ஒரு தெக்கன் தள்ளு கேஸ்-
எழுத்தாளர் ஜி.ஆர்.இந்துகோபாலன் எழுதிய அம்மணி பிள்ளை வீட்டு கேஸ் என்ற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் அம்மணி பிள்ளையாகப் பிஜூமேனனும் அவரின் மனைவி ருக்மிணியாகப் பத்மபிரியாவும் நடித்திருக்கிறார்கள் என்பதைவிட இருவரும் கதை மாந்தர்களாகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொல்வதுதான் சிறப்பு.
பிஜூமேனனுக்கு இந்த மாதிரி கதாபாத்திரம் எல்லாம் அல்வா சாப்பிடுவது போல, ஐயப்பனும் கோஷியும் படத்தில் கலக்கியிருப்பதில் பாதிதான் இந்தப்படத்தில் என்றாலும், தனக்கான இடத்தில் சூர்யகுமாரைப் போல எல்லாப் பக்கமும் சிக்ஸர் அடித்து ஆடியிருக்கிறார். எல்லாரும் போட்டி போட்டு நடித்திருந்தாலும் முழுப்படத்தையும் தன் தோளில் சுமந்து தனித்துத் தெரிகிறார்.
வேலை வெட்டிக்குப் போகாமல் தனது நண்பர்களுடன் ஊருக்குள் சுற்றித் திரியும் பொடியன் பிள்ளை (ரோஷன் மேத்யூ), கலங்கரை விளக்கத்தில் வேலை பார்க்கும் அம்மணி பிள்ளையுடன் சின்னச் சின்ன உரசல்கள் இருந்து வரும் நிலையில், அம்மணியின் வீட்டின் அருகே இருக்கும் உறவுக்காரரின் மகள் வசந்தியைக்(நிமிஷா) காதலிக்கிறார். ஒரு இரவில் இருவரும் தனித்திருக்கும் போது பார்த்துவிடும் அம்மணி பிள்ளை, பொடியனை அடித்து விரட்டிவிடுகிறார். சின்னச் சின்ன உரசல்கள் பெரிய ஈகோப் பிரச்சினையாக உருவெடுக்கிறது.
அதன்பின் அம்மணி பிள்ளையை பலி வாங்கக் காத்திருக்கும் பொடியன் வட்டம் அதையும் செய்து முடிக்கிறது. இது குறித்து வழக்குப் பதியச் சொல்லும் போலீசிடம் எனக்கு யாரையும் தெரியாது எனச் சொல்லும் அம்மணி பிள்ளை அவர்களை எப்படிப் பலி வாங்கி தனது கணக்கைத் தீர்த்துக் கொண்டார் என்பதுதான் மிச்சக்கதை.
கெத்தாக ஊருக்குள் வலம் வரும் அம்மணி பிள்ளை மனைவியின் பிரிவுக்குப் பின் சோகத்துடன் வலம் வருவதும் எதிர்பாராத சிக்கலில் மாட்டியபின் மனைவி சொன்னதைச் செய்துவிட்டு ஊரார் முன் தன் கெத்தைக் காட்டுவதும், இராஜநாகத்தைப் பிடித்துத் தூக்கி அடித்துவிட்டு ஊரார் முன் வீரனாய் உயர்ந்து நிற்கும் போது முகத்தில் பூரிப்பைக் காட்டுவதும், அதேபோல் இறுதிக் காட்சியில் பத்மபிரியாவின் தோளில் கைபோட்டு கெத்தாய் மூசை முறுக்கி நடப்பதும் என பிஜூ கலக்கல்.
கணவனுக்குப் பிடித்த மனைவியாய், அவனை விட்டுக் கொடுக்காத மனைவியாய், பாம்பை அடித்துவிட்டு நடக்கும் கணவனைப் பெருமிதச் சிரிப்புடன் ரசிக்கும் மனைவியாக, அவனின் கோபத்துக்கு அணை போட வீட்டை விட்டு வெளியேறும் மனைவியாக, இறுதியில் கணவன் செய்ய வேண்டியதை தான் செய்யும் மனைவியாக, கர்ப்பத்தைச் சுமக்கும் பெண்ணுக்கு திருமணம் நடக்க வேண்டும் என நினைக்கும் ஒரு தோழியாய், தாயாய் பத்மபிரியா அசத்தலாய் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
ரோஷன் மேத்யூ சொன்னதைச் செய்திருக்கிறார். அவரின் நண்பர்களாக வருபவர்கள் ரசிக்கவும், சிரிக்கவும் வைத்திருக்கிறார்கள். நிமிஷா இந்தப் படத்தில் முகத்தில் புன்னகை தாங்கி நடித்திருக்கிறார். எப்பவும் போல் அவரின் நடிப்பு சிறப்பு.
இந்துகோபாலனின் கதைக்கு ராஜேஷ் பின்னடன் திரைக்கதை எழுத, ஸ்ரீஜித் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை E4 எண்டர்டெயின்மெண்ட், நியூ சூர்யா பிலிம்ஸ், ஓபன் புக் புரோடெக்ஷனுக்காக மகேஷ் ஆர்.மேத்தா, சுனில்.ஏ.கே, மற்றும் சி.வி.சாரதி இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
மலையாளப் படங்களுக்கே உரித்தான ஆரம்பக் காட்சிகளை மெல்லக் கடந்து விட்டால் பிஜூ பாம்பைப் பிடிக்கும் இடத்தில் இருந்து படம் உங்களைப் பிடித்துக் கொள்ளும்.
பார்த்து ரசிக்கலாம் வகைப் படம்தான்.
தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-பரிவை சே.குமார்.
3 எண்ணங்கள்:
தமிழில் மொழிமாற்றம் என்றால் நல்லது... பார்க்கிறோம்...
அண்ணா...
வணக்கம்.
இப்போ எல்லாப் படமும் தமிழில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது. நா தான் காசு கொடு படமும் தமிழில் இருக்கு.
நல்ல விமர்சனம்; ரசித்து பார்த்த படம்
கருத்துரையிடுக