மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 30 ஜூன், 2024

சினிமா விமர்சனம் : கருடன்

ருடன்-

நட்பு... நட்புக்குள் துரோகம் என்னும் நாம் பார்த்து ரசித்த கதைகளின் வரிசையில்தான் இப்படமும் என்றாலும் அதைச் சொன்ன விதத்தில் ஜெயித்திருக்கிறார்கள்.

அநாதையான தன்னைத் தன்னோடு இருத்திக் கொண்டவனையும், தன் நட்பின் அணைப்பில் வளர்பவனைத் தன் குடும்பத்தில் ஒருவனாய், உறவாய் நினைப்பவனையும் விட்டுக் கொடுக்க முடியாமல் தவிக்கும் சராசரி மனிதனாய் கதையின் நாயகன்.


தன்னை இருத்திக் கொண்டவன் தப்புச் செய்கிறான் என்னும் போது அதைத் தட்டிக் கேட்கவும் முடியாமல், அவனை எதிர்க்கவும் முடியாமல் அவன் அப்படிச் செய்யமாட்டான் என்ற நம்பிக்கையைத் தனக்குள்ளே விதைத்துக் கொண்டு நடமாடுபவன் ஒரு கட்டத்தில் தன் மீது உயிரான குடும்பத்துக்காக ஆயுதம் தூக்குகிறான்.

கோவில், கோவில் நிலம், பட்டயம் என எண்பது, தொன்னூறுகளின் கதைக் களத்தில் நண்பனுக்கு ஒண்ணுன்னா நான் முன்னால நிப்பேண்டா எனத் தன் முந்தைய படங்களில் எல்லாம் நட்பைத் தூக்கிப் பிடித்த சசிக்குமார், வளர்த்தவனா, உறவைக் கொடுத்தவனா என்ற தடுமாற்றத்தில் தன் ஆதங்கம், கோபம், வெறி, இடையே காதல் எனப் பன்முகம் காட்டும் சூரியை விட நம்முள் நிறைந்து நிற்கிறார் என்றாலும் இது சூரிக்கான படம் எனச் சொல்வதால் இங்கே சூரியை நாம் முன் நிறுத்துகிறோம்.

உன்னி முகுந்தன் நட்பு பாராட்டி, பின்னர் தன் குடும்பம் மற்றும் வில்லனின் உந்துதலில் நட்புக்கு எதிரியாக மாறிப் போகும் போது ரஜினி படங்களில் எல்லாம் நண்பனாய் வந்து வில்லனாய் உயர்ந்து நிற்கும் சரத்பாபுவை நினைவில் நிறுத்துகிறார் என்றாலும் அவரின் கதாபாத்திரம் அந்தளவுக்கு நம் நினைவில் நின்றுவிடவில்லை. சசிக்குமார், சூரிக்குப் பின் சசியின் மனையாக வரும் ஷிவதாவுக்குப் பின்தான் அவர் நம்முள் நிற்கிறார்.


அங்கே பார் வன்முறை இல்லாமல் ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார்கள். நீ ரத்தத்தைக் கொட்டி வைக்கிறார் எனத் தமிழ் சினிமா மீது சமீபமாய் எல்லாருமே கல்லெறிய ஆரம்பித்திருக்கிறோம். அதான் அவன் ரத்தமில்லாமல் சொல்லிட்டானுல்ல... இங்கே நான் ரத்தத்துடன் சொல்கிறேனே... அதனால் என்ன என்பதைப் போல் இங்கே வன்முறைகள் ரத்த ஆறில் நனைகின்றன. இதுவும் விதிவிலக்கல்ல... இதில் சிறுகுழந்தை மீதும் வன்முறை திணிக்கப்படுகிறது. அவனும் கத்தியை எடுக்கிறான்.  

புரோட்டா தின்று தன்னை சினிமாவில் ஒருவனாய் ஆக்கிக் கொண்ட பின்னும் கூட சந்தானத்தின் சிரிப்பைப் போலவே சூரியும் தன் சிரிப்பால் மக்களை ஈர்க்கவில்லை என்பதுதான் உண்மை. விசாரணை கொடுத்த வெற்றியே அவரை இப்போது கதைநாயகனாக, வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து தனக்கான ஒரு இடத்தை, கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களின் வரிசையில் ஏறி அமரவ் வைத்திருக்கிறது. அந்த வெற்றியை இதிலும் தனதாக்கிக் கொண்டுள்ளார்.

தான் என்ன செய்தேன் என்பதைச் சொல்லும் இடங்களில் எல்லாம் வேகமாக ஆரம்பம் முதல் இறுதி வரை சொல்லி முடிக்கும் போது அவரின் நடிப்பு சூப்பர். அந்த இடங்களில் எல்லாம் காமெடியாக இல்லாமல் கதை நாயகனாக இருந்து நம்மைச் சிரிக்க வைக்கிறார். 

அப்பாவித்தனத்துடன் ஆக்ரோசமாகவும் நடித்திருப்பதில் வெற்றியும் கண்டிருக்கிறார். கருடனையும் வெற்றி மேடையில் ஏற்றி விட்டிருக்கிறார் சூரி.


வில்லன் என்பதற்கு ஒரு ஆர்.வி.உதயகுமார் தேவைப்பட்டிருக்கிறார். மற்றபடி அவர் படங்களின் கதைகளைப் போலவே ரொம்ப மென்மையாகத்தான் இருக்கிறார். வில்லத்தனம் பெரிதாக எடுபடவில்லை. மைம்கோபியும் அப்படித்தான்.

சமுத்திரக்கனி கறார் போலீசாக பல இடங்களுக்கு மாற்றப்படுபவராக இருப்பினும் அமைச்சரின் ஆணைக்கு அடிபணிந்து நண்பர்கள் மூவரையும் பற்றி விசாரிக்கிறார். அந்தப் போலீஸ் பாத்திரத்துக்குப் பொருந்திப் போகிறார்.

சசியின் மனைவியாக ஷிவதா வாழ்ந்திருக்கிறார். கணவனின் மறைவுக்குப் பின் அவரது நடிப்பு சிறப்பு. ரோஷிணி நட்புக்கு வில்லியாகிறார், தன் கணவனை மெல்ல மெல்ல வில்லக் கூட்டத்துக்குள் சேர்க்கிறார். சூரியைக் காதலிக்கும் ரேவதியும் சிறப்பாகவே செய்திருக்கிறார்.

வடிவுக்கரசி அப்பத்தாவாக வந்து சாகிறார். அவரின் சாவுக்குப்பின் தான் கதை வேறு களத்தில் பயணிக்க ஆரம்பிக்கிறது. 

ஆர்தர் ஏ.வில்சனின் ஒளிப்பதிவு இந்தப் படத்துக்கு மிகப்பெரிய பிளஸ். கதையோட்டத்துக்குத் தகுந்தவாறு வண்ணத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்.

எடிட்டிங், கலை மற்றும் சண்டைப் பயிற்சி இப்படத்தை வெற்றிப் படமாக மாற்றியிருக்கிறது.


யுவனின் இசையில் பிண்ணனி மிரட்டுகிறது. அதுவும் இடைவேளையின் போது செம.

இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் வழக்கமான ஒரு கதையை வித்தியாசமான திரைக்கதையாக்கி வென்றிருக்கிறார். வாழ்த்துகள்.

கருடன் சிறப்பு. பார்க்கலாம்.

-பரிவை சே.குமார்.

2 எண்ணங்கள்:

வலிதாங்கி சொன்னது…

நான் அதிகம் சினிமா பார்ப்பதில்லை, பத்திரிகை விமர்சனங்களும் படிப்பதில்லை. உங்களின் இந்த விமர்சனம் படிக்கச் சுவையாக இருந்தது.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு விமர்சனம். படம் குறித்து சில பதிவுகள் படித்தேன். பார்க்க வாய்ப்பில்லை - தில்லியில்!