மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 12 நவம்பர், 2012

தீபாவளி நினைவுகள்....




சின்ன வயதில் தீபாவளி வருகிறது என்றாலே இன்னும் எத்தனை நாள் இருக்கிறது என்று நாட்காட்டியில் நாட்களை தினமும் எண்ணி எண்ணிப் பார்த்து இன்னும் ஒரு மாதம்... பத்து நாள்... ஒரு வாரம்... இரண்டு நாள்... நாளை என்று சந்தோஷத்தை சுமந்து கொண்டாடிய அந்த தினங்களை மறக்க முடியுமா?

பத்து நாளைக்கு முன்னரே முறுக்குக்கும் அதிரசத்துக்கும் மாவு தயார் பண்ணி வைத்து மூன்று நான்கு நாட்களுக்கு முன்னர் அதிரசம் முறுக்கு எல்லாம் செய்து வைக்கும் அம்மா முறுக்குச் சுடும் போது அவருக்கு உதவுவது போல் அருகில் இருந்து அரைவேக்காடாய் எடுத்துக் கொடுக்கும் முறுக்கை அனைவரும் சந்தோஷமாய் சாப்பிட்டு மகிழ்ந்த தினத்தை மறக்க முடியுமா?

வீட்டில் தீபாவளிக்கு என புதுத்துணிகள் எடுத்த போதும் வெளியூரில் வேலை பார்க்கும் அண்ணன் அங்கிருந்து தைத்துக் கொண்டு வரும் சட்டை டவுசருக்காக அண்ணனின் வரவை எதிர் நோக்கி காத்திருந்த தருணங்களை மறக்க முடியுமா?

அதிகாலையில் அப்பா தலை முதல் கால் வரை நல்லெண்ணெய்யை சொத சொதவென தேய்த்து விட புலி மார்க் சீயக்காய் தூளை டம்ளரில் கொட்டிக் கொண்டு கண்மாய்க்குப் போய் குளித்து முனியய்யா கோவிலில் சாமி கும்பிட்டு வீடு திரும்பம் அந்த சந்தோஷத்தை மறக்க முடியுமா?

புதுத் துணிகளை உடுத்தியதும் மாரியம்மன் கோவில் வாசலில் கூடி ஒருவருக்கு ஒருவர் புதுத் துணிகளைப் பார்த்து மகிழ்ந்து வெடிகள் போட்டு கொண்டாடிய நாளை மறக்க முடியுமா?

பெரியக்கா திருமணத்துக்குப் பிறகு தீபாவளிக்கு வரும் அத்தான் கொண்டு வரும் வெடிகள் நிறைந்த பெட்டிகளுக்காக அக்கா இன்னும் வரவில்லை என்று வாசலில் காத்திருந்த நாட்களை மறக்க முடியுமா?

அருகில் நிற்பவனுக்குத் தெரியாமல் மாட்டுச் சாணியில் அணுகுண்டை புதைத்துப் பற்ற வைத்து வெடிப்பதில் கிடைத்த சந்தோஷத்தையும் கொட்டாச்சிக்குள் அணுகுண்டை வைத்து வெடிக்கும் போது சிதறிய கொட்டாச்சி உயரப் பறப்பதில் கிடைத்த சந்தோஷத்தையும் பாட்டிலில் வைத்து விட்ட ராக்கெட் சீறிப் போவதில் கிடைத்த சந்தோஷத்தையும் மறக்க முடியுமா?

வெடித்து முடித்து கிடக்கும் குப்பைகளை ஒன்றாக்கி அவற்றை பற்ற வைக்கும் போது வெடிக்காத வெதி குதூகலித்ததை மறக்க முடியுமா?

இப்படி எத்தனையோ மறக்க முடியாத நினைவுகளை சுமக்க வைத்த தீபாவளி தொலைக்காட்சிப் பெட்டிக்குள்ளும் காசுக்கு வாங்கிய இனிப்புக்குள்ளும் அடங்கிவிட்டது என்றாலுடிகள் அதற்குள் இருந்து வெடிக்கும் போது எல்லாருமாக சேர்ந்து ஓவென கத்ம் கிராமத்தில் கொண்டாடும் தீபாவளியில் கிடைக்கும் சந்தோஷம் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

இன்று....

தீபாவளி கொண்டாடினீர்களா... சந்தோஷமாக கொண்டாடுங்கள்... என்று போனில் கேட்டு வாழ்த்து சொல்லிவிட்டு எப்பவும் போல் வேலைக்கு கிளம்பும் வெளி நாட்டு வாழ்க்கையில் பண்டிகை தினங்களின் நினைவுகள் பசுமையாய் மனசுக்குள் சாரலை தூவச் செய்தாலும் வெற்றிடங்களை நிரப்ப முடியாமல் இதயம் இலக்கின்றி துடிக்கிறதை மறுக்க முடியவில்லை. 



புத்தாடையும் பலகாரமும்...
வெடிகளும் மத்தாப்பும்...
விருந்து உபச்சாரமுமாய்...
தித்திக்கும் தீபாவளி 
கொண்டாடும் உறவுகள்
அனைவரின் இல்லத்திலும்
சந்தோஷம் குடிகொண்டு
அன்பும் அமைதியும் 
எப்போதும் வீற்றிருக்க
வாழ்த்துகிறோம்....

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

-'பரிவை' சே.குமார். 

8 எண்ணங்கள்:

அம்பாளடியாள் சொன்னது…

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சகோதரரே !......

r.v.saravanan சொன்னது…

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

இனிய நினைவுகளைச் சொன்னவிதம் மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

அன்புடன் மலிக்கா சொன்னது…

அனைவருக்கும் இனிய நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

தீபாவளி வாழ்த்துக்கள்

Asiya Omar சொன்னது…

தங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

ஹேமா சொன்னது…

குமார்....மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்து உங்கள் குடும்பத்தினருக்கும் உங்களுக்கும் !