மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 20 மார்ச், 2019

'என் கதைகள் குறித்து...' - இராஜாராம்

டல் கடந்த தனிமைக்கு மருந்தாய் அமீரகம் கொடுத்திருக்கும் உறவுகள் அதிகம்... நலம் விரும்பிகளும் நல்லோர்களும் நட்பாய் அமைத்தல் வரம். எனக்கு அது வாய்த்திருக்கிறது. படிக்கும் காலத்தில் இருந்தே என் வாழ்க்கை நட்பால்தான் சூழப்பட்டிருக்கிறது... நட்பால்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது...
கல்லூரியில் படிக்கும் போது சைக்கிளில் அம்மாவை அழைத்துக் கொண்டு தேவகோட்டை சென்றால் எதிர்ப்படும் நண்பர்கள் 'ஹாய்' எனக் கையைத் தூக்கிக் காட்ட, வீட்டுக்கு வந்ததும் 'போறவனெல்லாம் கை காமிக்கிறான்... எம்புட்டுப் பேரைத்தான் பழகி வச்சிருக்கோ' அப்படின்னு அம்மா சொல்லும்.  அது உண்மை... எப்பவுமே எனக்கு நட்பு வட்டம் மிகப்பெரிதாய்த்தான் இருக்கும்.
அப்படித்தான் அமீரகம் வந்து கில்லர்ஜி அண்ணா, கனவுப்பிரியன் அண்ணாவென சிலருடன் மட்டுமே இருந்த நட்பு இன்று பலருடன் விரிந்திருக்கிறது. அப்படிக் கிடைத்த நட்புக்களில் சகோதரர் இராஜாராம் எதோ ஒரு வகையில் மிகவும் நெருங்கமாகிப் போனார். 

இருவரும் 'அண்ணே...' என்றே அழைத்துக் கொள்வோம்... நாந்தான் மூப்பாக இருக்க வேண்டும். பொண்ணு 10வது படிக்குதே... :) இருப்பினும் பெயர் சொல்லி அழைக்கவோ, வா... போ... என்றழைக்கவோ எப்போதும்  நான் விரும்புவதில்லை என்பதால் அண்ணே... இல்லேன்னா வாங்க... போங்கதான்... (இதில் முருகன், தமிழ்க்காதலன் என சில விதிவிலக்குகள் உண்டு) எங்க வீட்டில் எங்களை அப்படித்தான் வளர்த்தார்கள். நாங்கள் அம்மாவை வா, போ என்போம். என் குழந்தைகள் அம்மாவையும் வாங்க போங்கதான் என்ற மரியாதையில்தான் அழைப்பார்கள்.
கதையா எழுதி வச்சிருக்கே... அதெல்லாம் ஒழுங்குபடுத்து சில கதைகளை புத்தகம் ஆக்கலாம் என கவிஞர் பிரபுவும், தம்பி நெருடாவும் சொல்ல, 50 கதைகளை எடுத்து பிடிஎப் ஆக்கி சிலருக்குக் கொடுத்தேன். எல்லாரும் வாசிக்கவில்லை என்றாலும் மூன்று பேர் முழுதாய் முடித்தார்கள். அவர்களில் இராஜாராமும் ஒருவர்... ஒவ்வொரு கதை குறித்தும் அதில் இருக்கும் சின்னச் சின்ன தவறுகள் குறித்தும் பேசுவார்... கேள்விகள் கேட்பார்.
ரொம்ப மகிழ்வாய் இருக்கு... சொம்படிக்காத... உள்ளதை உள்ளபடி பேசும்... இப்படியான உறவுகள் எனக்கு நிறையக் கிடைத்திருப்பதில் சந்தோஷமே... இவ்வுறவுகள் தொடரவும் இப்படியான உறவுகளோடு இறுதிவரை பயணிக்கவும் எம்பெருமான் முருகன் துணை நிற்கட்டும்.
50 கதைகளின் வாசிப்புக்குப் பின்னர் முகநூலில் அவர் எழுதியது இங்கே...
*************
ண்ணே வணக்கம்ணே!
வணக்கம்ணே...!
இந்த மனுசனுக்கு வயசு கூடவா, குறையவானு தெரியல நானும் அவர அண்ணேனு சொல்லுவேன்., அவரும் என்னை அண்ணேனு சொல்றாரு நல்ல மனிதர். ஒரு மனுசன் யாரு? என்ன? நம்மள விட பெரியாளா, சின்னாளானு பாக்காம மனந்திறந்து ஏற்றத்தாழ்வின்றி மரியாதையாக பழகுவது நன்றுதானே! 

அது ஒரு புதிய அழகான, மரியாதை நிமித்த நட்பு வாசலை திறக்கும் என்பதில் எனக்கு என்றுமே சந்தேகம் வந்ததில்லை, குறிப்பாக நம்மோடு பழகும் நண்பர்களோ, நன்பர்கள் அல்லாத வயதில் பெரிய,சிறிய சகோதரர்களோ மரியாதை கலந்த நட்பு வட்டாரத்தில் ஒரு சிலரோடுதான் நட்பு வட்டம் விரிந்து நல்ல உறவுகளாகவே மாறும், அது நாம் பழகும்போதே அந்த நட்பின் மகத்துவம் எல்லோருக்குமே தெரிந்து விடும். 

இதில் பாலின பாகுபாடு இல்லை! நமது எல்லை எது என்பதை அறிந்தே அணுகும் பொழுது அது எல்லையற்ற பாசத்தையும், உறவுகளையும் தருகிறது. அந்த விதத்தில் அண்ணன் குமார் அவர்கள் அவரின் எழுத்துப் போலவே மிகுந்த மரியாதையான நபர்தான்! 

அருகில் இருப்பதால் அம்மனிதரோடு குணங்களையும் எழுத்தோடு ஒப்பிட்டு பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அருகில் இல்லையென்றாலும், நடவடிக்கைகள் சரியில்லை என்றாலும் எழுத்தாளர்களின் தனிப்பட்ட விடயங்களை நாம் பகிரப்போவதில்லை, அதுபோல நிரம்ப உண்டு சொல்லிக்கொள்ளுமளவுக்கு. இது செம்படிக்கிறதுக்காக அல்ல! அதற்கான அவசியமும் எனக்கு நேர்ந்ததே இல்லை!

இந்த உறவுகள் வளர்ந்து நல்ல நட்பு வட்டம் விரிய எல்லா நல்லெண்ணங் கொண்ட உறவுகள் உடனிருக்கட்டும்!

அண்ணன் குமார் அவர்கள் வலைதளங்களில் நிறைய சிறுகதைகளை எழுதி வருகிறார், சில சிறுகதைகள் வார, மாத இதழ்களில் அச்சாகியும், வலைதளங்களில் பதிவேற்றம் செய்தும் வருகிறது. தற்சமயம் ஒலிப்பதிவாகவும் ஒரு சில வலைதளங்களில் அவரின் சிறுகதைகளை வெளியிடுகிறார்கள். அதில் நான் படித்த சிறுகதைகள் இரண்டும் ஒலிப்பதிவாக கேட்டேன். அதில் ஒரு வித்தியாசம் உணர்ந்தேன். 

எப்படியென்றால் ஒரு திரைப்படம் எடுக்கும்போது பிற்காலத்தில் இந்த படத்தின் பாடல்களையோ, அப்படத்தையோ அப்போதைய நவீனத்திற்கு தகுந்தாற்போல் அமைத்துக் கொள்ளலாம் என்றால் அதற்கான தகுதியை அப்படம் முழுமையாக பெற்றிருக்க வேண்டும். அந்த சமயத்தில் அந்த நவீனத்திற்காக அசலை மாற்றாமல் பொறுத்துவதற்கு... 

அது போல அண்ணன் குமார் அவர்களின் எழுத்தில் அந்த ஒலிப்பதிவில் எந்த கூடுதல் சேர்க்கையும், உதாரணத்திற்கு ஒரு எழுத்துக்கூட சேர்க்கவில்லை அவ்வளவு கச்சிதமாக பொருந்தி இருந்தது! அவ்வளவு பொருத்தமான எழுத்துக்கு சொந்தக்காரர்.

அந்த வகையில் அண்ணன் குமார் அவர்கள் எழுதிய ஒரு ஐம்பது சிறுகதைகளை சிறிய ஆவண வடிவத்தில் எனக்கு அனுப்பி வாசிக்க சொன்னார்கள். இதை வாசிக்க எனக்கு இரண்டு மாதங்கள் ஆனது. பள்ளிக் காலத்துலதான் அரைகுறை, இப்பவாவது படிக்கிறத கவனமா பொறுப்போடு படிக்கனுங்கிறதுக்காக அதற்கான நேரந்தான் அதிகமாக நீடித்தது எதுவுமே புதிதல்ல..! 

நம் அன்றாட வாழ்வில் நிகழ்ந்த, கேட்ட, மற்றும் பார்த்த வாழ்க்கை முறைதான், அதை அவரின் எழுத்து எங்கேயுமே எல்லை மீறாமல் அழகாக கையாண்டிருக்கிறார். ஏற்கனவே அண்ணன் குமாரின் எழுத்துக்கு நான் ரசிகன்.

உதாரணமாக வெவ்வேறு எழுத்தாளர்களின் வெவ்வேறு விதமான ஐந்து கதை இருக்கிறதென்றால் அதில் குமார் அண்ணன் அவர்களின் கதை எதுவென கண்டுபிடித்து விடுவேன். அதற்கும் அவருக்கே தெரியாத(அனேகமாக) அவரின் ஒரு சில எழுத்துநடை போக்கை அடையாள படுத்தி வைத்துள்ளேன். அதாவது "டைரக்டர் டச்" மாதிரி இவருக்கே உரித்தான "ரைட்டர் டச்" ஒன்று உள்ளது!

அதுபோல நமது கிராமத்து வாழ்க்கை, அங்குள்ள மனிதர்கள், கால்நடைகள், நமது திருவிழாக்கள், காதல், திருமணம், மரணம், உறவு, நட்பு, சாதி, மதமென எல்லாவற்றையும் உரசிப் பார்த்து செல்கிறது இந்த சிறுகதைகள்! 

எனது விருப்பமெல்லாம் இந்தக் கதைகள் எல்லாம் நூல் வடிவாக வரவேண்டும். நான்கு பிரிவுகளாக வரவேண்டும்! ஒவ்வொன்றும் மனித வாழ்வின் ஒரு அத்தியாயம். நமது நிறைய பழக்க வழக்கங்கள், உறவுமுறைகள், விவசாயம் மற்றும் தெரியாத வட்டாரச்சொற்கள் நிரம்ப இருக்கிறது இந்த சிறுகதைகளில்... 

எல்லாவற்றையும் விரைவில் நூலாக கொண்டு வர வேண்டும்! 

அதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்ணே!

((((()))))

ன் கதைகள் ஏதோ ஒரு வகையில் சோகத்தில்தான் பெரும்பாலும் முடியும்... மகிழ்வாய் எழுதுதல் என்பது எப்போதேனும்தான் எனக்கு வாய்க்கிறது. சோகமாய் ஏன் முடிக்கிறாய்.. சந்தோஷமாய் எழுது என்று என்னிடம் பலர் சொல்லியிருக்கிறார்கள். நாம் பார்த்து வாழ்ந்த வாழ்க்கையின் எதார்த்தங்களில் ஏது சந்தோஷப் பக்கங்கள்... என் கதைகள் எப்பவுமே எதார்த்த வாழ்க்கையைத்தான் பேசும்.

ரொம்ப நன்றி இராஜாராம்.
நேசத்துடன்
-'பரிவை' சே.குமார்.

8 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மனசு... வலைத்தளத்தின் முகவரி இது தானே...? அது உண்மையைத்தான் எப்போதும் பேசும்... தொடரட்டும் வெற்றிகளை... அது மனதை சிறப்படைய செய்யும்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஆஹா...

ரொம்ப நன்றி அண்ணா...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

குமார் உங்கள் கதைகளைப் பற்றிச்சொலல்த்தான் வேண்டுமோ?! ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. மண் மணத்திலிருந்து, வட்டார வழக்குச் சொற்கள், மனித மனங்கள், உறவுகள் கிராமம் குடும்பம் காதல் என்று பலதையும் தொட்டு உறவாடிச் செல்பவை.

உங்கள் கதைகள் புத்தகமாக வெளிவருவதற்கு வாழ்த்துகள் குமார். மேலும் நிறைய நீங்கள் படைத்திட வேண்டும்.

கீதா

ஸ்ரீராம். சொன்னது…

// அதாவது "டைரக்டர் டச்" மாதிரி இவருக்கே உரித்தான "ரைட்டர் டச்" ஒன்று உள்ளது //

ஆம். உண்மை. இது நம் நண்பர்கள் யாவருக்கும் தெரியும். வட்டாரச்சொல் ஸ்பெஷலிஸ்ட்டும் கூட... அதிலும் வழிமொழிகிறேன்.

// ஏற்கெனவே அண்ணன் குமாரின் எழுத்துக்கு நான் ரசிகன் //

நானும்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

உங்கள் கதைகள் விரைவில் நூலாக வெளி வரட்டும். வாழ்த்துகள் குமார்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

குமார் உங்கள் எழுத்துகள் பற்றிய விமர்சனம் மிக அருமை.
உங்கள் கதைகள் நூலாக வெளிவருவது குறித்தும் மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகளும்! எழுத்துலகில் பல வெற்றிகளைக் கண்டிடவும் வாழ்த்துகள்.

துளசிதரன்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

உங்களை சரியாக மதிப்பிட்டுள்ளார். உங்களுடன் தொலைபேசியில் பேசியபோது ஒரு முறை சற்றொப்ப இக்கருத்தினைக் கூறிய நினைவு. வாழ்த்துகள்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

உங்கள் எழுத்தைப் பற்றிய விமர்சனம் அருமை.சந்தேகமே இல்லை உங்கள் மண்ணிற்கே உரிய சொற்கள் உங்கள் கதையில் விளையாடும்.

உங்கள் எழுத்துக்கு நாங்கள் ரசிகர்கள்.

வாழ்த்துகள்!

துளசிதரன்