மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 6 ஜனவரி, 2019

ஆட ஆரம்பிச்சிட்டா 'அம்புயாதனத்துக் காளி'

பிரபு கங்காதரன்...

இவரைக் காளியின் காதலனாய் அறியும் முன்னர் யூசுப் அண்ணன் மூலமாக முதல் சந்திப்பு நிகழ்ந்தது அபுதாபி செட்டிநாடு ஹோட்டலில் 'சுமையா'வைப் பெற வரும் போதுதான்... அவசரமாய் வந்து அமர நேரமின்றி அவசரமாய்ச் சென்றார்.

பிரபுவை நல்ல வாசிப்பாளன் என்பதாய் மட்டுமே அறிய முடிந்தது அவ்வேளையில்...

பின்னான நாட்களில் அவர் தீவிர வாசிப்பாளன் என்பதை அவரின் பேச்சில் இருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. எந்த ஒரு தலைப்பு என்றாலும் பேசக்கூடிய அதுவும் தான் வாசித்தவற்றில் இருந்து மேற்கோள்களுடன் பேசக்கூடியவர் என்பதை அறிந்த போது வியப்பாய் இருந்தது. 

யூசுப் அண்ணன், நெருடா போன்றோருடன் பிரபு பேசும் போது சற்றே ஒதுங்கியிருந்து அவரின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருப்பேன் என்பதைச் சொல்லித்தான் ஆகவேண்டும். 

சிறு தெய்வ வழிபாடு பற்றி அஞ்சப்பர் ஹோட்டலில் அரை மணி நேரம் பேசியதில் வீசிய 'கெட்ட வார்த்தை'களைக் கேட்டு எப்படா இவனுக போவனுங்கன்னு முகத்தை முகத்தைப் பார்த்த ஹோட்டல் மேனேஜர் இன்னும் நினைவீல் நிற்கிறார். 

பல நேரங்களில் பேச்சின் ஊடே இடையோடும் 'கெட்ட வார்த்தைகள்' இடம் பொருள் ஏவலெல்லாம் பார்ப்பதில்லை. முகநூலில் கூட அப்படியே வந்து விழும் என்பதே இவரின் அடையாளம்.

முகநூலில் அவரின் பக்கம் செல்ல நேர்ந்த போதுதான் மனுசன் காளியோடு கவிதையில் குடும்பம் நடத்துவதைக் காண முடிந்தது. 

எல்லாமே காமம் தூக்கலாக தூவப்பட்ட நள்ளிரவு உணவாய்.

அவர் எடுத்தாளும் மொழி மிகச் சிறப்பாய் இருக்கும்... பல நேரங்களில் இந்தாளு இந்த வார்த்தையை எல்லாம் எங்கிருந்து எடுக்கிறார் என்ற கேள்வி எழும். சிக்கலான வார்த்தைகள் அவருக்கு வசப்படும்... அதை வாசிக்கும் போது  நம்மை கண்டிப்பாக வசீகரிக்கும்.

காளிக்கான கவிதைகளுக்கு தேர்வு செய்யும் படங்கள் எல்லாம் இவருக்கு எங்கு கிடைக்கின்றன என்றே தோன்றும். அப்படி பொருத்தமாய் படங்கள் அமைந்திருக்கும்.

தினமும் காளியோடு கவி உறவாடிய பின்தான் உறக்கம் என்பதாய் நகரும் நாட்கள் அவருடையவை.

சில நாட்கள் என்ன இன்னும் காளியின் கவிதை வரலையே என நினைக்கும் போது கவிதை வந்து விழும்... அந்நேரம் இரவு 2.30 மணியாகக் கூட இருக்கலாம்.



இப்படியே எழுதிக்கிட்டே போறியேய்யா... எடுத்துத் தொகுத்து வைத்துக் கொள்... புத்தகமாக்கலாம் என்று எல்லாரும் சொல்லிய போது அடப் போங்கய்யா இதெல்லாம் புத்தகமாக்குறதா... பெரிய ஆளுக எல்லாம் இருக்காங்க என மறுத்துப் பேசினார்.

யூசுப் அண்ணன் கூட ஒருமுறை பிரபுவின் பாணியிலே சத்தம் போட்டார். அவர் காளியோடு பிண்ணிப் பிணைதலை நாவலாக்கு என்று கூட சொல்லிப் பார்த்தார்.

நீங்கள்லாம் சொல்லுங்க... நான் கிறுக்குவேன்... தொகுக்க மாட்டேன் என்பதில் காளியாய் நின்றார்.

அது உரைநடை வடிவமா... கவிதை வடிவாமா... என்பதெல்லாம் கடந்து காளியைக் காதலிக்கும்... காளியை மோகிக்கும்... காளியைக் காமுறும் ஒரு எழுத்து... அதற்கென்ன வடிவம் வேண்டிக்கிடக்கு என்பதாய் நம் முன்னே உயர்ந்து நிற்கும்.

இங்கே எங்கள் நட்பு வட்டத்தில் அய்யனார் விஸ்வநாத்தின் ஓரிதழ்ப்பூ காமம் பேசுதுதென எதிர்த்து நின்றவர்களே அதிகம். இதோ காளி பேசுவது முழுவதுமே காமம்தான்.

இதற்கென விமர்சனக் கூட்டம் வைக்கும் போது ஒரு படையல் இருக்கு என்றாலும் படைப்பாளியாய் உயர்த்திய எழுத்து அது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

எழுத்தாளர் சாருவின் ஆசியில்... பிரபுவின் மனத் தோன்றலாய் காளி மீதான மோகிக்கும் காதல் 'அம்புயாதனத்துக் காளி' என்ற புத்தகமாய் மலர்ந்திருக்கிறது இந்தாண்டு புத்தகத் திருவிழாவில்.... ஸீரோ டிகிரி வெளியீடாய் வந்திருப்பது சிறப்பு. 

இது நூற்றாண்டுகள் கடந்து நிற்கும் என தன் முகநூல் பக்கத்தில் எழுதி பிரபுவின் முதுகில் தட்டிக் கொடுத்திருக்கிறார் சாரு. 

பிரபு... 

வாசிப்பின் பின்னே வலம் வந்தவர்... 

இன்று எழுத்தாளனாய் ஏற்றம் பெற்றிருக்கிறார். 

காளியோடான காமக் காதல் மட்டுமின்றி இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்.

இந்த எழுத்து காமம் நிறைந்தது என்பதால் காமத்தை அதில் தேடாதீர்கள்... வாசித்து முடிக்கும் போது காளியின் மீதான ஒரு பக்தனின் காதலை உள்ளம் முழுவதும் சுமந்து கொள்வீர்கள்... காமம் நிறைந்த காதல் அதுவென்பதை உணர்வீர்கள்.

காளி எல்லார் மனதிலும் உக்கிர தாண்டவம் ஆடுவாள் என்பது உறுதி.

கவிதைகள் மட்டுமில்லாமல் சிறுகதைகளும் நாவலும் படைக்க வாழ்த்துக்கள்.
-'பரிவை' சே.குமார்.

3 எண்ணங்கள்:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

வித்தியாசமான பொருண்மையில் அமைந்த நூலை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நண்பருக்கு வாழ்த்துகள்...

Yaathoramani.blogspot.com சொன்னது…

வாசிக்கத் தூண்டும் அருமையான அறிமுக விமர்சனம் வாழ்த்துக்கள்