மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 15 ஏப்ரல், 2019

யாரோ எழுதிய கதை - புத்தக விமர்சனம்


தேவா சுப்பையா...

இந்தப் பெயரை வலைப்பதிவரெல்லாம் மறந்திருக்க முடியாது. Warrior என்னும் தளத்தில் மிகவும் ரசனையான படைப்புக்களைப் பகிர்ந்து வந்தவர்தான் இவர். இப்போது தனது இயங்கு தளத்தை முகநூலுக்கு மாற்றிக் கொண்டு காதல் சொட்டும் வரிகளை எழுதிக் கொண்டிருக்கிறார். 

தேவா அண்ணனுடன் கிட்டத்தட்ட பத்தாண்டு சிநேகம்... படைப்புக்களின் எழுத்து நடை ஒரு மாவட்டத்தின் சுவாசமாக இருப்பதால் ஒட்டிக் கொண்ட உறவு இது. இன்னும் என்பதைவிட இறுதிவரை தொடரும் உறவாகத் தொடர வேண்டும். தனது தளத்தில் எழுதிய காதலே சுவாசமாக என்னும் தொடர் கட்டுரைகளையும் மற்றும் சில சிறுகதைகளையும் 'சுவாசமே காதலாக' என்ற காதல் கட்டுரைகளாகவும் 'யாரோ எழுதிய கதை' என்ற சிறுகதைத் தொகுப்பாகவும் வெளியிட்டிருக்கிறார்.

சுவாசமே காதலாக முழுக்க முழுக்க காதல் வடியும் கட்டுரைகள்... வார்த்தைகள் எல்லாமே தேனாய் உருகி காதலாய் ஓடுபவை... அதைக் கொண்டாட இங்கு ஒரு கூட்டமே இருக்கிறது. 

கொண்டப்பட வேண்டும் என நான் நினைக்கும் கிராமத்து எழுத்து... அதிலும் குறிப்பாக மண்ணின் மணத்துடன் எழுதும் எழுத்து... இன்னும் குறிப்பாக சிவகங்கை மண்ணின் மாந்தர்களின் பேச்சு வழக்கு என சிறுகதைகள் முன்பே வாசித்திருந்த போதிலும் புத்தகமாக என்னை எடுத்து வாசி என்றது.

தேவாவின் எழுத்து இலக்கணமாய்... இலக்கியமாய்... ரசனையாய்... எப்போதும் நம்மை  ஈர்த்து உள் வாங்கிக் கொள்ளக் கூடியது. அப்படியிருக்க நம்மை வாஞ்சையுடன் அணைத்துக் கொள்ளும் நடையுடனும் சிந்திக்க வைக்கும் வரிகளுடனும் கிராமத்து வெள்ளந்தி மனிதர்களுடனும்  இன்னும் நெருக்கமாய் வந்திருக்கிறது இச் சிறுகதைத் தொகுப்பு.

இந்தத் தொகுப்பில் மொத்தம் 11 கதைகள்... இதில் 'யாரோ எழுதிய கதை', 'முகமற்றவனின் மொழி' எனச் சில கதைகள் என்னை விட்டு கொஞ்சம் தள்ளியே நின்றாலும் 'சில்லறைப் பாக்கி', 'செவபாக்கியம் ஆயா', 'பேய் புடிச்சிருச்சு', 'தேனு' என பல கதைகள் நமக்கு மிகவும் நெருக்கமாய்... குறிப்பாக இக்கதைகள் என்னை ஈர்க்கக் காரணம் அதில் கையாளப்பட்டிருக்கும் கிராமத்து மொழி.

கிராமத்து வாழ்க்கையை... அவர்களின் எதார்த்த நிலமையை... பூசி மெழுகிச் சொல்லாமல் அதன் போக்கில்... எப்படி இருக்கிறதோ... அப்படிச் சொல்லும் போது பெரும்பாலும் சோகமே தூக்கலாகத் தெரியும்... அதுதான் உண்மையும் எதார்த்தமும்... என்ன சோகமாய்... அழுகாச்சி கதை எழுதுறேன்னு என்னைப் பலர் கேட்டதுண்டு... வாழ்க்கைக் கதைகள் எப்போதும் ஜிகினா பூசிக் கொண்டு நிற்பதில்லை... அவை வாழ்வின் வலிகளைச் சுமந்து கொண்டுதான் நிற்கும் என்பதே உண்மை.

அப்படியான கதைகள் தான் செவபாக்கியம் ஆயாவும் தேனுவும்... ஊருக்கு ஒரு அடாவடி பண்ணுறவன் இருக்கிற மாதிரி... ஆம்பளையாட்டாம் எல்லாத்துலயும் நாந்தான்னு முதல்ல நிக்கிற பொம்பள ஒண்ணு இருக்கும்.... எதுக்கும் அஞ்சாது... ஏர் ஓட்டும்... நாற்றுப்பாவும்... பறிக்கும்... உரம் போடும்... கட்டடிக்கும்... பொணையல் விடும்...  நெல்லுத் தூத்தும்...எரவா மரங்கட்டி தண்ணி இறைக்கும்... நல்லது கெட்டதுக்கு முன்னால நிக்கும்... சண்டையின்னு வந்துட்டா 'அடியே அவுசாரி முண்ட'ன்னு சேலையைத் தூக்கித் சொருகிக்கிட்டு அடிக்க ஓடும்... அப்படி ஒருத்தியான செவபாக்கியம்... ஒரு குடும்ப சாம்ராஜ்யத்தக் கட்டி ஆண்ட செவபாக்கியம்... சாகக் கிடக்கும் போது வீட்டை ஒட்டித் தனியே வாரமிறக்கி... அதில் கட்டப்பட்ட சிமிண்ட் திண்டில் கிடக்கும் போது கூட , நடைபொடையா இருக்கும் போது ஆடிய ஆட்டத்தை மறக்காது பேசிக் கொண்டே இருக்கிறது.

தேனு மாதிரி ஒரு அயித்த மக இல்லைன்னா கிராமத்துல பொறந்ததுக்கு என்ன அர்த்தம் இருந்துடப் போகுது. அந்தப் பாசம்... வாஞ்சையான பேச்சு... விடுமுறையில் ஊருக்கு வந்த மாமன் மகனுக்குப் பார்த்துப் பார்த்து சமைத்துப் போடுதல்... மாடு மேய்க்க கூட்டிப் போதல்... என வயதில் மூத்தவராக இருந்தாலும் பிரியத்தில் சோடை போகாத அயித்த மகளோ மாமன் மகளோ இப்படி ஒருவர் கண்டிப்பாக இருக்கக் கூடும். தன் பிரியத்துக்குரிய தேனுவின் மரணத்துக்கு உடைந்து அழுகின்ற அந்த 'நான்' என்னும் மனிதனுக்குள் இருக்கிறது அவளின் வெள்ளந்தியான அன்பின் பிடிமானம்.

ஊர்ல பேய் பிடிச்சி அதுக்குத் துணூறு போட்டு ஓட்டுறதைப் பார்த்தா சிரிப்புதான் வரும்... பேய் கோழி ரசம் கேக்குறதும்... சிகரெட்டுக் கேக்குறதும்... ரசிக்க வச்சாலும் ராத்திரியில முழிப்பு வந்த பின்னாடி தூங்க விடாம எல்லாத்தையும் மனசுக்குள்ள ஊர்வலமாக் காட்டி 'கருப்பா...'ன்னு மனசுக்குள்ள வேண்டிக்க வைக்காம போகாது. இந்தப் பேய் புடிச்சுருச்சு கதையில பூசாரி கோடாங்கி அடிச்சி பேய் ஓட்டுறாரு... எங்கூருல எல்லாம் ஊர்ல சாமியாடுற யாராச்சும்தான் துணூறு போடுவாங்க... அதுக்கு கட்டுப்படலைன்னாத்தான் பூசாரி வரைக்கும் போகும்... அப்படி பேய் புடிச்சதா நடிக்கிற மருமககிட்ட மிதி வாங்குற சேவாத்தாவை நினைச்சி சிரிச்சிக்கிட்டே இருக்கலாம்.

அப்படித்தான் சில்லறைப் பாக்கியும்... பஸ்ல பணத்தைக் கொடுத்துட்டு டிக்கெட் பின்னால எழுதிக் கொடுத்துட்டு கண்டக்டர் போகும் போதும் வரும் போது மொகத்த மொகத்தப் பாக்குறது இருக்கே... அதை அனுபவிச்சிருக்கணும்... அப்பத்தான் அந்த நிலமையை ரசிக்க முடியும்... கல்லூரியில் படிக்கும் போது நண்பன் ஒருவனுக்கு எழுதிக் கொடுத்ததை கண்டக்டர் மறந்துட்டுப் போயிட, மருதுபாண்டியர் செட்டுல போயி  டிக்கெட்டைக் காட்டி வாங்கி வந்ததை ஞாபகத்தில் நிறைத்தது. அப்படி எழுதாமல் தாரேன் சார் என்ற கண்டக்டரிடம் அவன் காசை வாங்கினானா இல்லையான்னு ரசிச்சுப் படிக்க வச்ச கதை இது.

இப்படித்தான் நிலா, உமான்னு ஒவ்வொண்ணும் ஒவ்வொரு விதமாய்... எந்தக் கதையும் வாசிக்கும் போது என்னடா இது என யோசிக்க வைக்கவில்லை என்பதே எழுத்தாளரின் எழுத்தின் வெற்றி. மிகச் சிறப்பான சிறியதொரு சிறுகதைத் தொகுப்பு இது.


முன்னுரை எழுதியிருக்கும் கவிதாயினி மனுஷி பாரதி, 'பிரதேசத் தன்மை கொண்ட படைப்புக்கள் தமிழில் இன்னமும் எழுதப்படாத களங்களாகத் தேங்கி நிற்கிறது. நம் அடையாளத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கிற தலைமுறை இப்போது உருவாகியிருக்கிறது. நம் மொழி அடையாளம், பண்பாட்டு அடையாளங்கள் குறித்த பிரக்ஞையற்ற தலைமுறைக்கு நம் மக்களை, அவர்களின் வாழ்க்கையைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய கடமை கதை சொல்லிகளுக்கு இருக்கிறது. அவை நிலம் பெயர்ந்து போன மனங்களில் படிந்துகிடக்கும் நினைவேக்கங்களின் வழியேதான் சாத்தியப்படக்கூடும்' என்று சொல்லியிருக்கிறார்.

உண்மைதான்... கிராமத்து வாழ்க்கையை... அந்த மக்களின் மனங்களை... அவர்களின் நேசத்தை... இப்படியான கதைகளின் மூலமேனும் நம் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும்... அது என்ன எழவெடுத்த அழுகாச்சி கதையாக இருந்தாலும் சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லிச் செல்ல வேண்டும் என்பதே என் ஆசையும்... அதனால்தான் என் களங்கள் எல்லாமே கிராமங்களையே சுற்றி வருகிறது. 

ஆசிரியர் தனது என்னுரையில் 'புரிந்து கொள்ள முடியாத இவ்வாழ்வைப் புரியாமலேயே அணுகுவது எவ்வளவு உன்னதமானதோ அப்படியாய், சிவகங்கை மாவட்டத்தின் ஒரு குக்கிராமத்திலிருந்து நீண்ட இந்தக் கிளை தன்னை - தன் மூதாதையர்களின் வேர் அறிவித்துக் கொள்ள விரும்புவதாய் ஓர் உத்தேசமாய்க் கருதிக் கொள்ளுங்கள். எழுத்து நோக்கி நீண்டு கொண்டேயிருக்கும் கரங்களுக்குச் சொந்தக்காரன், சில புத்தகங்களை எழுதியவன், இன்னும் சில புத்தகங்களை எழுதித் தீர்க்க ஆவல் கொண்டவன் என்பதாயும் என் அடையாளம் வரையறுக்கப் படலாமென்றாலும்... காலத்தின் கைகளில் தன்னை முழுமையாய்க் கொடுத்தவன் நான் என்றுதான் என் பிரக்ஞை என்னை எனக்கு அறிமுகம் செய்கிறது' என்று சொல்லியிருக்கிறார்.

தேவா அண்ணன்  எப்படியான எழுத்துக்கு மாறினாலும் அவ்வப்போதேனும் தனது களமாக தம் மக்களின் வாழ்க்கைக் கதைகளை எழுதி வர வேண்டும் என்பது அன்பான வேண்டுதலாய். 

வாழ்த்துக்கள் அண்ணா.

யாரோ எழுதிய கதை
தேவா சுப்பையா
ஒரு துளிக் கவிதை வெளியீடு
விலை : ரூ.70 /-
-'பரிவை' சே.குமார்.

5 எண்ணங்கள்:

Thenammai Lakshmanan சொன்னது…

அருமையான அழகான விமர்சனம். தேனு படிக்கத் தூண்டுகிறது. தேவசுப்பையாவுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள். :)

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசனையுடன் விமர்சனம்... அருமை...

ஸ்ரீராம். சொன்னது…

நல்லதொரு அறிமுகம்.

bharathi சொன்னது…

படிக்க தூண்டும் அருமையான விமர்சனம்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு அறிமுகம். சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.