புத்தகம் வெளிவருவது மகிழ்வென்றால் அது குறித்த நிறை குறைகளை மறைக்காமல் சொல்லும் விமர்சனம் அதைவிட மகிழ்வைக் கொடுக்கும். எதிர்சேவை நல்லதொரு வரவேற்பைப் பெற்ற நிலையில், மீண்டும் கலக்கல் ட்ரீம்ஸ் தசரதன் முயற்சியில் 'வேரும் விழுதுகளும்' நாவல் வெளிவந்த பின், கிராமத்துக் கதை, வாழ்க்கையைப் பேசும் கதை, இப்போதெல்லாம் எழுத்தாளர்கள் வித்தியாசமான கதைக்களத்தில் பயணிக்கும் போது நாம் சாமானியர்களின் பின்னால் பயணிக்கிறோம். இதையும் ஒருவர் நம்பிக்கையுடன் புத்தகமாக்குகிறாரே என நினைத்துப் பயம் எனக்குள் இருக்கத்தான் செய்தது.
என்னைவிட தசதரனுக்கு அதீத நம்பிக்கை இருந்தது... அவர்தான் முடிவு செய்தார். அட்டைப்படம் கூட அவர் அனுப்பியதை அப்படியே ஓகே பண்ணியதுதான். எதிர்சேவையில் செய்த சின்னச் சின்ன மாற்றங்களைக் கூட இதில் செய்யவில்லை.
அப்போது மற்றொரு பிரச்சினையில் மனம் சிக்கியிருந்த நேரம்... வீழ்ந்தால் எழ இயலாது என்றாலும் என்னை விழாமல் தாங்கிப் பிடிக்க என் மனைவியின் கரம் இருந்தது. அவர் இல்லையேல் சிக்கல்களுக்குள் இன்னும் நீந்திக் கொண்டுதான் இருந்திருப்பேன். கஷ்டப்பட்டு இன்னும் கடினமான சூழல் என்றாலும் என்னைக் கரைக்கு இழுத்து விட்டிருக்கிறார்... மீள்வோம் என்ற நம்பிக்கையுடன் பயணிக்கிறோம். அந்தப் பிரச்சினையின் பின்னே நகர்ந்ததால் எதிர்சேவைக்கு இருந்த எதிர்பார்ப்பு ஏனோ வேரும் விழுதுகளுக்கும் இல்லை.
கலையாத கனவுகளைப் புத்தகமாக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள்ளே பரந்து கிடக்கும் வேளையில்தான் அதற்குப் பின் எழுதிய வேரும் விழுதுகளும் முதல் நாவலாய் வந்திருக்கிறது. வரட்டும் காலம் கலையாத கனவுகளையும் நனவாக்கும்.
சொல்ல வந்ததை விட்டுட்டேன் பாருங்க...
வேரும் விழுதுகளுக்கும் முதல் விமர்சனம் வந்திருக்கிறது. மனதில் தோன்றியதை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் தோழி சுபஸ்ரீ.
அவர் செவ்வாய்க்கிழமை காலையில் போட்ட பகிர்வு இப்படித்தான் இருந்தது...
குமார்...
வேரும் விழுதுகளும் நாவலை வாங்கிவந்த நூலகரிடம் இருந்து நேற்று வாங்கி வந்து வாசிக்க ஆரம்பிச்சிட்டேன். பாதி வரை முடிச்சிட்டேன்... இதுவரை ரொம்ப நல்லாயிருக்கு... அடுத்த பாதி படிக்க நான் என் வேலைகளை முடிச்சிட்டு உக்காரணும்... முழுவதும் வாசிச்சிட்டு என் கருத்தைச் சொல்றேன்.
அதன் பின் ஒரு மணி நேரத்தில் அதே பதிவின் கருத்துப் பகுதியில்...
"படிச்சிட்டேன்... ரொம்ப நல்லாயிருக்கு... கிராமத்துப் பேச்சு வழக்கு அருமையா வந்திருக்கு...
முதல் அத்தியாயத்தின் இறுதிப் பாராவை அதன் அடுத்த அத்தியாத்தின் ஆரம்பத்தில் சொல்வது வாசிப்பின் வேகத்தைக் குறைப்பதாய் இருக்கு... இது எதுவும் யுக்தியா..? அப்படி இல்லை என்றால் அடுத்த நாவலில் இதைக் கொஞ்சம் எடுத்துடுங்க...
முதல் நாவல் ரொம்பத் தரமாயிருக்கு... நான் இந்துமதி, வித்யா சுப்பிரமணியம், ஹமீதா, ரம்யாராஜன் , பொற்கொடி நாவலெல்லாம் எடுத்துப் படிக்கும் போது கீழே வைக்க மனசு வராது... அது மாதிரி இருந்துச்சு... நல்ல முயற்சி... வாழ்த்துகள்.
இதைப் போல் இன்னும் எழுத வாழ்த்துகள்.
உங்கள் நாவல் திரைக்கதைக்கு ஏற்ற மாதிரியான வசனங்களுடன் இருக்கு...
ஆமா... கதை நடக்கும் களம் பற்றி ஒன்றுமே சொல்லலையே... ஊரைப்பற்றி... கொஞ்சம் சொல்லலாம்... அதோட ஊர்ப் பேரும் சொல்லலாம்தானே...
அபி கதாபாத்திரம் உங்க மனைவியை மனதில் வைத்து எழுதப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். வாழ்க.
இன்னும் நிறைய எழுதுங்கள்.
எங்க அம்மா, அண்ணி படிச்சதும் நூலகத்துக்கு கொடுக்கிறேன்... நன்றி.
அதன் பின் அன்றிரவே அவர் போட்ட கருத்து கீழே...
என் அண்ணி உக்கார்ந்து ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டார்கள். ரொம்ப நல்லாயிருக்குன்னு சொன்னாங்க... வாழ்த்துகள்.
2 எண்ணங்கள்:
கிராமத்து பேச்சு வழக்கு அருமையா வந்திருக்கு என்கிறார். கேட்கணுமா? நீங்கள் அதில் ஸ்பெஷலிஸ்ட் ஆச்சே... வாழ்த்துகள் குமார்.
அனைவரின் பாராட்டும் மகிழ்ச்சியைத் தந்தது... வாழ்த்துகள் குமார்...
கருத்துரையிடுக