மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 20 ஜூலை, 2011

நினைவுகள் சுடுவதில்லை'பாழாப்போற கரண்ட்டு எப்ப போகுமின்னே தெரியலை. திடீர்ன்னு வருது... திடீர்ன்னு போகுது... ராத்திரியில கரண்ட நிப்பாட்டி தூக்கத்தை கெடுக்கிறாய்ங்க' என்று முணுமுணுத்தபடி கம்பியில் தொங்கிய அரிக்கேன் விளக்கை எடுத்து துடைத்து... 'மண்ணெண்ணெய் இருக்கான்னு தெரியலையே' என்று முணங்கியபடி... ஆட்டிப் பார்த்து ஒரு ஓரமாக வைத்தாள் கண்ணம்மா.

"அதான் அண்ணன் ஊர்ல இருந்து கொடுத்துவிட்ட சார்ஜர்லைட் இருக்குல்ல... அப்புறம் எதுக்கும்மா தினமும் லண்டியனை தொடச்சு வக்கிறே..?" எதோ வரைந்து கொண்டிருந்த சின்ன மக செண்பகம் கேட்டாள்.

"ஆமாடி கரண்டே சரியா வரலையாம்... இதுல சாருசுலைட்டு எங்குட்டு எரியும்... சாருசுலைட்டு... அவசரத்துக்கு லண்டியந்தான்டி நமக்கெல்லாம் ஒத்து வரும்" என்றபடி புகைந்த அடுப்பில் சில்லாமடையையை பிய்த்துப் போட்டு ஊதாங்குழாயால் ஊதிவிட்டாள்.

"அடியே... செம்பகம்... வெறகு ஈரமா இருக்குடி... புடிக்கவே மாட்டேங்குது... புகையா வருது... கண்ணெல்லாம் எரியுது... கொஞ்ச வெறக நாளக்கி வெயில்ல எடுத்து காயப்போட்டு கசால பரண்ல போட்டு வைக்கணும்... ஆத்தர அவசரத்துக்கு உதவும்."

"அதானே என்னடா லீவுக்கு இன்னும் ஒரு வேலையும் சொல்லலையேன்னு பாத்தேன்..."

"ஆமா... கலையெடுக்க போகப்போறே... கெடக்க வெறக எடுத்து வெயில்ல போடுறது ஒரு வேலயாடி உனக்கு... சரி... சரி...படிக்கிற வேலயப் பாரு... கரண்டு பொயிட்டா உங்களுக்கெல்லாம் லண்டியனை வச்சுக்கிட்டுப் படிக்க புடிக்காது. அந்தக் காலத்துல நாங்கலாம் இதுலதான் படிச்சோம்" என்று தனது படிப்பை மகளிடம் பெருமையா சொன்னாள்.

"ஆமா... கலெக்டருக்குப் படிச்சிட்டிய... அட ஏம்மா... நீங்க லண்டியனை வச்சுக்கிட்டு படிச்சதுக்காக நாங்களும் அப்படியே இருக்கணுமா என்ன..." அம்மாவை எதிர்த்துக் கேட்டாள்.

சின்னவ எப்பவும் இப்படித்தான் படக் படக்கென்று பேசுவாள். வாய்க்கு வாய் பேசுவதால் ஊருக்குள் அவளுக்கு வாயாடின்னு பட்டப்பேரே உண்டு. பெரியவள் இவளுக்கு நேர்மாறானவள். எதைச் சொன்னாலும் உதடு நெளியாமல் சிரிப்பாள். அம்புட்டுத்தான்... அவளுக்கும் அமுக்குனியின்னு பட்டப் பெயர் இருந்துச்சு. கண்ணம்மாவுக்கு சின்ன மகளை ஒரண்டை இழுத்துப் பார்ப்பது ரொம்பப் பிடிக்கும்.

"நான் அந்தக் காலத்து அஞ்சாப்புடி... எதோ உங்கய்யனுக்கு வசதி வாய்ப்பில்லை... அதுக்கு மேல படிக்க வைக்கலை... இல்லேன்னா நாங்களும் எதாவது ஒரு கவருமெண்டு ஆப்பீசராவோ இல்ல ஸ்கூலு டீச்சராவோ இருந்திருப்போம்".

"ஆத்தாடி...இம்பூட்டு படிப்பு படிச்சிட்டா எருமைச் சாணி அள்ளுறே... நீ டீச்சரா இருந்தா பிள்ளைங்க நெலமை என்னாயிருக்குமுன்னு நெனச்சா சிரிப்புத்தான் வருது. விடும்மா... முடியலை..." என்று கண்களை மூடிக் கொண்டு சிரித்தாள்.

"சிரிப்பேடி... சிரிப்பே.... ஏ... அழகுக்கும் அறிவுக்கும் எத்தனையோ மாப்ள வந்தும் எங்கப்பா சொந்த விட்டுறக்கூடாதுன்னு உங்கப்பாவுக்கு கட்டி வச்சாரு..."

"அய்யோ அம்மா... நான் ஒண்ணும் சொல்லலை... எதுக்கு எங்கப்பாவ இழுக்குறீங்க... அப்புறம் அவரை திட்டாம உங்களுக்கு தூக்கம் வராது... வேண்டாம்... அடுப்புல இருக்க சோத்தைப் பாருங்க... போங்க" என்று விரட்டினாள்.

அவள் விரட்டவும் கரண்ட் போகவும் சரியாக இருந்தது. "இப்பத்தான் சொன்னேன்... நிப்பாட்டிட்டாண்டி... இனி எப்ப வருதோ... அடுப்படி செவத்து மேல தீப்பட்டி இருக்கு பாரு... எடுத்து லண்டியனைக் கொளுத்துடி."

லண்டியனைப் பற்ற வைத்து டக்கென்று வைத்தாள். அது 'டப்டப்'பென்று எரிய ஆரம்பித்தது.

"மெதுவா வைடி... அந்தக் காலத்து வெளக்குடி இது... எங்கயித்தை வச்சிருந்தது... இப்ப வச்ச மாதிரி எங்கயித்தைக்கிட்ட வச்சிருந்தா செவுலுல நாலு விட்டிருக்கும். இந்த வீட்டுக்கு நான் வாறப்போ கரண்ட்டு இல்ல... அப்ப இந்த வெளக்குத்தான்... ஒண்ணு இல்ல மூணு லண்டியன்... ரெண்டு சிமுளி விளக்கு... அது பத்தாதுன்னு பாட்டில்ல துணிய திரியாப் போட்டு காண்டா வெளக்கு வேற வச்சிருக்கும்... அதை வச்சிக்கிட்டே பால் பீச்சிக்கிட்டு வந்துரும். சாயங்கலமாச்சின்னா எங்கயித்தை எல்லா கிளாசையும் சுத்தமா கழுவி துணூறு போட்டுத் தொடச்சு வரிசையா வச்சிருக்கும்... ஆறு மணிக்கெல்லாம் பத்த வச்சி வச்சிரும்.... அந்த வெளிச்சத்துலதான் நாங்க பேசிக்கிட்டு இருக்கிறது... சாப்பிடுறது எல்லாம்... ம்... இப்ப யாரு சிமுளி தேடுறா... எல்லாங் காலந்தான்..."

"அம்மா... அப்பத்தா வச்சிருந்த வெளக்குக்குத்தான் இம்புட்டு பில்டப்பா..."

"அடியேய்.... எங்கயித்தை எல்லா மாமியாரு போலவும் இல்லடி... எங்காத்தாடி அது... இல்லேன்னா இந்த குடிகாரக் கொத்திய அப்பவே தூக்கிப் போட்டுட்டுப் போயிருப்பேன்... எல்லாத்துக்கும் அது எனக்கு ஆதரவாயிருந்துச்சு... உங்கப்பா வேலை வெட்டிக்குப் போகாம சீட்டாட்டம்தான் போட்டாரு... எங்கயித்தைதான் ஏழெட்டு எருவமாடு வச்சி பால் பீச்சி தயிர் யாவாரம் பண்ணி குடும்பத்தை ஓட்டுச்சுடி... உங்கப்பனுக்கு புள்ளகுட்டியின்னு ஆனோடனேதான் அந்த ஆண்டவன் புத்தியக் கொடுத்துச்சு... கொஞ்ச கொஞ்சமா உங்கப்பா திருந்தி வேலை வெட்டியின்னு பாக்க ஆரம்பிச்சாரு... எங்கயித்தை ஆம்பளைக் கணக்கா வேலை பாக்கும்... ஊருக்குள்ள ஒரு பயபுள்ள எதுத்துப் பேசமுடியாது... அதோட குணந்தான் உனக்கிட்ட இப்ப அப்படியே இருக்கு..."

"ஆத்தாடி... அப்பத்தா குணமா எனக்கு... அப்ப நானும் எருவமாடு மேப்பனா?"

"நீ வாய்க்கு வாய் பேசுறதுல உங்கப்பத்தாடி... சரி அந்த லண்டியனை அமத்திட்டு மறுபடிக்கும் பத்த வச்சி கிளாசை நல்லா மாட்டு... காத்து உள்ள போகுது போல டப்பு டப்புங்குது பாரு..."

சரியாக வைத்துப் பற்ற வைத்தாள்... கண்ணாடி கிளாசுக்குள் திரியில் எரியும் தீ வீடெங்கும் வியாபித்திருக்க... தீயின் ஆடலுக்குத் தகுந்தாற்போல் நிழல்களும் ஆட ...

"என்ன செண்பா... திடீர்ன்னு அரிக்கேன் விளக்கை பத்த வச்சி ...அது எரியிறதையே பாத்துக்கிட்டு இருக்கே... பழைய ஞாபகமா?" கணவனின் குரல் கேட்டுத் திரும்பியவள்

"ஆமாங்க... எங்கப்பத்தா ஞாபகமா எங்கம்மா வச்சிருந்தாங்க... ரொம்ப நாளைக்கு அப்புறம் இங்க வந்ததும் தூசியடைஞ்சு கிடந்த லண்டியனைப் பார்த்ததும் அவங்க ஞாபகம் வந்திரிச்சு... அதான்..." சொல்லும் போதே குரல் கம்மியதுடன் அழுகையும் வந்தது.

கண்ணைத் தொடைத்து தலையை உயர்த்தினாள். சுவற்றில் ஐயா, அப்பத்தா, அப்பா, அம்மா அனைவரும் காய்ந்த மாலைகளுக்கு இடையே சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

-'பரிவை' சே.குமார்.

Photo from Google

30 எண்ணங்கள்:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

முதல் வாசகன்

தமிழ்க்காதலன் சொன்னது…

கலக்கிட்ட கண்ணா, வாழ்க்கையின் உயிரோட்டம் எங்கே துடிக்குது அப்படின்னு நாடிப் பிடித்து எழுதுவதில் நீ கில்லாடி. வாழ்வின் மிக நுண்ணிய உணர்வுகள் நீ பேசும் விதம் மிக அருமை. உன் எழுத்துகளுக்கு நான் இரசிகன். உணர்வலைகள் வீசும் உந்தன் எழுத்து வீச்சு பாராட்டுக்குரியது. கண்ணா..., கதை மன்னா..., இன்னும் இது போல் ஆயிரம் ஆயிரம் அரியப் படைப்புகள் கொடு.

மாலதி சொன்னது…

இதயத்தை தொடும் நல்ல கதை பாராட்டுகள் தொடர்க .........

சக்தி கல்வி மையம் சொன்னது…

அருமையான கதை..
வாழ்த்துக்கள்..

செங்கோவி சொன்னது…

பொருட்களின் அணுவில்
புதைந்து கொள்ளும் ஞாபகங்கள்.

துலக்கத் துலக்க வெளிவரும்
நம் பராம்பரியங்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

அம்மா பேசற காட்சி எனக்கு திரைக்காட்சியைப்போல விரிகிறது.
நன்றாக இருக்கிறது குமார்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சி.பி.அண்ணா...
முதல் வாசகனாய் முகர்ந்ததற்கு நன்றி.
ஆமா கருத்து எழுதவில்லையே ஏன்?

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தமிழ்...
அடேய்...
என்ன ரொம்ப அலும்பா ஒரு பின்னூட்டம்?
எப்படியிருந்தாலும் உன் கருத்துக்கு மிக்க நன்றி நண்பா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மாலதி அக்கா..
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க கருன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க செங்கோவி...
//துலக்கத் துலக்க வெளிவரும்
நம் பராம்பரியங்கள்.//

உண்மைதான். சின்ன வயதில் லண்டியன் கிளாசைக் கழுவி துடைத்து பற்ற வைத்த நாட்கள் நிறைய... ஏன் எட்டாம் வகுப்பி வரை லண்டியன் படிப்புதான்... அதற்குப் பிறகுதான் எங்கள் வீட்டிற்கு மின்சாரம் வந்தது.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

அருமையான கதை குமார்,என்னுடைய பழைய ஞாபகங்களை கிளறிவிட்டது.

vanathy சொன்னது…

நல்ல கதை. சூப்பர்.

ராமலக்ஷ்மி சொன்னது…

// தீயின் ஆடலுக்குத் தகுந்தாற்போல் நிழல்களும் ஆட ...//

ஆம், நினைவுகள் சுடுவதில்லை. செண்பகத்தை மட்டுமல்ல எங்களையும் இழுத்துக் கொண்டு போய் விட்டது பழைய நினைவுகளுக்கு அந்த அரிக்கேன் விளக்கு. கதை மிக நன்று குமார்.

Priya சொன்னது…

நல்ல கதை,பாராட்டுக்கள்!

சுசி சொன்னது…

மலரும் நினைவுகள் எங்களுக்கும்..

பெயரில்லா சொன்னது…

சிறந்த நடை..தேராய் நகர்ந்தாலும் அழகு

சாந்தி மாரியப்பன் சொன்னது…

கலக்கிட்டீங்க போங்க.. அம்மாவுக்கும் மகளுக்குமிடையேயான உரையாடலை அற்புதமா கொடுத்திருக்கீங்க :-))

ஹேமா சொன்னது…

சிம்னி விளக்கின் வெளிச்சத்தில் நிழலாக நினவுகளை அப்படியே எங்கள் கண்முன்னும் கொண்டு வந்திருக்கிறீர்கள்.அருமையான சிறுகதை.சில விளக்குகளின் பெயரை இப்போதான் தெரிந்துகொண்டேன் குமார் !

r.v.saravanan சொன்னது…

மலரும் நினைவுகளை தரும் கதை நன்று குமார் வாழ்த்துக்கள் எழுத்து நடை அற்புதம்

vidivelli சொன்னது…

supper kathai,,
vaalththukkal..

மோகன்ஜி சொன்னது…

கொஞ்ச நேரம் உன் கதைக்குள்ளே வாழ்ந்தேன் குமார்! வாழ்த்துக்கள்..

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க முத்துலெட்சுமி அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ரமா அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வானதி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ராமலெஷ்மி அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பிரியா அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சுசி அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தமிழரசி அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க அமைதிச்சாரல் ...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஹேமா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சரவணன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஹேமா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சரவணன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க விடிவெள்ளி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ஜி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வேலன். சொன்னது…

பழைய நினைவுகள் - மனதில் பசுமரத்துஆணி...நினைவுகள் மறப்பதில்லை...பழையதை நினைவு படுத்தியமைக்கு நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கண்ணாடி கிளாசுக்குள் திரியில் எரியும் தீ வீடெங்கும் வியாபித்திருக்க... தீயின் ஆடலுக்குத் தகுந்தாற்போல் நிழல்களும் ஆட ...

நிழலாடிய நினைவுகள்....