மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

சினிமா விமர்சனம் : நேரு (மலையாளம்)

 நேரு-

இந்தப் படத்தைச் சிலருக்கு ரொம்பப் பிடித்திருக்கும், சிலருக்கு பிடித்திருக்காது என்பதை முதலிலேயே சொல்லிவிடலாம். காரணம் என் நட்பு வட்டத்தில் கூட கலவையான விமர்சனங்களே வந்தன. பலர் நாம விதின்னு ஒரு படத்தை என்பதுகளில் எடுத்துட்டோம் என்றெல்லாம் சொன்னார்கள் என்றாலும் விதி வேறு நேரு வேறு என்பதுதான் என்பார்வை.

ஜித்து ஜோசப் - மோகன்லால் கூட்டணி வெற்றிக் கூட்டணி என்பதுடன் இவர்களின் படங்களில் இறுதிக் காட்சி இப்படித்தான் இருக்கும் என்பதை நாம் யூகிக்க முடியாது. ஆனால் இந்தப் படத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே படத்தின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதை யூகிக்க முடிந்து விடுவதால் நீதிமன்றக் காட்சிகளில் இருக்கும் நிறைவு முடிவை அறிந்து கொள்வதில் இல்லாமல் போய்விடுகிறது என்றாலும் படம் சிறப்பாகத்தான் இருக்கிறது.

கண் பார்வை இழந்த இளம்பெண் தன்னைக் கெடுத்தவனை  நீதிமன்றத்துக்கு இழுத்து வந்து தண்டனை வாங்கிக் கொடுப்பதுதான் கதை. படத்தின் பெரும்பாலான காட்சிகள் நீதிமன்றத்தில் நடைபெறுவதால் படம் ரொம்ப மெதுவாக நகர்வது போல் இருந்தாலும் எதிர்த்தரப்பு வக்கீல் ராஜசேகரன் - சித்திக் - கேட்கும் கேள்விகளும் சாட்சிகளை உடைக்கும் லாபகமும் நம்மை மெல்ல மெல்லக் கதைக்குள் இழுத்து ஒரு கட்டத்தில் அந்த வக்கீலின் மீது கோபம் வரும் அளவுக்கு ஆக்கிவிடுவதே திரைக்கதையின் சிறப்பு.

பணக்காரன், அவன் கொடுக்கும் பணம் என்ற காரணத்திற்காகத் தன் பேத்தி போன்ற ஒரு பெண்ணிடமும் அவளின் பெற்றோரிடமும் எதிர்த்தரப்பு வழக்கறிஞர் கேட்கும் கேள்விகளின் வலி அந்தப் பெண் அடைந்த  வலியைவிட அதிகமானதாய் இருக்கும் போது அவர்களால் உடைந்து அழத்தான் முடிகிறது. இவர்களின் பணத்துக்கும் அந்த வக்கீலுக்கு இருக்கும் பேருக்கும் பயந்தே அந்தப் பெண்ணுக்காக வாதாட மற்ற வக்கீல்கள் வரமாட்டேன் என்று சொல்லும் போது இந்தச் சமூகம் பாதிக்கப்பட்ட பெண்ணே நீதிமன்றப் படி ஏறினாலும் நீதி என்பது பணத்தின் பின்தான் என்றே எண்ணத் தோன்றுகிறது.


எல்லாப் படத்தையும் போல இதிலும் குடும்பம் இல்லாமல், தண்ணி அடித்துக் கிடந்து உறங்கும் தனக்கு ஏற்பட்ட அவமானத்தால் நீதிமன்றத்துக்கு வரமாட்டேன் எனச் சொல்லும் நாயகனிடம் போய் நிற்க, ஆரம்பத்தில் பிகு பண்ணி அதன்பின் பாதிக்கப்பட்ட பெண்ணைச் சந்தித்தபின் தன் மனதை மாற்றி வாதிட வரும் விஜயமோகன் - மோகன்லால் - பெரும்பாலான இடங்களில் சோர்வாக உட்கார்ந்திருந்தாலும், ஒரு சில வார்த்தைகளை மெதுவாகப் பேசினாலும் அந்த அபலைப் பெண்ணுக்கு எப்படியும் நீதி வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். ஒரு அரசு வழக்கறிஞராய் எதார்த்தமான மனிதரைக் கண் முன் நிறுத்தி, நான் எப்பவுமே நடிப்பில் கெட்டி என நிரூபித்திருக்கிறார்.

சித்திக்கின் மகளாக வரும் பிரியாமணி, அப்பா மீது சாட்சிகளை உடைக்க பொய் சாட்சியை உருவாக்கிய குற்றச்சாட்டினால் வாதாட முடியாத நிலையில் தன் கையில் எடுத்து அப்பாவைப் போல் ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக களமாடுகிறார். நடிப்பில் குறையில்லை.

கண் தெரியாத பெண்ணாக, எத்தனை மிரட்டல் வந்தாலும் எதற்கும் பயப்படமாட்டேன்... என்னைப் பார்த்தாவது இனிமேல் பாதிக்கப்படும் பெண்கள் நீதிக்காக போராட வேண்டுமென நீதிமன்றத்தில் தான் உடைக்கப்படும் போதெல்லாம் எழுந்து நின்று, நீதி கிடைக்கும் வரை முகத்தை மூடிப் பயணித்து, வெற்றி பெற்ற பின் முகத்திரை நீக்கி, சமூக ஊடக ஆட்களைக் கண்டு கொள்ளாமல் நெஞ்சை நிமிர்த்தி நடக்கும் சாரா - அனஸ்வர ராஜன் - அசத்தல். அடிபொலி நடிப்பு.

படத்தின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதை ஆரம்பத்திலேயே யூகித்து விட முடியும் என்றாலும் தனக்காக வாதாடிய, தன்னை இப்படிக் கேள்வி கேட்டால் இப்படிப் பேசணும் என்றெல்லாம் சொல்லி, அந்த அயோக்கியனுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்தவரைத் தடவி அறிந்து கொள்ளுமிடத்தில் மோகன்லாலின் கண்களில் இருந்து விழும் கண்ணீர் சொட்டுகள்... பெண் பிள்ளையைப் பெற்ற அப்பானாய் என்னிடமிருந்தும் விழுந்தது.


ஜெகதீஷ், சாந்தி மாயாதேவி, கணேஷ் குமார், ஸ்ரீதன்யா, ஹரிதா ஜி நாயர், சங்கர் இந்துசூடன், ஆப்ரஹாம் ஜோசப், சபிதா ஜார்ஜ், மாத்யூ வர்கீஸ் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துக்குப் பெருமை சேர்த்திருந்தார்கள்.

சாந்தி மாயாதேவி உடன் திரைக்கதை எழுதி இயக்கிய ஜித்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் மீண்டும் ஒரு வெற்றிப் படத்தைக் கொடுத்திருக்கிறார்.

சதீஷ் குருப்பின் ஒளிப்பதிவு நீதிமன்றக் காட்சிகளை மிக அழகாகக் காட்டியிருக்கிறது. நீதிமன்றக் காட்சிகள் எல்லாமே எந்த ஒரு நாயக பிம்பத்தைத் தூக்கி நிறுத்தும் காட்சிகள் இல்லாமல் படமாக்கப்பட்டிருப்பது சிறப்பு.

வி.எஸ்.விநாயக்கின் படத்தொகுப்பும் விஷ்ணு ஷ்யாமின் இசையும் படத்துக்குப் பலம்.

ஆசிர்வாத் சினிமாஸ் கம்பெனிக்காக  அந்தோணி பெரும்பாவூர் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.

நீதிமன்றக் காட்சிகள் ரொம்ப இழுவை, மெதுவாக நகர்ந்து பொறுமைச் சோதிக்குது என்றெல்லாம் பலர் சொன்னாலும் படம் எப்படி இருந்து விட்டுப் போகட்டும் நான் பார்ப்பேன் என்ற முடிவோடு பாருங்கள் நாமும் நீதிமன்றத்தில் உட்கார்ந்து அந்தப் பார்வை இழந்த பெண்ணுக்கு நீதி கிடைத்து விடாதா என ஏங்கப் பார்வை பார்ப்பதை உணர முடிவும்.

ஆமாம் இது கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம் என்பதுடன் நமது பிள்ளைகளையும் பார்க்கச் சொல்ல வேண்டிய படம்.

-பரிவை சே,குமார்.

3 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

முதலில் இந்தப் படம் பார்க்க ரொம்ப ஆவலாய் இருந்தேன்.  பின்னர் வந்த விமர்சனங்களால் கொஞ்சம் தயக்கம் ஏற்பட்டது.  இப்போது பார்த்து விடலாம் என்றே தோன்றுகிறது!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு விமர்சனம். படம் பார்க்கத் தோன்றுகிறது.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

iந்தப் படம் பார்க்க வேண்டும் என்ற லிஸ்டில் இருக்கிறது குமார். உங்க விமர்சனம் சூப்பர். ஆமாம் சிலருக்குப் பிடிக்கலை மெதுவா போகுதுன்னு சிலருக்குப் பிடித்திருக்கிறது. எனக்குக் குறிப்பா கோர்ட் ஸீன் பார்க்க வேண்டும் என்று ஆவல்

கீதா