மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 5 ஜூன், 2021

புதிய நாவலிருந்து - புவனாவும் கண்ணனும் கவர்கிறார்களா..?

ழுதி முடித்திருக்கும் நாவலில் இருந்து ஒரு பகுதி உங்கள் கருத்துக்காக... இதற்கு முன்னும் பின்னும் கதை நிறைவாக நகர்ந்திருப்பதாய் நான் உணர்ந்தேன்... இந்தப்பகுதி உங்களுக்கு அதை உணர்த்தலாம் என்று நினைக்கிறேன். வேரும் விழுதுகளும் ஒரு வாழ்வைப் பேசியதைப் போல் இதுவும் வாழ்க்கையை, குடும்பப் பிரிவை, அதன் வலியைப் பேசியிருக்கிறது. இறைவன் நினைத்தால், சகோதரர் தசரதன் மனசு வைத்தால் இதுவும் நாவலாக விரைவில் மலரும். நன்றி.

“ஏம்ப்பா...  எல்லாரும் வந்தாச்சா... ஏறு வெயிலு... தீபத்தக் கொண்டேயி ஊரணியில விட்டுட்டு வந்து அபஷேகம் பண்ணி சாமி கும்பிட்டு காலாஞ்சியெல்லாம் பிரிச்சிக் கொடுக்கணும்... வேலயிருக்கு... இப்பவே மணி பத்தாகப் போகுது...” கத்தினார் நாராயணன்.

“மணி அடிச்சாச்சு... அரமணி நேரமா மைக்குல வேற சொல்லியாச்சு... எல்லாரும் வந்திருப்பாக..” என்றான் சேகர்.

“ஆமா... வீட்டுல என்ன விருந்து கிருந்து வச்சிக்கிட்டு இருக்காகளா... இங்க வந்து சாப்பிட்டு சாமி கும்பிட ரெடியாயிட்டாக... ஒரு ஊருத் திருவிழான்னா பக்கத்து வீட்டு ஆளு வந்தாச்சான்னு பாக்கச் சொல்லலாம்... இது நாலூரு... எங்கிட்டுத் தேட, நீங்க ஆரம்பிங்க...” என்றார் அழகர்சாமி.

சாமியாடிகள் ஈரத்துணியுடன் நிற்க, தீபம் பார்க்கப்பட்டு... அவர்கள் சாமியாட, கருப்பருக்கு உடுப்பு மாட்டப்பட, நீண்ட நேர சாமியாட்டம் நடந்தது.

“ஏம்ப்பா... வெயிலுதான் நல்லாப் போடுதுல்ல... அப்புறம் ஏந்தப்பு தொப்புத் தொப்புங்குது... வாட்டலயா... நல்லா அடிங்கப்பா... அடிக்கிற அடியில கருப்பன் எகிறி ஆட வேண்டாமா...?” கத்தினான் கோவிந்தன்.

தீபம் பார்த்து இராமநாதன் ஆடியவர் கையில் தீபம் கொடுக்கப்பட, ஒவ்வொரு சாமிக்கும் தனித்தனியாக வட்டக்குடை பிடிக்கப்பட்டது... கோவிலை மூன்று முறை சுற்றினார்கள். ஒவ்வொரு முறையும் பெண்கள் எல்லாச் சாமிகளிடமும் கும்பிட்டு விழுந்து கண்ணீர் மல்க நின்று எனக்குச் சொல்லிட்டுப் போ எனக் கதறிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

‘எத்தன தடவ கேப்பாக...’

‘சொன்னத்ததானே மறுக்கா மறுக்காச் சொல்லும்....’

'ராத்திரிக் கேட்டாக... இப்பக் கேக்குறாக... நல்லாத்தேன்...’

‘பொம்பளயமாரி செல ஆம்பளயலுமுல்ல கேக்குறாக...’

‘நம்மூரு மேல வீட்டு ராமனப் பாரு... முக்கி முக்கிக் கேக்குறாரு... இங்க மட்டுமில்ல... தண்ணியில வெளக்க விடப்போகயிலயும் போயிக் கேப்பாரு பாரு....’

‘அட சாமி வர்றது ஒரு நிமிசந்தாம்ப்பா... அப்புறமெல்லாம் தப்புக்கு ஆடுறதுதான்... அவங்களப் போட்டு பாடாப்படுத்தினா எப்புடி...’

‘நாலூரு சனத்துக்கும் சொல்லித்தான் ஊரணிக்குப் போகணுமின்னா நாளக்கித்தான் போவணும்...’

‘என்னத்தக் கேட்டு என்ன பண்ண.... அவனவன் வாழ்க்க அதனதன் போக்குலதான்...’

‘கருப்பன் சொன்னான்னு மோட்டு வளயப் பாத்துக்கிட்டிருந்தா சோறு வந்திருமா... உழச்சாத்தான் கருப்பன் சொன்னதும் நடக்கும்...’

‘விடமாட்டாக... வெயிலுப் போடுற போட்டுல பூமி கொதிக்கிது... காலூன்ன முடியல... அட வெரசா சாமியளக் கூட்டிட்டுப் போங்கப்பா...’

ஆளாளுக்குப் பேசினார்கள்...

'எனக்குச் சொல்லு...'

'சொல்லிட்டுத்தான் போகணும்...'

'ஆய்... என்ன நெனச்சிருக்கே....'

'எம்புள்ளக்கி ஒரு நல்ல வழியக் காட்டு...'

என்ற குரல்கள் கேட்டுக் கொண்டுதான் இருந்தன.

“புவனா எங்கிட்டு வாரான்னு பாரு...”

“நீ அடங்கல... இந்தக் கூட்டத்துல அவள எங்கிட்டுப் பாக்க...”

“அவ வீட்டுக்கு வரக்கூடாதுன்னு சொன்னுச்சு மல்லிகா... ஆனா கோயிலுக்கு வந்திருக்கா... அதெப்படி...”

“அவ வீட்டுக்கு வரக்கூடாதுன்னு அவளுக்கும் அவ அம்மாவுக்கும்தான் தெரியும்... ஊருக்கேவா நோட்டீஸ் அடிச்சி ஒட்டுனாக... என்னமோ கட்டுன புருஷன் மாதிரி எல்லாத்தயும் தெரிஞ்சி வச்சிருக்கே...”

“ஆமால்ல... ராத்திரி காத்துக்கருப்பு புடிச்சிக்கும்ன்னு வரவேண்டான்னு சொல்லியிருப்பாக... இப்ப காத்துக்கருப்பு தூங்கப் போயிருக்குமுல்ல...” சிரித்தான்.

“ஜோக்கு... ம்... மத்தியான உச்சி உருமத்துலதான் நிக்கக் கூடாது... அதுபோக இப்பல்லாம் பொண்ணுங்க அந்தநாள்ல வீட்டுலயா உக்காந்திருக்குக... படிக்க, வேலக்கின்னு போய்க்கிட்டுத்தான் இருக்குக... என்ன அந்த நாள்ல வயித்துவலி, உடல் சோர்வுன்னு மனசளவுல பாதிக்கப்பட்டிருக்குங்க... இப்பல்லாம் வெளிய யாரும் சொல்றதில்ல...”

“ம்... அப்ப மரத்தடியிலதான் நிப்பா... நீ சுத்தி வா... நா வாறேன்...”

"அடேய்... ஊரே இங்க நிக்கும் போது நீ மட்டும் அங்கிட்டுப் போனா வேற வெனயே வேண்டாம்... பேசாம நில்லு... அது ஆத்துத் தண்ணியில்ல அவனவன் அள்ளிக் குடிக்க... ஊத்துத் தண்ணிதான்... அது உனக்குன்னு எழுதி வச்சாச்சின்னா மாறவா போகுது...”

குணா சொன்னபோது கருப்பர் யாருக்கோ ‘மாறாதப்பா... மாறாது... என்ன நம்பு’ என்றார்.

கண்ணன் சிரித்தான்.

“என்ன சிரிக்கிறே... இப்புடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமாக்கிடுவானுங்க... இப்ப ஆடுற கருப்பன்... இன்னக்கி வெரத்தத்த முடிச்சிட்டு சாயந்தரம் ஆடுவாரு பாரு... அப்பப் போயிக் கேளு... இன்னமும் சொல்லுவாரு...” 

“நீ எப்பவும் கேலிதான் பண்ணுவே... சாமியாடுறப்போ சரியா இருக்காருல்ல அதப்பாரு...”

கூட்டம் ஒரு வழியா ஊரணிக்கு போனது.

‘எல்லாரும் எறங்காதீகப்பா... சகதியா இருக்கும் ரெண்டு பேரு ஏறங்கி வெளக்குத் திரியவும் எண்ணயவும் விட்டுட்டு வெளக்க நனச்சிட்டு வாங்க... ரெண்டு கொடத்துல தண்ணி எடுங்க... மயக்கமான சாமிகள நெலுல்ல உக்கார வச்சி... ஆசுவாசப்படுத்துங்க... காத்த விட்டு நில்லுங்கப்பா... மோரு கலக்கிக் கொண்டாந்தியல்ல... அதக் குடிக்கக் கொடுங்க...’

எல்லாம் முடிந்து கோவிலுக்குத் திரும்பும் போது மல்லிகாவும் புவனாவும் மரத்தடியில் பேசிக்கிட்டு நின்றார்கள்.

வர்கள் அருகில் தண்ணீர் இருப்பது அவனுக்கு வசதியாய்ப் போனது. தண்ணீர் குடிப்பது போல் அங்கு போனான்.

‘கோயில்ல போயி அபிஷேகம் பாரு... இங்க எதுக்கு வந்தே..? தண்ணி குடிக்க வந்த மாரி தெரியலயே...”

“லூசு... வேற எதுக்கு வருவாக...? இங்க எந்த அழகி நிக்கிறா பாக்க” நக்கலாய்ச் சொன்னான்.

தண்ணியைப் பிடித்துக் கொண்டு அண்ணாந்து குடித்தபடி புவனாவைப் பார்த்தான்.... அவளும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

முகத்தைக் கீழே இறக்கி, அவளைப் பார்த்துக் கண் அடித்தான்.

“ச்சீய்...” என்றாள்.

“என்னடி நடக்குது இங்க...”

“ஒண்ணுமில்லே...”

“சரித்தான்... என்னய மடச்சி ஆக்கிட்டு நீங்க மத்தளம் கொட்டுறியளா...?”

“அதெல்லாம் இல்ல... சும்மா...” புவனா சிரித்தாள்...

கண்ணன் பருத்திவீரன் கார்த்தி போல வேட்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு கெத்தாக நடந்தான்.

கோவிலில் தீபம் பார்ப்பதற்கான மணி அடித்தார்கள்.

-'பரிவை' சே.குமார்

5 எண்ணங்கள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இங்கே பகிர்ந்து கொண்ட பகுதி நன்று. நூலாக வெளிவர வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அழகான நடை...

ஸ்ரீராம். சொன்னது…

வழக்கம்போல அருமை.

'பரிவை' சே.குமார் சொன்னது…

@வெங்கட் அண்ணா...
தங்கள் கருத்துக்கு நன்றி

@தனபாலன் அண்ணா...
தங்கள் கருத்துக்கு நன்றி


@ஸ்ரீராம் அண்ணா...
தங்கள் கருத்துக்கு நன்றி

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நல்லாருக்கு குமார் வழக்கம் போல. நூலுக்கு வாழ்த்துகள்..

கீதா