மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 13 நவம்பர், 2009

பள்ளிப்பருவம் - I

பள்ளிப்பருவம்... என்றும் மனதுக்குள் மழைக்கால காளானாய் மகிழ்ச்சி தரக்கூடியது. அந்தப் பருவத்து வசந்த காலத்தை அசை போட்டுப் பார்ப்பதே பள்ளிப்பருவம் - I.


நான் படித்தது நகரத்தில் இருந்தாலும் கிராமத்துப் பிள்ளைகளை நம்பி நடத்தப்பட்ட ஒரு நடுநிலைப்பள்ளி. ஆறு வயதில் ஒண்ணாப்பு சேர்க்கப்பட்டேன். எங்க ஊர்ல இருந்து மூன்று கிலோமீட்டர் நடந்தே வந்து படிக்கணும். (ம்... இப்பல்லாம் 3 வயசுல பள்ளிக்கூடம் போறாங்க. வீடு வரைக்கும் பேருந்து வசதி உண்டு. புஸ்தக முட்டையும் அதிகம். பணம் கட்டி படிக்கிறதால பொறுப்பும் அதிகம். நமக்கு அது இல்லிங்கோ).

மூணாப்பு வரைக்கும் எல்லோரும் பாசுங்க. அதனால எங்க ஊருல நிறைய பேரு நாலாப்பு வரைக்கும் படிச்சவங்க. (நாலாப்பு போயி பெயில் ஆகிட்ட மேல படிக்கிறதில்லை). எனக்கு ஆனா, ஆவன்னா எல்லாம் ஒண்ணாப்புல சொல்லிக் கொடுத்தாலும். எ, பி, சி, டி மூணாப்புலதான் சொல்லித் தந்தாங்க.

புஸ்தக மூட்டையில புஸ்தகம் இருக்கோ இல்லியோ மதிய சாப்பாட்டுக்கு தட்டு இருக்கும். (மதிய உணவுக்காகவே பள்ளிக்கூடம் வந்தவங்க பலபேரு. (வறுமைதாங்க... வேற என்ன சொல்ல...). அப்புறம் மழை வர்ற மாதிரி இருந்தா போதும் கிரமாத்துப் பிள்ளைங்கல்லாம் போங்கன்னு சொல்லுவாங்க பாருங்க பள்ளிக்கூடமே காலியாகிவிடும். (கிராமத்துப் பிள்ளைங்க தாங்க அதிகம்) .

அதுவும் மழை விழுந்தாப் போதும் புத்தகப்பைய பள்ளியிலயே வச்சுட்டு(மறக்காம தட்ட எடுத்துக்கிட்டு) ஆட்டம் போட்டுக்கிட்டு போற சுகம் இருக்கே... அத இன்னைக்கு நினைச்சாலும் மனசு கூத்தாடுதுங்க...மழைத் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவரும் போது எதிர்த்து வரும் மீனை அடித்துப் பிடிக்கும் அந்த சந்தோஷ நாட்கள் மீண்டும் கிடைக்குமா.?

ஒண்ணாப்புல எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்தவங்க மரியம்மை ஆசிரியை. எனக்கு அனா, ஆவன்னா கற்றுக்கொடுத்த தெய்வம் அவங்க.(அவங்க இப்ப தெய்வமாகிட்டாங்க...). நான் சின்னப்பயல இருக்கேன்ன்னு(இப்பவும் சின்னப்பிள்ளையாவே இருக்கேன்) அம்மா என்னைய மறுபடியும் ஒண்ணாப்புல போடச் சொன்னப்ப. அவங்க நல்லா படிக்கிறவனை(!!!???)எதுக்கு பெயிலாக்கணுமுன்னு மறுத்துட்டாங்களாம். (என்ன கொடுமை சார் இது.)

அவங்க ரொம்ப நல்லவங்க. யாருக்கும் தீங்கு நினைக்க மாட்டங்க. குறிப்பா நல்லா பாடம் நடத்துவாங்க. அவங்கமேல எல்லோருக்கும் பாசம் உண்டு.(ஒண்ணாப்புல வகுப்பு எடுக்கிறதால பசங்க அம்மா மாதிரி நினைச்சு பழகுவாங்க). அவங்க இப்ப இல்லை. எல்லாம் காலத்தின் கட்டாயம்.

என்ன ரொம்ப நல்லவங்களான என் ஆசிரியர், என் கல்வித் தாய் நோய்வாய்ப்பட்டு, ரொம்ப கஷ்டப்பட்டு இறந்தாங்க. அதுதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு. அவங்களுக்கு இந்த முதல் கட்டுரையில் அஞ்சலி செலுத்துறேன்.

அடுத்த கட்டுரையில் பள்ளிபருவம் II தொடரும். வாசித்து கருத்துக்களை பின்னூட்டம் செய்யுங்கள். மீண்டும் சந்திப்போம்.

-சே.குமார்

4 எண்ணங்கள்:

cheena (சீனா) சொன்னது…

அன்பின் குமார்

மலரும் நினைவுகளாக - பள்ளிப் பருவத்தினைப் பகுதி பகுதியாக அலசி ஆய்ந்து - அசை போட்டு மகிழ்ந்தமை நன்று நன்று

நல்வாழ்த்துகள் குமார்
நட்ப்டன் சீனா

'பரிவை' சே.குமார் சொன்னது…

thanks sir

cheena (சீனா) சொன்னது…

அன்பின் குமார் - இதைப் படித்த வுடன் நானும் இதே மாதிரி ஒரு பதிவு எழுதியது நினைவுக்கு வந்தது. எனக்கு மிகவும் பிடித்த பதிவு - நேரமிருப்பின் படித்துப் பாருங்களேண் - காரைக்குடிக்கு அலைபேசியில் பேசி - நித்யா விடம் படிக்கச் சொல்லுங்களேஏண். ஸ்ருதி மற்றும் விஷாலிக்குக் கதை சொல்லச் சொல்லவும். அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) சொன்னது…

அன்பின் குமார் - பள்ளீப்பருவம் இன்னும் இருக்கா - பலே பலே - படிச்சுடறேன் - அப்புறம் கல்லூரிக் கால வேறயா - சரி சரி - நான் படிச்சுடறேன்பா - ஆமா நானும் 7 / 8 எழுதி இருக்கேன்னு நினைக்கிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா