மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

மனசு பேசுகிறது : சிற்றிதழ்கள் உலகம்


ன்று சிற்றிதழ்கள் என்னும் ஒரு பக்கம் மெல்ல மெல்ல அழிந்து வரும் நிலையில் அவற்றை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக இருப்பவர்தான் அலைனில் இருக்கும் அன்பின் ஐயா பெரம்பலூர் கிருஷ் ராமதாஸ் அவர்கள். இதற்கான முயற்சியாய் சிற்றிதழ்களைத் தொகுப்பதும் அவை குறித்து விரிவாய் முகநூலிலும் தனது வலைப்பூவிலும் எழுதி சிற்றிதழ் ஆசிரியர்களை ஊக்குவிப்பதில் எனக்குத் தெரிந்து மிக முக்கியமானவர் ஐயாதான். சிற்றிதழ்களை பரவலாய் வெளிவரச் செய்து அவற்றின் உயிர்ப்பை பிரகாசமாக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார். அதன் ஒரு முயற்சியாக ஜனவரி மாதத்தில்  'சிற்றிதழ்கள் உலகம்' என்னும் சிற்றிதழை ஆரம்பித்து இருக்கிறார். முதல் இதழின் வெளியீடு எல்லா நாட்டிலும் நண்பர்களால் நிகழ்த்தப்பட்டது.


சிற்றிதழ்கள் எதுவானாலும் அவற்றின் பிடிஎப் அவர் கைக்கு கிடைத்ததும் நண்பர்களுக்கு எல்லாம் அனுப்பிக் கொடுப்பார். அப்படி அவர் அனுப்பும் பலரில் அடியேனும் ஒருவன். எத்தனையோ இதழ்களை எனக்கு அனுப்பியிருக்கிறார். அவற்றை வாசித்தாலும் அவற்றைக் குறித்து இதுவரை நான் அவரிடம் பேசவில்லை என்பது எனக்கு வருத்தமே. ஒருவர் நமக்கு தொடர்ந்து அனுப்பும் போது அதுகுறித்தான நமது பார்வை என்ன என்று அறியும் ஆவல் அவருக்கு கண்டிப்பாக இருக்கும், அப்படியிருக்க நாம் அது குறித்து பேசவில்லை என்றால் நமக்கு அவர் அனுப்பும் இதழ்கள் மீது ஆர்வமில்லை என்றுதான் எடுத்துக் கொள்வார்கள். ஐயாவுடன் முகநூலின் மூலமாக நிறைய பேசியிருக்கிறேன் ஆனாலும் இதழ்கள் குறித்து அவருடன் பேசவில்லை என்பதே உண்மை.

சிற்றிதழ்கள் உலகம் வெளியாகும் போது என்னை அபுதாபியில் நண்பர்களை வைத்து வெளியிட்டு போட்டோ அனுப்பச் சொன்னார். நானும் புத்தகத்தை பிரிண்ட் எடுத்து வந்தேன். கனவுப் பிரியன் அண்ணாவுடன் சேர்ந்து செய்யலாம் என்று நினைத்திருந்தபோது சல்லிக்கட்டு பிரச்சினை வர, களத்தில் இருந்த நண்பனுடன் தொடர்பில் இருந்த நிலையில் புத்தக வெளியீடு பற்றி யோசிக்கவில்லை. சிற்றிதழ்கள் உலகம் குறித்து எழுத வேண்டும் என்று நினைத்திருந்து சில எதிர்பாராத சுனாமியால் பல பிரச்சினைகளைச் சந்தித்து பழைய அறையில் இருந்து வெளியாகி புதிய அறைக்குச் சென்ற சூழலில் எழுத முடியாமல் அடுத்தடுத்து பல நிகழ்வுகள், பண நெருக்கடி பிரச்சினைகள் எழ, முகநூலில் ஐயாவின் பகிர்வுகளைப் பார்க்கும் போதெல்லாம் அபுதாபியில் வெளியிட்டு போட்டோ அனுப்புங்கள் என்று சொன்னவருக்கு நாம் கொடுத்த மரியாதை இதுதானா என்று மன வருத்தம் கொண்டது உண்மை. இனிமேல் அதை வெளியிட்டு போட்டோ எடுத்து அனுப்புவது சரியல்ல... காரணம் உலகளவில் சிற்றிதழ்கள் உலகம் பிரபலமாயாச்சு... 

சிற்றிதழ்கள் இப்போது பரவலாய் வர ஆரம்பித்திருக்கின்றன... நிறைய சிற்றிதழ்கள் இலங்கையிலிருந்தோ... உலக நாடுகளில் புலம்பெயர்ந்திருக்கும் இலங்கைத் தமிழர்கள் மூலமாகவோ வருகின்றன என்று நினைக்கிறேன். சிற்றிதழ்கள் கவிதை, கட்டுரைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. கதைகளுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். ஐயா தனது இதழில் சிறுகதைகளுக்கு வாய்ப்புக் கொடுத்திருந்தார். அதுவும் அவர் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை முதல் இதழில் வெளியாகியிருந்தது. இதழ் மிக சிறப்பாக வந்திருந்தது. இதழ் குறித்தான விரிவான பார்வை ஒன்றைப் பகிரத்தான் ஆசை... அது குறித்து எழுதவே எண்ணியிருந்தேன். இப்போதைய சூழல் வாசிப்பின் மீதும் எழுத்தின் மீதும் இன்னும் பற்றற்ற நிலையையே அளித்திருக்கிறது, அதனால்தான் வாசிப்பில், எழுதுவதில் சிறு தடங்கல்.


கல்லூரியில் படிக்கும் போது 'மனசு' அப்படின்னு கையெழுத்துப் பிரதி நடத்தி, கல்லூரியில் ஆசிரியர், மாணவர்களிடம் மனசுக்கு செல்வாக்குப் பெற்று வைத்திருந்தோம். மிகச் சிறப்பான இதழாக 12 காப்பிகள் போட்டோம். கையினால் எழுதி, அதை பிரிண்ட் எடுத்து புத்தகமாக்கி வெளியிட்டு வந்தோம். ஆறு நண்பர்களின் கூட்டு முயற்சியால் மிகச் சிறப்பான இதழாக மனசு வெளியானது. அப்போது எங்கள் கல்லூரியில் ஏகப்பட கையெழுத்துப் பிரதிகள்... சீனியர்ஸ், ஜூனியர்ஸ் என ஆளாளுக்கு புத்தகம்... நூலகத்தில் எல்லா இதழ்களும் இருக்கும். இதழாளர்களுக்குள் போட்டியும் இருந்தது. நவநீ, கவி'தா', ரோஜா என இன்னும் இன்னுமாய் பல இதழ்கள். கவி'தா' இதழ் நடத்திய நண்பர் பரக்கத் அலி சிறுகதைப் போட்டி வைத்து அதில் தேர்வான கதைகளைத் தொகுத்து புத்தகமாக்கி வெளியீட்டு விழா எல்லாம் வைத்தார். இப்போது கல்லூரியில் அப்படி கையெழுத்துப் பிரதிகள் இருக்கான்னு தெரியலை. மனசுங்கிற பேர் என் மனசுக்குள் ஓட்டிக் கொள்ள என் வலைப்பூவும் 'மனசு' ஆனது,

சிற்றிதழ்கள் உலகம் மிகச் சிறப்பான சிற்றிதழாய் வெளிவர வாழ்த்துவதுடன் இன்னும் நிறைய படைப்புக்களுக்கும் சிற்றிதழ்களுக்கும் அது வாசல் திறந்து விட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

அவரின் வலைப்பூ... சிற்றிதழ்கள் உலகம்

சிற்றிதழ்கள் உலகம் இதழை வாசிக்க விரும்பும் நண்பர்கள் எனக்கோ அல்லது ஐயாவின் தளத்திலோ விருப்பம் தெரிவித்து மின்னஞ்சல் முகவரி அனுப்பினால் உடனே அனுப்பி வைக்கப்படும்.
-'பரிவை' சே.குமார்.

8 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

நல்ல தகவல். என் மின் அஞ்சல் முகவரி உங்களுக்குத் தெரியும். நானும் சிறுவயதில் தென்றல் என்ற பெயரில் கையெழுத்துப்பத்திரிகை நடத்தியதுண்டு. நூலகத்தில் வைத்து, வாசகர் கடிதம் எல்லாம் துரத்தித் துரத்தி வாங்கிப் போட்டதுண்டு!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தொடர்பு கொள்கிறேன்... தகவலுக்கு நன்றி...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

உடனே தொடர்வு கொள்கின்றேன்
ந்ன்றி நண்பரே

Nagendra Bharathi சொன்னது…

நன்றி

Yarlpavanan சொன்னது…

சிந்திக்க வைக்கும் சிற்றிதழ் பற்றிய பதிவு
நானும் பாராட்டுகின்றேன்!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நல்ல தகவல் குமார்! எங்கள் மின் அஞ்சல் முகவரி தங்களுக்குத் தெரியும்தானே! ஐயா அவர்களின் தளத்திலும் தொடர்பு கொள்கின்றோம். மிக்க நன்றி!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

அரிய பணியைச் செய்துவருபவரைப் பற்றிய தங்களின் பதிவிற்கு நன்றி. அவருக்கு பாராட்டுகள்.

Kasthuri Rengan சொன்னது…

nice info boss thank you