படிக்கும் காலத்தில் தீபாவளி, பொங்கல் என்றாலே பண்டிகைக்கான களிப்பு இருக்குமோ இல்லையோ வாழ்த்து அட்டைகள் வரும் என்ற சந்தோஷம் அடிமனதில் ஆர்ப்பரிக்கும். நண்பர்கள், உறவுகள் என எல்லாரும் எல்லாருக்கும் வாழ்த்து அட்டைகளை அனுப்பித் தங்களது சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ளும் அருமையான நிகழ்வாக இந்தப் பண்டிகைகள் இருக்கும்.
கிராமங்களில் உறவினர்கள் கொடுக்கும் திருவிழாக்காசை விட தபால்காரர் கொண்டு வந்து கொடுக்கும் வாழ்த்துக்களுக்கு வாயெல்லாம் பல்லாகத் திரிந்திருக்கிறோம் என்பது மறுக்கமுடியாத மறக்கமுடியாத உண்மை.பண்டிகைகள் என்றாலே எல்லாப் புத்தகக் கடைகளிலும் வாழ்த்து அட்டைகள் வகை வாரியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். தீபாவளிக்கு வெடிக்கடைகள் முளைப்பது போல் வாழ்த்து அட்டைகள் விற்பனைக்கென ஆங்காங்கே கடைகள் முளைக்கும். பண்டிகையோடு தொடர்புடைய வாழ்த்து அட்டைகள் இருந்தாலும் சின்ன வயதில் அதிகம் கவரும் வாழ்த்து அட்டைகளாய் ஆதர்ச நாயகன், நாயகிகள்தான் இருந்தார்கள். பல அட்டைகள் அவர்களுக்காகவே வாங்கி அனுப்பாமல் பத்திரப்படுத்தப்படும்.
தீபாவளி வாழ்த்தைவிட பொங்கல் வாழ்த்துக்குதான் அதிக மதிப்பு இருக்கும். அதுவும் பொங்கல் விடுமுறைக்கு முன்னரே நண்பர்களுடன் கடைக்கு சென்று வாழ்த்து அட்டைகள் வாங்கி இவன் இவன் நமக்கு அனுப்புவான் என்று கணக்குப் போட்டு அனுப்பி வைத்துவிட்டு அவர்களின் வாழ்த்துக்களை எதிர் நோக்கி காத்திருந்த நாட்கள் எத்தனை எத்தனையோ...
நகரங்களில் எப்படியோ கிராமங்களில் வாழ்த்து அட்டைகள் கொடுத்த சந்தோஷம் அலாதியானது... எங்கள் ஊருக்கு கண்டதேவியில்தான் தபால் அலுவலகம்,கண்டதேவி ஐயரான தபால் நிலைய அதிகாரி வீட்டில் முன்பகுதியை அலுவலகமாக மாற்றி வைத்திருந்தார். தபால்காரர் எங்கள் ஊருக்கு வாரத்த்தில் இரண்டு முறைதான் வருவார். எங்க ஊருக்காரர்களுக்கு உறவுக்காரர் போல ஐயர், எனவே அலுவலக நேரம் தவிர்த்து மற்ற நேரத்திலும் போய் தபால் வந்திருக்கிறதா என்று பார்த்து வாங்கி வரலாம். இதனால் யார் கண்டதேவிக்குப் போனாலும் ஐயரைப் பார்த்து தபால் வந்திருந்தால் வாங்கி வந்துவிடுவார்கள்.
மாட்டுப் பொங்கல் என்பது ஊரே ஒரு இடத்தில் கூடி வைக்கும் ஒரு இனிய பண்டிகையாகும். எங்கள் ஊர் கருப்பர் கோவிலின் எதிரில் இடம் சுத்தம் செய்து, தோரணங்கள் கட்டி எல்லாருமாய் கூடி கொண்டாடி மகிழ்வோம். கண்டதேவிக்கும் எங்கள் ஊருக்கும் இடையில்தான் இந்த இடம் இருக்கிறது. அதனால் தபால்காரர் மற்ற நாட்களில் முன்னப்பின்ன வந்தாலும் மாட்டுப் பொங்கல் அன்று கண்டிப்பாக சரியான நேரத்துக்கு வந்துவிடுவார்.அவர் கையில் கொண்டு வரும் வயர்க்கூடையில் நிறைய வாழ்த்து அட்டைகள் இருக்கும். பூவரச மரத்தில் ஆடியபடி அவருக்காக காத்திருக்கும் நாங்கள் அவரை சூழ்ந்து கொள்வோம். அவரும் ஒவ்வொரு பெயராகப் பார்த்து வாசித்துக் கொடுப்பார். ஆளுக்கு பத்து இருவது என வாழ்த்து அட்டைகள் வந்திருக்கும். எல்லாருடைய முகத்திலும் சந்தோஷம் சக்கரைப் பொங்கலாக பொங்கி நிற்கும்.
இதில் இன்னொரு முக்கியமான விசயம் என்னன்னா பக்கத்து வீட்டில் இருக்கும் மச்சானுக்கும் தபால்தலை ஒட்டாமல் வாழ்த்து அனுப்பியிருப்போம்...அதுக்கு 2ரூபாய் அல்லது 3ரூபாய் அபராதம் கட்டவேண்டியிருக்கும். நமக்கிட்ட அப்போ காசு இருக்காது... உடனே சரி போடா அடுத்த தடவை வரும் போது அம்மாகிட்ட வாங்கிக்கிறேன்னு சொல்லி கொடுத்துச் செல்வார்.
பொங்கல் முடிந்து எல்லா வீட்டுப் பொங்கல் பானையிலும் கொஞ்சம் பொங்கல் எடுத்து காய்கறிகள் வேகவைத்து எல்லாம் கலந்து மந்திரம் சொல்லி மாடுகளுக்கு தீட்டி சுற்றி வரும் போது வாழ்த்து அட்டைகள் கொடுத்த சந்தோஷத்தில் 'பொங்கலோ பொங்கப்...பொங்கப்...பொங்க... பட்டி பெருகப் பெருக பால்ப்பானை பொங்கப்... பொங்க... பொங்க...' என்ற பாடல் சப்தமாக ஒலிக்க அங்கே சந்தோஷம் நிறைந்திருக்கும்.
கல்லூரியில் படிக்கும் போது வந்த வாழ்த்து அட்டைகளில் மிகவும் நெருக்கமானவர்கள் அனுப்பும் வாழ்த்து அட்டைகள் கொண்டு வந்த சந்தோஷம் இன்னும் அதிகம். அதில் பல கார்டுகள் பழைய குப்பைகளை கிளறும் போது பத்திரமாய் இருந்திருக்கின்றன... இன்னும் இருக்கின்றன. எப்ப ஊருக்குப் போனாலும் 'அடேய்... அந்த பீரோவுல கீழே கேசட்டும் பேப்பருமா வச்சிருக்கே... யாருமே யூஸ் பண்ண முடியாம... அதை எடுத்தியன்னா நான் துணிமணி வச்சுப்பேன்'னு அப்பா சொல்லிக்கிட்டேதான் இருக்காரு... 'எடுப்போம்... எடுப்போம்...' என்று இன்னும் பல வாழ்த்து அட்டைகளும் , இளையராசாவின் பாடல்களை சுமந்த TDK ஆடியோ கேஸட்டுக்களும் எழுதுகிறேன் என்று கிறுக்கிய பேப்பர்களும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன எடுக்கப்படாமலே...
எனக்கும் ஆசைதான் நண்பர்களுக்கெல்லாம் மீண்டும் வாழ்த்து அட்டைகள் அனுப்ப வேண்டும் என்று 'டேய் உன் அட்ரஸ் சொல்றா என்றால் கூகிள், யாஹீ, ஹாட்மெயில் என இணைய முகவரிகள்தான் கிடைக்கின்றன. நானும் இணையத்தில் பொங்கல் வைக்கும் படங்களைத் தேடி இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் அப்படின்னு டைப்பி அனுப்பிடுறேன். அவர்களும் உனக்கும் வாழ்த்துக்கள்டா அப்படின்னு அதிலயே திருப்பி அனுப்பிச்சிடுறாங்க.
இன்னும் கொடுமை என்னன்னா இப்பல்லாம் எங்க ஊருக்கு தபால்காரரே வருவதில்லையாம்.யாருக்கும் லெட்டர் கூட வருவதில்லையாம். எதுவா இருந்தாலும் போனில்தான். முன்பு சாவுச் செய்தி சொல்ல எல்லா ஊருக்கும் சைக்கிளிலோ வண்டியிலோ ஓடினோம். இப்போ அதுவும் போனில் என்றாகிவிட்டது. முன்னேற்றங்கள் முக்கியமானவைகளை ஏப்பம் விட்டுவிட்டன... உறவுகளுக்குள் பாசத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக கொன்றுவிட்டன.
தபால்காரர் கொண்டு வந்து கொடுக்கும் வாழ்த்து அட்டைகள் கொடுத்த சந்தோஷத்தில் கடுகளவேனும் இன்றைய இணைய வாழ்த்துக்கள் கொடுக்கின்றனவா என்றால் சத்தியமாக இல்லை என்பதே உண்மை. நான்கு வரிகளையோ அல்லது இணையத்தில் எடுத்த படங்களையோ ஒட்டு மொத்தமாய் அனைவரின் முகவரிக்கும் அனுப்பவதில் அப்படி என்ன ஆனந்தம் இருந்துவிடப் போகிறது?
வாழ்த்து அட்டைகள் தொலைந்த இந்த நாட்களில்ஒப்புக்காக நாம் சொல்லும் வாழ்த்தில் ஏனோ நெருக்கமான அன்பும் 1.50பைசா அட்டை கொடுத்த சந்தோஷமும் இல்லாமல் போய்விட்டது என்பதே உண்மை. இனி வரும் தலைமுறை நாம் அனுபவித்தவற்றில் பலவற்றை இழந்து கணிப்பொறியே உலகம் என வாழப் போகிறது என்பது வேதனைக்குரியதாக இருந்தாலும் மாற்றங்கள் நிறைந்த உலகில் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.
ஆர்ப்பாட்டமான ஆனந்தத்தைக் கொடுத்த வாழ்த்து அட்டை கலாச்சாரம் நமது இளம் வாழ்க்கையோடு மறைந்துவிட்டதை நினைக்கும் போது வருத்தமாகத்தான் இருக்கிறது. வளரும் கலாச்சார மாற்றத்தில் நாம் நல்லனவற்றை எல்லாம் இழந்து கொண்டேதான் போகிறோம் என்பதே எழுத்தில் சொல்வதால் மட்டும் என்ன பயன் வந்துவிடப் போகிறது?
படங்கள் வழங்கிய இணையத்துக்கு நன்றி.
-'பரிவை' சே.குமார்
6 எண்ணங்கள்:
விண்டோஸ் 8 சிஸ்டம் டிப்ஸ் -
http://mytamilpeople.blogspot.in/2013/01/windows-8-tips.html
kaalam maarivithathu.. aanal ingu ellarum greetings card thaan parimaari kolhirarga.. lkg padikum en ponnuku 30 newyear card vanthathu. avaga friends ellarum koduthaaga. ini india vanthaalum en friends ku ellam card thaan anupanum endru mudivu pannivithen..
காலம் மாறி விட்டது,இப்பொழுது இ க்ரீட்டிங்ஸ் அனுப்பிடறாங்க.சுவையான மலரும் நினைவுகள்...
வாழ்த்து அட்டைகள் அனுப்புவதில் கிடைக்கும் மகிழ்ச்சியே தனிதான். காலத்தோடு நாமும் மாற வேண்டிய கட்டாயம். நல்ல பதிவு.
உண்மைதான் தம்பி...பொங்கல் வாழ்த்து அட்டைகள் தேர்ந்தெடுத்து ஒவ்வொருவருக்காக அனுப்பும் மகிழ்ச்சியை இன்று இழந்துவிட்டோம்..:)
மனதார சிரிக்கும் நிலைமையும் மாறலாம்...
கருத்துரையிடுக