மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 4 மார்ச், 2019

மனசு பேசுகிறது : மரணம் தரும் வலி

Image result for மரணம்
ரணம்...

யாராலும் தள்ளிப் போட முடியாதது... 

எல்லாரும் ஒரு நாள் எதிர்க்கொள்ள வேண்டியதுதான்... அது எங்கே, எப்படி, எப்போது நிகழும் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. 

மனிதன் பிறக்கும் நாளைப் போல் இறக்கும் நாளும் தெரிந்திருந்தால் இந்தப் பேராசை, வன்மம், கோபமெல்லாம் இல்லாது போயிருக்குமோ என்னவோ... அல்லது இவ்வளவு நாள்தான் வாழ்வோம் என்பதால் அதற்க்குள் வாரிசுகளுக்குச் சேர்த்து வைத்து விடுவோமென இன்னும் அதிகமான பேராசையுடன் வாழ்வோமோ என்னவோ.. தெரியவில்லை.

இப்போதெல்லாம் காலன் சுழட்டும் கயிறு பெரும்பாலும் இளம் வயதினர் மீதுதான் விழுகிறது. சமீபத்தில்தான் உறவில் ஒரு பையனை விபத்தில் இழந்தோம்... அதன் பின் மற்றொருவன் நண்பனின் புது புல்லட்டை ஓட்டிப் பார்க்கிறேன் என விபத்தில் மரணித்தான். இப்படியான மரணங்கள் வலியையும் வாழ்க்கை மீதான பயத்தையுமே கொடுக்கின்றன. நம் குழந்தைகளுக்கு நாம் என்ன சேர்த்து வைத்திருக்கிறோம் என்ற கேள்வி மனசுக்குள் சுழன்றடிக்க ஆரம்பித்து விட்டது.

இங்கும் அடிக்கடி இப்படியான இளவயது மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இங்கு வந்த புதிதில் எங்கள் தளத்தில் தங்கியிருந்த சென்னைப் பையன் திருமணமான ஆறு மாதத்தில் தாயையும் தன்னை நம்பி வந்தவளையும் தவிக்க விட்டுவிட்டு அதிகாலை கழிப்பறைக்குள் மாரடைப்பால் மரணித்தான்... அவனைக் கொன்றது விடாத குடி.

இங்கு நிகழும் மரணங்களுக்கு முக்கிய காரணியாக பதப்படுத்தப்பட்ட உணவுகளைச் சொல்கிறார்கள் என்றாலும் வேலைப்பளுவின் ஆதிக்கமும் மனசுக்குள்ளேயே போட்டு அழுத்தி வைத்துக்கொள்ளும் கஷ்டங்களும்தான் பலரைக் கொன்று வருகிறது என்பதே உண்மை. அதேபோல் அதீத குடியும் கொல்லத்தான் செய்கிறது.

இரு தினங்களுக்கு முன் ஒரு மரணம்... 41 வயதில் மாரடைப்பால் மரணித்துள்ளார் எல்லாருடனும் மிகுந்த இணக்கத்துடன் இருந்த அபுதாபி தமிழ் மக்கள் மன்ற நிர்வாகிகளில் ஒருவரான சோலையப்பன் அவர்கள். 'மரணிக்கும் வயதா இது..?' என்பதே எல்லாருடைய வாயிலிருந்தும் வரும் வார்த்தையாய் இருக்கிறது. மரணத்திற்கு வயதேது... பிறக்கும் போதே இறப்பும்... இளவயது... முதுமை... நூறு வயதுக்கு மேல் வாழ்ந்தபின் இறப்பு என மரணம் எல்லா நிலையிலும் இருக்கிறது.

சோலையப்பனைப் பார்த்ததில்லை... பேசியதில்லை... இருந்தும் அவரின் மரணம் மனசுக்குள் இன்னும் அழுத்திக்கொண்டே இருக்கிறது. முகநூலில் பல நண்பர்கள் இரங்கலைப் பகிர்ந்தார்கள்... எனக்கு ஏனோ மனம் வரவில்லை... நேற்று முழுவதுமே ஓரே அழுத்தம்... கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டே இருக்கிறது...

'பார்த்துப் பேசாத நபருக்காகவா அழுதாய்..?' என்ற கேள்வி எழலாம். என் அழுகையெல்லாம் ஒரே ஒரு முறை பார்த்த அவரின் ஒன்பதாவது படிக்கும் மகனுக்கானது. வாழ்வின் வெறுமையை தந்தையின் இழப்பில் உணர்ந்திருப்பானே என்பதை நினைக்கும் போதெல்லாம் கண்ணீர்த்துளி தயாராய் நிற்கிறது.

ஒரு வாரம் முன்புதான் அவரின் மனைவி மற்றும் மகனுடன் துபையில் நடந்த நூல் வெளியீட்டுக்கு நெருடா, ராஜாராம், பால்கரசு, நௌஷத் மற்றும் சுடர்விழியுடன் சென்றோம். செல்லும் வழியில் டீக்குடிக்கலாம் எனக் கார்களை நிறுத்தி இறங்கியபோதுதான் சிறிய அறிமுகம் அவர்களுடன்...

அப்போது 'அண்ணே.. இவன்கிட்ட பேசியிருக்கீங்களா'..? என்ற நெருடா, 'மிகுந்த அறிவானவன் அண்ணே... இவனுக்கிட்ட நாம பேசி ஜெயிக்க முடியாது' என்றார். அந்த நேரத்தில் 'எங்க விஷால்கிட்ட கூட என்னால பேச முடியலை... இந்த மாதிரி பசங்ககிட்ட எல்லாம் பேசுறதில்லை' எனச் சிரித்துக்கொண்டே சொல்லிக் கடந்தேன். அவனும் அவனது சிரிப்பும் எனக்கு விஷாலை நினைவூட்டியது.

ஒரு புரோட்டா வேணும் என்று அம்மாவிடம் கேட்டவனுக்கு மற்றவர்களிடம் சொல்ல மிகுந்த சங்கோஜம்... அம்மா சொல்லி... அதன் பின் யோசித்தே நெருடாவிடம் சொன்னான்... அப்படிப்பட்ட குழந்தை அப்பாவை இழந்திருக்கிறது. இந்த இழப்பை எப்படி அவன் தாங்குவான்..? ஊரில் உறவுகளுடன் வாழும் வாழ்க்கைக்கும் இங்கு உறவுகளற்று வாழும் வாழ்க்கைக்கும் எத்தனை வேறுபாடு..? எத்தனை நண்பர்கள் இருந்தாலும்... ஆறுதலாய் அணைத்தாலும்... உறவுகளின் கைகளுக்குள் இறுகிக் கிடக்கும் போது துக்கத்தின் தன்மை குறையும்தானே... அது இல்லாது இந்த மூன்று நாளாய் அம்மாவும் மகனும் எவ்வளவு துக்கத்தை அடைத்து வைத்திருப்பார்கள் என்பதை நினைத்தாலே வாய்விட்டு அழுவது நலம் என்று தோன்றுகிறது.

அப்பாவின் திடீர் மரணம் அந்தப் பிஞ்சு உள்ளத்துக்குள் எத்தனை தாக்கத்தை உண்டாக்கியிருக்கும். அதிகம் பேசவில்லை.... பழகியதில்லை என்றாலும் அவனும் நம் பிள்ளைகளைப் போல்தானே... மனசு ஆறவில்லை... பார்த்திராத சோலையப்பனின் மரணத்தை எப்போதும் போல் கடந்து வந்துவிட்டாலும் அந்தக் குழந்தையின் முகம் மனசுக்குள் பாரத்தைச் சுமக்க வைக்கிறது... நினைக்கும் போதெல்லாம் கண்ணீர் துளிர்க்கிறது. என்ன செய்வது..? மரணம் சொல்லாமல்தானே வருகிறது. வெளியில் சென்று வீட்டுக்குத் திரும்பியவர் இப்படியாகும் என்று நினைத்திருப்பாரா..? அல்லது அப்பா நம்மை விட்டு நிரந்தரமாகப் போகப் போகிறார் என்பதை அவன் உணர்ந்திருப்பானா..?

புத்தக வெளியீட்டுக்கு வந்த அவரின் மனைவி, நாகாவின் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டபோதும் அதன் பின்னான நிகழ்வுகளிலும் புன்னகையோடு வலம் வந்தாரே... ஒரே வாரத்தில் இப்படியான ஒரு நிகழ்வு, அவரை அடியோடு மாற்றிப் போட்டு விட்டதே... இதை எப்படி அவரால் தாங்க முடியும்..? இப்படியான மரணங்கள் மரணித்தவரின் நிழவில் வாழ்ந்தவர்களைக் கொல்லாமல் கொன்று விடுகிறதே.

நெருடாவிடம் பேசும் போது அப்பாவைச் சடலமாக மருத்துவமனையில் வைத்திருக்க, அழுவதால் என்ன நிகழும்... அழாவிட்டால் என்ன ஆகும்... என்ற மனநிலையில் இந்த வயதில் பறிகொடுக்கக் கூடாததை பறிகொடுத்த நிலையில் 'இதுக்கு அப்புறம் நான் என்ன பண்ணப் போறேன்..?' என்றான் அந்த பதினாலு வயதுக் குழந்தை என்றார். கேட்கும் போது வந்த கண்ணீர், இப்ப இதை இங்கு எழுதும் போதும் எழுகிறது. என்ன பதில் சொல்ல முடியும் இந்தக் கேள்விக்கு... அப்பாவின் ஆசைப்படி படித்து நீ பெரியாளாக வேண்டும் என்ற ஆறுதல் வார்த்தைகளைச் சொல்வதால் என்னாகப் போகிறது..?  அப்படியான பசப்பு வார்த்தைகள் அவனின் கேள்விக்குள் பொதிந்து கிடக்கும் அழுத்தத்துக்கு மருந்தாகுமா..?

அன்றிரவு ராஜாராமுடன் பேசும் போது அறைக்குள் அமர்ந்திருந்த அந்தப் பையனைப் பார்க்கப் போனேன் அண்ணே... அவன் என்னைப் பார்த்த பார்வையில் 'என்னைய இப்படி நிப்பாட்டி வச்சிருக்கீங்களேடா..' என்பதுதான் தெரிந்தது. அந்தப் பார்வையை என்னால் தாங்க முடியவில்லை... கொஞ்ச நேரம் கூட பார்க்க முடியவில்லை வெளியே வந்துட்டேன் என்றார் அழுகையுடன்... எப்படிப் பார்க்க முடியும்..? ஒரு நாள் சில மணி நேரம் தனித்தனிக் காரில் பயணித்த என்னால் தாங்கமுடியாத நிலையில், தொடர்ந்து சில வருடங்களாக நட்புக்களாய் பயணிக்கும் ராஜா, பாலா, நெருடாவால் எப்படித் தாங்க முடியும்..?

இரண்டு நாட்களாக அவன் முகமே மனதில் நிறைந்து நிற்கிறது... நினைக்கும் போதெல்லாம் 'நம் குழந்தை போல்தானே அவன்' என்பதாய் கண்ணீர் கசிகிறது. படுத்தாலும் அவன் நினைவே கொல்கிறது... இறந்த சோலையப்பனை மறக்கச் செய்கிறது 'இதுக்கு அப்புறம் நான் என்ன செய்யப் போகிறேன்..?' என்ற கேள்வியும் 'என்னைய இப்படி நிறுத்திட்டிங்களேடா' என்ற பார்வையும்.

மனசுக்குள் மகிழ்வு, கோபம், ஆற்றாமை என எல்லாவற்றையும் அழுத்தி வைத்துக் கொண்டு வாழும் வாழ்க்கையே இங்கு பெரும்பாலானோருக்கு வாய்த்திருக்கிறது. எங்கே, எப்போது, எப்படி மரணம் நிகழும் என்பதெல்லாம் தெரியாது. ஒவ்வொரு நொடியும் அதை நோக்கித்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்றாலும் குழந்தைகளைத் தவிக்கவிட்டுச் செல்லும் இளவயது மரணங்கள் இல்லாது போகட்டும்.

குழந்தைகளுக்கு என்ன செய்து வைத்திருக்கிறோம்..? 

திடீர் இழப்பு என்றால் அவர்களால் அதிலிருந்து மீள முடியுமா..? 

எந்த ஒரு சேமிப்பும் இல்லாமல் கடனில் உழலும் வாழ்க்கையை அவர்கள் மீது சுமத்திவிட்டால் எப்படி மீள்வார்கள்...?

என்பதையெல்லாம் மனசுக்குள் ஓடவைக்கிறது அந்த பாலகனின் முகம்.

எத்தனை ஆண்டுகள் இங்கு வாழ்ந்தாலும் கடனும் கடமைகளும் துரத்திக் கொண்டேதான் இருக்கும்... குடும்பத்துடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் துரத்திக் கொண்டே இருக்கும்... அதை இந்த மரணமும் அந்தப் பையனின் வார்த்தையும் பார்வையும் இன்னும் அழுத்தமாக்கியிருக்கிறது.

மரணம்... 

ஒருவனைக் கொண்டு சென்று அவனை நம்பியிருக்கும் குடும்பத்தைக் கொல்லாமல் கொல்கிறது.

பத்துநாள் முன்பு மகிழ்வாய் ஊருக்கு வந்து திரும்பிய சோலையப்பன் இன்றோ நாளையோ சவப்பெட்டிக்குள் ஊருக்கு வரலாம். சில நாளில் நாம் அவரை மறந்தும் போகலாம். அதுதான் இயற்கை என்றாலும் இதன் பின்னான வாழ்வில் மிகச் சிறப்பான எதிர்காலத்தை அந்தக் குழந்தைக்குக் கொடு இறைவா என்று பிரார்த்திப்பதைத் தவிர இப்போதைக்கு வேறு வழி தெரியவில்லை.

சகோதரர் ராஜாராம் சோலையப்பனின் மரணம் குறித்து முகநூலில் எழுதிய வரிகள்  இது...
'தேரா யிறைவா 
சேரா தருணத்திலே 
நேரா மரணமளித்து 
தீரா சோகத்தில் 
ஆழ்த்திவிட்டாயே!

மீளா துயரம் 
தாளா உயரம் 
பாரா முகமாக 
ஆரா நினைவை 
அளித்து விட்டாயே!'

சோலையப்பனின் ஆன்மா சாந்தியடையவும் அவரின் குடும்பத்தினர் மிகப்பெரிய இழப்பில் இருந்து மீண்டு வரவும், அந்தக் குழந்தை மிகச் சிறந்த வாழ்க்கையை வாழவும் இறைவனைப் பிரார்த்திப்போம்.

-'பரிவை' சே.குமார்.

7 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சே... மனது என்னமோ செய்கிறது... என்ன வாழ்க்கை இது...?

அந்தக் குழந்தை வாழ்வு சிறப்பாக அமைய வேண்டும் என்று வேண்டுகிறேன்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மனதில் வலி....

இப்போது இப்படியான மரணங்கள் ரொம்பவே... கேட்கும்போதே பதறுகிறது மனம். பிழைப்புக்கான ஓட்டம் ஓடிக்கொண்டே இருக்கிறோம் - ஓட்டம் எப்போது நிற்கும் என்பது தெரியாத ஓட்டம்.

அவரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்களும்...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மிகவும் வேதனையான நிகழ்வு குமார். இப்படியான மரணங்கள் அதுவும் மருத்துவம், உடல் நலம் குறித்த விழிப்புணர்வு கூடி வருகிறது ஒரு பக்கம் என்றால் சிறு வயது மரணங்கள் கூடுவது மறுபுறம்.

அவரது மகனுக்குச் சிறப்பான எதிர்காலம் அமைய வேண்டும். குடும்பம் இந்த இழப்பிலிருந்து விரைவில் மீண்டு வந்திட வேண்டும் என்றும் வேண்டுகிறோம். அவர் குடும்பத்தாருக்கு எங்கள் ஆறுதல்கள்.

துளசிதரன், கீதா

Avargal Unmaigal சொன்னது…


இந்த மாதிரி செய்திகள் மனதில் வலியை தருகின்றன... நான் என் குழந்தையிடம் அடிக்கடி இழப்பு பற்றி பேசி எப்படி இண்டிபண்ட்டாக வாழ வேண்டும் என்று சொல்லி வளர்த்து வருகிறேன்.. அவள் அதை நன்கு புரிந்து கொண்டு வளர்கிறார்....

Anuprem சொன்னது…

படிக்கவே மனம் கலங்குகிறது ...

இனி அந்த குழந்தைக்கும் , அவரை சார்ந்தோருக்கும் அவர் நினைவாகி போவார் என்னும் எண்ணமே ஒரு வலி மிகு உணர்வை ஏற்படுத்துகிறது..

Unknown சொன்னது…

ஆத்மா சாந்தியடையட்டும்

கோமதி அரசு சொன்னது…

படிக்கும் போது அந்த குழந்தையின் வாடிய முகம் வந்து போகிறது.
ஏன் இப்படி ஆகிறது என்ற கேள்வி மனதில் வட்டமிடுகிறது.
அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் இறைவனிடம்.
அவர் குடும்பம் இந்த அதிர்ச்சியிலிருந்து மீளவும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.