மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

வெள்ளந்தி மனிதர்கள் : 2 . புலவர் ம. சவரிமுத்து

ன்று ஆசிரியர் தினம். முதலில் என்னைச் செதுக்கிய, இன்னும் செதுக்கிக் கொண்டிருக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கும் வலையுலகில் என்னுடன் உறவில் இருக்கும் அன்பான ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்களைக் கூறிக் கொள்கிறேன்.

ன்றைய வெள்ளந்தி மனிதர்களில் எங்கள் தமிழாசிரியர் ஐயா புலவர் ம. சவரிமுத்து அவர்களைப் பற்றிப் பார்ப்போம். சவரிமுத்து ஐயா எனக்கு அறிமுகமானது தே பிரித்தோ மேல் நிலைப் பள்ளியில் எனக்குத் தமிழாசிரியராய்... தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் எனக்கு அவர் தமிழாசிரியர் அவ்வளவே. எங்களுக்குள்ளான உறவு மாணவர் ஆசிரியர் என்ற முறையில்தான். அதற்குக் காரணம் அவருடன் பழகும் சந்தர்ப்பத்தை உருவாக்கவில்லை என்பதும் நான் அப்போது யாரிடமும் அதிகம் பேசுவதில்லை என்பதும்தான்.

கல்லூரிக்கு வந்து பழனி ஐயாவின் அறிமுகம் கிடைத்து கொஞ்சம் தமிழார்வம் எட்டிப் பார்க்க ஐயாவின் மாணவர்களாக தமிழ்நாடு பாரதி கலை இலக்கியப் பெருமன்றத்தில் நானும் முருகனும் உறுப்பினரானோம். அப்போதுதான் சவரிமுத்தையாவுடன் நெருக்கமாகப் பழகும் சூழல் அமைந்தது. என்னோட பிள்ளைகள் என்று அன்பாக அழைக்கும் அந்த மனிதருக்குள் எப்போதும் எங்கள் மீதான அன்பைக் கூட்டிக் கொண்டே போனது பின்னான நாட்கள்.

'என்ன தம்பிங்களா? இதைச் செய்யலாமா?' என்று வேஷ்டி சட்டையில் பாரதி விழா வேலைகளை இழுத்துப் போட்டு செய்வதில் ஐயாவுக்கு நிகர் ஐயாவே. ஐயா கலையிலக்கியப் பெருமன்றத்தின் தலைவராக இருந்த போது பாரதி விழாவுக்கு திரு. இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்களை அழைத்திருந்தோம். அவரை மதுரையில் இருந்து காரில் அழைத்து வரும் பணியை எங்களிடம் ஐயா ஒப்படைத்திருந்தார். விழா முடிந்து திரும்பும் போது திரு. இறையன்பு அவர்கள் நான் பேசாமல் தனியாக போகமுடியாது என்னைக் கூட்டியாந்த அந்த ரெண்டு பேரும் என் கூட பேச்சுத் துணையாக மதுரைக்கு வரவேண்டும் என்று சொல்லிவிட்டார். 

ஐயாவுக்கோ எங்களை மீண்டும் அனுப்ப மனமில்லை.... மெதுவாக பிள்ளைகள் சில நாட்களாகவே பாரதி விழா வேலை பார்த்து... நேற்று உங்களை அழைக்க வந்து... இன்றெல்லாம் விழா நிகழ்வுகளில் அலைந்து ... ரொம்பச் சோர்வாக இருக்கிறார்கள் வேறு யாராவது உங்களுடன் வரட்டும் என்றார்கள். ஆனால் அவரோ இருவரும்தான் வேண்டும் என்று சொல்ல 'என்ன தம்பிங்களா... போகலாமா?' எனக் கேட்டு எங்களை அனுப்பி வைத்தார்.

எப்பவும் எங்கள் மீது அவருக்கு அலாதிப் பிரியம். வீட்டுக்குச் சென்றால் அம்மாவிடம் பிள்ளைகள் வந்திருக்கு... சாப்பிட எதாவது கொடுங்கள் என்று சொல்லிவிட்டு நம்ம வீட்டில் காய்த்த கொய்யா... நேற்று பரிச்சேன்... பிள்ளைகள் வருமே வந்தா சாப்பிடட்டும்ன்னு வச்சிருந்தேன்... இது நம்ம வீட்டு மாம்பழம் தம்பி... மரத்துலயே பழுத்தது... இப்பத்தான் பறிச்சி கழுவி வச்சிட்டு பிள்ளைங்க வந்தா சாப்பிடுங்கன்னு உங்கம்மாக்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன். நீங்க வந்துட்டீங்க என்பார். அதற்குள் அம்மா மணக்க மணக்க காபியோடு வந்து விடுவார்.

ஐயாவின் குடும்பத்தில் அனைத்து விசயங்களும் எங்களுத் தெரியும். நம்ம பிள்ளைங்ககிட்ட சொல்றதுக்கு என்னன்னு நல்லதோ கெட்டதோ அனைத்தும் சொல்லிவிடுவார். ஐயாவின் மாப்பிள்ளைகள் எல்லாம் எங்களுக்கு ஐத்தான்தான்... உங்க பெரியத்தான் இப்பத்தான் வந்துட்டுப் போனாங்க... சின்னத்தான் அங்க போயிருக்காங்க எனச் சொல்வார். 

ஒவ்வொரு முறை ஊருக்குச் செல்லும் போதும் எங்காவது வெளியில் வைத்துத்தான் சந்திப்பேன். வீட்டுக்குச் செல்ல முடிவதில்லை. இந்த முறையும் அப்படித்தான்... சவரிமுத்து ஐயாவைச் சந்திக்கணும் என்ற நினைப்போடு தேவகோட்டை ராம்நகருக்கு ஒரு வேலையாகச் சென்றுவிட்டு விஷாலுடன் வண்டியில் வந்து கொண்டிருந்தேன். அப்போது எங்களுக்கு முன்னே ஒரு டிவிஎஸ் எக்ஸ்எல் போய்க் கொண்டிருந்தது. ஐயா மாதிரி இருக்கே என நினைத்து வண்டியின் வேகத்தைக் குறைத்து அருகே சென்று ஐயாதான் எனத் தெரிந்ததும் 'ஐயா' என்றேன். என்னைப் பார்த்ததும் 'அட இங்க பாரு எம்புள்ளையை... பேராண்டி வேற முன்னால உக்காந்திருக்காக' என்றபடி வண்டியை நிறுத்தி என்னை ஓரமாக வரச்சொல்லி காது கேட்பதற்கான கருவியை 'காது கேக்குறதில்லைய்யா' என்றபடி மாட்டினார்.

"ஐயா எப்படியிருக்கீங்க? அம்மா எப்படியிருக்காங்க? உங்களைப் பாக்கணுமின்னே நெனச்சிக்கிட்டு வந்தேன். இப்பவே பாத்துட்டேன்" என்றேன் சந்தோஷமாக. "நல்லாயிருக்கேன் தம்பி... நீங்கள்லாம் போனதும் என்னென்னமோ நடந்துருச்சி... எங்கப்பாரு தவறிப்பொயிட்டாக... உங்க அம்மாவுக்கு பிரஸ்ட் கேன்சர் வந்து ஒரு வருசம் நடைபொடையில்லாம இருந்துட்டாக... இப்போ பரவாயில்லை... பொற்கோ மனைவிக்கு பி.எட் காலேசில சேக்குறதுக்குத்தான் கேட்டுக்கிட்டு வாறேன்..." என குடும்ப நிகழ்வுகளை அதே பாசத்துடன் சொன்னார்.

பின்னர் "நான் மருமகளைப் பார்க்கும் போதெல்லாம் எம்புள்ள எப்ப வருதுன்னு கேப்பேன்... அவங்களும் என்னை எங்க பாத்தாலும் நா பாக்காட்டியும் ஐயான்னு வந்துருவாங்க... அடுத்த வாரம் பிள்ளைங்களுக்கு சின்னச் சின்ன போட்டிக வச்சிருக்கோம்... நீங்க ஊருக்குப் பொயிட்டாலும் மருமகள வந்து உதவச் சொல்லுங்கன்னு சொன்னார். சிறிது நேரம் அவரோடு பேசிவிட்டு வந்தேன்.

என் அன்பிற்குரிய சவரிமுத்து ஐயாவை எங்கள் தேவகோட்டையில் தெரியாதவர்கள் குறைவு. இன்றும் பாரதி கலையிலக்கியப் பெருமன்றத்தின் செயலாளராக தனது தமிழ்ப்பணியை ஆற்றி வருகிறார். ஐயாவைப் பொறுத்தவரை ஆரோக்கியமான விவதாங்கள் செய்வார். சில நேரங்களில் அவருக்கும் பழனி ஐயாவுக்கும் சில மனஸ்தாபங்கள் வந்து மறையும். ஐயா நிறையப் படிப்பார்.... எல்லோரிடமும் நிறைவாய் இருப்பார்... இதுதான் அவர்.

இங்கே ஐயா தவிர்த்து ஒரு செய்தி, என்னை மகனாய்ப் பாவிக்கும் எல்லாருக்கும் என் மனைவி மருமகளாய் ஆனது எனக்கு மிகுந்த சந்தோஷம். என்னைவிட எல்லோரிடமும் அன்பாய்ப் பழகும் என்னவள் எனக்குக் கிடைத்தது மிகப்பெரிய வரப்பிரசாதம். எல்லோரையும் வேண்டும் என நினைக்கும் என்னவளை விரட்டி விரட்டி காயப்படுத்தும் அவரின் உறவுகளை நினைத்து வேதனையோடுதான் சில வாரங்களாக நாட்கள் கடந்து செல்கின்றன. பழகிய பழக்கங்கள் எல்லாம் எங்களுடன் உறவு பாராட்டி அரவணைக்கும் போது உறவுகள் எல்லாம்...? சரி காலம் பதில் சொல்லும் என்ற நம்பிக்கையோடு இதை மறப்போம் என என்னவளிடம் சொல்லித் தேற்றி  வருகிறேன். அருகில் இருந்தால் அரவணைக்க முடியும்... தொலைதூர வாழ்க்கையில்... வார்த்தைகளைத்தானே வலிக்கு மருந்தாக இடமுடிகிறது. அந்த வார்த்தைகளைக் கூட நம்மோடு சிரித்துப் பேசி மகிழ்ந்து இருக்கும்  சில இரட்டை வேடாதாரிகள் வலியின் மீது வாரி இறைக்கும் கற்களாக ஆக்கிக் கொண்டிருப்பதுதான் வேதனை.

அடுத்த வெள்ளந்தி மனிதர்கள் வரிசையில் புலவர். அருள்சாமி ஐயா அவ்ர்களைப் பற்றி பார்க்கலாம்.


-வெள்ளந்தி மனிதர்கள் மனசில் தொடர்வார்கள்.
-'பரிவை' சே.குமார்.

11 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

சிறந்த நினைவோடை.

J.Jeyaseelan சொன்னது…

உண்மையிலேயே வெள்ளந்திமனிதராகத்தான் இருக்கிறார் ஐயா... நல்ல ஒரு தமிழறிஞரை அறிமுகம் செய்த உங்களுக்கு நன்றிகள், நல்ல பகிர்வு வாழ்த்துகள் சார், மாற்றம் ஒன்றுதானே மாறாதது, இதுவும் கடந்து போகும் ,.....

KILLERGEE Devakottai சொன்னது…


நல்லதொரு பதிவு நண்பரே...
எழுத்தறிவித்தவன் இறைவன் என்பார்கள் இன்றைய நாளில் எனது ஆசிரியர் திரு.குருந்தன் அவர்களை நினைவு கூர்கிறேன்,
அனைவருக்கும் எமது ஆசிரியர் தின வாழ்த்துக்கள் நண்பரே....

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அருமையான நினைவுகள்! சவரி முத்து ஐயாவை கண் முன்னே நிறுத்தி விட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

"இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்.":

Yoga.S. சொன்னது…

மிக்க மகிழ்ச்சி,குமார்!உங்களுக்குக் கிடைத்த மாணவப் பருவ வாழ்வு அருமையானது.உங்கள்,ஆசிரியப் பெருந்தகைகளுக்கு வணக்கங்கள்.நன்றி பகிர்வுக்கு.

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அண்ணா.
மிக விரிவாக எழுதியுள்ளீர்கள் நன்றாக உள்ளது இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ஆசிரியர் தினத்தில் தங்களின் தமிழாசிரியரை நினைவு கூர்ந்தமை அரமை
வாழ்த்துக்கள் நண்பரே

Mrs.Mano Saminathan சொன்னது…

ஒரு ஆசிரியர் என்றில்லாது ஒரு அருமையான உறவினராய் அவரின் சிறப்புகளை மிக அழகாக எழுதி பகிர்ந்து கொன்டிருக்கிறீர்கள் குமார்! இந்த மாதிரி மனதால் ஏற்படும் உறவுகள் என்றைக்கும் நமக்கு பெரிய பலம். பந்தங்களும் சொந்தங்களும் ஏற்படுத்தும் வலிகளை புறக்கணித்து விடுங்கள். சொந்தங்கள் நம் நிழல் மாதிரி. கடைசி வரை கூடவே வருபவை. தவிர்க்க முடியாதவை. அதனால் வலிகளை புறக்கணிக்க பழகிக்கொள்ளுங்கள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இனியதோர் நினைவலை.....

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி குமார்.

ராமலக்ஷ்மி சொன்னது…

உங்கள் மனதில் இடம் பெற்றவர்களைப் பற்றிய பகிர்வு தொடரட்டும். உறவுகளான நண்பர்களின் அன்பு மன பலத்தைத் தரட்டும்.