மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 11 ஜூன், 2021

சினிமா : மலையாளமும் தமிழும்

மீபமாய் சில மலையாளப் படங்கள் பார்த்தேன். தமிழில் தற்போது நல்ல படங்கள் வெளியாகவில்லை, காரணம் தியேட்டரில் வெளியிட்டு ஆயிரம் ஐநூறென டிக்கெட்டுக்கு காசுபார்க்காமல் படம் வெளியிடும் எண்ணம் நம் தமிழர்களுக்கு (கவனிக்க : 'நாம்' இல்லை) எப்போதும் இருப்பதில்லை. கொரோனா உச்சத்தில் கூட தியேட்டரில் நூறு சதவிகித இருக்கைக்கு அனுமதி கொடுங்கள் என அரசிடம் கேட்டவர்களைத் தலையில் தூக்கி வைத்து ஆடும் தளபதிகள்தானே நாம்.

எல்லாரும் ஆஹா ஓஹோவெனப் பாராட்டிய கர்ணன் படத்தை நான் இதுவரை பார்க்கவில்லை. ஏனோ இப்படியான சாதியைத் தூக்கி அலைந்து, அந்த சாதி சார்ந்த மக்களை படிக்காதே, என்றோ நடந்ததற்கு இப்போது அடி, ரவுடியாகு எனச் சொல்லும் படங்களைப் பார்க்கும் எண்ணமும் இல்லை. 

இவர்களிடமிருந்து ஒதுங்கிச் சற்று ஆசுவாசமாகப் பார்க்க மலையாளத்தில் பல நல்ல படங்களை இணையத்தில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அங்கே படத்தைப் படமாகப் பார்த்துவிட்டு கடந்து சென்று விடுகிறார்கள். நாயர், நம்பூதிரி, கம்யூனிஸ்ட், கிறிஸ்துவன், முஸ்லீம், இந்து என எதை வைத்துப் படமெடுத்தாலும் அதை ஒரு சினிமா என்றளவுடன் நிறுத்திக் கடந்து சென்று விடுகிறார்கள் மலையாளிகள். இங்கே இன்னமும் கொடி பிடித்தலும், போராட்டங்களும், சாதியச் சண்டைகளும் எனக் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடி சினிமாதான் வாழ்க்கை என அதற்குள்ளேயே வட்டமடித்துக் கொண்டிருக்கிறது... இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் மலையாளப் படத்துக்கும் நாமே கொடி பிடித்துக் கொண்டிருப்பதுதான்.


பிரியாணி போன்ற படங்கள் தமிழில் வருவதற்கான வாய்ப்பு சுத்தமாக இல்லை. இங்கு அப்படிப் படம் எடுத்தால் - இந்தியன் கிச்சனை எடுத்தால் எல்லாரும் ஏற்றுக் கொள்வோம் என்பது வேறு விஷயம் - பிரியாணி என்னும் போது மிகப்பெரிய பிரச்சினையைக் கொண்டு வருவோம். இறுதிக்காட்சியில் அப்படியான பிரியாணி செய்திருக்கத் தேவையில்லை என்றாலும் அவள் அனுபவித்த கஷ்டங்களின் காரணமாகவே அப்படி ஒரு பிரியாணியை எல்லாருக்கும் விருந்தாக்குகிறாள். 

படத்தைக் குடும்பத்துடன் பார்க்க முடியாது, ஆரம்பத்திலும் இடையிலும் இறுதியில் பாலியல் காட்சிகள் உண்டு. இறுதிக் காட்சிகளில் விரும்பிச் சாப்பிடும் பிரியாணியில் சேர்க்கப்படும் பதார்த்தங்களைப் பார்த்து வாந்தியும் வரலாம் என்றாலும் இப்படியும் நடக்கிறது என்பதைச் சொல்லவும், அதை ஏற்றுக் கொண்டு படம் பார்த்து விட்டு அதை மறந்து அடுத்த வேலைக்குச் செல்லவும் மலையாளத்தான்களால் மட்டுமே முடியும் என்று அடித்துச் சொல்லலாம்.

பிரியாணி படம் குறித்து நண்பர் ஒருவர் சொல்லும் போது அதில் வரும் சில காட்சிகள் தப்பாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்றார். அதை ஏற்றுக் கொள்ளலாம் சினிமாவுக்காக சில விஷயங்கள் - அவர் சொன்னதைப் போல் தப்பாகக் காட்டப்பட்டிருக்கலாம் என்றாலும் இது போன்ற சிக்கல்கள் எல்லா இடத்திலும் இருக்கிறது எனக் காட்டியிருப்பது வரவேற்கத்தக்கதுதானே. உடனே மற்றொரு நண்பர் எப்படி இப்படியான படத்துக்கு எல்லாம் அனுமதி கொடுக்கிறார்கள் என்று வருந்தினார். இது ஏற்புடையதல்ல... அப்ப மற்ற மதங்களைச் சாதிகளை வைத்து எடுக்கும் போது அனுமதி கொடுப்பதை ஆதரிக்கத்தானே செய்கிறோம். நம் மதம், நம் இனம் என்னும் போது மட்டும் எப்படி இதை அனுமதிக்கலாம் என்ற சிந்தனை வருவதே தவறு.

டிரான்ஸ் என்னும் படம் வந்தபோது மதத்தின் பேரால் மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்றும் இந்தியன் கிச்சன் வந்தபோது மலைக்கு மாலை போட்டவனுக்கு கொடுத்தா பார் கழிவுத் தண்ணியை என்றும் குதித்துப் பாராட்டியவன் மலையாளி அல்ல, அவன் எப்பவும் போல படத்தைப் படமாய் பார்த்துவிட்டு போய்விட்டான். கொண்டாடியதும், விழா எடுத்ததும் தமிழர்களாகிய நாம்தான், அப்படியிருந்தும் பிரியாணியைப் பற்றி இங்கே வாய் திறக்கவில்லையே. இதில்தான் இருக்கிறது நமது மதமும், சாதியும்... இதெல்லாம் எங்கே சார் இருக்கு என்பவர்கள்... கூர்ந்து கவனியுங்கள் இதெல்லாம் எங்கே இருக்கிறது என்பது தெரியும்.

பிரியாணி பல விருதுகளைப் பெற்ற படம் என்றாலும் இங்கு பேசப்படவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.


கோ கோ விளையாட்டை 'மய்ய'மாக வைத்து வந்திருக்கும் படம்தான் கோ கோ... விளையாட்டுக்களை வைத்துப் படமெடுத்தாலே விளையாடும் அணிகளில் ஒரு வில்லன் முளைத்து நன்றாக விளையாடும் அணிக்குள் தன் ஆளுமையை வைத்து ஆட்டக் காணச் செய்து, அரையிறுதியில் விழ வைத்தோ, இறுதியின் ஆரம்பக் கட்டத்தில் நொறுக்கியோ வெல்ல நினைக்கும் போது பயிற்சியாளனாய் வரும் ஹூரோ அதை உடைத்து வெற்றி கொள்வதாய் காட்டப்படும். இதுதான் ஆண்டாண்டு கால விளையாட்டுச் சினிமாவின் சூத்திரம்.

நல்லவேளை அப்படி ஒரு சூத்திரத்துக்குள் போகாமல் தன் கனவுதான் நிறைவேறவில்லை நான் உருவாக்கும் பிள்ளைகளாவது இந்திய அணியில் விளையாட வேண்டும் என்று நினைக்கும் உடற்கல்வி ஆசிரியை, தான் புதிதாகச் சேரும் பள்ளி மாணவிகளை அப்படி உருவாக்க நினைக்கிறார்... அதன்படி ஆரம்ப எதிர்ப்புக்களை மீறிச் சாதிக்கவும் செய்கிறார். அவளின் அப்பாவால் நிகழ்ந்த ஒரு பேருந்து விபத்தில் அம்மாவைப் பறி கொடுத்த பெண்தான் அந்த அணியில் முக்கியமானவள். அவளுக்கு அம்மா விபத்துக்கும் ஆசிரியைக்கும் உள்ள தொடர்பு தெரிய வர, அவள் அணியில் இருந்து விலகிச் செல்கிறாள். அதன்பின் எப்படி வென்றார்கள் என்பதுதான் கதை.

படம் நல்லாப் போகுது என்றாலும் பள்ளியில் அந்தப் பனிரெண்டு பேரைத்தவிர வேறு யாருமே இல்லாதது போல் காட்டுவது... பனிரெண்டு பேரில் பத்துப் பேர் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள் அது முதல் கோணல். பள்ளி முதல்வர் ஏன் ஒரு பெண்ணுக்கு மட்டும் அதிகமாகச் சிபாரிசு செய்கிறார். எதற்காக அவர் அப்படிச் செய்கிறார் என்பது விரிவாக காட்டப்படவில்லை என்பது இரண்டாவது கோணல். அணியில் சிறப்பாக விளையாடும் பெண் பள்ளி உதவியாளரிடம் நெருக்கமாய்ப் பழகுவது போல் காட்டுவது தேவையா என்பது மூன்றாவது கோணல்.இப்படி நிறையக் கோணல்கள் இருந்தாலும் உயிரைக் கொடுத்து விளையாடும் பிள்ளைகளைப் பார்க்கும் போது படமல்ல உண்மை நிகழ்வு இது என்ற உணர்வு ஏற்படும். சிலவற்றைக் கண்டுக்காமல் பார்த்தால் படம் நல்ல படம்தான். எனக்குப் பிடித்திருந்தது.



ஆபரேசன் ஜாவான்னு ஒரு படம்... காவல்துறையின் சைபர் செல்லின் புலனாய்வின் பின்னே பயணிக்கும் கதை, ஆரம்பத்தில் பிரேமம் படத்தை தமிழ் ராக்கர்ஸில் வெளியான அன்றே வெளியிட்டதையும் அதன் பின்னான காரணங்களையும் அம்பது கோடி வசூல் கிளப்பில் இருக்கும் திரிஷ்யத்தை முந்தி விடக்கூடாதென்பதால்தான் இப்படி நடந்தது இதற்காக பல கோடிகள் கை மாறியது சென்னை பிரியதர்ஷன் அலுவலகத்தில் என்றும் தங்கள் ஆய்வுக்கான தலைப்பாக இதை எடுத்திருக்கும் இரு இளைஞர்கள் சொல்ல, அதன்படி காய் நகர்த்தி கேஸை முடிக்கிறார்கள்.

இதன் பின்னான கதையில் நிறைய வழக்குகள், அந்த இளைஞர்களும் வேலையில்லாதவர்கள் என்பதால் தற்காலிகமாக இந்தக் குழுவுடன் இணைகிறார்கள். விருப்பப்பட்டு வேலை பார்க்கிறார்கள். ஒவ்வொரு கேஸிலும் அவர்களின் செயல்பாடே பிரதானமாக இருக்கிறது. இப்படியிருக்க அதில் தொடர்ந்தார்களா... இல்லையா என்பதைச் சொல்லும் படம்... ஆரம்பம் முதல் விறுவிறுப்பாய்.

திர்ஷ்யம், பிரியதர்ஷன் என பிரேமம் வந்த போது பேச்சடிபட்டிருக்கலாம் அதைச் சினிமாவிலும் மாற்றம் செய்யாமல் சொல்லியிருக்கிறார்கள். நாமென்றால் கட்சிக்குக் கூட படத்தில் புதிதாய்த்தான் பெயர் வைப்போம்... அவர்கள் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், உம்மன்சாண்டி என எல்லாமே அப்படியேதான் சொல்வார்கள் என்பதால் இதுவும் பெரிதாகத் தெரியவில்லை. நல்ல படம், பார்க்கலாம். விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை.



த லாஸ்ட் டூ டேய்ஸ் என்றொரு படம்... காணாமல் போன மூன்று இளைஞர்களைத் தேடுவதுதான் படம். அதில் ஒருவன் அரசியல்வாதி வகையறா... அவர்கள் என்ன ஆனார்கள் என விசாரிக்க வரும் நாயகன், அவருக்கு உதவியாய்  ஒரு காவலர். தேடுதலின் போது பல விஷயங்கள் வெளிவர, இறுதியில் பள்ளியை இடிக்கக் கூடாதெனப் போராட்டத்தைக் கையில் எடுக்கும் பள்ளி மாணவிகளின் கொலையும், பாலியலும் எனக் கதை பயணிக்கிறது. 

காணாமல் போன மூவரும் கொல்லப்பட்டார்கள் என்பதை அறிந்து யார் அதைச் செய்தார்கள்..? எதற்காகச் செய்தார்கள் என்று நாயகன் கண்டடைகிறார். அதிக ஆட்கள் இல்லாமல் காணாமல் படத்தை விறுவிறுப்பாகக் கொண்டு போய் இருக்கிறார்கள். கண்டிப்பாக பார்க்கலாம் என்ற வகையிலான படம்தான். 

-'பரிவை' சே.குமார்.

5 எண்ணங்கள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அவசியம் பார்க்க வேண்டியப் படங்களைப் பட்டியலிட்டு, விரிவாக பகிர்ந்துள்ளீர்கள்
அவசியம் பார்ப்பேன்
நன்றி நண்பதேர

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஒரு மாதமாக Amazon Prime-ல் சில படங்களை வீட்டில் பார்க்கிறார்கள்... அவ்வப்போது நானும்...

ஸ்ரீராம். சொன்னது…

படிக்க சுவாரஸ்யமாய் இருக்கிறது.  பார்க்கும் பொறுமை இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பார்த்ததில் பிடித்த சினிமா படங்கள் குறித்த தகவல்களை இங்கேயும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. தில்லி திரும்பியதும் பார்க்க வேண்டும் என நினைவில் வைத்துக் கொண்டேன்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

த லாஸ்ட் டூ டேய்ஸ், ஆப்பரேஷன் ஜாவா இரண்டும் நோட் செய்து கொண்டேன் குமார். எப்ப பாக்க வாய்ப்பு கிடைக்கும்னு தெரியலை.

கீதா