மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 10 ஜூலை, 2016

கனவு மெய்ப்பட வேண்டும்

ரவணன், சினிமா மீது கொண்ட காதலால் படித்து முடித்ததும் சென்னைக்கு வந்தவன் கிட்டத்தட்ட் மூன்று வருடங்கள் சரியான சாப்பாடு இல்லாமல் நண்பர்களுடன் தங்கிக் கொண்டு சினிமாவில் நுழைய முயற்சி செய்தான். ஒரு வழியாக இரண்டு வருடத்துக்கு முன்னர் தொடர்ந்து வெற்றிப்படங்களை மட்டுமே கொடுத்துவரும் இயக்குநர் ரேவனிடம் இணை இயக்குநராய் சேர்ந்தான். அவனின் தொழில் மீதான பற்றும், வசனம் எழுதும் திறனும் அவரை ரொம்பவே கவர்ந்து விட்டது. அவருக்கு பிடித்த இணை இயக்குநராய் மாறிப் போனான். எந்த ஒரு காட்சி மாற்றம் என்றாலும் அவனைக் கூப்பிட்டுத்தான் ஆலோசிப்பார். அவனுக்குள் ஒரு ஆசை... அவனோட கற்பனையை கருவாக்கி மூன்று கதைகளை உருவாக்கி வைத்திருந்தான். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பெரும்பாலான அறிமுக இயக்குநர்கள் தங்களுடைய முதல் படத்திலேயே அனைத்து சரக்கையும் இறக்கி வைத்து விட்டு அடுத்த படத்தில் கோட்டை விட்டு விடுவார்கள். அப்படி இல்லை என்றால் தயாரிப்பாளர் கிடைக்காமல் கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என பணத்தோடு திரியும் சினிமாவுக்கே லாயக்கில்லாத ஒருவரை தயாரிப்பாளர் மற்றும் நடிகராக்கி படமெடுத்து காணாமல் போய்விடுவார்கள். அந்த வரிசையில் தான் இணைந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். அவனது கிராமத்து மக்களின் வாழ்க்கையை வைத்தே அவனால் பல படங்கள் எடுக்க முடியும் என்பதை அவன் அறிவான். முதலில் ஜெயிக்கணும்...அப்புறம் சமுத்திரகனி போல் சேரன் போல் வாழ்க்கைக் கதைகளைப் பேச வேண்டும் என்று அடிக்கடி நண்பர்களிடம் சொல்வான்.

அவன் மனதில் தனது முதல் கதைக்கு பொறுத்தமான  நடிகர் வளர்ந்து வரும் ராஜராஜன்தான் என்று முடிவு செய்து வைத்திருந்தான். அவரிடம் கதை சொல்வதற்காக கடந்த இரண்டு மாதமாக முயற்சித்து வருகிறான்.  இன்று நாளை என அவரது உதவியாளர் சொல்லிவர, அவரைச் சந்திப்பதற்கான நேரம் அவனுக்கு இன்னும் அமையவில்லை. புதிய நடிகரை வைத்துப் பண்ணிடலாம் என திரையுலக தயாரிப்பாளரும் அவனுடைய நண்பருமான செல்லப்பன் சொல்ல, 'வேண்டாண்ணே முதல் படம் புதிய நடிகர் என்றால் ஜெயிப்பது கஷ்டம்... பிரபல முகம் என்றால் நம்மால் வெற்றி பெற முடியும்... அதுவும் இப்ப வளர்ற நடிகர்கள்ல தனுஷ், விஜய் சேதுபதி மாதிரி இவருக்கும் ஒரு பேர் இருக்கு. அதனால இவரை வைத்துத்தான் படமெடுக்கிறோம்... என்னை நம்பி நீங்க பணம் போடுறீங்க... அது திரும்பக் கிடைக்கணுமில்ல'ன்னு சொல்லிட்டான்.

ராஜராஜனிடம் கதை சொல்வதற்கான அழைப்பு வந்ததும் சந்தோஷமாக கிளம்பினான். அவரின் வீட்டுக்கே வரச் சொல்லியிருந்தார்கள். அவன் சென்ற போது பெர்முடாஸ் அணிந்து வெற்று மார்புடன் புல்வெளியில் அமர்ந்திருந்தார். அவருக்கு எதிரே ஒருவன் அமர்ந்திருந்தான். இவனைப் பார்த்ததும் 'வாங்க சரவணன்... பெரிய இயக்குநரின் பாசத்துக்குரிய அசிஸ்டெண்ட்...நீங்க படம் பண்றதுன்னா அது கண்டிப்பாக நல்ல கதையாத்தான் இருக்கும்... கொஞ்சம் பிஸி அதான் உங்களை காக்க வச்சிட்டோம்...' என்றார் பெருந்தன்மையாக. 'பரவாயில்லை சார்... எப்படியோ உங்களை சந்திக்க நேரம் அமைஞ்சது பாருங்க... அது போதும்... என்னோட முதல் பட ஹீரோ நீங்கதான்னு நான் முடிவு பண்ணி வச்சிருக்கேன்... எப்ப உங்க கால்சீட் கிடைக்குதோ அப்பத்தான் நான் படம் பண்ணுவேன் சார்' என்றான். அவனைப் பார்த்து சிரித்தபடி 'இவரும் அறிமுக இயக்குநர்தான் கதை சொல்லணும்ன்னு சொன்னாரு.... இன்னைக்கு ப்ரிதான் அதான் வரச் சொன்னேன்.. இப்பச் சொல்லிடுவாரு... அப்புறம் நீங்க சொல்லலாம்... உட்காருங்க' என்றார். சரி என அவன் அமர்ந்த போது ஆப்பிள் ஜூஸ் வந்தது. குடித்துக் கொண்டே கதை சொல்பவனைப் பார்த்தான்.

அவன் சொல்ல ஆரம்பித்தான்... "சார் நீங்க பணக்காரர்... உங்களோட உயிர் நண்பன் உங்களை ஏமாத்திடுறான்... நீங்க ஜெயிச்சி வாறீங்க... படம் மாஸ் சப்ஜெக்ட் சார்... "

"இதைப் பண்ணுறதுக்குத்தான் ரஜினி சார் இருக்காரே... அப்புறம் நான் எதுக்கு அவருக்கிட்ட போக வேண்டியதுதானே..."

"அவரு பெரிய ஆளு சார்... சங்கர் சார் படத்துல நடிக்கிறவரு... என் படத்துல நடிப்பாரா... ஒரு ஹிட் கொடுத்துட்டா அட்லீ மாதிரி அவரைப் பிடிச்சிருவேன் சார்..."

அவனை ஒரு மாதிரி பார்த்த ராஜராஜன் "வேற கதை இருந்தாச் சொல்லுங்க..." என்றார்.

"சார்... கதைப்படி நீங்க போலீஸ்... அதுவும் ரொம்ப நல்ல போலீஸ்... கடைசி சீன்ல வில்லன்கிட்ட அடிவாங்கி... முகமெல்லாம் வீங்கி... ரத்தம் வடிய வடிய போதும்டா... இதெல்லாம் போதும்... விட்டுடுங்கன்னு அட்வைஸ் பண்ணுறீங்க..."

"யோவ் இது கமல் சார் பண்ற கதை... எனக்கு செட்டாகாது..."

"ஏன் சார் அவரு மன்மதன்  அம்பு பண்ணலையா... அது நீங்க பண்ற சப்ஜெக்ட்தானே...?"

"யோவ்..." என ராஜராஜன் கத்த, சரவணன் சிரித்தான்.

"சார்... இன்னொரு கதை இருக்கு சார்... சொல்றேன் கேளுங்க... நீங்க ஸ்கூல் படிக்கிறீங்க... அப்ப கூடப் படிக்கிற பொண்ணு மேல லவ்வு வந்திருது... அதுக்கு அப்புறம் படிப்பை விட்டுட்டு அவ பின்னாடி திரிஞ்சி.... இடையில ரவுடிகளோட மோதல்... கடைசியா..."

அவனை இடை மறித்த ராஜராஜன் " என்ன திவ்யா... ஐ லவ் யூ திவ்யான்னு வசனம் பேசுறேனாக்கும்... த்துத்தேறி... அது பண்ணத்தான் தனுஷ் இருக்காரே... பின்னே நான் எதுக்கு... நீ சரிப்படமாட்டே கிளம்பு..."

"சார்... ப்ளீஸ் சார்... இன்னும் எங்கிட்ட நிறைய கதை இருக்கு சார்... இந்தக் கதை சரி வருமா பாருங்க சார்... நீங்க ஒரு சைக்கோ மாதிரி.... ஒரு பொண்ணை லவ் பண்ணி... அவ உதட்டை கடிச்சி இழுத்து உறிஞ்சி,,,"

"யோவ் நிறுத்து சிம்புக்கிட்ட சொல்ல வேண்டியதை எங்கிட்ட சொல்லிக்கிட்டு..."

"சரி சார்... இன்னொரு டான் கதை இருக்கு... கதைப்படி..."

"என்ன கோட்டுப் போட்டுக்கிட்டு எல்லாரையும் பொட்டுப் பொட்டுன்னு சுடுறேனா... அதுக்குத்தான் தல இருக்காருல்ல... எங்கிட்ட ஏய்யா வந்தே... எங்கிட்டு கிடந்துய்யா வாறீங்க...." என்றார் ராஜராஜன்.

"சாரி சார்... இதை மட்டும் கேளுங்க சார்... உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்... இதைப் பண்ணினம்னா இந்த வருசத்துல எல்லா விருதும் உங்களுக்குத்தான்... ப்ளீஸ் சார்..."

"சொல்லித் தொலைய்யா..."

"படத்துல டபுள் ரோல் சார்... ஒண்ணு ரவுடி சார்... ஆனா போலீசு... போலீஸ் டிரஸ் போட மாட்டீங்க... முடியை கட் பண்ணிக்க மாட்டீங்க... ஐ ஆம் பாலோவிங்க்ன்னு வில்லனுக்கிட்ட சொல்லுவீங்க... இன்னொரு காரெக்டர் வில்லன்... உங்க ரெண்டு பேருக்கும் முகத்தில சின்ன மருவை வைச்சு வித்தியாசம் காட்டிடுறோம்... தியேட்டர்ல ரசிகர்கள் விசில் அள்ளும் சார்..." 

"ஏய்யா... எப்படிய்யா சிரிக்காமல் கதை சொல்றே... தளபதி இதைத்தான் பல படத்துல பண்ணியிருக்காரு... அவரு இன்னும் கூட பண்ணலாம்... நானெல்லாம் பண்ணினா தியேட்டர்ல ஒரு காட்சி கூட ஓடாதுய்யா..."

"...."

"நல்லாயிருப்பே நீ கிளம்பு... விட்டா சசிகுமார், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜீவா, ஆர்யா, சூர்யா, கார்த்தி, மாதவன்னு போயிக்கிட்டே இருப்பே... இன்னும் நல்ல கதையா எழுதிக்கிட்டு வா... போ..."

"சார்... இதை மட்டும் கேளுங்க சார்... தனி ஆளா பாகிஸ்தான் ஜாபர்கானை எதிர்த்து ஜெயிச்சி..."

"இங்க பாரு கேப்டன் கட்சியும் கரைஞ்சி போயி மனசும் ஓடிஞ்சி போயி உக்காந்திருக்காரு... அவருக்கிட்ட போயி சொல்லு... மறுபடிக்கும் சிம்மா... சிம்மா... நரசிம்மான்னு வரட்டும்... என்னை விட்டுடு சாமி..." என்றதும் அவன் அதற்கு மேல் பேசாமல் எழுந்து சென்றான்.

"சார்..." மெல்ல இழுத்தான் சரவணன்.

"என்ன சரவணன்... சாரிங்க... ஒரு கதை சொல்றேன்னு வந்துட்டு நாயி ஒண்ணுமே இல்லாம கதை சொல்லி என் மூடை ஸ்பாயில் ஆக்கிட்டான்... இனி உங்க கதை கேட்டாலும் மனசு ஒட்டாது... எதையும் ஆத்மார்த்தமாக் கேட்டாத்தான் எனக்குப் பிடிக்கும்... ரெண்டு நாள்ல கூப்பிடுறேன். கண்டிப்பா நாம படம் பண்ணுறோம்... சாரி சரவணன்" என்று ராஜராஜன் சொன்னதும் "பரவாயில்லை சார்... எனக்கு இன்னும் நேரம் வரலை போல... எப்பக் கூப்பிட்டாலும் வர்றேன் சார்..." என்றபடி மனம் நொந்து போய் கிளம்பினான்.


ன் அருகில் வந்து படுத்த சரவணனிடம் "என்னாச்சு சரவணா... கதை சொல்லிட்டியா..? ஓகே பண்ணிட்டாரா...?" எனக் கேட்டான் அறை நண்பன்.

"எங்கடா... வரச் சொன்னாரு... நான் போறதுக்கு முன்னால என்னோட நேரம் அங்க போயிருச்சு... அப்புறம் எப்படி..? ஒருத்தன் கதை சொல்றேன்னு அந்தாளை மூடு அவுட்டாக்கிட்டான்... ரெண்டு நாள்ல கூப்பிடுறேன்னு சொல்லி அனுப்பிட்டாருடா..."

"அப்ப கதையை கேக்கவே இல்லையா?" என அவன் கேட்டபோது "கருப்பா.. குள்ளமா இருந்தானாடா... என்றான் மொட்டைமாடி கைபிடிச் சுவற்றில் அமர்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த மற்றொரு நண்பன்.

"ஆ...ஆமாடா... உனக்கு அவனைத் தெரியுமா..?"

"அட அது அவன் ஆளுடா... புது இயக்குநர் படத்துல அவன் நடிக்க விரும்புறதில்லை... வரச்சொல்லிட்டு நாம போகும் போது அவங்கிட்ட கதை கேக்கிற மாதிரி ஒண்ணுமில்லாத கதையைப் பேசி நம்மளை அடுத்த நாள் வா பாப்போம்ன்னு சொல்லிடுவானாம்... இல்லேன்னா நம்மகிட்ட கதையை கேட்டு அதை இப்படி மாத்து... இதை அப்படி மாத்து... இங்க ஒரு பைட் வையி... அந்த இடத்துல ஒரு குத்துப்பாட்டு போடுன்னு ஏகத்துக்கு மாத்தச் சொல்லிட்டு என்னன்னே கேக்கமாட்டானாம்... எங்க இயக்குநர் சொல்லியிருக்கார்."

"அடப்பாவி இதை ஏன்டா எங்கிட்ட சொல்லலை...?"

"சொல்லலையா...  நான் அந்தாளு வேண்டான்டான்னு சொன்னப்போ என்னோட கதைக்கு அவருதான் பர்பெக்ட் பிட்டுன்னு சொன்னே... என்னோட கதையைக் கேட்டா கண்டிப்பா நடிப்பாருன்னு வேற சொன்னே... அவரு இல்லைன்னா நான் படமே எடுக்கலைன்னு சொன்னே... நம்ம சுரேஷ் எப்படியோ அந்தால கனிய வச்சி படமெடுத்தது மாதிரி உன்னாலயும் கனிய வைக்க முடியுதான்னு பார்ப்போம்ன்னு மூடிக்கிட்டு இருந்துட்டேன். இங்கபாரு... இப்படித்தான் எங்க பக்கத்து ஊருக்காரன் ஒருத்தன் பாசில்கிட்ட அசிஸ்டெண்டா இருந்தான்... காதலுக்கு மரியாதை படத்துல கூட அசோசியேட்... வசனம் எழுதுறதுல கில்லாடி... தன்னோட முதல் படத்தை கேப்டனைத்தான் வச்சிப் பண்ணுவேன்னு கதையோட திரிஞ்சான்... அவரு கதையை கேட்கவும் இல்லை இவன் பண்ணவும் இல்லை... பல வருசத்துக்கு அப்புறம் இனி சரிவராதுன்னு புது முகத்தை வைத்து படம் பண்ணி ஓரளவு வெற்றியும் பெற்றான்... ஆனா பீல்டுல நீடிக்க முடியலை... நம்மளோட கரு இவருக்குத்தான் பொறுந்தும் அப்படின்னு யோசிக்காதே... எவன் நடிச்சாலும் என்னோட கதை பேசும்ன்னு முடிவு பண்ணு... பிரகாசமானவங்களை வச்சித்தான் ஜெயிக்க முடியும்ன்னு நினைக்காதே... என்னோட கதையால ஜெயிக்க முடியும்ன்னு நினை... அவனை விட்டுத் தள்ளிட்டு வேற யாரையாச்சும் பாரு... ஆனந்த விகடன்ல கட்டுரை எழுதுன ராஜூ முருகன் பிரபலத்தை நம்பியா படம் எடுத்தாரு... அவரு முதல் படத்தை தமிழகமே பேச வைக்கலையா... சசிக்குமார் தன்னோட முதல் படத்துக்கு இவருதான் சூட் ஆவாருன்னு சில நடிகர்கள் பின்னால பொயிட்டு யாரும் நடிக்க வராததால ஜெய் கூட தானே நடிச்சி சுப்ரமணிய புரத்துல ஜெயிச்சிக் காட்டலையா...? இன்னைக்கு நண்பனுக்கு தோள் கொடுக்கிறவனா கதாநாயகனா ஜெயிக்கலையா... மின்னுற மின்மினிப் பூச்சிகளை விட்டுட்டு பறக்க நினைக்கிற காக்கைக் குஞ்சை வச்சிக்கூட உன்னால ஜெயிக்க முடியும்டா..." ரொம்ப நேரம் பேசியவனின் கையிலிருந்த சிகரெட் கரைந்து சுடவும் தூக்கி எறிந்தான்.

"உண்மைதான்டா... இவருதான் வேணும்ன்னு நான் ஏன் பின்னால திரியணும்.. எனக்குள்ள உதிச்ச கதை... என்னோட கரு... அது ஜெயிக்கும்ன்னு நினைக்கிற எனக்கு எதுக்கு பிரபல நடிகர்கள்... புதியவர்களோடு களம் இறங்கி ஜெயிச்சிக் காட்டுவேண்டா... " என்றான்.

மறுநாள் செல்லப்பனிடம் சொன்னபோது "என்னப்பா சரவணா... புதுமுகமா..? யாரு உன்னோட ரூம் மெட் ஒருத்தன் கதாநாயகனாகனும்ன்னு சின்னச் சின்ன ரோல்ல நடிச்சிக்கிட்டு திரியிறானே... அவனை வச்சா... நான் அப்பவே ராஜராஜன் வேண்டாம்... புதிய ஆட்களை வைத்துப் பண்ணுவோம்ன்னு நீதான் கேட்கலை... நேத்து ராத்திரித்தான் பிரபு சாலமன்கிட்ட அசிஸ்டெண்டா இருக்க தம்பி ஒருத்தன் பேசுனாப்ல அவரு தனுஷை வைச்சு எடுக்கப்போற அடுத்த படத்துக்கு தயாரிப்பாளரா இருக்கீங்களான்னு கேட்டாப்ல... நானும் சரின்னு சொல்லிட்டேன்... நாளைக்கு அவரோட ஒரு மீட்டிங் இருக்கு.. உனக்கே தெரியும் பிரபு சாலமன் படம் கிடைக்கிறதுன்னா சும்மாவா... உன்னோட படத்தை கொஞ்ச நாள் கழித்து ஆரம்பிப்போம்... இப்போதைக்கு கனவை மூட்டை கட்டி வச்சிட்டு உன்னோட இயக்குநரின் அடுத்த பட வேலையைப் பாரு... சரியா..."

ஒன்றும் பேசாமல் வெளியே வந்தவன், தன்னோட கனவு கலைந்து போனதை நினைத்து வாய்விட்டு அழுதான். தன்னோட இயக்குநராகும் எண்ணத்துக்கு மூடுவிழா நடந்து விட்டது என்று முடிவு செய்து அசிஸ்டெண்டாகவே அவன் இயக்குநர் சூர்யாவை வைத்து இயக்கும் படத்தில் தொடர்ந்தான்.

ஒரு வருடம் ஓடியது தெரியவில்லை... ராஜராஜனுக்கு தொடர்ந்து பெரிய இயக்குநர்கள் வாய்ப்பு கிடைத்து தனக்கென ஒரு இடம் பிடித்து விட்டான். இப்போது அவனது சம்பளம் கோடியை நெருங்குவதாகச் செய்தி... இன்றைய தினசரியில் கூட சங்கர் படத்தில் நாயகனாகிறான் என்ற செய்தி பார்த்தான். நடிகனாக வேண்டும் என்று கஷ்டப்பட்ட அவனது நண்பன் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் இரண்டாவது நாயகனாக அஜீத்தின் தம்பியாக நடிக்கிறான். செல்லப்பன் இப்போ சசிகுமார், சமுத்திரக்கனி இணையும் படத்துக்கும் தொட்டால் தொடரும் எடுத்த கேபிள் சங்கரின் இரண்டாவது படத்துக்கும் தயாரிப்பாளராகி ரொம்ப பிசியாகிவிட்டார். சரவணன் இன்னும் அந்த பிரபல இயக்கிநரிடம்தான் இருக்கிறான். சூர்யாவை வைத்து எடுத்த படத்தில் இடைவேளை வரையான கதை வசனம் சரவணன் எழுதிக் கொடுத்ததுதான்... படமும் இடைவேளை வரைதான் நன்றாக இருந்தது என அப்போது பத்திரிக்கைகள் எழுதியிருந்தன.

சரிங்க... சரவணனோட இயக்குநர் இன்னும் ரெண்டு மாசத்துக்கு அப்புறம்தான் தன்னோட அடுத்த படத்தை ஆரம்பிக்கப் போறார். அதுவரைக்கும் ரூம்லதான் அவன் இருப்பான். அவன் வச்சிருக்கிற மூணு கதையும் மூணு விதமான மனிதர்களின் வாழ்க்கையை பேசும் கதைகள்தான்... படம் எடுக்க விருப்பப்படுறவங்க நம்பி அவனை இயக்குநராக்கலாம். கண்டிப்பாச் ஜெயிப்பீங்க... தமிழ் சினிமாவுக்கு பா வரிசை இயக்குநர்கள் மாதிரி... ஒரு சேரன், சசிக்குமார், சமுத்திரக்கனி, பாலா மாதிரி நல்லதொரு இயக்குநர் வரணுங்க...  படம் எடுக்க நினைக்கிறவங்க மாம்பலம் ரயில்வே ஸ்டேசன் தாண்டிப் போனீங்கன்னா ஒரு டீக்கடை இருக்கும்... அங்க கல்லாவுல உக்காந்திருக்கிற சேகரன் அண்ணாச்சிக்கிட்ட கேட்டா கடைப்பையனை விட்டு கூட்டியாரச் சொல்லுவாப்புல.. விருப்பமிருந்த போயி கதையைக் கேட்டுப் பாருங்க... ஜெயிக்கணுமின்னு நினைச்சு வர்ற எத்தனையோ சரவணன்கள் காணாமல் போயிடுறாங்க... மனிதர்களின் வாழ்க்கையை பேச நினைக்கிற இந்தச் சரவணனாவது ஜெயிக்கணுங்க... இல்லேன்னா நல்லதொரு வாழ்க்கைக் கதையை இழந்த தமிழ் சினிமா மாஸ் பின்னாலதாங்க ஓடிக்கிட்டு இருக்கும்... நம்பி காசு போட்டீங்கன்னா நிச்சயம் வெள்ளி விழா படமெடுத்த தயாரிப்பாளரா உயருவீங்க... 

நீ இவ்வளவு பேசுறியே பணம் போட வேண்டியதுதானேன்னு நினைக்கிறீங்களா..? நானும் சினிமாவுல ஜெயிக்கணுமின்னு சரவணனுக்கு முன்னால வந்தவனுங்க... இன்னும் ஓடிக்கிட்டு இருக்கேன்... எனக்கு இப்போ வயசு நாப்பத்தஞ்சுக்கு மேல ஆச்சு... இன்னும் குடும்பம் குட்டி இல்லை...ஆனா ஒருநாள் இல்லை ஒருநாள் சாதிப்பேன்னு ஓடுறேங்க... இப்ப தம்பி ராமையா மாதிரி கதாபாத்திரங்களில் நடிச்சி வயித்தை நிரப்பிக்கிறேன்... இந்த ஜிகினா உலகத்தில எல்லாருடைய கனவும் பிரசவமாகிறதில்லை... சில கூமுட்டைகள் கூட இங்கு பொரித்து உச்சிக்கு போய் விடுகின்றன... சரவணனுக்கிட்ட ஜிகினா கனவும் இல்லை கூமுட்டையை நல்ல முட்டை ஆக்குற சாமர்த்தியமும் இல்லை... ஆனா அழகான கருவை அற்புதமாக கையாளுற எழுத்துத் திறமை இருக்கு... சிந்தனையெல்லாம் கதைகள் நிறைஞ்சு கிடக்கு... அவன் ஒரு படத்தோட ஓய்ந்து போறவன் இல்லை... ஓராயிரம் கதை பேசி உலக விருதுகளை அள்ளப் பிறந்தவன். அவனோட கனவு மெய்ப்பட வேண்டும்.  சரவணன் ஜெயிச்சா அதுல எனக்கும் கண்டிப்பா பங்கு இருக்குங்க... அதனாலதான் சொல்றேன்... ப்ளீஸ் யாராவது சரவணனுக்கு ஏணியா வாங்களேன்...
-'பரிவை' சே.குமார்.

13 எண்ணங்கள்:

Yarlpavanan சொன்னது…

சரவணன் கனவு மெய்ப்பட வேண்டும். சிறந்த கதை

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு சிறுகதை. சினிமா உலகில் இப்படி எத்தனை எத்தனை பேர்......

KILLERGEE Devakottai சொன்னது…

சினிமா தந்திரக்காரர்கள் நிறைந்த உலகம்

கோமதி அரசு சொன்னது…

நல்ல கதை. கனவுகளுடன் வரும் சரவணன் போன்றோர் வெற்றி பெறட்டும்.

ஸ்ரீராம். சொன்னது…

நிதர்சனங்கள்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சிறப்பான கதை! பல இணை இயக்குனர்களை கண் முன் கொண்டுவந்தது சரவணன் கதாபாத்திரம்!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நல்ல கதை இப்படித்தான் பல இளைஞர்கள் ஓடிக் கொண்டிருக்கின்றார்கள்...வயது கடந்தும்....

இந்தக் கதையை வாசித்ததும்....முடிவு வெற்றியாக முடித்திருக்கலாமோ என்றும் தோன்றியது..ஒருவேளை எங்கள் நண்பர் குடந்தை சரவணன் அவர்களின் கனவும், இந்த நாயகனின் பெயரும் கனவும் ஒன்றாகிப் போனதால் அவரைப் பொருத்திப் பார்த்தே வாசித்ததன் விளைவோ??!! தெரியவில்லை...இந்தக் கதையின் கதாநாயகன்...நம் நண்பர் குடந்தை சரவணன் நிச்சயமாக வெல்வார்!!!!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அம்மா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் சகோதரரே...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் துளசி சார்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.