பொங்கலுக்கு இன்னும் நாலு நாள்தான் இருக்கு. என்னவோ ரெண்டு மூணு வருசமாவே ஆறுமுகத்துக்கு பொங்கல் மேல இருந்த ஈர்ப்பெல்லாம் போயாச்சு. அதுக்கு காரணமில்லாம இல்ல. ரெண்டு பொங்கலுக்கு முன்னால நல்லா இருந்த அவரு பொண்டாட்டி ராஜம் போய் சேர்ந்துட்டா. அதுக்கு அப்புறம் அவரு நட பொணமாயிட்டாரு. எந்த விசேசத்துக்கும் போறது கிடையாது. புதுத்துணி கட்டுறதையும் விட்டுட்டாரு.
போன பொங்கலுக்கு அவரு நண்பன் ராமசாமி வலுக்கட்டாயமா கதர் வேட்டியும், வெள்ளச்சட்டையும் எடுத்தாந்து கொடுத்தாரு. ஆனா அதை அவரு கோடியாப் போடமா தண்ணியில நனச்சுத்தான் கட்டுனாரு. எனோ ராஜமில்லாத வாழ்க்கையில எல்லாமே வெறுமையாத்தான் தெரிஞ்சது அவருக்கு. பசங்களெல்லாம் வேலை பாக்கிற எடங்கள்ல குடும்பத்தோட இருக்கதால பொங்க தீபாளி சந்தோசங்களை எல்லாம் அவரு வீடு கொஞ்சம் கொஞ்சமா இழந்துக்கிட்டு வர ஆரம்பிச்சிருச்சு.
பக்கத்து ஊருல கட்டிக்கொடுத்த பெரிய மவ பெரியநாயகிதான் பொங்க தீபாளிக்கெல்லாம் வந்து இருந்துட்டுப் போவா. இந்த வருசம் அவ புது வீடு கட்டி தனியா இருக்கதால மொத வருசம் புது வீட்ல பொங்க வைக்கணும்ப்பா நீங்களும் இங்க வந்துடுங்கப்பான்னு போன்ல சொன்னா. அவருக்கு என்னத்தப் போனமுன்னு வந்துச்சு. பேசாம ராஜத்துக்கிட்ட போகலாமுன்னு இப்பல்லாம் தோண ஆரம்பிச்சிருச்சு. இருந்தும் சாவு நம்ம கையிலயா இருக்கு. என்ன ரொம்ப வேண்டியவங்க நமக்கு முன்னால போறப்ப வருத்தமாத்தான் இருக்கு. அதுவும் வாழ்க்கையே பொயிட்டா... அதுவரைக்கும் எனக்கு முன்னால பொயிட்டா, இல்லேன்னா அவ கஷ்டப்பட்டுக்கிட்டு கிடக்க வேண்டியிருக்கும் அந்த வகையில அந்த புண்ணியவதி பாக்கியசாலிதான்னு மனசுக்குள்ள சொல்லிப்பாரு.
பசங்கள்லாம் சின்னதுங்களா இருக்கும் போது பொங்க தீபாளின்னா அந்த வீடே சந்தோஷமா இருக்கும். அப்ப ஆறுமுகம் தேவகோட்டை சின்னப்ப செட்டியார் வீட்ல கணக்கப்பிள்ளையா இருந்தாரு. ராஜம் போற வரைக்கும் அவங்க வீட்லதான் இருந்தாரு. அதுக்குப் பின்னால செட்டியார்கிட்ட சொல்லி அவருக்கு துணையா இருந்த செல்வத்தை கணக்க்ப்பிள்ளையாக்கிட்டு வந்துட்டாரு. லெச்சுமி ஆச்சிக்கு இவரு இல்லாத வீடு வெறுமையா தெரிய ஆறுமுகண்ணே நீ வேலை பாக்கலையின்னாலும் பரவாயில்லை வீட்டுக்கு வந்து இருந்துட்டுப்போன்னு சொல்லி போன் பண்ணுச்சு.
மகராசி, மனுசனுக்கு மரியாதை குடுக்கிறதுல அதுமாதிரி யாரையும் அவரு பாத்ததில்லை. என்ன செஞ்சாலும் ஆறுமுகண்ணனுக்கு கொடுங்கன்னு சொல்லி எடுத்து வைக்க மறக்காது. அது முகத்துக்காக காலையில சைக்கிள்ல பொயிட்டு தோட்டத்து செடிகளுக்கு தண்ணி பாச்சிட்டு வருவாரு. அவருக்கும் மனசுக்கு நிறைவா இருக்கு.
பொங்கலுக்கு மொத நாள் செட்டியார் வீட்டுல ஏழெட்டுக்கட்டு கரும்பு வாங்குவாங்க. எல்லாருக்கு ரெண்டு கரும்பும் காசும் கொடுப்பாரு செட்டியாரு. ஆனா லெச்சுமி ஆச்சி இவருக்கு மட்டும் ஒரு கட்டு கரும்ப கொடுக்கச் சொல்லி தனியா எடுத்து வச்சிடும். சாயந்தரம் வரும்போது கரும்புக்கட்டை சைக்கிள் பார்ல அழகா கட்டி சீட்ல உக்காந்து ஓட்டிக்கிட்டே வந்துடுவாரு. கரும்பு வந்ததும் பசங்களுக்கு சந்தோசம் எங்கிருந்துதான் வருமுன்னு தெரியலை. வீடே சந்தக்கடை மாதிரி இருக்கும். அப்பவே கரும்ப வெட்டி கடிக்க ஆரம்பிச்சிருவாங்க. எல்லாருக்கும் புதுத்துணி எடுத்து வச்சிருப்பாரு.
பொங்கலன்னைக்கு பெரியவனை வயல்ல போயி அருகம்புல்லும் அப்படியே கதிர் இனுக்கு ரெண்டும் பறிச்சுக்கிட்டு வரச்சொல்லி மாட்டுச்சாணியில பிள்ளையார் பிடிச்சு, நெல்லோட இருக்க கதிர் இனுக்கை பானையில கட்டி ரெடியா வச்சிருவாரு. நல்லா தலைக்கு குளிச்சு ஈரம் சொட்டச் சொட்ட அள்ளிக் கொண்ட போட்டுக்கிட்டு ராஜம் வீட்டு வாசல்ல அடுப்பு வச்சு பொங்க வைக்கிறப்போ பக்கத்துலயே நிப்பாரு. பயலுகளும் தொலைக்காட்சி வாறவரைக்கும் நின்னாங்க. என்னைக்கு வாங்குனாரே... தீபாளி பொங்கலுக்கு அதக் கட்டிக்கிட்டு கிடக்க ஆரம்பிச்சிட்டாங்க.
பால் பொங்கி ராஜம் கலஞ்ச அரிசியை போடுறப்போ இவரு சங்கெடுத்து 'ப்பூ...'ன்னு ஊருக்கே கேக்கிற மாதிரி ஊதுவாரு. அதுல அவருக்கு ஒரு சந்தோசம். ராஜம் போறதுக்கு முன்னால அவ வச்ச கடைசிப் பொங்கலப்பக்கூட இவருதான் சங்கு ஊதுனாரு. இவரு சங்கூதுனா ராஜமுக்கும் சந்தோசம்தாங்கிறது அவ முக மலர்ச்சியில தெரியும்.
பசங்கள்லாம் படிச்சு வேலைக்குப் போன பின்னால பெரியநாயகியும் சுந்தரியும் மட்டும்தான் வீட்ல இருப்பாங்க. அந்த வீட்ல முன்னாடி கேட்ட சத்தமெல்லாம் குறஞ்சு தொலைக்காட்சி சத்தம் மட்டும் கேக்க ஆரம்பிச்சிருச்சு. மகளுகளுகு நாடகத்துலதான் மோகம். தொலைக்காட்சியில் வாற எல்லா நாடகத்தையும் பாக்குங்க.
இவரு வேலை முடிஞ்சு வாரப்போ எட்டு மணியாயிடும் வந்ததும் அடிபைப்புக்கு போயி தண்ணி பிடிச்சி குளிச்சிட்டு வாரதுக்குள்ள சாப்பாடு ரெடியா இருக்கும் சாப்பிட்டு ராமசாமிகூட அவரு வீட்டு கோழிக்கூட்டு திண்டுல உக்காந்து என்ன பேசுவாங்களோ தெரியாது பத்துப் பதினோரு மணி வரைக்கும் பேசிக்கிட்டே இருப்பாங்க.
ரெண்டு பேருக்கும் ஒரு பழக்கம், நிஜாம்லேடி போயிலை போடுவாங்க. ஆனா மத்த போயிலை பிடிக்காது. பாக்கெட்டுல இருந்து எடுத்து கையில வச்சி உருட்டி வாய்க்குள்ள லாவகமா வச்சிக்கிட்டு எச்சியை புளிச்...புளிச்சின்னு துப்பிக்கிட்டே பேசுவாங்க. வீட்ல போயிலை போட்டுட்டு அவரு உக்காந்து இருக்கப்போ எதாவது விசயம் பேசினா வாயில எச்சியோ கொழக்கொழன்னு பேசுவாரு... சில நேரம் வாயில இருந்து எச்சி ஒழுக ஆரம்பிக்கும். அப்ப ராஜம் அந்த சனியனைத்தான் துப்பி தொலச்சிட்டு பேசினா என்னன்னு சத்தம் போடுவா. அவ போனதுக்கு அப்புறம் அந்த சனியனையும் தொலச்சிட்டாரு.
பிள்ளைங்கள்லாம் இல்லாம தீபாளி பொங்கலுக்கு ரெண்டு பேரு மட்டும் இருந்த வீடு என்னமோ போல இருந்துச்சி. பக்கத்து வீட்டுப்பயக வந்து சந்தோஷமா பொங்க கொண்டாடும் போது இவருக்கு நம்ம பயக வரலையேன்னு மனசு வருந்தும், இந்த பயலுக பொங்க தீபாளிக்கு வந்த நல்லாயிருக்கும். அப்படி என்னதான் வேலை பாக்கிறாங்களோன்னு ராஜத்துக்கிட்ட பொலம்புவாரு. அவனுங்களுக்கு என்ன வேலையோன்னு மகங்களுக்கு சப்போர்ட்டா பேசுவா.
அவங்க கல்யாணத்துக்கு அப்புறம் அம்மன் கோவில் திருவிழாவுக்கு மட்டுந்தான் வாராங்க. மத்ததுக்கெல்லாம் வாரதில்லை. பிள்ளைங்க படிப்பு போயிடுமாம். அப்படி என்னதான் படிக்க வைக்கிறாங்களோ.நாங்களும்தான் வயலு வேலை பாத்துக்கிட்டு படிக்க வைச்சோம். ஆபீசுல வேலை பாக்கலையா. ஏன் ராமசாமி மவன் இன்ஸ்பெக்டரா இல்லையா என்னன்னு அவருக்குள்ள கேட்டுப்பாரு.
திண்ணையில உக்காந்து என்னென்னமோ ரோசனை பண்ணினவரை ராமசாமியின் குரல் கலைத்தது. வா ராமசாமி பொங்க வருதுல்ல... பய வாரானான்னு கேட்டாரு. ஆமாப்பா இந்த வருசம் பொங்கலுக்கு ரெண்டு நாள் முன்னாடி வாரேம்பான்னு சொல்லியிருக்கான். ஆமா ஒம்மயங்க வாரேன்னு சொன்னாங்களா... போன் பண்ணினியான்னு கேட்டபடி துண்டால திண்ணைய தட்டிட்டு ராமசாமி உக்காந்தார்.
எப்ப வந்திருக்காங்க... இப்ப வர... எப்பவும் பெரியவ வருவா. அவளுக்கும் புதுவீட்ல பொங்க வைக்கணுமாம். என்னய வரச் சொல்லுறா. போக வேண்டியதுதானே இங்க இருந்து என்ன பண்ணப் போறே... பொயிட்டு மாட்டுப் பொங்கலுக்கு வான்னு சொன்ன ராமசாமியப் பாத்து சிரிச்சுக்கிட்டே அவ போனதுக்கப்புறம் எதுலயுமே பற்றிலாம போச்சுப்பா... என்னத்தைப் போனேன். எதையாவது ஆக்கி தின்னுபுட்டு உம் பேரப்புள்ளைங்க வந்தா அதுக கூட கொஞ்சிக்கிட்டு இருந்தா சரியாப் போகும். எனக்கு எங்க நல்ல நாள் கெட்டநாள் எல்லாம். அவ நல்லவ போயிட்டா, நான் இருக்கேன்... எப்ப கூப்பிடுவானோ தெரியலை.
அட எம்ப்பா நீ நாங்கள்லாம் இல்ல... சும்மா எப்ப பாத்தாலும் அதே பேசிக்கிட்டு... எல்லாரும் ஒரு நாள் போகத்தான் போறோம். யாரும் இங்க தங்கப் போறதில்லை... என்ன முன்னப்பின்ன... அது மட்டும்தான் வித்தியாசம். விடு போய் படு காலயில பாப்போமுன்னு ராமசாமி எந்திரிச்சுப் போக, திண்ணையில படுத்து நெடுநேரம் தூக்கம் வராம புரண்டுக்கிட்டு கிடந்தவரு எப்படியோ தூங்கிப் போனாரு.
அடுத்த நாள் செட்டியாரு வீட்டுக்குப் பொயிட்டு மத்தியானமா சைக்கிள்ல வந்தவரு மாடு மேச்சுக்கிட்டு இருந்த ராமசாமியப் பாத்ததும் நின்னாரு... அவரு சைக்கிள் பார்ல கட்டியிருந்த கரும்புக்கட்டையும் கேரியர்ல இருந்த அட்டப்பெட்டியையும் பாத்ததும் என்னப்பா மக வீட்டுக்குப் போகலையின்ன நீயே பொங்க வைக்கப் போறியா... சாமானெல்லாம் பலமா இருக்குன்னு ராமசாமி கேக்க, இல்லப்பா நாளக்கி சின்னவன் குடும்பத்தோட வாரானாம். ஒரு வாரம் இருக்கானாம். சின்ன ராஜம்.. அவரு பேத்தி பேரு ராஜலெட்சுமி . இவரு சின்ன ராஜமுன்னுதான் சொல்லுவாரு... எனக்கு நெறைய கரும்பு வாங்கி வையிய்யான்னு சொன்னா. அதான் வாங்கிக்கிட்டு வந்தேன், நாளக்கி இன்னொரு கட்டு வாங்கியாரணும் எம் பேத்திக்குட்டி... என் தாயிக்குன்னு அவரு பேசுறப்போ முகத்துல அத்தனை சந்தோஷம். ராஜம் போனதுக்குப் பின்னாடி ஆறுமுகத்தோட முகத்துல அத்தனை சந்தோஷத்தை ராமசாமி அன்னைக்குத்தான் பார்த்தார்.
-'பரிவை' சே.குமார்.
24 எண்ணங்கள்:
அட போங்க சகோ, எதார்த்த எழுத்தின் மூலம் கண் கலங்க வச்சிட்டீங்களே.உங்கள் கதைகளில் இருந்து நிறைய பாடம் தெரிந்து கொள்ளலாம்.
யதார்த்தமான கதை...
நெகிழ்ச்சியான கதை... இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!
சோகம் இழையோடும் கவிதையான கதை! வாழ்வில் ஒன்றாக வாழ்ந்து, இன்ப துன்பங்களில் பகிர்ந்து, திடீரென்று ஒருத்தர் மட்டும் பிரிந்து போனால் மற்றவரின் உலகமும் உணர்வுகளும் எத்தனை தனிமையாக, சோகமாக இருக்கும் என்பதை அழகான வார்த்தைகளில் வடித்திருக்கிறீர்கள்.
சிறப்புச் சிறுகதை மிகச் சிறப்பாக உள்ளது.
அருமை. நெகிழ்வு.
வாழ்த்துக்கள்!
வாங்க ஆசியாக்கா...
உங்கள் அன்புக்கும் எனது கதைகளுக்கு நீங்கள் கொடுக்கும் ஊக்கத்துக்கும் ரொம்ப நன்றி அக்கா.
வாங்க செங்கோவி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க மேனகா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க மனோ அம்மா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.
வாங்க ராமலெஷ்மி அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
very touching story, Bro. Well written.
சிறப்புச் சிறுகதை அருமை.
வாழ்த்துக்கள்!
குமார்...ஒற்றைச் சொல்கூட வாசிக்கத் தவறவில்லை.அத்தனை உணர்வோட இருக்கு கதை !
அருமையான கதை குமார்...
ரொம்ப நல்லா கதை சொல்ல வருது உங்களுக்கு.
எதார்த்தமான எழுத்து
கதை அருமையா இருக்கு நண்பரே.. நிஜாம்லேடி புகையிலை முதற்கொண்டு கொண்டுவந்திருப்பது அட்டகாசமான நேட்டிவிட்டி
கதை மனசுக்குள் இறங்கி விட்டது.
யதார்த்தமானக் கதை! ரொம்ப நல்லாருக்கு..
வாங்க வானதி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஆயிஷா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஹேமா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க பிரஷா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ரிஷபன்மீனா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க கவிதை காதலன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ரிஷபன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஸ்ரீஅகிலா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நம்ம ஊர்ல இந்த மாதிரி நிறைய கதை இருக்கு சகோ குமார். உங்க கதையப் படிச்சிட்டு எங்க மாமனார் ஞாபகம் வந்திருச்சு.
இன்றுதான் இந்த கதையை பார்த்தேன். மனதை தொட்ட சிறப்பு கதைங்க.... அருமை.
வாங்க சாந்தி அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சித்ராக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
உங்களின் வளமையான எழுத்துக்கள் மூலம் பொங்கலையும், மனிதனின் இன்னொரு நிலையையும் தெளிவா சொல்லி கடைசியில் "சம்சாரம் போனா சகலமும் போச்சு" என்பதை உண்மையாக்கி கண் கலங்க செய்து விட்டீர்கள். "யதார்த்த எழுத்தாளன்" குமார் வாழ்க பன்னெடுங்காலம்.
கருத்துரையிடுக