மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

மனசு பேசுகிறது : எங்கே போகிறோம்..?

நாம் எப்படிப்பட்ட பாதையில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறோம் என்று நினைக்கும்போது வெட்கக்கேடாகவும் வேதனையாகவும் இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு வரை ஒருவருக்கு ஒருவர் உதவி மனப்பான்மையோடு மட்டுமில்லாமல் ஆபத்தில் கை கொடுத்தும்... சந்தோஷத்தில் பங்கெடுத்தும் வாழ்ந்தோம், ஆனால் தற்போது எல்லாம் மாறிவிட்டது... இன்றைய நிலையில் நம் கையிலிருக்கும் அந்தச் சிறிய சாதனமே உலகமாகிவிட்டது... மனிதனின் மனதை அடியோடு மாறச் செய்த அந்த சாதனம் - செல்போன்.

இறந்து கிடப்பவன் 41 வயதுக்காரன்...

உலகம் அறியாத இரண்டு குழந்தைகளின் தந்தை...

ஒன்பது மாதக் குழந்தையை பார்க்கும் போதெல்லாம் கண்கள் தழும்புகிறது...

அப்படிப்பட்டவனின் இறப்பில் எத்தனையோ குறைகளைச் சொல்கிறோம்... இறந்தவனின் ஆத்ம சாந்திக்காகவும் அவனின் இளம் மனைவி, குழந்தைகளின் வாழ்க்கைகாகவும் பிரார்த்திக்க வேண்டிய மனது அவன் குடியால் இறந்தான் என்றும் தன்னைப் பற்றி கவலைப்படாததால் இறந்தான் எனவும் சொல்கிறது... அதைப் பற்றி முகநூல் என்னும் கொலைக்களத்தில் பக்கம் பக்கமாய் எழுதுகிறார்கள்... ஏதோ இவர்கள் பக்கத்தில் இருந்து பார்த்ததைப் போல... ஆனந்த யாழை அவனுக்காக மீட்ட வேண்டாம்... அவன் இறந்து கிடந்த அந்த நாளில் அதை உடைத்து அடுப்பில் வைப்பதில் அப்படி என்ன ஒரு ஆனந்தம்..? இது ஆனந்தமல்ல... மனக் கொடூரம்... ஏதோ உலகுக்கு உண்மையைச் சொன்னதாய் ஒரு இறுமாப்பு... இங்கு எவனும் வாழ்ந்து கொண்டிருக்கப் போவதில்லை... பிறக்கும் போதே எல்லாருக்கும் இறப்பையும் எழுதித்தான் வைத்திருக்கிறான்... அது எப்படி வரும் என்பதை அறிந்து கொள்ள முடியாத நிலையில்தான் வைத்திருக்கிறான் என்பதை நாம் மறந்துவிட்டு ஒருவனின் இறப்பைக் குறித்து எழுதித் தள்ளுகிறோம்.

சரி எங்கே போகிறோம்...? என்ற தலைப்பிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கலாம்... செல்பேசியில் ஆரம்பித்து கோபத்தீயில் நுழையவது ஏன் என்று நினைக்கலாம். இறந்தவரைப் பற்றி வாய்க்கு வந்தபடி அள்ளிவிடும் நம் செயல்கள் மீது கோபம் கோபமாக வருகிறது...  எதற்காக இந்த செய்கை... அபரீதமாக விழும் லைக்குகளுக்காகத்தானே.. வெட்கக்கேடு.

இறந்தவன் பிரபலம் என்னும் போது அவனை விடுத்து அவனின் மறைவுக்கு துக்கம் விசாரிக்க வரும் பிரபலங்கள்... குறிப்பாக, நடிகர்கள்... சோகமே உருவாக வரும் போது இந்த ஊடகத்துறையினர் செய்யும் அட்டகாசங்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை... மனிதம் மறந்த மனிதர்கள் இவர்கள்.... சார் இப்படி நில்லுங்க... இங்க பாருங்க... அந்த மாலை தொட்டுக் கொண்டு நில்லுங்கள் என ஏதோ திருமண வீட்டிற்கு வந்தது போல் அவர்களை நிறுத்தி போட்டோவும் வீடியோவும் எடுத்துக் கொள்கிறார்கள்... இதெல்லாம் எதற்காக தங்கள் பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகளின் வருமானத்துக்காகவே என்பதை நாம் அறிவோம்.

திருமணம் என்றதும்தான் ஞாபகத்து வருகிறது... திருமணங்களில் இந்த வீடியோக்காரர்களும் போட்டோ எடுப்பவர்களும் பண்ணும் கூத்துக்கு அளவே இல்லை. தாலி கட்டும் நேரத்தில் சுத்தமாக மறைத்து விடுவார்கள்... தாலி கட்டுவதைக் காணக் கூடியிருக்கும் கூட்டம் அதைக் காணவும் முடியாது... மணமக்களுக்கு அட்சதை போடவும் முடியாது. போடும் அட்சதை எல்லாம் இவர்கள் தலையில்தான் விழும்... என் திருமணத்தில் கூட முதல் நாள் இரவு தாய்மாமன் காப்புக்கட்டி மாலை இடும் போது போட்டோ, வீடியோக்காரர்கள் அதை பதிவாக்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது வீடியோ எடுத்தவன் 'சார்... மாலையைத் தொட்டுக்கிட்டு இங்க பாருங்க...' என்றதும் மாமாவுக்கு வந்த கோபத்தைப் பார்க்கணுமே... 'மாலை போடும் போது எடுத்தியல்ல.... அங்க தொடு... இங்க தொடுன்னு சொல்லி அப்படி நில்லு இப்படி நில்லுன்னு சொல்ல நீ யாருய்யா...? மாலை போட்டாச்சு... அதை போட்டோவும் எடுத்துட்டே... அது போதும்... நல்ல காரியத்துக்கு போட்ட மாலையை மறுபடியும் போட்டு எடுக்கச் சொல்றே...?' என்று கத்த, வீடியோக்காரனும் போட்டோகிராபரும் அங்கிருந்து எஸ்கேப்.

ஒரு துக்க நிகழ்வுக்கு ரஜினியோ, கமலோ, அஜீத்தோ, விஜய்யோ... மற்றவர்களோ வரும்போது ஊடகத்துறையினர் மட்டுமின்றி அவர்கள் பின்னே வரும் அல்லக்கைகள்... அதாங்க ரசிகர்கள்ன்னு சொல்லிக்கிட்டு குடும்பத்தைப் பற்றி கவலையின்றி பின்னால் திரியுமே அந்தக் கூட்டம் செய்யும் அலப்பறைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. கவிஞனின் மறைவில் இது போன்ற மானங்கெட்ட நிகழ்வுகளை வீடியோக்களில் பார்க்க நேர்ந்தது. விஜய் வருகிறார்... மாலை போடுகிறார்... அவர் பின்னே ஒரு பெரிய கூட்டம் சத்தமிட்டபடியே வருகிறது... ஊடகத்துறையினரின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்கிறார். அந்த நேரத்தில் அங்கு நின்ற பெரும்பாலானவர்களின் செல்போன் விஜய்யை படம் பிடிக்கிறது.... இது எவ்வளவு கேவலமான செயல்... துக்க வீடு... ஒருவன் இறந்து கிடக்கிறான்... அவனுக்கு அஞ்சலி செலுத்த வந்திருக்கிறான் மற்றொருவன்... இங்கே அவனை விடாமல் துரத்தி வீடியோவும் போட்டோவும் எடுப்பது எதற்காக..? முகநூலில் போட்டு லைக் வாங்கத்தானே...? அதற்காக எந்த இடத்தில் செய்ய வேண்டும் என்பதில்லையா..? மனிதத்தை விற்று விட்டு மரணத்துக்கு ஏன் வருகிறார்கள்..? இது ஒரு சினிமா விழாவோ... திருமண விழாவோ... கடை திறப்பு விழாவோ அல்ல... ஒரு மனிதனின் இறுதி யாத்திரை... சோகம் சூழ்ந்த அந்த இல்லத்துக்குள் செல்போன்களின் அணிவகுப்பும் அல்லக்கைகளில் அடாவடிகளும் தேவையில்லையே...

நான் மேலே சொன்னது விஜய் வரும்போது மட்டுமல்ல... ஒவ்வொரு நடிகனும் வரும்போதும் நிகழ்ந்தது... அவர்களேனும் தங்கள் பின்னால் வரும் மற்றவர்கள் உள்ளே வர வேண்டாம் என்று தங்களைத் தனிமைப்படுத்தி வந்திருக்கலாம் என்றே தோன்றியது... துக்க வீடுதானே.... அவர்களுக்கு எதுக்கு இந்த பூனைப்படைகள்... செல்போனில் வீடியோ எடுப்பது மகா கேவலம்.. நம்ம வீட்டு துக்க நிகழ்வில் செல்போனை தூக்கிக் கொண்டு வீடியோ எடுப்போமா என்பதை யாரும் சிந்திப்பதே இல்லை... சிந்திக்கும் அறிவும் தற்போது நமக்கு இல்லை... நம் மூளை செல்பேசிக்குள் போய்விட்டது... நம் எண்ணமெல்லாம் முகநூல், வாட்ஸ்அப், டுவிட்டர் என குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறது.

ஒருவன் வெட்டுப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டு கிடந்தாலும் நாம் உதவ நினைப்பதில்லை... செல்போனில் வீடியோ எடுக்கத்தான் நினைக்கிறோம். சமீபத்தில் தில்லியில் நடந்த நிகழ்வு எவ்வளவு கேவலமானது... அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவனை பார்த்துக் கொண்டே பயணிக்கிறோம்... அதில் ஒரு போலீஸ் வண்டியும் செல்வதுதான் வேதனை... இதைவிடக் கொடுமை என்னவென்றால் அடிபட்டவனின் செல்போனை எடுத்துக் கொண்டு ஒரு மனிதன் போவதுதான்... நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்...?

ஒரு துக்க வீடு... கேதம் கேக்க வந்தவரின் கையில் ஆண்ட்ராய்டு போன்... என்னைப் பொறுத்தவரை துக்க வீடுகளுக்கு செல்போன் கொண்டு போகக்கூடாது என்று நினைப்பேன்... அப்படியே கொண்டு செல்லும் சூழல் வந்தால் அதை சைலண்ட் பண்ணி வைத்து விடுவேன்... ஏனென்றால் நாம் ரிங்க்டோனாக ஏதாவது பாடலை வைத்திருப்போம்... அது அந்தச் சூழலில் யாருடைய அழைப்பின் பேரிலாவது பாட ஆரம்பித்தால்.... சொல்ல வந்ததைச் சொல்லாம விட்டுட்டேன் பாருங்க... அந்த ஆண்ட்ராய்டு செல்போன்காரர் துக்கம் விசாரித்துவிட்டு சேரில் அமர்ந்து எப்படி இறந்தார்...? என அருகிலிருந்தவரிடம் விசாரித்துக் கொண்டிருந்தார்... அப்போது அவருக்கு போன் வர... 'இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே... இன்பத்தில் ஆடுது என் மனமே...' அப்படின்னு கூவ ஆரம்பிச்சிருச்சு... சாவகாசமா எடுத்து 'என்ன மச்சான்.... ம்... கேதத்துக்கு வந்திருக்கேன்... இப்ப வந்திருவேன்...' அப்படின்னு பேசிக்கொண்டே வெளியில் போனார். எப்படிப்பாடல் பாருங்க... ஒருத்தனை சாகக் கொடுத்துட்டு குடும்பமே சோகத்துல கிடக்குற நேரத்தில இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமேயாம்.... அந்தாளு செத்தது இவனுக்கு ஆனந்தம் போல... என்னத்தைச் சொல்ல... சிலர் துக்க வீட்டில் வந்திருந்து கொண்டுதான் போனில் பேச ஆரம்பிப்பார்கள்... இவர்கள் எல்லாம் எதற்காக துக்க வீட்டிற்க்கு வருகிறார்கள்.

அந்த 41 வயதுக்காரனின் மரணம் மட்டுமின்றி... அடிபட்டு உயிருக்குப் போராடி மரித்துப்போன தில்லிக்காரனின் மரணம் மட்டுமின்றி... பெரும்பாலான துக்கங்களிலும் துயரங்களிலும் நாம் நடந்து கொள்ளும் முறை இதுதான்... மனிதாபிமானத்தை இறக்கி வைத்துவிட்டு செல்போன்களைச் சுமக்க ஆரம்பித்து விட்டோம்... எந்த ஒரு நிகழ்வு என்றாலும் உதவி செய்வதைவிட வீடியோ எடுப்பதிலும் அதைப் பகிர்வதிலுமே நம் எண்ணத்தைச் செலுத்துகிறோம். இன்று மனிதாபிமானம் அற்ற மனிதர்களாக வாழ ஆரம்பித்திருக்கும் நாம் இனிமேலாவாது நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்... செல்போன்களின் பிடியில் இருந்து விடுவித்துக் கொண்டு வாழ்வை ரசித்து... பிறருக்கு உதவி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்... இதெல்லாம் நடக்குமா தெரியவில்லை... மாற்றம் வருமா தெரியவில்லை... நம் மூளையையும் உணர்வுகளையும் அடகு வைத்துவிட்டு எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பதை அறியாமல் நாம் எங்கோ போய்க் கொண்டிருக்கிறோம்.... 

-'பரிவை' சே.குமார்.

12 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

#இதைவிடக் கொடுமை என்னவென்றால் அடிபட்டவனின் செல்போனை எடுத்துக் கொண்டு ஒரு மனிதன் போவதுதான்...#இதைப் பார்த்தபோது நானும் நொந்துதான் போனேன் !இந்த கொடுமையெல்லாம் பார்க்கும் போது ,இந்த உலகைவிட்டே சீக்கிரம் நான் போய்விடனும் என்ற எண்ணம்தான் வருகிறது !சமீபத்தில் ,டாகடர் என்னிடம் 'இவ்வளவு சுகர் இருந்தால் இதய வலிகூட உங்களுக்குத் தெரியாது 'என்று சொன்னார் .'வலிஇல்லாமல் போவது நல்லதுதானே ?'என்றேன் .இதைதான் ,சமீபத்தில் என் வலைப்பூவில் அனுபவம் என்று சொல்லாமல் எழுதியிருந்தேன் !

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஜி...
ஆமாம் சுகர் அதிகமிருந்தால் தூக்கத்தில் அட்டாக் வந்தால் வலியே தெரியாமல் இறந்து விடலாம்... சமீபத்தில் எங்க சின்னையாவின் இறப்பு அப்படித்தான்... நாமெல்லாம் இன்னும் பாக்க வேண்டியது இருக்கு ஜி... மனிதாபிமானம் அற்ற ரோபோக்களாக நாம் தெருவில் திரிவதைப் பார்த்துட்டுத்தான் போவோம்...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

Yarlpavanan சொன்னது…

அருமையான கண்ணோட்டம்
தங்கள் எண்ணங்களை வரவேற்கிறேன்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மனிதம் மரித்துவிட்டது.... வேறென்ன சொல்ல....

ஸ்ரீராம். சொன்னது…

மரணத்திலும் கோரை காண்பவர்களிடம் லேசான பொறாமை இருக்கிறதோ என்று தோன்றும்.

திருமணங்களிலும் விழாக்களிலும் மறைக்கும் வீடியோகாரர்கள், போட்டோகிராபர்கள் பற்றி நானும் வெறுத்துப்போய் ஒரு பதிவு எழுதியிருந்தேன்.

பிரபலங்களின் மரண ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் (பொது மக்கள்) கூட, சோகத்துக்காகக் கலந்து கொள்ளாமல், அங்கு வரும் பிரபலன்களைக் காணவே கூட்டம் கூடுவார்கள். சிரித்து, கைகுலுக்க முயற்சித்து போட்டோ எடுத்து மகிழ்வார்கள்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

மனிதம் மரித்து விட்டது நண்பரே
துக்க நிகழ்விலும் தொலைக்காட்சி தன் வணிகத் திறமையைக்காட்டுகிறது
ஆனால் பாழாய் போன மனிதர்கள் ரசிகர்கள் என்னும் பெயரில்,துக்கம் என்பதையும் மறந்து தங்கள் ஆதர்சன நடிகரைப் பார்த்துப் கூச்சல் இடுவதும். மகிழ்ச்சி அடைவதும் வெட்கக் கேடு வெட்கக் கேடு
தம +1

துளசி கோபால் சொன்னது…

உண்மைதான்.... காலம் போற போக்கு............ ப்ச் :-(

துரை செல்வராஜூ சொன்னது…

இந்த அற்பர்களைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை..

வேதனை தான் மிச்சம்..

”தளிர் சுரேஷ்” சொன்னது…

செல்போனில் வீடியோ வந்தாலும் வந்தது எல்லோரும் விடீயோ எடுக்க ஆரம்பித்து விட்டார்கள்! நல்லது கெட்டது எதிலும் இவர்களின் தொல்லை அதிகம்! ஆதங்கத்தை கொட்டி தீர்த்துவிட்டீர்கள்! நல்லதொரு பதிவு! நன்றி!

KILLERGEE Devakottai சொன்னது…

உண்மை அருமையான உலவியல் ரீதியான பிரச்சினை அழகாக சொன்னீர்கள்.
இலவு வீட்டில் செல்போணை அனைத்து வைப்பது நல்ல யோசனை.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

தற்போதைய உலகம் இதுதான்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மிக மிக அருமையான கருத்துகளை முன்வைத்துள்ளீர்கள் குமார். டெக்னாலஜி ஒரு புறம் நன்மை என்றாலும் அடுத்துள்ளவர்களின் மன நிலை புரிந்து கொள்ளாமல் நடக்கும் அசிங்கங்கள் கூத்துகள் அதிகமாகி வருகின்றன...

கீதா: மனிதம் என்பது மரித்து வருவது ஒரு புறம்....மற்றொன்று இந்த செல்ஃபோன் வாட்சப் வந்தாலும் வந்தது, பெண்ணை மணம் செய்து கொடுத்துவிட்டு அதுவும் வெளிநாட்டில் எனும் போது அம்மாக்கள் அடிக்கடி ஃபோன் செய்து மனதைக் கலைக்கும் விஷயமும் நடந்து வருகிறது என்பது இன்னும் வேதனையான விஷயம். குழந்தை அழுவதைக் கூட கவனிக்காமல் ஃபோனில் இருக்கும் பெண்கள் அதுவும் தோழிகள், அம்மாக்களுடன்....இதைப் பற்றி சமீபத்தில் குடும்ப உளவியல் பிரச்சனைகள் என்று என் கவனித்திற்கு வந்தது...இதையும் சேர்த்துக் கொள்ளலாம் இல்லையா குமார்...அருமையான கருத்துகள்

கீதா