மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 30 ஜூன், 2013

மம்மிகள் அல்ல இவை தூங்கும் குழந்தைகள்

(இறந்து 500 வருடங்களுக்கு மேலாகியும், இன்னும் உடலில் உள்ள இரத்தம் கூட உறையாத 15 வயது சிறுமியின் உடல்!)

அர்ஜெண்டினாவில் உள்ள சால்டா அருங்காட்சியகத்தில் இந்த மம்மிக்களை மக்கள் பார்வைக்கு வைக்கத் திட்டமிட்டுள்ளார்களாம். 1999ம் ஆண்டு லுல்லைலிகோ மலையில் இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

உறைந்த நிலையில் இருந்த அந்த உடல்களில் பாகக்கள் எதுவும் கெட்டுப் போகவில்லையாம்,. இரத்தம் கூட உறையாத அளவிற்கு பதமாக பாதுகாப்பாக இருந்திருக்கின்றன அந்த உடல்கள். தோல் கூட புத்துணர்ச்சியுடன் இருப்பது தான் ஆச்சர்யம்.

இறந்து ஐநூறு வருடங்களுக்கு மேலாகியும், இன்னும் உடலில் உள்ள இரத்தம் கூட உறையாத மூன்று மம்மிக்களை கண்டு பிடித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

ஏதோ, நோய்வாய்ப்பட்ட சாதாரணப் பெண்ணை டாக்டர்கள் பரிசோதிப்பது போல தோன்றும் இந்தப் போட்டோவில் இருப்பவர் தான் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் பனியில் உறைந்து இறந்து போன 15 வயது சிறுமி.

நாகா கதைகளில் வருமே, அது போல மதத்தின் பெயரால், பனியில் புதைக்கப்பட்ட இச்சிறுமிக்கு ‘ லா டென்சிலா’, அதாவது திருமணமாகாத இளம் பெண் என பெயரிட்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

1999ல் அர்ஜெண்டினாவில் உள்ள லுல்லைலிகோ எனும் இடத்தில் சுமார் 6739 மீட்டர் ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டாள் டென்சிலா.

இன்கா இனத்தைச் சேர்ந்த இப்பெண் கடவுளுக்காக அர்பணிக்கப்பட்டு, கடவுளுடன் வாழ ஆசைப்பட்டு, மதத்தின் பெயரால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

டென்சிலாவின் உடல் உறுப்புகள் எதுவும் அழுகாமல், உடையாமல் அப்படியே இருக்கின்றன என ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். டென்சிலாவின் உடல் உறுப்புகளை ஆராய்ந்து பார்த்த போது, அது சில வாரங்களுக்கு முன்னர் இறந்த உடலைப் போன்று இருந்ததாம்.

அவளது முடியை வைத்து, அவள் என்ன மாதிரியான உணவுப் பழக்க வழக்கக்களைக் கொண்டவள் என ஆராய்ந்ததில், இன்கா மக்கள் தங்கள் குழந்தைகளை நன்கு கொழுக்க வைத்து கடவுளுக்கு அர்ப்பணித்தது தெரிய வந்துள்ளதாம்.

கடவுளுக்கு அர்ப்பணிப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே, விலங்கு கொழுப்புகள் மற்றும் தானியங்களைக் கொடுத்து அக்குழந்தைகளை நன்கு செழிப்பாக்குவார்களாம் அவர்கள் குடும்பத்தார்.

டென்சிலாவின் வயிற்றுப்பகுதியை ஆய்வு செய்த போது, அவள் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஏதோ காய்கறி போன்ற உணவை உட்கொண்டிருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

டென்சிலாவின் உடல் இருந்த நிலையை வைத்து பார்க்கும் போது, அவள் இறப்பதற்கு முன்னதாக ஏதேனும் மருந்து உட்கொண்டிருக்கலாம், அதன் மூலம் அவளது மரணம் நிகழ்ந்திருக்கலாம் என யூகிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

இன்காக்கள் இவ்வாறு அர்ப்பணிக்கப் பட்டவர்களை மலையின் உச்சிக்கு சுமந்து செல்வார்களாம். அந்த மலைப்பயணம் மிகவும் அபாயகரமானதாகவும், சிரமமானதாகவும் அமைந்திருக்குமாம். அவ்வாறு செல்லும் போது வழியிலே நேர்ந்து விடப்பட்டவர்களுக்கு ஏதும் அசம்பாவிதம் ஏற்பட்டி விடாமல் தடுக்க, அவர்களுக்கு கோகோ இலைகளைக் கொடுத்து, அவர்களின் சுவாசத்தை சீராக்குவார்களாம்.

இலக்கை அடைந்தவுடன் குடிக்க ஒரு மருந்து திரவம் தரப்படுமாம். அதன் மூலம் வலி, பயம் மற்றும் எதிர்க்கும் மனோபாவம் இல்லாமல் போய்விடுமாம். பின்னர் அவர்களை உடன் சென்றவர்களே மூச்சுத் திணறச் செய்தோ, தலையில் ஓங்கி அடித்தோ அல்லது பனியில் உறைய விட்டோ பலி கொடுப்பார்களாம்.

நிறைய இன்கா குழந்தைகள் இதுபோல் திருவிழாவின் போதோ அல்லது சாதாரண நாட்களிலோ பலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என நம்பப் படுகிறது. குறிப்பாக பஞ்சத்தின் போதோ அல்லது இன்காக்களின் சபா அதாவது இன்காக்களின் அரசனின் மரணத்தின் போதோ அதிகமாக் இது நடந்திருக்கலாம். இந்த உயிர் பலிகளுக்கு அவர்கள் வைத்தப் பெயர் ‘கபகோசா’.

இவற்றை ‘மம்மிகள்’ என்று அழைக்காமல் ‘தூங்கும் குழந்தைகள்’ என்று வர்ணிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இது குறித்து விக்கிபீடியாவில் பார்க்க :http://en.wikipedia.org/wiki/Mummy_Juanita

நன்றி : தட்ஸ் தமிழ் இணைய இதழ்

-'பரிவை' சே.குமார்

0 எண்ணங்கள்: