மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 19 பிப்ரவரி, 2024

'கணியன் பூங்குன்றனார் விருது' - ஜெசிலாபானுக்குப் பாராட்டு விழா

ன மகிழ்வும் மன நிறைவும் கொடுக்கும் நிகழ்வுகள் எப்போதும் மனதை விட்டு அகல்வதில்லை. அப்படியான ஒரு நிகழ்வு நேற்றைய குளிர் மாலையில், துபை லாவண்டர் ஹோட்டலில் கேலக்ஸி குழுமம் நிகழ்த்தியது. ஆம் தமிழக அரசின் 'கணியன் பூங்குன்றனார் விருது' பெற்ற சகோதரி ஜெசிலாபானு அவர்களுக்கு அமீரகத்தில் நடத்தப்பட்ட முதல் பாராட்டு விழாதான் அது.

நிகழ்வுக்குச் சிறப்பு அழைப்பாளர் என்று யாருமில்லை, விழா நாயகியே சிறப்பு விருந்தினர், வாழ்த்துபவர்கள் எல்லாருமே சிறப்பு அழைப்பாளர்கள் என்பதால் மேடையில் ஒரே ஒரு சோபா மட்டுமே. அம்புட்டுப் பேரும் புகழ்றதை நான் தனியா உக்கார்ந்து கேட்க முடியாதென வெட்கமும் மகிழ்வும் கலந்து அதில் அமர மறுத்துக் கூட்டத்தோடு உட்கார்ந்து கொண்டவரை நிகழ்வின் இடையில் பதக்கதையும் மாட்டிக் கொண்டு உட்காருங்கள் என வற்புறுத்தி அமர வைத்தார்கள்.
எப்பவும் போல் எங்கள் நிகழ்வினை நிவேதிதா (ஆர்.ஜே. அஞ்சனா) தொகுத்து வழங்கினார். இவருக்குச் சொல்ல வேண்டியதில்லை, மைக்கின் முன் நின்று சரவெடியாய் பேசுவதில் வல்லவர். கொஞ்சம் ஆர்வம் மேலிட்டதால் தமிழ் தாய் வாழ்த்து எனச் சொல்லித் தொடங்காமல் வாழ்த்துரை என ஆரம்பிக்க பிலால் எடுத்துக் கொடுக்க, தமிழ்தாய் வாழ்த்துப் பாடப்பட்டது.
நிகழ்வினை பிலால் அலியார் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தித் தொடங்கி வைத்தார். விருது பற்றி ஆரம்பித்து, தமிழக அரசினைப் புகழ்ந்து, விழாவுக்கு வந்திருந்த எல்லாரையும் ஒவ்வொருவராய் வரவேற்று ஒரு நீண்ட வரவேற்புரையை அளித்து அமர்ந்தார்.
அதன் பின் கேலக்ஸி சார்பாக, ஜெசிலாபானு அவர்கள் பற்றி, அவருக்கும் கேலக்ஸிக்கும் உள்ள சம்பந்தம் என்ன என்பதைப் பற்றி பேசப் பலர் இருந்தும் வேண்டுமென்றே நீதான் பேசுறே என நாலைந்து நாளைக்கு முன்பே பாலாஜி அண்ணன் சொல்லியிருந்ததால் நாந்தான் பேசினேன். எழுதுறதெல்லாம் நல்லாவே எழுதுவேன் ஆனா மேடையில் நின்று பேசுவது நமக்கு எப்பவும் ஒத்து வராதுன்னு ஒதுங்கி இருந்தவனைக் கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் பேச வைத்த முதல் நிகழ்வு இதுதான். எப்படியோ சரியாத்தான் பேசியிருப்பேன்னு நினைக்கிறேன்.
அடுத்து கேலக்ஸி சார்பாக விழா நாயகி அவர்களுக்குப் பாலாஜி அண்ணனின் துணைவி திருமதி. தேவதர்ஷினி அவர்கள் பொன்னாடை போர்த்த, அவருடன் பிலால் அலியார், பால்கரசு, ராஜாராம், பாலாஜி பாஸ்கரன் மற்றும் நான் என அனைவரும் இணைந்து நினைவுப் பரிசு வழங்கினோம்.


அதன்பின் அமீரகச் சமூக ஆர்வலரான முஹம்மது மொஹைதீன் அவர்கள் வாழ்த்திப் பேசியபோது ஒரு இஸ்லாமியப் பெண்ணாய் இந்தச் சமூகத்தில் உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஜெசிலா அவர்கள் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வந்தார் என்பதை விரிவாகச் சொல்லி, அவர் வாங்கி வைத்திருக்கும் விருதுகளில் தான் சார்ந்த அமைப்பின் மூலம் கொடுக்கப்பட்ட விருதும் ஒன்று எனச் சொல்லி, அவர் விருது வாங்கும் போது தானும் சென்னையில் இருந்ததைச் சொல்லி இன்னும் பல விருதுகளை வாங்க வேண்டும் என்றார்.
அடுத்துப் பேசிய வெளிநாடு வாழ் தமிழர் நலவாரிய உறுப்பினரான எஸ்.எஸ்.மீரான் அவர்கள் இறைவன் நாடினால் எதையும் சாதிக்க முடியும் என்று சொன்னார். இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் போது இணையத்தள பிரச்சினை இருந்தும் அடுத்த நாள் சமர்ப்பித்தார். உலக நாடுகளில் இருந்தெல்லாம் பலர் விண்ணப்பித்திருந்தும் வளைகுடாவுக்கு இரண்டு விருதுகள் கிடைத்திருப்பது உண்மையிலே சிறப்பு என்றார். மேலும் இறைவன் சித்தம்தான் இவ்விருதுக்குக் காரணம் என்று சொல்லி வாழ்த்தினார்.
விசிகவின் துணைப் பொதுச் செயலாளர் எழில் கரோலின் அவர்கள் பேசும் போது தான் சார்ந்த கட்சி குறித்தும் தமிழக அரசு குறித்தும் பேசி, இது ஒட்டு மொத்த பெண் சமூகத்துக்கும் கிடைத்த விருது என்றும் ஒரு பெண்ணாய் சாதிப்பது என்பது எத்தனை கடினம் என்றும் பேசினார்.
ஜெசிலாவுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்த தஸ்னீம் அவர்கள் எங்களுக்கெல்லாம் நீங்கதான் உத்வேகம் கொடுக்கிறீர்கள்... தொடர்ந்து பல விருதுகளை வாங்க வாழ்த்துகள் என்றார்.
ரமாமலர் பேசும்போது தொழில் முனைவோராக மூன்று நிறுவனங்களை நடத்துவதைப் பற்றிக் கூறி, ஒரு பெண் சாதிக்க வீட்டில் இருக்கும் ஆண்கள் உறுதுணையாக இருக்க வேண்டும், இங்கே அவரின் கணவர் ரியாஸ் நீ செயல்படு என உத்வேகம் கொடுத்துக் கொண்டே இருப்பது சிறப்பு என்று சொல்லி, அவரின் சாதனைகளைப் பற்றிப் பேசினார்.
பிரபாவதி செந்தில் வாழ்த்து என்பதைப் பற்றி ஒரு ஆராய்ச்சி விளக்கம் கொடுத்து இந்த விருது கிடைத்த போது தானே பெற்றதாய் துள்ளிக் குதித்து மகிழ்ந்தேன் என்றார்.
எப்பவுமே தன் பேச்சில் சுவை வைத்துப் பேசும் சசிகுமார் அண்ணன், கவிதையில் சொற்சுவை, பொருள்சுவை வைத்து தேன்சுவையில் வாழ்த்தினார். அருமையான கவிதை. சிறப்பு. என்னைப் போல் முதல்முறை பேச மேடையேறிய திருமதி. மீனா சசிகுமார் அவர்கள் வாழ்த்துச் சொல்லும் போது உணர்ச்சி வசப்பட்டார்.
பெனாசிர் பாத்திமா அவர்கள் தன் சித்தியைப் பற்றிச் சொல்லி, அவர் எனக்கு நல்ல தோழி என்றதுடன் சித்திக்காக ஒரு பாடலும் பாடினார். பாலாஜி அண்ணனின் விருப்பத்தின் பேரில் இவர் தொகுத்த வீடியோவில் விழா நாயகியின் அம்மா, அக்கா, தங்கைகள் , சகோதரன், உறவுகள், நட்புக்கள், இயக்குநர் பாண்டியராஜன், எழுத்தாளர் ஹேமா உள்ளிட்டோர் தங்கள் வாழ்த்துகளைச் சொல்லியிருந்தார்கள். அது ஒளிபரப்பப்பட்ட போது ஜெசிலா அவர்களின் முகத்தில் மட்டுமல்ல அனைவரின் முகத்திலும் உணர்ச்சி அலைகள்... சிறப்பான தொகுப்பு.


இடையில் விழா நாயகிக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நானும் ராஜாராமும் புத்தககங்களைப் பரிசளித்தோம்.
மேலும் பால்கரசு சசிகுமார், ராஜாராம், கருணாகரன், ஸ்ரீதேவி, மொஹைதீன் பாட்ஷா, பிர்தோஷ் பாஷா, பூரணி பாலாஜி உள்ளிட்ட பலர் தங்களின் வாழ்த்துக்களைச் சொன்னார்கள்.
இறுதியாகப் பேசிய தொழில் முனைவோர் அபுதாஹிர் அவர்கள் பெண்களின் முன்னேற்றம் பற்றிப் பேசினார். ஆண்களுக்கு இருக்கும் மரியாதை இங்கே பெண்களுக்கு கிடைப்பதில்லை என்பதை முதலாம் வகுப்பு பாடநூலில் இருக்கும் அப்பா பேப்பர் வாசிக்கிறார், அம்மா சமையல் செய்கிறார், அக்கா வீடு பெருக்குகிறாள், தம்பி விளையாடுகிறான் என்பதை வைத்து விளக்கினார். மேலும் கரோலின் அவர்களின் வாழ்க்கை வரலாறு ஒவ்வொரு பெண் குழந்தைகளும் வாசிக்க வேண்டும் என்றார். தனது மகள்களுக்கு ஜெசிலாவைத்தான் உந்து சக்தியாகச் சொல்லி வளர்க்கிறேன். அவரின் மூஸாவை வாசித்தால் நபிகளைப் பற்றி முழுமையாக அறியலாம் என்று சொன்னார். அவரின் மகள் தஸ்னீம் பேசுவது முழுக்க முழுக்க ஆங்கிலம் என்றாலும் கையில் மூஸாவை வைத்திருந்தார். அப்பா பேசும்போது தலையைத் தலையை ஆட்டி எல்லாவற்றையும் ஆமோதித்தார்.
அண்ணன்கள் தமிழ்ச்செல்வன், ஷேக் முகமது, சகோதரர்கள் புகைப்படக் கலைஞர் கலைஞன் நாஷ், அஅமது ஷாயித், திலீப், பாலாஜி முருகேசன் மற்றும் சதீஷ், அபுல் பைசல், ஸ்ரீ ஹரீஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். எல்லாரையும் பேச அழைத்த போது என்னைப் போலவே பேசலாம் வராதுங்க... இங்க இருந்தே வாழ்த்துறோமுன்னு கைகாட்டிட்டாங்க. வந்திருந்த பலரின் பெயர் எனக்குத் தெரியாததால் இங்கு குறிப்பிடவில்லை. அவர்கள் எல்லாருமே அன்போடு வந்திருந்தார்கள்.... மனநிறைவாய் வாழ்த்தினார்கள்... மகிழ்வாய் விழாவை ரசித்தார்கள்.
தனது ஏற்புரையில் ஒருத்தரை உட்கார வைத்து எல்லாரும் புகழ்ந்து பேசுவதைக் கேட்பதென்பது உண்மையிலேயே ரொம்பக் கஷ்டம். என்னால் அப்படியெல்லாம் இருக்க முடியாது என்றாலும் இன்று இருக்க வேண்டிய சூழல் என்றும் இந்த விருதுக்கு எப்படி விண்ணப்பித்தேன், விழாவுக்குச் செல்வதா வேண்டாமாவென யோசித்த போது எஸ்.எஸ்,மீரான் சொன்னது, கணவர் சொன்னது, திடீரெனப் போன் பண்ணி பாஸ்போர்ட் நகல் கேட்டது என எல்லாவற்றையும் பற்றி விரிவாகச் சொல்லி, ஒவ்வொருத்தர் பேசியதை வைத்து அவர்களுக்கும் பதில் சொன்னார்.
அவர் வாங்கிய விருது, பதக்கம் - ஐந்து பவுனாம் - அதான் கழுத்தில் மாட்டிக்கிட்டார் போல பாதுகாப்பாய்...🙂 - என எல்லாவற்றையும் வைத்துப் பெண்கள் அனைவரும் நின்று போட்டோ எடுத்துக் கொண்டார்கள். சென்னை விழா மேடையில் பாலாஜி அண்ணன் கொடுத்த (வீர) வாளை - வேலு நாச்சியார் போட்டோக்களில் கையில் வைத்திருக்கும் வாளைப் போன்றே இருந்தது - அண்ணியார் இங்கு மீண்டும் கொடுத்தார். அப்போது ஒரு குட்டிப்பெண் பூங்கொத்து கொடுத்தார். தங்கப் பதக்கம் என்றதும் தங்கமா என ஆச்சர்யப்பட்ட ரமாமலர் அவர்கள் போட்டோ எடுக்கப் போகும்போது அதைக் கையில் எடுத்து அதில் எழுதியிருந்ததை வாசித்து, அப்படியே தங்கம் என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டார்.

பாலாஜி அண்ணன் கொடுத்த வாள் பளபளன்னு நல்ல கனமா இருந்துச்சா... ஒருத்தர் இதுவும் தங்கமான்னு கேட்டு வைக்க, ராஜாராம் வாளைப் பத்திரப்படுத்திக் கொண்டார்.
இறுதியாக நன்றியுரை சொல்ல வந்த பாலாஜி அண்ணன், வந்திருந்தவர்களில் குழந்தைகள் தவிர எல்லாருக்கும் நன்றி சொன்னார். சிறப்புரை, ஏற்புரைக்கெல்லாம் அதிக நேரம் கொடுக்க முடியாதெனச் சொல்லிவிட்டு நன்றியுரைக்கு அரைமணி நேரம் எடுத்துக் கொண்டு தனது பாணியில் அடித்து ஆடினார். வந்திருந்த ஒருவர் கூட நம்ம பேரைச் சொல்லலையேன்னு வருத்தப்பட வாய்ப்பே இல்லை. இந்த விழா எடுக்கவே என் மனைவிதான் காரணம் எனச் சொன்னார். சென்னை விழா மேடையில் நடந்தவற்றைப் பற்றிச் சொன்னார்.
எனக்கு இரண்டு கேடயங்கள் கொடுக்கப்பட்டது. பிர்தோஷ் பாஷா, நிவேதிதா, பிரபாவதி ஆகியோருக்கும் கேடயங்கள் வழங்கப்பட்டன.


மனநிறைவுடன் விழா நிறையவும் வயிறு நிறைய சிறு விருந்து இருந்தது. எல்லாரும் மகிழ்வாய் கலைந்து சென்றார்கள்.
நாங்கள் எப்பவும் போல் கொஞ்ச நேரம் பேசி, ஜெசிலா மேடத்தின் அன்பிற்கு இணங்கி அருமையான இரவு உணவை முடித்து, அருமையான விழாவில் கலந்து கொண்ட மகிழ்வோடு அரசியல், சினிமா என எல்லாவற்றாய்யும் பேசியபடி நள்ளிரவு 1.30 மணிக்கு அபுதாபியை அடைந்தோம்.
மிகச் சிறப்பான நிகழ்வு.
கேலக்ஸி எடுத்த விழாக்களில் இது மைல்கல்.
கேலக்ஸி வளர்வதில் மகிழும் . ஜெசிலா மேடத்துக்கு விருது கிடைத்ததற்கு மனமார வாழ்த்த நினைக்கும் அனைவரும் வந்திருந்தார்கள். அனைவருக்கும் கேலக்ஸி சார்ப்பாக நன்றி.
கேலக்ஸியின் அடுத்தடுத்த நகர்வுகள் குறித்தும் பேசினோம்... இன்னும் சிறப்பாக பயணப்படுவோம்.
-பரிவை சே.குமார்

2 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.