மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 19 நவம்பர், 2010

கிராமத்து நினைவுகள்: மழைக்காலம்



கிராமத்து நினைவுகள் பகுதிக்கு உங்களின் ஆராவாரமான (!!!???) வரவேற்பை முன்னிட்டு தொடரலாம் என்று நினைக்கிறேன். சிறுவயது சந்தோஷங்களை அசை போடும் போது கிடைக்கும் அந்த சுகந்தமான சந்தோஷ அனுபவம் வேறு எதிலும் கிடைப்பதில்லை என்பதே உண்மை.

ஊளை மூக்கோடும் அந்த மூக்கை துடைத்த புறங்கை அழுக்கோடும் இடுப்பில் நிற்க மறுக்கும் டவுசரை அரணாக்கொடியில் (நாங்க இதை பட்டுக்கயிறு என்போம்) சிறையிட்டு அப்பப்ப இழுத்து விட்டுக் கொண்டும் சந்தோஷித்த அந்த தினங்கள் மீண்டும் வரா.... ஆனால் அந்த நினைவுகளை எப்ப வேண்டுமனாலும் அசை போடலாம்... அதற்கு தடை விதிக்க முடியுமா?

சிறுவயதில் மழைக்காலம் என்றாலே சந்தோஷம்தான்... அதற்கு காரணம் நிறைய.... காலையில் பேய் மழை பெய்தால் பள்ளிக்கு செல்ல வேண்டாம், மதியம் மழை வருவது போலிருந்தால் புத்தகப்பையை பள்ளியில் வைத்துவிட்டு கிராமத்துப் பிள்ளைகள் என்ற முறையில் பள்ளி விடும் முன்னே வீடு திரும்பலாம், மழை பெய்து விட்டபின் லேசான தூரலில் நனைந்து கொண்டே வந்து இரவு முழுவதும் தும்மி காலையில் பள்ளி செல்வதை தவிர்க்கலாம்... இப்படி நிறைய....

அந்த மழைக்காலத்தில் மழை பெய்து நின்றதும் நாங்கள் முதலில் செல்வது கண்மாய்க்குத்தான்.... எவ்வளவு தண்ணீர் வந்திருக்கு... நாளை கண்மாய்க்கு குளிக்க வரலாமா? என்று பார்க்கத்தான்.. எங்கள் கண்மாயில் பெரிதும் சிறிதுமாக இரண்டு மேடான பகுதி எங்களின் அடையாளமாகும். அதில் பெரிய மேடு (பெரிய முட்டு) நீரில் அமுங்கினால் அந்த வருடம் விவசாயம் தண்ணீர் தட்டுப்பாடில்லாமல் நல்லாயிருக்கும். அதேபோல் கண்மாய்க்குள் இருக்கும் முனீஸ்வரரின் அடிப்பீடம் தண்ணீருக்குள் அமுங்கினால் நீர் இறைக்காமல் வெளைந்து விடும். கோடை போடவும் செய்யலாம் என்பது போன்ற வழிவழி வந்த கணக்குகள் உண்டு.

நாங்கள் பள்ளி, கல்லூரிகளில் படித்த காலத்தில் கண்மாய்க்கு நீர் கொண்டு வர ம்ழைக்காலத்தில் பல வகைகளில் முயற்சித்து வெற்றி கண்டோம். அவை இன்றளவும் கடைபிடிக்கப்படுகின்றது... (அது சீக்ரெட்... நாங்கள்ளாம் யாரு... சொல்லமாட்டோமுல்ல...)

மழை நாளில் பள்ளியில் இருந்து வரும்போது வழியெங்கும் நீர் ஓடிக் கொண்டிருக்கும் அந்த நீரில் ஆட்டம் போடுவதுடன் புத்தகப்பையும் இருக்காதல்லவா... ஓடும் நீரின் குறுக்கே அணை கட்டி, செங்கல் கற்களை வைத்து பாலம் போல் கட்டி விளையாடி வீடு வந்து சேர நேரமாகும். இதில் இரண்டு குழுக்களாய் பிரிந்து பாலம் கட்டி தண்ணீரை பாலத்தின் அடியில் இருந்து மேலே வருவது போல் செய்வதில் போட்டி வேறு. போட்டியின் முடிவில் ஏற்படும் சண்டையால் பாலம் தகர்க்கப்படும். பின்னர் சில நிமிட அமைதியான நடைக்குப்பின்னர் மீண்டும் ஓரிடத்தில் புதிய பாலத்துடன் சமாதானம் ஆரம்பிக்கும்.

சில நாட்கள் மழையில் வரும்போது குளக்காலில் பாய்ந்தோடும் நீரில் ஏத்துமீன் (அதாவது தண்ணீரின் போக்கை எதிர்த்து வரும் மீன்) வருவதை பார்த்துவிட்டால் போதும் ' டேய் மீன் ஏறுதுடா... வாங்கடா பிடிக்கலாம்...' என்றபடி எல்லோரும் இறங்கி மீன் பிடிக்க ஆரம்பித்துவிடுவோம். அதில் அயிரை, கெண்டை, கெழுத்தி மீன்களே அதிகம் ஏறும். கெழுத்தி பிடிப்பதில்தான் தனிக்கவனம் தேவை. இல்லையென்றால் முகத்தில் இருக்கும் முள்ளால் குத்திவிடும்... அது குத்தினா கடுக்கும் பாருங்க... அப்பா... என்ன வேதனைங்கிறீங்க...

நல்ல மழை பெய்து கண்மாயின் சறுக்கை (கூடுதல் தண்ணீர் வெளியாகும் பகுதி) எடுத்துக் கொண்டால் எங்களுக்கு கொண்டாட்டம்தான்.... முதலில் எங்க கண்மாய் சறுக்கையில் மணல் சாக்குகளை போட்டு அடைத்து கூடுதல் தண்ணீரை தேக்கி வைக்க வழி செய்வார்கள் நாங்களும் அங்கு செல்வோம்... வேலை செய்வோம். பிறகு அதற்கு மேல் நிரம்பும் நீர் குளக்கால் வழியாக அடுத்த ஊர் கண்மாய்க்குத்தான் போகும்... அந்த கண்மாயில் இருக்கும் மீன் தண்ணீரில் எதிர் நீச்சல் போட்டபடி வரும்.

எங்க அண்ணன் உள்பட அவர் வயது நிறைந்த அண்ணங்கள் இணைந்து தண்ணீரில் அணை வைத்து ஒரு இடத்தில் பத்தக்கட்டை (உருளை வடிவில் துவாரங்கள் இடப்பட்டிருக்கும்.... அதாங்க எப்படி சொல்றது... அட நம்ம புல்லாங்குழல் மாதிரி பெரிசுங்க போதுமா... அட நாதாரின்னு திட்டுறது கேக்குது... இப்ப நாம ஸ்கூல் பையங்க...) போட்டு அதனருகில் ஒரு பெரிய குழி வெட்டி வைத்து தண்ணீரை திறந்து விடுவார்கள். துவாரம் வழியாக செல்லும் தண்ணீரில் ஏறிவரும் மீன் குதிக்கும் பாருங்க... அப்படியே குழிக்குள் விழும்... சில சமயங்களில் நிறைய மீன் வருமா... அப்படியே குதித்து விழும் பாருங்க... ஹையோ... என்ன அழுகு... பாக்கப் பாக்க சந்தோஷங்க... எங்கண்ணன் உரச்சாக்குன்னு சொல்லுவோம் தெரியுமா... அதுல எல்லாம் பிடிச்சாந்திருக்காருன்னா பாத்துக்கங்க.

அப்புறம் மழைக்காலத்தில பாத்திங்கன்னா... கருவ மரத்துல உட்காந்து காது கிழிய கத்துமே சில் வண்டு அதையும் விடுறதில்ல்... மரத்தோட ஒட்டி இருக்கிற அதை தேடிப் பிடிச்சு நூல்ல கட்டி கத்தவிட்டு வேடிக்கை பாக்கிறது.

மழை நாட்கள்ல மாடு மேய்க்கப் போறப்போ குடை கொண்டு போறதைவிட கடையில விக்கிமே பச்சை, சிவப்பு , மஞ்சள்ன்னு பிளாஸ்டிக் பேப்பர் அதை போட்டுக்கிட்டுப் போறதுல ஒரு ஆனந்தம்தான் போங்க.வயல்ல மாட்டை விட்டுட்டு சும்மாவா இருப்போம் அங்க கிடக்கிற தண்ணியை இரண்டு வயலுக்குமிடையில் இருக்கும் வரப்புல கையில கொண்டு போற மூங்கில் கம்பால குத்திவிட்டு வேடிக்கை பாப்போம்.

இந்தப் பழக்கம் விவசாய டயத்துல அடுத்தவன் வயலுக்கு தண்ணீர் போகும் போது அவனுக்குத் தெரியாம வாய்க்கால்ல இருந்து வயலுக்குள்ள குத்திவிட்டு தண்ணீரை பாய்ச்சுறது வரைக்கும் தொடர்ந்திச்சி... என்ன செய்ய தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்குமுன்னு பழமொழியே இருக்குல்ல... நம்ம பிரண்டு வீட்டுக்கு தண்ணி போறப்போ நம்ம வயல் ஓரத்த கண்ணுல விளக்கெண்ணை விட்டுக்கிட்டு பாப்பாங்க... அவங்களுக்குத் தெரியுமில்ல ஒரே குட்டையில ஊறின மட்டைங்கதானே... சில பெரிசுங்க நண்டு சிலவுல பொத்துக்கிட்டு தண்ணி போகுதேன்னுட்டு மம்பட்டியால வெட்டி அடச்சிட்டு போகுங்க.

மாடு மேய்க்கும் போது மழை பெய்து விட்டதும் மரத்தடியில் போய் நின்று பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென யாராவது ஒருவர் மரத்தின் வாதைப் பிடித்து ஆட்டி விட்டால் போதும் அதிலிருந்து சடச்சடவென விழுகும் நீரானது உடம்பில் சிலிர்ப்பை ஏற்படுத்தும்.

மழை பெய்து ஓயும் போது ஊருக்குள் இருந்து ஊரணிக்குப் போகும் தண்ணீரில் அம்மாவின் காட்டுக் கத்தலையும் பொருட்படுத்தாது பழைய ராணிப் புத்தகத்தில் (எங்க ஊட்ல இன்னும் ராணி வாங்குறாங்கங்க... எங்கம்மா ராணி புத்தகத்தோட நீண்ட நாள் வாசகி) சாதா கப்பல், கத்திக் கப்பல் எல்லாம் செய்து ஓட விடுறது... அதுலயும் போட்டிகள் பொறாமைகள் சண்டைகள் எல்லாம் உண்டு.

அப்புறம் மழைவிட்டதும் பனங்காட்டுக்கு ஓடி காவோலை (காய்ந்த ஓலை) பொறக்குறது.... பனம் பழம் பொறக்குறது... இதிலும் போட்டிதான்... அடுத்தவன் போறதுக்குள்ள நாம போகணும் இல்லேன்ன அவன் எல்லாத்தையும் பொறக்கிடுவான். அதனால மழை லேசா விட்டாப்புல இருக்கயில சிட்டாப் பறப்போம். ஓலைகளை எடுத்து ஒன்றுடன் ஒன்று பிண்ணி ரோட்டில் தரத்தரவென்று இழுத்து வருவோம். அடுத்த நாள் அதன் அடிப்பக்கம் அழகாக வெட்டப்பட்டு கயிரு கட்டி வண்டியாக விளையாட வரும்... வண்டிப் பந்தயம் வேறு ... வேகமா ஓடுறவன் ஜெயிப்பான்... அதுக்கு பரிசு வீட்டில் திருடிய வெள்ளக்கட்டி.

எல்லாத்துக்கும் மேல மழை நாள்ல கண்மாய்க்கரையில நின்னு விஸ்தாரமான வெளியில வானத்துல வானவில் தெரியிறதைப் பாத்து அடைந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவுமில்லைங்க...

என்னதான் சொல்லுங்க... பெய்யிற மழையில நனையிற சொகம் எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காதுங்க.

-'பரிவை' சே.குமார்.

Thanks for Photos : Google & Friends18.com

31 எண்ணங்கள்:

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

ஊர் நியாபகம் வந்ததே..

பெயரில்லா சொன்னது…

சிறு வயதுக்கு கை பிடிச்சி கூட்டிட்டுப் போய்டீங்க பாஸ்!
சூப்பர்..
//பத்தக் கட்டை //
அதெல்லாம் பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு..
நீங்க ராமநாதபுர மாவட்டம் பக்கமா பாஸ்!

DHANS சொன்னது…

attakasam

enga oorlayum ithethaan aana per mattume vera :)

ராஜவம்சம் சொன்னது…

இனி எப்போதும் அடைய முடியாத வசந்தகாலம்.

ஏக்கங்களுடன்.

எல் கே சொன்னது…

vasantah kaala ninaivugal

எஸ்.கே சொன்னது…

மழை பல உணர்வுகளை வெளிப்படுத்தும் அற்புத அனுபவங்களை தரும் ஒன்று!
அருமையான பதிவு!

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே... அநியாயத்துக்கு ஊர் ஞாபகத்த கிளப்பிவிடுரீங்களே...

தினேஷ்குமார் சொன்னது…

மண் வாசம் மனக்க மனக்க தொடருங்கள் தோழி

sathishsangkavi.blogspot.com சொன்னது…

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே..

r.v.saravanan சொன்னது…

ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே வசந்தகாலம் ஞாபகம் வருதே

சுசி சொன்னது…

நல்ல பகிர்வுங்க..

என் மழைக்கால நினைவுகளிலும் நனைந்து பார்த்தேன்..

கமலேஷ் சொன்னது…

எதை எதையோ ஞாபகப்படுத்திடீங்க...

Menaga Sathia சொன்னது…

இனிமையன மலரும் நினைவுகள்!!

நிலாமதி சொன்னது…

பெய்யுற மழையில நனைகிற சுகம்.....என்ன கொடுத்தாலும் கிடைக்காது . மீண்டும் என் சின்னவயது வாழ்க்கை நினைக்க் வைக்கிறது மீண்டுமொருதட்வை பிறந்து என் கிராமத்தில் ..நனைய ஆசை.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பயணமும் எண்ணங்களும்...
உங்கள் வலைப்பூவின் பெயரே அழகாய் இருக்கிறது.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பாலாஜி சரவணா...
உண்மைதான்... இப்ப பத்தக்கட்டை எல்லாம் பரணில் தூங்குகிறது...
நான் சிவகெங்கை மாவட்டம் தேவகோட்டை அருகில் ஒரு சிறு கிராமத்துக்காரன்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க DHANS...
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க திரு.ராஜவம்சம்...
உண்மைதான்... மீண்டும் நமக்கு மட்டுமல்ல நம் சந்ததியினருக்கும் கிடைக்காத வசந்த காலம்...
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க LK...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க எஸ்.கே...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வெறும்பய அண்ணா...
என்ன செய்ய... எனக்கும் ஊர் ஞாபகம் வந்ததுதான் பதிவுக்கு காரணம்... அது உங்களுக்கும் வந்தாச்சா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தினேஷ்குமார்...
நான் தோழி அல்ல... உங்கள் தோழன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சங்கவி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க சரவணன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சுசிக்கா...
மழைக்கால நினைவுகளில் நீங்க நனைய இந்த மழைக்காலம் காரணமாக இருந்ததில் எனக்கும் மக்ழ்ச்சியே... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கமலேஷ்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க மேனகாக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க நிலாமதி...
எனக்கும் அதே ஆசைதான்... கிட்டுமா?
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

vasu balaji சொன்னது…

மழை, யானை, ரயிலு இதெல்லாம் எத்தனை வயசானாலும் புதுசுமாதிரியே இருக்கும். பிரமிப்பு.ஹூம். இங்கல்லாம் மழைன்னு நினைக்கிறப்பவே இடுப்பளவு சாக்கடையில நீந்தணுமேன்னு பயம்தான் வருது:(

மனோ சாமிநாதன் சொன்னது…

பனம் பழத்தை ருசித்தது, பனம் நொங்கு சாப்பிட்டு,காலியான ஓடுகளை வைத்து வண்டி தயாரித்து இழுப்பது, சலசலக்கும் மழை நீரில் போட்டிக்கப்பல்களை மிதக்க வைப்பது- எத்தனை எத்தனை மலரும் நினைவுகள்! சுகமான நினைவுகள்! அவற்றை மறுபடியும் மனதில் மலர வைத்ததற்கு நன்றி!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வானம்பாடிகள் ஐயா..
உண்மைதான்... மழை, யானை, ரயில் எல்லாமே எப்பவும் புதுசாவும் மனசுக்கு சந்தோஷம்... நானும் சென்னை வாழ்க்கையை சில காலம் அனுபவித்தேன்... மழை நீர் வீட்டுக்குள் வந்து விளையாடிய நாட்கள் உண்டு.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க மனோ சாமிநாதன்...
ஆமாம் அம்மா... இப்ப எல்லாம் போயாச்சு...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

தமிழ்க்காதலன் சொன்னது…

பள்ளிப் பருவத்தை நினைவில் அடைகாத்து உணர்வில் குஞ்சுப் பொரிக்கும் அன்பு நண்பா.., இந்த பதிவு எல்லாருடைய இடுப்பிலும் டிரவுசரை அவிழ்த்து விட்டிருக்கும் என நினைக்கிறேன். மிக அருமை.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

அருமை

மோகன்ஜி சொன்னது…

மலரும் நினைவுகள் என்றுமே சுகமானவை. சுவாரஸ்யமாய் சொல்லியிருக்கிறீர்கள் குமார். ரசித்தேன்!

ஹேமா சொன்னது…

குமார்...உங்க பழைய நினைவலைகள் இப்ப பெய்த மழைபோல நனையவச்சிருக்கு என்னையும் என் கண்ணையும் !

vanathy சொன்னது…

இஞ்சி+ நீர் ரேஞ்சுல தான் திரிஞ்சிறீங்க போல. சூப்பர்.

ராமலக்ஷ்மி சொன்னது…

வலைச்சரத்தில் இப்பதிவும் நீங்களும். வாழ்த்துக்கள் குமார்!