உலகில் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் மரணம் நிச்சயம். எனக்கு மரணமே இல்லை என்றோ.. நான் மரணத்தை வென்று விட்டேன் என்றோ யாரும் மார்தட்டிக் கொள்ள முடியாது. மரணமில்லாப் பெருவாழ்வு எனக்கு என்று யாரும் மார்தட்ட முடியாது... ஏனென்றால் வாழ்க்கைப்பாதையில் ஏற்றம், தாழ்வு என எப்படி வேண்டுமானாலும் பயணிக்கலாம்.. அந்தப் பயணத்தில் இறுதி மரணம் என்ற எல்லைக்கோட்டைத் தொடுவதில்தான் நிறைவு பெறுகிறது.
இறப்பு என்பது இத்தனை வயதில்தான் என்ற நிர்ணயம் எல்லாம் எதுவும் இல்லை... கருவிலேயே மரணம் அடைத்த சிசுக்களும் உண்டு... நிறைவாய் வாழ்ந்து சந்தோஷமாய் அனுபவித்து சதமடித்து மரணித்தவர்களும் உண்டு. நமக்கான நாள் எது என்பதை நாம் அறியாமலே மரணம் தன்னுள்ளே வைத்திருக்கும். அந்த நேரம் எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஏன் அடுத்த நொடி கூட நமக்கான மரணம் வரலாம்... நம் வாழ்க்கை நிரந்தரம் அற்றது.
ஒவ்வொரு மரணமும் ஒவ்வொரு விதத்தில் நிகழலாம்... மரணங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியவையே.. அது காலத்தின் கட்டாயம்... ஆனால் தற்கொலைகள் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது... எத்தனை பிரச்சினை இருந்தாலும் அதற்கான தீர்வும் வாழ வழிமுறையும் இருக்கு என்பதை அறியாமல் மூடத்தனமாக எடுக்கும் முடிவு அது. அது கோழைகளின் செயல்... வாழ்க்கையோடு போராடி வெற்றி பெற்றவனுக்கு மரணம் என்பது ஒரு சாதாரண நிகழ்வுதான்... என்னைக்கு இருந்தாலும் போய்த்தானே ஆகணும் என எடுத்துக் கொண்டு பயணிப்பான்... அவனைப் பொறுத்தவரை அது குறித்த மிகப்பெரிய சிந்தனை எதுவும் இருக்கப் போவதில்லை.
ஒவ்வொரு மரணமும் ஏதோ ஒன்றைச் சொல்லிச் செல்லும்... சின்ன வயதில் மரணித்தவர்களை அடக்கம் செய்யும் சுடுகாட்டிற்குச் செல்லப் பயப்பட்டவன்தான் நான்... மீறிச் சென்றுவிட்டு அன்று இரவெல்லாம் தூங்காமல் பயந்து அலறி அம்மா திட்டிவிட்டு துணூறை இட்டு படுக்க வைத்த நிகழ்வுகள் எல்லாம் உண்டு. வளர வளர அதன் மீதான பயம் போய் பேய், பிசாசு என்ற நம்பிக்கையும் இல்லாமல் போனது. திருமணத்திற்குப் பின்னான சில நிகழ்வுகள் அப்படி ஒரு சக்தி இருக்குமோ என்று சிந்திக்க வைத்தது என்பது வேறு விஷயம்.
இந்த விடுமுறையில் மாமாவின் தீடீர் மறைவு மிகப்பெரிய வேதனையைக் கொடுத்தது. அவரை தூக்கிக் குளியாட்டியது முதல் பாடை தூக்கி சுடுகாடு சென்றது வரை என் வயதொத்த எங்கள் உறவுகளுடன் நானும் இருந்தேன். இறந்த மனிதனின் சில்லிப்பான உடலைத் தொட்டுத் தூக்கியது என்பது இதுவே முதல் முறை... பாடை இதற்கு முன்னர் ஒருமுறையோ இருமுறையோ தூக்கியிருக்கிறேன். குளிப்பாட்டும் போது அவரின் முகத்தைப் பார்த்த நொடியில் எனக்குத் தோன்றியதெல்லாம் கடைசியாக என்ன நினைத்திருப்பார் என்பதே... ஆம் அவர் என்ன நினைத்திருப்பார்..? தான் இறந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்த ஒரு மனிதன் மனசுக்குள் என்னென்ன ஓடியிருக்கும்... அதெல்லாமே அந்த மனிதனோடு புதைக்கப்பட்டு விட்டது அல்லவா..? இது அவருக்கானது மட்டுமல்ல... எல்லாருக்குமானதுதான்..
என்னைப் பாதித்த இன்னொரு மரணம் எங்கள் கல்லூரி பேராசிரியரின் மகனின் மரணம். அப்போது நான் கல்லூரியில் வேலை பார்த்தேன். மதியம் அப்பாவைக் கொண்டு வந்து விட்டு விட்டு மறுநாள் பிறந்தநாளுக்கு டிரஸ் வாங்க காரைக்குடி போகிறேன் என்றவனிடம் இப்ப எதுக்குப் போறே..? சாயந்தரம் போகலாமே..? என்றதையும் மீறிச் சென்றான், அவன் சென்று அரைமணி நேரத்தில் அவருக்கு போன் வர, வழியில் விபத்து ஏற்பட்டு மரணம்... ஒரு தனியார் கல்லூரியில் ஆசிரியராய் இருந்தான்... வீட்டுக்கு ஒரே மகன்... திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகவில்லை. அந்த மரணத்தை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எப்படிப்பட்ட துரயச் சம்பவம் இது.
இதேபோல் கல்லூரியில் எங்களுக்கு ஜூனியர் என்றாலும் ஐயா வீட்டில் கூடும் குழுவில் அவனும் ஒருவன்... நல்ல கவிஞன்... ஏழைத்தாய்க்கு மூன்று மகள்களுக்குப் பிறகு குடும்பத்தைக் காப்பான் என்று நம்பிக்கை விதைத்துப் பிறந்தவன்... மிகச் சிறந்த அறிவாளி... கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது உடம்பில் ஒரு மாறுதல்... ஒரு பக்கம் மட்டும் வீங்கிக் கொள்ளும்... ஐயாவும் அலைந்து திரிந்து பார்த்தார்... அவனின் வீட்டிலும் சிரமப்பட்டு பார்த்தார்கள்... ஒருநாள் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் அவன் போய் சேர்ந்து விட்டான்... எங்களுக்கு... ஐயாவுக்கு மிகப்பெரிய இழப்பு என்றாலும் அந்த விதவைத்தாய்க்கு விடைகாண முடியாத இழப்பு அது.
என்னைப் பாதித்த இன்னுமொரு மரணம் இங்கு நிகழ்ந்தது... இங்கு வந்த புதிதில் நாங்கள் தங்கியிருந்த அறைக்கு பக்கத்து அறையில் மலையாளிகளுடன் தங்கியிருந்தான் சென்னையைச் சேர்ந்த நண்பன் ஒருவன், இவனுக்கும் அப்பா இல்லை... வீட்டுக்கு ஒரே பிள்ளை... இவந்தான் அந்த தாயின் எதிர்காலம்... விமான நிலையத்தில் செக்யூரிட்டி பணி... நல்ல சம்பளம்... குடியிலேயே வாழ்க்கை ஓடியது... அவனோட சேர்ந்த நண்பனும் அப்படியே... ஒரு நாள் அதிகாலை நாங்கள் குளிப்பதற்காக வெளியில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம்... இவன் வந்து உங்க பாத்ரூம் பிரியா இல்லையா? என்றபடி அமர்ந்தான். இரண்டு நாட்கள் முன்னர்தான் குடி அதிகமாகி மயங்கி கிடந்து ஹாஸ்பிடலில் சேர்த்திருந்தார்கள். அங்கு இருந்து சொல்லாமல் கொள்ளாமல் வந்துவிட்டான் என்பதை அறிந்ததும் எங்க அறை நண்பர் சத்தம் போட்டார். சிரித்துக் கொண்டே அவங்க பாத்ரூமிலிருந்து ஆள் வெளியேறவும் அங்கு சென்றான். சென்றவனுக்கு உள்ளேயே அட்டாக் வந்தாச்சு... ஆள் அங்கேயே இறந்து விட, பின்னர் போலீஸ் வந்து எடுத்தார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அவனுக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் கூட ஆகவில்லை. அந்தத் தாயும் அவனை நம்பி வந்த பெண்ணும் இப்போது எந்த நிலையிலோ இறைவனுக்கே வெளிச்சம்...
என்னைப் பாதித்த இன்னுமொரு மரணம் மச்சினனுடையது... நான் நண்பனின் வீட்டில் விருந்து சாப்பிட்டு வருகிறேன்... அவன் போகிறான்... அடுத்த ஒரு மணி நேரத்தில் தன்னை முடித்துக் கொண்டான். அதை நினைத்துப் பார்த்தாலே நெஞ்சம் பதறுகிறது... அதன் பின்னான வாழ்க்கை நிகழ்வுகள் எத்தனை சோகத்தை இன்னும் அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் மட்டுமே அறிவோம்.
சில நேரங்களில் இப்படித்தான்.. காலன் தன் கயிற்றை துயரத்தில் இருப்பவர்கள் மீதே செலுத்துவான்... நாலு வருசமா இழுத்துக்கிட்டு கிடக்கு... அதுவும் கஷ்டப்பட்டு... நம்மளையும் கஷ்டப்படுத்துது... என்று புலம்பினாலும் செவி சாய்க்காதவன், அப்பா... மகன் படிச்சி முடிச்சிட்டான்... இனி இந்தக் குடும்பத்துக்கு விடிவுகாலம் வந்தாச்சு என்று சந்தோஷிக்கும் போது அவனை விபத்தில் கொண்டு செல்வான். அதேபோல் ரொம்பநாள் பிள்ளையே இல்லை இப்பத்தான் அந்த ஆத்தா கண்ணைத் திறந்திருக்கா... என்று சந்தோஷப்பட்டால் அந்தச் சிசுவை வயிற்றுக்குள்ளேயே காலி செய்து சிரிப்பான்.
எங்க அய்யா (அப்பாவின் அப்பா) ஒண்ணுக்கு இருக்க வெளியே வந்தவர், எழ முடியாமல் அமர்ந்திருக்க, அந்த நேரம் அந்தப்பக்கம் போன அம்மா, அவர் ஒரு மாதிரி அமர்ந்திருப்பது கண்டு 'என்னம்மான்... என்ன பண்ணுது...?' என்றதும் அவசர அவசரமாக 'ஒண்ணுமில்லத்தா... ஒண்ணுமில்ல' என வேஷ்டியை சரி செய்தவர், எழ முடியாமல் திணற, அந்த நேரத்தில் அத்தையை எழுப்பி இருவருமாக அவரை படுக்கையில் படுக்க வைத்துவிட்டு அம்மா வீட்டில் வந்து படுத்த ஐந்து நிமிடத்தில் அத்தை வீட்டில் இருந்து சத்தமாக ஒரு கேவல் எழ, அம்மா பதறி ஓடினாள் ஐயா இறந்திருந்தார். இதேபோல் இரண்டு மாதம் முன்னர் எங்க சின்னையா, மாங்காய் பறித்த அப்பத்தாவிடம் நீ கூடை தூக்க மாட்டாய் என தன் தோளில் தூங்கி வந்து அடுப்படி அருகே வைத்துவிட்டு காபி போடச் சொல்லிவிட்டு, தோட்டத்துக்கு போனடித்து தோட்டக்காரனிடம் அடுத்த நாளுக்கான வேலைகளை வரிசையாக அடுக்கிவிட்டு கட்டிலில் போய் படுத்தவர், காபியுடன் போனபோது காணாமல் போயிருந்தார். இப்படியான சாவுகள் எத்தனை பேருக்கு வாய்க்கும். இதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும் போல... இல்லையா...
மரணம் என்பது நிச்சயம்... வாழ வேண்டியவர்களை கொடூரமாகக் கொல்வதோ... வாழ வேண்டிய வயதில் தற்கொலை செய்து கொள்வதோ இல்லாமல் வாழ்வில் சந்தோஷத்தை அனுபவித்து சட்டென மரணத்தைத் தழுவுபவர்கள் கொடுத்து வைத்தவர்கள்... அவ்வகை மரணம் எல்லாருக்கும் சாத்தியமில்லை என்பது நமக்குத் தெரியும் அவ்வகையான மரணம் நமக்கு அமைந்தால் நாம் பாக்யசாலிகளே...! சுகப்பிரசவம் போல் சுக மரணங்கள் நிகழட்டும்... துர் மரணங்களுக்கு முதலில் மரணம் நிகழட்டும்.
வாழும் மட்டும் நல்லவர்களாக வாழப் பழகிக் கொள்வோம்... நம் வாழ்வின் நல்ல பண்புகளை விதைத்துச் செல்வோம்.
-'பரிவை' சே.குமார்.
20 எண்ணங்கள்:
இருக்கும் வரை நல்லவனாகவும், மகிழ்ச்சியாகவும் வாழப் பழகுவோம்.
நல்லவராகவே வாழ்வோம்
நன்றி நண்பரே
வணக்கம் நண்பரே நேற்று நேரில் பேசியவை இன்று பதிவாய்.... மரணம் வரும்போது வரட்டும் நானும் மரணத்தைக்குறித்து பதிவு எழுதினேன் தாங்கள் வெளியிட்டு விட்டீர்கள் ஏதோ தெரியவில்லை மனம் மரண நினைவுகளையே.. கொடுக்கின்றது.
நாம் இருக்கும் வரைக்கும் அது வரப் போவதில்லை..
அது வந்த பிறகு நாம் இருக்கப் போவதில்லை!..
- என்றாராம் அறிஞர் ஒருவர்...
எதிர்மறையான எண்ணங்கள் மகிழ்ச்சியான மணித்துளிகளைக் குறைக்கின்றன..
உளவியல் ரீதியாக பலருடைய மன நிலையைப் பக்குவப்படுத்தும் பதிவு. நன்றி.
இந்த பதிவை படிக்கும் போது சீர்காழிகோவிந்தன் அவர்கள் பாடிய பாடல் நினைவுக்கு வருது. முத்து தாண்டவர் இயற்றிய பாடல் என்று நினைக்கிறேன் //மாயவித்தை செய்கிறானே அம்பலவாணன்
உண்டு பண்ணி வைக்கிறான், கொண்டு கொண்டு போகிறான்//
அதை கேளுங்கள் மன ஆறுதல் கிடைக்கும்.
உங்கள் நிலை எனக்கும் ஏற்பட்டு இருக்கிறது, சிறுவயதில் தங்கை(பத்துமாத குழந்தை), 25 வயது அக்கா, சாலை விபத்தில் 33 வயது அண்ணன் , தங்கை பெண் 14 வயது, அண்ணன் பேரன் பிறந்தவுடன், என் அப்பா 51 வயதில் , அத்தை பெண் பிரசவ சமயம் என்று. ஏன் இப்படி இறைவனுக்கு ஏன் இப்படி ஆசை வாழும் தளிர்களை அழைத்து செல்கிறார்? மூப்பு அடைந்து எந்த் ஒரு கஷ்டமும் யாருக்கும் தராமல் போக வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.
மரணம் ஆம் உங்கள் பதிவு நம் மன எண்ணங்களைப் பிரதிபலிக்கும் பதிவு./ ஆனால் அதுதான் இந்த உலகில் மிகவும் உண்மையான ஒன்று யாராலும் மறுக்க முடியாத ஒன்று
//வாழும் மட்டும் நல்லவர்களாக வாழப் பழகிக் கொள்வோம்... நம் வாழ்வின் நல்ல பண்புகளை விதைத்துச் செல்வோம்.// இதே எங்கள் நிலைப்பாடும்...
நல்ல இறை பாடல்களைக் கேளுங்கள் குமார் மனம் கொஞ்சம் சாந்தம் அடையும்.
மரணம் ஒன்று தான் நிஜம்.....
இருக்கும் வரை நல்லதே நினைப்போம். நல்லதையே செய்வோம்....
ன் கண்மணி கார்த்தியை இழந்து நான் தவிக்கும் தவிப்பு...படும் வேதனை...சொற்களால் சொல்ல முடியாது
karthik amma
kalakarthik
வணக்கம் அண்ணா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம் ஐயா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம் அண்ணா...
உண்மைதான் மரண நினைவுகளே சுற்றுகின்றன்...
அதிலிருந்து வெளிவரத்தான் சில மாற்றுக் கருவிலான கதைகள் எழுதியிருக்கிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம் ஐயா...
அதிலிருந்து வெளியாகிவிட்டேன்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம் ஐயா...
ரொம்ப சந்தோஷம் அய்யா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம் அம்மா...
உங்கள் கருத்து நிறையச் சொல்லுது அம்மா...
நானும் அப்படித்தான் நினைப்பதுண்டு.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம் துளசி சார்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம் துளசி சார்...
இப்போது சரி ஆயிருச்சு...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம் அம்மா...
நானும் அறிவேன் அம்மா... அந்த தவிப்பு இறுதி வரை மறையாது...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம் அண்ணா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கருத்துரையிடுக