சிறுகதைக்குள் செல்லுமுன் சில வரிகள்...
வணக்கம்.
நாம் இந்தியர்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறோம். ஆனால் நாம் தமிழர்கள் என்பதை மறக்க வேண்டாம். இந்திய அரசு தமிழனுக்கு என்ன செய்தது?
தினம் தினம் இலங்கை கடற்படையினரால் செத்து மடிகிறான் நம் மீனவ நண்பன். இறப்புக்கு பணம் கொடுக்கும் அரசு, இலங்கை அரசுக்கு எதிராக குரல் கொடுக்க மறுப்பதேன்? நமக்குள் ஒற்றுமை இல்லாதவரை ராஜபக்சேவுக்கு இங்கு ராஜ மரியாதைதான். எனவே நம் தமிழனுக்காக கூட்டாக குரல் கொடுப்போம். நம் குரல் அரசாங்கத்தை தட்டி எழுப்பட்டும். தயவு செய்து நம் மீனவனுக்காக உங்கள் ஆதரவினை அரசுக்கு தெரிவிக்க கீழே இருக்கும் இணைய முகவரிக்குச் சென்று சில நிமிடங்கள் செலவிட்டு உங்கள் ஆதரவை தாருங்கள்.
ஒரு லட்சம் கையெழுத்து வேண்டுமாமாம்... இன்னும் சில ஆயிரங்களையே நாம் தாண்டவில்லை என்பது வேதனையானது... நான் எனது ஆதரவை தெரிவித்துவிட்டேன்.... நீங்களும் தெரிவிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
தமிழன் என்று சொல்வோம் தலை நிமிர்ந்தே நிற்போம்.
என் நட்புக்கள் அனைவரும் கவிதை, கட்டுரை, கதை என தங்கள் பாணியில் ஆதரவுக் கரம் நீட்டும் போது நானும் என் பாணியில் அவர்களுடன் இணைகிறேன்.
இந்தக் கதையை வெறிபிடித்த சிங்களவனின் துப்பாக்கி குண்டுக்கு இரையான என் தமிழக மீனவ சொந்தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்...
இந்தக் கதையை வெறிபிடித்த சிங்களவனின் துப்பாக்கி குண்டுக்கு இரையான என் தமிழக மீனவ சொந்தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்...
இனி படியுங்க... "உப்புக் காத்து"
-------------------------------------------------------------
கடந்த ஒரு வாரமாகவே ஜீவா நகர் பரபரப்பாகவே இருந்தது. அதிகம் கார்கள் வராத அந்தப் பகுதிக்குள் பெரிய பெரிய கார்கள் எல்லாம் வந்த வண்ணம் இருந்தன. கரை வேஷ்டிகளும் காக்கி சட்டைகளும் வந்து போய்க் கொண்டிருந்தன. அங்க நம்ம மாவட்டம் பேர்ல ஒரு கட் அவுட், இந்தப் பக்கம் ஒன்றியம், அங்கிட்டு எம்.எல்.ஏ என்று கட் அவுட்டுகளுக்கு இடம் வழங்கிக் கொண்டிருந்த கரைவேட்டி, நம்ம வைக்கிற கட்டவுட்டெல்லாம் தலைவர் பார்வையில வர்ற மாதிரி பாத்துக்க... உன்னை நான் தனியா கவனிக்கிறேன் என்று காதைக் கடித்தது.
மேடையில இருந்து பத்தடிக்கு ஒண்ணா தலைவர் போட்டோ மெயின் ரோடு வரைக்கும் வைக்கணும் என்று ஒருவரிடம் அளந்து கொண்டிருந்தது இன்னொரு கரைவேட்டி. மெயின் ரோட்ல தலைவரோட முழு உருவ கட் அவுட் மற்ற வளைவுகள் எல்லாம் பெரிசு பெரிசா இருக்கணும் அதை நீ பாத்துக்க என்று மாவட்ட காக்கியிடம் மாநில காக்கி சொல்லிக் கொண்டிருந்தது.
விழா மேடை, பந்தல் என பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் அந்தப் பகுதி முழுவதும் சூறாவளியில் சிக்கிய கட்டுமரமாக தெரிந்தாலும் எதையும் அறிந்து கொள்ள நினைக்காத ஒரு குடிசைக்குள் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுக் கொண்டிருந்தது.
"கண்ணு தூங்கும்மா... ஆத்தால்ல... ரோ.... ரோ.... ரோ.... என் ஆராரோ... ஆரிராரோ..." என்றபடி பாலுக்காக அழுத தன் ஒரு வயது மகளை தேற்றிக் கொண்டிருந்தாள் மேரி.
"எம்மா...ஏங் குழந்தை அழுகுது... பால் கொடுத்துப் பாரு தாயி..." வாசலில் இருந்து எட்டிப் பார்த்த மாமியாக்காரி சொல்ல,
"என்ன இருக்கு கொடுக்க, பால் இல்லாத மாருல வாயவே வைக்க மாட்டேங்கிது... நா... என்ன செய்யட்டும்" என்றபடி சட்டைக் கொக்கிகளை மாட்டிக் கொண்டு, எதாவது சத்தா சாப்பிட்டா பாலூறும்... நம்ம என்னத்தை திங்கிறது?. காசு இருந்தாலும் ஆர்லிக்சு வாங்காந்து ஆத்திக் குடுக்கலாம்... எவங்கிட்ட கடன் கேக்கிறது..." என்று சொன்னவள் பீறிட்டு வந்த அழுகையை பல்லைக் கடித்து கட்டுப்படுத்தினாள்.
"என்ன செய்ய... கர்த்தரு நமக்கு மட்டுமா இந்த சோதனைய கொடுத்தாரு... நம்ம சனத்துக்கேல்ல கொடுத்துட்டாரு.... எங்க போயி அழுவுறது?... சரி... சரி... சோறு வச்சிட்டியா..."
"ம்... இப்பதான் கவித்திருக்கேன்..."
"புள்ளைய எங்கிட்ட கொடுத்துட்டு... வடிச்ச தண்ணிய நல்லா ஆத்திட்டு பால் டப்பாவுல ஊத்தித்தா... நா... இப்புடி வெளிய போயி புள்ளய பசியாத்தைக் கொண்டு வாரேன்..."
"சரி.." என்றபடி அழுத குழந்தையை அவளிடம் கொடுக்க அது அவளை விட்டு இறங்க மறுத்துக் கத்தியது.
"சனியன் செத்துந் தொலைய மாட்டேங்குது... ஏ... வானாலையும் வதையையும் வாங்குது..." அவளது இயலாமை கோபமாய் குழந்தை மீது இறங்கியது.
"அடி ஏண்டி இவளே... என்ன பேசுறே..? நம்ம நெலமை ஆளுரவங்களுக்கே தெரியலை அதுக்குத் தெரியமா என்ன? புள்ளய நொந்து என்னாகப் போகுது... அதை அழுக விடாம நீ வச்சிக்க... நா... ஒலய நிமித்து வடிச்ச தண்ணிய கலந்துக்கிட்டு வாரேன்" என்றபடி அடுப்பை நோக்கி செல்ல, தங்கள் கஷ்டத்தை நினைத்து பெருமூச்சு ஒன்றை விட்டபடி வாசலிலேயே அமர்ந்தாள் மேரி.
"அம்மா..." பின்னால் வந்து கழுத்தைக் கட்டிக் கொண்டான் மகன் திரவியம்.
"எங்கடா போனே? "
"அம்மா... நம்ம சருச்சுக்கிட்ட பெர்ர்ரிய மேட போடுலாங்கன்னு அமலண்ணதாங் கூட்டிப் போச்சி... பசிக்கிது சோறும்மா."
அவனை இழுத்து ஒழுகிய மூக்கை துடைத்து இடுப்பில் நிற்க மறுத்த டவுசரை பட்டுக் கயிற்றுக்குள் சிறையிட்டு, "இந்தா சோறு கவித்துருக்கேன்... தங்கச்சிப் பாப்பவை ஆச்சிக்கிட்ட கொடுத்துட்டு போட்டுத் தாரேன்..."
"ம்... அங்க நெறைய்ய்ய கார்ரா வந்திருக்கும்மா..."
".........."
"அல்லாரும் வெள்ள்ள்ளச்சட்டை போட்டுருக்காங்கம்ம்ம்மா... அமலண்ணே சொன்னுச்சு அவங்கள்ள்லாம் நெறைய்ய்ய்ய படிச்சவங்களாம்." ஆச்சரியத் தோரணையில் பேசும் தன் மூன்றரை வயது மகனின் மழலையை ரசிப்பதா... அறியாமை இருட்டுக்குள் அவனும் போய்விடுவானோ என்று தவிப்பதா... இலக்கில்லாமல் தவித்த கண்ணுக்குள் எட்டிப்பார்த்தது ஏழைகளின் பொக்கிஷமாம் கண்ணீர்.
"சரி சாப்டு... இங்கயே வெளாடணும் சரியா... அங்கெல்லாம் போக்கூடாது... காரும் வண்டியுமா சர்ரு சர்ருன்னு வருது... எதாவது ஒண்ணுன்னா என்ன பண்ண முடியும்... என்னா அங்கிட்டெல்லாம் போகக்கூடாது..."
"ம்..."
உப்புப் போட்ட வடிச்ச தண்ணியுடன் வந்த மாமியாக்காரி, பேத்தியை தூக்கிக் கொண்டு 'மாடு பாரு, ஆடு பாரு' என்றபடி பாட்டிலை வாயில் வைத்து வேடிக்கை காட்டியபடி போக மகனுக்கு சோறு போட்டுக் கொடுத்தாள்.
"அம்மா... இன்னிக்கும் கருவாடுதானா..."
"நாளைக்கு அம்மா நண்டு வச்சித் தாரேன்... டொமனிக் மாமா இன்னம் கடல்ல இருந்து வரலயில்ல... இன்னிக்கு வரும்... நாளைக்கு ராசாவுக்கு வச்சித்தாரேன்... செரியா?"
"ம்... " என்றவன் கருவாட்டை கடித்துக் கொண்டு கஞ்சியை குடித்தான். மகனைப் பார்த்தபோது அவளுக்குள் உடைந்த வேதனை கண்ணீராய் கன்னத்தில் இறங்கியது.
"மேரி... மேரி..." குரல் கேட்டு கண்ணைத் தொடைத்துக் கொண்டு "யாரு... இந்தா வாரேன்..." என்றபடி குடிசைக்குள் இருந்து வெளியே வந்தாள்.
வாசலில் மகளிர் மன்ற தலைவி விமலாவும் இன்னும் சில பெண்களும் நின்றிருந்தனர்.
"வாக்கா... உள்ள வா... என்ன விசயம்?" என்றாள்.
"ஒண்ணுந் தெரியாதவ மாதிரி கேக்கிறே... இன்னம் ரெண்டு நாள்ல இங்க நடக்குற மீட்டிங்குல நம்ம முதல்வர் பணம் கொடுக்கிறாருல்ல... தெரியுந்தானே"
"ம்.... தெரியும்.... அதுக்கு என்னக்கா?"
"என்னடி... என்னவோ மாதிரி பேசுறே...? நீயும் கணவனை இழந்து ஆறுமாசமா தவிக்கிறே... உம் பேரையும் சேக்க சொல்லியிருக்கேன்..."
"வேண்டாங்க... இந்த பணமெல்லாம் எனக்கு வேண்டாம்..."
"ஏ... வேண்டாம்... கிடைக்கிறதை வாங்கிப் போட்டா பிள்ளைங்க எதிர்காலத்துக்கு பயன்படுமில்ல..."
"எனக்கு விருப்பமில்லக்கா..."
"என்னடி நீயி... தானவார லெட்சுமிய வேண்டாங்கிறே... அஞ்சுக்கும் பத்துக்கும் கருவாடு காயப்போட்டு எப்படிடி குடும்பத்தை ஓட்டுவே... எதாவது ஒரு ஆம்பளைத் தொண இருந்தாலும் கடலுக்குள்ள போயி மீன் பிடிச்சு வாழ்க்கைய ஓட்ட முடியும் , கிழவியையும் பிள்ளைங்களையும் வச்சிக்கிட்டு வாரத வேணாங்கிறே..."
"ஏக்கா... எம் புருசன் மட்டுமா... எத்தனை உசுரு... நாமல்லாம் கடலம்மான்னு நம்பிப் போற கடலுக்குள்ள எல்லைய தாண்டிட்டான்னு கொக்கு குருவி சுடுற மாதிரி சுடுறாங்களே... இதுவரைக்கும் யாராச்சும் கேட்டிருப்பாங்களா..."
"அடியே விதண்டவாதம் பேசுற நேரமாடி இது.."
"அக்கா நான் விதண்டவாதம் பேசலை... எம் புருசன் கூட போன சூசையண்ணன் காயத்தோட வந்திச்சு... அப்ப எம் புருசன் வரலை ... அதுகிட்ட கேட்டதுக்கு என்ன சொன்னுச்சு தெரியுமா?... சுட்டப்போ எல்லாரும் கடல்ல குதிச்சோம்... யாரு எங்கிட்டுப் போனான்னு தெரியலை தாயின்னு சொன்னுச்சு... அதுக்கப்புறம் நான் எம் புருஷனைக் கண்டுபிடிச்சுக் கொடுங்கன்னு கலெக்கிட்டரு ஆபீசுக்கும் வீட்டுக்குமா எத்தனை நாளு நடந்திருப்பேன். இதுவரைக்கும் எதாவது முடிவு எடுத்தாங்களா.... இல்லையே...?"
"சரி... எத்தனையோ பேர் இப்படி... அவங்க வீட்ல எல்லாம் பணம் வாங்க சம்மதிக்கிறப்போ நீ ஏன் மறுக்கிறே...?"
"அந்த விழாவுல முதல்வர் வந்து நீலிக் கண்ணீர் வடிப்பாரு... இந்த கலெக்கிட்டரும் போலீசுக்காரவுங்களும் ஜால்ரா தட்டுவாங்க... நம்ம சனம் கடலுக்குப் போகம... கருவாட வெயில்ல காத்திருந்து வாழ்த்துக் கோஷம் போடும்... எனக்கு வாழ்த்துக் கோஷம் போடவும் பிடிக்கலை... வக்கத்தவங்க கொடுக்கிற காசை வாங்கிக்கிட்டு கால்ல விழுந்து தெய்வமுன்னு சொல்லவும் பிடிக்கலை... நாமல்லாம் இன்னும் இப்படியே இருக்கதாலதான் தேர்தலப்போ மட்டும் தென்றலை அனுப்புறாங்க... அப்பறம் பூரா உப்புக்காத்தைத்தானேக்கா சுவாசிக்கிறோம்."
"நீ வில்லங்கம் பேசுறே... வில்லங்கம் பேசிக்கிட்டு எப்படி வாழ்க்கைய ஓட்ட முடியும்..."
"ஏக்கா... நமக்கா குரல் கொடுக்காத அரசும் அதுக்கு துணை போற ஆட்களும் இருக்கிற நாட்டுல நாம இருந்தென்ன செத்தென்ன... வாழ்ந்தாலும் செத்தாலும் சாதிமானாத்தாங்கா சாகணும்... நா... உங்கிட்ட ஒண்ணு கேக்குறேன்.... என்னை தப்பா நினைக்காத... உம் புருசனும் எலங்ககாரங்களோட துப்பாக்கிக்குத்தான் செத்தாரு... அவருக்கு இந்த அரசாங்கம் கொடுக்கிற அம்பதாயிரம்தான் விலையின்னா... நீ ஏன் பொட்டு பூவை தொறந்திட்டு ஏஞ்சாமியின்னு ஏங்கித் திரியிறே... பிச்சைக்காரன் கொடுக்கிற பிச்சைக்காசை வாங்கிட்டு பவுசா திரிய வேண்டியதுதானே...
"இங்க பாருக்கா... உங்க புருசங்களுக்கெல்லாம் அம்பதாயிரமும் அர வயித்துப் பிரியாணியும்தான் வெலயின்னா எம் புருசனுக்கு வெல இல்லக்கா... எம் மனசு பூராம் நெறஞ்சிருக்க மவராசனை பிச்சைக்காசை வாங்கி குப்பையில போட எனக்கு திராணியும் இல்ல... மனசும் இல்ல... எம் பேரு வேண்டாங்க... நா ஒழச்சுச் சாப்பிட்டுக்கிறேன்... இவங்க குடுக்கிற அம்பதாயிரம் ஓவாய வாங்கிக்கிட்டு அடுத்த தேர்தல்லயும் இவங்களுக்கு ஓட்டுப் போட்டு அரியாசனத்துல ஏத்தி வக்கிறதுக்கு உடம்பை வித்து கொழந்தங்களை காப்பத்துனாக்கூட என்னைப் பொறுத்தவரைக்கும் தப்பில்லேக்கா" என்றவளைப் பார்த்து வந்தவர்கள் ஒன்றும் சொல்லாமல் திரும்பிச் செல்ல...
வீட்டுக்குள் நுழைந்தவள் மூலையில் கிடந்த புருஷனின் சட்டையை எடுத்து வைத்துக் கொண்டு , "ஏய்யா... உனக்கு வெல கொடுக்குதாம் இந்த அரசாங்கம்... உனக்கு என்ன வெலயின்னு இந்த பணந்தின்னி நாய்களுக்கு என்னய்யா தெரியும்" என்று கதற, சாப்பாட்டை வைத்துவிட்டு அவளருகில் வந்து கண்ணைத் துடைத்தபடி "அம்மா... அப்பா நெறைய மீனோட வந்திரும்மா... அழுவாதம்மா" என்ற தன் மகனை இழுத்து அணைத்துக் கொண்டவளின் கண்ணீர் கங்கை வற்ற மறுத்தது.
-'பரிவை' சே.குமார்.
போட்டோ உதவிய கூகிளுக்கு நன்றிகுறிப்பு: நீங்கள் ஆவலுடன் (!!!!???) படிக்கும் பாரதி நட்புக்காக லியோனியின் நெல்லிக்கனி பட்டிமன்றம் நிறைப்பகுதி அடுத்த பதிவாக வரும்.
20 எண்ணங்கள்:
அடேய் நண்பா... கண்ணீர் வராமல்தான் உன் கதைப் படிக்க எத்தனிக்கிறேன். எப்படியும் அழவைத்து வேடிக்கைப் பார்ப்பதே உன் வாடிக்கை ஆகி விட்டது. "யதார்த்த எழுத்தாளனாய்" இந்த கதை மூலம் மாபெரும் வெற்றிப் பெற்றிருக்கிறாய். கதையின் ஒவ்வொரு அசைவும் நம்மை பிடித்து கேள்விக் கேட்கிறது. ஒரு தமிழச்சியின் காதலில் மனம் கரைந்து கண்ணீர் பெருக்கெடுப்பதை தவிர்க்க முடியவில்லை.
பாராட்டுகள்.
நானும் தமிழ்த்தென்றலில் ஒரு பதிவு போட்டிருக்கேன். படிக்கவும்.
மீன் குழம்பு மணம் ஈர்க்கிறது...
படிக்கும் போதே கண்ணீர் எட்டி பார்க்கிறது... மனதை நெருடிக்கொண்டிருக்கிறது வரிகள் ஒவ்வொன்றும்..
யதார்த்தத்தின் பிரதிபலிப்பாக இருக்கிறது, இதை கதை என்று வெறுமனமே ஒதுக்கித்தள்ள முடியாது. இது தான் நம் தமிழ் மீனவ மக்களின் யதார்த்த வாழ்க்கை.
//நாம் இந்தியர்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறோம். ஆனால் நாம் தமிழர்கள் என்பதை மறக்க வேண்டாம்.//
அடிவாங்குவது தமிழன் இல்லை இந்தியன் இந்த உணர்வு ஒவ்வொருவருக்கும் வந்தால் 7 கோடி குரல் 120 கொடியாக மாறும்.
கண்ணீரின் சுவையும் உப்பே..ஆனால் விஸ்வாசம் தான் இல்லை ஊலை கண்ணீர் வடிப்போர் கண்ணீரும் உப்பு கரித்தாலும்..
தேவையான ஒரு பகிர்வு.
கதை நல்லாருக்குன்னு சொல்ல முடியலை.. :((
அருமையான கதை,படிக்கும் போதே கண்ணீர் வருகிறது..
உங்கள் உணர்வை நன்றாக வெளிக்காட்டி உள்ளீர்கள்...கட்டுரையாகவே போட்டிருக்கலாமே.
மனதை கனக்க வைக்கிறது.
அருமையான பகிர்வு சார்... நன்றி...
நல்லா இருக்கு. பகிர்வுக்கு நன்றி.
வாங்க தமிழ்...
//ஒரு தமிழச்சியின் காதலில் மனம் கரைந்து கண்ணீர் பெருக்கெடுப்பதை தவிர்க்க முடியவில்லை.//
எனது கதைக்கு உங்கள் பின்னூட்டம் உரமாக இருக்கிறது நண்பா.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஜெயந்த்...
//யதார்த்தத்தின் பிரதிபலிப்பாக இருக்கிறது, இதை கதை என்று வெறுமனமே ஒதுக்கித்தள்ள முடியாது. இது தான் நம் தமிழ் மீனவ மக்களின் யதார்த்த வாழ்க்கை.//
எனது கதைக்கு உங்கள் பின்னூட்டம் உரமாக இருக்கிறது நண்பா.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க "குறட்டை" புலி...
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அடிக்கடி வாங்க...
வாங்க THOPPITHOPPI...
உண்மைதான்... சீட்டுக்காக தில்லி போன ஐயா தமிழனுக்காக பேசினாரா?
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க தமிழரசி அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சுசிக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க செங்கோவி...
கட்டுரையாக போட்டிருந்தால் இந்தளவுக்கு மனதில் உள்ளதை கொட்டியிருக்க முடியுமா நண்பா. கதை என்பதால் பாத்திரம் பேசுவது போல் மனசின் வலிகளை கொட்ட முடிந்தது.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க மேனகாக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சித்ராக்கா..
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க பிரபாகரன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வானதி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அருமையான கதை.உங்கள் உணர்வை நன்றாக வெளிக்காட்டி
உள்ளீர்கள்.பகிர்வுக்கு நன்றி.
மீனவர்கள் விடும் கண்ணீரால் கடல் நீரும் உப்பானதோ!
அவர்கள் விடும் மூச்சுக்காற்றால்
காற்றும் உப்பானதோ!
உப்பு அளவிற்கு மிஞ்சினால்
சுனாமி தான்..
கதை கண்ணை மட்டுமல்ல மனதையும் கலக்கியது சகோ.கதை நாயகியின் தெளிவு மனதிற்கு மகிழ்ச்சி.இப்படியே எல்லாரும் கிளம்பினால் விடிவு விரைவில்,ஆனால் அதை பார்க்க போராடியவர்கள் இருக்கமாட்டார்கள்,வறுமை விட்டு வைக்குமா அவர்களை?
கருத்துரையிடுக