நம்ம ஆளு நேற்றைக்கு நாலு வயசுல இருந்து ஐந்து வயசுக்குள்ள போயிருக்காரு... அதுக்கு முதல்ல உங்களோட ஆசிகள்தான் அவருக்கு வேணும்... எல்லாரும் கண்டிப்பா உங்களது ஆசிகளை வழங்குங்கள் அவர் வளரட்டும்... இனி வாங்க... நாம அவரு எப்படி கெடுத்தாருங்கிற கதைக்குள்ள போவோம்...
அப்பனுக்குப் பிள்ளை தப்பாம பொறந்திருக்குன்னு மூத்தவங்க சொல்லுவாங்க. இங்க நம்மாளு அப்பனை தூக்கி கக்கத்துல வச்சிக்கிட்டு போய்க்கிட்டே இருக்கான். அப்பன் ஊமக் கிசும்புக்காரனா இருந்தா பயபுள்ள ஊருக்கே கிசும்பாவுள்ள இருக்கு.
எதுக்கெடுத்தாலும் எல்லாரையும் மிரட்டல்தான்... யாருக்கும் பயப்படுவதில்லை. 'எனக்கு எல்லாரும் பயப்படுவாய்ங்க... நீ என்னடா பயப்படவே மாட்டேங்கிறே'ன்னு யாராவது கேட்டா உனக்கெதுக்கு பயப்படணுமின்னு அசால்டா கேக்கிறானாம். அவங்க அம்மா எதாவது மிரட்டல் விட்டா 'ஏய் என்ன நித்யா... வந்தேன் கொன்னேபுடுவே'ன்னு ஆடுகளம் தனுஷ் மாதிரி அதகளம் பண்ணுறார்... இதை நான் ஸ்கைப்பில் பேசும் போது பார்த்திருக்கிறேன்...
நானெல்லாம் எங்க அம்மாகிட்ட எல்லாத்தாலையும் (டீசண்டா சொல்லிக்குவோம்) அடி வாங்கித்தான் வந்திருக்கிறேன். ஆனா இவன் அடிக்கும் முன்னாடியே சிரிச்சே மயக்குற கலையை கத்து வச்சிருக்கான். அதை அப்படியே தொடரட்டும்...
நான் ஸ்கைப்பில் பேச அழைக்கும் போது அவங்க அம்மா வேலை இருக்குன்னு சொன்னா, இவரு உடனே 'என்ன குமாரு... அம்மாவுக்கு வேலை இருக்குல்ல, எதுக்கு டிஸ்டப் பண்ணுறீங்க'ன்னு கட் பண்ணி விடுவார். நம்மிடம் பேசும் போது எனக்கு அது வேணும் இது வேணும் என்று சொல்வார் ஆனால் கடைசியில் பாப்பா அப்பா பிள்ளை, நான் அம்மா பிள்ளை என்று சொல்லி வைப்பார். சரி உன்னோட பேர் என்ன என்றால் விஷால்குமார் என்று நம்மளையும் சேர்த்துக் கொள்வார்.
அவரது பேச்சும், புரிந்து செய்யும் சேட்டைகளும் எல்லாரையும் கவர, எல்லாருக்கும் செல்லப் பிள்ளையாகவும் பொழுதுபோக்குவதற்கு ஒரு நடமாடும் அரட்டை அரங்கமுமாகவும் மாறியிருக்கிறார். சரி இதெல்லாம் எதுக்கு நம்மாளு என்னத்தைக் கெடுத்தான் எங்க கெடுத்தான் அந்தக் கதையைச் சொல்லுப்பான்னு சொல்றீங்கதானே... சரி... சரி... வாங்க சொல்றேன்.
ஊருக்குள்ள நமக்குன்னு ஒரு பேர் இருக்கு... பாட்ஷ படத்துல மாதிரி பிளாஸ் பேக்குக்குல்ல பிளாஸ்பேக்கெல்லாம் இல்லை... நேர சொல்லிடுறேன்... அது என்னான்னா... ரொம்ம்ம்ம்ம்ப நல்லபிள்ளை... யார்கிட்டயும் பிரச்சினை வச்சுக்க மாட்டான்... அவன் உண்டு அவன் வேலை உண்டு... அடுத்த ஆளுக்கிட்ட பேசக்கூட மாட்டான்னு அம்புட்டு நல்ல பேரு. ஆமா நம்மளோட ஆட்டம் பாட்டம் அரட்டை எல்லாம் நட்பு வட்டத்தில் மட்டுமே, படிக்கும் போது பெரும்பாலான பொழுதுகள் (விடுமுறை தினங்கள் உள்பட) எங்கள் ஐயா பேராசான் மு.பழனி இராகுலதாசன் வீட்டில் ஒரு கூட்டுக் குழுவோடு கழிந்து விடும். அப்புறம் எங்க ஊருக்குள்ள ஆட்களைப் பார்த்துப் பேசுறது... ஊருக்குள்ள பொயிட்டா தங்கமுன்னா தங்கம் சொக்கத் தங்கமுன்னு பேரை வாங்கி வச்சிருக்கோம்.
பொங்கலுக்கு போனவரு பயங்கர ஆட்டமாம், கண்மாயெல்லாம் நிறைஞ்சு கிடக்கு... வீட்டுக்குப் பக்கத்துல இருக்க ஊரணியில தண்ணி கிடக்கு... எல்லாம் பாத்துட்டு வந்து விஷால், 'தண்ணி சூப்பரா கெடக்குப்பா... அங்கயே குளிச்சிட்டு டிரஸ் போட்டுட்டு வரலாம்... அம்புட்டுத் தண்ணி இருக்குப்பா'ன்னு கண்கள் விரிய ஸ்கைப்பில் சொன்னதை பாக்கும்போதே அவரை அவங்கம்மா எப்படி மேய்த்துக் கொண்டாந்திருப்பார்ன்னு தெரியுது. ரெண்டையும் மேய்க்கிறதுக்குள்ள ஒரு வழி ஆயிருவாங்க... தினமும் புலம்பல்தான்... பாவம் அவங்க அம்மா.
ஊருல எல்லாரும் மாட்டுப் பொங்கல் வைத்துட்டு வந்த பிறகு மதியம் விளையாட்டுப் போட்டி வச்சிருக்காங்க... அங்கதான்ய்யா கெடுத்துத்துப்புட்டான்.
ஊரே கூடி இருந்திருக்கு... எல்லாரும் உறவுகள்... கேலிகள் கிண்டல்கள் என சந்தோஷமாய் கழியும் தருணம் அது. இவரு ரொட்டி திங்கிற போட்டியில கலந்துக்கிட்டு வாந்தி எடுத்து வெற்றி பெறமால் போனது ஒரு புறம். நிறைய போட்டிகளுக்கு மத்தியில் உறி அடிக்கிற போட்டியும் வச்சிருக்காங்க. எல்லாப் பசங்களும் ரொம்ப அமைதியா இருந்து ரசிச்சிருக்காங்க... நம்மாளு குதிக்கிறதும் கைதட்டுறது வாய்க்குள்ள விரலை விட்டு விசிலடிக்க முயற்சி பண்ணி 'விஷ்ஷ்ஷ்....'ன்னு சத்தம் போடுறதுமா அலம்பலைக் கூட்டி அந்த இடத்தை மேலும் கலகலப்பாக்கியிருக்கிறார்.
இதுக்கெல்லாம் மேலாக கண்ணக் கட்டிப் போறவங்களைப் பார்த்து 'டேய் வேமாப் போடா... போயி ஒடடா... சும்மா இங்கயே சுத்றே... எங்கடா போறே...' என்றும் தோல்வி அடைந்து கண் கட்டை அவிழ்க்கும் போது 'அய்யோ...முடிலையா போ... போ... அடுத்த ஆளூ வா.. வா... கட்டுடா...' அப்படியிப்படின்னு வயசு வித்தியாசம் பாக்காம சகட்டு மேனிக்கு பேசியிருக்கான். எல்லாரும் பாத்துட்டு 'அடியாத்தி என்ன குமாரு மகன் இப்படி ஆட்டம் போடுறான்... இவன் அப்பன் இருக்க இடம் தெரியாதே'ன்னு நமக்காக ரொம்ப வருத்தப்பட்டிருக்காங்க. வாங்கி வச்ச பேருக்கு வாஞ்சையாப் பேசியிருக்காங்க.
'அடேய் என்னடா எம்மவன் பேசவே மாட்டான் நீ இந்தப் பேச்சு பேசுறே?'ன்னு சித்தப்பா...
'அதுசரி குமாரு மகனா இது... ஆட்டம் பலமா இருக்கே'ன்னு ஆயா...
'எங்க குமாரண்ணன் இருக்க இடமே தெரியாது... அது மகன் எங்க இருந்தாலும் தனியாத் தெரிவான் போலருக்கே' அப்படின்னு ஒண்ணுவிட்ட தம்பி...
இப்படி என் உறவுகள் எல்லாரும் அவனை கேட்டாலும் அவரு போட்ட ஆட்டத்தை நிறுத்தவே இல்லையாம்... தொடர்ந்து பவர் ஸ்டார் ஹிட்டுத்தானாம்.
இப்படி நம்ம பேரை ஊருக்குள்ள நாறடிச்சிட்டு வியாழன் இரவு காரைக்குடிக்கு வந்துட்டாரு, ஸ்கைப்பில் பேசும் போது 'அப்பா அல்லாருக்கும் பிரைசு குடுத்தாய்ங்க எனக்குத் தரமாட்டேன்னுட்டாய்ங்கன்னு சொன்னாரு... வாய் மட்டும் பேசுறே... ஜெயிக்க முடியலைன்னு கேட்டதும் அய்யா வாங்கின பிரைசு எனக்குத்தான்னு வேற பெருமையா சொல்லிக்கிறாரு.
எது எப்படியோங்க... தனது பேச்சாலும் சிரிப்பாலும் அனைவரையும் கவர்ந்து வச்சிருக்கும் எங்கள் அன்பு மகன் இன்று பிறந்தநாள் கொண்டாடியிருக்கார். திறமைசாலியான அவன் திறமைகள் மேலும் மெருகேறவும் எப்பவும் அவனோட சந்தோஷமும் பேச்சுத் திறமையும் நெலைச்சு இருக்கணுமின்னும் எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கிறோம்.
நீங்களும் அவன் நல்லாயிருக்கணுமின்னு வேண்டிக்கங்க... அப்படியே உங்களோட ஆசிகளையும் வழங்கிட்டுப் போங்க...
-'பரிவை' சே.குமார்
11 எண்ணங்கள்:
தரவிறக்கம் செய்திடும் கோப்பின் அளவு என்ன? -
http://mytamilpeople.blogspot.in/2013/01/get-file-size.html
நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் வாரிசுக்கு.
இன்னும் வளர்ந்தபின் அவருக்கு இந்த இடுகையைப் படிச்சுக்காட்டுங்க :-))))
//தனது பேச்சாலும் சிரிப்பாலும் அனைவரையும் கவர்ந்து வச்சிருக்கும் எங்கள் அன்பு மகன் இன்று பிறந்தநாள் கொண்டாடியிருக்கார். திறமைசாலியான அவன் திறமைகள் மேலும் மெருகேறவும் எப்பவும் அவனோட சந்தோஷமும் பேச்சுத் திறமையும் நெலைச்சு இருக்கணுமின்னும் எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கிறோம்.///
நாங்களும் வேண்டிக்கொள்கிறோம்.
குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்,குட்டிக் குமாருக்கு!///அப்புறம்,சிறு வயதில் இப்படி வளரும் குழந்தைகள்,நாளடைவில் வளர,வளர அமைதியின் பிறப்பிடமாகி விடுவார்களாம்!
விஷால் குமாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.கூடிய விரைவில் குமாரோட மகன் விஷால் என்ற அடைச் சொல் மாறி விஷாலோட அப்பா குமார் என்கிற பெருமை பெறும் அளவு மகன் எல்லாவற்றிலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்.அம்மாக்கள் எப்பவும் பாவம் தான்.ஹி ஹி...
விஷாலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
விஷால் குமாருக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்:)!
மருமவன் விஷாலுக்கு மனம்கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். குழந்தை என்றும் மனமகிழ்ச்சியோடும் இதே துள்ளலோடும் பிணியற்று நீடூழி வாழ இறைவேண்டி வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்..
குமாரு நீ சொல்றத படிக்கயில எனக்கு புள்ளய பார்த்தமாதிரியே இருக்கு. சுத்திபோடச்சொல்லு..:)
விஷால் குமாரும் அவரது அட்டகாசங்களும் மென்மேலும் வளரட்டும்.
கருத்துரையிடுக