மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

எழுத்தை ஆயுதமாக்கு... நண்பனின் கடிதம்

ன் அன்புத் தோழன் கவிஞர்... பேச்சாளர்... முற்போக்கு சிந்தனைவாதி... தமிழ்க்காதலன் முகநூலில் எழுதிய கடிதம்... இது எனக்கானது மட்டுமல்ல... எழுதும் நம் அனைவருக்குமான கடிதம்... வாசியுங்கள்... எழுத்தின் வலிமையை உணர்வீர்கள்...

தயம்நிறை அன்பில் நெகிழும் அன்புத் தோழனே, இனிய பரிவை.சே.குமார், அன்பானவற்றை பண்பான எழுத்தில் தரும் படைப்பாளியே, நல்ல எழுத்தை இரசமாக்கித்தரும் வலிமை கொண்டவன் தான் சிறந்த படைப்பாளியாகிறான். எழுதுவது கலை, எழுத்து சாகா வரம் பெற்ற சாதனம். உலகம் இன்று அதனை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. உயிர்களை ஆளும் வலிமையும் எழுத்துக்கு உண்டு. எண்ணங்களை ஓவியமாக்கும் அழகு எழுத்து. உயிரின் உயில் வடிவம் எழுத்து. நன்மைக்கும், தீமைக்கும் பொதுவானவற்றில் எழுத்தும் ஒன்று.
அத்தனை வலிமையான எழுத்தை இன்று நாம் எதற்கு பயன்படுத்துகிறோம்? எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் எழுத்தின் தன்மை தீர்மானிக்கப்படுகிறது. பேச்சுக்கும் எழுத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. பேசுகிற எல்லாவற்றையும் நாம் எழுதுவதில்லை. எழுதுகிற அல்லது இதுவரை எழுதப்பட்டிருக்கிற எல்லாவற்றையும் நாம் பேசுகிறோமா என்றால் அதுவும் இல்லை. ஆனால் எதை எழுத வேண்டும் என்பதில், என்ன எழுத வேண்டும் என்பதில், ஏன் எழுத வேண்டும் என்பதில் ஒரு தெளிவு அவசியமாகிறது. அதனால்தான் எழுத தொடங்கும் முன்பு எல்லோரிடமும் ஒரு சின்ன தயக்கமும், தடுமாற்றமும் வருகிறது.
அறிவை ஆயுதமாக்கும் குணத்தைப் போலவே, மனிதனுக்கு எழுத்தையும் ஆயுதமாக்க தெரிந்திருக்கிறது. ஆயுதங்கள் எப்போதும் ஏதோ ஒன்றை காப்பாற்ற அல்லது காப்பாற்றிக்கொள்ள ஏதேனும் ஒன்றை தடுப்பது அல்லது அழிப்பது என்பதற்கான படைப்புகள். எனவே, எழுத்தும் ஓர் ஆயுதமாகிறது. இதை நீ நன்கு கவனிக்க வேண்டும். பயன்படுத்துபவன் யார் என்பதை பொறுத்து, கருவிகளின் விளைவுகள் அமைகிறது. அதனால்தான் எழுத்தில் பல விடயங்களை மறைமுகமாகவும், பல சமயம் எழுதியதை மறைத்தும் வைத்தார்கள் நம் முன்னோர்கள்.
அடுத்த தலைமுறைக்கு தெரியவும் வேண்டும், அதே சமயம் தகுதியற்ற, தீமைகளை விளைவிக்க கூடியவர்களின் கைகளில் சிக்கிவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமும் வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்கள். இன்றைய சமூகம் இந்த நிலைகளில் இருந்து நிறைய மாற்றங்களை கண்டுள்ளது. யாரும், எதையும் எழுதுவதற்கான களமும், வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. எண்ணிப்பார். பனை ஓலைகள், சில தாவர இலைகள், கரும்பாறைகள் இவைகள்தான் எழுதும் பொருட்கள் என்றிருந்தால் நாமெல்லாம் இப்போது எப்படி எழுதி இருப்போம்..? நம்மில் எத்தனைப் பேர் எழுத்தாளர்களாக பரிணமித்திருப்பார்கள்..? யோசித்துப்பார். நீ எழுதும் நிலையை எட்டியது எப்படி..? காலம் நம்மை எப்படிப்பட்ட இடத்தில் நிறுத்தி இருக்கிறது. இத்தனை வசதிகளும், வாய்ப்பும் இன்றைக்கு மனித அனுபவத்தாலும், முயற்சியாலும் கிடைத்திருக்கிறது. அதை எப்படி, எதற்கு பயன்படுத்துகிறோம்..? அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வாழுகிற ஒவ்வொரு தலைமுறையும், நமக்கு முன் வாழ்ந்து போன முன்னோர்களுக்கு கடன்பட்டவர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.
நமக்கும் நமக்குப்பின் வரும் தலைமுறைக்கும் நாம் எதை விட்டுச்செல்ல வேண்டும் என்பதில் ஒரு தெளிவு வேண்டும். அதை எழுத்தாக்கித்தர வேண்டும். தலைமுறைகளை கடந்து நிற்கும்படியான எழுத்தைப் படைத்திருக்கிறோமா என்கிற கேள்வி எழ வேண்டும். படைக்கும்போதே அந்த எழுத்தின் காலம் தீர்மானிக்கப்படுவதில்லை என்பது சரி. ஆனால் நிற்கும் எழுத்துக்களை கவனி. எத்தன்மையுடையவை சிறந்தது என்பது எளிதில் விளங்கும். எந்த வடிவத்தில் கொடுக்கிறோம் என்பதல்ல விடயம், என்ன கொடுக்கிறோம் என்பதுதான் முக்கியம். உனக்கே தெரியும். பல நல்ல பழக்கமும், ஒழுக்கமும் கூட சொல்லிகொடுக்கப்படாததாலும், சொன்ன விதம் அடுத்த தலைமுறைகளுக்கு புரியாததாலும், இன்றைக்கு நாம் இழந்து நிற்கும் உன்னதங்கள் ஏராளம். நமக்கு அதுபற்றியே எதுவும் தெரியாது என்பது மிகப்பெரிய கொடுமை. நமது அறியாமையும், மூடநம்பிக்கையும் எல்லாவற்றுக்கும் காரணமாகிறது.
மனித இனம் மற்ற உயிரினங்களில் இருந்து பன்மடங்கு உயர்நிலை உடையதாய் இருக்கிறது. உடலியல் சார்ந்தும், உளவியல் சார்ந்தும், அறிவியல் சார்ந்தும், அனுபவத்தாலும் சிறந்த உயிரினமான மனித இனத்துக்கு நாம் விட்டுப்போகும் அடையாளம் என்ன…? அனுபவ பாடம் என்ன..? அதை செய்திருக்கிறோமா..? அது பற்றி எழுத யோசித்திருக்கிறோமா..? சிந்தித்துப் பார்.
எத்தனை ஆயிரம் விலங்குகள், தாவரங்கள் அழிந்துபோய் விட்டன. அவற்றை பற்றிய அறிவு நமக்கு இன்று இல்லை. ஒரு சிறு இலையை கூட உருவாக்க முடியாத நம்மால், எத்தனை உயிரினங்கள் தொடர்ந்து அழிந்துக்கொண்டிருக்கிறது இந்த பூமியில். ஒரு செடி அழிந்தால், மருத்துவ குணம் கொண்ட ஒரு மூலிகையை நாம் அழிக்கிறோம் என்று பொருள். இப்படி அவை அழிய அழிய, மனிதனுக்கு வரும் நோய்களின் எண்ணிக்கைப் பெருகும் என்பது எத்தனை பேருக்கு சிந்திக்க தோன்றும்.
ஒரு விலங்கினம் அழிய, அதன் தொடர்ச்சியாய் எத்தனை உயிரினம் தானே அழியும் என்கிற விடயத்தை நம்மவர்களுக்கு புரியும்படி யார் சொல்வது…? உயிரியல் அடிப்படை அறிவை படித்தவர்கள் பின்பற்றுவதில்லை. அதன் விளைவை இன்று நாம் சந்தித்துக்கொண்டிருக்கிறோம். மனிதனின் தவறான செயல்பாடுகளால், ஏற்படும் பின்விளைவுகளை தொடர்ந்து கவனித்து, எது சரி, எது தவறு என்கிற உண்மையை சொல்லுவது யார் என்ற கேள்வி முன் நிற்கிறது.
பொழுதுபோக்குக்கு எழுத்தில் இடம் கொடுக்கலாம். தொடர்ந்து அதையே செய்வதற்கு இந்த பிறவி எதற்கு என்று யோசிக்கத் தோன்றுகிறது. எழுத்தாற்றல் உடையவர்கள் இந்த பூமிக்கும், அதன் மேல் உயிர்வாழும் உயிரினங்களுக்கும் செய்ய வேண்டியது ஏராளம் உண்டு. நீ அதை நோக்கித் திரும்புவாய் என நம்புகிறேன்.
என்றும் அன்புடன்,
உண்மையைத் தேடும் தமிழ்க்காதலன். 

கடிதத்தை இங்கு பகிர்ந்து கொள்ள அனுமதித்த நட்புக்கு நன்றி.

நண்பனின் வலைப்பூ : இதயச்சாரல்..!

முகநூல் முகவரி : தமிழ்க்காதலன்
-'பரிவை' சே.குமார்.

13 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

ரசனையான கடிதம்.

Unknown சொன்னது…

தமிழ்க்காதலனின் இதயச்சாரலில் நனைந்து மகிழ்ந்தேன் !

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

உங்கள் நண்பனின் கடிதம் அனைவருக்குமே எழுதியதைப் போலுள்ளது. ஆழமான கருத்துகள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு கடிதம். உங்கள் இருவருக்கும் பாராட்டுகள்.....

Yarlpavanan சொன்னது…

"மனித இனம் மற்ற உயிரினங்களில் இருந்து பன்மடங்கு உயர்நிலை உடையதாய் இருக்கிறது. உடலியல் சார்ந்தும், உளவியல் சார்ந்தும், அறிவியல் சார்ந்தும், அனுபவத்தாலும் சிறந்த உயிரினமான மனித இனத்துக்கு நாம் விட்டுப்போகும் அடையாளம் என்ன…? அனுபவ பாடம் என்ன..? அதை செய்திருக்கிறோமா..? அது பற்றி எழுத யோசித்திருக்கிறோமா..? சிந்தித்துப் பார்." என்ற கருத்தை வரவேற்கிறேன்.

தமிழ் மொழி வாழ வேண்டுமெனின் தமிழ் இலக்கியம் வாழ வேண்டும். தமிழ் இலக்கியம் வாழ வேண்டுமெனின் சிறந்த இலக்கியப் படைப்புகள் வேண்டும். அதனை எழுத நாம் முயற்சி செய்வோம்.

Yarlpavanan சொன்னது…

"மனித இனம் மற்ற உயிரினங்களில் இருந்து பன்மடங்கு உயர்நிலை உடையதாய் இருக்கிறது. உடலியல் சார்ந்தும், உளவியல் சார்ந்தும், அறிவியல் சார்ந்தும், அனுபவத்தாலும் சிறந்த உயிரினமான மனித இனத்துக்கு நாம் விட்டுப்போகும் அடையாளம் என்ன…? அனுபவ பாடம் என்ன..? அதை செய்திருக்கிறோமா..? அது பற்றி எழுத யோசித்திருக்கிறோமா..? சிந்தித்துப் பார்." என்ற கருத்தை வரவேற்கிறேன்.

தமிழ் மொழி வாழ வேண்டுமெனின் தமிழ் இலக்கியம் வாழ வேண்டும். தமிழ் இலக்கியம் வாழ வேண்டுமெனின் சிறந்த இலக்கியப் படைப்புகள் வேண்டும். அதனை எழுத நாம் முயற்சி செய்வோம்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமையான ரசனையான கடிதம்! வாழ்த்துகள்!

//"மனித இனம் மற்ற உயிரினங்களில் இருந்து பன்மடங்கு உயர்நிலை உடையதாய் இருக்கிறது. உடலியல் சார்ந்தும், உளவியல் சார்ந்தும், அறிவியல் சார்ந்தும், அனுபவத்தாலும் சிறந்த உயிரினமான மனித இனத்துக்கு நாம் விட்டுப்போகும் அடையாளம் என்ன…? அனுபவ பாடம் என்ன..? அதை செய்திருக்கிறோமா..? அது பற்றி எழுத யோசித்திருக்கிறோமா..? சிந்தித்துப் பார்."// அருமையான கருத்து

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணாஅ...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஜி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் கவிஞரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் துளசி சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.