும் போது அதை நம் வாழ்வியலோடு பொருத்திப் பார்த்துக் கொள்ளமுடியும். விடியல் என்பது எல்லாருக்கும் ஒரே மாதிரியானதாக இருக்காது. ஒருத்தருக்கு ஏமாற்றத்தையும், ஒருத்தருக்கு மகிழ்வாகவும், ஒரு சிலருக்கு உற்சாக மனநிலையையும் சிலருக்கு வேதனையோடும்தான் விடியும். சூரியன் பொதுவானதுதான் என்றாலும் எல்லாருக்கும் ஒரே மாதிரியான விடியலைத் தருவதில்லை. அதுபோல தீபாவளி என்னும் பண்டிகை ஒன்றுதான் என்றாலும் அது எல்லாருக்கும் மகிழ்வைக் கொடுத்துவிடுவதில்லை என்றார்.


தீபாவளிக் கனவு எதைப் பற்றிப் பேசுகிறது என்பதைச் சொல்லி இந்தக் கதையைப் போல் இரண்டு சிறுகதைகளை நான் வாசித்திருக்கிறேன். அதை இத்துடன் இணைத்துப் பார்க்கிறேன். ஒரு கதை என் மண்ணின் எழுத்தாளர் தி.ஜானகிராமனின் 'சிலிர்ப்பு'. அதில் ஒரு ஏழு வயதுக் குழந்தை - காமாட்சி - மன்னார்குடியில் இருந்து கல்கத்தாவுக்கு வேலைக்குப் போகும். அந்தக் குழந்தை வேலை பார்த்த ஜட்ஜ் வீட்டில் சரியான சாப்பாடு கூட அதுக்குப் போட்டிருக்க மாட்டார்கள் என்று அந்தக் கதையைச் சொல்லி, அந்தக் காமாட்சி வளர்ந்து சுந்தரியாக வேறொரு வீட்டுக்கு வேலைக்கு வந்திருப்பதாகத்தான் நான் பார்க்கிறேன். இதேபோல் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய சூரியகாந்திப் பூவை ஏந்திய சிறுமிகள் என்னும் கதையில் அப்பா வெளிநாட்டில் இருந்து வருவதால் அவரை வரவேற்க சூரியகாந்திப் பூவுடன் ரோட்டில் காத்திருக்கிறார்கள். ஆனால் ஊரில் இருந்து வரும் அப்பா, தன் நண்பர் கொடுத்த பார்சலைக் கொடுக்க தில்லை நகருக்குப் போக, அங்கே மது அருந்தி, விருந்து சாப்பிட்டு தங்கியும் விடுகிறார். இது எதுவும் அந்தக் குழந்தைகளுக்குத் தெரியாமல் ஒரு நாள் முழுவதும் ரோட்டில், வெயிலில், இயற்கை உபாதைகளைக் கூட கழிக்காமல் காத்திருந்க்கிறார்கள். அவருக்கு குழந்தைகள் ஞாபகம் வரும் போது குழந்தைகள் ஏமாற்றத்துடன் அந்தப் பூவை கையில் வைத்திருந்தபடி உறங்கிப் போகிறார்கள். இது குழந்தைகளின் ஏமாற்றம். இதையும் இந்தக் கதையுடன் என்னால் பொருத்திப் பார்க்க முடிந்தது.

ஒரு சிறுகதையின் தொடக்கம் என்பது ஆரம்ப இரண்டு மூன்று வரிகளில் கதைக்குள் இழுத்து விட வேண்டும். அதை இக்கதை சரியாகச் செய்திருக்கிறது. இன்னும் விரிவாகப் பேசினார்... எல்லாவற்றையும் எழுதினால் மற்றவர்கள் பேசியதை விட அதிகமாகப் போகும் என்பதாலும், இவனோட கதை என்பதால் விரிவாக எழுதிட்டான் என்ற எண்ணம் வாசிப்பவர்களுக்கு வந்து விடக் கூடாது என்பதாலும் சதீஷின் சிறப்பான உரையை இன்னும் விரிவாக எழுதவில்லை. அருமையான, வித்தியாசமான பார்வை. சிறப்பு.

அடுத்து கருத்துரையாகப் பேச வந்த திருமதி. ரமாமலர் அவர்கள், இது மிக மகிழ்வான நிகழ்ச்சி. ஐயா காப்பியக்கோ அவர்களைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. உங்களைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டதில் மகிழ்கிறேன், பெருமை கொள்கிறேன். இன்னும் பல நிகழ்வுகளில் உங்களைச் சந்திக்கணும் என்றும், மற்ற எழுத்தாளர்கள் , அதாவது ஏழு பேர் ஏழுவிதமான கதைகளைச் சொல்லக் கேட்டது மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது. நிறையப் பேர் கலந்து கொள்ளும் நிகழ்வாக இது விரிவடைய வேண்டும் என்றும், நீங்கள் பேசிய கதைகளை வாசிக்க வேண்டும் என்ற ஆவல் அதனால் அந்தப் புத்தகங்களை விலைக்கோ அன்பளிப்பாகவோ கொடுங்கள். குழந்தைகள் பேசியது சிறப்பு, இன்னும் நிறைய குழந்தைகள் பேச வேண்டும் என்றும் சொன்னார்.

நன்றியுரையை அமீரகத் திமுகவின் போர்வாள் பிலால் அவர்கள் வழங்கினார். மூன்று மணி நேரம் தொடர்ச்சியாகப் பேசிக் கொண்டே இருக்கிறார்கள்... கேட்டுக் கொண்டே இருக்கிறோம். கேலக்ஸியின் விழாக்கள் எப்போதும் மிக நேர்த்தியாக இருக்கும். நான் மதிக்கும், என் வெண்பா ஆசிரியர் ஐயா காப்பியக்கோ அவர்களின் நூல்களை வெளியிட்டு மகிழ்ந்தோம். கீழடி நாகரீகம் பற்றி எல்லாம் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம், இன்றைய நாள் சிறப்பான நாள்... சிந்துச் சமவெளி நாகரீகம், இந்தியாவின் வரலாறு தென் திசையில் இருந்து எழுதப்பட வேண்டும் என ஜான் மார்ஷல் 1924-ல் சொன்னார். சரியாக ஒரு நூற்றாண்டுக்குப் பின் நாம் இங்கே இணைந்திருக்கிறோம். தமிழால் இணைந்திருக்கிறோம் நீங்கள் கூட - காப்பியக்கோ- சொன்னீர்கள் நான் இலங்கையன் நீங்கள் இந்தியர்கள் என்று சொன்னீர்கள் அப்படியெல்லாம் இல்லை மொழியால் நாம் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றெல்லாம் பேசி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

மிகச் சிறப்பான இரவு உணவுடன் அருமையான நிகழ்வு நிறைவு பெற்றது.

-பரிவை சே.குமார்.

0 எண்ணங்கள்: