மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 16 மார்ச், 2016

மழையுமில்ல... வெளச்சலுமில்ல...

"ன்டாம்பி அங்க என்னடா கூட்டம்... ரெக்காட் டான்ஸ்காரனுங்க வந்திருக்கானுங்களா...?" கேட்டார் ராமசாமி

"இல்லப்பு... ஏதோ டிவிக்காரனுங்களாம்... நம்மளை எல்லாம் பேட்டி எடுத்துக்கிட்டு போயி போட வந்திருக்கானுங்களாம்..." சொன்னது கேசவன்.

"சன் டிவிக்காரனுங்களா...? நமக்கிட்ட என்ன இருக்கு பேட்டி எடுக்க..."

"சன் டிவியா... அவங்க எங்க இங்க வர்றாங்க... அவங்களுக்கு நாடகம் மட்டுந்தான் போடத் தெரியும்... இது ஏதோ  புதிய பரம்பரையின்னு ஒரு டிவியாம்... தேர்தல் வருதுல்ல... அதான்..."

"அது செரி... ஆமா அது என்னடாம்பி புதிய பரம்பரை... பேரு வித்தியாசமா இருக்கேடாம்பி..."

"ஆமா...  வித்தியாசமானவனுங்கதான்... பரம்பரை, பாரம்பரியம் பத்தியெல்லாம் நிகழ்ச்சி போடுவானுங்களாம்... நாடகம் போடமாட்டானுங்களாம்...சரி வாங்கப்பு நாமளும் போவோம்..."

"செரி வா... நம்ம மொவரக்கட்டையையும் டிவியில காட்டலாம்... இவனுக வர்றது தெரிஞ்சிருந்தா சவரம் பண்ணித் தொலைச்சிருப்பேன்... வெள்ளமுடி முள்ளு முள்ளா நிக்கிது பாரு..."

"க்க்கும்... சேவிங்க் பண்ணிட்டா மட்டும் அப்படியே அஜீத் மாதிரி இருப்பீங்களாக்கும்... சும்மா வாங்கப்பு... "

அவர்கள் இருவரும் புதிய பரம்பரை டிவிக்காரர்கள் இருந்த இடத்தை அடைந்தார்கள்.நண்டு சிண்டு என நாற்பது அம்பது பேர் கூடி நின்றார்கள். வடக்கி வீட்டு சவுந்தரம் தலையில் சாணிக் கூடையோடு நின்றாள். 'ஏய் ஓடிப்போயி கொட்டிட்டு வா... சாணிக்கூடையோட நிக்கிறது டிவியில தெரியும்ல்ல...' அப்போதுதான் முகம் கழுவி பவுடர் அடித்து வந்திருந்த சிகப்பி சொன்னாள். 'முதல்ல நீ முகத்தை துடை, புட்டாமாவு பூத்துப்போயி பொங்கலுக்கு சுண்ணாம்பு அடிச்ச மண் சொவரு மாதிரி இருக்கு ' என்றபடி நகர்ந்தாள் சவுந்தரம்.

"உங்க பேர் என்னங்க...?" மைக் வைத்திருந்தவன் எதிரே நின்ற கட்டையனிடம் கேட்டான்.

"பரமசிவம்..." சிரிப்போடு சொன்னான்.

"ஏன்டாம்பி... அதென்ன பரமசெவம்... பல்லாக்கு பரமசெவம்ன்னு சொல்லு..." பின்னால் இருந்து கத்தினார் ராமசாமி.

"அட ஏஞ்சித்தப்பு... பல்லாக்கைச் சொல்லிக்கிட்டு...." வெட்கப்பட்டான் பரமசிவம்.

"பல்லாக்கு பரமசிவம்..? அதென்னங்க பேருக்கு முன்னால பல்லாக்கு..." 

"ஏங்க... கலைஞர் கருணாநிதி... கேப்டன் விஜயகாந்த்... செல்வி ஜெயலலிதா,.. செந்தமிழன் சீமான் மாதிரி... பல்லாக்கு... ஏன் அவங்க மட்டும்தான் அடைமொழி வைக்கணுமா... நாங்களுந்தான் வைப்போம்..." கோபமாய்க் கேட்டான் கேசவன்.

"பல்லாக்குன்னா என்னன்னுதானேங்க  கேட்டேன்... அதுக்கு ஏன் இப்படி கோபப்படுறீங்க..."

"அது வேற ஒண்ணுமில்லங்க... இந்த சுத்துப்பட்டு ஊருல யாரு செத்தாலும் இவந்தான் பூப்பல்லக்கு கட்டுவான்... அதனால பல்லாக்கு பரமசெவம் ஆயிட்டான்..." என்றார் ராமசாமி.

"ஆமாங்க... ஆனா இந்தப் பயலுக்குத்தான் பல்லாக்கு எவன் கட்டப் போறான்னு தெரியலை..." சிரித்தாள் முத்துப்பிள்ளை.

"அப்பத்தாவுக்கு கொழுப்பைப் பாரேன்... உனக்கு இவந்தான் அப்பத்தோவ்..."  கூட்டத்தில் ஒருவன் கத்தினான்.

"இவனுக்கு மட்டுமில்லீங்க... அந்தா நிக்கிறான் பாருங்க அவன் கொட்டகை குணா... இந்த சுருட்டை முடி பால்கார பரமசெவம்... இந்த பய இருக்கானே இவன் கேசு கேசவன்... அந்தா அவன் மீசை முத்தையா... இது மரமேறி மாணிக்கம்... அந்த பச்சச்சட்டை மருந்து மகாலிங்கம்...."

"அட பேரெல்லாம் சுவராஸ்யமா இருக்கே பெரியவரே... விளக்கத்தைச் சொன்னீங்கன்னா நல்லாயிருக்கும்..."

"பந்தல் போடுறதால அவனுக்குப் பேரு கொட்டகை குணா... இதே குணசேகரன்னு இன்னொருத்தன் இருக்கான்... அவனுக்குப் பேரு காக்கா முள்ளு குணா... காலை காக்கா முள்ளாட்டம் விரிச்சி வச்சி நடப்பான்... ரெண்டு மூணு பேருக்கு ஒரே பேரு இருந்தா சொலபமா தெரிஞ்சிக்கத்தான் இப்படி அடமொழியோட கூப்புடுறது... அதே மாதிரி ஏழெட்டு பரமசெவம் இருக்கானுங்க... இவன் பால் ஊத்துறதால பால்கார பரமசெவம்... அவன் பல்லாக்கு பரமசெவம்... இவன் எதாச்சும் அடிதடிக்கு போயி அடிக்கடி போலீசுக்குப் போறதால கேசு கேசவன்... அவன் முறுக்கு மீசை வச்சிருக்கதால மீசை முத்தையா... எந்த மரமா இருந்தாலும் சர்வ சாதாரணமா ஏறுவான்... மேல கவட்டையில படுத்து தூங்கவும் செய்வான்... அதனால மரமேறி மாணிக்கம் ஆயிட்டான்... நாட்டு மருந்து கொடுக்கிறதால மருந்து மகாலிங்கம்... இன்னும் நிறைய இருக்கு ஒட்டக்குண்டி ஓம்பிரகாசு... தொத்த முருகன்... விருட்டி மகாலிங்கம்.. இப்படி நிறைய..."

"அது சரி... பேருக்கு முன்னால அடைமொழியோட நல்லாயிருக்கே... இதை வச்சி ஒரு தொடர் பண்ணலாம் போலவே..." கேமராமேன் சிரித்தான்.

"இவ்வளவு பேசுறாரே இவரு பேர் என்னன்னு தெரியுமா...?" அவர் பெயரைச் சொல்லும் ஆவலில் கேட்டான் பரமசிவம்.

"சொன்னாத்தானேங்க தெரியும்...?"

"ராக்கோழி ராமசாமி..."

"அதென்னங்க ராக்கோழி..?"

"மனுசன் ராத்திரியில பகல் மாதிரி தூங்கமா எதாவது நோண்டிக்கிட்டே இருப்பாரு... அதுவும் விவசாய சமயத்துல வயல்லேதான் கிடப்பாரு... தண்ணி பாச்சுறது... நிலா வெளிச்சம் இருந்தா கருதுகூட ராத்திரியில ஒரு வயல அறுத்து முடிச்சிருவாரு... அதான் ராக்கோழி..".

ராமசாமி ரொம்ப வெக்கப்பட்டார். "எங்களுக்கு மட்டுமில்லம்பி... வூடுகளுக்கும் பேரு இருக்கு..."

"வீடுகளுக்குமா...? அதையும் சொல்லுங்க கேப்போம்..." என்றார் மைக் பிடித்திருந்தவன்.

"டேய் வந்த வேலையை விட்டுட்டு..." கேமராமேன் கத்தினான்.

"அட இரு மாப்ள... சுவராஸ்யமா இருக்கு..."

"முதல்ல ஊருக்குள்ள கந்தசாமிப்பய தாத்தா ஓட்டு வூடு கட்டுனதால அந்த வூட்டுக்குப் பேரு ஓட்டு வூடு... அப்புறம் மேல வூடு... கீழ வூடு... சுண்ணாம்புக்கார வூடு... மெத்த வூடு... மூத்தவரு வூடு... இளையரு வூடு... புதுப்பணக்கார வூடு... இப்படி நிறைய தம்பி..."

"அது சரி... ஆமா பொம்பளைங்களுக்கு அடைமொழி இல்லையா...?" மைக் வேகமாகக் கேட்டான்.

"உன்னைய தூக்கிப் போட்டு மிதிக்கப் போறானுங்கடி..." காதுக்குள் சொன்னான் கேமரா.

"ஏன் இல்லாம... ரெண்டு மூணு செவப்பி இருக்குதுக... சுண்டமுத்தி செவப்பி...  நாச்சாங்குளம் செவப்பி... மங்கலம் செவப்பி... அப்புறம் முப்பையூர் மீனா... வெங்களூர் வெஜயா... மேலமடை வெஜயா... இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்ப்பூ..." என்றார் ராமசாமி.

"அதென்ன பெண்களுக்கு மட்டும் ஊருப் பேர் முன்னால... அவங்க உங்க ஊர் இல்லையா...?"

"எங்கூருதாங்க... வாக்கப்பட்டு வந்தாலும் அவங்க பொறந்த ஊர் பேரை வச்சி சொன்னாத்தான் வெரசா யாருன்னு புரிஞ்சிக்க முடியும்... ராமாயின்னு சொன்னா... யாரு முத்தூரணி ராமாயியா... பூசலாகுடி ராமாயியான்னு கேக்கணும்... அதுக்கு பூசலாகுடி ராமாயின்னு சொல்லிட்டா போச்சுல்ல... ஆரம்பத்துல ஊர்ப் பேரு... அப்புறம் வயசாக வயசாக வீட்டுப் பேரைச் சொல்லி... மேலவீட்டு செல்வி... கீழ வீட்டு அழகுன்னு கூப்பிட ஆரம்பிச்சிருவோம்..." விளக்கினான் கேசவன்.

"அது சரிங்க... ரொம்ப சுவராஸ்யங்க..."

"நகரத்துல இப்படியெல்லாம் பாக்க முடியாது தம்பி... இங்கதான் மனுசங்களுக்கு.... வூட்டுக்கு... வயலுக்கு... ஏ... ஆடு மாடு கோழியின்னு எல்லாத்துக்கும் பேரு இருக்குங்க... "

"சரிங்க... இதை வச்சி ஒரு தொடர் போடலாமான்னு எங்க மேனேஜர்க்கிட்ட கேட்டுட்டு வர்றோம்... இப்ப வந்த வேலையைப் பார்க்கிறோம்... யாருக்கு ஓட்டுப் போடுவீங்க... எதுக்காக அவங்களுக்குப் போடுவீங்க.. ஒவ்வொருத்தரா சொல்லுங்க பார்ப்போம்..."

"அட ஏந்தம்பி... யாருக்கு ஓட்டுப் போட்டு என்னங்க பண்ண... பாத்தியளா பட்டப்பகல்ல நடுரோட்டுல எல்லாரும் பாத்துக்கிட்டு நிக்கிறப்பவே பொறுமையா வண்டியை நிறுத்தி நின்னு நிதானமாக கூறுபோட்டுட்டு எதுவும் நடக்காத மாதிரி மெதுவா வண்டி ஏறிப் போறானுக... இந்த சாதிதானேங்க இன்னைக்கு எல்லாத்துலயும் நிக்கிது... சாதிக்கட்சி எல்லாம் நாங்க வந்தா மாத்தம் வரும்ன்னு சொல்றாக... என்னங்க மாத்தம் வரும்... இன்னைக்கு நடக்குறது இன்னும் அதிகமா நடக்கும்... எந்த சாதிக்காரன் ஆட்சிக்கு வாரானோ அவஞ் சாதிக்காரனுங்க ஆடுவானுக... யாரு வந்தாலும் ஊரு திருந்தாது... திருந்த விடமாட்டானுக... இனி ஆளாளுக்கு பயமில்லாம கத்தி எடுப்பானுக தம்பி... அரசு என்ன பண்ணும்..? ஒண்ணுமே பண்ணாது... என்னா அவனுங்க அரசியல் பண்ண சாதியும் மதமும் வேணும்... அப்ப அப்ப இந்த மாதிரி கொலைகளும் வேணும்... பணமிருக்கவன் கோடியில கடன் வாங்கிட்டு கம்பி நீட்ட அரசாங்கமே உதவி பண்ணும்... ஆனா நாங்க விவசாயத்துக்கு வாங்கிட்டு ஆயிரம் ரூபாய் கட்டளையின்னா போலீசை வச்சி அடிப்பானுங்க... இதுதான் இன்னைக்கு நிலமை..." ராமசாமி பேச்சை நிறுத்தி மைக்கைப் பார்த்தார்.

"உண்மைதான் பெரியவரே..." என்றான் மைக்.

மற்றவர்கள் பேசாமல் நிற்க மீண்டும் அவரே தொடர்ந்தார்... "சரி விடுங்க... யாரு வந்தாலும் எங்க வாழ்க்கை எல்லாம் இப்படித்தான்.... காய்ஞ்சு போன வயலாட்டம்... வானம் பாத்த பூமியான எங்க வயலாச்சும் மழை பெஞ்சா வெளையும்... ஆனா எங்க வாழ்க்கையில மழையுமில்ல... வெளச்சலுமில்ல தம்பி... எங்களுக்கு ஒரு மாத்தமும் வராது தம்பி... ஒவ்வொரு தடவையும் சொல்லுவானுக... ஆனா இதுவரைக்கும் ஒரு மாத்தமும் இல்லை... இருபது வருசத்துக்கு முன்னால போட்ட ரோடு... போன வருசம் அதுமேல பேருக்கு கல் பரப்பி தாரை ஊத்தித்துப் போனானுங்க... பெஞ்ச மழையில எல்லாப் பக்கமும் அரிச்சிக்கிட்டு ஓடியிருக்கு... வரும்போது பாத்திருப்பியே... இனி என்ன மாத்தம் வரப்போகுது சொல்லுங்க... எங்க எம்.எல்.ஏ. அஞ்சு வருசமா இருக்கமா செத்தமான்னே வந்து பாக்கலை... அவருக்கு போடமாட்டோம் மாத்தித்தான் போடுவோம்ன்னு சொல்லி... அந்தாளே திரும்ப ஜெயிச்சிட்டா டிவியில மட்டும் அவனுக்குப் போடுவோம்ன்னு சொன்னே... இப்ப எங்கிட்டதானே வந்து நிக்கிறேன்னு எதாவது நல்லது கெட்டதுக்கு போயி நின்னா விதண்டாவாதம் பண்ணுவான்.. எதுக்குங்க... எப்படியும் எல்லாக்கட்சிக்காரனும் பணம் கொடுப்பானுக... எல்லார்கிட்டயும் பணத்தை வாங்கிக்கிட்டு அங்க என்ன தோணுதோ அதுல குத்திட்டு வரப்போறோம்... இதையெல்லாம் டிவியில போடாதீங்க... உங்களுக்கு புண்ணியமாப் போகும்..." என ராமசாமி பொரிந்து தள்ள , மற்றவர்கள் ஆமோதிப்பது போல் பேசாமல் நின்றனர் .

-'பரிவை' சே.குமார்.

11 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

// ஊரு திருந்தாது... திருந்த விடமாட்டானுக... // சரி தான்...

ஸ்ரீராம். சொன்னது…

சுவாரஸ்யமாய் ஆரம்பித்து சிந்திக்க வைத்து விட்டீர்கள்.

KILLERGEE Devakottai சொன்னது…

யதார்தமான நடைமுறை பேச்சு வழக்கு அருமை நண்பரே
தமிழ் மணம் 3

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

வித்தியாசமாய்ச் சொல்லியிருக்கீங்க..நல்ல நடை.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மைக் பிடித்தது காமெடியாக வந்து, இறுதியில் இப்போதைய யதார்ட்த்ஹ நிலைமையைச் சொல்லிம்ம்ம்ம் இப்போதைய என்று சொல்லுவதை விட தொடர்ந்து கொண்டே இருக்கும் நம் அரசியல் நிலைமையைச் சொல்லி விட்டீர்கள்...நாமும் மைக் பிடித்தால் என்ன சொல்லுவோமோ அதை உங்கள் கதாபாத்திரங்கள் வழி சொல்லியிருக்கிறீர்கள் அருமை குமார்..

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

தமிழ்மணம் ஊரைச் சுற்றுகிறது. ஆனால் அவரவர் ஊருக்குள் (தளத்திற்குகள்) நிற்கிறதா என்று தெரியவில்லை...

S.P.SENTHIL KUMAR சொன்னது…

ஒரு கிராமத்திற்குள் நுழைந்த உணர்வு!
த ம 4

துரை செல்வராஜூ சொன்னது…

>>> எப்படியும் எல்லாக்கட்சிக்காரனும் பணம் கொடுப்பானுக... எல்லார்கிட்டயும் பணத்தை வாங்கிக்கிட்டு அங்க என்ன தோணுதோ அதுல குத்திட்டு வரப்போறோம்.<<<

இதுதான் உண்மை!..

கோமதி அரசு சொன்னது…

உண்மையை அழகாய் பெரியவர் ராமசாமி சொல்லிவிட்டார்.அருமை.

கோமதி அரசு சொன்னது…

காரணபெயர்கள் படிக்க சுவாரஸ்யம்.

நிஷா சொன்னது…

பெயர்களுக்கான காரணங்கள் அசத்தலாக இருக்கின்றதே! ஊரோடு ஒட்டி வரும் பெயர்கள் அருமை தான், மனசு குமார், தேவகோட்டை கில்லர்ஜி, ஆல்ப்ஸ் நிஷாவையெல்லாம் ஏன் விட்டு விட்டீர்கள்?

டீவி,சீரியல் போட்டி என ஆரம்பித்து தொடரும் யதார்த்த நிலை ஆதங்கமாய் வெளிப்பட்டிருக்கின்றது. அசத்தல் குமார்! உங்க எழுத்து சோடை போகுமா?